வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 05 - 08 - 2007



பாடத்திட்டம்.

காட்டுக்குள்
கட்டடங்கள்
குரோட்டன்சுக்குப் பின்னாலிருந்து
என் குழந்தை கேட்கிறது

அப்பா
அவரைச் செடி
ஒரு வித்திலைத் தாவரமா?
இரு வித்திலைத் தாவரமா?

அவரை பயிரிடும்
ஆத்தாவுக்கு இதற்கு
விடை தெரியாது.

மரவள்ளி பயிரிடும்
தாத்தாவுக்கு அதன்
லத்தீன் பெயர் தெரியாது.

அறிவியலும் புவியியலும்
தெரியும் என் குழந்தைக்கு
செடி வளர்க்கத் தெரியாது.

முழுநிலவன்

நன்றி தமிழர் கண்ணோட்டம் - அகஸ்ட் 2007




இவன்தான் தமிழன்

கா. வேழவேந்தன்

வந்தவர்க்கே பந்திவைப்பான் தமிழன், வந்தோர்
வாய்மொழிக்கே தாள் திறப்பான தமிழன் - வீட்டுள்
எந்த மொழி நுழைந்தாலும் தலைமேல் தூக்கி
ஏற்றி அதைப் போற்றிடுவான் தமிழன், ஈன்ற
சொந்தமொழி நொந்தழிந்தே நைந்த போதும்
சுரணையின்றி உறங்கிடுவான் தமிழன் , இஃது
செந்தமிழ்த்தாய் செய்தவினைப் பயனோ? இன்றேல்
திருந்தாது இவன்வந்தா பிறந்தி ருப்பான்?

ஒற்றுமையா என்னவிலை என்றே கேட்கும்
ஒருபேதை மறுபெயர்தான் தமிழன், ஈது
வெற்றுரையா? வரலாற்றை உற்றுப் பார்த்தால்
வீறுடனே போரிட்டோர் யார் யார் சேரன்
முற்றுகையால் சோழர்களை வென்றான் சோழன்
முனைப்போடு பாண்டியனைக் கொன்றான் என்றால்
உற்ற உடன் பிறப்புடனே மோதி மோதி
உயர்குருதி ஓடவிட்டோன் தமிழன் தானே.

இனப்பற்றா ? என்ன பொருள்? என்றே கேட்கும்
என்தமிழன் மாண்புக்கோர் சான்றா? ஆங்கே
மனையிழந்தும் உறவிழந்தும் உயிர்கள் ஈந்தும்
மானப்போர் நிகழ்த்துகிறான் ஈழத் தோழன்
வினைப்பேரில் தமிழீழம் வென்றால், ஐ.நா.
வெளிமுகப்பில் தமிழர்கொடி பறக்கும், ஆனால்
தினையளவும் துணைநல்க முனைந்திடாமல்
திருக்கல்லாய்ச் சமைந்திருப்போன் தமிழன் தானே?

நன்றி தெளிதமிழ் இதழ் - மேழம்




காதல் மழை.

அறிவுமதி

உதிர்ந்த என்
கூந்தல்
முடிகளைச் சுருட்டி
உன் விரலில்
மோதிரம் போட்டுக்
காட்டுவதால்
என்
இதயத்தில் நீ
இடம் பிடித்துவிட
முடியாது.

வா.. வாடா
வந்து
என்
மூளையுடன்
உரசி
காதலைப்
பற்ற வை

நன்றி - செம்பருத்தி சூன் 2007




அடிமையாக இருப்பதே பெருமையா?

ஈரானுக்கு எதிராகப் போரிட்டுவிட்டு ