ஓலைச் சுவடி தொடர்பாக, இதுவரை பாதுகாக்கப் பட்டவை பட்டியல், இருந்தால் அனுப்பவும், ஒலைச் சுவடிகளைத் தந்தால் இலவசமாகவே வருடி இறுவட்டு வடிவில் அனுப்பி வைக்கிறேன்.
.................
ஓலைச் சுவடிகளை நீங்களே பாதுகாப்பதற்கான வழிமுறைகள்.
1.உங்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளை முதலில் நல்ல துணி கொண்டு துடைக்கவும்.
2. எழுத்துகள் தெளிவற்று இருந்தால் நுண்ணிய கரிப்பொடி தடவி துடைக்கவும். கரித்தூள் எழுத்துப்பள்ளங்களில் இருந்து எழுத்து தெளிவாகத் தெரியும்.
3. ஓலைகளை வரிசையாக அடுக்கவும். தமிழ் எண்களில் எழுதி யிருந்தால் தமிழ் எண்களைப்படிக்க கீழுள்ள இணைப்பைக் காணவும். http://www.thamizham.net/kal/number/number.htm
4. ஓலைகள் விடுபட்டிருந்தால் அந்த எண்ணைக் குறித்து வைக்கவும். பாதி உடைந்த நிலையில் இருந்தாலும் அதனை வருடலாம். ஆனால் விடுபட்ட எண்ணிக்கையில் அந்த ஓலையை இணைக்கவும்.
5. அ3 வருடியில் (எச்.பி.ஸ்கேனர் பயன்படுத்தலாம்) 600 டிபிஐ அளவு வைத்து வண்ணத்தில் (color mode with 600 dpi) வருடவும். வருடும் படங்களை பிட்மேப் வடிவில் சேமிக்கவும். (ஜேபெக் வடிவில் சேமித்தால் பெரியதாக்கும் பொழுது சிக்கல் உண்டாக்கும்)
6. வருடிய ஓலைகளை வரிசையாக இணைத்துப் படவடிவக்கோப்புகளாக்கவும்.

ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள ஓலைகளைத் தாங்களாகவே வருடலாம். மேலே உள்ள முறையைக் கடைப்பிடித்தால் போதும். படவடிவக் கோப்பை விரும்புகிறவர்களுக்குத் தரவும். பிட்மேப் வடிவில் சேமித்துள்ளவற்றைத் தாங்கள் முதன்மைப் படியாக வைத்துக் கொள்ளவும். ( வரிசை எண், ஓலை பெற்ற இடம், தன்மை (மருத்துவம், இலக்கியம், சோதிரடம், போன்றவை), ஓலையின் எண்ணிக்கை, ஓலைக்கான தலைப்பு ( அதன் உள்ளடக்கம் குறித்து எழுதவும்), ஓலைபற்றி குறிப்பு (2 வரிகளுக்கு மிகாமல்) ) என்கிற 6 தலைப்புகளில் பட்டியலிட்டு சேமிக்கலாம். தாங்கள் பாதுகாக்கும் ஓலைச்சுவடிகளின் பட்டியலை மட்டும் எனக்கு அனுப்பி வைத்தால் போதும். அதனை எனது தளத்தில் இணைக்கிறேன்.
ஒவ்வொரு ஆர்வலரும் இந்த வகையில் ஓலைகளைப் பாதுகாக்கத் தொடங்கவும். அல்லது ஓலைகளை வரிசைப்படுத்தி எனக்குத் தந்தால் அவற்றை வருடித் தரவும் காத்திருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளவும். அன்புடன் பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை