வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 04 - 11 - 2007



சிறுவனும் பூனையும்

அம்மா சிறுவனுக்கு அப்பம் கொடுத்தாள்.

அவன் அதை உண்ணத் தொடங்கினான்.

அதன் மணம் எங்கும் பரவியது.

அதை அறிந்து ஒரு பூனை அவனிடம் வந்தது.

தன் முதுகை உயர்த்திக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.

அவன் மேல் செல்லமாகத் தன் உடலை உரசியது.

அவனை அன்போடு நக்கிக் கொடுத்தது.

அழகான பூனை என்னிடம் அன்பு காட்டுகிறதே என்று அதனிடம் மயங்கினான் சிறுவன்.

தான் வைத்திருந்த அப்பத்தில் பாதியை அதனிடம் கொடுத்தான்.

தான் விரும்பியது கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் பூனை அதைத் தின்றது.

தின்று முடித்தவுடன் அவனை விட்டு விலகிச் சென்றது.

பூனையே நீ வந்தது எனக்காக இல்லை.

என் அப்பத்துக்காகத்தான் என்பது இப்போது புரிகிறது என்றான் சிறுவன்.

- பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய சிறுவர்களுக்கான குட்டிக் கதை -

நன்றி : ஸ்ரீஞானவிஜயம் - அக் 2007




ஏழறிவு தேவையில்லை?

கல்வியினைத் தாய்த்தமிழில் தருக என்றால்
கற்றுக்கொள் ஆங்கிலத்தை என்கின் றீர்கள்
சொல்லுங்கள் எங்கேனும் இதுபோல் உண்டா?
சொதப்புவதேன் கொள்கையிலோர் தெளிவே இன்றி?
வல்லாண்மைச் செலுத்திவரும் அயல வர்க்கே
வளைகின்றீர் முதுகெலும்பே இல்லார் போலக்
கொல்லாதீர் ஆங்கிலநாய் குதறிப் போட்டே
குற்றுயிராய்க் கிடக்கின்ற தமிழை மேலும்

புதுச்சேரி என்றிருக்கும் பெயரை மாற்றும்
பொறுப்பற்ற செயலதனைக் கண்டிக் கின்றோம்
இதுதமிழர் அனைவரையும் புண்ப டுத்தும்
இழிசெயலே ஆகையினால் கைவி டுங்கள்
இதன்வலியை வரவிருக்கும் தேர்தலில் நீர்
எடுத்தெறியப் படும்போது புரிந்து கொள்வீர்
இதுசரியா? தவறாஎன் றாய்வ தற்கோர்
ஏழறிவு தேவையில்லை? ஆறே போதும்.

இரா செம்பியன் - தெளிதமிழ் இதழில் - துலை திங்களிதழ்




அமெரிக்காவில் இந்தியர்கள்

அமெரிக்காவில்.....

(o) 38 விழுக்காடு மருத்துவர்கள் இந்தியர்கள்
(o)12 விழுக்காடு விஞ்ஞானிகள் இந்தியர்கள்
(o)36 விழுக்காடு நாசா விஞ்ஞானிகள் இந்தியர்கள்
(o)34 விழுக்காடு மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இந்தியர்கள்
(o)17 விழுக்காடு இன்டர் ஊழியர்கள் இந்தியர்கள்
(o)28 விழுக்காடு ஐபிஎம் ஊழியர்கள் இந்தியர்கள்

ஆக இந்தியர்கள் மிக உயர்வானவர்கள். இந்தியா அல்ல.

மூளை நிறைந்த இந்த முட்டாள்கள்
தாய்நாட்டிற்காக வேலை செய்தால்
சில நாட்களில் நாம் அமெரிக்காவை மிஞ்சிவிட முடியும்.

