காதல் மழை
என்னை விட்டு விட்டு
சாமிக்கு
மாலை போடுகிற
உரிமை
உனக்கு
உண்டென்றால்
உன்னை விட்டு விட்டு
வேறொருவனுக்கு
மாலை போடுகிற
உரிமை
எனக்கும்
உண்டுதானே !
- அறிவுமதி
நன்றி : செம்பருத்தி டிச 07
|
மானுடம் போற்றுங்கள்
கருங்கல்லை ஏன்
களங்கப் படுத்துகிறீர்கள்
தலைவர்களின்
சிலைகளைச் செய்து.
பூக்களை ஏன்
புண்படுத்துகிறீர்கள்
மனிதர்களின் கழுத்தில்
மாலையாகப் போட்டு,
ஆடைகளை ஏன்
அசுத்தப் படுத்துகிறீர்கள்
அற்பர்களின்
தோள்களில் போட்டு,
கரங்களை ஏன்
கறைபடுத்துகிறீர்கள்
கயவர்களின்
கைகளைக் குலுக்கி,
அன்பை ஏன்
அசிங்கப் படுததுகிறீர்கள்
ஆகாதவர்களை
ஆராதித்து விட்டு,
மனிதர்களே நீங்கள்
மானுடம் போற்றுங்கள்
சமத்துவ சமுதாயம்
தானே மலரும்,
நன்றி : விகடகவி இதழ் டிச 07
|
கியூபாவில் அனைவருக்கும் கல்வி அனைத்தும் தாய்மொழியில்
அயலார் ஆட்சியில் நமக்கு நேரிட்ட மிகப் பெரிய தீங்கு தாய்மொழிக் கலவியைப் புறக்கணித்ததே என்றார் காந்தியார். இன்றளவும் நம்மை விட்டு நீங்காதத் தீங்கிது.
தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி தரக்குறைவானதாகவும், அங்கிலவழிக் கல்வி தரமுயர்ந்ததாகவும் கருதப்படும் அவலம் ஆட்சி புரிகிறது. தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்த் தமிழே பயிற்று மொழியாக வேண்டும் என்பது இன்னுங்கூட கோரிக்கையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உயர் கல்வித் துறையில் ஆங்கிலிமே பெருமளவில் கோலோச்சுகிறது. தமிழ் வழி மருத்துவம். தமிழ்வழிப் பொறியியல் என்பவையெல்லாம் ஈடேறாக் கனவுகளாகவே இருந்து வருகின்றன.
பயிற்று மொழிச் சிக்கல் ஒரு புறமிருக்க, தமிழைப் பயில் மொழியாகக்கூட ஏற்றுக் கொள்ளாத கல்வித் திட்டங்களும் பள்ளிக்கூடங்களும் தமிழ் நாட்டில் தங்கு தடையின்றிச் செயல்பட்டு வருகின்றன. முதல் வகுப்பில் மட்டும் தமிழைக் கட்டாயப் பயில்மொழி ஆக்கினால் அதுவே அருஞ்சாதனையாகக் கருதப்படுமளவிற்கு தமிழின் நிலை மோசமாகிவிட்டது.
அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை அடைவதில் பெரும் வெற்றி கண்டுள்ள கியூபாவின் கல்விமொழி என்ன? அதாவது பயிற்று மொழியும் முதல் பயில் மொழியும் என்ன? இரண்டாம் பயில் மெழி என்ன ? அவற்றை அவர்கள் எப்படிக் கற்கிறார்கள்?
கியூப மக்களின் தாய்மொழி - அவர்களின் தேசிய மொழி - ஸ்பானியம் ஆகும். அவர்களின் பொதுமொழி, ஆட்சி மொழி, தொடர்பு மொழி, நீதி மொழி, கல்வி மொழி எல்லாமே ஸ்பானிய மொழிதான். கியூபாவின் கல்விக் கூடங்கள் அனைத்திலும் அனைத்துக் கல்விக்கும் ஸ்பானிய மொழியே பயிற்று மொழி. வட அமெரிக்காவிலிருந்து 90 மைல் தொலைவிலிருந்தும் கியூபாவில் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் என்பதெல்லாம் கிடையாது. தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை எல்லாமே ஸ்பானிய மொழிக் கல்விதான்.
