கல்வி ஆராய்ச்சிகள்
வரிசை எண் : 90
மூன்றே பாடல்களில்... தமிழ் எழுத்துகளுக்கான ஒலிப்பு முறையை அறிதல்
தமிழில் உள்ள எழுத்துகள் 247 ஆகும்.
அதாவது,
உயிரெழுத்துகள் 12
மெய்யெழுத்துகள் 18
உயிர்மெய்யெழுத்துகள் 216
ஃ என்கிற ஆய்த எழுத்து 1
ஆக மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் உள்ளன.
உயிரெழுத்துகள் 12
உயிரெழுத்துகள் என்றால் என்ன ?
உயிரெழுத்துகள் என்பவை மொழிக்கு உயிராகி நின்று இயங்குபவை.
அவை,
அ, இ, உ, எ, ஒ என்கிற ஐந்து எழுத்துகள் குறுகி ஒலிக்கும் குற்றெழுத்துகளாகவும்,
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஓள என்கிற ஏழு எழுத்துகள் நீட்டி ஒலிக்கும் நெட்டெழுத்துகளாகவும் உள்ளன.
இந்தப் 12 உயிரெழுத்துகளை எவ்வாறு ஒலிப்பது என்று அறிந்து கொள்வோமா ?
(பாடல் எண் 1)
அழாமல் இருக்கணும் சின்னப் பாப்பா.... அ, அ, அ
ஆடிப்பாடனும் சின்னப் பாப்பா .... ஆ.... ஆ.... ஆ
இன்முகத்தோடு வாழ்ந்திட வேண்டும்.... இ, இ, இ
ஈகச் சுடரை ஏற்றிட வேண்டும்.... ஈ.... ஈ.... ஈ
உத்தமர் வாழ்வை உணர்ந்திட வேண்டும்.... உ, உ, உ
ஊக்க முடனே உயர்ந்திட வேண்டும்.... ஊ.... ஊ.... ஊ
எங்கும் எதிலும் துணிவு வேண்டும்.... எ, எ, எ
ஏதிலி யில்லை ஏற்றம் காண்போம்.... ஏ.... ஏ.... ஏ
ஐயம் இங்கே வேண்டாம் வேண்டாம்.... ஐ.... ஐ.... ஐ
ஒற்றுமையோடு கூடிட வேண்டும்.... ஒ, ஒ, ஒ
ஓடு ஓடு உயர்ந்திட ஓடு.... ஓ.... ஓ.... ஓ
ஔவை தானே தமிழ் மூதாட்டி.... ஔ.... ஔ.... ஔ
ஆயுத எழுத்தும் தமிழில் உண்டு.... ஃ, ஃ, ஃ
மெய்யெழுத்துகள் 18
மெய்யெழுத்துகள் என்றால் என்ன ?
மெய்யெழுத்துகள் என்பவை மொழிக்கு உடம்பாகி நின்று இயங்குபவை.
அவை,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்கிற 18 எழுத்துகள் ஆகும்.
இந்தப் 18 எழுத்துகளையும் இதே வரிசையில் நினைவில் நிறுத்துவது என்பது கடினமானது. இந்தப் 18 எழுத்துகளையும் நன்கு தமிழ் தெரிந்தவரும்கூட வரிசையாக நினைவில் வைத்துச் சொல்லுவாரா என்பது வினாக்குறியானதே.
எனவே
இந்தப் 18 எழுத்துகளை எளிமையாக நினைவில் நிறுத்த அவற்றின் பிறப்பிடங்களை வைத்து இப்பொழுது வரிசைப் படுத்துவோம்.
கசட தபற - என்பவை வல்லின எழுத்துகள்
யரல வழள - என்பவை இடையின எழுத்துகள்
ஙஞண நமன - என்பவை மெல்லின எழுத்துகள்.
இந்த அடிப்படையில் இவ்வெழுத்துகளை நினைவில் வைத்தால் அது எளிமையாகும்.
அதற்கான பாடல் இதோ...
(பாடல் எண் 2)
கசட தபற வல்லினமாம்
யரல வழள இடையினமாம்
ஙஞண நமன மெல்லினமாம்
தமிழால் நாமும் ஓரினமாம்.
கசட தபற, யரல வழள, ஙஞண நமன என்கிற பதினெட்டு எழுத்துகளை ஒலிக்கப் பழகிய பிறகு,
ஒவ்வொரு எழுத்தின் தலையிலும் புள்ளி வைத்தால் எப்படி ஒலிக்க வேண்டும் என்று கரும்பலகையில் எழுதிக்காட்டி பயிற்றுவிக்க வேண்டும்.
க தலைமேல் புள்ளி இருந்தால் க்
ச தலைமேல் புள்ளி இருந்தால் ச்
த தலைமேல் புள்ளி இருந்தால் த்
ப தலைமேல் புள்ளி இருந்தால் ப்
இந்த முறையில் க முதல் ன வரையுள்ள 18 எழுத்துகளின் தலைமேல் புள்ளி இருந்தால் எப்படி ஒலிக்க வேண்டும் என்று பயிற்சி தரவேண்டும். இந்தப் பதினெட்டு ஒற்றெழுத்துகள் தான் மாணவர்களுக்குப் பிரச்சனையாக உள்ளன. எனவே இந்தப் 18 எழுத்துகளை பொறுமையாகச் சொல்லிக் கொடுத்துப் பதிய வைக்க வேண்டும்.
அடுத்ததாக உள்ளவை
உயிர்மெய்யெழுத்துகள் 216
உயிர்மெய்யெழுத்துகள் என்றால் என்ன ?
முன்பு குறிப்பிட்ட உயிரெழுத்துகள் 12 ம், மெய்யெழுத்துகள் 18 ம் இணைந்து உருவாகிய எழுத்துகள் உயிர்மெய்யெழுத்துகள் எனப்படும்.
எடுத்துக்காட்டாக
க் என்கிற மெய்யெழுத்தும் அ என்கிற உயிரெழுத்தும் இணைந்து க என்கிற உயிர்மெய்யெழுத்து ஆகிறது ( க் + அ = க )
ச் என்கிற மெய்யெழுத்தும் அ என்கிற உயிரெழுத்தும் இணைந்து ச என்கிற உயிர்மெய்யெழுத்து ஆகிறது ( ச் + அ = ச )
இவ்வாறு உயிர்மெய் எழுத்துகள் 18 ம் உயிரெழுத்துகள் 12 ம் இணைந்து
18 X 12 = 216 உயிர்மெய்யெழுத்துகள் உருவாகின்றன.
இந்த 216 எழுத்துகளையும் நினைவில் நிறுத்த இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தாலே போதும்.
(பாடல் எண் 3)
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ......
க எழுத்தைப் போலவே பிற எழுத்துகளுக்கும் பாடிப்பழகவும். ச, ல, ழ, ள, ர, ற, ந, ண, ன.........
தமிழ் கற்பிப்பதன் தொடக்க நிலையாக இந்த மூன்று பாடல்களையும் நம் மழலையர்களுக்கு இசையோடு அறிமுகப்படுத்திப் பாடப் பயிற்சி தந்தால் மழலையர்கள் எழுத்துகளை எப்படி ஒலிப்பது என்ற முறையை எளிமையாகக் கற்றுக் கொள்வார்கள்.
அடுத்த நிகழ்வில் சந்திப்போம்
அன்புடன்
பொள்ளாச்சி நசன் (தமிழ்க்கனல்) - pollachinasan@gmail.com - 9788552061
|
|