இராமோஜி திரைப்பட நகர்.



வியப்பூட்டும் ஓர் திரைப்படத் தொழில் நுட்ப உலகம். 2000 ஏக்கர் பரப்பளவில் 7000 க்கு மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் வியப்பூட்டும் நகரம் இது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஹைதரபாத் சென்றிருந்த பொழுது, இந்த இடத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ரூ 300 நுழைவுக் கட்டணம் என்ற பொழுது, வேண்டாம் திரும்பிச் சென்று விடலாம் என்று சொன்னேன். ஆனால் நண்பரது வற்புறுத்தலின் பேரில் உள்ளே நுழைந்தேன். ஆனால் திரும்பி வரும்பொழுது ரூ 300 கட்டணம் வைத்தது சரிதான் என்று என்னுள் தோன்றியது.

என்ன இருக்கப் போகிறது என்று சென்ற எனக்கு, இப்படியும் இருக்க முடியுமா? என்று வினாக்குறியோடு பார்க்கும் அளவிற்கு உள்ளே ஒவ்வொன்றும் வியப்பூட்டியது. நான் கண்டு வியந்ததை - 56 வயதான எனக்குள் - அதிர்வை உண்டாக்கி வியக்க வைத்த அவற்றை அதன் தர வரிசையில் ஒவ்வொன்றாக வரிசைப் படுத்த விரும்புகிறேன்.



1) பூட் பங்களா ( மாய மந்திர மாளிகை ) நான் இது போல இது வரை கண்டதே இல்லை. உள்ளே நுழைந்ததும், சிறுவர்களுக்கான தந்திர விளையாட்டோ என்று எண்ணிய எனக்கு, ஒவ்வொரு நகர்வும், அதிர்வூட்டுவதாக, உண்மையாக அந்த இடத்தில் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஆக்குவதாக - இருந்தது. தண்ணீர் சொட்டும் பாலத்தின் மீது நடந்தபோது, நெருப்பு எரியும் பாலத்தின் மீது நடந்தபோது, பழைய கால காட்சித் தொகுப்பை உள்ளடக்கிய பகுதியை அடைந்தபோது, நம்மீது சாயும் மந்திரப் புத்தக பேழை, நுழையும் போதே திகிலூட்டும் பாதைகள் - இப்படி ஒவ்வொன்றும் என்னையே வியப்படைய வைத்தது. இப்படியும் செய்ய முடியுமா? என வினாக்குறியோடு பார்த்தேன். எனக்கே இப்படி என்றால் இளம் மழலையர்களுக்கு எப்படி இருக்கும். உண்மையிலேயே மகிழ்வடைந்தேன்.



2) திரைப்படத் தொழில் நுட்பம். நான் பேருந்தை விட்டு இறங்கியதுமே திரைப்படக்காட்சி காணலாம் வாரீர் என்று அழைத்த ஒரு அறைக்குள் நுழைந்தேன். முதல் அறை - இயக்குநர் ராமோஜி - திரைப்படத் தொழில் நுட்பம் பற்றி விளக்கினார். திரைப்பட வெற்றிக்குக் காரணம் யார்? யார்? யார்? எனக் கேட்டு - அதனை எளிமையாக விளக்கிய விதம் அருமையாக இருந்தது. பார்வையாளர்களில் ஒருவரையே கதாநாயகியாக்கி, அடுத்த அறைக்குச் செல்வதற்குள் அவருக்கு ஒப்பனை செய்து - கதாநாயகியாக்கி - மாட்டு வண்டி ( கூடு மட்டும் உள்ளது ) யில் அமர வைத்து - கையில் சாட்டை கொடுத்து அடிக்கச் சொல்லி - இருவரை இருபுறமும் வண்டியை ஆட்டச் சொல்லி - அதை அப்படியே நேரடியாகப் படம் எடுத்து - நொடிக்குள் - வண்டியின் பின்புறக்காட்சியை ஒட்டவைத்து ஓட்டிக்காட்டி - கதாநாயகியைத் துரத்தி வருவதையும் - தப்பிக்க ஓடுகிற கதாநாயகியையும் காட்டி வியக்க வைத்தனர். அடுத்த அறையில் அதனுடன் இணைக்கிற ஒலியை எளிமையாக பார்வையாளர்களின் சிறுவர்களைக் கொண்டு இசைக்க வைத்து - அதைப் பதிவு செய்து - அடுத்த அறையில் அதை ஒட்டி இணைத்து படமாக வெளியிடுகிறோம் எனக் காட்டும் பொழுது உண்மையிலேயே திரைப்படம் பற்றிய இந்தச் செய்தி அறிவியல் வழியிலான அருமையான பாடமாக இருந்தது - ஆசிரியரான நான் வியந்தேன்.



