நா நாகஉறவு.

நா நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக் காட்டப்பட்டுள்ளன.

நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.

பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும், பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்)

பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !

இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும். நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை), இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற் கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன)


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,