கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 79

தமிழில் படித்தல் திறன் வளர...


மொழி கற்றலில் அடிப்படையாக இருப்பவை

- எழுத்து அறிதல்
- எழுத்தை இணைத்துப் படித்து சொற்களைப் படிக்க அறிதல்
- எழுத்துகளை இணைத்து சொற்களை பிழையின்றி எழுத அறிதல்
- சொற்களுக்கான படங்களை அறிதல்
- சொற்களை இணைத்துத் தொடர்களை உருவாக்க அறிதல்
- பேசுதல்


இன்றைய சூழலில் 25 விழுக்காடு மாணவர்களுக்குப் படிக்கத் தெரியவில்லை. சொல்வது எழுதுதல் தேர்வு வைத்தால் பிழையாகத்தான் எழுதுகிறார்கள். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் தொடக்க நிலை வகுப்புகளில் மட்டுமல்ல, 6, 7, 8 வகுப்புகளிலும் கூட இருப்பதுதான் வேதனையான நிலை. இக்குறையை நீக்கி மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான ஒரு அணுகுமுறையானது தேவைப்பட்டது,

கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியில் இது தொடர்பாக இயங்கியதன் விளைவு தான் நீங்கள் மேலே பார்த்துக் கொண்டிருக்கும் அட்டைகள். சென்ற ஆண்டு இதற்காக நான் உருவாக்கி வைத்திருந்த 42 அட்டைகளை கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் வண்ணத்தில் அச்சாக்கிக் கொடுத்தது. சென்ற ஆண்டு இந்த அட்டைகளின் வழி மாணவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. மாணவர்களைத் தொடர்ந்து அணுகியதில் இந்த அட்டைகள் மேலும் செறிவூட்டப் பட்டு - 32 அட்டைகளுக்குள் அனைத்தும் அடக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் தங்கள் கையில் எடுத்துப் பார்த்து, புரிந்து கொள்ளும் வகையில் - சீட்டுக் கட்டு அளவில் உள்ள சிறிய அட்டைகளாக இவை உருவாக்கப் பட்டன. இந்த அட்டைகளைப் பயன் படுத்தினால் மாணவர்கள் மூன்றே மாதங்களுக்குள் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள்.



தமிழில் படித்தல் திறன் வளர,,,

கேட்டல், பேசுதல், படித்தல், மற்றும் எழுதுதல் என்பன மொழியின் அடிப்படைக்கூறுகளாகும். ஒரு மொழியில் புலமை உடையவர் என்பவர் இந்த நான்கு அடிப்படைக் கூறுகளிலும் புலமை உடையவராக இருத்தல் வேண்டும்.

ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர், தாய்மொழியைத் தங்களது சூழலில் பேசுவதால் அம் மொழிக்கான பேசுதல், கேட்டல் என்கிற இரண்டு அடிப்படைக் கூறுகளும், இயல்பாகவே அவருக்குள் அமைந்திருக்கும்.

தொடக்கநிலைக் கல்வி நிலையங்களில், தாய்மொழியை ஒருவர் படிக்கும் பொழுது கல்வி நிலையங்கள் எழுதுதல் படித்தல் என்கிற அடிப்படைக் கூறுகளை மட்டும் பயிற்றுவித்தாலே போதும். அவர் அந்த மொழியில் புலமை பெற்றவராகி விடுவார்.

தொடக்க நிலைக் கல்வி நிலையங்களில், தாய்மொழி அல்லாத வேற்றுமொழியைக் கற்பிக்கும் பொழுது, மொழியின் அடிப்படைக் கூறுகள் நான்கினையும் (கேட்டல், பேசுதல், படித்தல், மற்றும் எழுதுதல்) மொழி கற்பித்தலுக்காகக் கல்விக் கூடங்கள் பயிற்சி தரவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.

உலகம் முழுவதும் வாழுகின்ற நம் தமிழ் மக்கள் கேட்டல், பேசுதல் என்கிற மொழியின் அடிப்படைக் கூறுகளை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய, வீட்டில் பயிற்சி தந்தால், அதாவது வீடுகளில் தமிழ் பேசினால், பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் என்பது எளிமையானதாக இருக்கும். தமிழகத்தில் வாழுகிற தமிழ் மக்களுக்கும் இதே நிலைதான்.