3) தில்லியில் உள்ள கலை கலாச்சார பண்பாட்டு ஆய்வு மையப் பயிற்சி பெற்ற நான் புதியதாக வண்ணமடித்து, ஓங்கி உயர்ந்து நிற்கும் வளைவுகளையும், மதில்களையும், நுழைவாயில்களையும் கண்டு விந்து போனேன்.எப்படி முடிகிறது இவர்களால்? என்ற வினாக்குறியே எழுந்தது. குப்பையில்லாமல் தூய்மையாக அழகாக இந்தக் கட்டடங்களைக் கண்டபொழுது நெஞ்சு நிமிர்ந்தது.



4) உலகத்தின் அனைத்து வகைப்பூங்கா - பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுதே இரு புறங்களிலும் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பூங்காக்களின் வகைகளை நேரடியாகக் கண்டபொழுது நெஞ்சம் பூரித்தது. திட்டமிட்டவரின் எண்ணமும், அதற்கான உழைப்பும் என்முன் நிழலாடியது. இது கிடைத்தற்கரியது.



5) பொம்மை உலகம் - அடுத்த அறையில் சின்ன வண்டியில் பயணிக்கலாம் என்று நுழைந்தோம். என்ன வியப்பு மூன்று பேர் அமரும் இருக்கை. முன்னே அமர்ந்தேன். வண்டிதானாக நகர்ந்தது. இரண்டு புறமும் பொம்மைகள். ஆடின. அசைந்தன, வரவேற்றன, வணங்கின, அச்சுறுத்தின, ஆடிக்காட்டின, எத்தனை எத்தனை பொம்மைகள். எல்லாம் அழகுப் பதுமைகள்.



6) திரைப்படங்கள் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள் - ஒவ்வொரு கட்டடமும் பார்த்தால் கட்டடம் போல இருக்கும். ஆனால் அது உண்மையான கட்டம் இல்லை. முன்னே ஒரு கட்டடம். பின்னே ஒரு கட்டடம். வீதி, மார்க்கெட், அலுவலகம், கடைவீதி, அனைத்துமே உண்மையானது போல - ஆனால் பொய். படமெடுத்துக் காட்டினால் நம்பவேண்டும் தான். இது விமான உள்புறத் தோற்றம் என்றனர். உள்ளே நுழைந்தேன். அதுவரை நான் விமானத்தில் பயணித்தது கிடையாது. ஆனால் இந்த முறை ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணித்தபோதுதான் திரைப்பட நகரத்தில் உண்மைபோல அமைக்கப்பட்டிருந்ததன் தொழில் நுட்பத்தை உணர்ந்தேன்.



7) E-TV யின் தொலைக் காட்சி ஒளிபரப்பு இங்கிருந்துதான் ஒளிபரப்புவதாக அறிவித்தனர். ஆனால் உள்ளே சென்று பார்க்க வில்லை.



8) மணிப்புரி நடனம், வட்டரங்குக் காட்சிகள், மனமகிழ் நடனம், நாடகம் இப்படி மக்களுக்கான காட்சிகளும் இருந்தன.



காலையில் 10 மணிக்கு உள்ளே நுழைந்த நான் மதிய உணவைக்கூட மறந்து - புதிய உலகத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சுவைத்துச் சுவைத்து மாலை 5 மணிவரை கண்டு வியந்தேன். சோர்வே ஏற்படவில்லை.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,