புறநானூறு
பாடல் எண் 2
புறநானூற்றுப் பாடல்
( சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன், பாண்டவரும் துரியோதனனாதியோரும் போர் செய்த காலத்து இரு
திறத்துப் படைகட்கும் பெருஞ்சோறிட்டு நடுநிலை புரிந்தான் என்பது பற்றி, இவன் பெருஞ்சோற்றுதியஞ்
சேரலாதன் எனப்படுகின்றான். முரஞ்சியூரென்பது இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் முடிநாகனாரது ஊராகும் )
|
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
உ
|
மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ்
சூழ்ச்சிய தகலமும்
வலியும்
தெறலும்
அளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு
பெயர்த்து
நின் வெண்டலைப் புணரிக் குடகற் குளிக்கும்
யாணர் வைப்பின் நான்னாட்டுப் பொருந
வான வரம்பனை
நீயோ பெரும
அலங்குளைப் புரவி
ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட
பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும்
பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம்
வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும்
பகலிருளினும்
நா அல்வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு
முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை
அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப்
பெருங்கண் மாப்பிணை
அந்தி
யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும்
பொதியமும் போன்றே
|
( பாடலின் திரண்ட கருத்து )
இப்பாட்டில், இச் சேரமான், நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்று ஐம்பெரும்பூதங்களின் இயற்கைபோலப் பொறை,
சூழ்ச்சி, வலி, தெறல், அறி என்ற ஐந்தும் உடையவன் என்றும், பாண்டவராகிய ஐவரும், துரியோதனன் முதலிய
நூற்றுவரும் பொருத களத்தில் அவர் படைகட்குப் பெருஞ்சோறு வரையாது கொடுத்தவன் என்றும், மேலைக்
கடற்கும் கீழைக் கடற்கும் இடையிற் கிடக்கும் நாடு முற்றும் இவற்கே யுரியது என்றும், இமயமும் பொதியமும்
போல இவன் நடுக்கின்றி நிலை பெறுதல் வேண்டுமென்றும் கூறி வாழ்த்துகின்றார்.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|