...தமிழர் கொடி... ...( உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் )...
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒன்றுபட்டுள்ளனர். அனைத்துலக அளவில் பரந்து வாழும் தமிழர்கள், ஏறக்குறைய 104 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்று ஒரு குடையின்கீழ் அணிசேரத் தம்மைத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு, தமிழ் ஈழம் - என்பது அடிவேராகவும், இந்திய மாநிலங்கள் உட்பட்ட பிற நாடுகள் அனைத்திலும் விழுதுகளாகவும் தமிழர்கள் தங்களை ஆளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் என்பன காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த இயக்கம் நன்றாக உணர்ந்துள்ளது. எமது சமுதாயத்திற்காகிய பொதுவான தமிழர் கொடி, தமிழர் கீதம், தமிழர் பண்பாட்டு உடை, தமிழர் ஆக்கத்திற்காகிய நிதியம் (வங்கி) உருவாக்கி தமிழினத்தின் தனித்தன்மையை நாம் நிலை நிறுத்துவோமாக.
கொடியின் நிறம் மென்மையான சிவப்பு நிறம். காலை, மாலைக் கதிரவனின் நிறம் - இந்நிறமாகும்.
கொடியின் நடுவில் சூரியனும், அதைச் சுற்றிலும் எருது (சிந்து வெளி), வீணை (இலங்காபுரி), மீன் (பாண்டியநாடு), புலி (சோழ நாடு), அம்பு வில் (சேரநாடு) - ஆகிய ஐந்து தமிழர் பழங்கொடிகளுக்கான சின்னங்களும் அமைந்துள்ளன.
நன்றி : செம்பருத்தி இதழ் - சூலை 2008
|
....சீன வானொலியில் தமிழ்....
தென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக இணைப்புகள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9 ஆவது, 13 ஆவது நூற்றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன காலவடிவத்தில் - அதாவது சிற்றலை வானொலியில தொடர்கிறது - அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது கலைக்கூடத்திலிருந்து - ஒரு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது - இதன் வாயிலாகக் கடந்த பல ஆண்டுகளில் இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வம் மிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது.
இந்த வானொலி நிலையம் முதன் முதலில் 1941 இல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும், கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழப் பிரிவு ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப் பெரிய அளவான 5 இலட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது.
சிஆர்ஐ - யின் தமிழ்ப் பிரிவில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்தப் பிரிவில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்க வைக்கிறது. இவர்கள் பேசுகிற தமிழ் இலக்கணச் சுத்தமாக, கலப்பற்ற தூய்மையான தமிழக இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கலாம்
நன்றி : தென் ஆசியச் செய்தி - சூலை 2008
|
அகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா ?
ஏ.சுகுமாரன்
புதுச்சேரி கடலில் மூழ்கி இருந்ததற்கு சாட்சியாக புதுச்சேரிப் பகுதி சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புதுவையின் அருகில் உள்ள பொம்மையர் பாளையத்தில் கிடைத்த பழமை வாய்ந்த மனித எலும்புக்கூட்டை, அறிவியல் முறைப்படி ஆய்ந்ததில் அதன் காலம் ஒன்றறை லட்சம் ஆண்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அதற்கு முன்பிருந்தே மனிதர்கள் புதுச்சேரி பகுதியில் வாழ்ந்துள்ளது தெரிகிறது. இதனால் உலகில் மனிதன் முதன் முதலில் வாழத் தொடங்கிய இடங்களில் ஒன்றாகப் புதுச்சேரியைக் கருதலாம். எனவே இங்கு அகத்தியர் வாழ்ந்தார் என்பதைக் கதையாகப் புறம் தள்ளத் தேவையில்லை.
புதுச்சேரியின் அருகில் உள்ள திருவக்கரை என்ற ஊரில் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்களின் படிவப்பாறை (Fossilized Trees) வடிவங்கள் கிடைத்துள்ளன. இதே போன்ற மரப் படிவங்கள் புதுவையின் அருகில் உள்ள காலாப்பட்டிலும் கிடைத்துள்ளன.
மேலும் திருவக்கரையில் பெருங்கற்கால மனிதனின் சவக்குழியில் கற்களை வட்டமாக அடுக்கி வைத்து இருந்ததையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்பைத் திட்டை என்று கூறுவார்கள். மேலும் புதுவையின் அருகில் உள்ள கத்துக் கேணியிலும், புழைக்குழிகள் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவை (Megalitlioc period) என்று கண்டறியப்பட்டுள்ளது.
லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் ஆகியவை கடல்கோள் ஏற்பட்டதால் அழிந்தபோது, புதுச்சேரியின் பெரும் பகுதியும் கடலினுள் சென்றுள்ளது. அந்த சமயத்தில் இதன் பெயர் - வேதபுரியாகவோ, அகத்தீஸ்வரமாகவோ இருந்திருக்கலாம்.
பின்பு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இந்தப் பகுதி கடலில் இருந்து மீண்டு - அங்கே மக்கள் குடியேறத் தொடங்கி உள்ளனர். அந்தச் சமயத்தில் இது புதுச்சேரி என அழைக்கப்பட்டுள்ளன.
நன்றி : வடக்கு வாசல் இதழ் - சூலை 2008
|
மழலையர் பாடல்கள்
செயல்படு செல்வமே
காலையில் விழிக்கப் பழகிடுவேன்
கவனமாய் படிக்க முயன்றிடுவேன்
விளையாட்டு பற்பல பயின்றிடுவேன்
விடுமுறை நாளைக் களித்திடுவேன்
அடிமை வாழ்வை மறந்திடுவேன்
அன்பாய் என்றும் நடந்திடுவேன்
பிடிவாதத்தை ஒழித்திடுவேன்
பிழையிலா எழுத்தைக் கற்றிடுவேன்
நல்லதைச் செய்தட நாடிடுவேன்
நல்லோர் சொல்வதைக் கேட்டிடுவேன்
செலவம் பெருக்க உழைத்திடுவேன்
செருக்கதை நானும் விட்டிடுவேன்
நூல்கள் சொன்னதை அறிந்திடுவேன்
மாண்பாய் நற்பேர் எடுத்திடுவேன்
நலிந் தோர்க்கு உதவிடுவேன்
இன்பஞ் சிறக்க வாழ்ந்திடுவேன்
- செயவாணன் -
(நூல் இனிய மழலை முத்துகள்)
---------------
மழை
கொட்டும் மழை கொட்டுதே
குளத்தில் தவளை கத்துதே
மின்னல் மின்னி வெட்டுதே
மேகம் இடித்துக் கொட்டுதே
தும்பில் தண்ணீர் வருகுதே
துள்ளி மீன்கள் துடிக்குதே
மண்ணும் குளிர்ந்து மணக்குதே
மரஞ்செடிகள் செழிக்குதே.
எங்கும் வெள்ளம் ஓடுதே
எங்கள் வீடும் ஒழுகுதே
ஏரி குளங்கள் நிறையுதே
எல்லாப் பஞ்சமும் நீங்குதே
- அருப்புக்கோட்டை அழகிரி -
(நூல் : சிந்திக்க வைக்கும் சிறுவர் பாடல்கள்)
நன்றி : தலித் முரசு இதழ் - சூன் 2005
|
...சீமான்களின் நிலப்பசி (மொழிபெயர்ப்பு)...
சுவாதி பத்மநாபன்
மக்கள்
சந்திரனுக்குச் செல்வார்கள்
செவ்வாய் கிரகத்தில்
வாழ்க்கை நடத்துவார்கள்
குரு கிரகத்தில் அமர்ந்து
பிராணாயாமம் செய்வார்கள்
ஆனால் நிச்சயமாக
புவியில் வாழ விரும்புபவர்கள்
பூமித்தாயின் மடியில்
குழந்தைகளுக்கு
இடமில்லாமல் போகுமா ?
என்றாவது பூமித்தாய்
தன் குழந்தைகளுக்கு
இடமில்லை என்று சொன்னதுண்டா ?
இயற்கையின் உருவாக்கம்
அட்டை, சில்வண்டு, புலி,
இயற்கையின் படைப்பு
கிளி, யானை, மனிதன்,
ஆனால், மனிதன் தவிர
எந்தப் பிராணியும்
செவ்வாய் செல்ல விரும்பாது
மனிதனோ
சந்திரன் மீதும் உருவாக்க நினைக்கிறான்
ஒரு சீனாவை, ஜப்பானை
அமெரிக்காவை.
மங்களச் செய்வாய் மீதும்
பாகல்புர், நிடாரி, நந்திகிராமின்
விதைகள் ஊன்றி
அமங்கலம் செய்ய நினைக்கிறான்
பூமியின்
ஒவ்வொரு சாணும்
பகுக்கப்பட்டு விட்டது
இனனும் தீரவில்லை
சீமான்களின் நிலப்பசி
அவர்கள்
பூமியின் ஒவ்வோர் அங்குலத்தையும்
பகுக்க விரும்புகிறார்கள்
அளவைச் சங்கிலி
கருவிகளுடன் இதோ
வந்து நிற்கிறான்
ஐக்கிய நாடுகளவையின் அமீனா
உங்கள்
அடுப்பங்கரை மூலையிலிருந்து
அளக்கத் தொடங்குவான் பாருங்கள்
அளவைச் சங்கிலியின் உராய்வினால்
பூமித்தாயின் உடல்தோல்
ஆங்காங்கே உரிந்து
எரிச்சலெடுக்கிறது
நெஞ்சில் ஆழமாக இறங்குகின்றன
அமீனாவின் ஆட்கள்
அடிக்கும் இரும்புக் கம்பிகள்
வேதனையுடன் ஓலமிடுகிறாள்
பூமித்தாய்,
அங்கு, மேலே
சந்திரமண்டலத்தில்
மரத்தடியில் அமர்ந்து
இன்னமும் இராட்டையில்
நூல் நூற்கிறாள்
அநதப் புராதனக் கிழவி.
