இணையத்திற்கு வந்த நூல்கள் - 14

தமிழக இசுலாமிய
வரலாற்று ஆவணங்கள்

புலவர். செ.இராசு
உதவி - கு.ஜமால் முகம்மது,
KKSK கல்வி அறக்கட்டளை,
பாலசுப்பிரமணியம் தெரு,
திருநகர் காலனி, ஈரோடு - 3
விலை - ரூ 100.

மிகச்சிறப்பான வரலாற்று ஆவண நூல் இது. கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழர்களும் இசுலாமியர்களும் ஒட்டுறவாய் வாழ்ந்திருந்தனர் என்பதற்கான அரிய சான்றாவண நூல் இது. மக்கள் மதம் கடந்து மக்களுக்குள் உதவியுள்ள தன்மையைக் காணமுடிகிறது. இது போன்ற ஆவணங்கள் இன்னும் நிறைய உள. இவையெல்லாம் தொகுக்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் ஆவணங்களைத் தேடுகிற இத்தன்மை முதன்மைப்படுத்த வேண்டும். இப்படி இயங்குவதே மதசார்பற்ற அரசு என்பதற்கான அடையாளமாகும்.

கொங்கு குல மகளிர்

புலவர். செ.இராசு

கொங்கு ஆய்வு மையம்,
64.5 டி.ஜி.பி.காம்ப்ளக்ஸ்,
புதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு - 638 011
விலை - ரூ 50.

கொங்கு நாட்டில் வாழ்ந்து வரலாறு படைத்த பெண்களின் குறிப்புகளைச் சான்றாவணங்களிலிருந்து திரட்டி எடுத்து, வரிசைப்படுத்தி 27க்கும் மேற்பட்ட கொங்கு நாட்டு மகளிர் பற்றிய பதிவினை இந்த நூலில் செ. இராசு அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். வரலாறு என்பது மன்னர்களிலும், பொருளுடைய மாந்தர்களிடம் மட்டுமே இருப்பதாக காட்டி ஏமாற்றுகிற வரலாற்றிற்கு பதிலடியாக இங்கு வாழ்ந்த, பெண்களின் வாழ்வியல் பதிவானது கொங்கு மண்டலத்திற்கே பெருமை கூட்டி நிற்கிறது, இயல்பாகப் பொருந்தி வாழ்ந்து சாதனை படைத்த இவர்களது பதிவு போற்றுதற்குரியதே.

ஈரோடு மாவட்ட வரலாறு

புலவர். செ.இராசு

கொங்கு ஆய்வு மையம்,
64.5 டி.ஜி.பி. காம்ப்ளக்ஸ்,
புதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு - 638 011
விலை - ரூ 100.

ஈரோடு மாவட்டம் பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்யப்பட்ட நூல் இது. ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டில் உள்ள பல ஊர்களின் வரலாற்றுத் தொகுப்பே ஆகும். வரலாற்று எச்சங்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சான்றுகளையும், கண்டறியப்பட்ட சான்றாவணங்களையும் விளக்கங்களுடன் நூலில் காட்டியுள்ளது பெருமை கொள்ளத் தக்க செயல். பின் இணைப்பாக அனைத்தையும் புகைப் படங்களாக இணைத்துள்ளமை கிடைத்தற்கரியவை. இந்த விழிப்புணர்வுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் - தொகுத்தால்.. தமிழகம் தலைநிமிரும்.

இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி இலக்கியப் பதிவுகள்

கு. இராசேந்திரன்

தாய் பதிப்பகம்,
12. ஓங்கார வீதி,திருமூலர் நகர்,
முதலியார் பேட்டை,
புதுச்சேரி 605 004
விலை - ரூ 150.

