குறும்பாக்கள்
(o) தொடர்ந்து வெட்டுக் காயம்
சீழ் வெடிக்கும்
இரப்பர் மரம்
(o) மருந்துகளால் தீரலாம்
வெறி நாய்க் கடி
சாதி வெறி ?
(o) குயவனின்
மனைவி இடுப்பில்
சில்வர் குடம்.
(o) குழந்தையை
தூக்கிக் கொண்டு நீ
யாரை நான் கொஞ்ச?
நன்றி : ஏழைதாசன் இதழ் - நவம் 2007
|
காது கேட்காது
அய்யாதான் சொன்னார் அரசியல் வேண்டாமென
அவருடைய பட்டறிவு அப்போது புரியவில்லை
அய்யாவின் கொள்கைகள் அவனிக்குப் பயன்படவே
அண்ணாவும் படைகுவித்து அரசியலில் வென்றிருந்தார்
அய்யாவும் அண்ணாவும் அத்தனை இளைஞர்களும்
அரும்பணி செய்வோமென அன்றைக்கு நினைத்திருந்தோம்
பொய்மையை வென்றெடுத்துப் புத்துலகைப் படைத்துவிட
புறப்பாட்டுப் பாடிநின்றோம் பொன்னான வாய்ப்பென்று.
இன்றைய நிலையென்ன? ஏமாந்த வரலாறே
இதயமும் வலிக்கிறது எங்கேநாம் நிற்கின்றோம்
அன்றைய உணர்வுகளை அரசியல் தின்றதம்மா
ஆர்ப்பாட்டம் வெடிச்சத்தம் அறிவை மயக்குதம்மா
அன்றைய இளைஞர்கள் அமைச்சராய் ஆனபின்பு
அவருணர்வு மங்கியதா? அரசியல் அரிந்துவா
இன்றை நம்நாடு இவ்வாறு இளைப்பதற்கு
என்னுள்ளம் கூறுவதை எழுத்தாலே வைக்கின்றேன்,
பதவிக்கு வரும்முன்பு பகுத்தறிவு பேசியவர்
பாராள வந்தவுடன் பல்லவியை மாற்றிவிட்டார்
பதவியைத் தேடுகிறார் பன்றிபோல் ஓடுகிறார்
பம்பரமாய்ச் சுழலுகிறார் பணத்தினைச் சேர்ப்பதற்கு
உதவியாய் நம்மிடத்தில் ஓயாமல் கேட்பதெல்லாம்
ஓட்டுதான் தந்துவிட்டால் உட்கார்ந்து கொள்வார்கள்
கதறிதான் அழுதாலும் கண்டனம் செய்தாலும்
காதுக்ள் இவர்களுக்குக் கட்டாயம் கேட்காது.
பாவலர் எழுஞாயிறு - சங்கு இதழில் - நவம்பர் 2007
|
தமிழ் அறிஞர் - எல்லீஸ் துரை
அவரது பெயர் பிரான்சு ஒயிட் என்பதாகும். ஆளுநர் மன்றோவும் எல்லீசும் 1835 இல் சென்னையில் தமிழ் நூல்களின் அச்சகச் சட்டம் கொண்டு வந்து பல தமிழ் நூல்களைப் பாதுகாக்க வழி செய்தனர்.
எல்லீஸ் 1825 க்குப் பின் சென்னையில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவி பல ஓலைச் சுவடிகளைச் சேகரிக்க வழி செய்தார். அன்று வரை சேகரித்ததில் ஜியார்சு ஆரிங்டன் துரையின் பட்லர் கந்தப்பனிடமிருந்து பெற்ற திரிக்குறள் (திருக்குறள்) மூலம். திரிவள்ளுவமாலை, நாலடி நானூறு ஆகும். திரிக்குறள் சுவடிகளைப் புலவர் தாண்டவராய முதலியான், மானேஜர் முத்துச்சாமி பிள்ளையால் பரிசோதித்து, 1831 இல் விளக்கமுடன் முதன் முதல் அச்சிலேற்றியவர் எல்லீஸ் துரை அவர்களே. இப்பதிப்பில் வள்ளுவரைப் பற்றி எந்தக் கட்டுரைகளும் இல்லை. எல்லீசு பன்மொழிப் புலவர். தென்னிந்திய மொழிகளையும் ஆழமாக ஆராய்ந்து இம்மொழிகள் வெவ்வேறு குடும்பத்தின என்றும், வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன் முதலில் கூறிய மேனாட்டினர் இவரே. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தின என்றும் அம்மொழி குடும்பத்திற்குத் தென்னிந்திய மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார். எல்லீசுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி இராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு திராவிட மொழிக் குடும்பம் எனப பெயரிட்டார்.
எல்லீசின் மரணம் மருமமாக இருந்துள்ளது. இவர் தனது நூலில் கிருத்துவ சமயத்தைக் குறிக்க பராபரன் என்பதற்கு மாறாக நமச்சிவாய என எழுத, இதனைக் கண்ட கிருத்துவ சமயிகள் கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக இந்து சமயத்தைப் பரப்புகிறார் எனக்கருதி இவரைக் கொல்ல முயன்றனர். எல்லீஸ் தாயுமானவர் அடைக்கலமான இடமான மதுரைத் தமிழ்ச் சங்கம் சென்று அத்தலத்தை வணங்கி மதுரைக் கலெக்டர் ரூஸ் பெட்ரோவின் விருந்தினராக இருந்தார். அங்கே அவர் உண்ட உணவில் நஞ்சு கலந்தமையால் சில் நொடிகளில் இறந்துள்ளார். அவரது மறைவிற்குப் பிறகு. அவரது உடைமைகள் ஏலத்தில் விடப்பட்டு அவர் சேகரித்து வைத்திருந்த ஓலைச் சுவடிகளை அவரது சமையற்காரரே பல திங்கள் அடுப்பெரித்து சமைத்து எரித்துள்ளான் - என்றால் எத்தனை அரிய சுவடிகள் தமிழுலகம் இழந்துள்ளது - என சர்.வால்டர் ஸ்காட் எழுதியுள்ளார்.
இன்னும் எல்லீஸ் குறித்து அறிய வேண்டின் மயிலை சீனி வேங்கடசாமியின் கிறித்துவமும் தமிழும், ஆர.பி.சேதுப்பிள்ளையின் எல்லீசார் கண்ட குறள் மற்றும் திருக்குறள் (அறப்பால்) 1952 காண்க.
சீ. சீனிவாசன், தொடர்வழித்துரை மேநாள் உதவி கணக்காளர். பெங்களூர்.
நன்றி - தமிழர் முழக்கம் - நளி திருவள்ளுவராண்டு 2038
|
குமரிக் கண்டம்
குமரிக் கண்ட உண்மையை உலகம் அறியக் கடலடியில் தொல்லியல் ஆய்வுகள் தேவை.
(நா,நந்திவர்மன் - திராவிடப்பேரவை)
ஈராயிரம் ஆண்டுப் பழமை பற்றிய பெருமிதம் சொற்பொழிவாற்றும் தமிழறிஞர்கள் உரையின் உள்ளீடாகத் திகழும், அடிக்கடி நாம் பயன்படுத்தும் இச்சொற்றொடரில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கிரகாம் அன்காக் (Graham Hancock) பூம்புகார்க் கடலடியில் ஆய்வு செய்தவர். அரிய சான்றுகளை வெளிக்கொணர்ந்தவர். அந்தத் துறைமுக நகரம் 9500 ஆண்டு முந்திய சிறப்புக்குரியது என்று தினமணி நாளேட்டின் வழி அவர் கூறி இருநதார். அவர் அண்மையில் வெளியிட்ட நூல் தமிழர்கள் படித்தறிய வேண்டிய அரிய நூலாகும். UNDER WORLD - THE MYSTERIOUS ORIGINS OF CIVILIZATION என்ற 760 பக்கமும் 27.50 டாலர் விலையும் கொண்ட இந்நூல் 2002 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
அந்நூல் எழுத அவருக்குச் சான்றாகக் கிட்டியவை டர்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிளென் மல்னி உருவாக்கிய கடற்கோள்களால் மூழ்கடிக்கப்பட்ட நாடுகள் பற்றிய வரைபடங்களாகும். இன்றைக்கச் சற்றேறக்குறைய 17,000 ஆண்டுக்கும் 8000 ஆண்டுக்கும் இடையேயும் மூன்று கடல் கோள்களும் நில அமிழ்வும் நடந்துள்ளன என அறிஞர் பலர் கருதுகின்றனர். இதில் இரண்டாம் கடல் கோள் நிகழந்த 12 ஆயிரமாண்டுக்கும் 11,000 ஆண்டுக்கும் இடையில்தான் பூம்புகாரும், குமரிக் கண்டமும் கடலால் விழுங்கப்பட்டுள்ளன. அறிஞர்
பிளாட்டோ எழுதிய TIMAEUS AND CRITIAS என்னும் நூல் நிலநடுக்கங்களாலும் கடல்கோள்களாலும் அட்லாண்டிசு அழிந்ததைக் கூறும் இலக்கியச் சான்றாகும். அந்தக் காலக்கட்டத்தில்தான் குமரிக்கண்டம் மூழ்கியது.
