திருக்குறள்
உரை
பொள்ளாச்சி நசன்
திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.
திருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.
பெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்
... வரிசை எண் 11 - 20 ... வரிசை எண் 01 - 10 ...
எண் 030
அதிகாரம் 38, ஊழ் (இயற்கை விதியை அறிதல்) - குறள் எண் 373.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

நுண்ணிய - நுட்பமான, நூல்பல - நூல்கள் பலவற்றை, கற்பினும் - கற்றாலும், மற்றும்தன் - ஒருவருடைய, உண்மை - உண்மையான, அறிவே - அறிவே, மிகும் - மேலோங்கிக் காணப்படும்.

நுட்பமான நூல்கள் பலவற்றை ஒருவர் கற்று இருந்தாலும், அவருடைய உண்மையான அறிவின் வழியிலேயே அவருக்கான அனைத்தும் அமையும்.

உண்மையான அறிவு என்றால் என்ன ? இதனை இயங்குகிற அறிவு என்கிற ஒற்றைச் சொல்லில் அடக்கி விட முடியுமா ?

இயங்குகிற அறிவு என்பது ஒரு குழந்தையின் மரபுவழி இணைந்துள்ள அறிவும், அந்தக் குழந்தையின் சூழல்வழி இணையப்போகிற அறிவையும், உள்ளடக்கியதாக அமையும். சில நேரங்களில் மரபுவழி அமைகிற அறிவைக்கூட, சூழல்வழி இணைக்கிற அறிவு வென்றுவிடும். எனவே அறிவு என்பது ஒரு குழந்தைக்குத் திட்டமிட்டு அமைக்கிற சரியான சூழல் ஆகும். இந்த அறிவே ஒருவருடைய பிரச்சனைக்குரிய காலங்களில், அவருடன் இருந்து வழிநடத்துவது. சரியாக முடிவெடுக்க வழி அமைக்கக் கூடியது. இதுவே "உண்மையான அறிவு."

இன்றைய சூழலில் கல்விக் கூடங்கள் இத்தகைய உண்மை அறிவுக்கான இடங்களாக இல்லாமல், கற்ற நூல்களிலிருந்து வினாவுக்கான விடைஅளிக்கிற, மதிப்பெண்களையே அறிவு என்று பறைசாற்றுகிற, வணிக வளாகங்களாக மாறிப்போய் விட்டன. இதிலிருந்து வருகிற மாணவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண இயலாது வாழ்க்கையில் முடங்கிப்போய்விடுவர். முட்டுக்கட்டைகளாகுவர். கல்விக்கூடங்களின் இந்த இழிநிலையை, உண்மை அறிவை இழந்த பெற்றோர்களால் கண்டறிய இயலாது.

ஒருவர் பல்வேறு நூல்களைக் கற்று இருந்தாலும், அந்த நூல்களின் வழி அவர் அடைகிற அறிவு என்பது கருத்துச் செறிவேற்றத்திற்கான படிக்கட்டாக அமையுமே தவிர அவரது உண்மையான அறிவுக்கு வழி அமைக்காது. அவர் கற்ற நூல்களில் உள்ள கருத்துகளை உள்வாங்கி, அதிலுள்ள கருத்துகளை அவரது சூழலுக்கேற்றவாறு இணைத்துக் கொண்டு, அக் கருத்துகளை அவருடைய வாழ்க்கைச் சூழலோடு பொருத்தி, உணர்ந்து, இயங்குவார் என்றால், அவர் கற்றவை உண்மை அறிவுக்கு உரிய படிக்கட்டாக அமைந்து வழிநடத்தும். ( இதனையே குறள் எண் 391 இல் கற்க, கசடு அறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் நிற்க - என்று படிப் படியாகப் படி அமைத்துத் தருகிறார் ) இத்தகைய சூழல் இன்றை கல்விக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ளனவா ?

படித்த ஒருவர் தன் பெயருக்குப் பின்னால் படித்த பட்டங்களை வரிசைப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. படித்தவற்றை உள்வாங்கி வாழ்க்கைக்குரிய படிக்காட்டாக அமைத்து வாழ்ந்து காட்டுவதே படித்தவருக்கான அடையாளமாகக் கருதப்படும். அவ்வாறு இல்லையேல் அவரும் படிக்காதவராகவே கருதப்படுவார்.

ஊழ் என்பது முந்தைய பிறவியில் செய்த நன்மை தீமையால் இந்தப் பிறவியில் நாம் பெறுவது அல்ல. ஊழ் என்பது இயற்கை விதியை அறிந்து இயங்குதல். படித்து உணர்ந்ததை வாழ்வியல் கூறுகளாக அமைத்து, உண்மை அறிவைப் பெருக்கிக் கொண்டவருக்கு அனைத்தும் எளிமையாக அமையும், ஊழ் உறுத்தாது. அனைத்தும் மகிழ்வாகவே அமையும், வெற்றியும் தொடரும்.

