திருக்குறள்
உரை
பொள்ளாச்சி நசன்
திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.
திருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.
பெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்
... வரிசை எண் 21 - 30 ... வரிசை எண் 01 - 10 ...
எண் 020

அதிகாரம் 7, மக்கட்பேறு, குறள் எண் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

எழு பிறப்பும் - எழுகின்ற பிறப்புகளுக்கெல்லாம், தீயவை - தீயசெயல்கள், தீண்டா - தீண்டாது, பழி பிறங்காப் - பழி இல்லாத, பண்புடை - நல்ல பண்புகளை உடைய, மக்கள் - (மக்களை) குழந்தைகளை, பெறின் - பெற்றால்.

பழி இல்லாத நல்ல பண்புகளை உடைய மக்களைப் பெற்றால், அந்த மக்களைச் சுற்றி எழுகின்ற பிறப்புகளுக் கெல்லாம் தீயசெயல்கள் எதுவும் தீண்டாது. நற்பண்புகள் உடையவராகவே மலர்வார்கள்.

பழிச் செயல்கள் இல்லாத நல்ல பண்புகள் உடைய மக்களாக நாம் நம் மக்களை வளர்த்து எடுத்தால், நம்முடைய மக்களைப் பார்த்து அவர்களது நல்ல செயல்களைப் பார்த்து, அந்த மக்களைச் சுற்றிப் பிறக்கிற, (எழுகிற) மக்களுக்கெல்லாம் எந்தத் தீய செயல்களும் தீண்டாமல் நல்ல மக்களாகவே மாற்றம் எடுப்பார்கள்.

பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு. "ஏழு பிறப்பு" என்பது தவறான கருத்து. "எழு பிறப்பு" என்ற வள்ளுவர் குறிப்பிடுவது, எழுகின்ற ஒவ்வொரு பிறப்புக்கும் என்பதே பொருளாக அமையும்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம். ஏழேழ் பிறவி’ என்றால், நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல. எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பதே பொருள்.


எண் 019

அதிகாரம் 54 - பொச்சாவாமை, ( மகிழ்ச்சியில் மறதி பொச்சாப்பு )
மகிழ்விலும் விழுப்புணர்வு வேண்டும். - குறள் எண் 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

புகழ்ந்தவை - புகழ்ந்தவைகளை, போற்றி - பாதுகாத்து, செயல் வேண்டும் - அந்த வழியில் செயல்பட வேண்டும், செய்யாது - அவ்வாறு செய்யாமல், இகழ்ந்தார்க்கு - இகழ்ந்தவர்களுக்கு, எழுமையும் - மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் ஏழு "மை" களும், இல் - இல்லாமல் போகும்.

சான்றோர்களால் ஏற்றுக் கொண்டு "சிறந்தவை" என்று புகழ்ந்தவைகளை ஏற்றுக் கொள்வதோடு அவற்றைப் பாதுகாத்து, அந்த வழியைத் தன்னகத்தே கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவற்றை இகழ்ந்தவர்களுக்கு, மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும ஏழு தன்மைகளும் ( ஏழு "மை" களும் ) இல்லாமல் போய்விடும்.

வாய்மை, மடிஇன்மை, சொல்வன்மை, வினைத்தூய்மை, பழைமை, பெருமை, சான்றாண்மை என்கிற ஏழும் மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் ஏழு தன்மைகள் ஆகும். இத்தன்மைகளை உள்வாங்கி இயங்குகிற மாந்தன், முழு மாந்தனாக மேலெழுவான்.

மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் 7 "மை" கள். (எழுவதற்குத் தேவைப்படும் "மை" கள்) எழுமை - ஏழு தன்மைகள், திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் வழியாக இந்த ஏழு தன்மைகளையும் அறியலாம். அதிகாரம் 30 - வாய்மை, அதிகாரம் 61 - மடி இன்மை, அதிகாரம் 65 - சொல்வன்மை, அதிகாரம் 66 - வினைத்தூய்மை, அதிகாரம் 81 - பழைமை, அதிகாரம் 98 - பெருமை, அதிகாரம் 99 - சான்றாண்மை

திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் பெயர்களும் அவற்றின் வழியிலான பகுப்பும்

மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் 7 "மை" கள். அதிகாரம் 30 - வாய்மை, அதிகாரம் 61 - மடி இன்மை, அதிகாரம் 65 - சொல்வன்மை, அதிகாரம் 66 - வினைத்தூய்மை, அதிகாரம் 81 - பழைமை, அதிகாரம் 98 - பெருமை, அதிகாரம் 99 - சான்றாண்மை

"உடைமை" எனக் கொள்ள வேண்டியன 10 அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அருள் உடைமை, அறிவு உடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்புடைமை, நாண் உடைமை,

"ஆமை" எனத் தள்ள வேண்டியன 16 அழுக்காறமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, கல்லாமை, சிற்றினம் சேராமை, பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை, இடுக்கண் அழியாமை, அவை அஞ்சாமை, பெரியாரைப் பிழையாமை.


எண் 018

அதிகாரம் 78 - படைச் செறுக்கு (படையின் நெஞ்சுரம்), குறள் எண் 778.
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.

உறின் - போர் வரின், உயிர் அஞ்சா - உயிர் பற்றி அச்சப்படாத, மறவர் - போர் வீரர், இறைவன் - அரசன், செறினும் - சினந்து கூறினாலும், சீர் குன்றல் - சிறப்பு குன்றுதல், இலர் - இல்லாதவர்.

போர் வந்தால் உயிர் பற்றி அச்சப்படாமல் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிபவர் போர் வீரர் ஆகும். இத்தகைய போர் வீரர் அரசன் சினந்து கூறினாலும் நாட்டுக்காகத் தன் உயிரை இழக்கும் சிறப்பில் அவர் என்றுமே குன்றுவது இல்லை.

நாட்டுக்காகப் படையை நிறுவி, நாட்டைக் காப்பதற்காக வீரர்களை இணைத்துக் கொண்டு அரசாட்சி செய்கிற அரசன், சில வேளைகளில் அந்த வீரர்களிடம் சினந்து செயற்பட்டாலும், நாட்டுக்காக, நாட்டைக் காக்கத் தன்னைப் படையில் இணைத்துக் கொண்ட அந்த வீரன், அரசனது சினம் பற்றிக் கவலைப்படாமல், நாட்டுக்காகத் தன் உயிரையே இழக்கத் துணிவாக இருப்பது படையின் நெஞ்சுரத்தைக் காட்டுகிறது.

படையினர்தான் நாட்டுக்கு அரணாக இருப்பவர்கள். அன்று முதல் இன்று வரை படையினரை நினைவு கூராத நாடுகளே இல்லை. நாட்டுக்காக மரணிக்கும் அவர்களது கொடை அளப்பரியது. இந்த மாவீரரின் நினைவிடங்கள் போற்றிப் பாதுகாத்தலுக்குரியவை. இந்த நினைவிடங்கள் படையின் நெஞ்சுரத்தை உலகுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கும். வழி நடத்தும்.

குறள் எண் 690, 733, 778 என்கிற மூன்று குறள்களிலும் இறைவன் என்கிற சொல் வருகிறது. இந்த மூன்றும் அரசன் என்கிற பொருளிலேயே கூறப்பட்டுள்ளது.


எண் 017

அதிகாரம் 17, அழுக்காறாமை (பொறாமை அடையாமை) குறள் எண் 169.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

அவ்விய - பொறாமையுடைய, நெஞ்சத்தான் - நெஞ்சத்தை உடையவன், ஆக்கமும் - மேலெழுதலும், செவ்வியான் - நல்ல மனதுடையவன், கேடும் - கெடுதலும், நினைக்க - நினைத்துப் பார்க்க, படும் - புலப்படும்.

பொறாமையுடைய நெஞ்சத்தை உடையவன் மேலெழுதலும், நல்ல மனதுடையவன் கெடுதலுக்கு உட்படுதலும் ஏன் என்று நினைத்துப் பார்க்க அதற்கான உண்மை புலப்படும்

"நினைக்கப்படும்" என்று மழுப்பலாகக் கூறியுள்ளாரே என நண்பர் ஒருவர் மடல் எழுதியிருந்தார். அதனால்தான் இந்தக் குறளுக்கான விளக்கத்தை இங்கே எழுதுகிறேன்.

