அதிகாரம் 44, நிலையாமை - குறள் எண் 435.
|
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
|
வருமுன்னர் - வருவதற்கு முன்பு,
காவாதான் - காக்காமல் இருப்பவன்,
வாழ்க்கை - வாழ்க்கையானது,
எரிமுன்னர் - எரிகின்ற தீயின் முன்பு, வைத்தூறு - வைத்த வைக்கோல் போர், போலக் கெடும் - போலக் கெட்டு விடும்.
|
|
|
வருவதற்கு முன்னரே திட்டமிடாதவன் வாழ்க்கை, நெருப்பின் முன்னால் வைத்த வைக்கோல் போர் போல எரிந்து சாம்பலாகும், கெடும்
|
எரிகின்ற பொருளின் முன் உள்ள எது விரைவில் தீப்பற்றி எரியும். அழியும். பஞ்சும் நெருப்பும் அருகருகே இருந்தால் பற்றி எரியும். இதுதான் நாம் சொல்வது. ஆனால் காற்று அடித்தால் பஞ்சு பறந்துவிடும். எனவே நெருப்பு பற்றுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவே.
ஆனால் வைக்கோல் போர் காற்றடித்தாலும் நகராது. அங்கேயே இருக்கும். எரிமுன்னர் வைத்த வைக்கோல் போர் விரைவில் பற்றி எரிந்து சாம்பலாகும். வைக்கோல் போர் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நொடியில் சாம்பலாகும். மிகப் பெரிய செல்வச் செழிப்பும், அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் கூட பற்றி எரிந்து நொடியில் சாம்பலாகும்.
|
வள்ளுவர் காட்டும் மிகப் பெரிய வாழ்வியல் கூறு இது.
|
வரும் முன் - வந்த பொழுது - வந்த பிறகு, இந்த மூன்று காலங்களில் வருவதற்கு முன்பாகவே, வருவதற்கான அனைத்துக் கூறுகளையும் வரிசைப்படுத்தி, அதற்கான தடைகளை, காப்பு முறைகளை, ஒழுங்கு படுத்தி, செயற்படுத்துகிற எண்ணம் உடையவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
|
வருவதற்கு முன்னரே காப்பதற்கான திட்டமிடாதவன் வாழ்க்கை, எத்தனை பெரிய நிலையில் வாழ்ந்தாலும், நொடியில் ஏதுமற்றதாகி, ஏதிலி நிலைக்குத் தள்ளப்பட்டு, கெட்டு அழிவான், வள்ளுவர் காட்டும் வாழ்வியலுக்கான மிகப் பெரிய செய்தி இது.
|
அதிகாரம் 44, நிலையாமை - குறள் எண் 439
|
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க
நன்றி பயவா வினை.
|
வியவற்க - வியந்து பெருமையடையக்கூடாது,
நயவற்க - நல்லது என்று விரும்பக்கூடாது,
எஞ்ஞான்றும் தன்னை - எப்பொழுதும் தன்னை,
நன்றி பயவா வினை - நன்மை செய்யதா செயல்.
|
எப்பொழுதும் தன்னை, தன் செயலை - வியந்து பெருமையடையக்கூடாது
நன்மை செய்யாத எந்தச் செயலையும், என்றுமே விரும்பக்கூடாது
|
|
|
ஒவ்வொரு படியாக உயரவேண்டும். உயர உயர உள்ளம் விரிவடையும். உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்த கொண்டிருக்கிற ஒரு படியில் நின்று, நம்மை நாமே வியந்து கொண்டிருக்கக்கூடாது.
அப்படி வியந்தால் அந்தப் படியிலேயே நாம் நின்று விடுவோம். மேலே போக மாட்டோம். எனவே எந்த நிலையிலும் நம்மை நாம் வியந்து கொண்டிருக்கக் கூடாது.
|
தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் நன்மை தராத எந்தச் செயலையும் நாம் என்றுமே விரும்பக்கூடாது.
|
கேட்க நன்றாக இருக்கிறது. இதைச் செயற்படுத்த முடியுமா ? இதைத்தான் இங்குள்ள பலரும் கேட்கிறார்கள். ????
|
முதலில் யாரைப்பற்றியும் கவலைப்படாது நீங்கள் உள்வாங்குங்கள். அதை உங்கள் மனதில் பதிய வையுங்கள். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இதனை முன்னிருத்திச் செயற்படுங்கள். நீங்கள் செயற்படுவதை பிறருக்குச் சொல்லுங்கள்.
