தலைவலி.
காலில்
விழுந்து
வணங்கின
தலைகள்
தலையில்
விழுந்து
வணங்குவதாய்
இல்லை
கால்கள்
மண்டை
வலித்தது
மனுவுக்கு
வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருக்கிறவனை
அணுகுண்டு
வைத்திருக்கிறவன்.
ஒளி
கண்ணீர்
சிந்துவதை
நிறுத்திது....
தானம் போன
கண்.
குமுறல்
செருப்பு
ஆண்ட நாள்
அது
என்கிறாய்...
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள் எது?
போர்மை
கோழையாய்
இருப்பாய்...
இரத்தத்தின்
அறுவடை
கண்ணீரானால்
வீரனாய்
நிமிர்வாய்...
கண்ணீரின்
அறுவடை
இரத்தமானால்..,
காசி ஆனந்தன் நறுக்குகள்
நன்றி : தமிழர் கண்ணோட்டம் - செப் 2007
|
மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கடந்த வருடம் சூன் மாதம் தமிழக அரசு ஒரு சட்டம் நிறைவேற்றியது. அனைத்துத் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று சட்டம் கூறியது.
தமிழகத்தில் கட்டாயம் தமிழை ஒரு பாடமாக (பயிற்று மொழியாக அல்ல) கற்க வேண்டும் என்று சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழித்து ஒரு சட்டம் சாவகாசமாக வருகிறது. அதுவும் சிலருக்குப் பொருக்க வில்லை. எந்தப் பிரச்சனையானாலும் அதை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதைச் சில பொது நல விரும்பிகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள், அரசின் உத்தரவால் சிறுபான்மையோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளின் உரிமையில் அரசு தலையிடுகிறது என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். அரசு தமிழைக் கட்டாயமாகக் கற்றுத் தரவேண்டும் என்று கூறுகிறதே தவிர, சிறுபான்மையோர் தங்கள் மொழியைக் கற்றுத் தருவதற்குத் தடை எதையும் விதிக்க வில்லையே. இதில் அவர்கள்அடையப் போவதாகச் சொல்லும் பாதிப்புத்தான் என்ன? அவர்களது எந்த உரிமைச் சட்டம் கட்டுப் படுத்துகிறது? நல்ல வேளையாக, சென்னை உயர்நீதி மன்றம் சிறுபான்மையோர் உரிமையில் அரசு தலையிடக்கூடாது என்று தீர்ப்பளித்து விடாமல் பெரிய மனது செய்து தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்ற நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. குழந்தைகளின் ஆளுமைத் திறனைத் தொடக்கத்திலிருந்தே வளர்க்கும் கடமை மாநில அரசுக்கு உண்டு. அதை மனதில் கொண்டே இந்தச் சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது என நீதிபதிகள் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாகப் படிக்காமலே முனைவர் பட்டம் வரை வாங்கிவிடலாம் என்ற கேவலமான நிலைமைக்கு இந்தத் தீர்ப்பு முடிவு கட்ட வேண்டும்.
விரைவில் தமிழ் பயிற்று மொழியாவதற்குரிய சட்டஙகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அவை நீதிமன்றங்களின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும். அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு தொடக்கமாக அமையட்டும்.
புதிய ஆசிரியன் செப்டம்பர் இதழ் ஆசிரியர் உரை,
|
சோறு இல்லை, படிப்பு இல்லை, வேலை இல்லை,
சொரணையுள்ளவன் எப்படிச் சும்மா இருப்பான் ?
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது எனக் கதைக்கிறார்கள்.விடுதலை பெற்ற 60 ஆம் நிறைவு விழாவை அரசுச் செலவில் கொண்டாடிக் களிக்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலை என்ன?