இன்றைய சூழலில் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினர் தமிழில் படிக்கத் தடுமாறுகிறார்கள். தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி எழுத இயலவில்லை. இக்குறையை நீக்க இந்தப் புதிய அணுகுமுறை பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறையைத் தொடக்கப்பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினால் இரண்டாம் வகுப்பு இறுதியில் அனைத்து மாணவர்களும் படித்தல் திறனில் மேம்பட வாய்ப்புண்டு. எழுத்துகளை இணைத்துச் சரியாகப் படிக்கும் மாணவர்கள், பிழையில்லாமல் எழுதும் ஆற்றலைப் பெறுவார்கள்.

இந்த அணுகுமுறையைச் சிறப்பாக நிகழ்த்த ஆசிரியர்கள் கீழ்க்காணும் படிநிலைகளை நெஞ்சில் நிறுத்திச் செயல்படவேண்டும். .

1. எழுத்து அறிமுகம்
2. கற்ற எழுத்துகளைச் செய்தித் தாளில் மீள்பார்வை செய்தல்.
3. கற்ற இரண்டு எழுத்துகளை இணைத்துப் படித்தல்.
4. குறியீடுகளை உணர்ந்து, குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்திப் படித்தல்

1. எழுத்து அறிமுகம் -

எழுத்துகளை கரும்பலகையிலோ, எழுதுபலகையிலோ, குறிப்பேட்டிலோ எழுதிக்காட்டி - எழுத்தின் மீது எழுதவைத்து, உரிய வடிவில் சரியாக எழுதவும், அந்த எழுத்துக்கான சரியான ஒலிப்பு முறைப்படி ஒலிக்கவும் எழுத்துகளை எழுதும் பொழுது எழுத்தின் ஒலிப்பு முறையை சொல்லிக் கொண்டே எழுதவும் பயிற்சி தரவேண்டும்.

2. கற்ற எழுத்துகளைச் செய்தித் தாளில் மீள்பார்வை செய்தல் -

ஒவ்வொரு நாளும் மாணவர்களது ஏற்புத்திறனுக்கு ஏற்றவாறு ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளை எழுதிக்காட்டி எழுத்து அறிமுகம் செய்த பிறகு - மாணவர்கள் அந்த எழுத்துகளை நன்கு பயிற்சி செய்த பிறகு - அடுத்த நாளில் அந்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்யப் பயிற்றுவித்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் வகுப்பறைச் செயற்பாடுகளில் ஒன்றாக செய்தித்தாளில் வட்டமிடுதல் நிகழ்த்தப்படவேண்டும். மாணவர்கள் செய்தித்தாளில் கற்ற எழுத்துகளை வட்டமிட்டு மீள்பார்வை செய்யும் பொழுது, வரியொற்றித் தேடுதலை முதன்மைப் படுத்த வேண்டும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடி வட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும். வட்டமிட வேண்டிய எழுத்துகளை மாணவர்கள் வரியொற்றித் தேடும் பொழுது தேடுகிற எழுத்து மட்டுமல்லாது மற்ற எழுத்துகளின் வரிவடிவங்களும் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் பதிவாகும். வகுப்பறையில் ஒவ்வொருநாளும் செய்தித்தாள் வட்டமிடுதல் நிகழ்வை 15 மணித்துளிகளுக்காவது நிகழத்த வேண்டும். அப்பொழுது மீத்திறன் மிக்க மாணவர்களின் அருகில் மெதுவாகக் கற்போரை அமர்த்தி - நண்பர்களிடமிருந்து கற்றலை ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மாணவரும் தங்களது செய்தித்தாளில் எழுத்துகளைத் தேடி வட்டமிடும் செயலைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

