திருக்குறள்
உரை
பொள்ளாச்சி நசன்
திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.
திருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.
பெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்
... வரிசை எண் 21 - 30 ... வரிசை எண் 11 - 20 ... ...
எண் 010

அதிகாரம் 42, கேள்வி - குறள் எண் 420
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

செவியின் - காதின், சுவையுணரா - சுவையை உணராமல், வாயுணர்வின் - வாயால் உணரப்படும் சுவையை மட்டுமே உணர்ந்து, மாக்கள் - விலங்குகளாக வாழுகிற மக்கள், அவியினும் - இறந்தாலும், வாழினும் - வாழ்ந்தாலும், என் - என்ன வேறுபாடு உள்ளது ?

காதின் வழியாகச் சுவைத்து உணராமல், வாயின் வழியாகச் சுவைக்கப்படும் சுவையை மட்டுமே சுவைத்துக் கொண்டிருக்கிற விலங்குகள் போன்ற மக்கள், உலகில் வாழ்ந்தாலும், இறந்தாலும் வேறுபாடு இல்லை.

சுவை என்பது வாயால் மட்டுமே உணரப்படுவது, காதால் சுவைத்து உணர வேண்டும் என்று திருவள்ளுவர் இந்தக் குறளில் குறிப்பிடுகிறார்.

குறள் எண் 27 இல் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிந்தவனிடமே உலகம் உள்ளது என்கிறார். எனவே ஐந்து உணர்வுகளையும் சரியாக உணர்ந்தவர்தான் திருவள்ளுவர். குறள் எண் 412 இல் செவிக்குணவு இல்லாத போழ்து என்கிறார், அப்படி என்றால் செவியால் உணவை உண்ண இயலுமா ? இந்தக்குறளில் செவியின் சுவையுணரா என்று குறிப்பிடுகிறார். அப்படி என்றால் அவர் நினைப்பது என்ன ?

வாயால் சுவைத்து உண்ணப்படுகிற உணவு, உடலின் உணவு மண்டலத்தில் செரிக்கப்பட்டு, உள்வாங்கப்பட்டு, உடலோடு ஒன்றிணைந்து, உடலின் பகுதிப் பொருளாக மாறி, உடலின் உயிர்துடிப்பிற்கு அடித்தளம் அமைப்பது போல, காதில் வழியாக நுழைகிற சொற்களும், விருப்பமுடன் சுவைத்து உள்வாங்கப்பட்டு, அதன் நுண் பொருள்கள் உணரப்பட்டு, அதன் வழியிலமைந்த உயர்ந்த வாழ்வு முறைக்கான அடித்தளம் அமைத்து வாழ வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். காதின் வழியாக வேண்டாதவை நுழைந்தாலும், எப்படி உணவில் உள்ள வேண்டாதவை கழிவாக நீக்கப்படுகிறதோ அவ்வாறு வேண்டாதவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் நுட்பம் காட்டுகிறார்.

ஒரு காதில் வாங்கி மறுகாதில் விடுகிற தன்மையும், விலங்குகள் போல வாயால் சுவைத்து உண்டுமே வாழ்கிற மக்கள் கூட்டத்தைக் கண்டு அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. எனவே தான் அவ்வகை மாக்கள் இறந்தாலும், வாழ்ந்தாலும் என்ன வேறுபாடு உள்ளது என்று கடிந்து கூறுகிறார்.

கற்றலில் கேட்டலே நன்று என்பதும் இதன் அடிப்படையிலமைந்ததே. எழுத்து அறிந்தவனால் மட்டுமே படிக்க இயலும். எழுத்தறியாமல் இருக்கும் இந்த மக்கள் கூட்டம் காதால் கேட்டாலே போதும். மேலெழலாம். அதனால் தான் கேட்டல் சுவையை முதன்மைப்படுத்தி அதன்வழி நுட்பமாக உள்வாங்க வழி அமைக்கிறார்.

வாயின் சுவையை முதன்மைப்படுத்தி வாழ்ந்ததால் மிகப் பெரிய ரோமப் பேரரசே அழிந்ததாக வரலாறு சுட்டுகிறது. எனவே மாந்தன் காலம் கடந்து நிற்க வேண்டும் என்கிற விருப்புமிகுதியால், வாயின் சுவையை மட்டுமே உணர்ந்து கிடப்பபோரை மாக்கள், விலங்குகள் என்று இடித்து உரைக்கிறார்.


