தமிழ், இலவச தகவல் களஞ்சியம் (என்ஸைக்ளோபீடியா)


விக்கிபீடியா தமிழ் தகவல் களஞ்சியம்


எந்தக் கட்டணமும் இல்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள உதவுவது விக்கிபீடியா. கருத்துகளை உள்வாங்கிக் கட்டுரை எழுதுபவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் - இது ஒரு கிடைத்தற்கரிய இணையதளம். மிக அதிகமான மக்களால் தேடித்தகவல் பெறும் ஒப்பற்ற தளமாக இது விளங்குகிறது. 9,000,000 க்கும் மேற்பட்ட குறிப்புரைகள் 250 க்கு மேற்பட்ட மொழிகளில் இந்தத் தளத்தில் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 2,121,387 குறிப்புரைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்காண மக்கள் இந்த இணையதளத்திலிருந்து தகவல்களைப் பெறுகிறார்கள். இந்த இணையதளத்தின் உருவாக்கத்திற்கு 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துடிப்பான கருத்துப் பங்களிப்பாளர்கள் உள்ளனர். இந்த இணையதளத்தில் உள்ள பிழையான தகவல்களை பார்வையாளர்களே திருத்த இயலுகிற வாய்ப்பும் இந்த இணையதளத்தில் உண்டு.

இந்த இணையதளம் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தது ஜிம்மிவேல்ஸ் என்பவர் உருவாக்கி இருந்த நியூபீடியா என்ற தகவல்களஞ்சியமே.2001 சனவரி 2 ஆம் தேதி பென்குவிஸ், சான்டிகோ, சங்கர் ஆகியோர் இது குறித்துப் பேசி சனவரி 10 இல் இந்தத் தகவல் களஞ்சியத்தை இணையத்தில் வலையேற்றினார்கள். சனவரி 15 விக்கிபீடியா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கென ஒரு அறக்கட்டணை அமைப்பும் தொடங்கப்பட்டது. உலகெங்கும் உள்ள ஆர்வலர்களை இணைத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடங்கிய விக்கிபீடியா. இது St Petersburg, Florida, United States இல் அமைந்துள்ளது.

புதிய புதிய மாற்றங்களுக்குத் தகுந்தவாறு புதிய செய்திகளை இணைத்துக்கொண்டு மேலெழுந்துள்ளது விக்கிபீடியா. புதிய புதிய தகவல்களை உருவாக்கி இணைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் - புதிய செய்திகளை உள்ளடக்கிய இணையபக்கங்களுக்கு இணைப்பையும் தந்துள்ளது. Encyclopaedia Britannica, Associated Press, Oxford English Dictionary போன்றவற்றையும் இதன் வழி அறிந்து கொள்ள முடியும். கருத்துகளை இணைப்பதில் எந்த சார்பு நிலையையும் எடுகாது அனைத்துத் தகவல்களையும் இணைத்துள்ளது இதன் சிறப்பு.



நண்பரின் மின்அஞ்சல் பார்த்து அவர் தந்த முகவரியில் உள்ளே நுழைந்தேன். வியந்தேன். எத்தனை தகவல்கள். என் தமிழ் மக்கள் தேடிக் குவித்திருக்கும் அரிய தகவல்கள். பார்வையாளர்களாலேயே வடிவமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படும் தமிழ் தகவல் களஞ்சியம் கண்டு வியந்தேன்.

நண்பர் அனுப்பியிருந்தது போல http://ta.wikipedia.org/wiki/தமிழம் (இணைய இதழ்) என்று அடித்து யுனிக்கோடிற்கு மாற்றி இணையதள இணைப்பினுள் நுழைந்து இன்டெர்நெட் எக்ஸ்புரோளரில் முகவரிப் பகுதியல் - மேலுள்ளதை ஒட்டி - இணைக்கச் சொன்னதும் கொஞ்ச நேரத்தில் - தமிழ் விக்கிபீடியாவுக்குள் நுழைந்தேன் - அதில் தமிழம் வலை பற்றிய குறிப்பினைக் கண்டேன். நீங்களும் காண விக்கிபீடியா இணையதளத்திற்குள் சென்று முழுமையாகக் காணவும் - அந்தப் பக்கத்திலிருந்து - விக்கிபீடியாவின் முதற்பக்கத்திற்குச் சென்றால் தமிழ் விக்கிபீடியாவின் முகப்புப் பக்கத்தைக் காணலாம்.

அதில் உள்ள முதன்மையான தமிழ் என்ற கட்டுரையைப் பார்த்தேன். எத்தனை நுட்பமாகச் செய்து இருந்தார்கள். அதில் உள்ள தமிழர் அறிஞர்கள் வரிசை - மிகவும் நேர்த்தியாகச் சங்ககாலத்திலிருந்து வரிசைப் படுத்தப்பட்டிருந்தது கண்டு மகிழ்ந்தேன். அதில் வெளி இணைப்பாகத் தமிழம் வலையில் நான் வைத்துள்ள 127 தமிழ் அறிஞர்களுக்கான இணைப்புத் தரப்பட்டிருந்தது. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்வே இப்பொழுது தமிழம் வலை இணைய தளத்தில் 276 தமிழ் அறிஞர்களின் படங்களைத் திரட்டவும் அதை வலையேற்றவும் செய்துள்ளது. இன்னும் விடுபட்ட தமிழ் அறிஞர்களைத் திரட்டி - குறிப்புடன் - அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான தமிழியச் செய்திகளுடன் வைக்க வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. அதற்காக நண்பர்கள் பலரிடமும் கேட்டு இருக்கிறேன். இணையத்தைப் பார்க்கிற பார்வையாளர்களும் இந்த வகையில் உதவுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பகுப்புத் தமிழ் ( தமிழ் விக்கிபீடியா ) என்ற இணைப்பில் உள் நுழைந்த பொழுது தமிழுக்காக நாம் செய்ய வேண்டிய பதிவுகளின் வரிசையானது கண்முன் காட்சி தந்தது.

தமிழுக்காக நாம் செய்ய வேண்டிய பதிவுகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தமிழ் அறிஞர்களும் நுட்பமாகத் திரட்டவேண்டும் - பதிவு செய்ய வேண்டும் - தாளும் எழுதுகோலும் தேவையில்லை - தட்டச்சு செய்து காற்றில் பறக்க விட்டால் போதும். பூமிப்பந்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் இது உடனே சென்று காட்சிப்படுத்தப்படும். மிகச் சிறிய இடத்தில் ஏகப்பட்டதை அடக்கலாம். கையடக்கமாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,