சித்தர் பாடல்கள்
கொங்கணச் சித்தர்


இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு.

கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.

இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.

இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.



கும்மி
சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்!

மனமு மதியு மில்லாவிடில் வழி
மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?
மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
வாலைக் கிருபையுண் டாகவேணும்.

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்தவரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.

ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!

எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
தெரியுது போக வழியுமில்லை பாதை
சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே.

சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே!

வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே!

முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி அந்தச் சுடர் வாலை
இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே!

ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடியதும் ஈசன்
பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே!

அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கே
இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே.

மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசாவல்
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே!

காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
சாவி லிருக்குது தெம்பிலேதான்
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே!

கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறுமெத்த
தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே!

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி
கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!

ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி
கூற்றுனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே!

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை
வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே!

அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர் மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப்பெண்ணே!

முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!

இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்
கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள்.

அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்
கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகா லவிட முண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.

மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதரவாகிய தங்கையானாள் நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்
ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.

கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே!

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி.

மாமிச மானால் எலும்புண்டு சதை
வாங்கிஓடு கழன்று விடும்
ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
யாடிக் கும்மி அடியுங்கடி.

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே!

மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை
பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
பேணிப் பாரடி வாலைப்பெண்ணே!

நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
நத்திய பேருக்கு நெல்லுமுண்டு
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே!

வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!

வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை
பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
கும்மிக் மேலான பாடலில்லை.

நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே!

ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்
ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே!

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே!

வீணாசை கொண்டு திரியாதே இது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
காணலாம் ஆகாயம் ஆளலாமே.

பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
கொடுத்த தாயும் நிசமாமோ?

தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
தாமே இருவருந் தாங்கொடுத்தார்
காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே!

பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்
தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
சேர்ந்து பரகதி தான்கொடுக்கும்.

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
போக்கியமும் வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே!

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
செத்த சவமடி வாலைப்பெண்ணே!

ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி.

பஞ்சை பனாதி யடியாதே அந்தப்
பாவந் தொலைய முடியாதே
தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே.

வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொளைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப்பெண்ணே!

காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே.

காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே
தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே!

தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே!

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை
மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்
கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்
கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன்.

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்
மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே!

கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
வகை தெரியுமோ வாலைப்பெண்ணே!

இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.

உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே!

பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான்.

எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!

ஆதிவா லைபெரி தானா லும்மவள்
அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோ
நாதிவா லைபெரி தானாலும் அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,