நினைக்கப் படும் என்ற இரண்டே சொற்களைக் கொண்டு வள்ளுவர் மிக நுட்பமாக இந்தக் குறளைப் படைத்துள்ளார். நினைக்கப்படும் என்பதனை ஒரு சொல்லாகக் காணாமல் நினைக்க + படும் என்று இரண்டு சொல்லாகப் பிரித்துப் பொருள் கொண்டால் இந்தக் குறளின் பன்முகத் தோற்றமும் விரிவும் தெரியும்.

1) பொறாமை உடைய நெஞ்சத்தை உடையவன் தான் மேலெழுவதற்கான காரணத்தை நினைத்தால் அவனுக்கு அது என்ன என்று புலப்படும்.

2) அது போலவே நல்ல மனதுடையவன் தான் இந்த உலகில் கேடுஅடைதலுக்கான காரணம் என்ன என்று அவன் நினைக்க அவனுக்கு அது என்ன என்று புலப்படும்.

3) அது மட்டுமல்ல இருவரது நிலையையும் கண்டு வினாக்குறியோடு பார்க்கிற பார்வையாளர்களுக்கு அவ்விய நெஞ்சத்தான் உயர்வதும், செவ்வியான் கெடுதவதற்குமான அனைத்துக் காரணங்களும் அவர்களுக்கும் புலப்படும். பார்வையாளர்கள் வாழ்வாங்கு வாழ எதைச் செய்ய வேண்டும் என்பதற்கான படிநிலைகளும் கிடைக்கும்.

ஒருவனது உயர்வையோ அல்லது தாழ்வையோ கண்டு பொறாமைப்படாமல், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தனக்கான வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, சரியான வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள இந்தக் குறள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவதாக நாம் பெருமைப் படலாம்


எண் 016

அதிகாரம் 56 - கொடுங்கோன்மை, குறள் எண் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

ஆபயன் - பசுவினால் பெறும் பயன், குன்றும் - குறையும், அறுதொழிலோர் - அறுக்கும் தொழிலைச் செய்கிற கள்வர்கள், நூல் மறப்பர் - நல்ல நூல்களைக் கற்று இருந்தாலும் அதன்வழி நடக்காது மறப்பர், காவலன் - அரசன், காவான் எனின் - காக்கும் செயலைச் சரியாகச் செய்யாமல் இருப்பானேயாகில்.

காக்கும் செயலை அரசன் சரியாகச் செய்யாமல் இருப்பான் என்றால், அந்த நாட்டில் பசுவினால் பெறும் பயன் குறையும். (குழந்தைக்கான உணவு கிடைக்காமல் போகும்), அறுக்கும் தொழிலைச் செய்கிற கள்வர்கள் கற்றவர்களாக இருந்தாலும் அதனை மறந்து களவுத் தொழிலில் ஈடுபடுவர்கள்.

குழந்தைக்கான உணவே அந்த நாட்டில் கிடைக்க வில்லை என்றால், மற்றவர்களுக்கான உணவு எப்படிக் கிட்டும். நாட்டில் உழவுத் தொழில் குறைந்து உணவுப் பற்றாக்குறை மிகும். படித்தவர்களும் நூல் மற்ந்து களவுத் தொழிலில் ஈடுபடுவார்கள். அரசன் தனது காக்கும் செயலைச் சரியாகச் செய்யாவிட்டால், பஞ்சம் கொலை களவு மிகுந்து கொடுங்கோலாட்சி நடைபெறுகிற நாடாக அந்த நாடு மாறிவிடும்.

எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டில் உணவுப் பஞ்சமும், கொலை களவும் மிகுந்து இருப்பின் நாட்டை ஆளுகிற காவலன் மக்களைக் காப்பதற்குரிய சரியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதற்கான சான்றாகவே அது அமையும்.


எண் 015

அதிகாரம் 5, இல்வாழ்க்கை (குடும்ப வாழ்க்கை) - குறள் எண் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்வாழ்வான் - இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்பவன், என்பான் - என்பவன், இயல்புடைய - அவனைப் போலவே இல்வாழும் இயல்புடைய, மூவர்க்கும் - வாழ்ந்தவர், வாழ்பவர், வாழப்போகிறவர் என்கிற மூவருக்கும், நல்லாற்றின் - நல்லவழி அமைக்கிற, நின்ற - நிலையான, துணை - துணையாக இருக்க வேண்டும்.