எண் 029
அதிகாரம் 74, நாடு ( நாட்டிற்கான இலக்கணம் ) - குறள் எண் 739.
நாடுஎன்ப நாடா வளத்தன, நாடுஅல்ல
நாடவளம்தரு நாடு.

நாடு என்ப - நாடு என்பது, நாடா - யாரையும் அணுகாமலேயே, வளத்தன - வளத்தை உடையதாக இருத்தல், நாடுஅல்ல - அது நாடாக இருக்காது, நாட - பிறரை அணுகிப் பெற்று, வளம்தரு - வளத்தைத் தருகிற, நாடு - நாடு.

நாடு என்பது வேறு நாட்டை அணுகிப் பெறாமலேயே தன்னகத்து வளத்தை உடையதாக இருத்தல் வேண்டும். அப்படியில்லாமல் பிற நாடுகளை அணுகித் தனக்கான வளத்தைப் பெற்றுக் கொள்கிற நாடு....... ஒரு நாடாக இருக்காது.

ஒரு நாட்டிற்கான மிகச் சிறந்த இலக்கணம் இது. ஒரு நாடு தனக்கான அனைத்து வளங்களையும் உடையதாக இருக்க வேண்டும். இயற்கைச் சூழலில் பல்வேறு நாடுகளில் அடிப்படையான இயற்கை வளங்களே இருப்பது இல்லை. இருந்தாலும், அந்த வளங்களைத் தன்னகத்தே உருவாக்கவும், வளப்படுத்துவதற்கான வழி முறைகளை அடையவும் - வளம் உள்ள நாடுகளிலிருந்து பெறவும் திட்டமிடவேண்டும. அப்படித் திட்டமிட்டுத் தன் நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வளங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் எப்படிச் சிந்தித்திருக்கிறார் பாருங்கள்.

இன்றை சூழலில் உலகமயமாதல், பிறநாடுகளின் உதவியின்றி வாழ இயலாது, உலகம் ஒரு வலைப்பின்னலுக்குள் அமைந்துள்ளது - என்று கருத்துப்பரவல் செய்து ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டினை தன்அடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கிற கீழறுப்பு வேலைகளையே செய்து கொண்டிருக்கிறது. இதனையே உலக அளவிலான சமாதான, நட்புறவுச் செயற்பாடுகள் என்று அறிவித்துக் கொண்டு தன்நலத்தோடு ஒவ்வொரு நாடும் இயங்கிக் கொண்டிகிறது. பிற நாடுகளைப் பற்றியோ, அந்த நாட்டில் உள்ள மக்களைப் பற்றியோ யாரும் கவலைப் படுவதில்லை. மற்ற நாட்டின் வளங்களை எப்படிச் சுரண்டித் தன்நாட்டின் வளமாக மாற்றுவது எனபதனையே இலக்காக்கிக் கொண்டு, உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இயங்கி வருகின்றன. (வள்ளுவரின் கருத்துகள் உலகநாடுகள் சிந்தித்துச் செயல்படுவதற்காகவே எழுதப்பட்டவை)

ஒரு நாடு என்பது முதலாவதாகத் தன் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றின் உறுதிப்பாட்டிற்காகத்தான் திட்டமிடவேண்டும். உழைக்க வேண்டும். அதற்காக நாட்டு மக்களையே அணியப்படுத்தி, பயிற்சி கொடுத்து, இயக்கி அனைத்துத் தேவைகளையும், அனைவரும் பெறுவதற்கான விரிவான திட்டமிடுதலை நிகழ்த்த வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்கே அடுத்த நாட்டில் கையேந்தும் நிலையில் உள்ள நாடு ஒரு நாடாகாது. இதனையே நாடவளம்தரும் நாடு நாடல்ல என்கிறார் வள்ளுவர்.

வெங்காயம் இந்த ஆண்டு தட்டுப்பாடு வரும் என்றும், நான்கு மாதங்களுக்கு முன்பே அயல்நாடுகளில் வாங்கிப் பெற்று சேமிக்க வேண்டும் என்று நினைப்பது எத்தகைய மோசடியானது. அந்த நாட்டிலேயே நான்கு மாதங்களில் வெங்காயத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட இயலாதா ? உணவு உடை உறையுள் என்கிற அடிப்படைத் தேவைகளையே நிறைவு செய்யாமல், மேலே மிதப்பதாக, உலக வல்லரசாகக் கனவு கண்டு கொண்டு இருப்பது எத்தகைய சீர்கேடானது.

