...தமிழ்ச் சங்கம் தோற்றுவித்துத்
தமிழ்த் தமுக்கை அடிக்கின்றார்...
பாவலரேறு
தமிழ் வளர்ச்சித் துறையும் தமிழ் அகரமுத லித்துறையும்
தமிழ்ப்பல்க லைக்க ழகமும்,
தமிழ்ப்பண்பாட் டுத்துறையும், உலகத்தமிழ் ஆராய்ச்சி
நிறுவனமும் - அறுக்க மாட்டான்
இமிழ்க்கின்ற அரிவாள்ஆ யிரம்இடுப்பில் செருகினாற்போல்
இருக்கின்ற நிலையில், உலகத்
தமிழ்ச்சங்கம் தோற்றுவித்துத் தமிழ்த்தமுக்கை அடிக்கின்றார்,
தமிழரசார், வியப்பென் சொல்வோம் !
எதனாலே தமிழ்வளரும் எவராலே தமிழ்மீளும்
என்றுணரும் மதுகை யற்றார்
இதனாலே தமிழ்வளர்ப்போம் என்றுலகத் தமிழ்ச்சங்கம்
எழிலுறவே இமைப்பத் தோற்றி,
அதனாலே பகற்கொள்ளை அடித்திடவும் முனைந்திட்டார்
அறிஞரென அமர்ந்தும் கொண்டார்!
பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுதல்போல் காய்ச்சுவரோ,
பைந்தமிழை? - விளைவென் பார்ப்போம்!
நார்நாராாய்த் தமிழ்கிழிக்கப் போகின்றார், நம்புலவர்!
நந்தமிழும் வாழ்ந்த திங்கே!
ஊர் ஊராய்ப் பாட்டரங்கம் பட்டிமன்றம் கருத்தரங்கம்
எனும்பெயரில் உளறல் கேட்கப்
பேர்பேராய்ச் சுவரொட்டி பேரளவில் அச்சடித்துப்
பெரும்புரட்சி செய்வார் போலும் !
யார்யாரோ அழித்ததமிழ் இன்னவரால் திரண்டுருண்டு
யாப்புறவே வளரும் காணீர் !
உலகமெல்லாம் தமிழ்செழிக்கக் செய்வாரினி, உலகிலுள்ள
ஒண்தமிழர் ஒன்றுகூடி
முலமுலென முன்னேறப் போகின்றார், முதலமைச்சர்
முனைந்துவிட்டார் தமிழ்வ ளர்க்க!
கலகமென ஒன்றில்லை, அழிவில்லை தமிழர்போய்க்
கூலிகளாய்க் கருகும் நாட்டில்
பொலபொலென அடடா, ஓ! தமிழ்ப் பொழுது விடியுமிங்கே !
திறந்திருங்கள் பொக்கை வாயை !
நன்றி : தேமதுரைத் தமிழோசை - மடங்கல் 2039
|
....மீள வருவோம்....
குருவிகள் விளையாடிய படல்களையும்
குழந்தைகள் தவழ்ந்த வாயில்களையும்
பெயர்த்தெடுத்துக் கிளம்புகிறோம்.
அக்கினித் துளிகளை கண்கள் உதிர்க்க
சாம்பலாகிப்போன மனதின் பாரத்தோடு
திரும்பி
திரும்பி
பார்த்துச் செல்கிறோம்.
பேரினவாத துன்புறுத்தலில்
இழப்புகளையே இருப்புகளாக்கி
இருப்பனவற்றை ஒரு வண்டியிலேற்றி
புறப்படுகிறோம்.
உழுத வயல்வெளிகளையும்
புரண்ட மண்வெளிகளையும்
வெறித்துப் பார்த்த
ஏக்கத்தின் பெருமூச்சுகள்
வெப்பமேற்ற வெளியே போகிறோம்.
அழுத விழிகளோடு குழந்தைகள்
கட்டங்களில் விட்டுவந்த
ஒட்டுத்துண்டுகளை
நினைத்துக் கொண்டே
கடக்கிறோம்.
எமது நீர்குடித்து வளர்ந்த
தெருவோர கொன்றை மரங்கள்
கன்றிய மஞ்சள் பூக்களைத் தர
குமைந்த உள்ளத்தோடு வெளியேறுகிறோம்.