இல்லறத்தில் ஈடுபட்டு நல்லியல்புகளோடு வாழுபவன், அவனைப் போலவே நல்லியல்புகளோடு இல்லறத்தை நடத்தியவர், நடத்துபவர், நடத்தப்போகிறவர் என்கிற மூவரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கான நல்ல வழியை அமைத்துத் தருகிற நிலையான துணையாக இருக்க வேண்டும்.

இந்தக் குறளில் மூவர் என்ற சொல் கவனிக்கப்பட வேண்டிய சொல். இயல்புடைய அந்த மூவர் யார் ? உரை எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அவர்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு, அந்த மூவரை வரிசைப்படுத்துகின்றனர். இந்த இனம் பல்லாண்டுக் காலம் நிலைத்து நின்று, நன்றாற்றி உலகத்தவருக்கெல்லாம் நல்வழி காட்டுவதாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்தான் திருவள்ளுவர். எனவே அந்த மூவர் யாராக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருப்பார் ?

இல்லறத்தில் ஈடுபட்டு இனிது வாழ்வதோடு, பிறருக்கும் உதவுபவராக இருப்பது என்பது உயர்ந்தது. இப்படி வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் இங்கே வாழ்த்தப்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் அத்தகைய வாழ்வு முறை மற்றவர்களாலும் பின்பற்றப்படும். எனவே இல்வாழ்வானின் இயல்புகளோடு இந்த உலகில் வாழ்ந்தவர், வாழ்பவர், வாழப்போகிறவர் என்ற மூவரையும் ஒரு இல்வாழ்வான் அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிலையான துணையாக நின்று, நல்ல வழி அமைத்துத் தரவேண்டும்.

1) இல்லறத்தில் இனிதே வாழ்ந்த மூத்தோரை நினைவு கூர்ந்து அவரது சிறப்பியல்புகளுக்கு அரணாக அமைதல் வேண்டும்.
2) இல்வாழ்வானின் சூழலில், இல்லறத்தை நல்லறமாக்கி இனிதே வாழ்ந்து கொண்டிருக்கிற இணையர்களோடு நட்புப் பாராட்டி, இணைந்து, துணையாக நின்று பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
3) எதிர்காலத்தில் வாழப்போகிற இளம் தலைமுறையினருக்கு இந்த வாழ்வு முறையே உயரியது என்பதனை வாழ்ந்தவர்களின் வரலாறு காட்டி, ஊக்குவித்து அவர்களுக்கான பாதையை அமைத்துத் தரவேண்டும்.

இல்வாழ்வான் தன்னுடைய சூழலில் உள்ள மூவரை, இந்த வகையில் வாழ்த்தி, அரணாக நின்று நட்புப் பாராட்டி, வளர்த்தெடுத்தால் - இந்த உலகின் முழுவிழுக்காடுமே இனிமையான இல்லறத்தில் மகிழ்ந்து இன்புற்றிருக்கும். இனியாவது இவ்வாறு இயங்கலாமே.


எண் 014

அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலம் (மனைவியின் அருமை) குறள் எண் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

தெய்வம் - வழிவழியாக வந்த முன்னோர்கள், தொழாஅள் - வணங்குவதில் நேரத்தைச் செலவழிக்காமல், கொழுநன் - தனது கணவனை, தொழுது - வணங்கி, எழுவாள் - எழுகிறவள், பெய்எனப் - பெய் என்று சொன்னால், பெய்யும் - பொழியும், மழை - மழை அன்பின் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது.

இல்வாழ்க்கையைத் தொடங்கி இயங்குகிற ஆணும் பெண்ணும் வழி வழியாக வந்த தமது மூத்தோர்களை வணங்குவதில் காலத்தைச் செலவிடாது, இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் வணங்கி, தொழுது எழுந்தால், பெய் என்று யார் சொன்னாலும் இருவருக்கும் இடையில் அன்பு மழை என்றும் பொழியும்.

இந்தக் குறளில் வள்ளுவர் மூன்று காட்சிகளைக் காட்டுகிறார் 1) தெய்வம் தொழாஅள் 2) கொழுநன் தொழுதெழுவாள் 3) பெய் எனப் பெய்யும் மழை. இந்த மூன்று காட்சிகளையும் தனித்தனியாக உள்வாங்கிக் கொண்டு, பிறகு இணைத்துப் பார்த்தால் இந்தக் குறளின் நுட்பமும் ஆழமும் தெளிவாகத் தெரியும்.

1) பண்டைய தமிழ் முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தக் குடும்பத்தை உயர்த்துவதற்குப் பாடுபட்ட மூத்தோர்களைத் தெய்வமாக நடுகல் நட்டு, வழிபட்டு வந்தார்கள். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தெய்வம் இருந்தது. திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் அவரவர்களுக்குரிய குடும்ப தெய்வத்தை வழிபட்டுத், தங்கள் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு மனைவியும், கணவனும் தங்களுடைய குடும்ப தெய்வத்தை வணங்க வேண்டியது இல்லை. (தெய்வம் தொழாஅள்) (தொழான் என்றும் கொள்ளலாம்)

2) வாழ்க்கையில் எழுகிற ஒவ்வொரு நிலையிலும் மனைவி கணவனைத் தொழுது அந்தச் செயலைத் தொடங்க வேண்டும். மனைவி தொழும் பொழுது கணவனும் அன்போடு தொழுவான். அதுதான் இல்வாழ்க்கையின் பகிர் உணர்வு. (கொழுநன் தொழுதெழுவாள்)

3) பெய் எனப் பெய்யும் மழை - மழை என்பது அன்பின் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே மனைவி பெய் என்றால் கணவன் தன் அன்பைப் பொழியத் தொடங்குவான். அதுபோலவே கணவன் பெய் என்றால் மனைவி அன்பு மழையைப் பொழிவாள். இதுவே இல்வாழ்க்கையின் நிறைவு. அன்புப் பகிர்தல் நெஞ்சமெலாம் நிறைந்து நிற்கும்.

ஒரு பெண்ணும் ஆணும் இல்லறத்துள் நுழையும் பொழுது, இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்போடு கலந்துபேசி, அறிந்து கொண்டு, இன்புற்று வாழ்ந்து, இயலுகிற அறச்செயல்கள் செய்து - நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே வள்ளுவம் காட்டுகிற இல்வாழ்வு முறை ஆகும். இதன்வழி ஒருவரோடு ஒருவர் இணக்கமாக, அன்போடு வணங்கி வாழ்வதே இல்வாழ்க்கை என்றாகிறது.

இல்வாழ்வில் எழும் நிகழ்வுகளிலெல்லாம் மனைவி தொழும் இயல்புடையவளாக இருந்தால், கணவனும் தொழும் இயல்புடையவனாக ஆகி விடுவான். நினைத்த நொடியில் இருவருக்கும் இடையில் அன்பு மழை பொழியும். எழும் நிகழ்வுகளெல்லாம் இனிமையாகும். இதுவே செம்புலப்பெயல் நீர் போல் கலந்த வாழ்வு.


எண் 013

அதிகாரம் 61, மடியின்மை (சோம்பல் இல்லாமை) - குறள் எண் 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

நெடுநீர் - காலம் நீட்டித்தல், மறவி - மறதி, மடி - சோம்பல், துயில் - தூக்கம், நான்கும் - இந்த நான்கும், கெடுநீரார் - கெட்ட நீரில், காம - விருப்பத்தோடு, கலன் - மரக்கலம்.

தான் செய்கிற ஒவ்வொரு செயல்களிலும், காலத்தை நீட்டித்தல், மறந்துபோதல், சோம்பியிருத்தல், தூங்கி நேரம்போக்குதல் என்கிற நான்கையும் கடைப்பிடிப்பவர்கள், கெட்ட நீரில் விருப்பத்தோடு மரக்கலத்தில் மிதப்பது போன்ற இழி தன்மை உடையவர்களாகவே இருப்பார்கள்.

நல்ல நீரில் படகில் பயணிப்பது இன்பமளிப்பது. கெட்ட நீரில் படகில் பயணிப்பது ஊறு விளைவிப்பது. இருந்தாலும் இந்தப் பயணத்தை விருப்பத்தோடு ஏற்று பயணிப்பவர்கள் காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், தூக்கம் என்ற நான்கும் உடையவர்களாகவே இருப்பர்கள். அவர்களுடைய எந்தச் செயலும் முழுமை பெற்றதாக அமையாது. தொடருகிற அவர்களுடைய வாழ்க்கைப் பயணமும் ஊறு உடையதாகவே இருக்கும்.

