இசைப் பாடல்கள் - விவேக சிந்தாமணி
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.
பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்.
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலந்தனில் பெரியதாமோ?
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் கும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.
கதிர்பெறு செந்நெல்வாடக் கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
ஆலிலே பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை ஆதிபோனால் அங்கு வந்திருப்பர் உண்டோ?
பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார்
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார்.
தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!
வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே!
கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா.
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!
சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர்
அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்
துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே.
நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத் தாணி ஆகுமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்
எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே.
வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே.
கெற்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்
கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்
துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்
சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்
நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்
அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே!
தன்னுடன் பிறவாத் தம்பி தனைப் பெறாத் தாயார் தந்தை
அன்னியர் இடத்துச் செல்வம் அரும்பொருள் வேசி ஆசை
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாதன்றே.
தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே.
அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?
அன்னையே அனைய தோழி அறந்தனை வளர்க்கும் மாதே
உன்னையோர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்குமோர் இன்பம் நல்கிப்
பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வதேனோ?
பொம்மெனப் பணைத்து விம்மிப் போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே!
பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார்
மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே!
கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கையுன் தோல் வீரன்கை வெய்ய கூர்வேல்
அற்பர்தம் பொருள்கள் தாமும் அவரவர் இறந்த பின்னே
பற்பலர் கொள்வார் இந்தப் பாரினில் உண்மை தானே.
வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற் பூச்சென்பார்
பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார்
காணவே பனைக் கீழாகப் பால் குடிக்கினும் கள்ளே என்பார்
மாணுலகத்தோர் புல்லர் வழங்குரை மெய் என்பாரே.
மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
ஆப்பிலா சகடுபோலே அழியுமென்று உரைக்கலாமே.
கானலை நீரென்று எண்ணிக் கடுவெளி திரியும் மான்போல்
வானுறும் இலவு காத்த மதியிலாக் கிள்ளையே போல்
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல்
நானுனை அரசன் என்றெண்ணி நாளையும் போக்கினேனே.
அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பார் தாமே.
வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரம்ம தேவனால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர்.
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரிசொல் கேட்டு
வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம்.
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத
கானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கலாகி
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே.
கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்.
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார்
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்.
யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா
பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ?
தானையும் தலைவரும் தலம்விட்டு ஏகினால்
சேனையும் செல்வமும் தியங்கு வார்களே.
சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன் மதகரி இல்லாச் சேனை
சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை சுதர்இல் வாழ்வு
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கைபோலாம்.
முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்
தடவரை முலைமாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம்
மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய்.
தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்.
கல்லாத மாந்தரையும் கடுங்கோபத் துரைகளையும் காலம் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவாத் தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந்தணர் தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார் போல் அருகிருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே.
தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை
மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல்
ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.
அறிவுளோர் தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுளோர் தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில்
வெறியரென்று இகழார் என்றும் மேதினி உள்ளோர் தாமே.
துப்புறச் சிவந்தவாயாள் தூய பஞ்சணையின் மீதே
ஒப்புறக் கணவனோடே ஓர்லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கனதனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள்.
ஏரிநீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்
மாரிநீர் மறுத்த போதப் பறவை அங்கிருப்பதுண்டோ?
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்தபோதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே.
1960 களில் எனது தந்தையார் இந்தப் பாடல்களை அடிக்கடிப் பாடுவார். அது என்னுள் புகுந்து பதிந்து இருந்தது.
மதுரைத்திட்டத்தின் வழிப்பெற்ற நூல்களைப் படித்துக் கொண்டிருந்த போது விவேக சிந்தாமணியின் பாடல்கள்
வியப்பூட்டின. எனது பழைய நினைவுகளை புரட்டிப் போட்டன. இது மதுரைத் திட்டத்தில் 0059 கோப்புகளில் உள்ளது.
அதிலிருந்து ஒரு சில பாடல்களை எடுத்து இங்கே தந்துள்ளேன். மதுரைத்திட்டத்திற்கு என் நன்றிகள் பல - பொள்ளாச்சி நசன் -
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|