குறளைச் சொல்லி சொல்லுங்கள். உங்களை மற்றவர் உயர்வாகப் பார்ப்பார்கள். நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு குறளாக உள்வாங்கத் தொடங்குவீர்கள்.
|
உங்களிடமிருந்து கிளம்பும் அலை மற்றவர்களையும் உங்களைப்போல இயங்க வைக்கும். குறள் உங்களுக்கானது என்று தேடுங்கள். புதிய உலகத்தில் நீங்கள் நுழைவீர்கள். மகிழ்வான உலகம் அது. அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்குவீர்கள்.
|
அதிகாரம் 43, நிலையாமை - குறள் எண் 422
|
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
|
சென்ற இடத்தால் - செல்லுகிற இடங்களிலெல்லாம், செலவிடாது - மனம், உடல், பொருள் ஆகியவற்றைச் செலவிடாது,
தீதுஒரீஇ - தீயசெயலிலிருந்து விலகி நின்று, நன்றின்பால் - நல்ல வழிகளில்,
உய்ப்பது - விருப்போடு, ஆழமாக, இறுதிவரை ஈடுபடுவது, அறிவு - அறிவுடைய செயலாகும்.
|
செல்லும் இடங்களிலெல்லாம் மனம், உடல், பொருள் ஆகியவற்றை வீணாகச் செலவிடாமல், தீய செயல்களை விடுத்து நல்ல செயல்களை
ஈடுபாட்டுடன் செய்வதே அறிவு உடைமை ஆகும்.
|
|
|
அறிவு உடைமை என்பதற்குரிய விளக்கத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள். செல்லும் இடங்களில் மனம் அலைபாய்ந்து
உடல், பொருள் ஆகியவற்றை இழப்பது அறிவுடைமை இல்லை. காணுகிற தீய செயல்கள் அனைத்தையும் விலக்கி, நல்ல செயல்களை நாடித் தேடி
விருப்போடு, ஆழமாக, இறுதிவரை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இதனையே உய்ப்பது என்கிற ஒற்றைச் சொல்லில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.
இதுவே அறிவு உடைமைக்கான செயற்பாடு ஆகும்.
|
இன்றைய சூழலில் கல்விக்கூடங்களில் அறிவு பெறலாம் என்று காட்டப்படுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்து முடித்து,
பிறகு கல்லூரிகளில் படித்து முடித்தவருக்குக் கூட இந்த அறிவுக்கான ஒரு பாதையாவது காட்டப்படுகிறதா ? அல்லது இந்த அறிவு
பற்றிய ஒரு குறிப்பாவது சொல்லப் படுகிறதா ?
|
உள்ளத்தால் உள்ளலும் தீதே, தீதுஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது - என்கிற படிநிலைகளை உள்வாங்க இன்றைய கல்விக்கூடங்களின்
எந்த வகுப்பிலாவது திட்டமிடப் பட்டுள்ளதா ? இதற்கான பாடங்கள் அமைக்கப் பட்டுள்ளனவா ? பிறகு எப்படி அறிவாளிகள் உருவாகுவார்கள்.
|
தன்னளவில் உயர்ந்து, தன்னைக் காட்சிப்படுத்துதலின் வழி பிறரையும் உயர்த்தி, அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும்
அறிவு உடையார் அனைத்தும் உடையவர் என்றும், அனைவரும் வணங்குவதற்கான சான்றாதாரமாக - ஒருவன் பெறுகிற அறிவை,
அறிவு உடைமையை - உலகில் உள்ள எந்த இலக்கியமாவது பதிவு செய்துள்ளதா ?
|
இன்றைய உலகில் அறிவு என்பது பொருளீட்டுகிற கருவியாக விளம்பரப் படுத்தப்பட்டு, உயரிய உளப்பாங்குகள் அனைத்தும் புறம்
தள்ளப்பட்டு, இயக்கப் படுவதால், தன் நெஞ்சு நிமிர்ந்த, மகிழ்வான, அமைதியான வாழ்வினை யாருமே பெறுவதில்லை. குறள்
காட்டும் ஒவ்வொரு படிநிலையும் மகிழ்வாக வாழ விரும்புவோர் உள்வாங்க வேண்டிய வாழ்வியல் படிநிலைகளே.
|
அதிகாரம் 34, நிலையாமை - குறள் எண் 339
|
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
|
உறங்குவது - தூங்குவது, போலும் - போன்றது,
சாக்காடு - இறப்பு, உறங்கி - தூங்கி,
விழிப்பது - எழுவது, போலும் - போன்றது, பிறப்பு - பிறப்பு.
|
தூங்குவதைப் போன்றது இறப்பு, தூங்கி விழிப்பதைப் போன்றது பிறப்பு.
|
|
|
காலம் காலமாகச் சொல்வதுதானே இதில் என்ன சிறப்பு இருக்கிறது?
|
பிறப்பில்லாத இறப்பு வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும், ஏழு பிறவி எடுத்து, மெய் உணர்ந்தால்தான் இறைவனிடம் சேர இயலும் என்பதும், இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அடுத்த பிறவியில் துன்பம் இருக்காது என்பதும் - இங்கே தொடர்ந்து சொல்லப்பட்டு, அதன் வழியிலான நகர்வுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உற்று நோக்கி மாந்தன் தெளிவதே இல்லை.