பிளாட்டோவின் இலக்கியச் சான்றை ஏற்பார்கள். ஆனால் பைந்தமிழ்ப் பாவலர்களின் இலக்கியச் சான்றுகளை ஏற்க மறுப்பார்கள். எனவே கடலடியில் அகழ்வாய்வு முயற்சிகள் நடந்தாக வேண்டும். கடலடியில் மூழ்கிய கப்பல்களைத் தேடி வந்துள்ளது மாந்த இனம். கடலடியில் நாகரிகங்களைத் தேடும் குறிக்கோளுடன் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.
கிரகாம் அன்காக் அவர்களும் சென்னையில் உள்ள தேசியக் கடலியல் நிறுவனத்தின் நீரில் மூழ்கித் தேடும் வல்லுநர்களும் இணைந்து பூம்புகார் அருகே கடலுக்குள் தேடிய பொழுது ஆங்கில U எழுத்து வடிவிலான கட்டிடங்களை 23 மீட்டர் ஆழத்தில் கரையில் இருந்து 5 கி.மீ தூரத்தில் கண்டு பிடித்தனர். இந்நகரம் 11.000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு அன்காக் வருகிறார். இது தொடக்கம், தொடர வேண்டிய பணியின் தொடக்கம். குமரிக் கண்டம் இருந்ததாக இலக்கியங்கள் கூறும் இந்துமாக்கடலில் எந்த ஆய்வும் தொடங்கப்படவில்லை. தொடங்கினால் மூழ்கித் தேடினால் தமிழர் தம் பழம் புகழை ஞாலமறிய முடியும்.
எத்தனை நாளுக்குத்தான் சிந்துவெளி ஆய்வுகளை மட்டுமமே பேசிக் கொண்டிருப்பது ? புதிய ஆய்வுகளுக்கு உலகின் பல நாடுகளும் பல்கலைக் கழகங்களும் ஆர்வம் காட்டும். ஊக்கமளிக்கும். ஆயின், அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும் அரசின் பங்களிப்பை உறுதி செய்வதும் நிலையான புகழெய்திட முத்தமிழ் அறிஞர்களுக்குக் கிடைத்த நல் வாய்ப்பாகும்.
முதல்வர் இருக்கையில் உள்ள போதே குமரிக் கண்டம் பற்றி முதல்வர் சிந்திப்பாரா ?
நன்றி - தெளிதமிழ் நளி திருவள்ளுவராண்டு 2038
|
மலேசியத் தமிழர்கள்
மலேசியாவில் அமைதிவழியில் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்க முயன்ற இந்திய வழித்தோன்றல்கள் குறிப்பாகத் தமிழர்கள் அந்நாட்டுக் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த நவம்பர் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 20,000 இந்தியர்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் மையமான பெட்ரோனாஸ் டவர் அருகே கூடினர். அவர்களுக்குள் பலர், மகாத்மா காந்தியின் படத்தைத் தங்கள் கழுத்துகளில் கட்டித் தொங்கவிட்டு இருந்தனர். இதன்மூலம் அமைதிவழியில் அறவழியில் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காகத் தாங்கள் திரண்டு இருப்பதை எடுத்துக் காட்டினர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள் ஆவார், மலேசியாவின் இரப்பர் தோட்டங்களில் உழைப்பதற்காக, இங்கிலாந்து நாட்டின் காலனி ஆட்சியாளர்களால் தமிழகத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் 19 ஆம் நூற்றாண்டில் மலேசியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர், அன்று முதல் இன்று வரையிலும் அந்தத் தொழிலாளர்களும், அவர்களது வழித் தோன்றல்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த 150 ஆண்டுகளாகத் தங்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற் கொடுமைகளுக்குத் தாங்கள் பட்ட வேதனைகளுக்கு, இங்கிலாந்து அரசு 4 டிரில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என மலேசியாவில் உள்ள இந்தியர் வழித்தோன்றல்கள், லண்டன் நீதிமன்றத்தில் இங்கிலாந்து நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து உள்ளனர். மேலும் லண்டனில் வழக்கு நடத்துவதற்குத் தேவையான செலவுகளையும் ஈடுகட்டத் தங்களால் இயலாது என்பதால், தாங்கள் தொடுத்து உள்ள வழக்கில், தங்கள் சார்பில் வாதிட, வழக்குறைஞர் ஒருவரை நியமித்திட ஆவன செய்திடுமாறு, இங்கிலாந்து நாட்டு அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு, இரண்டு பக்க அளவிலான கோரிக்கை விணணப்பத்தினை, கோலாலம்பூரில் உள்ள இங்கிலாந்து நாட்டுத் தூதரிடம் கொடுப்பதற்காக பேரணியாகச் செல்வதற்குத் திரண்டு இருந்தனர்.
