அதிகாரம் 10, இனியவை கூறல் - குறள் எண் 100,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய - இனிமையான சொற்கள், உளவாக - இருக்கும் பொழுது, இன்னாத கூறல் - கடுமையான சொற்களைக் கூறுவது, கனியிருப்பக் - கனியிருக்கும் பொழுது, காய் - காய், கவர்ந் தற்று - பறிப்பதைப் போன்றது.

இனிமையான சொற்கள் இருக்கும் பொழுது கடுமையான சொற்களைக் கூறுவது கனியிருக்கும் பொழுது காய் பறித்து உண்பதைப் போன்றது.

அனைவருக்கும் தெரிந்த குறள்தான் இது. ஆனால் இக் குறள்வழி இன்று என் முன் தோன்றிய ஒர் உண்மை என்னை அதிரவைத்தது.

இனியவை கூறல் அதிகாரத்தில் பத்தாவது குறள் இது. வழக்கமாக பத்தாவது குறளில் வள்ளுவர் அந்த அதிகாரத்தின் மிகப் பெரிய இயங்குமுறையை பொதிந்து வைத்து இருப்பார் என்பது நான் குறளைப் படிக்கும் பொழுது கண்டறிந்த மிகப் பெரிய உண்மை.

இனிய சொற்கள் உள்ள பொழுது, கடுமையான சொற்களைக் கூறுவது, கனி இருக்கும் பொழுது காயைப் பறித்துத் தின்பது போன்றது, என்று கருதித்தான் திருவள்ளுவர் எழுதி இருப்பாரா என்று என்னுள் வினாத் தோன்றியது.

கனியும் காயும் அவர் காட்டுகிற அடையாளங்கள். கவர்தல் என்பது வலிந்து எடுத்துக் கொள்வது. நுட்பமாகப் பார்த்தால் காயும் கனியும் அந்த மரத்திலேயே இருப்பவை. காய்தான் கனியாக மாறுகிறது. முதிர்ந்து, செறிவாகி, நிறைவாகி, பழுத்து, மணத்துடன் அனைத்து உயிரிகளையும் அழைக்கிற உயரிய மாற்றத்திற்குக் காய் நகரும் பொழுதுதான் அது வணங்குதற்குரியதாகிறது. காயாக இருக்கும் பொழுது அதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் காயும் கனியும் இரண்டு வேறுபட்ட நிலைகள். காலமும் சூழலும்தான் இந்த மாற்றத்தை ஆக்குகிறது.

ஒரு மனிதன் காயாக இருக்கிறான், காலமும் சூழலும் அவனைக் கனியாக மாற்றி உலகுக்கே பயன்தரத்தக்கதாக மாற்ற வேண்டும். மரத்தில் உள்ள பல காய்களும் பாதியிலேயே வெம்பி, விழுந்துவிடுகின்றன. மனிதர்களில் பலரும் இப்படித்தான் வெம்பி விழுந்துவிடுகின்றனர். கனியான உயர்ந்த நிலையை ஒருசிலரே அடைகின்றனர்.

இனிமையான, அன்பான, ஊக்கமூட்டுகிற சொற்கள் இருக்கும் பொழுது, இதற்கு எதிரான, இனிமை அல்லாத சொற்களை கூறுகிற செயலானது. பலரும் விரும்புகிற கனி நிலையை அடையாமல், காய் நிலைக்குத் தள்ளப்படுகிற செயலாக அமைந்துவிடும்.

கனி நிலையை அடையப் பொறுமையும், உயர்ந்த நோக்கோடு ஏற்றுக் கொள்ளுகிற தன்மையும் உள்வாங்கப்பட வேண்டும். இறுதிவரை காத்திருக்க வேண்டும். ஆனால் காய் பறித்தல் என்பது உடனேயே நிகழக்கூடியது. எளிமையானது, ஆனால் காய் பறித்தலின் விளைவு யாருக்குமே பயனற்றதாக இருக்கும்,

இனிமையாகப் பேசுகிற தன்மை, ஒரு மனிதனைக் கனிவானவனாக, கனிந்த முதிர்ச்சி உடையவனாக, அனைவரும் வணங்குகிற உயர்ந்த நிலை உடையவனாக மாற்றும். எனவே கனியாக முதிர இனியவற்றைப் பேசுகிற அடிப்படையை மக்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்கிற மிக நுட்பமான வாழ்வியலை இந்தக் குறளின் வழியாகச் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உணர்ந்தேன். வியந்தேன். அதிர்ந்தேன்.

திருக்குறளை ஆய்ந்து அறிந்து தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார்.
அவர் உரை கேட்டால் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன் தோன்றும். ( பெருஞ்சித்திரனார் உரையைத் - தமிழம்.பண்பலையில் கேட்கலாம் ) உரை கேட்டுக் குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.
உலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே. திருக்குறளின் பன்முகத் தோற்றத்தையும், மாந்தன் மகிழ்வாக வாழ்வதற்குரிய வாழ்முறையையும் உலகுணர வழி அமைப்போம்.