புதுச்சேரியின் ஒரு நூற்றாண்டு வரலாற்று இலக்கியப் பதிவுகளைக் காட்டுகிற தரமான நூல். நாட்குறிப்பு, ஆவணப் பதிவு, அச்சகமும் - அச்சுப்பதிவும், பதிப்பகம், என இயங்கிய இலக்கியப் பதிவுகளைச் சான்றாவணமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். நூலில் உள்ள பழைய நூல்களின் முகப்புப்படங்கள், இத்தனை நூல்களா என்கிற வியப்பை ஏற்படுத்துகின்றன. நம் மக்களுக்கு இவை காட்டப்பட வேண்டும். வரலாற்றை இழந்த மண், அடிமைப்படும், தமிழின் பெருமையையும், தமிழனது இயங்கியலையும் காட்டுகிற இந்த நூல் வணங்குதற்குரிய நூல். வாங்கிப் பாதுகாக்க வேண்டிய அரியநூல்

அன்பின் சுவடுகள்

சீர்வரிசை சண்முகராசன்

இலெமூரியா நூல் வெளியீட்டகம்,
1301 - 13 ஆவது தளம்,
கோரஸ்டவர்ஸ் (நேகா) வர்த்தக் நகர்,
தானே(மே) - மகாராஷ்டடிரா 400 606 விலை - ரூ 190.

நூலாசிரியர் சண்முகராசன், மும்பையிலிருந்து சீர்வரிசை என்ற இதழைத் தரமாக, வணிகநோக்கின்றி நடத்தியவர். இதழாசிரியரான இவர் தன்னுடைய வாழ்நாளில் எதிர்கொண்ட பல்வேறு வகையான பட்டறிவினை, மக்களுக்குப் பயனாகுகிற, ஈர்ப்புடைய, சுவையான, மடல்வழி இலக்கியமாகப் பதிவு செய்து இந்த நூலில் அச்சாக்கியுள்ளார். முன் ஏர் போல பின் ஏர் போகும். இதுபோல இவர் கடந்த பாதையை உற்று நோக்கினால் நம் பாதைக்கான தெளிவு கிடைக்கும். இவரது இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

பார்வையின் நிழல்கள்

சு. குமணராசன்

இலெமூரியா பதிப்பகம்,
1301 - 13 ஆவது தளம்,
கோரஸ்டவர்ஸ்.,
நேகா போக்ரான் சாலை,
தானே(மே) - மகாராஷ்டடிரா 400 606 விலை - ரூ 190.

பயணங்கள் மகிழ்வானவை. பயண நூல்கள் சுவையானவை. காணாத இடத்தைக் கண்முன் காட்டி ஊக்குபவை. தமிழ் உணர்வும், தமிழிய நோக்கும் உடையவர் புதிய இடத்தின் வரலாற்றையும், அமைவிடத்தையும் நுணுகிக் கண்டு விரித்து எழுதுவர் என்பதற்குச் சான்றாக இந்த நூல் உள்ளது. பொழுதுபோக்கும் நேரவீணடிப்பும் இல்லாது - படிப்பவரைத் தூண்டுகிற ஊக்கியாக இருப்பது கண்டு மனம் மகிழ்வடைகிறது. மலை முகடுகளும், நதியோரங்களும் கூட இவரது பார்வையில் சாட்சிப் பொருள்களாக மாறுகின்றன. இவரது படைப்பாற்றலால் பயண நூல் பாதுகாக்க வேண்டிய ஆவண நூலாக மாறியுள்ளது.

பேணுவோம்
பெண்ணுரிமை

நங்கை குமணன்

இலெமூரியா பதிப்பகம்,
1301 - 13 ஆவது தளம்,
கோரஸ்டவர்ஸ்.,
நேகா போக்ரான் சாலை,
தானே(மே) - மகாராஷ்டடிரா 400 606 விலை - ரூ 60.

பெண்ணுரிமையைச் செயற்படுத்திய பெரியாரின் கருத்துகள் நுட்பமானவை. பாமரனாகச் சிந்தித்துப் பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து அசைத்தவர். படைப்பாளிகளுகு இந்த கண்ணோட்டம் வேண்டும். பெண்ணுரிமையை நங்கை குமணன் இயல்பாகக் காணுகிறார். செம்பு நீரில் 3 பிச்சிப்பூக்களைப் போட்டு மூன்று மாத கர்ப்பிணி என்று பெண்ணின் நிலையை கிராமச் சூழ்நிலையை காட்டும் போது நெஞ்சு கனக்கிறது. இன்று அறிவியலில் முன்னேறியபோது Scan செய்து அடிமைப்படுத்துகிறான். தஸ்லிமா நஸ்ரின் கட்டளைகள் ஈண்டு நினைக்கத் தக்கன.

ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்

கவிஞர்.ஏகலைவன்.

மணிமேகலை பிரசுரம்,
த.பெ.எண் 1447,
சென்னை - 17
விலை - ரூ 60.

சிதம்பரநாதன், கர்ணன், அமுதசாந்தி, ஆரோக்கியமேரி, சங்கீதா, ராமானந்த குருஜி, ஜாகிர் உசேன், கண்ணன், அண்ணாதுரை, கானா விஜய் என்கிற மாற்றுத் திறன் உடையோரின் செயற்பாடுகளைத் தொகுத்துள்ளதோடு, இவர்களுக்கான உதவி புரியும் பல்வேறு அமைப்புகளின் முகவரிகளையும் தொகுத்துள்ளார் கவிஞர் ஏகலைவன். நேர்காணலாக இவர்களது பல்திறன் ஆற்றல்களையும் தொகுத்து அச்சாக்கி ஊனம் ஒரு தடையில்லை என்பதை நூல்வழி உணர்த்துகிறார் இந்த சேலத்துக் கவிஞர்.

தமிழ்கக் கதைகளின் போக்கு

பொன். குமார்.

ஐந்திணைப் பதிப்பகம்,
279 பாரதி சாலை,
சென்னை - 5
விலை - ரூ 45.

சுப்ரபாரதி மணியன், ச.பாலமுருகன், நெல்லை சு.முத்து எனத் தொடருகிற 25 படைப்பாளிகளின் கதைகளைப் படித்து விமர்சனம் செய்த கவிஞர் பொன். குமாரின் தொகுப்பு நூல் இது. கவிஞராக இருக்கும் இவர் சிறுகதைகளை விமர்சனம் செய்வது கவித்துவமாகவே இருக்கிறது. கதையின் கூறுகளை நுணுகிக் காணுவது அருமை. கதையின் சிறு பெட்டகமாகவே இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.

பழந்தமிழ்க் களஞ்சியம்

இரா. வள்ளிமணாளன்.

பசும்பொன் பதிப்பகம்,
வடக்கு போக் சாலை,
தியாகராயர் நகர்
சென்னை - 17
விலை - ரூ 60.

எனது நண்பரது வீட்டில் இந்த நூல் இருந்தது. தமிழ் வணிகம், பொறி இயல், திறனாய்வு, கலைவளம், பகுத்தறிவு, கனிம வளம், தமிழ் மருத்துவம், எங்கும் தமிழ் என்கிற தலைப்புகளில் தரமான கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாக இது காணப்பட்டது. அனைவருக்கும் பயனாகுகிற வகையில், செறிவாகச் செய்திகளை சொல்லுகிற பாங்கில் இந்த நூலானது காணப்படுகிறது. 1999 இல் இந்த நூல் வெளியிட்டிருந்தாலும், இதன் தனித்தன்மை கருதி இங்கே அறிமுகம் செய்கிறேன்.

சிக்ஸ் சிக்மா

சிபி.கே. சாலமன்.

கிழக்கு பதிப்பகம்,
33 15 எல்டாமஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை
சென்னை - 18
விலை - ரூ 70.

ஒரு சவால் - ஒரு யானையை எப்படி தீப்பெட்டிக்குள் அடைப்பீர்கள் ? - யோசித்துக் கொண்டே படித்து முடித்து விடுங்கள் - என்று எழுதியிருந்தது. படித்துக் கொண்டே போனேன் 12 கட்டுரைகள். ஒவ்வொன்றும் உளவியல் ரீதியாக எப்படி இந்த உலகில் வெற்றிகரமாக வாழ்வது, அதிலும் பிறரோடு பொருந்தி வாழ்வது, எப்படி மேலெழுவது, எப்படி நுட்பமாக இயங்குவது என்ற செய்திகளை அருமையாக விளக்கியிருந்தன. புள்ளிவிவரங்களும் குறிப்புகளும் உங்களுக்கும் பிடிக்கும்,

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,