பயிற்று மொழி மட்டுமல்ல, கியூப மாணவர்களின் முதல் பயில்மொழியும் ஸ்பானியம்தான். ஐந்தாம் வகுப்பு முடிய அவர்கள் பயிலும் மொழி ஸ்பானியம் மட்டுமே. ஆறாம் வகுப்பிலிருந்துதான் இரண்டாவது மொழியாக ஏதேனும் ஓர் அயல் மொழியைக் கற்கிறார்கள். அயல் மொழி என்பது ஆங்கிலம், பிரெஞ்சு அல்லது உருசிய மொழியாக இருக்கலாம். வேற்று மொழியை வலிந்து திணிக்கும் கொடுமை கியூபாவில் இல்லை.
கியூபா நாட்டுக் குழந்தைகள் முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு முடிய கணக்கு, ஸ்பானியம் ஆகியவற்றைக் கற்பதோடு, நாம் வாழும் உலகம் என்ற தலைப்பில் இயற்கை, சமூகம் தொடர்பான எளிய செய்திகளையும் பயில்கிறார்கள், மேலும் உழைப்புக் கல்வி, உடற்கல்வி, கலைக் கல்வி ஆகிய பர்டங்களும் கற்பிக்கப் படுகின்றன. ஐந்தாம் வகுப்பில் வரலாறு, இயற்கை அறிவியல், விழுமியக் கல்வி ஆகிய பாடங்களும் சேர்க்கப் படுகின்றன. ஆறாம் வகுப்பில் புவியியல் பாடமும் அயல்மொழிப் பாடமும் சேர்க்கப் படுகின்றன.
ஏழாம் வகுப்பில் தொடங்கி ஸ்பானிய மொழிப் பாடத்தின் இடத்துக்கு ஸ்பானியம்- இலக்கியம் என்ற பாடம் வந்து சேர்கிறது. ஏழாம் வகுப்பில் உயிரியல் கல்வியும் எட்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் கல்வியும் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்புடன் நடுநிலைக் கலவி நிறைவடைகின்றது.
மேல்நிலைக் கல்வியில் பத்தாம் வகுப்பிலிருந்து கணினிப் பாடம் சேர்க்கப் படுகிறது. அடிப்படை இராணுவப் பயிற்சியும் தொடங்குகிறது. 11, 12 ஆம் வகுப்புகளில் மார்க்சிய - லெனின் அடிப்படைகள் கற்றுத் தரப்படுகின்றன. 12 ஆம் வகுப்புடன் மேல் நிலைக் கலவி நிறைவடைகிறது. நாடு முழுமைக்கும் ஒரே பள்ளிக் கல்வித் திட்டம்தான் கடைபிடிக்கப் படுகிறது. - தியாகு -
நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் - டிச 07
|
வேளாண்மையை நலிய விட்டது அரசு
சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆன பிறகு, 10 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, 14 தடவைகள் தேர்தல்கள் நடந்த பிறகு, வேளாண்மைத் தொழிலுக்கு உயிரான பாசன வசதி இங்க வேகமாக விரிவுபடுத்தப்பட வில்லை. 2007 இல் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் வேளாண்மைக்கு எந்த முதன்மையும் இந்திய அரசு தரவில்லை. எப்படி இதை அறிகிறோம்?
1) இந்தியாவில் பயிர் சாகுபடி நிலங்களின் பரப்பு 14.2 கோடி எக்டேர்
2) பாசன வசதி பெற்ற நிலங்களின் பரப்பு 4.7 கோடி எக்டேர்
3) வானம் பார்த்த நிலங்களின் பரப்பு 9.5 கோடி எக்டேர்.
வரப்போகும் 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ 1,50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு மட்டும் ரூ65,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது, ஆனால் 72 கோடி மக்கள் சார்ந்துள்ள வேளாண்மைக்கு வெறும் ரூ 25,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
2006 நவம்பரில் 1.1 கோடி டன் கோதுமையை மட்டுமே, இந்திய விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தது. இதற்குக் குவிண்டாலுக்கு விலை ரூ 850 தந்தது. ஆனால் 2007 அக்டோபரில் ஒரு குவிண்டாலுக்கு ரூ 1,500 விலை தந்து, சுமார் 8 இலட்சம் டன் கோதுமையை இந்திய அரசு இறக்குமதி செய்தது. இப்படிச் செய்தது சரிதான் என்று, திரும்பத் திரும்ப இந்திய வேளாண் அமைச்சர் கூறுகிறார்.
உண்மூம் எண்ணெய் இப்பொழுது 1.25 இலட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை வாங்கி உண்போருக்கு மானிய விலையில் விற்க வேண்டும். பாரம்பரிய இந்திய எண்ணெய் வித்துகளான நிலக்கடலை., எள், ஆமணக்கு, கடுகு இவற்றை வேளாண்மை செய்வோருக்கு ஊக்க மானியம் தந்து உள்நாட்டில் உண்ணும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அரசு பெருக்க வேண்டும்.
மரபு சார்ந்த மின் ஆக்கம் என்பதை விரிவாகவும் வேகமாகவும் செய்வதை விட்டு விட்டு - மோட்டார் கார் உற்பத்திச் சாலைகளை நாள்தோறும் உருவாக்கி, வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர மக்களுக்குக் காரில் மேல் ஆசை காட்டி, அவர்கள் தலையில் கார்களைச் சுமத்தி அவர்களைக் கடன்காரர்களாக ஆக்கி, அதன் மூலம் ஹூண்டாய், தேவோ, டாடா முதலான பன்னாட்டு மற்றும் நம்நாட்டுக் குழுமங்கள் பண்த்தில் கொழுப்பதற்காக வேண்டி - தாவர எரிபொருள் எண்ணெய் உற்பத்தியை வளர்நத நாடுகள் ஊக்குவிக்கின்றன.......
நன்றி : சிந்தனையாளன் - டிச 07
|
இதழுக்கு ஆண்டுக் கட்டணமாக
ஒடுக்கப்பட்டோர் குரல் இதழை நடத்துபவர் சங்கமித்ரா அவர்கள். பெரியார் கருத்துகளை உள்வாங்கிய தரமான படைப்பாளி - பல ஆண்டுகளாக எழுதி வருபவர். இவரது எழுத்துகள் நுட்பமானவை.
டிசம்பர் இதழில் இவர் இப்படி வெளியிட்டுள்ளார்...
தோழர்களே...இதழுக்கு ஆண்டுக் கட்டணமாகப் பணம் கொடுக்க முடியாதவர்கள்..
1) ரூ 1 க்கு அஞ்சல் தலை 100 அல்லது 200 அனுப்பலாம்.
2) 9 x 6 அளவுள்ள உறை 500 அல்லது 1000 அனுப்பலாம்.
3) நேரில் பார்க்கும் பொழுது கையில் இருக்கும் 50 - 100 - 1000 தரலாம்.
4) உறவினர் நண்பர்கள் - கொடுக்க வைக்கலாம்
4) திருமணம், பிறந்தநாள் பரிசு என்று இதழுக்கு ஆண்டுச் சந்தா, ஆயுள் சந்தா அனுப்பலாம்.
எனது பத்திரிகையைப் பற்றி நான் மட்டும் நினைத்தால் போதுமா? நீங்களும் நினைக்க வேண்டாமா?
இன்றையை சூழலில் சிறுபத்திரிகை அதுவும் கருத்துச் செறிவுடன் நடத்துவது என்றால் இப்படி நடக்கும் என்பது உண்மைதான். ஒவ்வொரு இதழும் அவர்களது அனைத்துப் பொருளாதாரத்தையும் விழுங்கிவிட்டுத் தான் வெளிவருகிறது.
|
எதை ஒழிக்க, எதை மறுப்பது - கட்டுரையில்...
அரிமாவளவன்
இன்றைய பல சமூகக் கட்டுமானங்களின் தோற்றம் மருத நில வாழ்வியலில் இருக்கிறது. பெருந்தெய்வ வழிபாடு, குலங்கள், படைவழி ஆட்சி, அரசுகள் போன்றவற்றின் அடிச்சுவடுகள் தமிழர்கள் மருத நில வாழ்வியலைத் தழுவிய போது உருவானவை.