எங்கள் மண்
எங்கள் உயிர்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
ஏகுகிறோம் கையில் கிடைத்த
தட்டுமுட்டுச் சாமான்களோடு.
விடுதலை நாளொன்றில்
மீள வருவோம்
அப்போது பூத்திருக்கும்
எங்கள் தாவரங்கள்
கன்றிப்போகாத வாசனை மலர்களை
நன்றி : தலித் முரசு இதழ்
|
...தலைவிதியா ...
கப்பல் ஒன்று
கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது கடல்
ஏய் கப்பலே
என் உதவியில்லாமல்
நீ வாழ முடியுமா ?
எனக் கேட்டது.
கப்பல் அமைதியாக
நண்பா உன் உதவியின்றி
என் வாழ்வு இல்லை
உண்மைதான் - எனப் பதிலளித்தது.
அப்படிச் சொல்
நானில்லாமல் நீயில்லை - என்றது
கடல் திரும்பவும்.
அன்பு உள்ளமே
நீ சொன்னதை சற்று
மாற்றிச் சொல்கிறேன் கேள்.
என்னைப் போன்றவர்கள்
இல்லையானால்
நீ புகழ்ப் பெற்றிட முடியாது.
எனக் கூறியது கப்பல்.
உன்னைப் போன்றவர்களை
சுமக்க வேண்டியது எனது
தலைவிதி என்றது கடல்.
கடலின் கூற்றை கப்பல் மறுத்தது
இல்லை இல்லை - ஒருவரை ஒருவர்
சுமப்பதுதான் இயற்கை - என்றது கப்பல்.
கடல் அமைதி காத்தது.
நண்பா...
உன்னை பூமி சுமக்கின்றது
என்னை நீ சுமக்கின்றாய்
எனக்குள் அடங்கிக் கிடக்கும்
பெரிய பெரிய பெட்டிகளை
நான் சுமக்கின்றேன்.
பெட்டிகள் அவைகளுக்குள்
அடைக்கப் பட்டிருக்கும்
பொருள்களைச் சுமக்கின்றன.
எனவே சுமை என்பது
இயற்கையின் இயங்கியல்
என்று விளக்கியது கப்பல்.
கப்பலின் அரிய கருத்துகளைக் கேட்ட கடல்
பேரலைகளை எழுப்பிப் பெருமகிழ்வுடன் உடலசைத்தது.
|
...பல்கலைக் கழகம்...
கோமதி
வரதட்சணை எனும்
அன்பளிப்பு தந்தால்தான்
அனுமதி என்றதுமே
புரிந்து கொண்டேன்
நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம் - என்று
ஆனால் ஒன்று நிச்சயம்
மனைவி எனும்
பட்டம் வழங்கியே
உள்ளே அனுமதிக்கும்
பல்கலைக்கழகம்
இது ஒன்றுதான்.
நுழைந்தவுடன் ராக்கிங் உண்டு
முதற்கணம் அறிய வேண்டியது
தியாகம் எனும் கலையின் முதற்படி
இனிமேல் நான் திருமதி ---- தான்
தனித்துவம் என்பதை
தாரைவார்க்கும் முதற்கலை.
பூவைக்கும் இடத்தில்கூட
பொன் வைத்து வந்தாலும்
புடம் போடும் சூழலிலும்
புன்னகையும் மங்காமல்
பொறுமை எனும் நகை கழற்றாமல்
இருப்பதுதான் இரண்டாம் கலை.
பூவாக இருந்தால்
ஒரே நாளில் உதிர்ந்து
விடுவேன் என்பதனால்
பொன்னாக இறுகிவிட்டேன்.
இல்லை என்பதனாலேயே
இல்லாள் எனப்படுகிறாள்.
இல்லாள் எனும்
இழி சொல்லை மாற்றிட
இல் ஆளும்
இன்னொரு கலை.
அறிந்து கொண்டேன்.
தாய்மை எனும் முதுநிலைப்பட்டம்
பெற்றுவிட்ட பின்
தனக்காகக் கழிக்கும்
பொழுதுகளையும்
தேவைகளையும்
விட்டுவிடக் கற்று விட்டேன்.
கண் முன்னே உயிர்க்கவிதை
காகிதத்தில் எழுதவோ நேரமில்லை
இப்போது இந்த
புதிய குஞ்சுகளுக்கு
நான் பறக்கக் கற்பிக்க வேண்டும்.
