ஆறாரைச் சக்கரம்

இஃது ஆறு ஆர்க்கால்களையுடைய சக்கரமாய், சக்கரத்தின் அச்சுப் பகுதியாகிய மையப் பகுதியில் "ற"கரம் நின்று, ஒவ்வொரு ஆர்க்காலின் மேல் ஒன்பதொன்பது எழுத்துகளாய்க் குறட்டின் மேல் "பெரியக்கா" என்னும் பெயர் நின்று, சூட்டின் மேல் 24 எழுத்துகள் நின்று முற்றுப்பெற்றது.


பாடலைப் படிக்கும் முறை

ஒன்றாவது ஆர்க்காலின் முதலெழுத்தாகிய "த" என்ற எழுத்திற்றொடங்கி மேலே போய்த் தொடர்ந்து, நான்காவது ஆர்க்காலின் கும்பப் பகுதியிலிருந்து மேலே போய் "ன்" என்ற எழுத்தில் முடிந்தால் பாடலின் முதலடி முடிவுறும். அவ்வாறே, இரண்டாவது ஆர்க்காலின் முதலெழுத்தாகிய "ப" என்ற எழுத்தில் தொடங்கி மேலே போய்த் தொடர்ந்து ஐந்தாவது ஆர்க்காலின் கும்பப் பகுதியிலிருந்து மேலே போய் "ம்" என்ற எழுத்தில் முடிந்தால், பாடலின் இரண்டாம் அடி முடிவுறும். மீண்டும் மூன்றாம் ஆர்க்க்ாலின் முதலெழுத்தாகிய "க" என்ற எழுத்திற் தொடங்கி மேலே போய்த் "தை" என்ற எழுத்தில் முடிந்தால் பாடலின் மூன்றாமடி கிடைக்கும். பின்னர் சூட்டின் முதலாம் ஆர்க்காலின் "த" என்ற எழுத்தைத் தொடர்ந்து வலப்புறமாக நகர்ந்து சூட்டின் மேலுள்ள இருபத்து நான்கு எழுத்துகளைப் படித்தால் பாடலின் நான்காவது அடி கிடைத்துப் பாடல் முடிவுறும்.

பாடல் (கட்டளைக் கலித்துறை)

தண்ணார் தமிழைத் தகைபெறக் கற்கா விடினுமெங்ஙன்
பண்ணார் கவிகள் கவரிறக் காட்டிப் படைக்கலாகும்!
கண்ணார் கவிகள் பிழையற யாக்க விலக்கணத்தைத்
தண்மைப் படகற் கவும்நன் றிலகும் வள்த்தையுற்றே!

தண்ணார் தமிழைத் - அருள் மிகுந்த தமிழ் மொழியை
தகைபெறக் கற்கா விடின் - மேம்பாடு கொள்ளத் தக்க வகையில் கசடறக் கற்காவிட்டால்
எங்ஙன் - எவ்வாறு
பண்ணார் கவிகள் - இசை நிறைவு கொண்ட கவிதைகளை
கவரிற - (கவர்-இற) யாப்பிலக்கண மரபினைத் துறந்தும் சிதைத்தும் அதனின்று பிரிவு கொண்டு சிலர் எழுதுகின்ற உரைவீச்சுகள் புதுக்கவிதைகள் என்ற பெயர் தாங்கி உலா வரும் போலித் தன்மைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கத் தற்போது நேர்ந்துள்ள் கட்டாய நிலைமையினை
காட்டிப் படைக்கலாகும் - கவிதைகள் புனையும் அவாத் கொண்ட ஆர்வலர்களிடம் எடுத்துக் காட்டி நல்ல பல கவிதைகளை அவர்கள் மூலம் படைக்கச் செய்ய முடியும்.
கண்ணார் கவிகள் - அறிவுப் பெருக்கினை அளிக்கக்கூடிய அழகுக் கவிதைகள்
பிழையற யாக்க - பிழையில்லாமல் எழுதுவதற்கு
இலக்கணத்தை - செய்யுள்கள் செய்வதற்கென்றே வழிகாட்டியாய் இலங்குகின்ற யாப்பிலக்கண நூல்கள் கற்றுத் தரும் பாடங்களை
தண்மைபட கற்கவும் - அறிந்து கொள்ள உள்ளத்துள் இன்பங்கொண்டு அவாவோடு கற்றுக் கொண்டால்
நன்று இலகும் வளத்தையுற்றே - அவ்வாறு கற்றபின் புனைகின்ற கவிதைகள் மேம்பட்ட இலக்கண இலக்கிய வளமை பெற்று வளங்குமா மறிக.

கருத்து

அருள்மிகுந்த தமிழ் மொழியை மேன்மையுறும் வகையிற் கற்க வேண்டும், பாக்கள் புனையும் ஆர்வலர்கள் யாப்பிலக்கணத்தைக் கசடறக் கற்க வேண்டும். கற்றபின் அதற்குத் தக்கபடி நின்று மரபு வழுவாப் பாக்களைப் புனைதல் வேண்டும். அவ்வாறு புனையப்படும் பாக்களே சாலச் சிறந்ததெனச் சான்றோரால் ஏற்கப்பட்டுக் காலம் கடந்து விளங்குமா மறிக.

நன்றி : சித்திரகவி நூல்
திருமிகு பாவலர். க.பழனிவேலனார் - உடுமலை (மறைவு)


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,