முறைபடுத்தப் படாத படை வழித் தாக்குதல்கள் அல்லது கரந்தடிப் போர் என்கிற நிலை மாறி முறைபடுத்தப்பட்ட படை ஆட்சி வந்தது. உழவுத் தொழிலில் கவனம் செலுத்தச் செலுத்த ஒட்டு மொத்தக் குழுவும் போருக்குப் போவது இயலாததானது. எனவே குடும்பத்திற்கு ஒருவர் படைக்குச் செல்வது என்ற நிலை வந்தது. நிலப்படை வந்தது. படைஆட்சி வந்தது. படையாச்சி உருவானது, மக்களைக் காக்க தீரச் செயல் புரிந்து பெரு வெற்றி நாட்டியவர்கள் தேவர் ஆனார், மறவர் ஆனார், போரின்றி தனித்திருந்த படை உலகெங்கும் செய்கிற வன்செயல்களைச் செய்யும் போது கள்ளருமானார். இப்படிப் படைவழிச் சாதிகள் பல உருவாயின.
வெள்ளத்தை ஆளும் வெள்ளாளரும், வேளாண்குடி வேளாளரும், குடும்பத்தாரும் மருதநில முதற்குடியாம். மள்ளரும் உருவாயினர். மருத நிலம் கொடுத்த ஓய்வு ஆய்வுக்கு வழி கோலியிருக்க வேண்டும். அறிவார்ந்த மாந்தர் ஆய்வுகள் பல செய்தனர். மறைகள் உருவாயின. மறையர்கள் உருவாயினர். அவர்கள் வடுகர் பின்னாளில் பறையர் என்று இழித்துரைத்தனர். இப்படித் தமிழரின் வாழவியல் மருத நிலம் சமூக ஒப்பந்தத்திற்கும் கட்டுமானங்களுக்கும் வலிகோலின. இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, போன்றவைகள் எல்லாம் பின்னர் பின்னிப் பிணைந்து மெய்யியல் தேடலின் வழியாக பெருந்தெய்வ வழிபாடுகளாகத் திரிந்தன. வழிபாடுகள் முறைபடுத்தப் பட்டன. மந்திர தந்திரங்கள் உருவாக்கப் பட்டன.
காடுகள் கழனியாக்கப் பட்டன. நெல் தோன்றியது. உழவுத் தொழில் தோன்றியது. நிலம் பண்படுத்தப் பட்டது. மக்களும் பண்பாடு பெற்றனர். நாகரிகம் உருவானது. பருத்தி ஆடை வந்தது. குடும்ப உறவுகள் சீர்பட்டன. பக்குவமாய் மக்கள் பழகும் பாங்கைப் பெற்றனர். இப்படி நாகரிகத்தின் தொட்டிலாக மருத நிலம் இருந்தது.
அற்புதமான காணியாட்சி முறையைத் தமிழரின் கண்டுபிடிப்புகள். கலைகள், வணிகம், கப்பல் (நாவாய்), அணுவியல், வானியல், மருத்துவம், மறைநூல்கள், இறையியல், மெய்யியல் என்று தமிழனின் கண்டுபிடிப்புகள் பரந்து விரிந்தன.
தெற்கே இன்றைய ஆத்திரேலியாவிலிருந்து வடக்கே பனிமலையாம் இன்றைய இமயம் வரைப் பரந்து விரிந்து கொடி கட்டி ஆண்டான் தமிழன். கடலின் சீற்றத்தால் அவர் நாடு குறுகியது. இலெமூரியாக் கண்டம் கடலுக்குள் மூழ்கியது.பஃருளி ஆறும் பன்மலையடுக்கத்து குமரிக் கோடும் ... என்று சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்ட சுருங்கிய தமிழகம், பின்னர் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பியர் காலத்தில் தமிழகம் சிறுத்தது. திராவிடத்தின் கைங்கரியத்தால் 1956 இல் இன்றைய தமிழ்நாடாகச் சூம்பியது.
