செவ்வியல் தமிழின் தொன்மைப் புறச் சான்றுகள்.

தமிழைச் செவ்வியல் மொழியென மத்திய அரசு அண்மையில் அறிவித்திருப்பது தமிழ்மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆயினும் தமிழுக்கு இந்த அறிவிப்பு ஏதோ புதிதாகக் கிடைத்த கெளரவம் ஆகாது. தமிழ் ஈராயிரம் ஆண்டுகளாகவே ஒரு செவ்வியல் மொழியாகத் திகழ்ந்துள்ளது. இதைத் தமிழறிஞர்கள் மட்டுமின்றி தமிழை விரும்பிக் கற்ற உலக அறிஞர்கள் பலரும் பலமுறை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஒரு செவ்வியல் மொழிக்கு இரு தகுதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். இலக்கிய வளமும் தொன்மையுமே அவ்விரு தகுதிகளாகும். இவற்றில் ஏதாவதொரு தகுதியை மட்டும் பெற்றிருந்தால் அந்த மொழி செவ்வியல் மொழியெனக் கருதப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பேசிவரும் முண்டா மொழிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. ஆயினும் இந்த மொழிக்கு இலக்கிய வளம் கிடையாது. எழுத்துகள்கூட இல்லை. ஆகையால் முண்டா மொழிகள் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறவில்லை. இன்னொரு பக்கம் ஆங்கில மொழி நிரம்பிய இலக்கிய வளம் பெற்ற மொழியாகத் திகழ்கின்றது. ஆயினும் இம்மொழியின் தொன்மை ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. ஆகவே தான் ஆங்கிலேயரும் தம் மொழியைச் செவ்வியல்மொழி எனக் கூறிக் கொள்வதில்லை.

இந்திய நாட்டில் இலக்கிய வளமும் தொன்மையும் உள்ள மொழிகள் இரண்டேதான். சமஸ்கிருதமும் தமிழும். ஆகையால் தான் மத்திய அரசின் அண்மை அறிவிப்பு இவ்விரு இந்திய மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழிகளென அங்கீகரித்துள்ளது. இவற்றுள் சமஸ்கிருதம் வேத காலத்திலிருந்தும் தமிழ் சங்க காலத்திலிருந்தும் நமக்குக் கிடைத்துள்ளதால் சமஸ்கிருதம் தமிழைவிடப் பழமையானது என்று இன்று கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் பொதுவான ஒரு கருத்து உலக அறிஞர்களிடையே நிலவுகிறது. ஆயினும் வேதங்களிலேயே திராவிட மொழிச் சொற்கள் காணப்படுவதாலும், இநதிய துணைக்கண்டத்தின் வடமேற்கு வடகிழக்குப் பகுதிகளில் இன்றும் திராவிட மொழிகள் (ப்ராகூய், குருக், மால்தோ) பேசப்பட்டு வருவதாலும் சிந்து வெளிப் பண்பாடு திராவிட மக்களால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை உலகின் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதாலும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் இந்தியாவின் மிகத் தொன்மையான முதல் செவ்வியல் மொழி என்ற பெருமைக்கு உரித்தாகிறது.

தமிழ் இலக்கியத்திலேயே அதன் தொன்மைக்குப் பல சான்றுகள் இருப்பது உண்மைதான். ஆயினும் தமிழின் தொன்மையை ஐயத்திற்கு அப்பாற்பட்டு நிலைநாட்ட இலக்கியங்கள் மட்டும் போதாது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் காலக் கணிப்பைப் பற்றி அறிஞர்களிடம் கருத்து வேற்றுமை நிலவுகிறது. சுவடிகளில் எழுதப்பட்டுள்ள பழைய நூல்களில் ஏராளமான பாடபேதங்களும் இடைச் செருகல்களும் உள்ளன என்பதைச் சவடிஇயல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழின் தொன்மையை ஐயனின்றி எடுத்துக்காட்டும் புறச் சான்றுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கல்வெட்டுகளும், பழைய காசுகளும், எழுத்துப் பொறித்த சில்லுகளும் தமிழின் தெர்ன்மைக்கு நேரடியான புறச்சான்றுகள் ஆகும்.