உலகத்தில் மாசுகள்
பிஞ்சு உயிர்கள் மேல்
படியாமல் வளர்க்கின்ற
ஓர் கலையை ஓயாமல்
பயில்கின்றேன்.
நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம் தான்.
நன்றி : புதிய பெண்ணியம் இதழ் 2039
|
அறப்போர்ப்படை அணிவகுப்போம் வாரீர்
முனைவர் தமிழண்ணல்
(மதுரையில் 16-8-2008 நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் நிகழ்த்திய உரை)
இம் மாநாட்டில் கலந்து கொள்வதில் யான் பெருமிதம் கொள்கின்றேன்.
தமிழகத்தில் தலைவர்கள் பலர் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபடுகின்றனர். அவர்களை, அவர்களாற்றும் பணி அளவு கருதிப் போற்றுகின்றேன். அவர்களில் நூற்றுக்கு நூறு யான் நேசிக்கும் தலைவர் மாவீரன் பழ.நெடுமாறன் ஆவார். அன்னாரது அழைப்பை ஏற்று ஓடோடி வந்துள்ளேன்.
முன்பு தினமணி நாளேட்டில் - புலி வருகிறது புலி - என ஒரு கட்டுரை எழுதினேன். நம் உடன்பிறப்புகள் தாக்கப்படுவது கண்டு, அழிக்கப்படுவது கண்டு நாம் வருந்தினால், கண்ணீர் விட்டால், அது குற்றமா? உடனே இவன் புலிகளின் ஆதரவாளன் - எனச் சொல்லி, அலைக்கழிக்க, கண்டிக்க, தண்டிக்க முற்படுகிறார்கள்.
புலி வருகிறது புலி - என்று பொய்யாக அச்சுறுத்திக் கொண்டே இருந்தபோது, உண்மையிலேயே புலி வந்து விட்டதாக ஒரு கதை உண்டு. அதுபோல வெறுமனே வருந்தி, நம் ஆதங்கத்தைக் கொட்டுவதற்கே, தாங்காமல் புலி வந்துவிட்டது - என்று புலம்புகிறார்கள். எவ்வளவு நாள் நாம் பொறுமை காப்பது? உண்மையிலேயே இங்கும் புலி வந்துவிடும் - என்று அக் கட்டுரை முடிவில் எச்சரித்திருந்தேன். இப்போது இங்கும் - புலிகள் - வந்தால் நல்லதோ என்றுதான் தோன்றுகிறது.
நண்பர்களே நாம் மேடைகளில் ஏறி முழங்குகின்றோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் வன்மையானவர்களாக இருக்கின்றோம். தெளிவாகக் கேட்கின்றேன், ஒன்றுக்கு விடை கூறுங்கள். நம்மில் எத்ததை பேர் - தென் செய்தி - வாங்குகின்றோம்? எத்தனை பேர் தமிழ் ஓசை படிக்கின்றோம்? எத்தனை பேர் மக்கள் தொலைக்காட்சி பார்க்கின்றோம்? - சுருங்கச் சொன்னால் - நமக்கு நாமே பகையாக - இருக்கின்றோம்.
இன்று சிற்றிதழ்களால் பெரும் புரட்சி செய்து விடலாம் போல் தோன்றுகின்றது. தந்தை பெரியார் காலத்திலிருந்து - சிற்றிதழ்கள் - எனக் குறிப்பிட்ட மக்கள் படிக்கும் இதழ்களாலேதான் - தமிழியக்கம் - தெடர்ந்துள்ளது. ஒவ்வொரு சிற்றிதழும் 5000 படிகளாவது விற்பனையாக வேண்டும். நம்மை ஆதரிப்பவற்றை நாம் ஆதரிப்பதில்லை. தமிழைக் காக்கும் உண்மையானவர்களைத் தமிழர்கள் போற்றுவதில்லை. மாறாக எதிரானவர்களை - எதிரானவற்றையே ஆதரித்துக் கொண்டு, மேடைகளில் முழங்குவதால் பயனில்லை.