ஆக ஒரு நாடு முதன்மையாகத் தன் நாட்டு மக்களின் அடிப்படையான வாழ்க்கைச் செயல்முறைகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்களாகவே அடைவதற்கான கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன்நாட்டில் உள்ள இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு, வரிசைப் படுத்தி, செய்ய வேண்டிய செயற்பாடுகளை அந்த நாட்டு மக்களைக் கொண்டே செய்வதற்கான செயற்பாடுகளை, பயிற்சியை திட்டமிட வேண்டும். நாடு, திட்டமிடுதல், தலைமை என்கிற முப்பரிமாண ஒழுங்கிற்குள் அமைந்த செயற்பாடு இது. இதனைத்தான் தமிழன் திட்டமிட்டான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வெவ்வேறு சூழலுக்குள்ளும், அந்த சூழலில் உள்ள வளங்களைக் கொண்டே அந்த மக்களுக்கான அனைத்தும் கிடைப்பதற்கான வழிமுறையை வகுத்துச் செயற்பட்டடான்.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்தக் கருத்து உலகமக்களுக்கான வழிகாட்டியாக அமையும். தன் மக்களை அன்போடு பார்க்கும் ஒவ்வொரு தலைமையும் இதனை ஏற்கும், நடைமுறை படுத்தும். ஏனெனில் திருக்குறள் மொழி இனம் நாடு கடந்து உலக மக்களின் நன்மைக்காகப் படைக்கப்பட்ட ஒர் உயரிய கருத்தாக்கம் ஆகும்.

எண் 028
அதிகாரம் 37, அவா அறுத்தல் (ஆசைகளிலிருந்து விடுபடுதல்) - குறள் எண் 362.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.

வேண்டுங்கால் - பெறவேண்டும் என்று விரும்பினால், வேண்டும் - வேண்ட வேண்டும், பிறவாமை - மறுபடியும் பிறக்காமல் இருத்தல், மற்றுஅது - ஆனால் அது, வேண்டாமை - ஆசைகளிலிருந்து விடுபட்ட நிலையில், வேண்ட - வேண்டும் என்று விரும்ப, வரும் - கிடைக்கும்.

இந்த உலகில் வேண்டவேண்டும் என்று விரும்பினால், அடுத்த பிறவி வேண்டாம் என்பதைத்தான் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் வேண்ட வேண்டும். ஆனால் ஆசைகளிலிருந்து விடுபட்ட நிலையில் உள்ள ஒருவர் இதனை வேண்டினால் மறுபடியும் பிறத்தல் என்பது நடைபெறாமல் இருக்கும்.

தானம் செய், தருமம் செய், அப்பொழுதுதான் அடுத்த பிறவியில் நீ துன்பம் அடையாமல் இருப்பாய். இந்தப் பிறவியில் நீ அறம் செய்தால் அடுத்த பிறவியில் நீ வளமாக இருப்பாய் - இப்படியெல்லாம் கூறி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தன மதங்களும், அமைப்புகளும். அச்சுறுத்துவதற்குத் துணையாய் நின்றன சாத்திரங்களும், வேதங்களும்.

பயன் கருதி வாழ்பவன்தான் மனிதன். ஏழேழு பிறவியிலும் வளமாக வாழவேண்டும் என்பதே அவன் கனவாக இருந்தது. இப்படி அவன் மூளைக்குள் தொடர்ந்து ஏற்றப் பட்டதால் அடுத்த பிறவியில் வளமாக வாழவேண்டும் என்றே இந்தப் பிறவியில் வாழ்ந்தான். பொதுநலம் குன்றி தன்நலத்தவனாகவே மாறிப்போனான்.

இந்தச் சூழலில்தான் ஆசைகளிலிருந்து விடுபட்ட ஒருவன், வேண்டினால் அடுத்த பிறவி என்பதே அவனுக்கு இல்லை. பிறவாமையை எளிமையாக அடைய இயலும் என்று வள்ளுவர் திருக்குறளில் எழுதினார்.

வள்ளுவர் காலத்திலுள்ள சமயங்கள் மறுபிறப்பு உண்டு என்றும், ஒருவர் இறைவனிடம் வேண்டினால் மறுபடியும் பிறக்காது இருக்க வேண்ட வேண்டும் என்றும் தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்தின. மூளைச்சலவை செய்து அவன் மூளைக்குள் புகுத்தின. இதனை வள்ளுவர் மிகச் சாதாரணமாகத் தூக்கி எறிகிறார். இந்த உலகில் உள்ள ஆசைகளிலிருந்து விடுபட்டு வாழுகிற ஒருவர், வேண்டாம் என்று வேண்டினால் மீண்டும் பிறத்தல் என்பது நடைபெறாது. அஃதாவது ஆசைகளை விடுவித்த ஒரு மாந்தன் நினைத்தால் அடுத்த பிறப்பு என்பதே நிகழாது என்று பதிவு செய்தார்.

பல பிறப்புகள் பிறந்து நீ துன்பப் படவேண்டும், அதிலிருந்து மீள நீ இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் - என்று அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில், ஆசையிலிருந்து விடுபட்ட ஒரு மனிதன் நினைத்தாலே அவனுக்குப் பிறப்பு என்பது கிடையாது என்று பா எழுதியுள்ளது எத்தனை உயரியது.