பழந்தமிழ் எழுத்துகள். பிராமி எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் முக்கியமாக மதுரையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இயற்கையான குகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவ்வெழுத்துகள் அசோக மன்னரின் புகழ்பெற்ற கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் ஒத்திருப்பதால் தமிழ்நாட்டுக் குகைக் கல்வெட்டுகளின் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிராகிருத மொழிகளுக்கான மெளரிய காலத்துப் பிராமி எழுத்துகளைக் கூட்டியும் குறைத்தும், வேறு பல மாற்றங்களைப் புகுத்தியும் தமிழை எழுதுவதற்கு ஏற்ற தமிழ் பிராமி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது. இந்த எழுத்துகளே தமிழ் மொழியை எழுத குகைக் கல்வெட்டுகளிலும் காசுகளிலும் சில்லுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

கல்வெட்டுகள் : குகைக் கல்வெட்டுகளில் மிகவும் முக்கியமானவை மூன்று. அவை மாங்குளத்தில் பண்டியன் நெடுஞ்செழியனும்(கி.மு. 2ஆம் நூற்றாண்டு), ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும் (கி.பி.முதல் நூற்றாண்டு), புகளூரில் சோல் இரும்பொறைகளும் (கி.பி.2 ஆம் நூற்றாண்டு) வெட்டி வைத்த கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியைக் கொண்டு அவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கணிக்க இயலும் (படம் 1)

காசுகள் : பாண்டியன் பெருவழுதியின் பெயர் பொறித்த செப்புக் காசு அதன் எழுத்தமைதியிலிருந்து கிமு.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. கி.பி.முதல் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட இரும்பொறை பெயர் பொறித்த செப்புக் காசுகள் கரூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்குச் சற்றே பிற்காலத்தில் சேர மன்னர்களான மாக்கோதை, குட்டுவன் கோதை ஆகியோரின் பெயர் பொறித்த வெள்ளிக் காசுகளும் கிடைத்துள்ளன. (படம் 2)

சில்லுகள் : தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் அகழ்வாய்வுகளில் நூற்றுக்கணக்கான எழுத்துப் பொறித்த சில்லுகள் கிடைத்து வருகின்றன. இவற்றைத் தொல்லியல் முறையின்படி ஆய்வு செய்த அறிஞர்கள் இவற்றின் காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு முத்ல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை என்று கணித்துள்ளனர் ஆயினும் வரலாற்று அறிஞர்கள் இதுவரை இச்சில்லுகள் காட்டும் ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றிக் கவனம் செலுத்தவில்லை. எழுத்துப் பொறித்த சில்லுகள் தமிழகமெங்கும் சின்னஞ்சிறு குக்கிராமங்களிலும் அகழ்வு செய்யும்போது கிடைத்து வருகின்றன. இந்திய நாட்டிலேயே தமிழகத்தில்தான் எழுத்துப் பொறித்த சில்லுகள் மிக அதிக அளவில் கிடைத்துள்ளன. சாமானிய மக்கள் தங்கள் வீடுகளில் புழங்கிய சட்டி பானைகளின் மீது கையில் கிடைத்த இரும்பாணியைக் கொண்டு தங்கள் பெயர்களைக் கீறியுள்ளனர். அக்காலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவு மிகவும் பரவலாக இருந்துள்ளது. என்பதற்கு இச்சில்லுகள் மிக முக்கியமான புறச்சான்றுகளாக உள்ளன.

தமிழின் தொன்மைத் தகுதிக்கு இரு தூண்களாக விளங்கும் பண்டைய இலக்கியங்களையும். கல்வெட்டுகள், காசுகள், சில்லுகள் போன்ற புறச்சான்றுகளையும் மேலும் ஆய்ந்து அவற்றின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வது இன்றையத் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,