|
இறப்பு நிலையில்லாதது. எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாதது. இறுதிக் காலகட்டத்தில், யாரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்டோமே என்ற உணர்வில், ஒவ்வொரு மாந்தனும் படும்பாடு அளப்பரியது. ஏன் இறுதிவரை மகிழ்வோடு வாழ இயலாதா ? இயலும். அதற்குரிய அனைத்தும் திருக்குறளில் உள்ளன. ஊன்றிப்படித்து உள் உணர்ந்து வாழ்வு முறையை அமைத்துக் கொண்டால் இறுதிவரை மகிழ்வோடு வாழலாம்.
|
இன்றைய அறிவியல் உலகில் பிறப்பு என்பது மாந்தனின் கட்டுக்குள் அடங்கி விட்டது. விரும்பிய நேரத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். விரும்பிய குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். விரும்பினால் குழந்தையையே பெற்றுக் கொள்ளாமலும் தவிர்த்து விடலாம். ஆக பிறப்பு என்பது கட்டுக்குள் உள்ளது.
|
பிறகு எதற்கு இந்தக் குறள்? இறப்பு நிலையில்லாததே. என்று வேண்டுமானாலும் வரும். இறுதிவரை மகிழ்வாக இருக்க வேண்டுமானால் அதற்குரிய வாழ்வு முறைக்கான ஒரு படிநிலைதான் இந்தக் குறள்.
|
இரவு படுக்கும் பொழுது இறந்து விடுங்கள். காலையில் எழும் பொழுது புதிய மனிதனாகப் பிறந்து எழுங்கள். புதிய மனிதனாக மற்றவர்களோடு பழகுங்கள். இன்று, நேற்று, அதற்கு முன்பு பலநாள்களுக்கு முன்பு செய்த தொந்தரவுகளை உறங்கும்போது அப்படியே மறந்து விட்டுக் காலையில் புதிய பிறப்பெடுங்கள். பிறர் செய்த துன்பங்களை மறந்து அவர்களோடு என்றும் பழகுங்கள். மகிழ்வோடு பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்பாக உங்கள் செயற்பாடுகள் இருக்கட்டும்.
|
ஒவ்வொரு மாந்தனும் இரவில் இறந்து காலையில் புதிய மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று உறுதி கொண்டால் என்றுமே துன்பம் இருக்காது.
|
அதிகாரம் 34, நிலையாமை - குறள் எண் 340
|
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு?.
|
புக்கில் - புது இல், அமைந்தின்று கொல்லோ - அமையவில்லையோ,
உடம்பினுள் - உடம்பின் உள்,
துச்சில் - வாடகை இல், இருந்த - இருந்த, உயிர்க்கு - உயிர்க்கு ?
|
வாடகை வீடாகிய உடம்பிற்குள் இருக்கும் உயிர்க்கு புதிய வீடாகிய உடம்பு, இன்னும் கிடைக்கவில்லையோ ?
அதனால்தான் வாடகை வீடாகிய உடம்பில் வாழ்கிறதோ?
|
|
|
நிலையாமை என்ற அதிகாரத்தில் செல்வம் நிலையில்லை, உயிர் நிலையில்லை, வாழ்க்கை நிலையில்லை என்று ஒவ்வொரு குறளிலும் விளக்கிய வள்ளுவர் இறுதியாக உள்ள இந்தக் குறளில் நிலையாமையை வென்றெடுப்பதற்கான
வாழ்வியல் தீர்வுகளைக் காட்டுகிறார்.
|
( ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள ஒன்பது குறள்களிலும் வள்ளுவர் அதிகாரத் தலைப்பிற்கான பல்வேறு விளக்கங்களை வரிசைப்படுத்தி விட்டு, இறுதியாக உள்ள பத்தாவது குறளில் அந்த அதிகாரத்திற்கான வாழ்வியல் தீர்வினைக்
காட்டுகிறார். இந்த உண்மையை இன்றுதான் என்னால் உணரமுடிந்தது. குறள் அமைப்பிலுள்ள மிகப்பெரிய படிநிலை இது. சிறந்த படைப்பு என்பது பிரச்சனையைக் காட்டி அதற்கான தீர்வையும் காட்ட வேண்டும். அதுதான் காலம் கடந்து நிற்கும் )
|
ஒவ்வொருவரும் நிலையில்லாத இந்த வாழ்க்கையில் வாடகை வீடு மாறுவது போல, குழந்தை, சிறுவன்/சிறுமி, மங்கை/ ஆடவன், பெற்றோர், கிழவன்/கிழவி என்கிற வெவ்வேறு வாடகை வீட்டில் மாறிக் கொண்டே பயணிக்கிறார்கள். அதுவும் அவர்களது வீட்டில்
பல்வேறு வகையான ஓட்டை உடைசல்கள், சர்க்கரை, இரத்தஅழுத்தம், வாந்தி, பேதி, சளி, மயக்கம், என அனைத்தையும் தாங்களாகவே உள்வாங்கி வேதனையில் வெந்து வெந்து மாள்கிறார்கள். மகிழ்வாக வாழ்பவர்கள் மிகச் சிலரே.