எண் 027
அதிகாரம் 35, துறவு (அகப்பற்றையும், புறப்பற்றையும் துறத்தல்) - குறள் எண் 346.
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

யான்எனது - நான் எனது, என்னும் - என்கிற, செருக்கு அறுப்பான் - ஆணவத்தோடு கொண்டிருக்கிற தலைக்கனத்தை அறுப்பவன், வானோர்க்கு - வானத்திலிருக்கும் வானோர்க்கு, உயர்ந்த - மேலும் உயரத்தில் உள்ள, உலகம் - உலகத்திற்கு, புகும் - புகும் ஆற்றல் உடையவர்களாவார்கள்.

நான் எனது என்கிற செருக்குகளைத் தன்னகத்தே கொண்டிராது, அந்தத் தலைக்கனத்தை, அந்த ஆணவத்தை அறுத்து வாழ்பவர்கள், வானத்திலிருக்கும் இறைக்கு மேலும் உள்ள உயர்ந்த உலகத்திற்குச் செல்லும் ஆற்றல் உடையவர்களாக ஆவார்கள்.

அகப்பற்றையும், புறப்பற்றையும் துறந்து வாழ்கிற உண்மையான துறவிகள், வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகத்திற்குச் செல்லும் ஆற்றல் உடையவர்கள் ஆகிறார்கள். இவர்கள் மனிதர்களாக இந்த உலகில் பிறந்து, பற்றுகளைத் துறந்து, நிறைவாழ்வு வாழ்ந்து, வானோர்க்கும் மேலுள்ள உலகத்திற்குச் செல்லும் ஆற்றல் உடையவர்கள் ஆகிறார்கள்.

இல்லறத்தில் உண்மையான அறவாணர்களாக வாழ்வதும், துறவறத்தில் உண்மையாகத் துறந்தவர்களாக வாழ்வதும் வானுலகம் செல்வதற்கான வழியாகக் காட்டப்பட்டுள்ளன.

எண் 026
அதிகாரம் 5 இல்வாழ்க்கை ( இல்லறத்தில் வாழுதல் ) குறள் எண் 50.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வையத்துள் - உலகத்தில், வாழ்வாங்கு - வாழவேண்டிய வகையில், வாழ்பவன் - வாழ்ந்து கொண்டிருப்பவன், வானுறையும் - வானத்தில் இருக்கக்கூடிய, தெய்வத்துள் - இறைவனது வரிசையில், வைக்கப்படும் - வைத்து வணங்கப்படும்.

இந்த உலகத்தில் இல்லறத்தில் இருந்து கொண்டே வாழவேண்டிய வகையில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பவன், அவனது மறைவிற்குப் பிறகும் வானத்தில் இருக்கக்கூடிய தெய்வத்தின் வரிசையில் வைத்து, நினைத்து வணங்கப்படும்.

வானுறையும் தெய்வமாக நிலைத்து நிற்பதற்கு, துறவத்தில் வாழ்ந்து யாகங்கள் செய்து, உடலை வருத்தித் தவங்கள் செய்ய வேண்டியதில்லை. இல்லறத்தில் இருந்து கொண்டே, இல்லறத்தானுக்குரிய வாழ்முறையில் அறவாணவர்களாக இறுதிவரை வாழ்ந்தாலே, வானுறையும் தெய்வங்களின் வரிசையில் இல்லறத்தான் வரிசைப் படுத்தப்பட்டு, நினைந்து வணங்கப்படுவான்.

சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமதில் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிற வானுறையும் இந்தத் தெய்வங்களெல்லாம், இந்த உலகில் வாழ்ந்து அறவாணர்களாக இயங்கி மறைந்தவர்கள்தான் என்றும் ஒப்பு நோக்கிக் காணலாம்.

இந்த உலகத்தில், தன்னலம் பற்றிக் கவலைப்படாது, மக்களுக்காகவும், மண்ணுக்காவும், மொழிக்காகவும்,
இறுதிவரை வாழ்ந்து, அதற்காகவே தன்னுயிரையும் ஈகம் செய்த அறவாணர்களும்,
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டு வணங்கப்படுவார்கள்.

எண் 025
அதிகாரம் 3 நீத்தார் பெருமை ( துறந்தவர் பெருமை ) - குறள் எண் 25.
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

ஐந்து - ஐந்து வகையான புலன்களையும், அவித்தான் - அடக்கி ஆளுபவன், ஆற்றல் - சக்தியானது, அகல்விசும்புனார் - அகன்ற வானத்தில் காணப்படுகிற மேகங்களின், கோமான் - தலைவன், இந்திரனே - இந்திரன் என்பவனே, சாலும் - போதுமான, கரி - சாட்சியாக அமைந்துள்ளான்.