திசை எட்டும் ஏப்-சூன் 2008
|
...தேயாத அன்பு...
டே. அனோஜன்
கருவறையில் என்னைச்
சுகமான சிறை வைத்தாய்
வேதனைகளை நீ சுமந்து
மகிழ்வுடன் உயிர்ப்பித்தாய்
பக்குமாய் என்னைப் பெறவே
பத்தியங்கள் நீ இருந்தாய்
பத்துமாத வேதனைகள்
பெருமகிழ்வாய் நீ உணர்ந்தாய்
உதிரத்தை பாலாக்கி நீ
உணவளித்து எனை வளர்த்தாய்
விழிமூடி நானுறங்க நீ
விழித்திருந்த நாள்கள் பல
வீறிட்டு நானழுதால்
தாலாட்டி உறங்க வைப்பாய்
விண்மீனைக் கைகாட்டி
வேண்டியதைக் கேள் என்பாய்
உணவுண்ண மறுக்கும்போது
நிலவுகாட்டிச் சோறூட்டுவாய்
நிலவு தேய்ந்து வளர்ந்தபோதும்
உன்னன்பு மட்டும் தேயவில்லை.
பள்ளிக்குப் போகும்போது
பத்து முறை புத்தி சொல்வாய்
படிக்காமல் நான் அடிவாங்கினால்
படித்த வாத்தியாருக்கு அறிவில்லை என்பாய்
ஊர்வம்பு புடிச்சாலும்
உண்மை உனக்குத் தெரிஞ்சாலும்
எம்புள்ள நல்லவன்னு
விட்டுக் கொடுக்காம பேசிடுவாய்.
கடவுள் உண்டு இல்லையென்று
ஆய்வுகள் செய்யும் அகிலத்தில்
உண்டென்று நானுரைப்பேன்
அம்மாவுன் பெயர் பரிந்துரைப்பேன்.
நன்றி : தமிழ் இலெமுரியா - மே 2008
|
...தாயே மகிழ்வுகொள்...
தாயே மகிழ்வுகொள்...
என்னைச் சுமந்தது
எனக்காகவோ
உனக்காகவோ அல்ல
இயற்கையினால் என்பதை
உணர்ந்து கொண்டேன்.
நீயும்
உன் தாயிலிருந்து,
நானும்
என் தாயான உன்னிலிருந்து
பிரபஞ்சப் பரிணாமத்தில்
பூமியின் துளியாய்
மானுடப் பயிராய்
மண்ணில் வளர்கிறோம்.
நீ
பாலூட்டியது
எனக்குத் தெரியாது
இருப்பினும் பாலூட்டியது
பொய்யாக முடியாது
நம் வீட்டுப் பசுவும்
கன்றுக்குப் பாலூட்டுகிறது.
நானே அறியாத
பிஞ்சு வயதில் - என்னைக்
கொஞ்சி மகிழ்ந்தது
உனது மகிழ்ச்சிக்கும் தானே.
பாலூட்டி சீராட்டி
உடைவாங்கி அணிவித்து
சடை பின்னி
அழகு பார்த்ததினால் மட்டும்
எனக்குப்
பெருமைமிகு தாயாக முடியாது.
உன்னிலிருப்பது
உண்மையான தாய்மையெனில்
குடிசையில் தவிக்கும்
பசியில் துடிக்கும்
மாந்தர்களுக்காக
உன் இதயத்திலிருந்து
ஈரப்பால் சுரக்கட்டும்.
தாயே மகிழ்வுகொள்
என்னைச் சுமந்து
- கார்க்கிப் பிரியன் -
நன்றி : பயணம் இதழ் சூலை 2008
|
...ஹோசிமின் சிறைக்குறிப்புகள்...
வாழ்க்கை
செங்குத்தான மலைகளிலும்
அடர்ந்த காடுகளிலும்
பயணம் செய்தேன் - பின்
சமவெளியில் அதைவிட
பெரும் ஆபத்தை நான்
எப்படி எதிர்பார்க்க முடியும்?
மலைகளில்
நான் விலங்குகளைச் சந்தித்தேன்
எனக்கு
எந்தத் தீங்கும் ஏற்படவில்லை
சமவெளியில் நான்
மனிதர்களைச் சந்தித்தேன் -
சிறையிலடைக்கப்பட்டேன்.
காவலரகளின் பன்றிச் சுமை
பயணத்தின்போது
பன்றியைச் சுமந்தனர்
காவலர்கள் தங்கள் தோள்களில்
நானோ இழுத்துச் செல்லப்பட்டேன்
ஈவிரக்கமற்று,
தன் சுதந்திரத்தை இழந்தால்
மனிதன்
பன்றிக்கும் கீழாக
நடததப்படுவான்.
ரேசன்
நாளொன்றுக்கு
அரைவாளித் தண்ணீரே ரேசன்
நீங்கள் முகம் கழுவலாம்.