நன்றி : உயிர்த்த பார்வை டிச 07
|
கச்சத்தீவு
தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான். 1974 இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்து விட்டார்.
கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது.ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும். இலங்கை எல்லைிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதிதான். ஆனால், இது மீனவர்களின் சொர்க்கபூமி. மீன்களின் உற்பத்திக்கான சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கி விட்டது. கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.
இப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காணும் நோக்கில் - கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும் - என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப்பயணிகள் சென்று வரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5, 6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருட்படுத்துவதில்லை.
1977 க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.
இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை. நடைமுறைபடுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் திடீரென கோரிக்கை எழும். அடங்கிவிடும். மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.
இந்திய - இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலவே தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமை உடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்து போக இலங்கை அரசிடம் எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெறவேண்டியதில்லை.
இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்.
இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா? இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?
நன்றி - கடலார் இதழ் டிசம்பர் 2007
|
அணுப்பிணைவு ஆற்றல்
அணுவைப் பிளந்தாலும் ஆற்றல்தான், பிணைத்தாலும் ஆற்றல்தான். தற்போது மற்றொரு விதமான அணுசக்தியைக் குறித்து உலகம் முழுவதும் அறிவியல் அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர். அதுதான் அணுப்பிணைவு. அணுப்பிணைவு மூலம் உருவாக்கப்டும் ஆற்றல் அணுப்பிளவின் மூலம் உருவாக்கப்படும் ஆற்றலைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு அதிகம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் வெளிப்படும் ஆற்றல் கட்டுக்கடங்காத பேராற்றலாக இருப்பதால் கையால்வதில் சிரமம் உள்ளது.
அணுப்பிணைவால் மட்டற்ற ஆற்றல் வெளிப்படுவதால் இவ்வினை நடைபெறும் இடத்தைத் சுற்றியுள்ள பொருள்கள் யாவுமே உருகி, பிளாஸ்டமா நிலையை அதாவது திடநிலையோ, திரவமாகவோ, வாயுவாகவோ இல்லாமல் அனைத்துமே தீக்குழம்பு போன்ற நிலையை அடைந்துவிடும். அந்த வினை நடைபெறும் சோதனைக்கூடம், ஆய்வுக்கான உபகரணங்கள் என அனைத்துமே தீக்குழம்பாகிவிடும். அந்த அளவுக்கு வெளிப்படும் வெப்பத்தை எப்படிக் கட்டுப்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்துவது? - என்பதே அறிவியலாளர்களின் முன் உள்ள வினா?
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையிலான ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டுவிட்டால் ஆற்றல் பிரச்சனை அறவே அகன்றுவிடும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு செயற்கைச் சூரியனையே பூமியில் உருவாக்கும் முயற்சி இது. இதற்காக உலகின் சில நாடுகள் இட்டெர் என்ற பெயரில் அழைக்கப்டும் சர்வதேச அணுப்பிணைவு ஆய்வில் ஒன்று சேர்ந்துள்ள. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யா, ஐப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பில் இந்தியா 2005 இல் சேர்த்துக் கொள்ளப் பட்டது,
நன்றி - சுற்றுச் சூழல் புதிய கல்வி - டிசம்பர் 2007
|
அணுசக்தி ஒப்பந்தம்
இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 43 விழுக்காட்டினர் இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்துள்ளனர். 57 விழுக்காட்டினருக்கு இந்த ஒப்பந்தம் குறித்து எதுவுமே தெரியவில்லை. இதுதான் நம் மக்களின் நிலை.