|
அவர்களுக்கான புதுவீட்டை அவர்கள் என்றுமே உருவாக்கிக் கொள்வதில்லை. புதிய வீடு உருவாக்குவது எப்படி ?
|
புதிய வீடு என்பது உயிருக்கு அமைந்த மகிழ்வான செயற்பாட்டுச் சூழல். ஒருவரது உயர்ந்த வாழ்வியல் செயற்பாடுகளால் அந்த வீட்டை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கிற வீடு மகிழ்வுக்கூடமாகவே இருக்கும். அதன் வெளிப்பாடாக அவர்களிடமிருந்து பல்வேறு அறச் செயல்கள் வெளிப்படும். அவர்களது இருப்பு உள்ளுரில் பழுத்த நல்ல பழமரமாக இருக்கும்.
|
இப்படிப்பட்ட புதிய வீட்டைத் தங்களின் உயிருக்காகக் கட்டிக் கொண்டவர்கள் இந்த உலகில் நிலைபெற்ற வாழ்வு வாழ்வார்கள். அவர்களது நினைவு பலநூறு ஆண்டுகளுக்குப் பேசப்படும்.
|
பலநூறு ஆண்டுகள் மக்களது நினைவில் நிலைத்து நிற்பவர் (நிலையாமையை வென்றவர்) அவருக்கான புதிய வீட்டைக் கட்டிக் கொண்டவரே. இவரது உடல் தோற்றமும் (வீடு), பெயரும் (உயிர்) என்றும் அழியாமல் இருக்கும், இவரது பெயரைச் சொன்ன உடனேயே இவரது உயிர் இருந்த வீடான, இவரது உடல் நம் முன் நிழலாடும்.
|
தன் நல்ல செயல்களால், வாழ்வு முறையால், மக்களுக்காக விட்டுச்செல்கிற அரிய செயற்பாடுகளால் ஒருவரது நிலையாமையை வென்றெடுக்க முடியும். இதனையே புதிய வீடு உங்களுக்கு இன்னும் அமைய வில்லையோ என்று வினாக்குறியோடு விளக்குகிறார்
|
அதிகாரம் 35, துறவு - குறள் எண் 346.
|
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
|
யான்எனது - நான் என்னுடையது, என்னும் - என்கிற, செருக்குஅறுப்பான் - மனத்திமிர் அறுப்பவன்,
வானோர்க்கு - வானுலகத்தில் வாழ்பவர்களுக்கு, உயர்ந்த - மேலாக உள்ள, உலகம் - உலகத்திற்கு,
புகும் - செல்வான்.
|
நான், என்னுடையது என்கிற மனத்திமிரை அறுத்து வாழ்பவன் வானுலகத்தில் வாழ்பவர்களுக்கும் மேலாக உள்ள உலகத்திற்குச்
செல்லும் தன்மை உடையவனாகிறான்.
|
|
|
வானோரின் உலகம் என்பது என்ன ? அனைத்து மதங்களும் உலக மக்களை வழிநடத்த, இந்த உலகத்திற்கு மேலான உலகம் ஒன்று உள்ளது என்றும்
அந்த உலகத்தில் வாழ்பவர்கள் தேவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு அழிவே கிடையாது என்றும், மகிழ்வாகவே வாழ்வார்கள் என்றும் -
பரப்புரை செய்து, அதற்காகத் தாங்கள் கூறும் கருத்துரைகளைப் பின்பற்றுமாறு சொன்னது.
|
அவ்வாறு இயங்காதவர்கள் கீழான உலகத்திற்குச் சென்று, வேதனைப் படுவார்கள், துன்புறுத்தப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தியது. கீழ் உலகத்தை
நரகம் என்றும், அங்கு செல்பவர்கள், தங்களின் பாவ, புண்ணிய வினைகளுக்கு ஏற்றவாறு, தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் அச்சுறுத்தியது. (அச்சமே கீழ்களது ஆசாரம்)
|
2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை பரவலாக இருந்தது. மன்னனின் அல்லது தலைவனின் கட்டளைக்கு இணங்க மதங்கள் உள்வாங்கப்பட்டு மக்களை
வழிநடத்தியது. வழி நடக்கத் தூண்டியது. வழிநடக்காதவர்களைக் கொன்று ஒழித்தது. அதுமட்டுமல்ல காலப்போக்கில் மதங்கள் ஒன்றை ஒன்று குறை கூறிக்
கொண்டு தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் அடித்துக் கொண்டது.