ஐந்து புலன்களையும் அடக்கி ஆளுகிறவனிடம் ஆற்றல் மிகுந்திருக்கும். அந்த ஆற்றல் அகன்ற வானத்தில் காணப்படுகிற மேகக்கூட்டங்களின் தலைவனாக இருக்கிற இந்திரனையே தண்டிக்கும் அளவிற்கு ஆற்றல் மிகுந்ததாக இருக்கும். தண்டிக்கப்பட்ட இந்திரனே இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளான்.

ஐந்து புலன்களை அடக்கிக் காட்டில் வாழுகிற ஒரு முனிவரால், புலன்களை அடக்காத இந்திரன், அகன்று விரிந்த மேகக்கூட்டங்களின் மிகப் பெரிய தலைவனாக இருந்த நிலையிலும், தண்டிக்கப்பட்டான். எனவே (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) என்கிற ஐம்புலன்களை அடக்குவது என்பதுதான், ஆற்றல்கள் அனைத்தையும் விட மிகப் பெரிய ஆற்றலாகக் கருதப்பட்டது.

ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்த முனிவரின் மனைவியின் மீது ஆசை கொண்ட இந்திரன், முனிவரைப் போலவே அதிகாலையில் மாற்றுருவில், முனிவரின் வீட்டிற்குச் சென்று, கோழி கூவுவது போலக் கூவி, முனிவரை ஆற்றுக்கு அனுப்பிவிட்டு, வீடு நுழைந்து வல்லுறவில் ஈடுபட்ட பொழுது, ஆற்றிலிருந்து வீடுதிரும்பிய முனிவரின் கடுஞ்சொல்லால், உடலெங்கும் புண்ணாகித் தண்டிக்கப்பட்டான் என்ற கதை நிகழ்வு இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சேயோன் மேய மைவரை உலகமும்.................. வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்.................. முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
( தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணை இயல் - பாடல் எண் : 5 )

தமிழர்கள் தங்கள் நிலங்களை 4 வகைகளாகப் பிரித்துள்ளனர். காடும் காடுசார்ந்த (முல்லை) பகுதிக்குத் திருமால், மலையும் மலைசார்ந்த (குறிஞ்சி) பகுதிக்கு முருகன், வயலும் வயல் சார்ந்த (மருதம்) பகுதிக்கு வேந்தன் (இந்திரன்), கடலும் கடல்சார்ந்த பகுதிக்கு (நெய்தல்) வருணன் - என்றும் வரிசைப்படுத்தியிருந்தனர். இந்த நான்கு நிலங்களிலும் மக்களோடு ஒன்றிணைந்து இயங்கிய இந்த மன்னர்கள், இவர்களது மறைவிற்குப் பிறகு தெய்வங்களாகவே வணங்கப்பட்டனர்.

வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில், மழை மேகங்களைத் தோற்றுவித்து மழைக்குக் காரணமாக இருப்பதுடன் பயிர்கள் வளரவும் அறுவடை செய்யவும் தேவையான வெயிலும் வெப்பமும் தருவதால் கதிரவனே (வேந்தன்) மருத நிலத்துக்குரிய தெய்வமாகக் கொள்ளப்பட்டான். கதிரவன் வழிபாடு என்பது இன்றும் தொடர்கிறது. பொங்கல் கொண்டாடுவதே கதிவரன், மாடு, இரண்டையும் நினைவுகூர்ந்து நிகழ்த்தப்படுவதே. இந்தப் பகுதியில் வேந்தனாக இருந்தவன் தான் இந்திரன் என்றும் கருதலாம்.

எண் 024
அதிகாரம் 2, வான்சிறப்பு - ( மழையின் சிறப்பு ) - குறள் எண் 18.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு..

சிறப்பொடு - சிறப்புச் செயல்களோடு, பூசனை - வழிபாடுகளும், செல்லாது - நடைபெறாது, வானம் - வானமானது, வறக்குமேல் - வரண்டு போகுமானால், வானோர்ககும் - வானத்தில் உள்ளவர்களுக்கும், ஈண்டு - இங்கே.

வானத்திலிருந்து பொழிகிற மழையானது பொய்த்துப் போனால், வானத்தில் உள்ளதாகக் கருதப்படுகிற தெய்வங்களுக்கும்கூட இங்கே சிறப்புச் செயல்களும், வழிபாடுகளும் நடைபெறாமல் போகும். வானம் பொழிந்து வளம் மிகுந்தால் மட்டுமே, வானோர்களுக்கான சிறப்புச் செயல்களும் வழிபாடுகளும் இங்கு மிகுந்திருக்கும்.

வானத்திலிருந்து பொழிகிற மழை உயிர்களின் உயிர்ச் செயல்களுக்கு அடித்தளமாக உள்ளது. புல் முதல் மனிதன் வரை அனைத்து உயிரிகளும் மழைப் பொழிவினால் செழித்து வளர்ந்து பயனுடையவையாக மலர்கின்றன. வானம் பொய்த்தால், எந்த உயிர்ச் செயல்களும் இங்கே நடைபெறாது. இதை உணர்ந்தே, வானம் வணங்கப்பட்டது. வானம் வரண்டு, மழை பொழியாது போனால், வானோர்களுக்காகச் செய்யப்படுகிற சிறப்புச் செய்ல்களும், பூசனை வழிபாடுகளும் இங்கு நடை பெறாமல் போகும்.

