புறநானூறு
பாடல் எண் 183


புறநானூற்றுப் பாடல்

(கல்வியின் சிறப்பை வலியுறுத்தவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியுள்ள பாட்டு இது )

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

கஅங


உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
ஆறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன் கட்படுமே.


( பாடலின் விளக்கம் )



கல்வி வழங்கும் ஆசிரியனுக்கு உற்றவிடத்து உதவுதல் வேண்டும். வேண்டுமளவிற்கு மிகவே அவற்குப் பொருள் வழங்குதல் வேண்டும். மிக்க பொருள் கொடுத்த வழியும், ஆசிரியனை வழிபடுதற்கு, வெறுப்படைதலாகாது. இவ்வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று எனத் தொடங்கி, இப்பாட்டின் கண், கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப் பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்பட மாட்டாது என்றும், அவன் நாட்டு அரசு முறையும், கல்வியறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக் கல்லாதானை யேலாதென்றும், கற்றோன், கீழ் நிலையிற் பிறந்தானாயினும், அவற்குத் தலைமையுண்டாகும். மேல் நிலையிற் பிறந்தோனும் அக் கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான், அக் கல்வி குறித்து வழிபட்டொழுக வேண்டுமென்றும், இவ்வாற்றால் குடும்பமும், சமுதாயமும், அரசியலும் யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்று வற்புறுத்துகிறார்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,