...என்றைக்கு எழுவாயோ ?...
பாவலரேறு
இன்றைக்கே எழாமல், நீ என்றைக்குத்
தான் எழுவாய் ? எண்ணிப் பார்ப்பாய்
என்றைக்குக் காலமினி ஏற்றபடி
கனிந்துவரும், இந்நாள் போல?
குன்றைத்தூள் செய்கின்ற வல்லுணர்வை
உன்நெஞ்சில் குவிக்கும் வண்ணம்
என்றைக்குப் பாவேந்தன் இனியொருகால்
எழுந்துவந்தே எழுதித் தீர்பாபான் ?
இந்நொடியே எழாமல், நீ எந்நொடியில்
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்?
எந்நொடியும் செந்தமிழை வீழ்த்துதற்கே
எதிர்பார்க்கும் ஆரி யத்தை
அந்நொடியே இடுப்பொடிக்கும் மொழிவல்லார்
தேவநேயப் பாவா ணர்போல்
இந்நிலத்து வேறொருவர் இனிவந்தா
ஆய்ந்துண்மை எடுத்துச் சொல்வார் ?
இன்றைக்கே நீ யெழுதல் இல்லையெனில்
இனியடுத்து வரப்போ கின்ற
என்றைக்கும் தமிழா, நீ எழப்போதல்
இல்லையென எண்ணிக் கொள்வாய்
அன்றைக்குப் போனதடா நின்னுரிமை
நின்பெருமை, அனைத்தும் வாழ்வும்
என்றைக்குச் சிறப்பாயோ ? நந்தமிழ்த்தாய்க்
குலகநிலை ஏற்று வாயோ ?
நன்றி : தேமதுரைத் தமிழோசை - மடங்கல் 2039
|
....தாய்ப்பால் நமக்குத் தமிழ்ப்பாலே....
குமரிச்செழியன் - வில்லிவாக்கம்
உயிரில் கலந்த மொழியாகி
உணர்வில் நிறைந்த பிழிவாகி
உயரங் கண்ட சூரியன்போல்
உலகை வென்ற பெருமொழியை
துயரங் கலந்த மொழிகலந்து
தூக்கி எறிதல் முறையாமோ
நயங்கள் நிறைந்த நந்தமிழை
நஞ்சைக் கலந்து அழிப்பதுவோ
மானங் காக்கும் மறத்தமிழை
மாண்பில் உயர்த்தும் அறமொழியை
ஈனமின்றிக் காப்பதுவே
இயங்கும் உயிரின் முதற்பணியாம்
ஊனப்பட்ட மனிதருக்காய்
உருகும் மனிதத் தெய்வங்காள்
ஞானத் தமிழைச் சிதைப்பதற்கு
நெஞ்சம் கலங்கா திருப்பதுவா
மனிதக் கலப்பால் சாதிபோகும்
மொழியில் செய்யும் கலப்பதனால்
புனித மொழியே அழியுமன்றோ
பணத்துக் காசு எதுசெய்யும்
பிணமாய்ப் போகும் பேதையினம்
பேயாய் அலையும் மாந்தயினம்
மனங்கள் திருந்தும் நாளன்றோ
மண்ணில் தமிழும் வளரும் நாள்,
தாய்ப்பால் குடித்தால் மனம்வளரும்
தமிழ்ப்பால் குடித்தால் மாண்புயரும்
காய்ப்பால் செடிக்குப் புகழுயரும்
காலம் கனிந்தால் வான்பொழியும்
தாய்மொழியாலே தரமுயரும்
தாங்கும் அறிவுத் திறமுயரும்
தூய்மை யான தமிழொன்றே
தொடரும் வாழ்வின் விழியாகும்,
நன்றி : புகழ்ச்செல்வி இதழ் - மடங்கல் 2039
|
...தாராபாரதி கவிதைகள்...
கவரிமான்
கவரிமான் சாதியாகக்
கவிஞர்கள் வாழ்ந்த தால்தான்
கவரிகள் வீசி அந்நாள்
காவலர் போற்றி நின்றார்
கொற்றவன் தவற்றைக் கோவூர்
கிழார் சுட்டிக் காட்டவில்லை
பெற்றதோர் பரிசி லுக்கு
பெருஞ்சித்திரன் தாழ்ந்தானா?
பின்வரும் விளைவுக் கஞ்சிப்
பிசிராந்தை வளைய வில்லை
பொன்பொருள் பதவிக்காகப்
பொய்கையார் பொய்க்க வில்லை
பரிசிலைப் பெறும் பொருட்டு
பாயிரம் யாத்த தில்லை
அரசினை வாழ்த்திப் பாடி
அணிந்துரை எழுத வில்லை
பகைவென்ற வீர வாளை
பனையோலை வென்ற காலம்
மகுடத்திற் காக யாரும்
மகுடிகள் ஊத வில்லை
உவமானம் கவிதைக் கென்றால்
உயிர்மானம் கவிஞர்க் கன்றோ
கவிதைக்கும் கற்பு வேண்டும்
காசுக்கு விற்க வேண்டாம்
ஒருவேளைப் பொருளுக் காக
உதடுகளை விற்கும் கவிஞன்
ஒருவேளை பலவீ னங்கள்
ஒரு யுக அவமானங்கள்
என்றைக்கும் மாறிடாமல்
எழுந்தநாள் கொள்கையோடு
இன்றைக்கும் இருக்கின் றார்கள்
இலட்சியக் கவிஞர் சிலபேர்,
தமிழ்ச் சிறகால் வானைத்தை அளக்கலாம் வா
நாடெல்லாம் வள்ளுவனை நகல் எடுக்கும்
நகரெல்லாம் கம்பனது புகழ் விரிக்கும்
ஏடெல்லாம் இளங்கோவின் நகல் பதிக்கும்
எழுத்தெல்லாம் பாரதியைப் படம் பிடிக்கும்
காடெல்லாம் பாவேந்தன் களம் அமைக்கும்
கடலெல்லாம் கலம் மிதக்கும், ஆனால் தமிழன்
வீடெல்லாம் மட்டும்மான் தமிழ் விளக்கின்
வெளிச்சத்தை இருட்டடிப்புச் செய்திருக்கும்
தாய்மொழியை மட்டும் நீ விரும்பு மற்ற
தனிமொழிகள் பாராதே திரும்பு என்று
வாய்மொழிக்கு வரம்புகட்ட மாட்டேன் வயிற்று
வரவுக்குப் பிறமொழிதான் வழியென் றெண்ணி
தாய்மொழியை நோய்மொழியாய்க் கருதும் உந்தன்
தவறான போக்கைத்தான் கண்டிக் கின்றேன்
தாய்மொழியுன் கட்டைவிரல் அதனைச் சுற்றித்
தனிமொழிகள் பிறவிரல்கள் உணர்ந்துகொள் நீ
வாய்மொழிகள் வரிசையிலே முதலில் உந்தன்
வாய்க்காலில் தாய்ப்பாலே வரட்டும் தம்பி
தாய்மொழியில் பாய்மரத்தை விரிக்கலாம் வா
தமிழ்ச் சிறகால் வானத்தை அளக்கலாம் வா
நன்றி : தென்றல் இதழ் - வடஅமெரிக்கா - ஆகத்து 2008
|
...பாவலர் பரிசுத்திட்டம் 44 ...
உரூபா 500 பரிசு பெறும் பாடல்
தாயினும் மேலாம் தாய்மொழி மறந்தே
தருக்குவர் வேற்றவர் மொழியில்
வாயினில் கூட வண்டமிழ் மொழியை
மறந்துமே உரைத்திடா இழிஞர்
தூயநன் மாந்தர் தொடர்புகழ் மறவர்
தொல்லையில் ஈழமே மடிந்தும்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்,
து.ஆதிநாராயணமூர்த்தி - பரதராமி
வெளியீட்டுக்குத் தேர்வுபெற்ற பாடல்கள் (தரவரிசைப்படி)
தேய்ந்திடும் நிலையி லிருந்திடும் மொழிதான்
சீர்பெறும் வகையினைத் தேடார்
மாய்ந்திடு மினத்தை மீட்டிட நாளும்
மறுவழி கண்டிட விழையார்
ஞாயிறு திங்க ளெத்திசை யெழினும்
நமக்கென வென்று வாழ்ந்திடுவார்
நாயினும் கீழ்மை மனத்தவர் நாட்டில்
நடந்திடும் காலிரு விலங்கே,
க.சொக்கலிங்கம் - புதுச்சேரி
ஆயிரம் வழியில் அழிபொருள் தேடி
அருங்கலை உணர்வினை இழந்து
தாயினும் சிறந்த தமிழினைப் போற்றாத்
தன்மையால் நிலையிலே தாழ்ந்து
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
வாயிலே போட்டு வயிற்றினை நிரப்பி
வருவதால் பெறும்பயன் என்ன
வேங்கடேச பாரதி
தாயினும் உயர்வாய்த் தமிழினை எண்ணார்
தமிங்கிலம் போற்றிவாழ்ந் திடுவார்
நாயினைப் போல்வர் நலிமொழி சுவைக்க
நற்றமிழ் கெடுத்தலைந் திடுவார்
ஆயிரங் கொடுத்தால் அருந்தமிழ் மொழியை
அயல்மொழி சேர்த்தழித் திடுவார்
ஞாயிறு திங்க ளெத்திசை யெழினு
நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்,
பாவலர் செ.பழனி - புதுச்சேரி
ஆயிரமாக அடுக்கிய செல்வர்
அடுத்தவர்க் குதவிட நினையார்
வாயிலில் நின்று கேவிடும் மழலை
வன்பசிக் குரலதும் கேளார்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
நாயினும் கேடர் திருமகள் ஏனோ
நண்ணினாள் இவரைமண் மிசையே
கி. சிவக்குமார் - விருத்தாசலம்
தாயினுங் காவாத் தறிதலை யாகத்
தமிழ்நிய அரசினர் உள்ளார்
தீயினுந் தீய தீமைகள் செய்தும்
திரட்டுகின் றார்பெருஞ் செல்வம்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென வென்று வாழ்ந் திடுவார்
நாயினுங் கீழாய் நக்கியே பிழைக்கும்
நரியென வஞ்சகர் இவரே.
பொறிஞன் அகன் - கீரனூர்
சேயினைக் குப்பைத் தொட்டியி லெறிந்து
திரிபவர் இங்குவாழ் கின்றார்
ஆயிரம் பொன்னை இல்லடுக் ககத்தை
அடையினும் தொண்டினை அறியார்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென வென்று வாழ்ந் திடுவார்
நாயினுங் கீழாய் வாழ்ந்திடும் இவரால்
நலமுறா திந்தநா னிலமே
புலவர் வீ.விசுவநாதன் - வெங்காளூர்
முன்னரே பரிசு பெற்றோரின் பாடல்கள்
ஓய்வுற்றார் என்றும் தந்நலம் காத்தல்
ஒன்றுதான் தொழிலெனக் கொள்வார்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
தேய்வுறும் மாந்தர் துன்புற ஏதும்
செய்திடார் அன்பிலாக் கொடிய
பேயென வாழ்வார் பெரும்பொருள் சேர்ப்பார்
பிறந்ததன் பயனறி யாரே
புலவர் சி.பெருந்தேவன் - தவளக்குப்பம்
காயெனக் கருதார் கனியெனச் சுவையார்
கையினில் கிடைத்தன வெல்லாம்
வாயினால் விழுங்கி வயிற்றினை நிரப்பி
வாழ்ந்திடும் வாழ்வினை உவப்பார்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
நோயினில் வீழ்வார் இவர்விழித் தெழவே
நுவல்வதோர் அருஞ்செயல் காணீர்
இள. தமிழொளி - பொறையாறு
காயினைக் கொண்டே கனிதனை விடுத்துக்
களிப்புடன் உண்பதைப் போலே
தாயினைத் தமிழைத் தவிர்த்துமே மாற்றான்
தாய்மொழி விரும்புகின் றனரே
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
நாயினும் கீழாய் வாழ்பவர் மண்ணில்
நலங்களைப் பெறுவது மரிதே
பாவலர் மா.வரதராசன் - சென்னை
ஆயரம் முறைகள் பேரறி வாளர்
அருந்தமிழ்ச் சிறப்பினை விளக்கித்
தாயினும் சாலப் பரிந்துரைத் திடினும்
தமிழரோ தகவுரை கேளார்
நாயினும் கீழாய் நலிந்தயல் மொழியை
நச்சிடும் மயக்கினில் சிக்கி
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
புலவர் மா.சு,மணி - திருக்கழுக்குன்றம்
நன்றி : தெளிதமிழ் இதழ் - மடங்கல் இதழ் 2039
|
...தமிழக மீனவர் தாய்வீடு கச்சத்தீவு...
(இலங்கையின் வரலாற்று ஆவணங்களில் இல்லை கச்சத்தீவு)
கி.பி. 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும். அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன, இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
இந்தத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு என்பது. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது. இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3,75 சதுர மைல். அவ்வளவுதான்.
இந்தத் தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னருக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன. 1947 இல் நாடு விடுதலை அடைந்ததும், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகளின் சோலை வனமாகவும் இருந்தது. இராமநாதபுரம் மக்கள் உமிரி என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் சாயவேர் போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.
இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைகளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழ மண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர். இங்கே, முத்துக் குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெறவேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி 1822 இல் ஓர் ஒப்பந்தம் மூலம் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சத்தீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றி குறிப்பிடும்போது, கச்சத்தீவு குறிக்கப்படவிலலை. இராமநாதபுரம் அரசரைப் பற்றிய குறிப்பில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்று குறிப்பிட்டிருக்கிறது. இதனை முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.ஈ.பியரிசு உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களில் இத்தீவைப் பற்றிய விவரம் எதுவுமில்லை. டச்சுக்காரர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களின் ஆட்சி எல்லைக்குள் கச்சத்தீவு இடம் பெற்றிருக்க வில்லை. அவர்கள் ஆட்சி ஆவணங்களிலோ, குறிப்பேடுகளிலோ கச்சத்தீவு குறிப்பிடப்படவில்லை.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை வந்த வரலாற்று ஆய்வாளர் பர்னோஃப் அந்த நாட்டின் தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம், ராஜாவளி, ராஜரத்னா சரிதை இவற்றின் துணையோடு அவர் உருவாக்கிய தேசப்படத்தில் டெல்த் தீவு வரைதான் இலங்கையாகக் காட்டப்பட்டுள்ளது. டெல்த்தீவுக்கு அப்பாலுள்ள கச்சத்தீவு காட்ப்படவில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும். அய்ரோப்பியர்களும் வணிகம் செய்ய இலங்கைக்க வந்தபடி இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த தாலமி, பிளினி, ஆகியோர் இலங்கையின் கடற்பகுதி மற்றும் உட்பகுதிகளைத் தேசப்படங்களாக வரைந்தனர்.. அவர்கள் வரைந்த இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவு குறிப்பிடப்படவில்லை.
நன்றி : மீட்சி இதழ் - குறிஞ்சிக் கபிலன் - வத்திராயிருப்பு
|
...உலகத் தமிழர் பேரமைப்பின் ...ஆறாம் ஆண்டு நிறைவு விழாவில்
உலகப் பெருந்தமிழர் விருது பெறும் எழுத்தாளர்கள்
திரு. எஸ். பொன்னுதுரை
1932 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாண நல்லூரில் பிறந்த இவர் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற இவர் 1981 ஆம் ஆண்டில் நைஜீரியா நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
1946 ஆம் ஆண்டில் இவர் எழுதிய முதலாவது கவிதை வெளியானது. அதிலிருந்து இன்றுவரை சிறுகதைகள். நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் முக்கியமான இதழ்களில் இவரது எழுத்துகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச தமிழ் மாத இதழான யுகமாயினி என்பதன் நிறுவனர். அர்ச்சுனா பதிப்பகத்தின் தலைமையாசிரியர் என்பதோடு மித்ரா கலைப்படைப்புகள், என்னும் நிறுவனத்தையும் தோற்றுவித்து அதன் இயக்குநராகவும் திகழ்ந்து வருகிறார்.