ஆனால் சுமார் 5000 மலேசியக் காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், உயர் அழுத்தத்தில் தண்ணீரைப் பீச்சி அடித்தும் அமைதியாகத் திரண்டு நின்றவர்களைத் தாக்கி விரட்டி அடித்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். 190 பேர்களைக் கைது செய்து இருக்கின்றனர்.
மலேசிய நாட்டின் மக்கள் தொகையில் 8 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவார். அவர்களுள் 90 விழுக்காட்டினராக இருக்கின்ற தமிழர்கள் நிலைமையோ பரிதாபகரமாக இருக்கின்றது,. தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஒடுக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழ்ப் பள்ளிகள் சிதிலமாகிக் கிடக்கின்றன. கடுமையான உடல் உழைப்பால் மலேசிய நாட்டின் காடு கழனிகளைத் திருத்தி, விவசாயத் துறையில் அந்த நாடு உயர்ந்த நிலையை அடைவதற்குத் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைத் வியர்வையைச் சிந்திய தமிழர்கள் இன்று கல்வி, வேலைவாய்ப்பு, அரசு உதவித் தொகை பெறுதல், உடல்நலம், மருத்துவ வசதிகள் என அனைத்திலும் கடைசி வரிசையிலேயே இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் மலேசிய நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல், மலேசியத் தமிழர்கள் வழிபடுகின்ற இந்துக் கோவில்கள் அண்மைக்காலமாக மலேசியாயவின் பல பகுதிகளில் இடித்து, நொறுக்கப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.
மகாத்மா காந்தி வழியில் தங்கள் உணர்வுகளைத் தெரிவிப்பதற்காக அமைதியாகத் திரண்டு வந்த இந்தியர் வழித்தோன்றல்கள் மீது, அடக்கு முறையைக் கட்டு அவிழ்ததுவிட்டு இருப்பது வேதனைக்குரியது. அதுமட்டுமல்லாமல் இந்தியர் வழித்தோன்றல்களை எச்சரிப்பது போல மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி பேசி இருப்பது அதிர்ச்சி அளிப்பதுடன் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே மலேசியாவில் வாழ்கின்ற இந்தியர் வழித் தோன்றல்களைப் பாதுகாக்க இந்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை வேண்டுகிறேன் - வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதம் - சங்கொலி 7-12-2007
|
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
1) அன்னை தெரசா - 1979 - நோபல் அமைதிப் பரிசு
2) இரவிந்திரநாத் தாகூர் - 1913 - இலக்கியம்
3) டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேர் - 1983 - இயற்பியல்
4) சர்.சி.வி.இராமன் - 1930 - இயற்பியல்
5) டாக்டர் அமர்த்தியா சென் - 1998 - பொருளாதாரம்
6) டாக்டர் அர் கோவிந்த் குரானா - 1968 - மருந்தியல்
7) டாக்டர் ராஜேந்திரகுமார் பச்செளரி - 2007 - நோபல் அமைதிப் பரிசு
நன்றி - சுற்றுச் சூழல் - நவம் 2007
|
சமச்சீர் கல்வி
(யானை எனச் சொல்லி குருடர்களைத் தடவ வைத்து
பூனையைத் தரப்போகும் கண்கட்டு வித்தை)
(கல்ஓசை, ஊற்று, தமிழ்த் தேசம் - என்ற மூன்று இதழ்களில் வெளிவந்த கருத்துகளின் தொகுப்பு)
இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவரும் சம உரிமை உள்ளவர்.
அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற உரிமைகளில் ஒன்று கல்வி.
அக்கல்வி தரமானதாகவும், பயனளிப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொருவரும் பயன்பெறத்தக்க வகையில் சமவாய்ப்பு மட்டுமல்லாமல் சமநிலையில் வழங்கப்பெறும் கல்வியே சமச்சீர் கல்வியாகும்.
தமிழ்நாட்டில் அரசே ஐந்து கல்வி வாரியங்களை அமைத்துள்ளது. படித்தவர் வசதியுள்ளோருக்கு ஒருவிதக் கல்வியும் ஏழை எளிய மக்களுக்கு ஏதுமில்லாக் கல்வியும் அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அறியானை என்ற இருளினின்று பாமரமக்கள் விடுதலை பெறாது, வேலை வாய்ப்புகள், உயர்கல்வி போன்றவையும் மறுக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலையைக் காணலாம்.
ஆங்கிலவழிக் கல்வியானது தமிழ்வழிக் கல்வி இரண்டாந்தரமானது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இப்பாகுபாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு எல்லோரும் தமிழ் வழியிலேயே கற்பது ஒரே வாரியம். ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்ற நிலைக்குக் கொணர்வதே சமச்சீர் கல்வி.