எண் 009

அதிகாரம் 25, அருள் உடைமை - குறள் எண் 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அருளில்லார்க்கு - ஆசானுடைய அருள் இல்லாதவர்களுக்கு, அவ்வுலகம் - அறிவுடையதான அந்த உலகம், இல்லை - இல்லை, (அது போல) பொருளில்லார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கு, இவ்வுலகம் - பொருளே உயர்வு என்று எண்ணுகிற இந்த உலகம், இல்லாகி யாங்கு - இல்லாமல் போய்விடும்.

அவ்வுலகம், இவ்வுலகம் என்று இரண்டு உலகங்களை இந்தக் குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இருவேறு உலகத்து இயற்கை என்ற குறளில் ( குறள் எண் 374 ), பொருள் உடையவர்களுக்கான உலகம், அறிவுடையவர்களுக்கான உலகம் என்று இரண்டு வகைகளாக இந்த உலகம் இயங்குவதைச் சுட்டிக் காட்டுகிறார். இதன் வழி அறிவுடையோர்களுக்கான உலகம், பொருளுடையோருக்கான உலகம் என்று இரு வேறுபட்ட உலகங்களை, அதாவது இரு வேறுபட்ட மாந்தர் குழு உள்ளதை நம்மால் உணர முடிகிறது.

அன்போடு வழிகாட்டுகிற ஆசிரியரின் அருளைப் பெறாதவர்களுக்கு அறிவைத் தன்னகத்தே கொண்டுள்ள அந்த மாந்தர் குழு, அந்த அறிவுலகம் கிட்டுவதில்லை. அதுபோலவே பொருளாகிய செல்வம் இல்லாதவர்களுக்கு செல்வமே உயர்ந்தது என்று மாறியுள்ள, இந்த மாந்தர் குழுவினரோடு, இந்தப் பொருளுலகத்தோடு, பொருந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

ஆசிரியர் அன்போடு அருளாளராகவும் இருந்து, கற்பவருக்குச் செம்மையாக வழிகாட்டினால் அந்த மாணவர் அறிவுடையதான உலகத்தில் உயர்ந்து நின்று பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வெற்றி காணுவார். அறிவுலகமே வணங்குதற்குரிய வகையில் மேலெழுவார் - என்கிற ஆசிரியருக்கான அருளுடைமையை இந்தக் குறள் நுட்பமாகச் சுட்டிக் காட்கிறது.


எண் 008

அதிகாரம் 4, அறன் வலியுறுத்தல் - குறள் எண் 37 அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தாறு - அறத்தின் தன்மையை, இதுஎன - இதுவா என, வேண்டா - தேட வேண்டாம், சிவிகை - தூக்கிச் செல்லும் இருக்கை, பொறுத்தானோடு - தன் தோளில் தாங்கிக் கொண்டிருப்பவனோடு, ஊர்ந்தான் - அதில் ஊர்ந்து செல்லுபவன், இடை - இருவருக்கும் இடையில் உள்ள தொடர்பு கண்டு அறத்தின் உண்மையான தன்மையை அறிந்து கொள்ளலாம்.

அறம் என்றால் என்ன என்று எங்கும் தேட வேண்டாம். தூக்கிச் செல்லும் இருக்கையைத் தூக்குபவனுக்கும் அதில் அமர்ந்து செல்லுகிறவனுக்கும் இடையில் உள்ள மகிழ்வான பகிர்தலே அறத்திற்கான உயர்ந்த செயற்பாட்டிற்குக் காட்சியாக அமைந்துள்ளது.

அறம் என்பது வானுயர்ந்த கோபுரங்கள் கட்டுவதோ, பெரிய யாகங்கள் நடத்துவதோ அல்ல. பெருஞ்சித்திரனார் கூறுவார்.., ஒருவனிடம் இரண்டு கிழிந்த பாய்கள் இருந்தால், பாய் இல்லாத ஒருவனுக்கு அந்தப் பாயை அவன் தருவதே அறம். இல்லாத ஒருவனுக்கு இருப்பவன் மகிழ்வாகத் தருவதே அறம். பொருளைத் தரலாம், கல்வியைத் தரலாம், உடலுழைப்பைத் தரலாம். நாவரண்டு வருபவனுக்கு ஒருகுவளை தண்ணீர் கூடத் தரலாம். தருவதே அறம்.