திரு. வே.தங்கவேலு (நக்கீரன்)
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்தவர். இலங்கையில் உயர் கல்வியை முடித்த இவர் 1951 ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் பணியில் சேர்ந்தார். 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு தமிழ் அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களுக்காகப் போராட அமைக்கப்பட்ட சங்கத்தில் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். 1966ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர சபையின் பதில் ஆணையாளராகக் கடமையாற்றினார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் அரசியல் தலைவர்களோடும் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தார். இலங்கையில் வெளிவந்த சுதந்திரன் கிழமையேட்டில் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்போருக்கு ஆதரவான கட்டுரைகளை எழுதினார்.
1980 ஆம் ஆண்டில் நைஜீரியா நாட்டின் அரசாங்கத்தில் முதன்மைக் கணக்காய்வாளராகப் பணியாற்றினார். 1983 இல் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார்
கனடா உலகத் தமிழர் இயக்கத்தின் துணைத் தலைவராகவும், கனடிய தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தைத் தோற்றுவித்தார். அதற்கு இவரே தலைவராவார். தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் வெளியாகும் முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி போன்ற இதழ்களில் அரசியல், வரலாறு, இலக்கியம், பகுத்தறிவு மற்றும் திறனாய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.
திரு.தி.க.சிவசங்கரன்
1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்த இவர் நெல்லையில் இந்துக்கல்லூரியில் இடைநிலை வகுப்பு வரை படித்தார். இவர் மாணவராக இருக்கும்போதே எழுதிய சிறுகதை பிரசண்ட விகடன் இதழில் வெளியாயிற்று. அதிலிருந்து தொடர்ந்து கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு ஆகிய துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி உள்ளார்.
1965 முதல் 1979 வரை தாமரை மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், 1990 வரை சோவியத் செய்தித் துறையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
விருப்பு வெறுப்பற்ற முறையில் இவர் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தன. அத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் இன்றுவரை திகழ்ந்து வருகிறார்.
இவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டும் வகையில் இந்திய அரசு 2000 ஆம் ஆண்டில் இவருக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கியது. 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசின் இலக்கிய விருது வழங்கப்பட்டது. பின்னர் தமிழ்ச் சான்றோர் பேரவை விருது. லில்லி தேவசிகாமணி விருது, சிந்து பதிப்பக அறக்கட்டளை விருது முதலியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன,
திரு. ஜே.வி.கண்ணன்
1928 ஆம் ஆண்டு வந்தவாசிக்கு அருகே உள்ள காரணி என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார்.
1949 ஆம் ஆண்டு தமிழ்ப் பத்திரிகை உலகத்தின் தலைமகன் திரு.டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய தினசரி நாளிதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்து இதழியல் துறையில் பயிற்சி பெற்றார்.
பிறகு பெரியார் அவர்களின் விடுதலை இதழில் 1953 ஆம் ஆண்டுவரை துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது ஆசிரியராக இருந்த குத்தூசி குருசாமி அவர்களோடும் பெரியார் அவர்களோடும் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பினை இளமையிலேயே இவர் பெற்றார் என்பத குறிப்பிடத் தக்கதாகும்
1953 ஆம் ஆண்டில் மதுரையில் கருமுத்து தியாகராசனார் நடத்திய தமிழ்நாடு நாளிதழில் துணையாசிரியராகச் சேர்ந்து 1960 ஆம் ஆண்டில் அதன் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக உயர்ந்தார். தனித்தமிழில் செய்திகளை வெளியிட முடியும் என்பதைத் தமிழ்நாடு நாளிதழ் நிலைநாட்டியது. அந்த இதழின் வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
1963 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் நாளிதழில் ஆசிரியராகப் பெறுப்பேற்றார். அதில் அரசியல் அரங்கம் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்றன.
1964 லிருந்து 1994 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் தமிழ் முரசு இதழில் வாரந்தோறும் கட்டுரைகள் எழுதிவந்தார்.
1995 ஆம் ஆண்டிலிருந்து - தினமணி நாளிதழில் தலையங்க ஆசிரியராக பணியாற்றி, இவர் எழுதிய தலையங்கங்கள் அனைவரையும் கவர்ந்தன.
2006 ஆம் ஆண்டு முதல் தமிழோசை நாளிதழில் தலையங்கம் எழுதும் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றி வருகிறார். பத்திரிகைத் துறையில் 60 ஆண்டுகால அனுபவம் பெற்ற மிக மூத்த பத்திரிகையாளர் இவரே ஆவார்.
திரு. கி. இராஜநாராயணன்
நெல்லை மாவட்டத்தில் இடைச்சேவல் என்னும் சிற்றூரில் 1923 ஆம் ஆண்டு பிறந்தவர். கி.இராஜநாராயணன். 8 ஆம் வகுப்புவரை மட்டுமே இவர் படித்தார் எனினும் மிதமிஞ்சிய இலக்கியத் தாகம் கொண்டிருந்தார்.
லியோடால்ஸ்டாய், ஆன்டன்செக்கோவ், விக்டர் ஹியூகோ, தாமஸ் ஹார்டி போன்ற மேநாட்டு எழுத்தாளர்கள் எழுதியவற்றின் தமிழ் மொழியாக்கங்களை ஆர்வமாகப் படித்தார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை முழுமையாகப் படித்தறிந்தார்.
தமிழ் நாட்டுப்புற இலக்கியத்திற்கு அவர் ஒரு முன்னோடுயாவார். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட நாட்டுப்புறக் கதைகளைத் தொகுப்பதிலும் ஆராய்வதிலும் அவருடைய பங்களிப்பு முக்கியமானதாகும்.