இந்த ஒப்பந்தத்தை 123 உடன்படிக்கை என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதே பலருக்கும் புரியவில்லை. அமெரிக்காவில் 1954 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அணுசக்தி சட்டம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த சட்டத்தின் 123 வது பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகவே இதற்கு 123 உடன்படிக்கை எனப பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு சரத்து இரண்டு நாடுகளிடம் உள்ள சட்டங்கள் இந்த ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகத் தெரிவிக்கிறது. அணுசக்தி உடன்பாடு தொடர்பாக நமக்கு இதுவரை எந்தச் சட்டமும் இல்லை. அவர்களுக்கு ஹைடு சட்டம் இருக்கிறது.. ஆகவே இநத ஒப்பந்தம் அமுல்படுத்தும் பொழுது அனைத்து மட்டங்களிலும் அமெரிக்காவில் நிறைவேற்றப் பட்டுள்ள ஹைடு சட்டம் தான் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் என்பது தெளிவான உண்மை.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட் சபையில்) இந்தியாவிற்கு நற்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை, அமெரிக்காவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொடர்கிறது என்ற ஆண்டுக்கு ஒருமுறை நற்சான்றிதழ் அளிக்கப்படவேண்டும்.
இந்தியாவிற்கு அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அனல் மின்சாரம், புனல் மின்சாரத்திற்கான வசதி நமது நாட்டில் அபரிதமாக இருக்கையில் அதன் உற்பத்திச் செலவும் மிகவும் குறைவாக இருக்கையில், இந்திய அமெரிக அணுசக்தி பேரத்தின் மூலமாக அதிக பொருட்செலவில் அணுசக்தி மின்சார உற்பத்தி தேவையே இல்லை. அதுமட்டுமல்ல, மின்சாரம் தயாரிக்கத் தேவையான,நாட்டில் ஏராளமாகக் கிடைக்கிற நிலக்கரியை தங்குதடையின்றி ஏற்றுமதி செய்துவிட அனுமதித்துவிட்டு, மின்சாரம் பெறுவதற்கு அமெரிக்கா சொல்கிற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் வியப்பைத் தருகிறது.
நன்றி - அமுதம் டிசம்பர் 2007
|
அணு ஆராய்ச்சி
இந்தியா அணுஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையொப்பம் இடாத நாடாகும். ஆகவே, இந்தியா தனது அணுசக்தித் திட்டங்களில் - எரிபொருளை மறுசுழற்சி செய்து - மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் - அமெரிக்கச் சட்டப்படியும் அணுமூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் விதிமுறைகளின் படியும் முழுமையான பாதுகாப்பு உடன்படிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அணுமூலப் பொருள்கள் வழங்கும் நாடுகளின் கண்காணிப்புக்கு உட்படாத இந்தியாவின் அணுஉலைகளுககு அணுசக்தித் தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை - ஹைடு சட்டம் - தடை செய்கிறது. இதன் மூலம் அணுசக்தித் தொழில் நுட்பங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெறவேண்டும். எனில் சர்வதேச நாடுகளின் சார்பில் அமெரிக்காவின் கண்காணிப்புக்கு இந்தியாவின் அணு உலைகள் அனைத்தையும் திறந்து விட வேண்டும் - என்று ஹைடு சட்டம் திட்டவட்டமாகக் குறிக்கிறது.
இந்திய அணுசக்தித் துறையின் 40 ஆண்டுக்கால கடும் உழைப்பினாலும், இடைவிடாத ஆராய்ச்சியாலும் நமது அணுசக்தித் திட்டங்கள் மூனறடுக்கு முறையில் (three stage nuclear programme) வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக இயற்கையான யுரேனியத்தைப் பயன்படுத்தி இயங்கும் கனநீர் அணுக்கரு உலைகள் (pressurised heavy water reactors = PHWRS) இயங்கி வருகின்றன.
இரண்டாவது கட்டமர்க அதிவேக ஈணுலைகள் செயல்படுகின்றன (prototype Fast Breeder Reactors - PEBR )
மூன்றாவதாக தோரியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் முன்னேற்றம் அடைந்துள்ள கனநீர் அணுக்கரு உலைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன (Advanced Heavy water Reactors - AHWR )
இவற்றில் எரியூட்டப்பட்ட யூரேனியத்திலிருந்து புத்தாக்கம் செய்யப்பட்டு - புளூட்டோனியம் தயாரிக்கப் படுகின்றது. அணு ஆயுதங்கள் உருவாக்கத்திற்கு இந்தப் புளுட்டோனியம் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நன்றி - சங்கொலி வார இதழ் - 21-12-2007
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|