இணையத்திற்கு வந்த நூல்கள் - 14

ஆதிக்குடி

(இயைபுத் துளிப்பாக்கள்)
ம. ஞானசேகரன்.

போதி பதிப்பகம்,
8. காமராசர் தெரு. முத்தரையர்பாளையம்
புதுச்சேரி - 605 009

விலை - ரூ 50.

துளிப்பாவின் புதிய வடிவமே இயைபுத் துளிப்பா, இயைப நகைத் துளிப்பா. மண், மொழி, இனம் சார்ந்த எழுச்சிப் பதிவுகளை இந்த நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பிரச்சனையின் அடியாழம் வரை சென்று அந்தப் பிரச்சனைக்கான வேரினை ஒன்றிரண்டு வரிகளுக்கள் அடக்கி படிப்பவர் சிந்திக்கும் நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர் ஞானசேகரன். இது அவரது இரண்டாவது நூல். தமிழுலகுக்கு இன்னும் பல நல்ல நூல்களை அவர் தருவார் என்று நம்புகிறோம். இந்த வலையேற்றத்தின் சிற்றிதழ்ச் செய்தியில் படித்து மகிழ்ந்தவை உள்ளன.

ஆங்கிலம் தமிழ் அகராதி

கா. அப்பாத்துரையார்.

கழக வெளியீடு,
522 டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

விலை - ரூ 120.

மாணவர்களுக்கான நல்ல அகராதி வேண்டுமே என்று பேசிக் கொண்டிருந்தபோது எமது அருமை நண்பர் இந்த அகராதியைப் பற்றி விளக்கினார். நல்ல தமிழ்ச் சொற்களுடன் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். உடனே சென்று வாங்கினேன். அவர் சொன்னது உண்மைதான். மாணவர்கள் வாங்கிப் பயன்படுத்ததித் தங்களது புலமையை வளர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்,

தெறிப்பு

வண்ணையூரான்,

சசேன் பதிப்பகம்,
யாழ்ப்பாணம்
உலகத்தமிழர் பதிப்பகம் சூளைமேடு, சென்னை 94

விலை - 10 டாலர்.

தாய் மண்ணிலேயே போராடுபவர்கள் ஒருபுறம். தாய் மண்ணைவிட்டு அகதிகாக வெளியேறி பிறநாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் மறுபுறம். பிழைப்புத் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தமிழையும் மண்ணையும் மறக்காது இயங்குவது வாழ்த்துதற்குரியது. மண்மீட்புப் போராட்டத்திலும். மொழி மீட்புப் போராட்டத்திலும் உயிர்துடிப்போடு இயங்குவது என்பது வணங்குதற்குரியது. ஒன்றிரண்டு பக்க அளவே உள்ள சூழலியல் கருத்து விவரிப்புப் கட்டுரைகள் இந்த நூலாசிரியரால் சிறப்பாக எழுதப் பட்டுள்ளன. 65 கட்டுரைகள் உள்ளன.

Stories from Tamil Literature

ம.இலெ.தங்கப்பா,

வானகா பதிப்பகம்,
7, 11 ஆவது குறுக்கு
அவ்வை நகர். புதுச்சேரி

தொலைபேசி : (0413) 2253 843
விலை - ரூ 100.

தமிழ் இலக்கியத்தில் உள்ள கதைகளை எளிய நடையில், மாணவர்களுக்குப் புரிகிற வகையில், ஆங்கிலத்தில், இரண்டு மூன்று பக்கங்களில் சுவையாக ம.இலெ. தங்கப்பா எழுதியுள்ள நூல் இது. இக்கதைகளைப் படிக்கிற ஆங்கிலம் தெரிந்த மக்களுக்கு, தமிழில் உள்ள இலக்கிய நிகழ்வுகள் சுவையாகப் புலப்படும். ஆங்கிலம் படிக்க இது ஒரு எளிய முறை. இருந்தாலும் இதனைத் தமிழாக்கம் செய்து நம் தமிழ் மழலையர்களுக்குத் தரவேண்டும் என்பது தமிழில் ஈடுபாடு உள்ளவர்களின் விருப்பம். படிக்க வேண்டிய சிறப்பான நூல் இது.

ஆல்ஃபா தியானம்

நாகூர் ரூமி,

கிழக்கு பதிப்பகம்,
33.15 எல்டாமஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை 18

தொலைபேசி : (044) 4200 9601
விலை - ரூ 60.