அவர் பிறந்த மண்ணை கரிசல் காடு என அழைத்தார். இந்த கரிசல் காட்டில்தான் ஆண்டாள், பெரியாழ்வார் போன்ற வைணவ ஆழ்வார்களும், தேசியக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியும், சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரும் பிறந்தார். விடுதலை வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, பெருந்தலைவர் காமராசர் போன்றவர்களும் கரிசல் மண்ணில் பிறந்தவர்களே.
புகழ்பெற்ற எழுத்தாளரான கு.அழகிரிசாமி இவரது பள்ளிப் பருவத் தோழராவார். தமிழக நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி 11 தொகுதிகளாக இவர் வெளியிட்டுள்ளார். இத்துறையில் இவரே முன்னோடியாவார்.
ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவருடைய எழுத்துக்களின் செல்வாக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கடல் கடந்த நாடுகளிலுமு பரவியது.
இவரின் புகழ்பெற்ற நெடுங்கதையான - கோபல்லபுரத்து மக்கள் - என்பது சாகித்திய அகாதமி பரிசினை 1991 ஆம் ஆண்டு பெற்றது. புதுவைப் பல்கலைக் கழகத்தில் வருகை தரும் பேராசிரியராகவும், நாட்டுப்புறக் கதைகள் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். அவருடைய கதைகள் தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நன்றி : தென் ஆசியச் செய்தி இதழ் 2008
|
...சிறு வணிகர் பிழைப்பில் மண்...
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வேதனை கலந்த சிரிப்பே வருகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக நமது இந்தியாவில் சிற்றரசர்களும், பேரரசர்களும் இவ்வாறுதான் இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனியையும், பிரெஞ்சுக் கம்பெனியையும் - வர்த்தகம் செய்ய அனுமதித்தனர். அதன் காரணமாகவே நம் நாட்டின் சுதந்திரம் பறிபோனது. நமது மேன்மை மிக்க கைத்தொழில்களும், நெசவுத் தொழிலும் அழிந்தொழிந்தன. அதிலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறோம்.
இப்போதே சென்னை போன்ற வெரிய நகரங்களில் பெரிய அளவில் காய்கறிகள் மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் சிறப்பங்காடிகள் பெரிய நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதனால் சிறிய, நடுத்தர முதலீட்டில் கடைகள் வைத்து நடத்தும் பல சில்லறை வியாபாரிகளின் வணிகம் படுத்து விட்டது. படித்தவர்களும், கொஞ்சம் கொஞ்சமாகச் சொந்தத் தொழில் நடத்த முன்வந்து, சிறு வியாபாரம் செய்ய இப்போதுதான் முன்வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை - இங்கே சில்லறை வியாபாரத்திற்குக் கடைவிரிக்க அனுமதிப்பது நமது மக்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் காரியம்தான். இப்போதே அன்னியப் பொருள்கள் மீதான நம் மக்களின் மோகம் காரணமாக நம்நாட்டு உற்பத்திப் பொருள்கள் மார்க்கெட்டில் விலை போகாமல் தேங்கி, அதன் காரணமாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலைகளை இழப்பது, அவற்றை விற்பனை செய்பவர்களின் பிழைப்புக் கெடுவது என்ற நிலைமை உள்ளது.
நமது மக்கள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை கொடுக்க முடியாது. அவர்களே சொந்தத் தொழில், சிறுவர்த்தகம் என்று ஏதாவது செய்து தங்கள் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறிருக்க, நமது நாட்டின் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் பிழைப்பில் மண் அள்ளிப்போடும் காரியம்தான் சில்லறை வர்த்தகத்தில் அன்னியர்களையும் அன்னிய முதலீட்டையும் அனுமதிக்க முனைவது.
நன்றி : சேரத் தமிழ் இதழ் - கோட்டயம் - 2008
(கட்டுரைகள் எழுதி - ஆர்ப்பாட்டங்கள் செய்து என்ன பயன்? உள்நுழைவதும் - வணிகம் செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது - ஆட்சியாளர்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது ? தன்நலமும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு ஆட்சியாளர்களின் செயலால் - பாதிக்கப்படுவது நம் மக்கள் தான் - கீழறுப்பு வேலைகள் செய்து ஈட்டிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் கூடிக்கொண்டே இருக்கிறது - மீண்டும் ஒரு சுதேசி இயக்கத்துடனான சுதந்திரம் வேண்டும் எனத் தொடங்கவேண்டும்தானா? நம் மக்களையே வழிநடத்தத் தெரியவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அருகிருக்கும் நாடுகளையும் மேலெழ விடாமல், வாழவிடாமல் செய்வதில் முனைப்புக் காட்டுகிற செயலை என்ன என்று சொல்வது? )
|
...எசமானன் ...
தலையில் சுமந்த கல்லுடன்
தந்தை தள்ளாடிச் சென்றார்
மீசையை முறுக்கிய எசமானன்
ஏய் கிழவா
சுகமான லாவணி ஒன்றைப் பாடு - என
வழக்கம் போல் ஆணையிட்டார்
ஊசிகளால் குத்திக் குத்திக்
பொத்தலாகிப் போயிருந்த குரல்வளையில்
காற்றும் வலியும் போட்டியிட
தந்தை பாடினார்
வானம் நிலவு சூரியன்
விரிந்த மலர்கள்
பரந்த கடல் அலைகள்
காதலைப் பருகி
நெஞ்சைக் கிள்ளிய அழகிய மங்கையென
வலம் வந்தன பாடல் வரிகள் .