2006 கணக்குப் படியான 112 கோடி இந்திய மக்களுள், 40 கோடிப் பேருக்கு இன்று வரை எழுத்தறிவு தரப்படவில்லை. இந்த 40 கோடிப்பேர் யாராக இருக்கிறார்கள்? இந்தியா முழுவதிலும் உள்ள பட்டியல் குலத்தார், பழங்குடியினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இந்து, இஸ்லாமிய வகுப்புகளைச் சேர்ந்த மக்களாகவே இருக்கிறார்கள். இவர்களுள் அதிகம் பேர் பெண்கள் மற்றும் சிற்றூர்ப் புறங்களைச் சேர்ந்தவர்கள்.
60 ஆண்டுக் காலத்தில் வெறும் எழுத்தறிவைக் கூடத் தரமுடியாத தரவிரும்பாத கேடு கெட்டவர்களின் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்காமல் சொரணையுள்ளவன் எப்படிச் சும்மாயிருப்பான்.
இந்தியாவின் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் அவலமானது.
2005 - 2006 இல் இந்தியக் கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகம் குறித்த தேசியப் பல்கலைக் கழகம் (நியூபா) என்னும் அரசு சார்ந்த ஆய்வு நிறுவனம் தொடக்கக் கல்வியின் அவலநிலை பற்றிய - வெட்கப் பட வேண்டிய நிலைமை பற்றிய ஓர் அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் - தொடக்கப் பள்ளிகள், மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் 11,24,033 பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்தது. அந்த ஆய்வு கூறியுள்ள செய்தி என்ன ?
1) 32,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.
2) 69,353 பள்ளிகளில் 25 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
3) 1,70,888 பள்ளிகளில் 26 முதல் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு ஆசிரியர் கூட அமர்த்தப்படாத பள்ளிகளும் உள்ளன.
4) 23,000 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும்.
5) 1.3 இலக்கம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகிறார்.
6) 1,02,229 பள்ளிகளில் ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே உள்ளது. (தினமணி, தினமலர் 6-8-2007)
இந்த அவலத்தைத் தீர்ப்பதைத் தான் விடுதலை பெற்ற ஒரு நாட்டின் முதலாவது செயல் திட்டமாக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய உயர் கல்வியின் நிலை என்ன?
1947 இல் இந்தியாவில் 25 பல்கலைக் கழகங்களே இருந்தன. இன்று அரசுப் பொறுப்பில் உள்ள பல்கலைக் கழகங்கள் 275. தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் 100 உள்ளன.
தேசிய முதன்மை வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் 13 உள்ளன.
கல்லூரிகள் 17,000 உள்ளன.
1995 இல் இந்திய மக்கள் தொகை 85 கோடி. அப்போது உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க இடம் பெற்றோர் வெறும் 57 இலக்கம் மாணவர்கள்.
அதாவது 1,00,000 மாணவர்கள் உயர்கல்வியில் சேர விரும்பினால் வெறும் 613 பேருக்கு மட்டுமே இடம் தரப்பட்டது. அதாவது விருப்பப் பட்டவர்களில் 100 க்கு 6,13 விழுக்காட்டினருக்கு மட்டுமே இடம் தரப்பட்டது.
அப்படி இடம் தரப்பட்ட 613 பேரில் ஏறக்குறை 400 பேர் பார்ப்பன மற்றும் மேல் சாதி மாணவர்கள். ஆனால் இவர்கள் 85 கோடி இந்தியர்களில் வெறும் 15 கோடிப் பேர் மட்டுமே (The Hindu 11-8-2007)
நன்றி : சிந்தனையாளன் செப்டம்பர் 2007
|
கல்வியும் அரசும் ? ! ?
நம்முடைய கல்வியும், பாடத்திட்டமும் முழுவதுமாகத் தலைகீழாக உள்ளன. அதை மாற்ற வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். எனக்கு யோசனை சொல்லக்கூட பயமாக இருக்கிறது. ஆனாலும் சொல்லியாக வேண்டும். கல்வி அதிகாரிகளும், கல்வி அமைச்சரும், அதாவது யாராக இருந்தாலும் சரி, வாரம் ஒரு முறை 10 அறிஞர்கள் குழுவை வைத்து பாடம் படிக்க வேண்டும். கல்வி எப்படி இருக்க வேண்டும் தரமான கல்வி ஆகியவை பற்றி படிக்க வேண்டும். இதை எப்படி எளிமையாக நடைமுறைப் படுத்தலாம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள்.