3. கற்ற இரண்டு எழுத்துகளை இணைத்துப் படித்தல் -

மாணவர்கள் கற்ற எழுத்துகளின் அடிப்படையில் அமைந்த இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களே அந்த இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பொழுது, எழுத்துகள் நுட்பமாகப் பதிவதோடு, படித்தல் திறனுக்கான அடித்தளமானது மாணவர்களிடம் உருவாக்கப்படுகிறது. எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பொழுது மாணவர்களே படிக்க வேண்டும். ஆசிரியர் ஒலிப்பு முறையைச் சொல்லிக் கொடுக்கக்கூடாது. அவர்களாகவே முயன்று ஒலிக்க ஊக்குவிக்க வேண்டும். தமிழ் ஓர் ஒலியன் மொழி. எழுத்துகளின் ஒலிப்பு முறையை இணைத்து வேகமாக ஒலித்தாலே போதும். அந்த இரண்டு எழுத்துக்குரிய ஒலிப்புமுறையானது தானாகவே வரும். (மம், ம்ம, பப், ப்ப, ம்மா, ப்பா, அம்மா, அப்பா)

4. குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தருதல் -

குறியீடுகளை உணர்ந்து, குறியீடுகளுக்குரிய ஒலிப்புமுறையை உள்வாங்கி, குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தருதல். தமிழ் மொழியிலுள்ள உ, ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகளைத் தவிர மற்ற உயிர்மெய் எழுத்துகள் அனைத்தும் ஓர் அடிப்படையான கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது வகையான குறியீடுகளை (ா, ி, ீ, ெ, ே, ை, ெ ா, ே ா, ெ ள) மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த வேண்டும். குறியீட்டினை அறிமுகப்படுத்தி அந்தக் குறியீட்டிற்குரிய ஒலிப்பு முறையை அறிமுகப்படுத்தி - கற்றுக் கொண்ட குறியீடுகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்து - இறுதியாக குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தர வேண்டும். இந்த அணுகுமுறையில் பயிற்றுவிக்கும் பொழுது எழுத்துகள் மாணவர்கள் நெஞ்சில் நீங்காமல் பதிவாகின்றன.

தமிழில் படித்தல் திறனை வளர்த்துதற்கான புதிய அணுகுமுறை

இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் படித்தல் திறனை வளர்ப்பதற்காக இந்த 32 அட்டைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த அட்டைகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதற்கான படிநிலையானது வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறையில் மாணவர்களது கற்றல் நிகழ்வுகள் 4 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

நிலை 1. ட, ட் முதல் ற், ற வரையிலான எழுத்துகள் ( 16 அட்டைகள் )

நிலை 2. அ முதல் ஓ வரையிலான எழுத்துகள் ( 3 அட்டைகள் )

நிலை 3. 8 குறியீடுகளைக் கற்பித்து, மீள்பார்வை செய்து, குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்க வைத்தல். ( 8 அட்டைகள்)

நிலை 4. உ, ஊ, ஒள வரிசைக்கான எழுத்துகள். (4 அட்டைகள் )

மாணவர்களது வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவுசெய்யும் அட்டை ஒன்று

ஆக 32 அட்டைகள் உள்ளன.

இந்த 32 அட்டைகளைக் கொண்டு
மாணவர்களிடம் படித்தல் திறனை வளர்த்துவது எப்படி ?


1) அட்டைகளை வரிசையாகக் கற்க ஊக்குவிக்கவும்.

2) முதல் அட்டையில் உள்ள ட, ட் எழுத்துகளை எழுதவும், அடையாளம் காட்டவும் பயிற்சி தரவும். மாணவர்களது ஏற்புத் திறனுக்குத் தகுந்தவாறு எழுத்துகளைக் கற்றுக் கொள்ளும் நாள்கள் வேறுபடும். எழுத்துகளை மாணவர்கள் படித்து முடித்த பிறகு அடுத்த நாள் செய்தித்தாளில் அந்த எழுத்துகளை வட்டமிடச் செய்யவும். (ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் செய்தித்தாள் வட்டமிடுதலை நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்) முதல் இரண்டு அட்டைகளில் மாணவர்கள் ட, ட் மற்றும் ப, ப் என நான்கு எழுத்துகளைக் கற்றுக் கொண்டார்கள் - எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டுவிட்டார்கள். இப்பொழுது அட்டையின் பின்புறம் உள்ள எழுத்துகளை மாணவர்களே எழுத்துக் கூட்டிப் படிக்க ஊக்குவிக்கவும். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கக் கூடாது. மாணவர்களே முயன்று படிக்க ஊக்குவிக்க வேண்டும். எழுத்துகளை வேகமாக இணைத்து ஒலித்தாலே அந்த இரண்டு எழுத்துக்குரிய ஒலிப்புமுறை தானகவே வரும். இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கிற இந்தச் செயல்பாடு 7 ஆவது அட்டை வரை தரப்பட்டுள்ளன. எழுத்துகளைப் படிக்கத் தெரிந்து சொற்களை படிக்கக் தடுமாறுகிற மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு இதுபோல எழுத்துகளை இணைத்துப் படிக்கிற செயற்பாடுகளை 16 ஆவது அட்டை வரையிலும் தரலாம்.

