புறநானூறு
பாடல் எண் 189


புறநானூற்றுப் பாடல்

மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதியுள்ள பாடல் இது. இவர் திருமுருகாற்றுப்படை பாடியவர். இவர் உலக மக்களைக் கண்ட பொழுது, வேந்தர் முதல் வேட்டுவர் வரை அனைவரது உள்ளமும் பொருளீட்டற்கண் பேரார்வமுற்று இயங்குவது தெரிந்து இப்பாடலை எழுதியுள்ளார். அனைவருக்கும் வேண்டுவன உண்டியும் உடையுமேயன்றி வேறு ஒன்றுமில்லை, செல்வத்துப் பயன் ஈதலே என்றும் தானே துய்ப்போம் என்று இருப்பின் அது தன்னை விட்டுப் போகும் என்றும் இப்பாடலின்வழி அறிவித்துள்ளார்.


( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

௧அ௯

189


தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்போ மெனினே தப்புந பலவே.


( பாடலின் விளக்கம் )



உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆட்சி செய்பவருக்கும், இரவு முழுவதும் உறங்காது விழித்திருந்து பணிசெய்வோருக்கும், அடிப்படைத் தேவையாக இருப்பது நாழி அளவுள்ள உணவும், இரண்டு உடைகள் மட்டுமே. இவையல்லாது மற்றவை பெருமை கருதியதே. செல்வம் மிகுதியாக இருப்பின் அதனைப் பிறருக்குக் கொடுத்தலே நன்மை தருவது. அதைவிடுத்துத் தாமே அனுபவிப்போம் என யாருக்கும் கொடுக்காது சேர்த்து வைக்க நினைப்பாரேயானால் அந்த செல்வம் அவரை விட்டு நீங்கிவிடும்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,