நாங்கள் எல்லாம் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள் தான். 6 ஆம் வகுப்புக்குப் பிறகுதான் ஆங்கிலம் கற்கவே தொடங்கினோம். உயர் பதவியில் இருப்பவர்கள் பலரும் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் தான். இப்போது ஆங்கல வழிக் க்வி வந்து விட்டது. 6 முதல் 12 ஆம் வகுப்பிற்குள் அதாவது 7 ஆண்டுகளுக்குள் ஒரு மொழியைச் சிறப்பாக எழுதவும், பேசவும் படிக்கவும் வைக்க முடியும். குறிப்பாக 2 ஆண்டிலேயே படிக்க வைக்கவும் முடியும். இப்படி இருக்கும் போது தொடக்கக் கல்வியைத் தமிழில் ஏன் கற்றுக் கொள்ள முடியாது.
இப்படிப் பேசியதால் ராமதாஸ் ஆங்கில விரோதி என்று பட்டம் கொடுத்தார்கள். தமிழ்ப் பற்று பற்றிப் பேசியதால் தமிழ் வெறியன், தீவிரவாதி என்கிறார்கள். ஆங்கிலம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுங்கள். சொல்லப் போனால் முறையாகக் கற்றுக் கொடுக்காததால் நமது பிள்ளைகளுக்குத் தமிழும் தெரியவில்லை. ஆங்கிலமும் தெரியவில்லை. ஒரு மொழிக் கொள்கை உன்னதக் கொள்கை, கொண்டு வந்தோம். வேறு ஒரு மொழி உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக. அது இன்று தமிழை விரட்டி விட்டது. மும்மொழிக் கொள்கை எதை விரட்டும் என்று எனக்குத் தெரியாது.
தமிழகத்தில் முத்துக் குமரன் குழு அறிக்கையை வெளியிட நினைத்தாலும் இந்த ஆண்டு அதை அமல் படுத்த முடியாது. இருப்பினும் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு வரும் சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே விவாதியுங்கள். 20 அறிஞர்களை அழைத்து விவாதித்து ஏதாவது விடுபட்டு இருந்தால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். குழு பரிந்துரைகளை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த இந்த மாதத்திலேயே முயற்சி எடுத்தால் சாத்தியமாக இருக்கும். அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். மக்களுக்கும் மனமாற்றமும் வரவேண்டும்.
நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் இதழ் - செப் 2007
|
மீறப் பெறும் கல்வியுரிமை
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 45 - அனைவருக்கும் கட்டாயக் கல்வி - என்று கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.ஐ.நா. சபையும் இதையே வலியுறுத்தி வருகிறது. உலக அளவில் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்கு அடுத்த படியாகக் கல்வி அடிப்படை உரிமையாக்கப் பட்டுள்ளது. கல்வியும் மனித உரிமையே என்ற கருத்து உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
கல்வியின் தரத்தை மேம்படுத்தப் போவதாகவும், அதிக அக்கறை காட்டப் போவதாகவும் கூறி, மாநில அரசு கட்டுப் பாட்டிலிருந்து கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளில் - எல்லோருக்கும் கல்வி அதாவது பத்தாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி இன்னும் 10 ஆண்டுகளில் உறுதி செய்யப்படும் - என்று கூறியிருந்தார்கள். ஆனால் அது இன்னும் எத்தனை பத்து ஆண்டுகள் கடந்து செல்லுமோ? இலவசக் கல்வி, உடை, உணவு, முட்டை, என்று அரசியல் ஆரவாரம் செய்யும் அரசுகள் - அனைவருக்கும் கல்வி - என்ற நிலையை அடைய முடியவில்லை - ஏன ?