நம் நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழமைப்புகள் உள்ளன. மதுரையிலுள்ள திருவள்ளுவர் கழகம் போல, எத்தனை மன்றங்கள், தமிழமைப்புகள் உள்ளன. அவை எல்லாம் - அறப்படை அணிவகுப்பு - ஒன்று தொடங்க வேண்டும். இத்தகைய மாநாடுகள் மட்டும் போதா. நூறு நூறு பேராக - இளையோரை, மகளிரை, மக்களை அழைத்து - நம் தொன்மைத் தமிழின் சிறப்பு, இன்றுள்ள இன்னல்கள், தடைகள் - என எல்லாவற்றையும் விளக்கி, அவர்களை அறப்போர்ப்படை மறவர்களாக உருவாக்க வேண்டும், சூனியர் சேம்பர் - என்ற இயக்கம் போல - பயிற்சிகள் தர வேண்டும்,
இன்று ஊடகங்கள், தொலைக்காட்சி போல்வன தமிழ்ப் பண்பாட்டை மட்டுமன்றி, தமிழையே அழித்து வருகின்றன. பண்பலைகள் என்று பல வானொலிகள் தொடங்கி, பண்பற்ற முறையில் தமிழைக் கலப்பட மொழியாக்கி, கொச்சை மொழியாக்கி அழித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு கட்டுக்குள் கொண்டுவர முயல வேண்டும். பல ஆயிரம் மக்கள் இவற்றை - திரைப்படப் பாடல்களுக்காகக் கேட்டு - தமிழை இழந்து வருகிறார்கள்.
தமிழை அழிப்பதில் முன்னிற்கும் ஊடகங்களைத் தடை செய்ய வேண்டும். மறியல் செய்ய வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
சில திங்களுக்கு முன்னால் நெடுமாறன் அவர்கள் தென் செய்தியில் - ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழர்களாகிய நாம் அனைத்துத் துறைகளிலும் அரை குறையாகவே இருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.
தமிழைக் கல்வி மொழி ஆக்குவது முழுமை பெறவில்லை. ஆட்சி மொழி ஆக்குவதும் அரைகுறையாகவே உள்ளது. வழிபாட்டு மொழி கூட, விரைந்து செயற்படவில்லை. நீதிமன்ற மொழியாவதும் பேச்சோடு நின்று போனது.
மேலும் இன்று தமிழைச் செம்மொழி ஆகிவிட்டது - என்று பலர் பேசுகிறார்கள் - ஆகிவிட்டது - என்பது மங்கலமான சொல் அன்று - மிகவும் நோய்வாய்ப்பட்டு மோசமாய்க் கிடந்தாரே - என்ன ஆயிற்று எனக் கேட்டால் - ஆகிவிட்டது - என்பார்கள்
அது போல நம் செம்மொழித் திட்டமும் நகராமல் கிடக்கின்றது. இந்நிலையில் கன்னடமும், தெலுங்கும் செம்மொழிகள் என அறிவிக்கப் போகிறார்களாம், இது ஒரு கேலிக்கூத்து. அவர்கள் அடாவடித்தனமாகப் போராடி, சற்றும் பொருந்தாத முறையில், செம்மொழி அறிவிப்புப் பெற்று - கூடுதலான நிதியை நடுவணரசில் வாங்கி, நம்மிலும் கூடுதலாகத் தங்கள் மொழிகளுக்கான சிறப்புக்களை அடையப் போகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஈடாக வேணும் எங்களுக்கும் நிதி ஆதரவும் தாருங்கள் என நாம் இப்படி மாநாடு கூட்டி, உணர்ச்சி பொங்கப் பேசி வருந்தப் போகின்றோம் என்றுதான் தோன்றுகின்றது.
எப்பொழுதுமே தமிழன் பின்னடைவான். பிறகு கூப்பாடு போடுவான். உணர்ச்சியைக் கொட்டிவிட்டுப் போவான். இந்த நிலை மாற நீங்கள் எல்லாம் மாற - நமக்கு நாமே அணையாக - ஒன்று பட்டு நின்று, நம் குறிக்கோளை அடைய வேண்டும் என்பதே என் விருப்பம் - நன்றி - வணக்கம்.
நன்றி : யாதும் ஊரே இதழ்
|
...பிச்சையெடுத்துத் தின்பதைவிட....
சென்ற திங்களில் (ஆகத்து) உலகத் தமிழர் அமைப்பின் சார்பாக ஐயா, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு நானும் என்றன் இணையர் கயல்விழியும் எங்கள் மகள் புகழ்ச்செல்வியும் சென்று, பின் அங்கிருந்து நான் பிறந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்றோம்.
