திருட்டு
தெருக்கோடியில் கட்டுகள்
அவிழ்க்கப் பட்டு
விடுதலையானவுடன்
வாலறுந்த பட்டம் போல
இலக்கின்றி ஓடிவருகிறது.
புற்றின் எந்தப் பொந்தில்
புகலாமெனும் பாம்பு போல
வீடுகளை அண்ணாந்து பார்க்கிறது.
குரங்கிலிருந்து பிறந்தவை அல்ல.
என்றாலும் எல்லாச் சுவரிலும்
எளிதாக ஏறிவிடுகிறது.
வீடெல்லாம் பெட்டிகளாகி
அமைதியில் ஆழ்ந்திருக்க
தோட்டமெல்லாம் சில் நொடிகளில்
வயிற்றுக்குள் இறங்குகிறது.
பார்த்தவுடன் பதை பதைத்து
நம்மையும் பயமுறுத்தி
காலொடிந்து போகாமல்
ஓடுமந்தத் திருட்டு ஆடு.
- வளவ துரையன்.
தூறல் இலக்கிய இதழ் எண் 7
|
பிடுங்கிகள்
ஊர்ந்து செல்லும் நிலையிலும்
ஓயவில்லை தாய்வழிப் பாட்டி
சுடுதண்ணிக்குச் சுள்ளி பொறுக்குகிறாள்
குறைகூலி என்றாலும் வெளியிலும்
வேலை செய்கிறார் அப்பத்தா.
சமைத்தலும் துவைத்தலும் முடித்து
தையல் பணிக்கு இடையில்
முறுக்கும் விற்கிறாள் அம்மா,
ஐம்பதாயிரம் ரொக்கமும்
இன்னும் பத்து பவுனும் சேர்க்க
ஞாயிறுகளிலும் பணி செய்கிறாள் அக்கா
பள்ளிக்குப் பின் ஓய்வுகளில்
அப்பளம் உருட்டுவதும்
பீடி சுற்றுவதுமாய தங்கை
ஓயாமல் சம்பாதிக்கும் இவர்களிடம்
கோட்டருக்கென வாங்குகிறான் அண்ணன்
பீருக்கென பிடுங்கிக் கொள்கிறான் தம்பி
கட்சிக்கென உருவுகிறார் அப்பா.
சுருட்டுக்கெனச் சுருட்டுகிறார் தாத்தா.
- மதியழகன் சுப்பையா
நன்றி : அணி - டிசம்பர் 2007
|
முரண்கள்
(o)
மதம் சார்ந்த
விடயங்களுக்கு
அரசு விடுமுறை
அறிவிக்கிறது
மதச் சார்பற்ற அரசு.
(o)
மந்திரி வருகிறார்
ஓட்டுப் போட்ட மக்களை
ரோட்டு ஓரம் ஒதுக்குகிறது
ஜனநாயக அரசு.
(o)
பத்து வருடமாய்
பழைய சைக்கிளில்
பள்ளிக்கு வரும்
வாத்தியார்
சொல்லித் தருகிறார்
இந்தியர் அனைவரும் சமம்.
(o)
சுடும் வெயிலில்
வெறும் காலில்
பயணங்கள்...
குளு குளு அறையில்
கண்ணாடிக் கூண்டுக்குள்
காலணிகள்.
(o)
மனசெல்லாம் பூரிக்க
மகாத்மா சிரிக்கிறார்
மதுக்கடையில்
நன்றி : பயணம் சனவரி 2008
|
ஒரு சிறு வருத்தமும் - அச்சமும்
தினமலர் நாளேட்டில் - டீக்கடை பெஞ்சு - பகுதியில் வடக்கு வாசல் இலக்கிய மேடையை, தில்லித் தமிழ்ச் சங்கத்தினால் நடத்த்ப்படும் வடக்கு வாசல் இதழ் - ஏற்பாடு செய்த விழாவாக எழுது இருந்தது. அவர்களுடைய வழக்கமான கிசு கிசு பாரம்பரியத்தில் விழாவுக்குப் பிறகு தடபுடலான இரவு விருந்து நடைபெற்றதாகவும் எழுதி இருந்தது.