வானோர் என்பவர் யார் ?............ வான் உறையும் தெய்வம் (குறள் எண் 50), வானத்தவர்க்கு (குறள் எண் 86), வானோர்க்கு உயர்ந்த உலகம் (குறள் எண் 346) என்கிற குறட்பாக்களில் வானத்தவர் குறித்துக் கூறப்பட்டுள்ளன. இவர்கள் மேலிருந்து நமக்கு உதவி செய்கிறவர்கள் என்று பழந்தமிழர்களால் நம்பப்பட்டது. மழையாகவும். வெப்பமாகவும், ஒளியாகவும் உதவி செய்பவர்கள் இவர்களே. உதவி செய்தவர்களுக்கு நன்றியாகச் சிறப்பும், வழிபாடும் நமது தமிழ் மக்களால் இங்கே நிகழ்த்தப்பட்டன.

இயற்கைத் தெய்வங்களும், நாட்டுத் தெய்வங்களும், குடும்பத் தெய்வங்களும் மேலிருந்து உலக மக்களை வழிநடத்துவதாகத் தமிழர்கள் நம்பினார்கள். இவர்களே வானத்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் விண்ணிலிருந்து மக்களுக்கு நன்மை புரிவதால் அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் சிறப்புச் செய்தலும், பூசை செய்து வழிபடுதலும் பழந்தமிழ் மக்களால் நிகழ்த்தப்பட்டன.

பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் வான் சிறப்பை முதன்மைப் படுத்தியே, தங்கள் பாடல்களில் பதிவுசெய்திருந்தன. தமிழர்களின் வாழ்வுமுறை, இயற்கையோடு இயைந்தது என்பதற்குச் சான்றாக இந்த இலக்கியங்கள் இன்றும் நின்று காட்டுகின்றன. அதுமட்டுமா, உதவி செய்கிற இயற்கையைக்கூடத் தமிழன் நன்றியோடு வணங்குவான் என்பதற்குச் சான்றாகவும் இவை இருக்கின்றன.

எண் 023
அதிகாரம் 91, பெண்வழிச் சேரல் - குறள் எண் 903.

எனது மாணவர் காலையில் தொலைபேசியில் அழைத்து ஐயா குறள் எண் 903 பாருங்கள். எனக்குக் குழப்பமாக உள்ளது. விளக்குங்கள் என்றார். 903 படித்துப் பார்த்தேன். புதுமைப் பெண், பெண் விடுதலை, ஆணும் பெண்ணும் சமம், என்றெல்லாம் உள்வாங்கித் திருகி முறுகி உள்ள எனக்கு இந்தக் குறள் பெண் அடிமையைக் குறிப்பிடுவதாகவே தோன்றியது. அந்தக் குறள் மட்டுமல்ல. அந்த அதிகாரத்தில் உள்ள அனைத்துக் குறள்களுமே அந்த வகையில்தான் இருந்தன. வள்ளுவர் எதை நினைத்து இப்படி எழுதியுள்ளார், பெண் பற்றி திருக்குறளில் எங்கெல்லாம் எப்படியெல்லாம் எழுதியுள்ளார் என்று மீண்டும் படிக்கலானேன்.

அறத்துப்பாலில் இல்வாழ்க்கை (அதிகாரம் 5 ), வாழ்க்கைத் துணைநலம் (அதிகாரம் 6 ), பிறன் இல்விழையாமை (அதிகாரம் 15 ), என்கிற மூன்று அதிகாரங்களிலும், பொருட்பாலில் பெண்வழிச் சேரல் (அதிகாரம் 91 ), வரைவில் மகளிர் (அதிகாரம் 92 ), என்கிற இரண்டு அதிகாரங்களிலும், காமத்துப்பாலில் 35 அதிகாரங்களிலும் என திருக்குறளில் 40 அதிகாரங்களில் பெண் பற்றிக் கருத்துரைத்துள்ளார்.

இல்வாழ்க்கை அதிகாரத்தில் இல்வாழ்வானை முதன்மைப் படுத்தியும், வாழ்க்கைத் துணைநலத்தில் இல்லாளைப் பெருமைப் படுத்தியும் ( மனைமாட்சி, இல்லாள், இல்லவள், பெண், மகளிர், பெண்டிர் சொற்களிலும் ), பிறன் இல் விழையாமையில் பிறன் இல் விழைவானையும் சுட்டிக் காட்டியும் எழுதியுள்ளார்.

பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் தன் இல்லாள்வழிச் சேர்ந்து தன்உணர்வு இன்றி ஒழுகுவதைச் சுட்டிக் காட்டுகிறார். மனை, இல்லாள், மனையாள், பெண், நன்னுதலாள் என்று வாழ்க்கைத் துணைநலத்தில் பெண் உயர்வு காட்டுகிற அதே சொற்களையே இங்கும் பயன்படுத்தியுள்ளார். அப்படி என்றால் பிறன் இல் விழைவது தவறு என்றும், வரைவின் மகளிரோடு ஒழுகுவது நலம் கெடுக்கும் என்றும் குறிப்பிடுகிற அவர் பெண்வழிச் சேரல் என்ற அதிகாரம் முழுவதும் தன் இல்லில் உள்ள பெண் வழித் தன் உணர்வை இழந்து செயலற்றுக் கிடக்கும் இழிநிலையைத்தான் அவர் சுட்டுகிறார். வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் பெண்ணை அவர் ஆய்தொடியர், பண்பில் மகளிர், பொருட் பெண்டிர், புன்நலம், அணங்கு, மாணிழையார், இருமனப் பெண்டிர் என்று சுட்டுவதிலிருந்து வரைவின் மகளிரை அறிந்து கொள்ளலாம்.

இல்வாழ்க்கை என்பதனை மிக உயர்வாக எண்ணிய வள்ளுவர், அதன் சிறப்பிற்கு இழிநிலை வருகிற இடத்தில் அதனைச் சுட்டாமல் இருப்பது இல்லை. இல் வாழ்க்கையில் இருவரும் கருத்தொருமித்து, ஒருவரோடு ஒருவர் புரிந்து கொண்டு, பகிர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் தொழுது, அன்போடு வாழ வேண்டும் என்றும் அந்த வாழ்வின் பயனாக ஒல்லும் வகையெல்லாம் அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்றும், அந்த அறஉணர்வு வீட்டிலிருந்து தொடங்கி நாடு முழுவதும் பரவலாக வேண்டும் என்றும் இல்வாழ்க்கைக்கான உயர்ந்த இலக்கணத்தை வரையறுத்துள்ளார். இக் கருத்துக்கு இழுக்கு வரும் சூழல்களை எல்லாம் அவர் கண்டறிந்து அதனைச் சுட்டிக்காட்டி இடிக்கவும் அவர் தயங்கவில்லை.

இந்த வகையில்தான் அவர் பிறன்மனை நோக்குதலையும், பெண்வழிச் சேரலையும், வரைவில் மகளிர் நாடுதலையும் சுட்டிக்காட்டி இடித்துரைக்கின்றார். ஏனெனில் இவை மிக மென்மையாகத் தொடங்கி இறுதியில் இல்வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ள ஆண் பெண் இருவருடைய அன்பான நிலையையே அழித்துவிடும்.

அதிகாரம் 91, பெண்வழிச் சேரல் - குறள் எண் 903.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

இல்லாள்கண் - மனைவியிடத்தில், தாழ்ந்த - தாழ்ந்து பணிகிற, இயல்பு - தன்மை, இன்மை - இல்லாமலிருந்தால், எஞ்ஞான்றும் - எக்காலத்திலும், நல்லாருள் - நல்லவர்களுக்கிடையில் இருக்கும் பொழுது, நாணு - நாணுகிற நிலையை, தரும் - ஏற்படுத்திவிடும்.

மனைவி தாழ்ந்து பணிகிற இயல்பினளாக இல்லாமல் இருப்பாளேயானால், அவளுடைய கணவன் எக்காலத்திலும் நல்லவர்களுக்கிடையில் இருக்கும் பொழுது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான்.

கணவன் பெண்வழிச் சேர்ந்து ஒழுகுகிற இயல்பு உடையவனாக இருப்பானேயானால், மனைவி தாழ்ந்து பணிகிற இயல்பு இல்லாதவளாக மாறிவிடுவாள். இத்தகைய கணவனுக்கு எக்காலத்திலும் நல்லவர்களுக்கிடையில் இருக்கும் பொழுது வெட்கித் தலைகுனிகிற நிலையே ஏற்படும்.

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்துவாரேயானால், யார் பெரியவர் என்ற நிலைக்கே இடம் வராது. இருவரும் சமம் என்கிற உயரிய நிலைதான் இருவருக்குள்ளும் எழும். இதுவே தமிழிய இல்வாழ்க்கை முறை. இதனையே நாம் நம் இளைய தலைமுறையினரிடம் விளக்க வேண்டும்.

எண் 022
அதிகாரம் 84, பேதைமை, (அறியாமையின் தன்மை) குறள் எண் 835,
ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.

ஒருமை - ஒரே வகையாக, செயல் - செயலை, ஆற்றும் - செய்கிற, பேதை - அறியாத் தன்மையர், எழுமையும் - மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் ஏழு தன்மைகளிலும், தான் புக்கு - தான் புகுந்தாலும், அழுந்தும் - அதனைக் கைக் கொள்ள முடியாமல் வருந்தி, அளறு - நிலை கலங்குவர்.