நன்றி : புதிய தென்றல் - அக் 2007




தமிழ்ப் பள்ளிகள்

தமிழ்ப் பள்ளிகளை சமூக மேம்பாட்டு மையமாக மாற்றம் காண தமிழ்ப்பள்ளித் தைமையாசிரியர் பொறுப்பு என்ற முனைவர் பி.இராசகோபால் கட்டுரையில் அவர் வேதனையைத் தெரிவித்த அதேகணம் அதற்கான மாற்று வழி முறையினையும் கூறுகிறார்,

நல்ல அன்பும், பண்பும், ஒழுக்கமும் நன்னெறியும் தேவாரமும். திருவாசகமும், சொல்லிக் கொடுக்கப்பட்ட நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அவல நிலையைக் கண்கூடாகப் பார்த்து வெட்கமடைய வேண்டியிருக்கிறது. தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர்களின் அடாவடிச் செயல்கள் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.

பல தமிழ்ப் பள்ளிகள் யுபிஎஸ் தேர்வு முடிந்தவுடன் இைடைநிலைப் பள்ளிக்குப் போவதற்கு முன்பு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து இடைநிலைப் பள்ளிகளில் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் தமிழ்ப் பள்ளியை விட்டு இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் அவர்களின் போக்கு மாறி விடுகின்றது. இந்நிலையைப் போக்கத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிப்பு முடித்துச் சென்னற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது பழைய மாணவர் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம். அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழி காணலாம். தன்முனைப்புப் பயிலரங்குகளையும் நடத்தலாம். பெற்றோர்களுக்குக் கல்வி பற்றியும் கல்வி மேம்பாடு பற்றியும் எடுத்துச் சொல்லலாம். இதன்வழி தமிழ்ப்பள்ளிகளில் படித்த மாணவர்களுடன் ஒரு தொடர்பு ஏற்பட நல்ல வாய்ப்புண்டு. மனித நேயம் வளர்நது மனித உறவுகள் மேம்பாடு அடைந்தால் பல சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். இதற்குத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சீரிய பணி ஆற்றலாம். இதுவே நம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முதற் கடமையாகும்.

நன்றி : செம்பருத்தி - அக் 2007




கொத்தடிமைக் கூலிகளாய் சீரழியும் தமிழச்சிகள்

இராஜாவூர் - கு.ம.இராசேந்திரன்

சுமங்கலி திட்டம், திருமகள் திட்டம், ஈஸ்வரி திட்டம் போன்ற பெயர்களை கேட்கும் பொழுது மங்களகரமாகத்தான் ஒலிக்கின்றன. ஆனால் அதன் பின் உள்ள கொடிய சுரண்டலை அறிந்தாலோ நெஞ்சம் கொதிக்கின்றது.

ஏற்கனவே குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டி கொழிக்கும் பஞ்சாலைகள்தான் இந்த மங்களகரமான பெயர்களில் கொடுமைகளை அரங்கேற்றுகின்றன,

வறுமை, ஏழ்மையால் வாடும் தென்மாவட்டங்களைக் குறிவைக்கும் இடைத்தரகர்கள் மேற்கண்ட பெயர்களில் திருமணமாகாத இளம் பெண்களைக் குறிவைக்கின்றனர். சில ஆண்டுகள் ஒப்பந்தப் பணியாளர்களாக இவர்களைக் கொண்டு சென்று கொட்டடிகளில் அடைத்து அதன் பின்னர் கணக்கிட்டு மொத்தமாக 30,000 முதல் 50,000 ரூபாய் வரை கொடுத்து ஊருக்கு அனுப்பி விடுகின்றனர்.

அதன் பின் திருமணம் செய்ய அந்தத் தொகை உதவியாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் உண்மையில் இத்திட்டம் உதவியாக இல்லாமல் சுரண்டலாகவே உள்ளது.

இதில் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையும் பல பெற்றோர்களையும் நிலை குலையச் செய்துள்ளது. கல்லாமையும் வறுமையும் எவ்வளவு பெரிய சீரழிவிற்கு நம் தமிழ் மக்களைக் கொண்டு சென்றிருக்கிறது.