சமச்சீர் கல்வி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் ஒரு முக்கியக் கோட்பாடு. கல்வியில் உள்ள வேறுபாடுகள் ஏற்படுத்தியுள்ள கசப்புணர்வே சமச்சீர் கல்வி தேர்தல் அறிக்கையில் இடம்பெற முக்கியக் காரணம். தேர்தல் அறிக்கையின் பிற கூறுகளை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாது அமல்படுத்திய அரசு இதனையும் நேரடியாகக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. சமச்சீர் கல்வியைச் செயல்படுத்த ஒரு திட்டம் வகுக்கவே என்று கொண்டாலும் அக்குழுவில் சமச்சீர் கல்வியில் முழுநம்பிக்கை உள்ளவர்களே உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். சமச்சீர் கல்விக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களே குழு உறுப்பினர்களாக இருந்ததால் குழுவின் அறிக்கை முழுமை பெறவில்லை. செயல்படுத்தக் காலக்கெடு கொண்ட ஒரு திட்டம் அளிக்கப் பெறாதது மிகப் பெரும் குறை. (தமிழ்த் தேசம் இதழின் நேர்காணலில் பேரா. இராசகோபாலன்)
இன்றைய நிலையில் கல்வியைப் பற்றி ஆனா ஆவன்னா கூடத் தெரியாத அரைவேக்காட்டுப் பேர்வழிகள் கலவி நிலையங்களை ஆக்கிரமிக்கின்றனர். ஆதிக்க சக்திகளின் முழுக்கட்டுப் பாட்டிற்குள் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. தனியார் பேருந்துகள் கொள்ளை இலாபம் அடிக்கிற அதே தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் நட்டத்தில் ஓடுகின்றன. அரசும் பொதுமக்களும் நட்டம் அடைவதற்கும் பேருந்து முதலாளிகள் கோடீசுவரர்கள் ஆவதற்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. அதே போல கல்விக்கு நிதியில்லை என்று அரசு கையை விரிப்பதற்கும், அரசுப் பள்ளிகள் நகர்ப்புறத்துக் குப்பைமேகளாய் பரிதாப நிலையில் இருப்பதற்கும், தனியார் பள்ளிகள் அடுக்கு மாடிகளையும் 1000 ஏக்கர் நிலங்களையும் கையகப் படுத்துவதற்கும் இன்றியமையாத தொடர்பு இருக்கிறது.
கல்வியை ஏலம் விடும் கல்வி நிலையங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை மறுக்கிறோம். சிந்திக்கும் திறன் அற்றோராய் செயல்படும் வலிமையற்றோராய் நாம் இருந்து வருவதைப் போன்றே நம்முடைய பிள்ளைகளையும் நாம் உருவாக்கி வருகிறோம். யாரோ, எஙகோ, எதற்கோ - யார் யாருடைய வசிதிக்காகவோ தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை நம் குழந்தைகளின் மூளையில் திணிப்பதில் முழுவெற்றி அடைந்துள்ளோம்
வசதியான ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 50 விழுக்காட்டுக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி தரவேண்டும் என்கிற கல்விக் குழுவின் பரிந்துரையை நடைமுறைப் படுத்தியிருந்தால் இன்றைய இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் தொழிற் கூடங்களுக்குள் அவதிப்படும் அவலநிலை தோன்றியிருக்குமா ? ( கல் ஓசை இதழில் அருள்திரு. பிலிப்சுதாகர்)
தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பள்ளி இறுதி வகுப்பு வரையில் எவ்வளவு வேறுபாடுகள்? எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள். எவ்வளவு முரண்பாடுகள். மாநிலக் கல்விக் கழகங்கள், நடுவண் கழகங்கள், மெட்ரிகுலேசன் தேர்வுகள், கீழையியல் - இவைகளுடன் அங்கிலோ இந்திய முறைப் பள்ளிகள் - எனப் பலவகையான தேர்வு முறைகள் எல்லா மாநிலங்களிலும் நிறைந்துள்ளன. தற்பொழுது கேம்பிரிட்ச் பாடத்திட்டத்துடன் கூடிய பன்னாட்டுப் பள்ளிகள் தலையெடுத்து - வணிகம் செய்கின்றன.
