|
மெய்மையின் மயக்கம்சோதிப் பிரகாசம்,பொன்மணி பதிப்பகம் 7 முதல் குறுக்குத் தெரு, சிறுதொண்டன் தெரு, ஒண்டிக்குப்பம் - 602 002 பேச : 2764 1566 விலை : ரூ 150. |
|
கவிதைகள் புனைவு இலக்கியங்கள். இவைகளைப் படிப்பதனால் படிப்பாளிக்கு எந்தவித அறிவுப் பயனும் ஏற்பட்டு விடுவதில்லை என்பதை வலியுறுத்துவது ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது. கவிதைகளைப் பற்றி அதிகம் பேசுகிற ஒருநாட்டில் சிந்தனை வளர்ச்சி ஏற்படுகின்ற வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை நுட்பமாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். கோவை ஞானி, இன்குலாப், சிவகாமி, ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளிலிருந்து ஆசிரியர் தெளிவு படுத்துகிறார். தலைகிறுத்துக் கவிஞர்கள் என்று கூறுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். |
விடியும்வரை போராட்டம்அரிமாவளவன்,வேர்கள், 25 இளங்கோ தெரு, எடமலைப்பட்டிப்புதூர், திருச்சி - 620 012 விலை : ரூ 20. |
|
தமிழனின் நிலைபற்றி விளக்கமாக எழுதப்பட்ட நூல் இது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இருந்தாலும், மொழிவழி மாநிலப் பிரிவில் கேரள, ஆந்திர, கர்நாடக எல்லைகளில் பல ஏக்கர் நிலங்கள் தமிழகத்திலிருந்து கைவிட்டுப் போயின என்றும் தமிழகத்து வளங்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றன என்றும் தமிழர்கள் எப்படியெல்லாம் ஏதிலிகளாக மாற்றப்படுகின்றனர் என்றும் காட்டுகிற கட்டுரைகள் அடங்கிய நூல் இது. |
தமிழீழம்நான் கண்டதும் என்னைக் கண்டதும்ஓவியர் புகழேந்தி, தோழமை வெளியிடு, 5டி பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்., சென்னை 78 பேச ~ 24811189 விலை : ரூ 125. |
|
இது இன விடுதலைப் போரில் இன்னுயிரை ஈந்த பதினெட்டாயிரம் போராளிகளுக்கும் இன ஒழிப்பு வெறியாட்டத்திற்கு இரையான எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ மக்களுக்கும் - என ஈகஅறிவிப்புடன் தொடங்குகிறது நூல். ஓவியர் புகழேந்தியின் ஓவியக்கண்காட்சி தொடங்கி, இலங்கையில் தமிழ் மக்ககள் படும் இன்னல்களை, அப்பாவி மக்களை அழித்தொழிக்கும் இராணுவ நடவடிக்கைகள், வஞ்சகமாக அழிகப்படும் தமிழ் இளைஞர்கள் என நடந்த நிகழ்வுகளைக் கல்லும் கரையும் வண்ணம் உருக்கமாக எழுதியுள்ளார் புகழேந்தி. நூலைப் படிக்கப் படிக்க ஏதிலியாய் தமிழரினம் ஒடுக்கப்படுகிற அவலநிலை கண்முன் நிழலாடுகிறது. தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய நூல் இது. |
கி.பி. 2400 ஒரு
சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக் கவிதைத் தொகுப்பு |
|
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் துடிப்பான இளைஞரான செழியன் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இயங்கிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளை இணைத்து, சுற்றுச்சூழல் நிலைகுறித்து எழுதக்கேட்டு, சூழல் விழிப்புணர்வுப் பதிவாகத் தொகுத்து, 78 படைப்பாளிகளின் சூழல்நிலை குறித்த பல்வேறு கூறுகளைத் தொகுத்து அச்சுநேர்த்தியுடன் நூலாக்கி வெளியிட்டுள்ளார்கள் புதுவை நண்பர்களான செந்தமிழினியனும், தமிழ் நெஞ்சனும். சுழல் பற்றிய பதிவாக உள்ள கவிதைத் தொகுப்பு நூல் இது. இப்படியே போனால் 2400 இல் எப்படியிருப்போம் நாம் ? இருப்போமா நாம்? |
மனசு சுற்றிய மாவளிபாவலர் வையவன்,தமிழ்க் குடியரசு பதிப்பகம் 14 /12 மியான் முதல் தெரு சேப்பாக்கம், சென்னை 5 அலைபேசி 94443 21902 விலை : ரூ 50. |
|
கருத்துச் செறிவூட்டுகிற தரமான குறும்பாக்களைக் கொண்ட தொகுப்பு நூல். பகுத்தறிவு, நாட்டு நடப்பு, எழுச்சி,