முதல் இரண்டு அட்டையிலுள்ள நான்கு எழுத்துகளைப் படித்து, செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்து, அட்டையின் பின் பகுதியில் உள்ள எழுத்துகளை இணைத்துப் படிக்கப் பயிற்சி எடுத்தது போலத் தொடர்ந்து ஒவ்வொரு அட்டையிலுள்ள எழுத்தாகப் படித்து செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்து, அட்டையின் பின்பகுதியில் உள்ள சொற்களைப் படித்துப் பழகப் பயிற்சி தரவும். 16ஆவது அட்டை வரை இந்தப் பயிற்சி தொடருகிறது.

17, 18, 19 ஆகிய மூன்று அட்டைகளிலும் அ, ஆ - இ, ஈ - எ, ஏ - ஐ - ஒ, ஓ - என்கிற உயிர் எழுத்துகளானது கற்பிக்கப்படுகின்றன. இவற்றைக் குறில் நெடில் வேறுபாட்டுடன் கற்றுக் கொள்ள ஊக்குவிக்கவும்.

3) 20 ஆவது அட்டையில் தான் குறியீடுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. குறியீடுகள் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் குறியீடுகளை அடையாளம் காட்டவும், அதற்குரிய ஒலிப்புமுறையை உள்வாங்கவும் - எழுத்துகளோடு குறியீடுகள் பொருந்தும் போது எப்படி ஒலிக்கும் என்பதையும் விளக்கினால் போதும். மாணவர்கள் எளிதாக எழுத்துகளைப் புரிந்து கொண்டு ஒலித்துக் காட்டுவார்கள். பிறகு அந்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிடச் செய்வும். முன்புபோலவே, அட்டையின் பின்பகுதியில் உள்ள சொற்களைப் படிக்க ஊக்குவிக்கவும்.

4) உ, ஊ, ஒள - வரிசையில் உள்ள எழுத்துகளின் பயன்பாடு மிகக் குறைவே. உ, ஊ வரிசை எழுத்துகள் - புதிய வடிவம் பெறுகின்றன - இவை மாணவர்கள் மனதில் நிற்பதில்லை. எனவே இவற்றை ஈ வரிசைக்குப் பிறகு அறிமுகம் செய்யாமல் இறுதியில் அறிமுகம் செய்ய வேண்டுகிறோம். அதுவும் பயனாகுகிற எழுத்துகளை மாணவர்கள் ஒலிக்கவும், செய்தித்தாளில் வட்டமிட்டு அடையாளம் காட்டவும் பயிற்சி தந்தால் போதும்.

ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் 15 நிமிடங்களுக்குச் செய்தாளில் வட்டமிடும் செயலை நிகழ்த்திக் கொண்டிருந்தால், எழுத்துகள் நுட்பமாகப் பதிவதோடு, செய்தித்தாளில் எழுத்துகளை இணைத்துப் படித்தல் இயல்பாக உருவாகி, படிக்கத் தொடங்குவார்கள்.

நம்தமிழ் மாணவர்கள் படித்தல் திறனில் மேலெழுந்து இயல்பாகப் படிக்கவும், படித்தவற்றை பொருளுணர்ந்து உள்வாங்கவும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். புரிதலில் மாணவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டாலோ, அல்லது இந்த அணுகுமுறையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தாலோ, அருள்கூர்ந்து தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278