|
1915 பிப்ரவரியில் வெளியான இந்த இதழில் வரிக்கு ஒரு வடமொழி எழுத்தாவது அச்சாகியிருப்பதைப் பாருங்கள்.
மணிப்பிரவாள நடையில் எழுதுவதும் பேசுவதும் உயர்வு என்றிருந்த காலம் அது. தற்பொழுது முழுமையாகத்
தமிழுணர்வோடு வருகிற சிற்றதழ்களின் பக்கங்களைப் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது.
தமிழ் மொழிக்கு வளர்ச்சியில்லை என்று சொல்லுபவர்கள், ஒப்புநோக்கி வியப்படையவேண்டிய செய்தி இது.
தமிழ் நாட்டில் பலரும் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனரே. இதனால் தமிழரின் சிறப்புக்
குன்றாதா ? என்று கேட்ட வினாவிற்கு வளரும் தமிழ் உலகம் ஆசிரியர் முனைவர்.மு.சதாசிவம் கூறியது...
" ஒரு காலத்தில் மணிப்பிரவாளம் தமிழைச் சிதைக்க முயன்றது. தமிழோடு சரிபாதி வடமொழி கலந்தது.
ஆனால் தமிழ் தனது தனித்திறனால் வடமொழியை எதிர்த்து நின்றது. தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்தது.
ஆங்கிலம் வடமொழி அளவிற்குத் தமிழில் கலக்கவில்லை. கலக்கவும் முடியாது. ஏதோ ஒரு சில ஆங்கிலச்
சொற்களைத்தான் கலந்து பேசுகின்றனர். அவர்களால் முழுமையாக ஆங்கிலம் பேச முடியாது. ஆங்கிலச் சொற்கள்
கலந்து பேசினால்தான் தங்களை மெத்தப் படித்தவர் என்று பிறர் மதிப்பார்கள் என்று சிலர் முதலில் பேசத்
தொடங்கினர். பிறகு எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர். ஆங்கிலச் சொற்கள் வெறும் பேச்சளவில்தான்
கலக்கின்றன. வடமொழியோ தமிழ் எழுத்திலும் இலக்கியத்திலும் புகுந்து விளையாடியது. அந்த அளவிற்கு
ஆங்கிலச் சொற்கள் எழுத்தில் கலக்கவில்லை. அது ஐரோப்பிய மொழியாதலின் இந்திய மொழியான தமிழோடு
வடமொழி போலக் கலந்துவிட முடியாது. இந்தக் காலத்தில் தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததால் வடமொழியை
முழுமையாக நீக்க முடிந்தது." (நன்றி: அக்டோபர் 2004 இதழ்)
| |