இருக்கையை தூக்கிச் செல்பவனிடம் வலிமை இருக்கிறது. அதை இவன் தருகிறான். நடக்க இயலாதவனிடம் பொருளிருக்கிறது. அதை தூக்கிச் செல்பவனுக்கு, அவன் தருகிறான். இருவருமே தங்களிடம் உள்ளதைக் கொடுத்து, அறவாணர்களாகச் செயல்படுகிறார்கள். இங்கு வாணிகம் நடப்பது இல்லை. யாருக்கும் இழப்பும் இல்லை. இருவரும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவருக்கும் மகிழ்வே ஏற்படுகிறது. தூக்குபவனை ஓடு ஓடு என்று அமர்ந்தவன் விரட்டுவதில்லை, தூக்குபவன் ஊர்ந்தே செல்லுகிறான். இதுதான் அறத்தின் நுட்பமான பயன்பாடு. தூக்குபவனுக்கும் அதில் அமர்ந்து செல்லுபவனுக்கும் இடையில் உள்ள மகிழ்வான பகிர்தலே அறத்திற்கான உயர்ந்த செயற்பாட்டின் காட்சியாக அமைந்துள்ளது.


எண் 007

அதிகாரம் 71, குறிப்பு அறிதல் - குறள் எண் 702 - ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.

ஐயப் படாஅது - சிறிதளவும் ஐயமில்லாது, அகத்து - அகத்தில் பிறருடைய மனதில் உள்ளவற்றை, உணர்வானை - அறிபவனை, தெய்வத்தோடு - அனைத்தும் அறிந்ததாகக் கருதப்படுகிற உயர்ந்த நிலைக்கு, ஒப்பக் - இணையாகக், கொளல் - கொள்ளப்படுவர்.

சிறிதளவும் ஐயமில்லாது பிறருடைய மனதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளுகிற ஆற்றல் உடையவர், அனைத்தும் அறிந்ததாகக் கருதப்படுகிற உயர்ந்த நிலைக்கு இணையாகக் கருதப்படுவர்.

எண் 006

அதிகாரம் 103, குடிசெயல் வகை - குறள் எண் 1023 - குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.

குடி - தான் பிறந்த குடியை, இனத்தை, செய்வல் - உயர்த்துவேன், என்னும் - என்று செயல்படுகிற, ஒருவற்கு - ஒருவருக்கு, தெய்வம் - தேய்வில்லாத ஆற்றல் உடையவர், மடிதற்று - சோம்பல் என்று முடங்கிக் கிடக்காது, தான் முந்துறும் - தானே முந்திக் கொண்டு வந்து உதவுவர்.

தான் பிறந்த குடியை, தன்னுடைய இனத்தை உயர்த்துவேன் என்று செயல்படுகிற ஒருவருக்கு, இந்த உலகில் தேய்வில்லாத ஆற்றல் உடைய ஒவ்வொருவரும், தங்களுக்குள் சோம்பல் என்று முடங்கிக் கிடக்காமல் தாங்களாகவே முந்திக் கொண்டு வந்து உதவி செய்வார்கள்.

எண் 005

அதிகாரம் 36, மெய் உணர்தல் - குறள் எண் 360, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.

காமம் - காமம், வெகுளி - கோபம், மயக்கம் - அறியாமை, இவை மூன்றன் - இந்த மூன்றினுடைய, நாமம் - ஆவராரிக்கும் தன்மை, கெட - அழிந்தால், கெடும் - கெட்டுப்போகும், நோய் - துன்பம்.

காமம், கோபம், அறியாமை என்ற இந்த மூன்றின் ஆரவாரிக்கும் தன்மை ஒருவனிடமிருந்து அழிந்தால், அவனது அனைத்துத் துன்பங்களும் விலகிப்போகும்.
காமம், கோபம், அறியாமை இந்த மூன்றும் ஒருவன் இயங்கத் தேவையானது தான். ஆனால் அவற்றின் ஆரவாரிக்கும் தன்மை தான் தவிர்க்கப்படல் வேண்டும்.

எண் 004

சூது - குறள் எண் 937 - பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.