தமிழ் உணர்வு என நிமிர்ந்து நிற்கிற கருத்துகளை உடைய குறும்பாக்கள் மகிழ்வூட்டுகின்றன. இந்த நூலில்
படித்துச் சுவைத்த குறும்பாக்கள் இந்த வலையேற்றத்திலுள்ள சிற்றிதழ்ச் செய்தியில் (இதழ் எண் 52) இணைக்கப்
பட்டுள்ளன. |
சைவ சமய
பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம், |
|
நூல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பன்னிரு திருமுறைகள் பற்றிய விளக்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் (33 கட்டுரைகள்) உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளால் எழுதப்பட்டுள்ளன. இரண்டாம் பாகம் இலண்டன், இலங்கை, இந்தியக் கோயில்களின் வண்ணப்புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பாகத்தில் ஆங்கிலத்தில் திருமுறைகள் பற்றியும் சைவ சமய விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 400 பக்கங்களில் சிறப்பாக அச்சு நேர்த்தியுடன் அச்சாகப்பட்டுள்ளது. |
பெரியாரியல்வே.ஆனைமுத்து,தையல்நாயகி நினைவு நூல் வெளியீட்டகம், 124 அ, ஆறாவது குறுக்குத் தெரு, மூலக்குளம், புதுச்சேரி 10. (0413) 229 1219 விலை : ரூ 120. |
|
பெரியாரியல் நூல் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. 18 பகுதிகளாக, ஒவ்வொரு தொகுதியும் ஒன்பது பகுதிகளை உடையது. பெரியார் சிந்தனைகளோடு, சீர்திருத்த இயக்கங்கள், தலைவர்கள் பற்றிய வரலாறும் இணைக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் பற்றியும், வைக்கம் கிளர்ச்சி பற்றிய தொகுப்புகளும் இந்நூலில் உள்ளன. தமிழர்கள் படித்துணர மிகக் குறைந்த விலையில் இந்த நூல் இரண்டாம் பதிப்பாக வெளியிட்ப்பட்டுள்ளது. |
கோவை கண்ட மொழிப்போர்செந்தலை ந.கவுதமன்,வள்ளுவர் இல்லம், ஏ.கே.இராமசாமி நகர், சூலூர், கோவை 641 402 விலை : ரூ 15. |
|
சூலூர் வரலாறு என்னும் நூலிலிருந்து கோவையில் நடந்த மொழிப்பேர் தொடர்பான செய்திகளைத் தொகுத்து இந்த நூலில் ஆசிரியர் வழங்கியுள்ளார். 1938 லிருந்தே தமிழ் மொழிக்கான உரிய இடம் வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. எங்கெல்லாம் தமிழர் நலம் கெடுகிறதோ, அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்த நிலை நம்மை ஊக்குவிக்கிறது. |
PERIOR ERAவே.ஆனைமுத்து ஆசிரியர்,19.முருகப்பாதெரு (மாடி), சேப்பாக்கம், சென்னை 5 (044) 2852 2862 விலை : ரூ 150. |
|
அம்பேத்கர் அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் மலராக சிந்தனையாளன் இதழ் ஆசிரியர் வே.ஆனைமுத்து வெளியிட்டுள்ள ஆங்கிலவழி இதழான பெரியர் ஈரா வின் சிறப்பு மலர் இது. 150 பக்கங்களில் மிகத் தரமான கட்டுரைகளை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழுகிற மக்களின் இயங்குதளமாக அம்பேத்கரின் கருத்துகளும், அவரது வாழ்முறையும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதற்குச் சான்றாக இதழ் அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்டவரின் குரலாக உரத்து ஒலித்த அவரது ஆளுமையைக் கட்டுரைகள் காட்டுகின்றன. |
கணினி களஞ்சியப் பேரகராதிமணவை முஸ்தபாமணவை வெளியீட்டகம் ஏஇ 5 (103) அண்ணா நகர் சென்னை 40 விலை : ரூ 385. |
|
1600 பக்கங்களில் கணினி தொடர்பான பல்வேறு சொற்களுக்குத் தமிழில் அதன் செயற்பாடு மற்றும் பயன்பாட்டு வழியில் அமைந்த சொற்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். இச்சொற்கள் சொற்களாக மட்டுமில்லாமல் விளக்கவுரையுடன் அமைந்துள்ளது இந்நூலின் சிறப்பு. அமெரிக்காவில் தொகுப்புச் சுற்றுகளை (IC) வடிவமைக்கும் நண்பர் திரு கதிரவன் இந்நூலை அன்பளிப்பாகக் கொடுத்து விளக்கிக் காட்டினார். மணவையாரின் பணி தொடர வாழ்த்துகிறோம். தொகுப்புத் துணைவர்களான மு.சிவலிங்கம், இரா.நடராசன், ராம்குமார் ஆகியோருக்கும் நன்றிகள். |