|
இந்தச் சூழலில்தான் வள்ளுவர் மேலுலகும் இல்லை, கீழுலகும் இல்லை, இந்த உலகிலேயே துன்பமும் இன்பமும் உள்ளது, மனிதர்களின் செயற்பாட்டின்
வழியிலேயே இந்தச் சூழல் அவர்களுக்கு அமைகிறது, என்பதை உள்வாங்கிப் பதிவு செய்தார்.
|
நான் பெரியவன், இவை அனைத்தும் என்னுடையது என்கிற இறுமாப்போடு வாழ்கிறவன் துன்பப்படுவான். அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே
தொடர்ந்து இயங்கி அழிந்தும் போவான். அதனை வெறுத்துத் துறந்து மனிதனாக மேலெழுந்து நிறைவாக வாழ்பவன் மகிழ்வாக வாழ்வான். எந்தத் துன்பமும்
அவனை அணுகாது என்ற உயரிய கருத்தைத் தம் குறளின் பதிவு செய்தார்.
|
வானுலக மக்கள்தான் மகிழ்வானவர்கள், அழிவே கிடையாது என்று நீ சொல்கிறாய், செருக்கை அழித்து இந்த உலகில் வாழும் ஒருவன், அவன் இறந்தபிறகு, அந்த வானுல மக்களுக்கு மேலாகச் சென்று மகிழ்வாக வாழ வேண்டும் என்று இல்லை.
இந்த உலகத்தில் வாழும் பொழுதே நிறைவாகவும், மகிழ்வாகவும், அழிவில்லாமலும் வாழலாம் என்று வழிகாட்டுகிறார்.
|
செருக்கு அறுப்பது என்பது ஒருவருடைய உள்ளம் சார்ந்தது. தன் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி,
தன் நெஞ்சறிய செருக்கை அழிப்பது என்பது நுட்பமானது. அந்த நினைவே ஒருவரை மகிழ்வானவராக மாற்றும். நீங்கா இன்பம் உடையவராக்கும்.
|
அதிகாரம் 33, கொல்லாமை - குறள் எண் 322.
|
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
|
பகுத்து - தனித்தனியாகப் பிரித்து, உண்டு - உணவு உண்டு, பல்லுயிர் - பல உயிர்களை,
ஓம்புதல் - பாதுகாத்தல், நூலோர் - நூல்களை எழுதியவர்கள், தொகுத்தவற்றுள் - சிறப்பானது என்று கருதி தொகுத்தவற்றுள், எல்லாம் - அனைத்திற்கும்,
தலை - முதன்மையானதாகக் கருதப்படும்.
|
|
|
உண்ணுகிற உணவை வகைப்படுத்தி உண்டு, அதன் வழியாக பல உயிர்களையும் பாதுகாக்கிற உயர்ந்த வாழ்வு முறையானது, நூல்களை எழுதியவர்கள்
சிறப்பானது என்று கருதித் தொகுத்த நூல்கள் அனைத்திற்கும் முதன்மையான செயலாகக் கருதப்படும்.
|
உலகத்தில் ஓருயிரி முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரிவதும் தெரியாததும் உண்டு.
இந்த உயிரிகள் அனைத்தும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. ஒன்றை ஒன்று உண்டாலும் உயிர்ச் சமநிலை நிலவுவதற்காக ஒர் ஒழுங்குக் கட்டமைப்பு
இவைகளுக்கு இடையே உண்டு. இந்தச் சமநிலை மாறும் பொழுது ஒர் உயிரினமே அழிக்கப்படுகிறது. அப்பொழுது அது தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக
பல்வேறு தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு புதிய உயிரியாக மாற்றம் பெறுகிறது. இது உலக உயிரிகளின் இயங்கியல்.
|
ஆறறிவு படைத்த மனிதன் உருவான பிறகு இந்த உலக இயங்கியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல உயிரினங்கள் முற்றாக அழியத் தொடங்கின.