அணியக்கூடிய கலன் அணிகலன், பயணிக்கக்கூடிய கலன் மரக்கலன், கலன் என்பது கழட்டி எறியக்கூடியது தான். காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், தூக்கம் என்கிற நான்கும் கழற்றி எறியக்கூடியதுதான். எனவே கழற்றி எறியக்கூடிய உறுதியையும், செயலையும் அவர்கள் நினைத்தால் நடக்கும் என்பதையும் இந்தக் குறள்வழி நுட்பமாகச் சுட்டுகிறார்.


எண் 012

அதிகாரம் 62, ஆள்வினை உடைமை (முயற்சியின் பெருமை), குறள் எண் 619
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

தெய்வத்தான் - வழி வழியாக வந்தவர்களால், ஆகாது எனினும் - முயன்று பார்த்து முடியாதது என்று கைவிட்டவை கூட, முயற்சி - முயற்சியால், தன்மெய் வருத்த - தன் உடலை வருத்திக் கொண்டு இயங்க, கூலி தரும் - அதற்கான பயனைத் தரும்.

வழிவழியாக வந்தவர்களால் முயன்று பார்த்து முடியாதது என்று கைவிட்டவற்றைக் கூட, ஒருவன் தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால், முடியாதது என்று கைவிட்டவைகளும் அதற்குரிய பயன்களை அளிக்கவே செய்யும்.

உலகம் தோன்றிய பொழுது வாழ்ந்த மாந்தனுக்குச் சூழலில் இருந்த சூரியன், சந்திரன், தீ, மலை, வானம், ஆறு, கடல், மண் ஆகியவை, தேய்வற்ற மாபெரும் சக்திகளாகவும், வழிகாட்டுபவையாகவும் தோன்றின. தான் கண்ட இந்த மாபெரும் சக்திகளை அவன் "தேய்வம்" என்று வணங்கத் தொடங்கினான். காலப்போக்கில் அது மருவி "தெய்வம்" என்றானது. இந்த இயற்கைச் சக்திகள் அவனுக்கு, அழிக்கவும், ஆக்கவும், வளர்க்கவும் துணையாக இருந்தன. துணை நின்றவற்றை நன்றியோடு வணங்கினான்.

அடுத்து மாந்தன் கூட்டம் கூட்டமாகக் கூடிவாழ்ந்த பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், அதிக சக்தி உடையவனாக, அந்தக்கூட்டத்தைப் பாதுகாத்து வழிநடத்துபவனாக இருக்கவே அவனையும் "தெய்வம்" என்ற வகையில் வரிசைப்படுத்தி மாந்தன் வணங்கத் தொடங்கினான். இது மேலும் சுருங்கி, தாத்தன், பாட்டன், பூட்டன், சேட்டன், ஓட்டன் என்று வாழ்ந்த தனது மூத்தோர்களில் தன் குடும்பத்தை மேலுயர்த்தி வழிநடத்தியவர்களைத் "தெய்வம்" என்று வணங்கினான், நடுகல் நட்டு ஆண்டுக்கொருமுறை நினைத்தான். குடும்பத் தெய்வம், ஊர்த் தெய்வம், இயற்கைத் தெய்வம் என்று வரிசைப்படுத்தித், தனக்கு மேலுள்ள அனைத்தையும் தெய்வமாக வணங்கினான்.

அவன் வரிசைப்படுத்திய இந்தத் தெய்வங்களால் கூடச் செய்ய இயலாதது என்று கைவிட்டவற்றைக் கூடத், தொடர்ந்து உழைத்து, பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து, உடல் வருத்தி இயங்கி, இன்று பல்வேறு அரிய உண்மையைக் கண்டறிந்து, தன்னுடைய முயற்சியால் மனிதன் வெற்றி பெற்று விட்டான். பல்வேறு வகைகளில் அவன் மேலெழுந்து நிற்கிறான்.