திண்டுக்கல் திருப்பூர் உடுமலைப்பேட்டை கோவை ஈரோடு - போன்ற ஊர்களில் உள்ள நூற்பாலைகளே இக்கொடுமையை அரங்கேற்றி வருகின்றன.

நூற்பாலை ஊழியரான வெங்கடசாமி கூறுகிறார். இவ்வாறு அழைக்கப்படும் இளம் பெண்களுக்கு மூன்று வேளை உணவுடன் ரூ 30 ஊதியம் வழங்கப்படுகிறது. அதன் பின் 6 மாதம் ஒருமுறை 10 ரூபாய் கூடுதலாக அளித்து 55 ரூபாய் வரை ஊதியம் அளிக்கின்றனர்.

சில தொழிற்சாலைகளில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. பல அளிப்பதில்லை. சிலவற்றில் இலவச மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது. வேறு சிலவற்றிலோ சாராரண காய்ச்சல், தலைவலி மருந்துக்குக் கூட ஊதியத்தில் கழிக்கின்றனர். ஆள் தட்டுப்பாடுள்ள ஆலைகளில் கட்டாயமாகக் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும்.

சில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய எந்தவொரு உரிமைகளும் வழங்கப்படவில்லை.

இது தவிர பாலியல் சுரண்டல், மனநலம் பாதிப்பு, தற்கொலை, கொலை - போன்ற நிகழ்வுகளும் பெரும் கொடுமைகளாக நிகழ்கின்றன. இப்படியெல்லாம் உழைப்பை உறுஞ்சிவிட்டு. இனி ஏதுமில்லை என்றளவில் சக்கையாக்கி வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.

குழந்தை உழைப்பு, கொத்தடிமைத்தனம் போன்றவற்றிற்கு இப்படி நவீனவடிவத்தில் மேற்கொள்ளப்படும் கொத்தடிமைத் தனங்களில் இருந்தும் ஏதுமறியா, அப்பாவி உழைக்கும் மக்களை, குறிப்பாக குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : புதிய தென்றல் - அக் 2007




அபாய மாத்திரைகள்

ஒழுங்காகத் தமிழ், ஆங்கிலம் பேச எழுதத் தெரியாத நகர வாசிகள் - டி.வி. விளம்பரங்களைப் பார்த்து, நோய்களுக்கு மாத்திரை கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். விளைய உள்ள பக்கவிளைவுகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. வெளியூர் செல்லும் இல்லத்தரசிகள் தங்கள் வேிட்டி பேக்குகளில் - நிரப்பிக் கொள்வது - டோலோபார். சாரிடான், குரோசின், புருபன் மாத்திரைகள் தான்.

ஜலதோசம், இருமல் என்றால் உடனே நினைவுக்கு வருவது - விக்ஸ் ஆக்சன் 500 - மாத்திரைதான். உடலுக்குத் தீங்க என உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட - பெனில்புரோபனோலாமின் - என்ற பொருள் இந்த மாத்திரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மாரடைப்பு ஏற்படுத்தலாம். டிகோல்ட் என்ற மாத்திரையிலும் இந்தத் தீங்கு மிகு பொருள் சேர்ந்துள்ளது.

மூக்கடைப்பு அகற்ற என்று விற்பனையாகும் ஆக்டிபெட், கோல்டரின் - மாத்திரைகளிலும் இந்த நச்சுப் பொருள் சேர்க்கப்படுகிறது. பல மருத்துவர்கள் இது தெரிந்தும்கூட அலட்சியமாக உள்ளனர். நோவால்ஜின் - மாத்திரையில் அனல்ஜின் என்ற நச்சுப் பொருள் உள்ளது. டிராபெரோல் - என்ற மருந்தில் சேர்ந்துள்ள டிராபெரிடோல் - என்ற நச்சுப் பொருள் சீரற்ற இருதயத்துடிப்பை உண்டாக்கும்.