தனக்கானதைத் தேடத்தொடங்கி, பிறகு தன் தலைமுறையினருக்காகச் சேர்க்கத் தொடங்கி, தனக்கு தனக்கு என்று அவன் சுருங்கத் தொடங்கியதும், பல்வேறு
மாற்றங்கள் தோன்றித் தொடரலாயின. தற்பொழுது நாகரிகம் என்ற போர்வையில் பல்வேறு சூழ்நிலைச் சீர்கேடுகளை உருவாக்கி, ஒவ்வொரு உயிரினமாக
மனிதன் அழித்துக் கொண்டே இருக்கிறான். உயிர்ச் சமநிலை இழந்தால் உலக இயங்கியல் பாழ்படும் என்ற அறிவு அவனுக்குள் எழவில்லை.
|
பல்வேறு வகையான செடி கொடி உயிரிகளும் இந்த உலகத்தில் சமநிலையோடு இருந்தால் தான் இந்த உலகம் இன்பமான உலமாக இருக்கும். சமநிலை
தவறினால் சீர்கேடுகள் மிகுந்து இந்த உலகத்தை மட்டுமல்ல, இந்த மனித குலத்தையே அழித்து விடும்.
|
மனிதன் தான் உண்ணுகிற உணவை முறைபடுத்தி, தனக்கான உணவை மட்டும் எடுத்துக் கொண்டு, பிறஉயிரினங்களுக்கான உணவை அவைகளுக்கு அளித்து
வாழக்கூடிய வாழ்முறையைத் அவன் வகுத்துக் கொண்டால் பல உயிர்களும் இந்த உலகில் வாழும். எனவே மனிதன் தனக்கான சரியான உணவைக் கண்டறிதல்,
அதைத் தொடர்ந்து முறைபடுத்தி உண்ணுதல் - என்பதே மிகச் சிறந்த வாழ்முறையாகும். இப்படி வாழும் அந்த மனிதன், நூல்பல கற்று உயர்ந்த அறிவோடு
வாழும் மனிதனைவிட மிகச் சிறந்த மனிதனாக மதிக்கப்படுவான். வாழும் நூலாக இருந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைவான்.
|
|
அதிகாரம் 39, இறைமாட்சி (அரசனின் மாட்சிமை) - குறள் எண் 388.
|
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.
|
முறைசெய்து - ஒழுங்குபடுத்தி, காப்பாற்றும் - அரசாட்சி செய்கிற, மன்னவன் - அரசன்,
மக்கட்கு - அவனுடைய நாட்டு மக்களுக்கு, இறைஎன்று - இறைவன் என்று,
வைக்கப்படும் - கருதப்படுவான்.
|
|
|
நடைமுறைகள் அனைத்தையும் முறைபடுத்தி, ஒழுங்குபடுத்தி அரசாட்சி செய்கின்ற மன்னவன், அவனுடைய நாட்டு மக்களால்
இறைவன் என்று கருதப்பட்டு, போற்றி வணங்கப்படுவான்.
|
இறைவன் என்பவன் வானத்திலிருந்து குதித்தவன் அல்ல. துன்பங்களைத் துடைப்பவனும் அல்ல. முயற்சி செய்யாமல், மெய்வருந்தாமல்
கூலியை மட்டுமே கேட்டால், ஓடிவந்து தருகிற அருளாளனும் அல்ல.
ஒருவன் தினைத்துனை நன்றி செய்யினும் அடுத்தவன் அதனைப் பனைத்துனையாகக் கொள்ள
வேண்டும். உதவியவனை இறையாக வணங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்போடு பகிர்ந்து கொள்ளுகிற உயரிய மக்கள்கூட்டம் இப்படித்தான் இருக்கும்.
|
தமிழர் வாழ்வியலில், மக்கள் தங்களைப் பலவகைகளிலும் பாதுகாத்து அரணாக நின்ற தலைவனை, இறைவன் என்று போற்றி வணங்கினர். அது போலவே
அரணாக நின்ற குடும்பத் தலைவனையும் இறைவன் என்றே வணங்கினர். வாழ்ந்த இவர்களது மறைவிற்குப் பிறகும், நடுகல் நட்டு வணங்கி,
அல்லது வாழ்விடங்களை - வழிபாட்டிடங்களாக மாற்றி - வழிபட்டு வணங்கினர். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியம் காட்டுவதும் இதுவே.
|
முறை செய்து, என்பதில் அரசனது அனைத்து நுட்பச் செயல்களையும் வள்ளுவர் அடக்கி உள்ளார். அனைத்திலும் முறையான செயற்பாடு.
மக்களுக்கான உணவு, உடை, உறையுள் என்கிற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தும், பிறகு பாதுகாப்பு, ஆய்ந்து அறிதல்,
வளப்படுத்துதல், மேலெழுதல் என்கிற படிநிலைகளுக்கு வழி அமைத்தும் முறைபடுத்திச் செயற்படுத்திய மன்னவர்கள் மக்களால் நினைக்கப்
பட்டனர். அவ்வாறு இயங்காத மன்னவர்கள் மக்களால் மறக்கப்பட்டனர்.
|
தன்நாட்டு மக்களை அழித்தொழிக்கிற செயலை எந்த நாட்டு மன்னனாவது செய்வானா ? அப்படிச் செய்பவனை மன்னனாகக் கருதுவது சரியா ?