ஜூனியர் விகடன் இதழிலும் தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இது என்று கழுகார் பகுதியல் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் தில்லியின் தினமலர் அலுவலகத்தில் முறையாக அனைவருக்கும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டது. அதே போல, தில்லியில் இருக்கும் விகடன் நிருபருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இந்த விழா வடக்கு வாசல் மாத இதழ் நடத்தும் விழா - என்று அழைப்பிதழ்களில் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தது. தில்லியில் சுவர் கண்ட இடங்களில் எல்லாம் சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டியிருந்தோம். இந்து நாளேட்டிலும் மிகத் தெளிவாக ஒரு விளம்பரம் கொடுத்து இருந்தோம். எல்லாவற்றுக்கும் மேலாக தில்லியில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும், விகடனின் தில்லி நிருபர் பெருமகனாருக்கும் வடக்கு வாசல் பற்றியும் தில்லித் தமிழ்ச் சங்கம் பற்றியும் நன்கு தெரியும்.
தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் விழா நடந்ததைத் தவிர தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் - வடக்கு வாசல் நடத்திய இந்த விழாவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தலைநகரில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் வடக்கு வாசல் இதழ் பற்றி நன்கு தெரியும். ஆனால் தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்தும் வடக்கு வாசல் நடத்திய விழா - என்று தினமலரில் இவர்கள் எழுதியது எதற்காக என்று தெரியவில்லை. தமிழ்ச் சங்கம் நடத்திய இலக்கிய விழா - என்று ஜூனியர் விகடனில் ஏன் எழுதினார்கள் என்றும் தெரியவில்லை.
தமிழின் ஒரு தலைசிறந்த இலக்கியவாதி குறித்து ஒரு சக பத்திரிசை நடத்தும் இலக்கிய விழா பற்றிய அடிப்படைத் தகவலைக் கூடச் சரியாகத் தெரிந்து கொள்ள அக்கறை காட்டாத இவர்களுடைய அலட்சியப் போக்கும் ஏதோ ஒன்றைக் கிசுகிசுத்தாக வேண்டும் என்று காட்டும் அவசரமும் இவர்கள் வெளியிடும் செய்திகளின் நம்பகத் தன்மை குறித்த அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
அதே போல விழா முடிந்ததும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது - என்று இரு இதழ்களிலும் கிசு கிசு பாணியில் எழுதியிருக்கிறார்கள். தில்லியின் கருங்குளிரில் இந்தக் கூட்டத்துக்கு வெகுதூரத்தில் இருந்து குடும்பத்தோடு வருகிறவர்கள் சிரமப்படக்கூடாதே என்று மிக எளிமையாக ஒரு இரவு உணவு ஏற்பாடு செய்ய்ப்பட்டிருந்தது. இவர்கள் ஆரவாரத்துடன் கிசுகிசுத்த அந்தத் தடபுடலான விருந்து என்ன தெரியுமா? - இட்லி- வெண்பொங்கல் - தயிர்சாதம்.
வடக்கு வாசல், இவர்கள் தங்களைப் பற்றி அறிவித்துக் கொள்வதைப் போல, லட்சக்கண்க்கில் விற்பனையாகி - கோடிக்கணக்கில் பொருள் ஈட்டித்தரும் தொழில் அல்ல.
சக இதழாளர்களாக இவர்கள் வடக்கு வாசல் மீது சற்று இரக்கம் காட்டி இயன்ற வரை உண்மைத் தகவல்களை வெளியிட்டிருக்கலாம். பாவம். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
- யதார்த்தா கி.பென்னேஸ்வரன் - ( வடக்கு வாசல் சனவரி 2008 இதழில் )
|
திருக்குறளில் கடவுள் வாழ்த்து ஓர் இடைச் செறுகல்
1935 இல் வ.உ.சிதம்பரனார் தமது திருக்குறள் அறப்பால் விருத்தியுரை - உரைப்பாயிரத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
திருக்குறள் சுவடிகளின் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும் - கடவுள் வாழ்த்து - வான் சிறப்பு - நீத்தார் பெருமை - என்னும் மூன்று அதிகாரப் பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவை அல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமாகவும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமும் - ஆகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவை என்றும் யான் கருதுகிறேன். அவ்வாறு யான் கருதுவதற்கு உரிய காரணங்களில் சில...
1) இம் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின் பாக்களைப் போலச் சொற் செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல.
2) இப்பாக்களில் பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுத்து இருக்கின்றன.
3) மெய்யுணர்தல் - துறவு - என்னும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால் - கடவுள் வாழ்த்து - நீத்தார் பெருமை - என்னும் அதிகாரங்களைப் பயிரத்தில் கூற வேண்டுவதில்லை.
4) மெய்யுர் தலில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல என்பது நன்றாக விளங்கும். அவ்வாறே துறவின் பாக்களையும் - நீத்தார் பெருமையின் பாக்களையும் - ஒப்பிட்டுப் பார்த்தால் - இவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்லரென்பது நன்றாக விளங்கும். மழையைச் சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றருவாருமில்லை - அகையால் வான் சிறப்பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.
இவ்வாறு வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் - தனது சந்தேகங்களையும், அந்த சந்தேகம் வந்ததற்கான காரணங்களையும் தெரிவிக்கிறார்.
நன்றி : பயணம் சனவரி 2008
|
ஆட்சியாளர்கள் மதுக்கடைகளைத் திறந்தது ஏன் ?
தமிழ்நாட்டில் விபத்து, தற்கொலை, கஞ்சா, சாராயம் விற்பனை, திரைப்படத்தால் ஏற்படும் சீரழிவு - போன்றவை தான் வேகமாக வளர்ந்து வருகின்றன. திரைப்படங்களால் தமிழ் மொழி - பண்பாடு போன்றவை அழிந்து வருகின்றன. சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கடைகளை அரசே நடத்தி மக்களைக் குடிக்கும் படிக் கூறுகிறார்கள். மக்களும் போட்டி போட்டுக் கொண்டு குடிக்கிறார்கள்.
படித்தால் அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் சமுதாயம் திருந்திவிடும். அப்படி மக்கள் திருந்திவிடக் கூடாது என்று நினைத்துத்தான் ஆட்சியில் உள்ளவர்கள் மதுக்கடைகளை அதிக எண்ணிக்கையில் திறந்துள்ளனர் - என்று மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் 13-12-07 அன்று காஞ்சி உத்திர மேரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசியுள்ளார்.
வந்தவாசியில் திருமணவிழாவில் வாழ்த்துரையாற்றிய மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் - மக்களுக்குத் தேவைப்படும் கல்வியைத் தனியார் நிறுவனங்களக்குக் கொடுத்துவிட்டு - குடிகெடுக்கும் மதுவை மட்டும் - இந்த அரசு ஏற்று நடத்தி வருகிறது - இது சரிதானா? - என்று வினா எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் நோய் (வேதம்) பரவுகிறது
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய மாவீரர் மாநாட்டின் லூதர்சிங் அவர்களின் நினைவு நாளான சனவரி 20 ஆம் தேதி அன்று பகவத் கீதையும் - வேதங்களும் - ஓதப்பட உள்ளன. முதலில் சமற்கிருதத்திலும் பின்னர் ஆங்கிலத்திலும் இந்த வழிபாடு நடைபெறுமாம்.
அடுத்து, சனவரி 28 ஆம் தேதி நியூமெக்கிகோ மாநில சட்டப்பேரவை கூட உள்ளது. இந்நாளில் வேத மந்திரங்கள் முழங்க சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கப்படுமாம்.
மேலும் சனவரி 29 ஆம் ேத்தி - கொலராடோ சட்டப் பேரவைக் கூட்டத் தொடக்கவும் வேத மந்திரங்கள் ஓதப்படுமாம். இந்தத் தகவலை அமெரிக்காவில் வாழுமு இந்துக்களின் தலைவர் - இராஜன் சேட் - தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ரிக் வேத மந்திரத்தைச் சொல்லி - சபையைத் தொடங்கி வைத்தவர் இவர்தான்.
வேதங்கள் எத்தனை ? ரி,. யசுர், சாமம், அதர்வனம் - என்பன தான். நான் மறைகள் - ரிக்தான் தலைமை வேதம்.