தேனீர் வைக்கலாம்.
உங்கள் விருப்பம் சார்ந்தது.
முகம் கழுவ விரும்பினால்
தேநீரை இழக்க வேண்டும்
தேநீர்தான் முக்கியம் என்றால்
குளிக்க முடியாது.
நன்றி : உலகு இதழ் எண் 7 சூன் 2008
|
...குட்டிக் கதைகள்...
மனித நேயம்
ஓர் இளைஞனின் குடிசை வாசலுக்குக் குளிரில் நடுங்கிக் கொணடே வந்த வயதான முதியவர், இளைஞனைப் பார்த்து - இன்று இரவு மட்டும் நான் உன் குடிசையில் தங்கிக் கொள்ளலாமா ? என்று கேட்டார்.
உடனே இளைஞன் - நீ கடவுளை நம்புகிறவனா? - என்று கேட்டான்.
அதற்கு முதியவர - இல்லை, நான் இயற்கையை மட்டும் வணங்குபவன் - என்றார்
அப்படியென்றால் முதலில் வெளியே போ - என்று முதியவரை விரட்டிய இளைஞன் குடிசையை மூடிவிட்டுப் படுததான்
அப்போது கனவில கடவுள் தோன்றி, எண்பது ஆண்டுகளாக என்னை நம்பாத ஒருவனை நான் வாழ வைக்கும்போது, நீ ஒரு இரவு தங்க வைக்கக்கூடாதா ? என்று கேட்டாராம்.
மனித நேயம்தான் சிறந்த மதம் என்று அப்போதுதான் அவனுக்குப் புரிந்ததாம்.
தாய் சொல்
ஒரு சிறுவன் ஒருநாள் தம் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குச் சென்றான். மலைகள் அடர்ந்த காட்டுப் பகுதி அது.
தன் கோபவெறியை வெளிக்காட்ட விரும்பி, நான் உன்னை வெறுக்கிறேன் - என்று கத்தினான். சிறிது நேரம் கழித்து அதே போன்று - நான் உள்னை வெறுக்கிறேன் - என்ற குரல் கேட்டது.
மீண்டும் அதே போன்று கத்தினான். அத்தகைய பதிலே வந்தது. எதிரொலி பற்றி அறியாத அந்தச் சிறுவன் பயந்து போய் வீட்டிற்குத திரும்பி வந்து தாயிடம் நடந்தவற்றைக் கலக்கத்துடன் எடுத்துரைத்தான். தாய்க்கு உண்மை நிலவரம் புரிந்தது.
மகனே கலங்காதே - நாளை நீ அங்கு செல்லும் போது - உன்னை நான் அன்பு செய்கிறேன் - என்று சொல். அப்போது அதுபோலவே குரல் கேட்கும் - என்றார் தாய்.
சிறுவனும் தன் தாயார் சொன்னது போலவே அடுத்த நாள் காட்டுப் பகுதிக்குச் சென்று - உன்னை நான் அன்பு செய்கிறேன் - என்று சொன்னான். சிறிது நேரம் கழித்து அதே போன்று - உன்னை நான் அன்பு செய்கிறேன் - என்று கேட்டது.
நன்றி : தமிழ் இலெமுரியா சூன் 2008
|
...சிலை...
- சிறுகதை - கலைவாணி -
பாத்து இறக்கங்கப்பா.. ஏத்தும்போது கிரேன் வச்சு ஏத்திப்புட்டாய்ங்க.. டேய் பாண்டி இந்தப் பக்கம் புடிடா..
அதெல்லாம் முடியாதுண்ணே.. அப்படியே உருட்டித் தள்ளிர வேண்டியதுதான்.. டேய் முனுசாமி.. நேத்துப் பெய்ஞ்ச மழைல எல்லாம் சகதியாக் கிடக்கு.. வேணாம் - சுடலை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பாண்டியும், முனுசாமியும் அந்தப் பெரிய கல்லைத் தள்ளிவிட்டார்கள். அது சகதியில் தொப் - என்று விழுந்ததில் சுடலையின் வேட்டி சேறாகியது.
அட என்னப்பா இது... சாமி சிலை செய்யக் கொண்டு வந்த கல்லை இப்படி சாக்கடைல தள்ளி விட்டுட்டீங்க..
லாரி கிளம்பியது. சுடலையின் சிற்பக் கூடத்திலிருந்து இருபதடி தொலைவில் கிடந்தது கல். அடுத்த நாள் வந்த பேச்சிமுத்து - என்னப்பா புது ஆர்டர் வந்திருக்கும் போல இருக்கு - எந்தக் கோயிலுக்கு ? என்றபடியே கல்லின்மேல் ஏறி உட்கார்ந்தான். அதன் மேலேயே வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அடுத்த நாள் சுடலையின் மனைவி அந்தக் கல்லின் மேல் துணிகளைப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தாள்.