ஆல்ஃபா தியானம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுப்பதோடு இந்த நூலையும் வெளியிட்டுள்ளார் ஆம்பூரில் உள்ள மஸ்கரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியரான நாகூர் ரூமி அவர்கள். தியானம் என்பது அமைதி, விழிப்புணர்வு, தெளிவு, ஆனந்தம், ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடிய ஒரு மனநிலை. அல்லது மூளை நிலை. அது நம் கூடப்பிறந்தது. நம்மோடே இருப்பது. ஆனால் நம்மால் உதாசீனப்படுத்தப்படுவது - நாம் அமைதியான மனநிலைக்குப் போவதற்கு வேண்டுமென்று முயற்சி செய்தால் நாம் தியான நிலைக்குப் போய்விடுவோம்- இப்படிச் செல்கிறது இந்நூல்,

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

விமலா ரமணி,

டாக்டர் மகாலிங்கம் பொறியியல்
மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி,

பொள்ளாச்சி
விலை - ரூ 115.

பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் அவரது தந்தையார் அமரர் நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் வாழ்கைச் சரித்திரத்தை இந்த நூல் வழி சுவையாக எடுத்துரைத்துள்ளார். ஒவ்வொரு படியிலும் எப்படியெல்லாம் முனைப்புடன் மேலெழுந்து முன்னேறியுள்ளார் என்பதனை இந்நூல் தெளிவாகக் காட்டுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி திரு ந. மகாலிங்கம் அவர்களைச் சந்தித்த போது அவர் அன்போடு அளித்த நூல் இது. இந்நூலை உருவாக்கப் பின்புலமாக இருந்தவர்கள் பலர். இருந்தாலும் விமலா ரமணி அவர்களால் இந்த நூல் இறுதிவடிவம் பெற்றுள்ளது,

சவாலே சமாளி

S.L.V.மூர்த்தி,

கிழக்கு பதிப்பகம்,
33.15 எல்டாமஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை 18

தொலைபேசி : (044) 4200 9601
விலை - ரூ 70.

ஒவ்வொருவர் வாழ்க்கைக்குள்ளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். பல பேர் பிரச்சனைகளுக்குள் மூழ்கிப்போய் கரைந்து விடுகிறார்கள். ஒரு சிலர்தான் அதனை வென்றெடுத்து மேலெழுகிறார்கள். தன்முன் எழும் பிரச்சனைகளை, சிக்கல்களை, சவால்களை எப்படிச் சரிசெய்வது என்பதற்கான ஆலோசனைப் புத்தகம் இது. தொழிலில், வாழ்க்கையில், சூழலில் எப்படிச் சமாளிப்பது என்பதற்கான கருத்துகளை இயல்பாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். தன் பட்டறிவோடு இந்த செய்திகளை ஒருவர் இணைத்துப் பார்க்கத் தான் செய்த தவறு தெரியும், வளர்த்துக் கொள்வதற்கான வழி கிடைக்கும்.

காலம்
உங்கள் காலடியில்

சோம. வள்ளியப்பன்,

கிழக்கு பதிப்பகம்,
33.15 எல்டாமஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை 18

தொலைபேசி : (044) 4200 9601
விலை - ரூ 70.

நேர நிர்வாகம் என்பது உயரிய கலை. இதனை நுட்பமாகச் செய்பவர்கள் வாழ்வில் அனைத்தையும் பெறுவர். எனக்கு நேரம் கிடைக்க வில்லை என ஒதுங்கியிருக்காது, கிடைக்கிற நேரத்தை சரியாகப் பயன்படுத்தி வெற்றி காண்பதே அறிவு. சந்தர்ப்பம் ஒரு மின்னல் அதைச் சரியாகப் பயன்படுத்துபவனே அறிவாளி. இக்கருத்தை முதன்மைப்படுத்தி மிகத் தரமாக எப்படி நேரத்தை முறைப்படுத்துவது என்பதை எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சுவையாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

யானைகள்
அழியும் பேருயிர்

ச.முகமது அலி, க.யோகானந்த்

காட்டுயிர் பாதுகாப்புக் கழகம்,
மலைபடுகடாம் பதிப்பகம்,
65. காரமடை சாலை,
மேட்டுப்பாளையம் - 641 301

அலைபேசி : 98941 40750
விலை - ரூ 150.

பண்பாட்டில் யானைகள், பரிணாமம், புவிப்பரவல், உடலும் உணவும், இனப்பெருக்கம், வாழ்வியல், சூழலியல், வேட்டை வதை, பாதுகாப்பு - நிலைமை, தேவைகள், ஆராய்ச்சிகள், யானை ஆராய்ச்சியாளர்கள் - என்கிற தலைப்புகளில் மிகத் தரமாக ஒரு நூல் உருவாகியுள்ளது. யானை பற்றிய கிடைத்தற்கரிய இச் செய்திகளைத் தொகுத்து - அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த நூலை உருவாக்கியுள்ளது சிறப்பாக இருக்கிறது.

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,