பழகிய - ஒருவரோடு ஒன்றிணைந்து பழகி வாழ்ந்த, செல்வமும் - செல்வமாகிய பொருள்/ உயிர்/ கருத்தும், பண்பும் - வழிவழியாக வந்த நல்ல செயல்களும், கெடுக்கும் - கெடுக்கும், கழகத்து - சூதாடுமிடத்திற்கு, காலை - அதிகாலையிலேயே, புகின் - செல்வான் எனின்.

இரவு முழுவதும் சூதுபற்றியே விடிய விடிய எண்ணிக் கொண்டிருந்து, விடிந்தும் விடியாமலேயே காலையிலேயே சூதாடுமிடத்திற்கு ஒருவன் செல்வானேயாகில் அவனோடு ஒன்றிணைந்து பழகி வாழ்ந்த செல்வமாகிய உயிரும், பொருளும், கருத்தும், அவனிடமிருந்த வழிவழியாக வந்த நல்ல செயல்களும் அவனை விட்டுப் போய்விடும்.


எண் 003

நடுவு நிலைமை - குறள் எண் 114 - தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார் - தக்கவர், தகவிலர் - தக்கவரல்லாதவர், என்பது - என்பது, அவரவர் - அவரவர்களுடைய, எச்சத்தால் - அவருக்குப்பிறகு எஞ்சியிருப்பதால், காணப்படும் - அறிந்து கொள்ளப்படும்.

அவருக்குப் பிறகு எஞ்சியிருப்பது எது ? அது எப்படி இருக்க வேண்டும் ? எஞ்சியிருப்பது பொருளாக இருக்கலாம், உயிராக இருக்கலாம், அல்லது கருத்தாக இருக்கலாம், அது எப்படி இருக்க வேண்டும் ? எச்சம் என்ற சொல் பறவைகளின் கழிவு என்றும் பொருள்படும். பறவைகளின் ஒவ்வொரு எச்சத்திலும் ஒரு விதை இருக்கும். அந்த விதை பாறைகளுக்கு இடையிலும் முளைத்து எழுந்து பல ஆண்டுகள் பலருக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக அமையும். இப்படிப் பயனுள்ளதாக அவரது எச்சம் இருந்தால் அவர் தக்கார் என்றும், இல்லையெனில் அவர் தகவிலர் என்றும் அறியப்படும்.

எண் 002

இரவு அச்சம் - குறள் எண் 1062 - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.

இரந்தும் - பிச்சை எடுத்தும், உயிர் வாழ்தல் - உயிர் வாழ்தல், வேண்டின் - விரும்பினால், (அவன்) பரந்து - மிக அதிகமான புகழுடன் பரவி, கெடுக - அனைத்தும் இழந்தும் கெடுக, உலகு இயற்றியான் - உலகத்தையே உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையவனாக இருந்தாலும்.

உலகத்தையே உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையவனாக ஒருவன் இருந்தாலும் அவன் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவனாக இருப்பானேயாகில் அவன் மிக அதிகமான புகழுடன் பரவி பிறகு அனைத்தும் இழந்து கெடுவான் ஆகுக.

எண் 001

அழுக்காறாமை - குறள் எண் 166 - கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

கொடுப்பது - கொடுப்பதாகிய நல்ல செயலை, அழுக்கறுப்பான் - அழுக்கு என்று கொடுப்பவனின் மனதில் பதிய வைத்து அந்த நல்ல செயலை அழுக்கு என்று மாற்றி அறுத்து எடுப்பவன், சுற்றம் - சுற்றத்தவர்கள், உடுப்பதூஉம் - உடுப்பதற்கு உரிய உடைகளும், உண்பதூஉம் - உண்பதற்கு உரிய உணவும். இன்றி - இல்லாமல், கெடும் - கெட்டு அழிவார்கள்.

கொடுப்பதாகிய நல்ல செயலை உடைய ஒருவனிடம் அவன் கொடுப்பது அழுக்குச் செயல் என்று அவன் நெஞ்சில் பதிய வைத்து, கொடுப்பதாகிய அந்த நல்ல செயலை அவனிடமிருந்து நீக்குபவனுடைய சுற்றத்தவர்கள் உடுப்பதற்கும், உண்பதற்கும் ஏதும் இன்றிக் கெட்டு அழிவர்.
உலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.