தந்தையைச் சூழ்ந்தன புகழுரைகள்
வியர்வையால் நனைந்த கரங்கள்
பெருமையோடு அதிர்ந்தன கரவொலியில்
மெய்ம் மறந்து போன தந்தையின் கண்களில்
நன்றி பெருக்கெடுத்தோடியது.
முதுமையின் தள்ளாத வயது அவருக்கு
வீட்டை அடைந்ததும்
தன் நினைவலைகளில் நீந்தியபடியே
வழக்கமாகத் தான் பாடுகின்ற
உணவுக்கான பாடலைத் தேடினார்
அப்பாடலை அவரால் மீட்டெடுக்கவும் முடியவில்லை
இராகத்தோடு இசைக்கவும் முடியவில்லை
இறுதிவரையில்
நன்றி : கவிதாசரண் இதழ் - செப் 2008
|
...வழக்கொழிந்து விட்டது வடக்கிருப்பது...
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
முதுகுவலியென்றால்
வெந்நீர் விளாவி ஊற்றிக் கொள்வோம்
அய்யா கொண்டு வந்து
சாமி வீட்டு அலமாரியில்
மூலையொன்றில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்
கோடாலித் தைலம் போட்டுத்
தேய்க்கச் சொல்லலாம்.
வாழ்க வளமுடன் சாமியாரின்
எளிய ஆசனங்கள் சில செய்யலாம்...
ஆர் எஸ் பதி இலைகள் பரப்பி
அணலில் காய்ந்த செங்கல் எடுத்து
வைத்து முடிச்சாக்கி
ஒத்தடம் கொடுக்கலாம்...
சலவைப் பெட்டியை வைத்து மட்டும்
சுட்டுக் கொள்ளக் கூடாது.
முதுகில் புண்படலாகாது
மல்லாக்கப் படுக்கவியலாது
சாய்ந்தமர முடியாது..
பனியன் போட்டுக் கொள்ள வாய்க்காது
மருந்துபோட ஒருவர் வேண்டும்
எல்லாக் கண்ணாடிகளும் முதுகு காட்டாது
ஆற நாளாகும்
ஆறிற்றாவென அறிவது சிரமம்
என்ன முதுகிலே நகக்கீரலா
என்பார்கள்
எங்கு வேண்டுமானாலும்
காயம்படலாம்
முதுகில் மட்டும் படக்கூடாது
முக்கியமாகத் தீக்காயம்...
வடக்கிருப்பது
வழக்கொழிந்துவிட்டபடியால்
தைரியமாக இருக்கிறேன்
ரத்தம் சொட்டும் காயங்களும்
பாதியாறிய புண்களும்
வடுக்களும்
வண்ணக் கோடுகளும்
கட்டங்களும் கொண்ட
சட்டைகளுக்குள் மறைந்து
நன்றி : சுந்தர சுகன் இதழ் செப்டம்பர் 2008
|
...சாவி தொலைக்கப்பட்ட பொம்மை...
- மா.காளிதாஸ் -
நீங்கள் கையிலெடுத்த பொம்மைக்கு
உங்களுக்குப் பிடிக்காத பெயர்
சூட்டினீர்கள்
கால்களை நகர்த்தினால்
உங்களை நோக்கி வருவதாய்
முன்மொழிகிறீர்கள்
கைகளை மெல்ல உயர்த்தும்போது
யாசிக்கப்போவதாய்
பரிகசிக்கிறீர்கள்
கண்களைத் தாழ்த்தினால்
வெட்கப்படுவதாகவும்
பணிவு காட்டுவதாகவும்
அர்த்தப்படுத்துகிறீர்கள்
உடைமாற்றுவதைப்போல
அதற்கு நீசபாஷை
கற்றுக் கொடுக்கிறீர்கள்
உறக்க நிலையிலிருக்கும்போது
பொம்மையுடன்
வெறித்தனமாய் விளையாடுகிறீர்கள்
பாவத்தோடும் பரிதாபத்தோடும்
உறங்கும் உங்களை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது
சற்றுமுன் சாவி தொலைக்கப்பட்ட
விலைமதிப்பற்ற
உங்கள் பொம்மை
நன்றி: வடக்கு வாசல் இதழ் - ஆகத்து 2008
|
...இந்தியப் பண்பாட்டின் தொடக்கமே ...தமிழர் பண்பாடு
- பாவலர் ஆரணி அறவாழி (க.ப.சின்னராசு) -
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாது உருகெழு குமரியின் தெற்கும்
குணாது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்...
இமயமே வட எல்லையாகவும், குமரிக்கோடே தென் எல்லையாகவும் கீழ்பாற்கடல் கிழக்கு எல்லையாகவும், மேற்கடல் மேற்கு எல்லாயகவும் அமைந்தது இவன் நாடு.
இவ்வெல்லையுள அமைந்த நாட்டின் பேரரசன் இவன். புறநானூறு 6 ஆம் பாடல்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியன் பற்றி காரிக்கிழார் பாடியது. இடைச் சங்க காலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் முன்னாள் குமரிக்கோடும் பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுமுன் தமிழ் நிலத்தை ஆண்டவன் இவ்வழுதி. வழுதியர் யாகம் செய்வது இயல்பன்று, எனவே பல யாகம் செய்த இவன் அதன் காரணமாக - பல்யாகசாலை - என வழங்கப்படுகிறது. ஓம்பும் அரச நியதியலால் வடதேயத்தார் (ஆரியர்கள்) உவப்ப யாகமும் செய்தனர் எனலாம்.