அங்கே பரந்து விரிந்த தமிழனின் கலையை எடுத்துச் சொல்லும் கற்கோயிலைக் கண்டிட நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றேன். கோயில் நுழைவாயிலில் நுழைந்ததுமே - ஐயா ஏதாவது காசு போடுங்களேன் என்ற கூறல்தான் கேட்டது. நான் அந்தக் கூறல் வந்த திசையை நோக்கிப் பார்த்தால் ஒரு அகவை முதிர்ந்த உழைப்பை விதைக்க முடியாத கிழவி இருந்தாள். உடனே என்னால் இயன்றதைத் தந்து விட்டு, கோயில் உள்ளே நுழைந்தேன். பகவானை சேவித்து - என்று வாட்டசாட்டமான ஒருவர் கையில் ஒரு தட்டும், அதனுள் கற்பூரம், திருநீரு, குங்குமம் வைத்துக் கொண்டு என் நெஞ்சின் முன் நீட்டினார். நான் உடனே சிலைகளைப் பார்ப்பதற்கு வந்தேன் என்றதும் - ரொம்ப சந்தோஷம் - என்று முகம் சிவந்து என்னை எரிப்பதுபோல் பார்த்துவிட்டுச் சென்றார். இந்த நிகழ்வு கோயிலில் உள்ளே இருக்கும் ஒவ்வொரு சிலைக்கும் முன்பாக ஒருவர் இருக்கிறார். கையில் தட்டோடு பிச்சையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இது எவ்வளவு இழிவாக உள்ளது பாருங்கள் தமிழர்களே! உண்மையில் இவர்கள் வாழ்ந்திட தேவையான பொருளாதாரம் தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்து அறநிலையத் துறை ஊதியம் கொடுக்கவில்லையா? இல்லை இறைவன் என நீங்கள் நம்பிக் கிடக்கும் அசையா பொம்மைகள் - கை கொடுக்க வில்லையா?
இந்த நிகழ்வுகள் எனக்கு மட்டும் ஏற்பட்டால் தாழ்வு இல்லை. நம் தமிழ்நாட்டுக்கு வந்திடும் பன்னாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்படுகின்றது. இதனால் அவர்கள் நம்மை இழிவாகப் பார்க்க மாட்டார்களா? ஆக இந்தப் பார்ப்பனர்கள் செய்திடும் செயல்களால் தமிழரின் மானம் கப்பல் ஏறுகிறது. இனியும் நாம் பொறுக்காது சிலைகள் இருக்கும் கோவில்களை அருங்காட்சியகமாக மாற்றி அங்கு வேலை செய்யும் பார்ப்பனர்களுக்கு மாற்று வேலை போட்டுக் கொடுக்க வேண்டும் என்பது என்போன்ற தமிழர்களின் அவா. இதனை நிறைவேற்ற ஒவ்வொரு தமிழனும் கோயில்களைக் கைப்பற்றி நம்வசம் கொண்டு வரவேண்டும். இனி எவனாவது தட்டையெடுத்துப் பிச்சை யெடுத்தால் அவர்களை வழக்குமன்றத்தில் நிறுத்தி மாற்று வேலைக்கு அனுப்பிடக் களப்பணி செய்ய வேண்டும்
நன்றி : - ஆசிரியர் - புகழ்ச்செல்வி இதழ் 2008
|
...இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்...
இராமர் பாலத்தைப் பாதுகாப்பதுபோல் இந்திரலோகத்தையும் பாதுகாக்க வேண்டும்
புதுவை இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பொதுநல வழக்கு.
சேதுக்கடல் திட்டத்தை இராமர் பாரத்தை இடிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் செயலலிதாவும், சுப்பிரமணியசாமியும் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்,
இந்தியாவில் வாழுகின்ற 110 கோடி மக்களும் இராமர் பாலத்தைப் பார்த்தது கிடையாது. பார்க்க முடியாத பொருளை இடிக்காமல் பாதுகாக்க வேண்டுமெனக் கூறுகிறார்கள். செயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மணல்மேடுகள், பாறைகளாக இருந்த பகுதி இராமர் பாலமாக மாறியது எப்போது?
