தமிழிலும் தேடித்தருகிற கூகிள்


www.google.com (search engine)


பத்து ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளுக்காக நூலகத்தைத் தான் நாம் நாடிச் செல்ல வேண்டும். அங்குள்ள அனைத்துப் புத்தகங்களையும் தேடி, பக்கம் பக்கமாகப் படித்து, பிறகு குறிப்பு எடுக்க வேண்டும். நூலகத்தில் அந்தப் புத்தகம் இல்லை என்றால் அந்தப் புத்தகத்திற்காக அலைய வேண்டும். படிப்பது, குறிப்பு எடுப்பது இப்படி இருந்த நிலை இன்று அடியோடு மாறிவிட்டது.

எதைப் பற்றித தெரிந்து கொள்ள வேண்டும் ? அது நமது வீட்டுக்குள்ளேயே கிடைக்கிறது. உலக அளவில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது அனைத்தும் கிடைக்கிறது. நொடிக்குள் கிடைக்கிறது. நுட்பமாகக் கிடைக்கிறது. வியப்பாக இருக்கிறதா?

அது தான் கணினித் தொழில் நுட்பத்தில் வியத்தகு சாதனை.

கணினிக்கு இணையதள இணைப்புக் கொடுத்தால் போதும் - அதுவும் அகண்ட அலை வரிசையாக இருந்தால் - செய்திகள் வாரிக் கொட்டும். எதைப் படிப்பது. எதை விடுவது என நேரமே கிடைக்காது - போதும் போதும் என்கிற அளவிற்குக் கிடைக்கும். எடுத்துக் காட்டாக இசைக்கருவி நாதசுரம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? naathasuram musical instrument என்று தட்டச்சு செய்தால் போதும். நாதசுரம் பற்றிய செய்திகள் அடுக்கிக் கொண்டே போகும்.

இப்படித் தேடிக் கொடுப்பதற்கு நிறைய தேடு தளங்கள் உள்ளன.

நான் வியந்து, நான் பெற்ற இன்பம் இந்த மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் குறிப்பினை எழுதிக் கொண்டு இருக்கிறேன். இன்றும் நம்மில் பலர் கணினியை சினிமா பார்ப்பதற்கும். இசையை நுட்பமாகக் கேட்பதற்கும். தட்டச்சு செய்வதற்கும் தான் பயன்படுத்துகிறார்கள். (மிகப் பெரிய கருவியைக் கூட பொழுதுபோக்கும் கருவியாக மாற்றும் தன்மை நம்மில் பலருக்கும் உண்டு)

www.google.com என்கிற தேடு தளம் மிகச் சிறப்பாக இருக்கிறது. மிகக் குறுகிய காலத்திற்குள் பல்வேறு நுட்பங்களைத் தன்னுள் இணைத்துக் கொண்டு பயனாளிகளை தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கும் அருமையான அமைப்பு கூகிள். பேச, செய்தி அனுப்ப, தேடித் தர எனப் பல்வேறு நுட்பங்களைத் தன்னுள் கொண்டு இயங்குகிறது.

இணைய தளப் பக்கங்களின் பல்வேறு கூறுகளை நுட்பமாக அலசி, வரிசைப்படுத்தி பார்வையாளருக்கு நொடிப் பொழுதில் காட்டுகிற அரிய இணையதளம் இது. இணையதளப் பக்கங்கள் மட்டுமல்லாது பெயர்கள். தொலைபேசி எண்கள். புகைப்படங்கள். கோப்புகள், செய்திகள். வரைபடங்கள் என அனைத்தையும் தேடித்தருகிற வியத்தகு இணையதளம் இது.

உலக மொழிகளில் 120 க்கு மேற்பட்ட மொழிகளின் கருத்துருக்களை உள்ளடக்கி அந்த அந்த மொழியில் இயங்குகிற இணைய தளம் இது.

கூகிள் தமிழ் மொழியில் அமைந்துள்ள தேடு தளம். தமிழில் யுனிகோடு எழுத்துவகையில் தட்டச்சு செய்து தேடக்கேட்டால் தமிழில் தேடித்தரும் உயரிய செய்கையையும் இது செய்கிறது.

ஆக தமிழிலும் தேடலாம் என்கிற செய்தி நம் தமிழ் மக்களுக்கு இனிப்பான செய்தி அல்லவா?

உலகின் மிக முக்கிய நாடுகளிலெல்லாம் இதன் அமைப்பானது இயங்குதளத்தோடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்காகக்கூட இதன் தனியான தள அமைப்பும் உள்ளது.

அனைத்து மக்களுக்கும் உதவவேண்டும் என்கிற உயரிய நோக்கோடு நுட்பமாகச் செயல்படுகிற தன்மையையும் கொண்டுள்ள இந்தத் தேடு தளத்தை நாம் அன்போடு வாழ்த்துவோம்.




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,