அக்கறை இல்லாத அரசுகள்
கல்வி என்பது தேசத்தின் சொத்து. ஒரு சமூகம் கல்வியில் எந்த அளவுக்குச் சிறந்துள்ளதோ அந்த அளவுக்குச் சிந்தையில் வளர்ச்சியும் செயற்பாட்டில் வேகமும் இருக்கும். ஆனால் அண்மைக் கால அரசுகளின் நடவடிக்கைகளை ஆராயும் பொழுது அவை கல்வியைக் கண்டு கொள்ள வில்லை. மாறாக அதனை தனியார் தன்வயப்படுத்த அனுமதித்திருக்கிறது. என்பதே அசைக்க முடியாத உண்மை. சர்வ சிக்ச அபியான் - என்ற மத்திய அரசுத் திட்டம் 70 லிருந்து 50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே பத்து லட்சம் புதிய குழந்தைகள் இந்தத் திட்டத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கியுள்ளார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் வட மாநிலத்தைச் சார்ந்த மலைவாழ் மக்களுக்கு ஒதுக்க வேண்டிய 90 விழுக்காடு நிதியில் இதுவரை வெறும் 15 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மத்தியஅரசு கொடுக்க வேண்டிய கல்வி நிதி 160 கோடி பாக்கியுள்ளதாகத் தமிழகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு வெறும் 23,142 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. இது மற்ற துறைகளோடு ஒப்பிடும் போது மிகமிகக் குறைவான நிதியே. இந்தியா ஆயுதத்திற்கு 70 விழுக்காடு நிதியை ஒதுக்குகிறது. அறிவுக்கோ வெறும் 7 விழுக்காடு நிதியை மட்டுமே ஒதுக்குகிறது.
கரையும் கல்வி நிலை
தொடக்கப் பள்ளியில் நுழையும் 98 விழுக்காடு குழந்தைகளில் 76 விழுக்காடு குழந்தைகள் உயர்நிலைப் பள்ளியைத் தாண்டியதில்லை. 17 வயது முதல் 23 வயதுக்குள் 7 விழுக்காடு மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். 10 விழுக்காடு மட்டுமே முதுகலை பட்டம் பெறுகின்றார்கள். இறுதியாக ஒரு விழுக்காடு மட்டுமே முனைவர் பட்டம் பெறுகின்றார்கள். இவ்வாறு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல கல்வி 98 விழுக்காடில் தொடங்கி ஒரு விழுக்காட்டில் முடிகிறது. இதைவிடக் கொடுமை இந்த நவீன உலகத்தில் குறிப்பாக நம் தேசத்தில் 5.4 கோடி குழந்தைகள் மழைக்குக் கூட பள்ளிக் கூடங்களில் ஒதுங்கியதில்லை.
நன்றி : மனித உரிமைக் கங்காணி இதழ் - செப் 2007
|
மயிலாடு துறையில் பெருந்திரள் பட்டினிப் போராட்டம்
தருமபுரம் மடாதிபதி சண்முக தேசிகரும், திருப்பனந்தாள் மடாதிபதி முத்துக்குமார சுவாமியும் பார்ப்பனியத்தின் இரண்டு பாதக் குறடுகளாக மாறி வேள்வித்தீ முன் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது என்றும், வடமொழி மந்திரம் தான் சொல்ல வேண்டும் என்றும், தமிழ் மொழிக்கு வேள்வி செய்யும் ஆற்றல் இல்லை என்றும் கூறிவருகிறார்கள். அத்துடன் நில்லாமல், தங்கள் சீடர்கள் நால்வரை ஏவி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வேள்வி நடத்தவும், குடமுழுக்கு செய்யவும், குடும்பச் சடங்குகள் நிகழ்த்தவும் தடை வாங்கியுள்ளார்கள்.
இவர்களின் தமிழ் விரோத, தமிழர் விரோத, பார்ப்பனியச் சார்பு நடவடிக்கைகளைக் கண்டித்துத் தமிழகமெங்கும் வைச நெறியாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த 18-7-07 அன்று திருப்பனந்தாள் மடாதிபதியைக் கண்டித்து அவ்வூரிலேயே தமிழ் வழிபாட்டுரிமைப் போராட்டக் குழு சார்பில் கண்டனப் பேரணி தோழர். பெ. மணியரசன் தலைமையிலும், பொதுக்கூட்டம் வழக்குரைஞர் த.சு.கார்த்திகேயன் தலைமையிலும் நடந்தன.
