போட்காஸ்டிங் என்றால் என்ன ?
திரு. கார்த்திக் இராமலிங்கம் திரு. எழில்
Broadcasting, Telecasting என்பது போல Podcasting என்பதும் ஒரு வகையான ஒலிபரப்பு செய்வதே ஆகும்.
வானொலியும், தொலைக்காட்சியும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யும் பொழுதே நாம் கேட்கவேண்டும்.
கேட்கத் தவறிவிட்டால் நாம் அதனை இழந்து விடுவோம். யாராவது ஒருவர் அதனைப் பதிவு செய்து
வைத்தாலொழிய அதனை மீண்டும் கேட்க இயலாது.
செய்தி, அறிவிப்பு, நேர்காணல் போன்றவை, பொழுது போக்குகள் அல்ல. மீண்டும் மீண்டும் கேட்டு,
நுட்பமாக உணர்ந்து, வரலாற்றுப் பதிவிற்கு அடித்தளம் அமைக்க உதவுபவை. நெருக்குதல் மிகுந்த இன்றைய
சூழலில், உரிய நேரத்தில் இவற்றைக் கேட்பது என்பது வினாக்குறியானதே. மேலும் ஒலிபரப்பின் தன்மை,
ஒலிபரப்பைக் கேட்க நாம் பயன்படுத்தும் கருவியின் தன்மை, சுற்றுச் சூழலில் ஏற்படுகிற மாற்றங்கள் -
போன்றவை இந்த ஒலிபரப்புகளை நாம் கேட்கும் பொழுது இடையூறுகளாக இருப்பதோடு, அதன் உயர்
தன்மையையும் சிதைத்து விடுகிறது. கேட்பதை நுட்பமாகவும், உயர் தரத்துடனும் கேட்க முடிவதில்லை.
Broadcasting, Telecasting இல் உள்ள இக்குறைபாடுகளை நீக்குவதற்குக் கண்டறியப்பட்ட புதிய
முயற்சியே இந்த போட்காஸ்டிங் முறை ஆகும். இணையத்தின் வழியாகத் தகவல்களை ஒலி பரப்பு செய்வதும்,
ஒலிபரப்பு செய்கிற தகவல்களை யார்வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்தில்
வேண்டுமானலும் இணையத்தின் வழியாகப் பதிவிறக்கம் செய்து - கேட்டுமகிழ உதவுவதுதான் இந்த
போட்காஸ்டிங். சுருக்கமாகச் சொன்னால் போட்காஸ்டிங் என்பது "இணைய வழியிலான ஒலிபரப்பும் - இணைய
வழியிலான ஒலிபரப்புக் கேட்டலும்" எனச் சொல்லலாம்.
போட்காஸ்டிங் முறையில் ஒலிபரப்பு செய்வதை நம் கணினியில் கேட்டு மகிழ,
போட்காஸ்டிங் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்வதற்குரிய மென்பொருள் வேண்டும். இதற்காக
itunes, ipodder, jpodder, dopplerradio போன்ற ஏராளமான இலவச மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன.
இவற்றில் ஏதாவது ஒன்றைப் பதிவிறக்கம் செய்து, கணினியில் பொருத்திக் கொண்டால், நமது கணினி
போட்காஸ்டிங் வலையில் ஒலிபரப்பு செய்கிற அனைத்துச் செய்திகளையும் பதிவிறக்கம் செய்து கேட்க அணியமாக
உள்ளது.
போட்காஸ்டிங் செய்கிற இணையதளங்களைக் கண்டறிய வேண்டும். google இணையதளத்தில் சென்று
தேடலாம். அல்லது podcast alley, podcast bunker, tech podcast என்கிற இணையதளங்களிலிருந்தும்
பெறலாம். தமிழில் போட்காஸ்டிங் வகையிலான ஒலிபரப்பில் 36 பாடல்களைத் தனது இணையதளத்தில்
இணைத்துள்ளது www.thamizaham.net இணையதளம். பாஷாஇந்தியா இணையதளம் கலந்துரையாடல்களைத்
தமிழில் போட்காஸ்டிங் வகையில் இணைத்துள்ளது.
போட்காஸ்டிங் செய்யும் இணையதளத்திற்குள் சென்றால் ஆரஞ்சு நிறத்தில், 3mm x 6mm செவ்வகத்துள்
Rss என எழுதியிருக்கும். இது இருந்தால் அந்த இணையதளம் போட்காஸ்டிங் செய்கிறது என்று அறியலாம்.
இதனைத் தேர்வுசெய்தால் இதனுடைய முகவரிப்பகுதியில் போட்காஸ்டிங்குக்கான முகவரி இருக்கும்.
எடுத்துக்காட்டாக http://www.thamizaham.net/rsssong/songs/rss.xml என்று இருக்கும். இதனைப்
படியெடுத்துக் கொள்ளவேண்டும். இந்த முகவரியினை...
பதிவிறக்கம் செய்து பொருத்திவைத்துள்ள (எ.க.ipodder, dopplerradio) பதிவிறக்க மென்பொருளைத்திறந்து
அதிலுள்ள subscribe பகுதிக்குள் சென்றால் - முகவரி கேட்கும். அந்த இடத்தில் நாம் மேலே
படியெடுத்து வைத்துள்ள முகவரியை பதித்து, இயக்கினால் - இணையதளத்தில் போட்காஸ்டிங் வகையில் பதிவு
செய்து வைத்துள்ள அனைத்து ஒலிபரப்புகள் பற்றிய பட்டியல் குறிப்புகளுடன் கணினித் திரையில் தெரியும்
இதில் நாம் விரும்புகிற ஒலிபரப்பைத் தேர்வு செய்து, பதிவிறக்கம் செய்து, கேட்டு மகிழலாம்.
இணையத்துள் நாம் நுழையும் பொழுதே, இந்த மென்பொருள்கள், நாம் பதிவுசெய்து வைத்துள்ள போட்காஸ்டிங்
ஒலிபரப்பில் அன்றுவரை உள்ள அனைத்துப் பதிவுகளையும் வரிசையாகக் காட்டிவிடும். விரும்புகிறவற்றை நாம்
தேர்வுசெய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடையில் இணையம் தடைபட்டால்கூட அடுத்த முறை
இணையத்துள் நுழையும் பொழுது முன்பு பதிவுசெய்ததிலிருந்து தொடர்ந்து பதிவு செய்யும். முழுமையாகப்
பதிவிறக்கம் செய்யப்பட்டவை ஒரு கோப்பினுள் வைக்கப்பட்டிருக்கும். இதனை கணினியில் உள்ள mp3 player/
media player - என எந்தவகையிலான மென்பொருளின் வழியாகவும் கேட்டு மகிழலாம். ஒலிபரப்புகள் mp3
வகையினதாக இருப்பதால் தகவல்களைத் துல்லியமாகவும், தரமாகவும் கேட்க முடியும்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|