ஏண்டி.. சாமி சிலை செய்யற கல்லுல துணியைத் துவைக்கிறயா ? வேற இடமே கெடக்கலியா ,
அட என்னய்யா உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு.. சேத்துக்குள்ள கல்லு கிடக்கு, இப்ப துவைக்கறதுதான் குத்தமாப் போச்சா.. சிலை செய்யறப்பப் பாத்துக்கலாம்.. போய் வேலையப் பாருய்யா ...
அடுத்தநாள் அந்தக் கல்லின் மேல் உட்கார்ந்து ஒரு சிறுவன் ஆயி போய்க் கொண்டிருந்தான். சுடலைக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. பையனைத் துரத்திக் கொண்டு ஓடினான். அவன் அம்மாவிடம் போய் விட்டான். - ஏய்யா இப்படிப் பச்சப் புள்ளையத் தொறத்திட்டு வர்றே.. அதென்ன சாமி கல்லுன்னு எழுதியா வெச்சிருக்கு.. என் கல்லுன்னா வீட்டுக்குள்ள வெச்சுக்க.. தெருவுல கிடந்தா அப்படித்தான் செய்வாங்க...
அடுத்த நாள்... பக்கத்துத் தெரு நாள் காலைத் தூக்கி மூத்திரம் பெய்து கொண்டிருந்தது. அதற்கு மேல் பொறுக்க முடியாத சுடலை ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து கல்லைப் புரட்டி கூடத்திற்குள் கொண்டு போனான்.
கல் சிலையாகி கோயிலுக்குப் போனது. சுடலை பாண்டியைக் கூட்டிக் கொண்டு கோயிலுக்குப் போனான்.
அண்ணே செலைய சூப்பரா செஞ்சிருக்கீங்கண்ணே இருட்டா இருக்கு சரியாத் தெரியலை யேண்ண...
வாடா உள்ள போய் பார்க்கலாம்.. நம்ம செலதான... என்றபடி கருவறைக்குள் நுழைந்தவன் குரல் கேட்டுத் திரும்பினான்.
யாரது அபிஷ்டு.. நோக்கு.. ஏதாவது.. இருக்கா.. யாரைக் கேட்டு கர்ப்பக் கிரகத்துக்குள்ள நுழையறேள்... அபச்சாரம்... அபச்சாரம்... பகவானைத் தொட்டுடலையே... நல்ல வேளை பார்த்தேன்... இல்லையின்னா பகவானோட புனிதமே கெட்டுப் போயிருக்குமே...
சாமி... நான்... வந்து...
யாரா இருந்தா என்ன முதல்ல வெளியே போங்கோ... பாண்டி திரும்பும் போது சொன்னான்.... கேவலப்பட்டுக் கிடந்த கல்லுக்கு வந்த வாழ்வைப் பர்த்தியாண்ணே... இப்ப அது கல் இல்லடா... சாமி.... என்றான் சுடலை.
நன்றி: திருப்பூர் விகடகவி இதழ் சூலை 2008
|
...கல்விக் கூடமா ?...
ஆலயம் கட்டுவதைப்போல் கல்விச் சாலைகள் வைத்திடு என்றான் பாவலன் பாரதி. அவன் எந்தப் பொருளில் சொன்னான் என்பது இன்றைய நிலையில வேறொரு பொருளைக் காட்டுகிறது. அன்றைக்கு அரசனை மயக்கி ஆலயம் கட்டி, அதன் மூலம் பார்ப்பனியம் வளர்த்து ஒன்றும் தெரியா மக்களை அடிமைப்படுத்தி அதன் மூலம் தங்களைப் பெரும் வல்லமை கொண்டவர்கள் என எண்ணச் செய்து பெரும் பொருளையும், நிலத்தையும் கையகப்படுத்தினர்.
ஆனால் இன்று அந்தத் தொழில் கொஞ்சம் மந்தமாக இருப்பதால் கல்விப் பணி என்ற பெயரில் களமிறங்கியுள்ளனர். இவர்களைப் போன்று கிறித்துவர்கள், முகமதியர்கள் மற்றும் பல மத இனத்தவர்கள் இத்துறையை எடுத்துக் கொண்டு, தங்கள் மதத்தையும், பொருளையும் பெருக்கி வருகின்றனர். மேலும் இன்று வளர்ந்து வந்திடும் ஆங்கில மிகுபற்றின் கரணியாக நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் தங்களின் பிள்ளைகளை பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் தங்களது ஆற்றலுக்கு மீறி பணத்தை வாரிக் கொடுக்கின்றனர. இதைச் சரியாகக் கல்வியாளர்கள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு உள்ள கழிவறைகள் தங்கள் விருப்பம் போல் கட்டணங்களை வைத்து மக்களைச் சுரண்டுகின்றனர்.
இவை தளிர், துளிர் வகுப்பிலிருந்து தொடங்கி, கல்லூரி வரை தொடர்கதையாய் நடந்து வருகிறது. பொறியியல் கல்வி பெறவேண்டும் என்றால் குறைந்தளவு நான்கு இலக்கம் வேண்டும். மருத்துவம் என்றால் அதைவிடச் சற்று கூடுதலாய் ஓரிரு இலக்கம் வேண்டும். இவ்வாறு தெருவெங்கும் பிள்ளையார் சிலைகள் வைத்து பிச்சை எடுப்பதைப் போன்று கல்விக் கடைகளைத் திறந்து வைத்துக் கொள்ளை அடிக்கின்றனர்.