17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பாலம் கட்டியதாகப் பா.ச.க. காரர்கள் கதைவிடுகிறார்கள். நாகபுரியைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப் பெரிய ஆய்வு அமைப்பு நீரி - அதிலுள்ள வல்லுநர்கள் எல்லாம் சேர்ந்து, சேதுக்கடற் கால்வாய்த் திட்டத்துக்கான 6 வழித்தடங்களை ஆய்வுசெய்த போது, கடைசியாக இந்த 6 ஆவது வழித்தடம்தான் மிகச் சரியானது என்று தேர்ந்தெடுத்தார்கள். (இப்போது இந்த வழித்தடம் தான் சிக்கலுக்குரியதாக இருக்கிறது) தேசிய சனநாயக முன்னணி அரசின் வாசுபேயி தலைமையிலே நான்கு அமைச்சர்களான அருண்சேட்லி, வி.பி.கோயல்., திருநாவுக்கரசர், சத்ருகன் சின்கா - ஆகியோர் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்கள். உச்சநீதி மன்றமும் இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு இராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழியல் செல்ல உத்தரவிட்டிருக்கிறது. புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர இருக்கிறது. வழக்கின் விபரம் வருமாறு.
வான் உலகத்தில் இந்திரலோகம் இருப்பது இந்தியாவில் வாழுகின்ற 110 கோடி மக்களுக்குத் தெரியும். அங்கு இந்திரன், தேவர்கள், அரசவையின் நடனக் கலைஞரான இரம்பா, திலோத்தமை, ஊர்வசி, மேனகா முதலியோல் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து பறந்து செல்கின்ற வானூர்திகள் ஏவுகணைகளால் இந்திரலோகத்திற்கு ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இவை இந்திரலோகத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விடுமோ என்று அச்சம் எழுந்துள்ளது. இராமர் பாலத்தை இடிக்காமல் எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ - அதேபோல - மிகப் பழமையான இந்திரலோகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. எனவே இந்திரலோகத்தைச் சுற்றி எவ்வித வானூர்தியும்., செயற்கைக் கோள்களும் வரக்கூடாது எனவும் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் ஆணையிடுமாறு உச்சநீதி மன்றத்தை இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் கேட்டுக் கொள்கிறது - எனத்தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
சேதுக்கடல் திட்டத்தைத் திட்டமிட்டபடி நிறைவேற்ற வில்லையெனில் உச்ச நீதிமன்றத்தில் இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வழக்குத் தொடரும் என்று அறிவிக்கின்றது,
நன்றி : - தெளிதமிழ் இதழ் 2008 -
|
...உலகில் முதலிடம்...
அமெரிக்கச் சிறைகளில் 23 இலட்சம் கைதிகள்
அமெரிக்கா தனது நாட்டுச் சிறைகளில் 23 இலட்சம் கைதிகளை அடைத்து உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கச் சிறைகளில் இப்பொழுது 23 இலட்சம் கைதிகள் உள்ளனர். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் லட்சம் பேருக்கு 762 பேர் சிறையில் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை 152. கனடாவில் 108. பிரான்சில் 91 ஆகவும் இருக்கிறது.
அமெரிக்காவில் கைதிகளைச் சிறையில் அடைப்பதிலும் வெள்ளையர், கறுப்பர் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு வெள்ளையருக்கு 6 கறுப்பர்கள் என்ற விகிதத்தில் கைதிகள் உள்ளனர். 30 முதல் 34 வயது வரை உள்ள கறுப்பர்களில் 11 விழுக்காட்டினர் சிறையில்தான் உள்ளனர். போதை பொருள் வழக்கில் சிறை செல்கிறவர்களில் 54 விழுக்காட்டினர் கறுப்பர்களாகவே இருக்கிறார்கள். இந்தத் தகவலை மனித உரிமை கண்காணிப்புக்கான அமெரிக்கத் திட்ட இயக்குநர் டேவிட் பாக்தி தெரிவித்தார்
நன்றி : மனிதஉரிமைக்கங்காணி இதழ் - 2008
|
சீன பொம்மைகள் சிக்குண்ட குழந்தைகள்
ப.உ.லெனின் - புதுச்சேரி
குறைந்த விலையில் சீனவகை பொருள்களும், பொம்மைகளும் எல்லா இடங்களிலும் விற்கப்படுகின்றன. நம் நாட்டு உற்பத்திச் செலவின் கால்வாசி விலையிலேயே கூட அழகிய பேக்கிங் வடிவில் குறிப்பாக குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் சுற்றுலாத் தளங்களில் கண்கொள்ளாக் காட்சியாகக் கடைபொருள் ஆகியிருக்கின்றன. குழந்தைகள் விளையாடி மகிழும் இந்த விளையாட்டுப் பொருள்கள் உயிருக்கே உலைவைக்கும் வினைப் பொருள்களாக மாறியுள்ளன என்பதுதான் பதறவைக்கம் விடயமாக உள்ளது.