இதனால் மாணவர்கள் ஒரு முறையிலிருந்து இன்னொரு முறைக்கு மாற விரும்பினாலோ, மாற வேண்டிய தேவை ஏற்பட்டாலோ மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு முறையிலும் ெவ்வேறு மதிப்பெண் முறைகள். வெவ்வேறு பாடத்திட்டங்கள். வெவ்வேறு தேர்வு முறைகள். ஒன்றில் ஆறு பாடங்களுக்கு 1200 மதிப்பெண்கள். ஒன்றில் ஐந்து பாடங்களுக்கு 500 மதிப்பெண்கள். ஒன்றில் 1000 மதிப்பெண்கள். தேர்வுகளுக்கான முயற்சியில் மாணவர்களிடையில் எவ்வளவு முரண்பாடுகள்.
மதிப்பெண்கள் அடிப்படையிலான இந்தியக் கல்வி முறையால், பொருள் வளம் படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக்க முயலுகின்றனர், அதனையே முதலீடாக்கிக் கொண்டு தம் பொருள் வளத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர் கல்வி வணிகர்கள்.
முத்துக்குமரன் ஆய்வுக் குழு பரிந்துரைத்தவை
தமிழ்நாடு ஆறு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஓர் இணை இயக்குநர் கீழ் இயங்க வேண்டும் என்றும் இவை அனைத்தும் ஒன்றிணைந்த தமிழ்நாடு பள்ளிக்க கல்வி வாரியத்தின் கீழ் இயங்க வேண்டும் என்றும் - இவ்வாரியத்திற்கு பல்கலைகழகங்களில் செயற்படும் கல்விக் குழுக்களுக்கு உள்ள அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் 11 துறைசார் கருத்துரைஞர் குழுக்கள் இக்கல்விக் கழகத்திற்கு நெறிகளை வகுத்தளிக்க வேண்டும் என்றும், மழலையர் கல்விக்குரிய பொறுப்பினை அரசே ஏற்க வேண்டும் என்றும் எல்லாப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் அமைத்திட வேண்டும் என்றும், முத்துக்குமரன் ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதாரைத் தவிர்த்துப் பிறர் அனைவருக்கும் பள்ளிக்கல்வி தமிழிலேயே அமைந்திட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிற்றூர் நகரம் எனப் பாகுபாடின்றி அனைத்துக் கல்விச் சாலைகளிலும் குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளிலும் இணைய தள ஏந்துகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் வெறும் பாடங்கள் என்றிராமல் நுண்கலைகள் பயிற்சியும் நூலக ஏந்துகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. கணினி வாய்ப்புகள் அனைத்துக் கல்விச் சாலைகளிலும் கிடைத்திட வேண்டும் என்றும். கல்வித்திட்டம் மாணவர்களின் பல்துறை அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ( ஊற்று இதழின் தலையங்கம்)
|
பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரச்சனைகள்
ஏழு பள்ளிகளைக் கூட்டுப் பள்ளிகளாக்கி பத்தாங் பெர்ஜூந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கப்பட்டதன் விளைவாக ஏழு தலைமை ஆசிரியர்கள் பதவி இழந்தனர் என்று குமுறினார் ஒருவர்.
150 சிறிய பள்ளிகளைக் கூட்டுப்பள்ளிகளாக்கினால் இதே நிலைதான் ஏற்படும் என்று பலர் கருத்துத் தெரிவித்தனர்
அதிகரத்து வரும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படவில்லை. அதற்கான திட்டமே ல்லை என்றும் கூறப்பட்டது.
சீனப்பள்ளிகளின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். தமிழ் இடைநிலைப் பள்ளியும் வேண்டும்.
நெகிரி செம்பிலானில் 80 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. இப்போது 61 தான் இருக்கின்றன. 150 தமிழ்ப் பள்ளிகளைக் கூட்டுப் பள்ளிகளாக்கினால் இன்னும் பல பள்ளிகளை இழக்க நேரிடும்.
150 சிறிய பள்ளிகளின் விவகாரம் தனிப்பட்ட விவகாரம் அன்று. இது அனைத்து மக்களையும் சார்ந்ததாகும். நாம் எந்த ஒரு பள்ளியையும் இழக்கக்கூடாது. இதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் தமிழ்ப் பள்ளிக்காகத் தீக்குளிப்பு செய்ய வேண்டும்.
150 பள்ளிக்கூடங்களைக் கூட்டுப் பள்ளிகளாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தோடு நாடு தழுவிய உளவில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடிக்க வேண்டும்.
தமிழ் அறவரரியம் நாட்டிலுள்ள அனைத்து இந்திய அமைப்புகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதன்வழி இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்.
இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் போதவில்லை. கூடுதல் பள்ளிகள் வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டும்.
தமிழ் அறவாரியத்தைச் செயலகமாகக் கொண்டு 150 பள்ளிகளை கூட்டுப் பள்ளிகளாக்குவதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்க நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும்
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் இந்த 150 தமிழ்ப் பள்ளிகள் பற்றிய விவகாரத்தில் மதில் மேல் பூனையாக இருக்கக்கூடாது.