உங்களால் கல்லூரிக்குப் பணம் செலுத்த வாய்ப்பு இல்லை என்றால் வங்கிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம் நுழையும். கடந்த திங்கள் முதல் இந்தத் தீச்செயலை மக்கள் தொலைக்காட்சி காட்டி வருகிறது, இதனைப் பார்த்த செய்தியாளர்கள், அமைச்சர் பொன்முடியிடம் கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என செய்தித் தாள்களுக்குச் செவ்வி தருகிறார். இவ்வாறு தனது துறையில் நடக்கும் கொள்ளை பற்றி தெரியாது என்று சொல்லும் அமைச்சரும், அவருக்கு மேலே உள்ள முதலமைச்சரும் - இந்த நாட்டில்தான் வாழ்கிறார்களா ? என்ற வினா எழுப்ப வேண்டியுள்ளது ?
1967 க்கு முன்னர் காமராசர் முதல் அமைச்சராக இருந்தபோது ஏழைக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சோற்றுக் கொடை தந்தார். மேலும் எல்லாக் கல்வி நிலையங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்றைய திராவிட அரசுகளோ, கல்விப் பணியை கள்வர்களிடம் கொடுத்து விட்டு, கள்வர்கள் வைத்திருந்த மதுக்கடைகளை ஏற்றுக் கொண்டனர். இதே நிலை தொடருமானால் நம் இனம் இல்லாது போகும். ஆகவே தமிழினப் போராளிகளே கல்விக் கூடங்களைக் கைப்பற்றி - மதுக்கடைகளை இழுத்து மூடுக. சொன்னால் திருந்தமாட்டான் - சவுக்கை சொடுக்காமல் ஓடமாட்டான்.
நன்றி : புகழ்ச் செல்வி சூலை 2008 - ஆசிரியர் உரை
|
...எரியும் நினைவுகள் - ஆவணப்படம்...
01-07-2008 அன்று சென்னை ரஷிய பண்பாட்டு அரங்கில் 49 மணித்துளிகள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. தமிழீழ நேயர்களும், தமிழறிஞர்களும், இளைஞர்களும், கலைஞர்களும், செய்தியாளர்களும், ஆய்வாளர்களுமாக அரங்கு வழியத் திரண்டிருந்த அவையினர் - காட்சியின் முடிவில் - கண்ணில் ஈரத்துடனும் - நெஞ்சில் பாரத்துடனும் உறைந்திருந்தனர்.
நூலகம் எரிந்தபோது பிறந்து 19 நாள் குழந்தையாக இருந்த சோமீதரன் - இன்று 27 வயது இளைஞராக, இயக்குநராக முதிர்ச்சி பெற்றுத் தான் பிறந்த மண்ணின் பெருமை ஒன்று எரிந்த வரலாற்றைப் படைத்தளித்தன் மூலம் அந்த மண்ணையும், தன்னையும் மறுபிறப்புக்கு உட்படுத்தியிருக்கிறார் என்றே கருதுகிறோம்.
கே. எம். செல்லப்பா என்ற அறிவாளர் 1933 ஆம் ஆண்டு தன் வீட்டிலிருந்த நூல்களை வாசகர்க்கு வழங்கியுதவும் திட்டமாகக் கருப்பெற்றதுதான் யாழ் நூலகம். 1934 இல் செல்லப்பாவைச் செயலராகக் கொண்ட ஒரு நூலகக் குழு உருவாகி, தொடக்கத்தில் 844 புத்தகங்களும் - 30 செய்தி இதழ்களும் ஒரு ஒற்றை அறையும் கொண்ட நூலகத்தை அமைத்தது.
விரைவில் நூலகம் விரிவடையவும், அதற்கெனத் தனிக் கட்டடம் ஒன்று தேவைப்பட்டது. சென்னை கட்டடக் கலைஞர் நரசிம்மன் உழைப்பிலும்., ஏராளமான நூலக நேயர்களின் நிதிக் கொடையிலும் புகழ் பெற்ற இந்திய நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதனின் வழிகாட்டலிலும் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம் எழுப்பப்பட்டு, 1959 இல் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரெட் துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
உலகெங்குமிருந்து ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளுக்காக யாழ் நூலகத்தைப் பயன்படுத்தினர். 1981 இல் 97 ஆயிரம் அரிய நூல்களும், கிடைத்தற்கரிய பழைய சுவடிகளும், தாள்களும் கொண்ட - சிறப்பார்ந்த நூற்களஞ்சியமாக நிறைவுற்றுத் திகழ்ந்தது. யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை - என்ற பழஞ்சுவடியின் ஒரே ஒரு படி மட்டுமே உடைய பேறு அந்நூலகத்துக்கு மட்டுமே இருந்தது.