தொல்லூழிக்காலம் முதற்கொண்டே சேரர். சோழர். பாண்டியர் என்ற மூவேந்தர் குலத்தவர் ஆண்டு வந்தனர். அதியர், ஆவியர், மலையர், வேளிர், போலும் வேறு குலத்தைச் சேர்ந்த சிற்றரசர் சிலரும் தமிழகத்தின் சிற்சில இடங்களில் சிற்சில காலங்களில் ஆண்டு வந்தனர்.
என்றாலும் அவர்கள் அனைவரும் முற்கூறிய அம்மூவேந்தர்க்கு ஒருவகையில் அடங்கியே ஆண்டுவந்தனர். தமிழகத்தின் மூவேந்தர் எனப்பட்டவர் அம்மூவர் மட்டுமே ஆவர்.
ஆசிரியர் தொல்காப்பியனார் இத்தமிழகத்தைக் குறிப்பிடுங்கால் - வாண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு - என்று மூவேந்தரைக் குறிப்பிடுங்கால்
கோந்தை வேம்பே பூர்வரிஉம்
மாபெருந்தாணர் - என்றும் குறிப்பிடுதலால் பொருந்தும்.
கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் முதல் கடற்கோளினால் தென்பாலிகிழக்கு நாட்டின் பெரும்பகுதியும் தன்வாயக் கொண்டது. எஞ்சிய நிலப்பகுதிகளிலும் கி.மு.2500 ல் மீண்டும் கடல் பொங்கிப் பெருவள நாட்டின் பெரும்பகுதியையும் கொண்டது. பின்னர் கி.மு. 700 ஆம் ஆண்டில் மூன்றாம் முறையும் கடல் பெருகித் தமிழ் நிலத்தினைத் தன்வாய்க் கொண்டது.
மூன்று முறை ஏற்பட்ட கடற்கோளினால், தொன்மை மிக்க பாண்டிய மன்னர்களால் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருந்த இரண்டு தமிழ்ச் சங்கங்களும், யாத்து வைத்த பயன்மிக்க ஏடுகளும் அழிந்தன. போக எஞ்சியதாகக் கிடைத்தது தொல்காப்பியம் மட்டுமே.
மூன்றாவதான கடைச்சங்க காலத்தின் தலைநகரம் இன்றைய நான்மாடக் கூடல் நகரம் மதுரையே. இடைச் சங்க காலத்தின் இணையற்ற இலக்கிய இலக்கணப் புதையலாம் தொல்காப்பியத்தின் காலம் இன்றைக்கு 2700 ஆண்டுகட்கு முற்பட்டது என்றால் நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. அப்படிப்பட்ட தொன்மை இலக்கியமான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் பல்வேறு இடங்களில் என்மனார் புலவர் - என்மனார் நூலார் - என்று சொல்கிறார் என்றால் அவருக்கும் முன்னால் எழுதிய நூல்களையும் புலவர்களையும் நினைவுகூர்வதைப் பார்க்கும்போது தமிழர்களின் பொற்கால வரலாறு சுமார் 10,000 - 5000 ஆண்டுகளுக்கும் முந்தையதாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பல்வேறு இலக்கியங்கள் தோன்றிய பின்னால் தான் இலக்கணங்கள் தோன்றி இலக்கியங்களை வரைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்பது மொழியியல் அறிஞர்களின் முடிவாகும். அவ்வகையில் தொல்காப்பிய காலம் 3000 ஆண்டுகள் எனில் அதற்கு முந்தைய இலக்கியங்களும், தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியம் போன்ற இலக்கண நூல்களையும் எண்ணிடில் வியப்பு பன்மடங்காகப் பெருகுகிறது,
நன்றி : ஊற்று திங்களிதழ் மடங்கல்
|
...உயிரைக் கொல்லும் மருந்துகள்...
தடுப்பூசி தரப்பட்டதால் குழந்தைகள் இறந்த நிகழ்வைப் பற்றி பிரபல சமூக ஆர்வலரும், மக்கள் சேவை மருத்துவருமான டாக்டர் புகழேந்தி - ஐதராபாத் மருந்து கம்பெனி குறிப்பிட்ட பேட்சில் 60,000 தடுப்பூசி மருந்தை (சிறிய புட்டிகள்) தயாரித்திருக்கிறது, அதில் 3000 புட்டிகளின் மூடி சரியாகப் பொருந்தியிருக்கவில்லை என்றும், சில புட்டிகளின் மூடிப் பகுதிகளில் குழி விழுந்திருக்கிறது என்றும் - ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள்,
இப்படி சரிவர மூடப்படாத புட்டிகளில் உள்ள மருந்துகள், காற்றுப் புகும்போதோ அல்லது வேறு காரணங்களாலோ. ரசாயனத் தன்மை மாறி விஷத்தன்மையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த மருந்துக் கம்பெனி 30,000 மருந்துப் புட்டிகளை தயாரிப்பதற்கான லைசென்ஸைத்தான் பெற்றிருக்கிறது. அதற்கான வசதி வாய்ப்புகள் தான் அங்குள்ளது. அதை மீறி - 60,000 ஊசி மருந்துகளைத் தயார் செய்திருக்கிறார்கள்,
மத்திய அரசுக்குச் சொந்தமான மருந்து தயாரிப்புக் கூடங்கள் சென்னை, கிண்டி, குன்னூர் மற்றும் இமாசலப் பிரதேசத்திலுள்ள கசாலி ஆகிய இடங்களில் உள்ளன, மத்திய அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனங்களில் வசதிகள் சரியில்லை என்ற காரணத்தைக் கூறி ஏற்கெனவே மூடிவிட்டார்கள், இப்போது எந்தவித மருந்துத் தயாரிப்புகளும் அங்கே நடப்பதில்லை, கேட்டால் போதிய வசதிகளைச் செய்தபிறகு, மீண்டும் செயல்படுத்துவோம் என்கிறார் மத்திய அமைச்சர்.
