குறுந்தொகைப் பாடல்கள்




தலைவி கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
3


நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந் தே னிழைக்கு நாடனொடு நட்பே

( பாடலின் விளக்கம் )

வரையாது ஒழுகும் தலைவன் வேலிப்புறத்தே நின்றதையறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணமுடையளாகி அவன் செவியிற்படும்படி அவளது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையதென்று உணர்த்தியது. தலைவனொடு செய்த நட்பு மிகச் சிறந்தது என்பதைத் தலைவி கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.




காதற்பரத்தை கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
8


கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரான்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந் தன் புதல்வன் றாய்க்கே

( பாடலின் விளக்கம் )

தலைவி தன்னை இகழ்ந்து கூறினாளென்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி "தலைவன் எமக்கு வயப்பட்டான்போல இங்கே இருந்துவிட்டு, தலைவிபாற் சென்று அவளுக்கு அடங்கி அவள் மனம் போல் ஒழுகினான், தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்" என்று கூறியது. மனைக்கிழத்தி தன்னைப் புறனுரைத்தாளெனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.




தோழி கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
16


உள்ளார் கொல்லோ தோழி கள்வர் தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிறும்
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே

( பாடலின் விளக்கம் )

பொருளீட்டும் பொருட்டுத தலைவன் பிரிந்த காலத்தில் அவர் நம்மை நினைப்பாரோ நினையாரோ என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண்பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைத்து மீண்டு வருவர் - என்று கூறி ஆற்றுவித்தது. பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது




தலைவி கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
27


கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே.

( பாடலின் விளக்கம் )

தலைவன் பிரிவினை இவள் ஆற்றாள் ஆயினளென்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி "நான் ஆற்றியிருப்பவும் என் மாமை யழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது" என்று கூறியது. பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.



நன்றி : குறுந்தொகை மூலமும் உரையும் நூல்
உரையாசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள். (1962)



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,