வேதங்களின் உட்பொருள் என்ன? இந்திரன், அக்னி, சூரியன், சோமன், வாயு, உஷை, விஷ்ணு, ருத்திரன் ஆகிய தேவர்களைப் போற்றிப் பாடும் பாடல்கள்தான் வேதங்கள்.
தாசர்களை அல்லது திராவிட மக்களை - அழித்து ஒழித்து - ஆரியர்களுக்குப் பல நன்மைகளையும் செய்து கொடுக்கும்படி ஒவ்வொரு தேவனையும் - வேண்டும் பாடலாகவே இவை உள்ளன.
தாசர்களுடைய கோட்டையை உடைத்து நொறுக்கு, நகரங்களை எரித்துத் தகர்த்துத தரையோடு தரைமட்டமாக்கு, தாசர்களுடைய நீர்த் தேக்கங்களை உடை, எங்களுக்கு நிறைந்த செல்வங்களை, குதிரைகளை, பசுமந்தைகளைக் கொடு - நல்ல மேய்ச்சல நிலங்களையும் தா, தாசர் இனத்தை திராவிடர் இன்ததைப் பூண்டோடு ஒழித்துக் கட்டு - என்பவைதான் இப்பாடல்களின் கருத்தாகும்.
அமெரிக்கருக்கு நம் அனுதாபங்கள்.
நன்றி : யாதும் ஊரே சனவரி 2008
|
இளைஞர்களுக்குத் தேவை சமுதாயப் பார்வை
போராட்டமே வாழ்க்கையாகி, போர்க்களமே பாதையாகிவிட்டது. பெரும்பாலான அடித்தள, நடுத்தர மக்களுக்கு - புகையிலையுடன் போராட்டம், மதுவுடன் போராட்டம், சுற்றுச் சூழல் மாசுகளுடன் போராட்டம், கடுங்குளிர்- கொடும் வெப்பத்துடன் போராட்டம், கல்விக்கான போராட்டம், இடத்துக்கான போராட்டம், இனத்துக்கான போராட்டம், வாழ்வாதாரமான நிலத்துக்கான போராட்டம், வாழ்வுரிமைக்கான போராட்டம், மொழிக்கான போராட்டம் - எனப் பல போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றன.
இத்தனை போராட்டங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் போது - இந்தப் புத்தாண்டுக் களியாட்டங்கள் தேவைதான் என்ன? - புதிய ஆண்டின் மகத்துவமும், இழந்து போன ஆண்டின் முக்கியத்துவமும் புரியாமல் நடக்கும் களியாட்டங்களின் அறியாமையை எவ்வாறு நோவது? என்னவென்று சொல்வது ?
கொண்டாட்டம் வேறு - களியாட்டம் வேறு - குடுமபத்தோடு கொண்டாடுவார்கள் - நண்பர்களோடு இனிமையாகப் பொழுதைக் கழிப்பார்கள் - அதாவது மற்றவருக்குத் தொந்தரவு இல்லாமல் - அது கொண்டாட்டம்.
இன்றோ - கொண்டாட்டம் என்றால் - கூச்சல் - வெறிபிடித்தது போல் நடனம் - தன்நிலை மறக்கச் செய்யுமளவு போதை - தனிமனித மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் - மற்றொரு நபரைப் புண்படுத்துகிறோம் - என்பதே மறந்துபோகும் அளவுக்குத் தரம் தாழ்ந்த களியாட்டம்தான் - வெறியாட்டம்தான் - இன்றைய நாகரிகம் - உலகின் நடைமுறை -
காவல்துறை எத்தனைக் கட்டுப்பாடுகள் விதித்தாலும் சரி, பெற்றோர் குழந்தைகளைக் கட்டுப்படுத்தவிலலை - கட்டுப்படுத்த முடியவில்லை எனறால் நாம் என்றென்றும் தலைநிமிர்ந்து பெருமை கொள்ளும் நம் பண்பாடு வெகு விரைவில் தொலைந்துவிடும். வெளிநாட்டவர்கள் நம்மைப் பார்த்து வியக்கும் நம் பண்பாடு நம்மைவிட்டு ஒழிந்து போகும்.
தனிமனித சுதந்திரம் என்ற பெயரிலும் - அவர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு என்ற பெயரிலும் இளம் மனங்கள் திக்குத் தெரியாமல் - சரியான வழிகாட்டி இல்லாமல் திணறும் போக்கை மாற்றக் கடமைப் பட்டு இருக்கிறார்கள் பெற்றோர்கள்.
நன்றி - சனவரி 2008 பசுமைத்தாயகம் தலையங்கம்
|
வருக 2008
முன்னேறிய நாடுகளின் பட்டியலில் நாம் முதலிடம் பிடித்திருக்க வேண்டும். நமது விடுதலை 1947 இல். சீனக் குடியரசின் தோற்றம் 1949 இல். வளர்ச்சியில் , நம்மைக் கடந்து வெகுதூரம் சென்றுவிட்டது. ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் உட்பட்ட அனைத்து அமைப்புகளிலும் அதற்கு இடம். அது மட்டுமல்ல. ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களையும் பத்தாண்டுகளுக்கு முன்னரே பெற்றுவிட்டது.
இன்று சீனத்தின் வளர்ச்சி அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது.
இந்த ஓட்டப் பந்தயத்தில் நாம் ஏன் பின்தங்கி உள்ளோம்? நம்மிடம் திறமைக்குப் பஞ்சமில்லை. உற்சாகத்திற்கம் பஞ்சமில்லை. உழைப்புக்கும் பஞ்சமில்லை. ஓட முடியாமைக்குக் காரணம், நம்மைப் பிணித்திருக்கும் சாதி, மத வேறுபாடுகள் என்னும் இரும்புச் சங்கிலிகள், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இலஞ்ச ஊழல்கள்.
ஏழை பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. சாமானிய மனிதர்களின் சகிப்புத் தன்மை இழக்கத் தொடங்கியுள்ளார்கள். சாதிக்கொரு கட்சி, நடிகருக்கு ஒரு கட்சி, என்று கட்சிகள் நாள்தோறும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். தேசத்தை ஒருங்கிணைத்து முன்னேற்றும் தன்னலமற்ற நேர்மையான சக்தி மிக்க தலைவர்கள் யாரும் தோன்ற மாட்டார்களா என்று சாலையோரத்து மனிதனும் ஏங்குகிறான்.
நன்றி - திராவிட ராணி - சனவரி 2008 இதழின் தலையங்கம்
|
முதலாளிகள் திருந்தினால்
முதலாளித்துவ அமைப்பிலே செல்வம் வளரலாம். கோடி கோடியாக வசதிகள் குவியலாம். ஆனால், சமுதாயத்தில் இருக்கின்ற அத்தனைப் பேருக்கும் பரவலாக வாய்புக் கிடைக்குமா? என்றால் கிடைக்காது. அமெரிக்காவையும், மக்கள் சீனாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும், மிகப் பெரிய செல்வம் கொழிக்கிற அமெரிக்கா தான். நீயூயார்க் நகரத்திலே, ஒரு நாள் இரவிலே, வீணாக்கப்படுகிற உணவுப் பொருளை வைத்து சென்னை போன்ற நகரத்திற்கு 40 நாள்கள் உணவளிக்கலாம் என்று டாக்டர சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட அமெரிக்கா தான். அந்த அமெரிக்காவில் வேலை இல்லாத் திண்டாட்டம் இருக்கிறது. பசி இருக்கிறது. பஞ்சம் இருக்கிறது, பட்டினி இருக்கிறது, ஆனால் உலகத்திலேயே மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற மக்கள் சீனாவில், வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை, பசி இல்லை, பஞ்சம் இல்லை, பட்டினி இல்லை என்றால் - அவர்கள் சமத்துவ சித்தாந்தத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
முதலாளித்துவத்தை வாழ வைக்க வேண்டும் என்று கருதுகிற சில பேர், சில புதிய எண்ணங்களை யெல்லம் கூடச் சொன்னார்கள். சில எண்ணத்தைச் சொல்லி முதலாளிகளுடைய மனத்தை மாற்றினால்., அதற்குப் பிறகு சம உடைமை சமுதாயம் வராதா? என்று கேட்டார்கள். சில முதலாளிகள் திருந்தினால், அவர்கள் மக்களுடைய சொத்தைத்தானே நாம் அனுபவிக்கிறோம் என்கிற உள்ளுணர்வைப் பெற்றுவிட்டால், அதற்குப் பிறகு சமுதாயம் மாறாதா? என்று கேட்கிறார்கள். ஆனால் மிகத் தெளிவாக நமக்குத் தெரியும். புலி தன்னுடைய உடலிலே இருக்கிற புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்ளும் - ஆனால் முதலாளித்துவம் தன்னுடைய வசதியை, வாய்ப்பை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்க சம்மதிக்காது.
எந்த ஆதிக்கக் காரனாக இருந்தாலும், எந்தச் சுரண்டல்காரனாக இருந்தாலும் மக்கள் சக்தி கிளர்ந்து எழுந்து, அவனைப் பணிய வைத்தால் தான் பணிவானே தவிர, அவன் தானாக என்றைக்கும் சமுதாயத்தின் முன்னால் வசதிகளை விட்டுக் கொடுத்து, அவர்கள் சம உடைமைக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதற்கு - பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார் - துச்சாதனனைப் போய் திரெளபதிக்குச் சேலை வாங்கித் தரச் சொல்லலாமா? - என்று கேட்டார்.
நன்றி - அ.ந.வணங்காமுடி அனுப்பி வைத்த - கா. காளிமுத்து சிறப்புரை - தொகுப்பேடு.
|
மணல் கொள்ளை
தமிழக நதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளவை.
ஒரு மீட்டர் வரை மணல் எடுப்பதை முறைபடுத்தி அனுமதிக்கும் தமிழக ஆணைகள் எந்த ஆற்றுப் படுகைகளிலும் ஓடைகளிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சட்ட விரோதமான மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மணல் கடத்துபவர்களுடன் கைகோத்துக் கொள்கின்றனர். சட்ட விரோதமான மணல் கொள்ளை மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு முறையான சட்டங்களை இயற்றவில்லை. மணலுக்குப் பதிலாக மாற்று ஒன்றைக் கண்டுபிடிப்பதிலும் அரசு ஆர்வம் காட்ட மறுக்கிறது. ஆனால் கட்டடப் பணிகளுக்கு மணல் என்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. அருகில் உள்ள் மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகியவற்றின் மணல் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் தமிழக மணலை வாங்குகிறார்கள். காவிரி ஆற்றுப் படுகையில் சட்ட விரோதமாக ஒரு மீட்டருக்கு மேல் மணல் எடுப்பதனால் காவிரிக் கரைகளிலிருந்த தாவர உயிரினங்கள் அழிந்துவிட்டன. பாலாற்றிலிருந்து ஏரிகளுக்கு வரும் நீர் ஓட்டமானது அங்கு 20 லிருந்து 30 அடி வரை மணல் எடுத்ததனால் நின்று விட்டது.
தமிழகம் பாலைவனமாகும்
மணல் என்பது நமது நாட்டுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான இயற்கை வளமாகும். ஆற்றுக்குள் எண்பது அடி முதல் 200 அடி ஆழம் வரைக்கும் மணல் இருக்கும். ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதும் அதை மணல் நன்றாக உள்வாங்கி இழுத்துத் தேக்கி வைக்கும். மணல் சேமிப்புக்குப் பிறகுதான் ஆற்றில் தண்ணீர் மேற்கொண்டு நகரும். இப்படி மணலால் சேமிக்கப்பட்ட நீர் ஆறுகளில் தண்ணீர் இல்லாத காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும்.
ஒரு கனஅடி மண் உருவாவதற்கு 200 ஆண்டுகள் தேவைப்படுகிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பல நூறு ஆயிரம் கன அடி மணலைக் கொள்ளையர்கள் வாரிக் கொண்டு போகிறார்கள். மீண்டும் அந்த மணல் சேர்வதற்கு எத்தனை நூறு ஆண்டுகள் ஆகும் என்று கூற முடியாது.