01-06- 1981 இல் அரசின் ஆதரவு பெற்ற ரெளடிகளும், காவல் துறையும் சேர்ந்தே யாழ் நூலகத்திற்குத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஒரு துண்டுத் தாள் கூட எஞ்சாதபடி எரித்து முடித்தனர்.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் இதழ் - சூலை 2008
|
...தமிழ்த் தலைவர்களே...
தமிழகத்தை அடுத்துத் தமிழர்கள் மிகுதியாக வாழ்வது கருநாடகத்தில். அப்படியிருந்தும் தற்போது அங்கு தமிழை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் வெறும் 4 ஆயிரத்து 629 பேரே.
அதே வேளை 13 லட்சத்து 91 ஆயிரத்து 805 பேர் கன்னடத்தை முதல் மொழியாகவும், 94 ஆயிரத்து 488 பேர் உருது மொழியை முதல் மொழியாகவும், 36 ஆயிரத்து 452 பேர் மராத்தியை முதல் மொழியாகவும், 2 ஆயிரத்து 293 பேர் தெலுங்கை முதல் மொழியாகவும் எடுத்துப் படித்து வருகின்றனர்.
இவர்களில் 5 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே அவர்களின் கல்வித்தரம் பற்றி ஆய்வுசெய்யப்பட்டதில், மராத்தியை முதல் மொழியாக எடுத்துப் படிப்பவர்கள் 78.04 விழுக்காடு பெற்று முதலிடத்திலும், உருதை முதல் மொழியாக எடுத்துப்படிப்பவர்கள் 73.33 விழுக்காடு பெற்று இரண்டாமிடத்திலும், கன்னடத்தை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் 71.04 விழுக்காடு பெற்று மூன்றாம் இடத்திலும், தமிழை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் நான்காவது இடத்திலும், தெலுங்கை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 38,965 கன்னடப் பள்ளிகளும், 3,326 உருதுப் பள்ளிகளும், 136 தமிழ்ப் பள்ளிகளும், 89 மராத்திப் பள்ளிகளும், 71 தெலுங்குப் பள்ளிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டதாம். இவை அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளாகும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் - பார்த்துப் படிக்கக்கூட முடியாமல் இருக்கிறார்கள் - என்ற அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
தமிழர்களைக் குடிகாரர்களாக்குவதில் முனைப்புக் காட்டும் தமிழக அரசு இனியாவது படிப்பாளிகள் ஆக்குவதில் அக்கறை காட்டுமா?
நன்றி : எழுகதிர் இதழ் - சூலை 2008
|
...மீனவர் உரிமை காக்க...
இந்தியாவின் 8118 கி.மீ - நீளமுள்ள கடலோரமானது பல்லுயிர் வளம் மிக்க பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 3200 கடலோரக் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவ சமூகங்களைச் சார்ந்த 85 இலட்சம் மீனவ மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நெய்தல் மக்கள் ஆண்டொன்றுக்கு 30 இலட்சம் டன் கடல் மீன்களை அறுவடை செய்து நாட்டு மக்களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர். மீன் துறையின் உற்பத்தி ஆண்டுக்கு ரூ30 ஆயிரம் கோடியாகும். இந்திய அரசு மீன் உற்பத்தி மூலம் பெறும் அன்னியச் செலாவணியே ஆண்டொன்றுக்கு ரூ 4200 கோடி ஆகும்.
இயற்கையோடு போராடி வாழும் மீனவ சமுதாயம் தற்பொழுது, எதிர்காலச் சந்ததியினருக்காக, அரசோடு போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தனியார் மயம், தாராள மயம், உலக மயமாக்குதல், தொழில் மயம் - என்கிற பெயரில் கடலோர சமூகங்கள் மீது அடக்குமுறை ஒடுக்குமுறை திணிக்கப்படுகிறது.
இன்று நமது நீர்ப்பரப்புகள் மற்றும் கடலோர வளங்கள் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் சுரண்டுவதற்குத் திறந்து விடப்பட்டுள்ளன. கடலோரத்தில் வாழும் மீனவர்கள் - வாழுகிற பகுதிகளில் அபாயம் மிக்க ரசாயனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நட்சத்திர சுற்றுலா விடுதிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வர்த்தகத் துறைமுகங்கள் - என்பவைகளின் படையெடுப்பு தொடங்கி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியமாகக் கடலோரத்தில் வாழும் மக்களை இடம் பெயரத்து - அவர்களுக்கு எதிர்காலமே இல்லாத நிலையை உருவாக்கி வருகிறது.
தற்போது கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை 2008 பெருமுதலாளிகள் கடற்கரையை ஆக்கிரமிக்க வசதி செய்யும் பொருட்டு அரசு வெளியிட்டுள்ளது. சொந்த நாட்டில் மீனவர்களை அகதிகளாக்கும் இம்முயற்சிக்கு எதிராக, அனைத்து மீனவர்களும் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நன்றி : குமரிக் கடல் இதழ் சூலை 2008
|
...கச்சத்தீவை மீட்க...