இந்தக் குறைந்த விலை குழந்தை பொம்மைகளில் அப்படி என்ன தான் தீமை இருக்கிறது? ஊட்டி, கொடைக்கானல் போன்ற இலட்சக் கணக்கான மக்கள் வந்து போகும் இடங்களில் விற்கப்படும் இப்பொருள்கள் விளையாட்டாய் நோயை விளைவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இவற்றிலுள்ள வேதிப் பொருள்கள். என்னதான் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இல்லை யென்று அபாய அறிவிப்பு இருந்தாலும் இவை பொடி எழுத்துகளில் ஆங்கிலத்தில் அடிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் இந்த அறிவிப்பும் இல்லை. இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதையெல்லாம் யார் கண்டு கொள்கிறார்கள். குழந்தைகளின் குதூகலம் பெற்றோருக்கு மாமகிழ்ச்சி தானே. அதனால் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். பொம்மைகளையும், நோய்களையும்.
இந்த பொம்மைகளின் மேற்பரப்பிலேயே பாலிவினைல் குளோரைடு, எத்திலின் வினைல் குளோரைடு, எத்திலின் வினைல் அசிடேட், அக்ரிலோ நைட்ரிக் பியூடா டைனேசினரின், பாலி கார்பனேட், அம்மோனியம் குளோரைடு, நைட்ரிக் ஆசிட் - போன்ற கடும் வேதியியல் நச்சுப் பொருள்களாக உள்ளன. குழந்தைகள் 5 அல்லது மூன்று வயதிற்குட்பட்டவை இவற்றை வாயில் வைத்துக் கடிக்கவோ, அல்லது சுவைக்கவோ தொடங்கினால் - ஒன்றிரண்டு நாள்களில் வாய்ப்புண், தாடை அன்னம், உதடுகளில் புண்களும், வெடிப்புகளும் வரும். வயிற்றுப் போக்கையும் இவை உண்டு பண்ணக்கூடியவை. வாயில் வரும் பிரச்சனைகள் வயிற்றுக்குள் செல்லும் பொழுது வயிற்றுப் புண் ஏற்படும்,
குழந்தைகளின் வயிறு மந்தமாகி பசி எடுக்காது. வாந்தி எடுக்கும். சாப்பிட மறுக்கும். என்ன காரணம் என்பது தெரியாமல் பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் புரியாது. இதிலும் குறிப்பாக மலச்சிக்கல் வரும்பொழுது குழந்தைகள் அழும். ஆனால் ஆசனவாய் அரிக்கும். இதில் மிகவும் ஆபத்தானது பாலிகார்பனேட் எனப்படும் வேதிப்பொருளின் நச்சு தொடர்ந்து குழந்தைகளுக்குப் பழக்கமானால் இதன் பரிசாக பின்னாளிலோ அல்லது குழந்தைப் பருவத்திலோ - சர்க்கரை வியாதி வரும். சர்க்கரை நோயின் சகல அறிகுறிகளும் தொடங்கி உடலைத் துளைத்தெடுக்கத் தொடங்கும். குளோரைடுகள், அசிடேட்டுகள் சிறுநீரகத்தில் கல்லை உண்டாக்கும். சிறுநீர்க் கடுப்பு எனும் சிறிய பிரச்சனை பெருந்தொல்லையைக் கொடுக்கும். இவை 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பும் உண்டு என்று ஆராய்ச்சிகள் அடித்துச் சொல்கின்றன.