மலைஉரைவீச்சுகள்ஆர். இரத்தினசாமி தேவி பதிப்பகம் கெம்பநாயக்கன்பாளையம் சத்தியமங்கலம் - 9 விலை : ரூ 40. |
|
தன்னைச் சுற்றிலும் நடக்கிற நிகழ்வுகளை உற்று நோக்கி அதன் அடித்தளத்தை, ஆழத்தை, உயிர்த் துடிப்பை மற்றவரும் புரிந்து கொள்ளும் வகையில், மற்றவருக்கும் அதிர்வூட்டுகிற வகையில் உரைவீச்சுகளாகத் தொகுத்துள்ளார். இஃது எனது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதல்தொகுதி ஓர் அவசரத்திருத்தம் (1992). அடுத்த 2012 இல் சந்திப்போம் என முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிறப்பாக வெளிவர வாழ்த்துவோம். |
சங்க இலக்கியத்தில் இசைஇரா.கலைவாணிசு.தமிழ்வேலு ஏழிசை பதிப்பகம் மயிலாடுதுறை. 609 001 விலை : ரூ 150. |
|
சங்க இலக்கியத்தில் காணப்படுகிற இசை, இசைக்கலைஞர்கள், பண்கள், தோற்கருவிகள், துளைக்கருவிகள், யாழ், பல்லியம்,
தாளம், இசை நுட்பம் - என்பவற்றை பகுத்து ஆய்ந்து திறம்பட வெளிப்படுத்திய நூல் இது. இசைப்புலமை பெற்ற
கலைவாணியும், தமிழ்புலமை பெற்ற தமிழ் வேலுவும் இணையாக நுணுகிக் கண்ட இந்நூல் தமிழ் உலகம் போற்றும்
உயரிய நூலாக மலரும் என்பதில் ஐயமில்லை. |
ஒப்பந்தங்களைச்
விடுதலை இராசேந்திரன் |
|
ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை, புதுவை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஈழத்தமிழரின் நிலை குறித்த விளக்கமாக, தொடங்கப்படுகிற ஒவ்வொரு ஒப்பந்தமும் எப்படிச் சீர்குலைக்கப்படுகிறது என்பதனையும் விளக்குகிற வகையில் வெளியிடப்பட்ட நூல் இது. பன்டாரநாயகா, ஜெயவர்த்தனே, பிரேமதாசா, சந்திரிகா, ரணில் எனத் தொடருகிற ஒவ்வொரு தலைமையிலும் எவ்வாறு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் காட்டுவது. 64 பக்கங்களில் ஈழ வரலாறு காட்டுகிற நூல் இது. |
காவிரியும் கலைஞரும்பூ.அர.குப்புசாமி,காவிரி காப்புக்குழு, 19, மேற்கு மடவிளாகம், கரூர் - 639 001. பேச: (04324) 261114 விலை : ரூ 30. |
|
வேர்கள் மாத இதழில் 18 கட்டுரைகளாக வெளிவந்த ஒரு தொடரின் தொகுப்பு இந்த நூல். காவிரி ஆற்றுரிமையை நாம் எப்படி இழந்தோம் என்பது பற்றிய ஒரு வரலாற்றுப் பதிப்பு இது. தன்வரலாற்றை அறியாத எந்த இனமும் மீண்டதாகச் சான்று கிடையாது. இழந்த வரலாற்றைச் சொல்வதன் நோக்கமே அதை மீட்டெடுக்கத்தான். தாங்கவியலாத உடல் நோக்காட்டுக்கிடையிலும் தன் பேச்சிலும் மூச்சிலும் சொல்லிலும் செயலிலும் காவிரிக்காகத் தொடர்ந்து இயங்கிவருபவர் திரு.பூ.அர.குப்புசாமி |
சிதறல்கள்செவ்வியன் (தமிழநம்பி)முதன்மொழி பதிப்பகம் 590 வாரியார் தெரு எசு.பி.எசு.நகர். கன்னியாக்குளம் சாலை. விழுப்புரம் - 605 602 விலை : ரூ 20. |
|
தனித் தமிழில் முதிர்ச்சியும் தொடர்ச்சியும் உடைய பாவலரின் உரைவீச்சுகளின் தொகுப்பு இது. உரைவீச்சுகள் தெளிதமிழில் அமைந்துள்ளன. படிப்பவர்களுக்குப் பொருளுணர இறுதியில் அருஞ்சொற்பொருள் பட்டியலும் தரப்பட்டுள்ளது. இத்தொகுப்பிலுள்ள பாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாக்கள் 15-03-06 இணைய இதழில் இணைக்கப்பட்டுள்ளன. |
தனித்தமிழரிமா
பிறப்பு:30-10-1909 இறப்பு:20-12-2005 |
|
தனித் தமிழுக்காகத் தொடர்ந்து இயங்கிவந்த வி.பொ.பழனிவேலனார் அவர்களது வாழ்வியல் குறிப்புகள் உடைய
நூல். இந்நூலில் நான் கண்ட வி.பொ.ப என அவரது பன்முக ஆளுமையை, தெளிதமிழுக்காகக் கிளர்ந்தெழுந்த
தன்மையை, விடாப்பிடியோடு இறுதிவரை வாழ்ந்தமையை தொகுப்பாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். |
புலவர் குழந்தையின்
இராவண காவியம்கதைச் சுருக்கம்புலவர் குழந்தையின் நூற்றாண்டு நினைவு வெளியிடு நொய்யல் இலக்கிய மையம் திருப்பூர் -2 |
|
|
|