அரசுக்குச் சொந்தமான மூன்று நிறுவனங்களை வசதிக்குறைவு என்ற காரணத்தைக் கூறி லைசன்சை இரத்து செய்த மத்திய சுகாதாரத்துறை - ஐதராபாத்தில் உள்ள ஹமுன் பயலாஜிகல் இன்டிடியூட்டை மட்டும் ஏன் கடுமையாக எச்சரிப்பதோடு. நிறுத்திக் கொள்ள வேண்டும்,
விதிமுறைகளை மீறி மருந்துகளை தாயரித்தவர்களின் லைசென்ஸை ஏன் இரத்து செய்யவில்லை. அவர்களின் சோதனைக்கூடமே தரமற்றதாக இருக்கிறது என எச்சரித்தும் மன்னித்து விடுவதேன்? இமாசலப் பிரதேசம் கசாலியில் உள்ள மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தையும் மூடிவிட்டார்கள், ஆனால் அங்கே உள்ள மருந்தாய்வுக் கூடம் மட்டும் இன்னும் இயங்கிக் கொட்டிருக்கிறது.
அங்கே தான் திருவள்ளூர் குழந்தைகள் இறப்பதற்குக் காரணமான ஊசி மருந்தைச் சோதனை செய்திருக்கிறார்கள், அந்தச் சோதனைக்கூடத்தில் ஸ்பெக்ட்ரோகோபி என்னும் நவீன ஆய்வு வசதி கிடையாது, ஸ்பெக்ட்ரோகோபி முறையில் ஒரு மருந்தை ஆய்வு செய்தால், அந்த மருந்தின் மொத்த ஜாதகத்தையும் எடுத்துச் சொல்லி விடுவார்கள், அவ்வளவு துல்லியமானது, கசாலி ஆய்வுக்கூடத்தில் இந்த வசதி இல்லை, ஆனால் இந்தியாவில் வேறு பல இடங்களில் இருக்கிறது, ஏன் அதைச் செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது,
தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பொழுது அது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக thirmersol (பாதரசம் கலந்தது) என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். இந்த மருந்தைச் சேர்ப்பதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் நோய்கள் உண்டாகும் - இப்படிச் சொல்வது வளர்ந்த நாடான அமெரிக்காதான். அதனால் அங்கே 2003 லிருந்து thirmersol என்ற மருந்தைப் பயன்படுத்தத் தடை விதித்து விட்டார்கள், அங்கே தடை விதித்ததைத்தான் நம் இந்தியாவில் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள், இதையும் தடுக்க வேண்டும் (குமுதம் ரிப்போரட்டர்)
நன்றி : புதிய தென்றல் செப் 2008 இதழ்
|
...நெய்வேலி, கல்பாக்கம் ...மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே.
மின்வெட்டினால் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் போது, தேர்தல் கட்சிகள் நாற்காலிக் கூட்டணிகளைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாகத் தமிழ்நாட்டு வேளாண்மையும், தொழில் துறையும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இது தவிர அறிவிக்கப்பட்ட மின்வெட்டு வேறு.
தமிழக ஆட்சியாளர்கள் மின் உற்பத்தி நிலைமைபற்றி எந்தக் கணக்கும் இல்லாமலேயே புதிது புதிதாக கணிப்பொறி தொழில்களுக்கும், உயர்தொழில் நுட்ப ஆலைகளுக்கும் ஒப்புதல் வழங்கி வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்துகொண்ட பிறகே உற்பத்தியைத் தொடங்குகின்றன.
ஏற்கெனவே, இயங்கிவரும் சிறுதொழில் நிறுவனங்கள், வேளாண்மை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தில் வெட்டு விழுகிறது.
கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தரமறுத்து அடாவடி செய்வதால் மேட்டூர் புனர் மின்சார உற்பத்தி உத்திரவாதம் இல்லாமல் இருக்கிறது. அதேநேரம், நெய்வேலியில் இருந்து நாள்தோறும் கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறை மறுக்கின்ற கேரளத்திற்கு 9 கோடி யூனிட் மின்சாரம் அன்றாடம் போகிறது.
நெய்வேலி, கல்பாக்கம் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடப்பட்டால் மின்சாரம் நெருக்கடி வெகுவாகக் குறையும்.
தில்லியில் கடைசிநேரம் வரையிலும் புதிதாக அமைச்சர் பதவி பெறலாமா என பேரம் பேசுகிற தமிழக ஆட்சியாளர்கள், தமிழக மின்சாரம் தமிழ்நாட்டுக்கே கிடைக்க சுண்டு விரலைக்கூட அசைக்க மறுக்கின்றனர், கோவைப் போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி - திருக்கனூர்ப்பட்டி போன்ற குக்கிராமங்களில் கூட மின்வெட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், கதவடைப்புகள் நடத்தி மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
எனவே நெய்வேலி, கல்பாக்கம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வழங்கப்பட தமிழக ஆட்சியாளர்கள் வலுவான நடவடிக்கையில் இறங்க வேண்டும். மின் வெட்டில் வேளாண்மை, சிறு தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
நன்றி : புதிய தமிழர் கண்ணோட்டம் இதழ் செப்டம்பர் 2008
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|