புறநானூறு
பாடல் எண் 163


புறநானூற்றுப் பாடல்

( குமணன்பால் பெருஞ்செல்வம் பரிசிலாகப் பெற்றுப் போந்த பெருஞ்சித்திரனார், அதனைத் தன் மனைவிபால் தந்து, எல்லோர்க்கும் கொடுத்து இன்புறுமாறு பணிக்கின்றவர் இனிய இப்பாட்டினைப் பாடினார் )

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

௧௬ங


நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங் குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே.


( பாடலின் விளக்கம் )



நின்னை விரும்புவோர், நின்னால் விரும்பப்படுவோர், நின் கிளைஞராகிய மூத்த மகளிர், கடன் நல்கியோர் முதலிய பலர்க்கும் வழங்குக. அவ்வாறு வழங்குமிடத்து இன்னார்க்கு வழங்குகின்றோ மென்றும், என்னைக் கேட்டல் வேண்டும் என்றும் கருதற்க. இச் செல்வ முற்றும் முதிர மலைக்குத் தலைவனான குமணன் தந்தது - எனப் பெருஞ்சித்திரனார் தன் மனைவியிடத்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,