|
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரை
வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத
செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த மறைந்துபோன
தமிழ் நூல்கள் என்னும் புத்தகம்.
அந்நிகழ்ச்சி இது. எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால் எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர்
என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயது சிறுவனும், தங்கமணி என்னும்
பெயருள்ள ஒன்றரை வயதுள்ள சிறுமியும் அக்குழந்தைகளாவர். அக்குழந்தைகள், வீட்டுக்கு இரண்டு
விளக்குகளாகத் திகழ்ந்தனர். குடும்பச் செல்வங்களாக விளங்கினார்கள். காட்சிக்கினிய கண்மணிகளாக
வளர்ந்தார்கள். ஆனால் அந்தோ! எதிர்பாராதவிதமாக அக்குழந்தைகள் மறைந்தனர். மக்கட் செல்வங்கள்
மறைந்தன. ஒளிவிளக்குகள் அணைந்தன. சின்னஞ்சிறு அரும்புகள் மலர்ந்து மணம் கமழ்வதற்கு முன்னே
பறிக்பப்பட்டன. அது காரணமாக எனது மனத்தில் துன்பம் சூழ்ந்தது. மனவேதனை பெருகிற்று. நிலையாமையைப்
பற்றி நாலடியாரில் படித்த ஆணித்தரமான செய்யுள்கள்கூட என் மனத்துன்பத்தை அகற்றத் துணைபுரியவில்லை.
காலம் என்னும் நூலினால் நெய்யப்பட்ட மறதி என்னும் திரை மூடினால்தான் மனத்துன்பம் மறையும். ஆனால்
அந்தத் திரை விரைவில் முடி மறைப்பதில்லை. அதுவரையில் என்ன செய்வது? துன்பத்தை அகற்ற முயன்றேன்.
முடியவில்லை.
ஏதேனும் நூலைப் படித்துக்கொண்டே இருந்தால் அது மனத்துயரத்தைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும் என்று
கருதி, எதிரிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். அது யாப்பருங்கல விருத்தி என்னும் நூல். அதனைப்
படிக்கத் தொடங்கினேன். அந்நூலின் பழைய உரையாசிரியர் தமது உரையில் பல நூல்களிலிருந்து சில
செய்யுட்களை உதாரணம் காட்டியிருந்தார். மேற்கோள் காட்டப்பட்ட நூல்களில் சில இறந்து மறைந்துபோன
நூல்களாக இருந்தன. என் குடும்பத்தில் இரண்டு அருமைக் குழந்தைகள் மறைந்து விட்டதுபோல, தமிழிலக்கியக்
குடும்பத்திலும் சில குழந்தைகள் மறைந்து போனதை அப்போது கண்டேன். என் மனதில் அப்போது புதியதோர்
எண்ணம் தோன்றியது. தமிழன்னை எத்தனைக் குழந்தைகளை - தமிழ் நூல்களை இழந்துவிட்டாள் என்பதைக்
கணக்கெடுக்க வேண்டும் என்னும் எண்ணந்தான் அது.
இந்தக் குறிக்கோளுடன் யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையையும், ஏனைய உரையாசிரியர்கள் எழுதியுள்ள
உரை நூல்களையும் படித்தேன். அவ்வுரையாசிரியர்கள் கூறுகிற நூல்களில் எவை எவை மறைந்து போயின
என்பதை ஆராய்ந்து எழுதத் தொடங்கினேன். மறைந்து போயின என்பதை ஆராய்ந்து எழுதத் தொடங்கினேன்.
மறைந்து போன நூல்களிலிருந்து எஞ்சிநின்ற செய்யுள்களையும் தொகுத்து எழுதினேன். இது நிகழ்ந்தது
1952 ஆம் ஆண்டின் இறுதியில் ஆகும். ஆனால் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை.
இடையிடையே வேறு சில நூல்களை எழுதி முடிக்க வேண்டியிருந்தபடியாலும், வேறு அலுவல்களாலும் இந்த
வேலைஇடையிடையே தடைப்பட்டது. ஆயினும், சமயம் வாய்க்கும் போதெல்லாம் இதனையும் ஒருவாறு செய்து
முடித்தேன்.
இதில் சில நூல்கள் மட்டும், செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் வெளியீட்டில், மறைவுண்ட தமிழ் நூல்கள்
என்னும் பெயருடன் வெளியிடப்பட்டன. அதனைக் கண்ட சில அன்பர்கள், நூல் முழுவதும் வெளிவருவது தமிழ்
இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் என்று கூறினார்கள். ஆகவே இந்நூல் இப்போது புத்தக வடிவமாக
வெளிவருகிறது. மறைந்துபோன் நூல்களின் முழு தொகுப்பல்ல இந்நூல். விடுபட்ட நூல்களும் உள்ளன.
அவற்றைப் பிறகு எழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன். இப்போது தொகுத்து முடித்தவரையில் இந்நூல்
முதன் முதலாக வெளிவருகிறது.
இந்நூலுக்கு ஒரு முகவுரை எழுதியருளுமாறு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர்
மு.வரதராசனார் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் அன்புடன் இசைந்து முகவுரை எழுதியருளியமைக்கு
எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னைப் புத்தகப் பதிப்பகமாகிய பாரி நிலையத்தின் உரிமையாளர் திரு.க.அ. செல்லப்பா அவர்கள் இந்நூலை
அச்சிட்டு வெளியிட்டமைக்கு, அவர்களுக்கு எனது நன்றியுரியதாகும். இந்நூலை விரைவாகவும் அழகாகவும்
அச்சிட்டுக் கொடுத்த மங்கை அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரியது.
| |