தேசியப்பள்ளி தாய்மொழிக் கலவியை அழிப்பதற்கான ஒரு திட்டம். அதற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது.
தீர்வுகள்
எக்காரணத்திற்காகவும் இருக்கின்ற 523 தமிழ்ப்பள்ளிகளில் எந்த ஒரு பள்ளியும் மூடப்படக்கூடாது. தேவைப்பட்டால் கிராமப்புறங்களில் இருக்கும் மிகக் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளைக் கொள்கலன் பள்ளிகளாக மாற்ற கல்வி அமைச்சர் அறிவித்துள்ள திட்டத்தை குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப் பள்ளிகளுக்கும் வழங்கலாம்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் அரசுத் திட்டத்தை ஏற்பதற்கு 12 முன் நிபந்த்னைகள் விதித்து மோசம் போனது போல், கூட்டுப் பள்ளிகள் அமைப்பதிலும் மோசம் போவது நிச்சயம். கூட்டுப் பள்ளிகள் அமைக்கக்கூடாது.
தவிர்க்க முடியாத காரணம் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும்.
தேசியப் பள்ளிகளுக்கும் தாய்மொழிப் பள்ளிகளுக்கும் சமமான, வேறுபாடற்ற, அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி முழு அரசாங்கப் பள்ளிகளாக அங்கீகரித்து அவற்றை பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்.
தேசியப் பள்ளியில் தாய்மொழிக்கல்வி போதிக்கும் திட்டமும் அத்திட்டத்திற்கு அரசாங்கம் வழங்கும் ஊக்குவிப்பும் ரசாக் அறிக்கையின் இறுதிக் குறிக்கோள் இலக்கை அடைவதற்கான இன்னொரு வழி, அத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடாது.
தமிழ்மொழி மேலும் வளர்ச்சியடைய தமிழ் இடைநிலைப்பள்ளிகள் அமைக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நன்றி - செம்பருத்தி இதழ் - நவம்பர் 2007
|
நிலமோசடி
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தருவோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கம் வெளிநாட்டு உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்குப் பல்லாயிரம் - பல இலட்சம் ஏக்கர் நிலங்களைத் தந்து கொண்டு இருக்கிறது இந்த அரசு.
தமிழ் நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாமே, காலங் காலமாக ஆதிக்கவர்க்க - ஆளுமை கொண்ட ஆண்டைகளிடமே முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. அது பற்றிய ஒரு விபரம்.
தருமபுரி ஆதீனம் - 22000 ஏக்கர்
திருவாடுதுறை ஆதீனம் - 26000 ஏக்கர்
நான்குனேரி ஆதீனம் - 6000 ஏக்கர்
திருக்குறுங்குடிமடம் - 2000 ஏக்கர்
சங்கரமடம் - 8000 ஏக்கர்
அகோபில மடம் மற்றும் மடங்கள் சேர்த்து - 2,00,000 ஏக்கர்
சிதம்பரம் கோயில் - 1600 ஏக்கர்
வேதாரண்யம் கோயில் - 10,580 ஏக்கர்
திருவாரூர் கோயில் - 8143 ஏக்கர்
சிக்கல் சிங்காரவேலர் - 1200 ஏக்கர்
தஞ்சை பெரிய கோயில் - 8000 ஏக்கர்
திருச்செந்தூர் முருகன் கோயில் - 1800 ஏக்கர்
நெல்லையப்பர் கோயில் - 3640 ஏக்கர்
இவை தவிர தமிழ்நாட்டில் பல ஏமாற்றுக்காரர்களின் அறக்கட்டளைகளின் நில முடக்கம் ஏராளம். தஞ்சாவூரில் மட்டும் 804 அறக்கட்டளைகள். நாகப்பட்டினத்தில் 1950 அறக்கட்டளைகள் - இப்படி ஊர் ஊருக்கு பல அறக்கட்டளைகள். இந்த வரியை ஏமாற்றும் அறக்கட்டளைகளிடம் ஏராளமான நிலங்கள் உள்ளன.
இது தவிர, இப்போது நவீன முதலாளிகளாக - சிறப்புப் பொருளாதார மண்டலம் - என்ற பெயரால் வந்திருக்கும் கும்பினியார்கள் இது வரையில் 4.2 இலட்சம் ஏக்கர் இந்திய நாட்டு நிலங்களை அபகரித்து - அடிமை கொண்டிருக்கிறார்கள்.