நுணுக்கமாகப் பல்வேறு வகைகளில் சிந்தித்து செயலாற்றத் தெரியாத பேதையர் (அறியாத் தன்மையர்), மாந்தரது எழுச்சிக்கு அடிப்படையாக உள்ள ஏழு தன்மைகளில் அவர்கள் மேம்படுவதற்காகப் புகுந்தாலும், அதனைச் சரியாகக் கைக் கொள்ள இயலாமல் வருந்தி நிலை கலங்குவர்.

வாய்மை, மடிஇன்மை, சொல்வன்மை, வினைத்தூய்மை, பழைமை, பெருமை, சான்றாண்மை என்கிற ஏழு தன்மைகளில் எந்தத் தன்மையையும் பேதையர்கள் தங்களுக்குள் ஏற்றுக் கொள்ள இல்லாமலும், தாங்கள் எடுக்கிற எந்தச் செயலிலும் வெற்றி பெறாமலும் தவிப்பர், எழுச்சி என்பது அவர்களிடம் இருக்காது. செய்த ஒரே செயலையே திரும்பத் திரும்பச் செய்து தோல்வியையே தழுவுவர்.

ஒருமை, எழுமை என்கிற இரண்டு சொற்களும் கீழ்க்காணும் இரண்டு குறள்களிலும் (எண் 126, 398 ) காணப்படுகிறது.
இந்த இரண்டு குறளுக்கான விளக்கத்தைக் கீழே காண்போம்.

அதிகாரம் 13 - அடக்கம் உடைமை, குறள் எண் 126, ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. ( ஒரு ஓட்டுக்குள் ஒரு தலை, நான்கு கால்கள் என்கிற ஐந்தையும் ஆமை அடக்குவது போல, ஒருவர் தமது ஐந்து புலன்களையும் அடக்கினால் அவருக்கு, மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் 7 "மை" களும் பாதுகாப்பாக நின்று உதவும்.)

அதிகாரம் 40 - கல்வி, குறள் எண் 398, ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. ( ஒருமுறை ஒருவர் கற்ற கல்வி அவருடைய எழுச்சிக்கான 7 "மை" களை அடைவதற்கும் பாதுகாப்பாக நின்று உதவும். )

எண் 021
அதிகாரம் 11 செய்ந்நன்றி அறிதல்
(செய்த நன்றி மறக்காமல் இருத்தல்) - குறள் எண் 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

எழுமை - மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் 7 "மை" களை, எழுபிறப்பும் - எழுகின்ற பிறப்புகளெல்லாம், உள்ளுவர் - நினைப்பர், தங்கண் - தங்களுடைய, விழுமம் - துன்பம், துடைத்தவர் - போக்க உதவியவர், நட்பு - நட்பு.

ஒருவருடைய துன்பத்தைப் போக்க உதவிய அவரது எழுச்சிக்கான ஏழு தன்மைகளை ( 7 "மை" களை ), உதவி பெற்றவர் மட்டுமல்லாது, அவரைச் சுற்றி எழுகிற பிறப்புகள் அனைத்துமே நினைத்து வணங்கும்.

வாய்மை, மடிஇன்மை, சொல்வன்மை, வினைத்தூய்மை, பழைமை, பெருமை, சான்றாண்மை என்கிற "ஏழு" உயர் தன்மைகளைக் கொண்டுள்ள ஒருவர் இயல்பாகவே பிறருக்கு உதவுகிற உயர்ந்த எண்ணம் உடையவராகவே இருப்பார். பிறரது துன்பம் கண்டு கேட்காமலேயே உதவுவார். இவரைச் சுற்றி எழுகிற இளம் தலைமுறையினர், இவரைச் சான்றாக எடுத்துக் கொள்வார்கள், இவரைச் சுற்றி எழுகிற பிறப்புகளெல்லாம் இவரது உதவிகளை மட்டுமல்லாது, இவரது உயர் தன்மைகளையும் என்றும் நினைப்பார்கள்.

துன்பத்தைத் துடைப்பது என்பது தொடர்ச்சியாக செய்கிற செயல் அல்ல. என்றாவது ஒரு நாளில் ஏற்படுகிற நெருக்கடியைத் துடைப்பதே உதவி என்றாகும். இந்த உதவிக்கு முன்வருபவர்கள் மிகச் சிலரே. எதையும் எதிர்பார்க்காமல் உதவுபவர்கள் அதிலும் மிகச் சிலரே. இவர்கள் செய்த நன்றி மறக்காமல் நினைக்கப்பட வேண்டும். அப்படி நினைக்கப்பட்டால்தான், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் வரும். உதவவும் முன்வருவார்கள். இன்றைய சூழலில் உதவுதலும், அந்த உதவியை மறக்காமல் நினைத்தலும் வினாக் குறியாகவே உள்ளது. வள்ளுவரை நெஞ்சில் நினைத்து அவர் காட்டிய வழியில் நடக்க வேண்டிய காலமிது.

உலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.