அடுத்த கட்டமாகத் தருமபுரம் மடம் அமைந்துள்ள மயிலாடு துறையில் தமிழ் வழிபாட்டுரிமைப் போராட்டக் குழு, சார்பில் 25-8-07 அன்று தோழர் பெ.மணியரசன் தலைமையில் பெருந்திரள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது,.இரா. இளங்குமரனார்., தமிழண்ணல் ஆகியோரும் ஆதினங்களின் தமிழ் விரோதப் போக்கைக் கண்டித்து எழுச்சி உரையாற்றினார்கள்.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் செப் 2007
|
வரலாறு திரும்பும் வரலாறு படைப்போம்.
உ.துரைசாமி - சிங்கப்பூர்.
அளவற்ற அறிஞர்களும் கணக்கற்ற கல்வியாளர்களும் எண்ணற்ற எழுத்தாளர்களும் அறிவு புகட்டினர். கடமையுணர்த்தினர். எழுச்சியூட்டினர். அன்றும் இன்றும் என்றும் அவர்களின் அருந்தொண்டும் ஆற்றல் நிறைந்த ஆக்கங்களும், ஏக்கம் நிறைந்த எழுத்தோவியங்களும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
என்றாலும் எந்தமிழர் ஏற்றனரா? எங்கே போகிறது தமிழினம்? என்று மடியும் இவ்வடிமைநிலை? என ஏங்கித் தவிக்கும் எம்மனோரின் எண்ணிக்கையோடு எழுகதிர் எடுத்து வைக்கும் எண்ணங்களும். தொடுத்து நிற்கும் கேள்விக் கணைகளும். தொகுத்துத் தரும் திட்டங்களும் படர்ந்து பட்ட பட்டறிவின் பாற்பட்டவைகளாகவும் பண்பட்ட பகுத்தறிவின் படிப்பினையாகவும் பளிச்சிடுகின்றன என்றால் அருகோவின் ஆற்றலும் உழைப்பும் அருந்துணை புரிய அண்மையில் அவர் எழுதியளித்த முல்லைப் பெரியாறு உடன்பாடும் உண்மைப்பாடும் நூல் அமைந்திருக்கிறது.
தொடரட்டும் அருகோவின் தொண்டு. ஏற்ற முறட்டும் எந்தமிழினம். மலருக்கு மலர்தாவி மகரந்தத்தை எடுத்து வந்து தேன் கூடு கட்டும் தேனீபோல அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அலசி ஆராய்ந்து அதிய தொரு வரலாற்றுப் பொத்தகத்தை ஆக்கியளித்து அன்னைத் தமிழுக்கு ஆரம் அணிவித்திருக்கிறார்.
அனைவரும் அறிய வேண்டியதோர் நூலான இதனை அனைவரும் வாங்க வேண்டும். படிக்க வேண்டும். பாதுகாத்து வைக்க வேண்டும். செய்வார்களா?
புலித்தேவன் புலம் பெயர்ந்து விட்டானா? மருதிருவர் மறம் என்னவானது ? என்கின்றனர். எருமை கூட எறும்பு ஊர்வதை உணருகின்றதாம். நம்மவரோ, எரிமலையே எகிறி வந்தாலும் என்னவென்று எழாமல் எமக்கென்ன என்று இருந்தால் ஏது விடிவு?
கண்ணகிக்குச் சிலை வடிக்க தமிழனைப் பழித்த கனகவிசயர் தலைமேல் கல்லேற்றிக் கொண்டுவரச் செய்தனர் என்பதும், கடல் கடந்து கடாரம் கொண்டனர் என்பதும் காற்றோடு கலந்து கடுந்தொலைவு சென்றுவிட்டதே.
இன்று கால்வயிற்றுக் கஞ்சிக்குக் கலமேறிக் கடல் கடந்து கண்ணீர் சிந்திக் கடும் உழைப்பை ஈந்தும் தமிழன் கண்ணீர் விடும் காட்சி தானே கண்ணில் தெரிகிறது.
பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு - என்று என்றோ கேட்ட சொல் செவிப்பறையைக் கிழிக்கிறதே இன்றும்.
கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற வினாவிற்கு கடல் கடந்து வாழும் கன்னித் தமிழன் விட்ட கண்ணீர்தான் காரணம் என்று சொல்லப்பட்ட விடை இன்றும் அப்படியே தான் உள்ளது.
காட்டை நாடாக்கி, பள்ளத்தை மேடாக்கி, கடும் பாறைகளைக் குடைந்து பாதை சமைத்துப் பக்குவப்படுத்திய தமிழன், எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் இருப்பேன் என்கிறானே என்ன செய்வது? உழைக்கத் தெரிந்த தமிழனுக்குப் பிழைக்கத் தெரியவில்லையே?
இல்லம் தோறும் திண்ணைகட்டி வந்தோரை யெல்லாம் வரவேற்று வாழ்வளித்தவன் பரம்பரையல்லவா? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவரின் வழிவந்தவனல்லவா? முல்லைக்குத் தேர் ஈந்து முகம் மலர்ந்தவன் இவனது முன்னோன் அல்லவா? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று மனமகிழ்பவன் மரபினன் அல்லவா? அதனால் மங்கை உருவில் மகான் உருவில் வந்த மாபாவிகள் மடக்கி விட்டனர் தமிழ் மண்ணை. மறைத்து விட்டனர் தமிழன் கண்ணை. வரலாறு திரும்பும் வரலாற்றைப் படைப்போம்.
நன்றி : எழுகதிர். - செப் 2007
|
துணை நிற்பது எதற்காக ?
(மலேசியாவிலிருந்து வெளிவரும் செம்பருத்தி இதழின் ஆசிரியர் உரை)
அண்மைக் காலமாகத் தமிழ் ஊடகங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவந்துள்ளதை நாமறிவோம். நாட்டில் இன்னும் 523 தமிழ்ப் பள்ளிக் கூடங்களே எஞ்சியுள்ளன. அவற்றுள் 150 தமிழ்ப் பள்ளிகள் கல்வியமைச்சர் டத்தோ இசாமுடின் துன் உசேன் பார்வைக்குத் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடப்பட்ட 150 தமிழ்ப் பள்ளிகளில் 50 க்கும் குறைவான மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதால் அப்பள்ளிகளுக்கோ மாணவர்களுக்கோ எவ்விதப் பயனுமில்லை. அதனால் கூட்டுப் பள்ளிகள் அமைத்தால் அங்குப் பயிலும் எல்லா மாணவர்களும் பயனடைவர் என்பது கல்வியமைச்சரின் கூற்றாகும்.
அவ்வாறு கூட்டுப் பள்ளிகள் அமைக்கப் படுமேயானால் அங்குப் பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பயனடைவதுடன் வாய்ப்பு வசதிகளையும் பெறுவர் எனக் கூறியதோடு. இதன் தொடர்பாகக் கல்வியமைச்சரிடம் நான் பேசப் போவதாகவும் ம.இ.கா வின் தேசியத் தலைவர் டத்தோ ச.சாமிவேலு கூறியுள்ளார்.
கல்வியமைச்சர் டத்தோ இசாமுடின் துன் உசேனின் கருத்து ஒரு வேளை சரியாக இருக்கலாம். ஏனென்றால் அவர் இன்னும் எத்தனைத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் குறைக்கலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டிருப்பவர். அதைக் கருத்தில் கொள்ளாத டத்தோ சாமிவேலு கூறியிருப்பது பெரும் வருத்தத்தைத் தருகின்றது.