பல்வேறு பொய்யுரைகளையும், நாடகங்களையும் நடத்திக் கொண்டே மக்களைப் பற்றிக் கவலைப்படாத மன்னவனை அந்த நாட்டு மக்கள்
மட்டுமல்ல, இந்த உலகமே தலை வணங்காது. தன்நாட்டு மக்களை வேற்று நாட்டவன் அழித்தாலும், அவனோடு நட்புநாடு என்று இயங்குபவன்
அந்த நாட்டுக்கான உண்மையான அரசன் என்று கருதப்படுவானா ?
|
இன்றைய சூழலில் ஐ.நா மன்றம், உலக நாடுகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், தனித்தனியான கூட்டமைப்புகள் என்று இயங்குவது - ஒரு நாட்டின்
மக்களை அந்த நாடு காப்பாற்ற வேண்டும் என்பதற்கான உயர்ந்த இலக்கு நோக்கித்தானே. அப்படி என்றால் ஒரு நாட்டில் வாழ இயலாமல் அகதிகளாக
மற்ற நாடுகளுக்குப் புலம் பெயர்வது எதனைக் காட்டுகிறது ? மன்னனோடு ஒத்து வாழ இயலாததால் தானே நாட்டை விட்டு அகதிகளாகப் புலம் பெயர்கிறார்கள்.
இந்த அடிப்படை உண்மை கூட எந்த நாட்டுத் தலைவருக்கும் தெரியாதா ? பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லை ஒவ்வொரு நாடும் எப்படிப் பயன்படுத்துகின்றன ?
|
ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு மக்கள் அனைத்து வளங்களோடும் மகிழ்வாக வாழ வேண்டும் என்பதுதானே அரசனின் இலக்காக இருக்க
வேண்டும், அதற்காக அடுத்த நாட்டின் வளங்களைச் சுரண்டி மேலெழுவது என்பது கேலிக்கூத்தாக இல்லையா ? உலகத்திலுள்ள காடுகளை
அழித்தது போதாது என்று அமேசான் காட்டிலும் வளங்களைச் சுரண்டுவது எதனைக் காட்டுகிறது ? உளபோல இல்லாகித் தோன்றக் கெடும்
என்ற வள்ளுவரின் வாக்கு உண்மையாகும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது.
|
வள்ளுவத்தின் உண்மையை இப்பொழுதாவது உலகம் உணருமா ? (ஒரு மன்னவன் உண்மையான மன்னவனாக இருந்தால், தன் நாட்டு மக்களை
மக்களாக மாற்றுவதற்கான முறையும் செய்து, பயிற்சியும் தருவான். இல்லையேல் மாக்களாகத்தான் இருப்பார்கள்)
|
|
அதிகாரம் 58, கண்ணோட்டம் - குறள் எண் 572
|
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை.
|
கண்ணோட்டம் என்றால் இரக்கம், கழிவிரக்கம், பச்சாதாபம், தொடர்புடையோரிடம் இரக்கம் காட்டுதல் என்றுதான், அனைத்து உரையாசிரியர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
திருக்குறள் பொருளதிகாரத்தின், அரசியல் பகுதியில் இந்தத் தலைப்பில் 10 குறள்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இரக்கம் காட்டுதல் என்பது இந்த இடத்தில் சரியாக இருக்குமா ? இதே
கருத்தைத்தான் எனது மாணவர் திரு அய்யாசாமியும் குறிப்பிட்டிருந்ததார். இரக்கப்படுவது நல்லதுதான். ஆனால் இரக்கப்பட்டே நாம் அழிந்து போகலாமா ?
|
கண்ணோட்டம் என்பது கண்வழியே தெரிகிற உலகத்து நிகழ்வுகள், அதாவது.... கோபம், வெறுப்பு, அன்பு, பாசம், மகிழ்ச்சி என்று அனைத்து வகையான உலகியல் இயங்குதல்களின்
வெளிப்பாடாக இதைக் குறிப்பிடலாம். முகம் என்பது அகத்துள்ளதைக் காட்டுவது. அந்த முகத்தில் உள்ள கண் இதனை வெளிப்படுத்துவதற்கான முதன்மைக் கருவியாக அமைந்துள்ளது.