மணல் கொள்ளையில் ஈடுபடக் கூடியவர்கள் எத்தகைய முதலீடும் இல்லாமல் பெருத்த ஆதாயம் அடைகிறார்கள். முதலீடு செய்யாமல் கோடி கோடியாகப் பணம் குவிக்கக்கூடிய தொழில் மணல் கொள்ளையும், கள்ளச் சாராயமும் தான். அதனால்தான் இந்தத் தொழில்களை அரசியல்வாதிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் யார் யார் மணல் கொள்ளையில் ஈடுபட்டு கோடிகோடியாகச் சம்பாதித்த்ார்களோ அவர்களில் பலர் திமுக ஆட்சியிலும் அதே வேலையில் ஈடுபட்டுச் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் கப்பம் கட்டும் இடம்தான் மாறி இருக்கிறதே தவிர கொள்ளை மாறவில்லை.
இதே நிலைமை நீடிக்குமேயானால் தமிழ் நாட்டில் ஆறுகள் எல்லாம் வறண்டு போய் தமிழகம் பாலைவனமாக மாறும்.
நன்றி - தென் ஆசியச் செய்தி - சனவரி 15
இரயில்வே நிர்வாகமே பாலாற்று ஊற்று நீரைக் காலி செய்யாதே
தென்னகத் தொடர் வண்டித் துறை - ரயில் நீர் - என்ற பெயரில் ஒரு பாட்டில் பத்து ரூபாய்க்கு தொடர் வண்டிகளிலும், நிலையங்களிலும் தண்ணீர் விற்கத் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் வரவேற்கத் தக்கதே. ஆனால் இதற்காகக் காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள பாலூர் என்ற இடத்தில் பாலாற்றில் ஊற்று நீர் எடுப்பதுதான் தமிழக நலன்களுக்கு எதிரானது.
இத்திட்டத்தின் கீழ் பாலூரில் ஒரு நாளைக்கு 1,20,000 லிட்டர் பாலாற்று ஊற்று நீரை எடுக்க உள்ளார்கள். இந்த நீர் ஆந்திரா, கர்நாடகா, தமிழக, கேரளப் பகுதிகளில் ஓடும் தொடர் வண்டிகளிலும், நிலையங்களிலும் விற்கப்பட உள்ளது.
பாலாற்றில் தமிழகப் பகுதிக்குத் தண்ணீரே வருவதில்லை. பாலாற்றின் கரையிலுள்ள வேலூருக்கு ஒன்பது நாளுக்கு ஒரு தடவைதான் குடிநீர் வழங்கப் படுகிறது. மேல்வரவு நீரும் ஊற்று நீரும் மிக மிகக் குறைவாக உள்ளது தான் இந்த அவலத்திற்குக் காரணம். ஏற்கெனவே தமிழக அரசு இதே பகுதியில் பாலாற்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடியே எண்பது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னைப் புறநகர் பகுதியில் ஆலந்தூர் வரை வழங்குகிறது.
ஆம்பூர் பகுதியிலிருந்து வெளியேறும் தோல்பதனிடும் கழிவு நிர் காஞ்சிபுரம் வரை ஓடி வந்து ஊற்று நீரைப் பாழ்படுத்தி விட்டது. மிச்சமுள்ள நன்னீரையும் ரயிலி நீர்த் திட்டதிற்க எடுத்துவிட்டால் தோல் கழவு நீர் மேலும் கிழக்கு நோக்கி ஆற்றில் பரவும். பாலாற்றில் எஞ்சியுள்ள ஊற்று நீரும் பயன்படாமல் போய்விடும்,
தமிழகத்தைவிடப் பல மடங்கு ஆற்று நீர் வளம் நிறைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த இரயில் நீர் திட்டத்திற்குத் தண்ணீர் எடுக்கலாம்.
பாலாற்றை மலடாக்கும் இந்த ரயில் நீர்த் திட்டத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. இழந்த காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை நீர் போன்றவற்றை மீட்க முடியாத தமிழக அரசு, இருக்கும் கொஞ்ச நஞ்சத் தண்ணீரையும் பாதுகாக்கும் முயற்சியில் இல்லை.
எனவே பாலாற்று ஊற்று நீரை எடுக்கும் திட்டத்தை தென்னகத் தொடர் வண்டித் துறை கை விடுமாறும், இத்திட்டத்திற்கு வழங்கிய அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறும் கோரி 15-12-2007 அன்று தஞ்சையில் நடந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழுத் தீர்மானம் நிறைவேற்றியது.
நன்றி - தமிழர் கண்ணோட்டம் சனவரி 2008
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|