தோட்டங்கள் பல மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலை செய்தவர்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர், அல்லது வேலை தேடி நகர்ப்புறங்களை நாடிச் சென்றனர்., இதன் விளைவால் அங்குள்ள தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
மாணவர்கள் குறைவாக இருக்கும் அந்த 150 பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்திருந்தால் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா? எதையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வலம் வந்து கொண்டிருக்கும் டத்தோ ச.சாமிவேறு அவரது தாய்மொழி என்ற முறையில் அக்கறை கொண்டிருக்கலாம். இப்பள்ளிகளுக்குச் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் 150 தமிழ்ப் பள்ளிக் கூடங்களின் உரிமங்கள் இழக்க நேரிடலாம். அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு அப்பள்ளிகளுக்கு மாற்றிடம் கோரும் பணியில் ஈடுபட்டிருக்கலாம். இந்தத் தொலைநோக்குச் சிந்தனை இல்லாமல் கூட்டுப் பள்ளிகளுக்காகக் கல்வியமைச்சர் முன் மொழிந்தவுடன் அதன் வழி மொழிவுக்குத் துணை போனது பொருத்தமான செயலாகுமா? தன் கையைக் கொண்டு கண்ணைக் குத்திக் கொள்ளவதா?
இனிமேல் புதிதாகத் தமிழ்ப் பள்ளிகள் அல்லது சீனப் பள்ளிகள் நிருமாணிக்கப்பட மாட்டா என அரசு அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கும் வேளையில் மேம்பாட்டுத் திட்டங்களினால் 365 தமிழப் பள்ளிகள் பறிபோயின. போனவை போனவைதாம். இவற்றுக்கு மாற்றிடம் கேட்டுப் புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கத் தவறிவிட்டோம். இனிவரும் காலங்களில் இருக்கின்ற 523 தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றி நிலைநிறுத்த வேண்டாமா?
|
புலம் பெயர் வாழ்வில் நாம்.
நர்மதா நவீந்திரன் பிரிவு 9 -11 வயது
( தென் மேற்கு இலண்டன் தமிழ் கல்விக்கூடம் கலைவிழா மலரில் மாணவரது ஆக்கம் )
புலம் பெயர்ந்து வந்திருக்கும் நாம் எமது தாயகத்தை மட்டுமா விட்டுவிட்டு வந்திருக்கின்றோம். எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அல்லவா விட்டு விட்டு வந்திருக்கின்றோம். ஏன் வந்தோம் ? எதற்கு வந்தோம்? என்பதையெல்லாம் மறந்துவிட்டு பெற்றோரையும் மதியாமல் எமது வழியில் செல்கின்றோம்.
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்பதை மறந்து விட்டு ஆங்கில வாழ்க்கைக்கு அடிமையாகியுள்ள நாம், அவர்களின் நாகரிகத்திற்கும் அல்லவா மாறியிருக்கின்றோம். சிறியவர்களை விட இங்கு பெரியவர்கள் பலர் ஆங்கிலத்தில் பேசுவதை மரியாதையாகக் கருதுகின்றார்கள். இங்கு நாம் அறிய வேண்டிய எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு தீய வழியில் செல்லும் சிலர் இதை ஒரு நாகரிகம் என்று கருதுகின்றார்கள். நாம் இங்கு வருவதற்குக் காரணமாயிருந்த பல வீரர்கள் அங்கு படும் இன்னல்களை யெல்லாம் மறந்து விட்டு நாம் இங்கு வாழ்கின்றோம். நாம் தவறான வழியல் செல்லாமல் எமது பண்பாட்டின் வாயிலாகச் செல்ல வேண்டும். இங்கு எத்தனையோ தமிழ்க் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. அங்கு சென்று தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அறியலாம். நாம் எம்நாட்டை மறுபடியும் அடையும் போது ஒரு தமிழனாக, அறிவாளியாக, சிறந்தவனாக கால் பதிக்க வேண்டும். என்று மனதில் நினைக்க வேண்டும். பல தமிழ் அறிஞர்கள் தமிழைப் பற்றி எவ்வளவோ சீர்திருத்தக் கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள், எழுதியிருக்கின்றார்கள். பழந் தமிழ் நூல்களைப் படித்து பின்பற்றுவதற்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. அதனால் நாம் அதைப் பின்பற்றி எம் வாழ்வில் உயர வேண்டும்.
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|