டாக்டர் ரெட்டிலேப் தயாரிக்கும் வலி நிவாரணி நிஸ். இதில் சேர்க்கப்படும் நிம்சுலைட் - உடம்பில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்கும் கல்லீரலை செயல்படாமல் முடக்கிவிடும். லோமேபென், ப்யூரோக்சோன் மாத்திரைகளில் உள்ள ஃப்யூராசோலிடோன் என்ற பொருள், புற்றுநோய் உண்டாக்கும். பிப்பரேஸின் என்ற மாத்திரையில் உள்ள மூலப்பொருள் நரம்புத் தளர்ச்சி உண்டாக்கும்.

உலகம் எங்கும் குப்பையில் போடப்பட்ட மூலப்பொருள்களை வைத்து, இந்திய மருந்துக் கம்பெனிகள் பிரபல பிராண்டுகளில் அடைத்து, ஆரவரமான டிவி விளம்பரங்கள் மூலம் அப்பாவி இந்தியனின் தலையில் கட்டுகின்றன. இது பற்றி இந்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : குமரிக்கடல் - அக் 2007




ஆண்டு முறை

அலெக்சாண்டர் கானிங்கம் என்பவர் 1883 இல் இந்திய ஊழிநூல் பற்றிய ஆராய்ச்சி நூலை(Book of Indian Years) வெளியிட்டுள்ளார்.

தொடர் ஆண்டுமுறை நிகழ்வு ஆண்டு

1. புத்த நிர்வாண ஆண்டு கி.மு.544 இல் தொடக்கம் - 2549
2. மகாவீர நிர்வாண ஆண்டு கி.மு. 527 இல் தொடக்கம் - 2532
3. விக்ரமாதித்ய ஆண்டு கி.மு. 57 இல் தொடக்கம் - 2062
4. கிரி கேரியன் (ஆங்கில) ஆண்டு இயேசுநாதர் பிறந்த நாள் தொடக்கம் - 2007
5. சக (சாலிவாகன)ஆண்டு கி.பி. 78 இல் தொடக்கம் - 1927
6. ஹிஜிரி (முஸ்லீம்) ஆண்டு கி.பி. 579 இல் - 1426
7. பசலி ஆண்டு கி.பி. 591 இல் தொடக்கம் - 1414
8. வங்காள ஆண்டு (வட இந்திய ஆண்டு) கி.பி.593 இல் தொடக்கம் -1412
9. கொல்லம் (பரசுராமஊழி) ஆண்டு கி.பி.825 இல் தொடக்கம் - 1180
10. கலியுக ஆண்டு கி.பி. 3102 இல் தொடக்கம் -5107
11. யூத ஆண்டு கி.பி. 3761 இல் தொடக்கம் - 5766
12. எஸ்டே ஜர்டி ஆண்டு கி.பி.630 இல் - 1375
13. எஸள விஜயாப்தம் கி.பி.1312 இல் தொடக்கம் - 693
14. மெய்கண்டார் ஆண்டு கி.பி. 1222 இல் - 783
15. சிவஞான முனிவர் ஆண்டு கி.பி. 1783 இல் தொடக்கம் -222
16. செலுகசு ஊழி கி.மு.312 இல் தொடக்கம் - 2317
17. பார்த்திய ஊழி கி.மு. 247 இல் தொடக்கம் - 2252
18. சேதி அல்லது காலசூரி ஊழி கி.பி.249 இல் தொடக்கம் - 1756
19. குப்த ஊழி கி.பி.319 இல் தொடக்கம் - 1686
20. பல்லபி ஊழி கி.பி. 319 இல் தொடக்கம் - 1686
21. ஹர்ஷ ஊழி கி.பி. 607 இல் தொடக்கம் -1398
22. பர்மிய ஊழி கி.பி.630 இல் தொடக்கம் -1375
23. நேவார் (நேபாள) ஊழி கி.பி.880 இல் தொடக்கம் - 1125
24. சப்தரிஷி காலக்கணக்கு கி.பி. 1025 இல் தொடக்கம் -980
25. சாளுக்கிய ஊழி கி.பி. 1076 இல் தொடக்கம் - 929
26. இலட்சுமண சேனா ஊழி கி.பி.1104 இல் தொடக்கம் - 901
27. சிவ சிங்க ஊழி கி.பி.1114 இல் தொடக்கம் - 891
28. இலாகிய ஊழி கி.பி.1584 இல் தொடக்கம் - 421