குழந்தைகளுக்கு இது போன்ற பொருள்களை வாங்கிக் கொடுக்கம் பொழுது நோயையும் இலவசமாக வாங்குகின்றோம் என்கின்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்குத் தேவை. அழகிய வண்ணங்களில் உள்ள இந்த எமனை குழந்தைகள் அடம்பிடிக்கின்றன என வாங்கிக் கொடுத்தால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் தான் முதல் எதிரி ஆவோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வரும் முன்னர் காப்பது அறிவுடமை. தரமான மரக்கட்டைகளில் செய்யப்பட்ட மிருதுவான பொம்மைகளை கொடுக்கலாம். தாள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கும் பொம்மைகளில் சிக்கல்கள் சிறிதும் இல்லை.
நன்றி : பயணம் இதழ் 2008
|
...நுகர்வோர் பாதுகாப்பு மையம் தர்ணா...
டாக்டர் தொழில் புனிதமானது. நோயாளிகளுக்கு அவர்கள் செய்யும் சேவை மகத்தானது. டாக்டர்களுக்கென்று சமூகத்தில் தனி மரியாதை இருந்தது. ஆனால் இன்றைய டாக்டர்களில் பலர் மருத்துவ சேவையைப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றிக் கொண்டார்கள்.
பார்வையற்ற கண்ணுக்கு அறுவை சிகிட்சைக்குப் பதில் நல்ல கண்ணை அறுவை சிகிட்சை செய்யும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
சொத்தைப் பல்லைப் பிடுங்கச் சொன்னால் நல்ல பல்லை பிடுங்கிவிடும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
வீட்டிலுள்ள அடுக்களையை ஆபரேசன் தியேட்டராக மாற்றி அறுவை சிகிட்சை செய்த டாக்டருக்குப் பாதுகாப்பு.
பிளஸ் 2 படிக்கும் தனது மகனை வைத்து அறுவை சிகிட்சை செய்யும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
பணத்தாசையால் கிட்னி திருடும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
மரணமடைந்த பிறகும் அவசர சிகிட்சைப் பிரிவில் வைத்து விட்டுப் பணம் பறிக்கும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
சரியான இரத்தப் பரிசோதனை செய்யாமல் எய்ட்ஸ் இருப்பதாகக் கூறி குடும்பத்தைப் பிரிக்கும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
நோயை ஆராயாமல் ஊசி மருந்து போட்டவுடன் நோயாளியை மரணமடையச் செய்யும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
அவசர சிகிட்சைக்கு லஞ்சம் பெறும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
தடைசெய்யப்பட்ட மருந்துகளை வாங்க வைத்து மருந்துக் கம்பெனிகளுக்குக் கொள்ளை லாபம் கிடைக்கச் செய்யும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
நோய்க்குரிய மாத்திரைகளுக்குப் பதில் அதிக விலையுள்ள மற்ற மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட வைத்துப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
குறிப்பிட்ட நேரத்தில் அவசர சிகிட்சை செய்யாமல் நோயாளியைக் காக்க வைத்தும் அங்குமிங்கும் அலைய வைத்தும் நோகடிக்கும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
ஆபரேசனில் நோயாளியின் வயிற்றில் அழுக்குப் பஞ்சும், கத்திரியும் வைத்துத் தைக்கும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
சிகிட்சைக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்யும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
அவசியமே இன்றி எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க வைத்துக் கமிஷன் பெறும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
நோயாளிக்குச் சிகிட்சை செய்யப் போதிய பட்டப்படிப்பு படிக்காத டாக்டருக்குப் பாதுகாப்பு.
நோயாளிகள் தனியாகத் தங்கி சிகிட்சை பெற அறைக்குத் தினசரி வாடகை ரூ500 முதல் ரூ1000 - அதற்கு மேலும் பெறும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
சிகிட்சையில் தவறு செய்யும் டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் அவருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து வாக்குமூலம் அளிக்கும் டாக்டருக்குப் பாதுகாப்பு.
அவசர சிகிட்சைக்கு வரும் நோயாளியின் சிகிட்சைக்காக முன்பணம் செலுத்தச் சொல்லும் மனிதநேயம் இல்லாத டாக்டருக்குப் பாதுகாப்பு.
டாக்டர்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு விரைவில் மருத்துவப் பாதுகாப்புச் சட்டம் இயற்றவேண்டும் - என்று 19-8-2008 அன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டவை
நன்றி: குமரிக்கடல் இதழ் 2008
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|