இது இல்லாமல் - தாரளமயம் - பெருமுதலாளிகள் பன்னாட்டுக் கம்பெனியார்கள் கையகப் படுத்தியுள்ள நிலங்கள்
போர்டு கம்பெனி - 3000 ஏக்கர்
உண்டாய் கம்பெனி - 5000 ஏக்கர்
நோக்கியா கம்பெனி - 2000 ஏக்கர்
கோக் அன்ட் பெப்சி - 5000 ஏக்கர்
இன்னும் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இப்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 10,500 ஏக்கர் பிடுங்கப்படுவதும், இன்னும் பல மாவட்டங்களில் பிடுங்க இருப்பதும் அதனுள் அடக்கம்.
நன்றி : நாத்திகம் இதழில் புதுவை ம.ஞானசேகரன்.
நன்றி : தேமதுரத் தமிழோசை இதழ் - நவம்பர் 2007
|
முதலாளிகளும் இவர்களே... தொழீலாளிகளும் இவர்களே...
இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடுகளில் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில், அதிக ஊதியம் பெறும் தனியார் நிறுவன அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 850 தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆண்டுக்கு ரூ 50 இலட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்களாம்.
குறிப்பாக நாட்டிலேயே அதிக ஊதியம் பெரும் 10 நிர்வாகிகளின் பட்டியலும் அவர்களின் ஆண்டு வருமானமும்.
1) முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர்) - ரூ 24.51 கோடி
2) லால் முஞ்சால் (தலைவர் ஹிரோ ஹோண்டா) -- ரூ 15.58 கோடி
3) பவன் முஞ்சால் ( நிர்வாக இயக்குநர் - ஹீரேர் ஹோண்டா) - ரூ 15.22 கோடி
4) நவீன் ஜிண்டால் (தலைவர் - ஜிண்டால் நிறுவனம்) - ரூ13.54 கோடி
5) சுனில் பார்தி மிட்டல் (தலைவர் பார்தி நிறுவனம் ஏர்டெல்) - ரூ 12.61 கோடி
6) மிக்கி யமாமோட்டோ (நிர்வாகி ஹீரோ ஹோண்டா) - ரூ 12.60 கோடி
7) டாகோ ஏகுச்சி ( நிர்வாகி ஹீரோ ஹோண்டா) - ரூ12.55 கோடி
8) கலாநிதி மாறன் (தலைவர் சன் தொலைக்காட்சி) - ரூ 11.13 கோடி
9) காவேரி கலாநிதிமாறன் (நிர்வாக இயக்குநர் சன் தொலைக்காட்சி) - 10.26 கோடி
10) ஏ.ஜே. அகர்வால் (நிர்வாக இயக்குநர் எமர்கேடர் லைன்ஸ் கப்பல் நிறுவனம் ) - ரூ 10.00 கோடி
11) அனில் அம்பானி (தலைவர் நிருபாய் அம்பானி ரிலைன்ஸ் நிறுவனம் ) ரூ - 7.32 கோடி
நன்றி கருஞ்சட்டைத் தமிழர்
நன்றி மும்பை தூரிகை இதழ் - ஏப் சூன் 2007
|
குடும்ப உறுப்பினரை இழந்து விட்டோம்,
அன்புமிக்க ஆசிரியருக்கு,
வணக்கம். குமரிக்கடல் நவம்பர் 16 - 30 இதழில் தமிழ்ச்செல்வன் பற்றி மிக அருமையாகவும், உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் பேராசிரியர் ஐசக் அருமைராஜன். போர் மரபுகளுக்கு முற்றிலும் முரணாக நடந்தது தமிழ்ச்செல்வன் படுகொலை.
தமிழ் ஈழப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வழி என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழர்கள் கவுரவத்தோடு வாழ்வதற்கான தீர்வு வேண்டும் என்று நினைக்காத தமிழர்கள் இருக்க முடியாது. ஏன் மனிதர்களும் இருக்க முடியாது.
தமிழர் பிரச்சனையின் தீர்வுக்காகத் தன் வழியில் போராடிய ஒரு வீரம்மிக்க இளைஞனை நாம் இழந்திருக்கிறோம். நம் குடும்பத்தின் விலை மிக்க ஒரு உறுப்பை நாம் இழந்திருக்கிறோம்.
நாம் பதை பதைப்பதும். அழுவதும், இரங்கல் சொல்லுவதும் நம் இரத்தத்தோடு கலந்த உணர்வு. இந்த உணர்வைக் குறை சொல்வதற்குத் துணிகிறவர்கள் மனிதத் தன்மையை இழந்த சுயநலமிகளே.
அன்புடன்
பொன்னீலன்,
நாவலாசிரியர். மணிகட்டிப் பொட்டல். குமரி மாவட்டம்.
நன்றி - குமரிக்கடல் டிசம்பர் 1-15 - 2007
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|