இரக்கனார்
இந்திய - இலங்கை எல்லைக் கோட்டிலிருந்து தத்தமது நாட்டை நோக்கியுள்ள நீர்த் தொகுதி, தீவுகள், கண்ட மேடை, கடல் தரைக்குக் கீழுள்ளவை ஆக அனைத்து மீதும் முழுமையான இறைமையும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆதிக்கமும் இருநாடுகளுக்கும் அவரவரது எல்லைகளுக்குள் உண்டு (விதி 4)
மேற்காணும் 4 ஆம் விதிக்குட்பட்டதாக, இந்திய மீனவரும் இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுகாலம் வரை கச்சத்தீவுக்கு வந்து போய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்து போய் அனுபவிக்க உரித்துடையவர். இப்பயணிகள், இவ்வாறு வந்து போக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ நுழைவு அனுமதிகளையோ பெற வேண்டியதில்லை. (விதி 5)
இந்தியரினதும் இலங்கையரினதும் படகுகள் மற்றும் கப்பல்கள் இதுவரை காலமும் எத்தகைய உரிமைகளை ஒரு நாட்டவர் மற்றவர் நாட்டுக் கடலில் வழமையாக அனுபவித்தனரோ, அதே உரிமைகளையும், பாத்தியதைகளையும், தொடர்ந்து அனுபவிக்க உரித்துடையவர் ( விதி 6)
சூன் 26 இல் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் சில வரிகள்தான் மேலுள்ளவை.
1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை - சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ மற்றும் தமிழகத் தமிழர்களை அழித்தொழிக்கின்ற வேலையை முழுவீச்சோடு தொடங்கியது, இன்று வரை அது தொடர்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 8,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகளைத் தமிழக மக்கள் மீது (மீனவர்கள்) சிங்கள அரசு கட்டவிழ்த்துள்ளது. 450 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது என்பதும், பல நூற்றுக்கணக்கான படகு மற்றும் வல்லங்களை அழித்தொழித்துள்ளது என்பதும், பல கோடிக்கணக்கான நட்டத்தையும், இழப்பையும் தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தி வந்துள்ளது என்பதும் வெளிப்படையான உண்மை.
சிங்கள இராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படாத நாள் இல்லை. கொல்லப்படாத மாதம் இல்லை என்பதை நமது அன்றாட அனுபவங்கள் நிரூபிக்கின்றன. ஒரு தமிழக மீனவரின் உயிர் பறிக்கப்பட்ட ஆழ்துயரத்திலிருந்து சற்றே மீண்டுவரும் வேளையில், இன்னொரு தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்வது என்பது, சிங்களக் கடற்படை இராணுவத்தின் சாதனையாகத் தொடர்கிறது. 20 வயது நிரம்பிய தங்கச்சிமடம் சந்தியா என்ற மீனவரைக் கச்சத்தீவு அருகில், கடந்த சூன் மாதம் 23 ஆம் தேதி, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. பாம்பனைச் சேர்ந்த 23 மீனவர்களை அனுராதபுரம் சிறைக்குள் தள்ளிச் சித்தரவதை செய்தது. அவர்களில் 5 நபர் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாகப் பொய்வழக்குப போட்டு, மறுபடியும் சிறைக் கொட்டடிக்குள் சிங்களப் பேரினவாத அரசு தள்ளியுள்ளது. இதில் கொடுமை என்ன வென்றால் அந்த 5 நபர்களில ஜோசப் என்ற 15 வயது பள்ளி மாணவனையும், சூன்மாதம் 26 ஆம் தேதி முதல் சிறையில் தள்ளி தனது தமிழினக் குரோதத்தை சிங்களக் கடற்படை இராணுவம் உறுதிபடுத்தி வருகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஆதம் பாலம் மற்றும் பாக் நீரிணைப்பு கடல் பகுதிக்கு இடையே எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்வதற்காக, 1974 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்குள்ள பாரம்பரிய உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அவ்வாறே, மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே எல்லையை வரையறுக்க, 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தமும், கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை உறுதிப்படுத்தியது. இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கச்சத்தீவில் தங்கள் வலையை உலர்த்திக் கொள்ளவும், அங்குள்ள அந்தோனியார் கோவிலுக்குச் சுதந்திரமாகச் சென்று வழிபாடு செய்து திரும்பவும் ஒப்பந்தங்கள் வழிவகை செய்தன.
ஆனால் இன்று கச்சத்தீவில் வலையைத் தமிழக மீனவர்கள் உலர்த்தவும் முடியாது... அந்தோனியாரை வழிபடவும் இயலாது... என்ற சூழல். சிங்களப் பேரினவாத அரசால் ஒருதலைப்பட்சமாக உருவாக்கப் பட்டுவிட்டது....
நன்றி : இலட்சியப் போராளி இதழ் சூலை 2008
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|