சூழல் முறை ஆண்டு

29. கிரகப் பரிவிருத்தி ஊழி கி.மு. 24 இல் தொடக்கம் - (90 ஆண்டு வட்டம்)
30. பன்னிரண்டு ஆண்டு வியாழ வட்டம் கி.பி. 310 இல் தொடக்கம்
31. 60 ஆண்டு வியாழ வட்டம் கி.பி. 965 இல் தொடக்கம்
32. சூரிய ஊழி சூரியன் மேஷஇராசியில் நுழைவதிலிருந்து கணக்கிடப்படுகிறது.
33. சந்திர ஊழி - சந்திரனை மையமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
34. தமிழ் நாட்டில் வழக்கில் உள்ள 60 ஆண்டு முறை கிபி 78 இல் தொடக்கம்


இயேசு கிருத்துவை மையமாக வைத்துக் கிருத்துவர்களுக்கு ஒரு தொடராண்டு பின்பற்றப்படுவது போலவும். முகமது நபியை மையமாக வைத்து இசுலாமியர்களுக்கு ஒரு தொடராண்டு கடைப்பிடிக்கப்படுவது போலவும்- திருவள்ளுவரை மையமாக வைத்துத் தமிழ் மக்களுக்கென்று ஒரு தொடராண்டைக் கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். ( 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் இந்தத் தொடர் ஆண்டினை முடிவு செய்தனர். பேராசிரியர் நமச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு )

நன்றி : மக்கள் செங்கோல் இதழ் - அக் 2007




சூது வாது ராமர் சேது

தொல் ஆய்வின் தீர்ப்புக்கே எதிர்ப்புக் கூறி,
சூதுவாது ராமர்சேது திணிக்கின் றாரே
இல்லாத ராமர்கோயில் புதைகு ழிக்கே
இஸ்லாத்தை இடித்தவம்பை வளர்க்கின் றாரே
பொல்லாத இந்து இதில் நான்கு சாதி
புரோகிதரே முதல்சாதி பிறரை ஏய்த்தே
கொள்ளிக்கட்டை சொறிந்ததலைக் குடுமி எல்லாம்
கோவணத்தைக் கட்ட யானை பிடிக்கின்றாரே

நீத்த்திரட்டே உப்புமேடே ராமர் சேது
நீரோடு கறையும் இதை மறுக்கின்றாரே
பார்த்துஅதைப் படித்தறிந்தோர் நேரு போன்றோர்
பாரதம்ரா மாயணங்கள் கதை என்றாரே
பேர்ப்பலகை ஊருக்கூர் ஆள்திரட்டி
பிருந்தாவனக் குப்பைகளைக் குவிக்கின்றாரே
தேர்வடத்தைப் பிடிப்பதற்கும் வடடாக் கூட்டம்
தென்னாட்டுச் சூத்திரரை இழுக்கின்றாரே.

புரட்சிதாசன் - இசைத் தமிழ் இதழ் - அக் 2007




இராமரே தன்னைக் கடவுள் என்று சொல்லவில்லை

சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வேதமேதை அக்கினி ஹோத்ரம் இராமானுஜதத்தாச்சாரியாரிடம் - இராமர் பாலம் பற்றிச் சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.

101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்.

இராமர் பாலம் விஷயத்தில் ஒரு பிரச்சனையாக ஆக்கியது. நமது அரசியல்வாதிகள் தாம். உண்மையில் இராமர் பாலம் என்ற பேதமே தவறு. அதனை இராமர் அணை என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால் அந்த மணல் திட்டுகள் பல வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களைச் சொல்லிக் கட்டியிருந்தால் அதற்கு லோகாகிதம் உண்டு. அதாவது அழியாத் தன்மை உண்டு. ஆனால் இராமாயண காலத்திற்குப் பிறகு இராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை.