அதுமட்டுமல்ல தேய்வற்ற மாபெரும் சக்தி என்று நினைத்து வணங்கிய இயற்கையைக்கூட, இன்று தன் கட்டுக்குள் கொண்டுவந்து தனக்காகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாய்மொழி இன்று உண்மையாகுவதை நம் கண்முன்னே காண்கிறோம். இதுவே வள்ளுவத்தின் வெற்றி.


எண் 011

அதிகாரம் 47 - தெரிந்து செயல்வகை, குறள் எண் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

எண்ணி - நுட்பமாகப் பல்வேறு அடிப்படைக் காரணிகளை எண்ணி, துணிக - துணிவு கொள்க, கருமம் - செயல் செய்ய, துணிந்தபின் - துணிந்த பிறகு, எண்ணுவம் - எண்ணிக் கொள்ளலாம், என்பது - என்பது, இழுக்கு - இழுக்கை ஏற்படுத்தக்கூடிய செயல்

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பல்வேறு காரணிகளை வரிசைப்படுத்தி அதன் நன்மை தீமைகளை உணர்ந்து கொண்டு பிறகு அந்தச் செயலை செய்வதற்குத் துணிந்து ஈடுபடுக. அவ்வாறில்லாமல் செயலைத் தொடங்கியபிறகு காரணிகளை வரிசைப்படுத்தி அதன் நன்மை தீமைகளை உணராலாம் என்று எண்ணுவது இழுக்கையே ஆக்கும்.

ஒவ்வொரு குறளிலும் ஏதாவது ஒரு சொல் அனைத்தும் அடக்கிய செறிவான சொல்லாக இருக்கும். திருக்குறளை நுட்பமாகப் படிக்கத் தொடங்கிய பிறகு நான் கண்டறிந்த உண்மை இது. இந்தக் குறளில் அப்படிப்பட்ட சொல்லாக இருப்பது - எண்ணி - என்கிற சொல்.

tmi-world குழுமத்தில் நண்பர் பாலநேத்திரம் எண்ணி என்பதற்கு count என்ற பொருள் கணித அகராதியில் உள்ளதாகக் குறிப்பிட்டுக் குறளுக்கான விளக்கத்தைக் கீழுள்ளவாறு எழுதுகிறார்.

எண்ணி என்கிற சொல்லுக்கு, கணித அகராதியில், count என்ற பொருள் உண்டு. ஒரு செயலை (business எண்டும் கொள்ளலாம்) செய்ய ஆரம்பிக்கு முன், அதன் வரவு செலவை துல்லியமாகக் கணக்கு போட்டு, அதன் பின் இறங்குவது நல்லது. தொழிலை ஆரம்பித்து விட்டு, பிறகு லாப நஷ்ட கணக்கு பார்க்கலாம் என்பத்து, சங்கடத்தில் ஆழ்த்திவிடும். இந்த பொருளாகவும் இருக்குமோ? (மழித்தலும் நீட்டலும் வேண்டா என்ற குறளுக்குக் கிராப் வெட்டிக் கொள்ளச் சொல்கிறார் திருவள்ளுவர் என்பது போல இருக்கிறது இது)

count என்பது பணத்தை எண்ணுவது/ எண்ணிக்கையை எண்ணுவது என்கிற ஒற்றைச் செயலுக்கான சொல்லாகக் கருதலாம். அப்படியானால், பொருளை (பணத்தை) மட்டும் எண்ணித் துணிந்தால் கருமம் வெற்றி பெறும் என்றாகி விடும். ஒரு செயலை, ஒரு கருமத்தைச் செய்வதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரம் மட்டும் இல்லை. அக் கருமத்தை வெற்றிகரமாகச் செய்வதற்குத் துணையாக இருப்பவை எண்ணற்றவை.

அது உளவியல் அடிப்படையில், பொருளியல் அடிப்படையில், சூழலியல் அடிப்படையில் எனப் பலவாக விரிவடையும். எனவே செய்யத் தொடங்குகிற கருமத்திற்கு அடிப்படையாக உள்ள அனைத்தையும் எண்ணி - சிந்தித்து - அதன் நன்மை தீமைகளை வரிசைப்படுத்தி - அந்தக் கருமத்தைச் செய்யத் துணிய வேண்டும் என்பதே திருவள்ளுவரின் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.