இந்தக் கருத்துதான் கண்ணோட்டம் என்பதற்கான விளக்கமாக இருக்கும் என்று என்னுள் தோன்றியது.
|
10 குறள்களுக்குள் வள்ளுவர் இதனைக் குறிப்பிட்டிருக்கிறாரா....என்று தேடிய பொழுது, கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (குறள் எண் 572) என்ற வரிகள் இதனைக் காட்டுவதாக
எனக்குத் தோன்றியது. உலகியல் = உலகு + இயல், அதாவது உலகத்தில் உள்ள அனைத்து இயங்கியலையும், அதாவது இயங்குதல்களையும், கண் வழியாக வெளிப்படுத்துகிற இந்த நிகழ்வைத், திருவள்ளுவர் - "கண்ணோட்டம்" என்ற ஒற்றைச்
சொல்லில் அடக்கியுள்ளார் என்று கருதினேன்.
|
கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் என்ற வரிகள் (குறள் எண் 576), கண்ணோட்டத்திற்குக் கண் கருவியாக அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கண்ணோட்டம் என்ற
சொல்லையே குறிப்பிடாமல், "கண்ணோடுகிற" - நயத்தக்க நாகரிகத்தைக் குறள் எண் 580 இல் நுட்பமாகக் காட்டுகிறார். நஞ்சு பெயக்கண்டது தெரிந்தும், முகத்தின் கண்வழியாக
எந்தவகையான எதிர்வினையையும் காட்டாமல், மகிழ்வோடு அதனை உண்டு அமைவர் என்பது இந்த உலகமே வியக்கத்தக்க, நயத்தக்க நாகரிகம் அல்லவா ? கட்டடங்கள்,
நாணயங்கள், பயன்பாட்டுப் பொருள்கள் என்பதன் வழியாக மட்டுமே நாகரிகத்துக்கு விளக்கம் தருகிற இந்த உலகத்திற்கு பண்பாட்டு வழியிலான நயத்தக்க நாகரிகத்தை
அறிமுகப்படுத்தியவர் திருவள்ளுவர் மட்டும் தான்.
|
கண்ணோட்டத்திற்கான இந்தப் புரிதலோடு 10 குறள்களையும் நுணுகிப் பார்த்தால் மானுட வாழ்வியலின் அடித்தளத்திற்கான மிகப் பெரிய பாதை தெரியும். அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான மிகப் பெரிய நுணுக்கம் இது.
|
அதிகாரம் 58, கண்ணோட்டம் - குறள் எண் 572.
|
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை.
|
கண்ணோட்டத்து - கண்ணோட்டம் என்கிற வெளிப்படுத்துதலில், உள்ளது - இருக்கிறது, உலகியல் - உலகத்தில் காணப்படுகிற அனைத்து இயங்கியலும்,
அஃதிலார் - அவ்வாறு வெளிப்படுத்தாதவர்கள், உண்மை - உண்மை,
நிலைக்கு - தன்மைக்கு, பொறை - எதிராகக் கருதப்படுவார்கள்.
|
|
|
உலகத்தில் உள்ள அனைத்து வகையான இயங்கியலும், கண்ணோட்டம் என்கிற கண்வழியாக வெளிப்படுத்துகிற வெளிப்படுத்துதலின் வழி அறியப்படும். அவ்வாறு
வெளிப்படுத்தாதவர்கள் உண்மை தன்மைக்கு எதிராக அல்லது சுமையாகக் கருதப்படுவார்கள்.
|
இயல்பாகக் கண்வழியாகவே அனைத்து வகையான இயங்கியலும் வெளிப்படுத்தப்படும். ஆனால் அதனை அடக்கி, சூழலுக்கு ஏற்றவாறு ஆளத்தெரிகிறவர்கள் வெற்றி
பெற்றவர்கள் ஆகிறார்கள். அவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் அடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். கண்ணோட்டம் என்பது கண்ணுக்கு அணிகலன் தான்.
அணியும் பொழுது அழகாகத் தோன்றும், அணியாத பொழுது புண் போலத் தோன்றும். ஆனால் அந்த அணிகலனை கருமம் சிதையாது (குறள் எண் 578) அணியத் தெரிந்தவருக்கு
இந்த உலகமே உரிமை உடையதாக அமையும். அணியக்கூடிய கலனை எப்பொழுது வேண்டுமானாலும் அணியலாம், வேண்டாம் என்றால் எடுத்தும் விடலாம்.
|
ஒறுத்து ஆற்றும் பண்பினரோடும் (குறள் எண் 579) கண்ணோட்டத்தை அடக்கி ஆண்டு, பொறுத்து ஆற்றுவது என்பது உயரிய பண்பாக அமைந்துள்ளது அல்லவா ? இத்தகைய
உயர்ந்த பண்பு தமிழர் வாழ்வியலோடு இணைந்து இருந்தது. உலகத்தில் எங்குமே காணப்படாத உயர்ந்த பண்பாடு இது.
|
கண்ணோட்டத்தை அடக்கி ஆளுவது என்பது நடிப்பு அல்ல, அது ஒர் உயரிய பண்பு. உண்மையை உணர்ந்து, சரியான சூழலை உணர்ந்து சரியாகக் கண்ணோடுகிறவர்கள்
எங்கும் எதிலும் வெற்றி பெறுவார்கள். இதனையே இந்த அதிகாரம் நுட்பமாகக் குறிப்பிடுகிறது.
|
|
உலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.
|
|
| | | | |