இராமாயணம் திரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்பொழுது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய் விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், இராமாயண காலத்திற்குப் பிறகும் மக்கள் அதைப் பயன் படுத்தியிருக்க வேண்டும். எனவே இப்பொழுது பாலம் - பாலம் என்று பிதற்றுவதில் அர்த்தமேயில்லை.

இராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் சேது முஸ்த்ரதுஸ்தாரம் தானேத அதானாம் குரோதேன அக்ரோதம் சத்யேன அந்ருதம் - என ஒரு சொற்றொடர் வருகிறது.

அதாவது - துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு கோபத்தை ஒழி, உண்மையைப் பேசு - இங்கே சேது என்ற பதத்துக்குக் கடந்து செல்லுதல் என பொருள்.

இந்த வகையில் இராமல் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான் சேது. இது ஒரு வினைச் சொல். பெயர்ச் சொல் அல்ல.

அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி. அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி இராமாயணத்தில் சொல்லியிருப்பதைத் தான் சேது பாலம் எனக் கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர். இராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.

இதற்கு இராமரே சொல்லிவிட்டார். இராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் இராமரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் இராமர் சொல்கிறார்.

- ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாமஜம் - அதாவது நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள் - என இராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உள்ளே போய்ப் பார்த்தால் - இராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால் இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதற்குத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். இராமர் அக்கரை போவதற்குத் தானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்.

இன்னொரு செய்தி - போர் முடிந்து இராமர் திரும்புகையில் அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும், வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் ( வில்லால் ) இராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு.

திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பகவிமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை இராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

எனவே இராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டுமா?

நன்றி : அருணன் இதழ் - நவம் 2007





தமிழர் கடமை

(o) 1. இராமேசுவரம் கடலில் மணல் திட்டுகள்தான் உள்ளன. பாலம் எதுவும் இல்லை.

(o) 2. இதுபோல் கடல் மணல் திட்டுகள் உலகில் பல இடங்களில் உள்ளன.

(o) 3. ராமர் பாலப் போராட்டம் என்பது இந்தி மக்களை முட்டாள்கள் ஆகவும் தமிழக மக்களை ஏமாளிகள் ஆகவும் நினைத்து நடத்தப்படும் அரசியல் வித்தை ஆகும்.

(o) 4. இது - இந்தியாவுக்கே அவமானம். தமிழர்களுக்குத் தலைகுனிவு. உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கும். அறிவுள்ள சமூகம் இதை ஏற்காது.

(o) 5. இல்லாத பாலத்தை இருப்பதாகக் கூறி இவர்கள் நாடகம் நடத்துவது தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

(o) 6. 1750000 ஆண்டுகளுக்கு முன் குரங்குகளால் கட்டப்பட்ட பாலம் இடிக்க விடமாட்டோம் என்பவர்கள் பாமர மக்கள் அல்லர். படித்தவர்கள். மதிப்பு மிக்க தலைவர்கள். ஊடகச் சக்கரவர்த்திகள். இவர்கள் செயல் நம்மை அவமானப்படுத்துவதாக உள்ளது.

(o) 7. தமிழ் மக்களின் 150 ஆண்டு காலக் கனவுத் திட்டம் நனவாகும் வேளையில் இப்போராட்டங்கள் மூலம் அதைப் பகல் கனவு ஆக்க முயல்கிறார்கள். இம் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைய வேண்டும்.

(o) 8. கட்சி - மத - அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை எதிர்ப்பதும், முறியடிப்பதும் திட்ட நிறைவேற்றத்துக்கு ஆதரவை தருவதும் மக்களுக்கு உண்மை விளக்கம் செய்வதும் கல்வியாளர்கள் கடப்பாடு. உணர்வுள்ள தமிழர்களின் கடமை - புலவர் கு.பச்சைமால்.

நன்றி : தேமதுரத் தமிழோசை - அக் 2007


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061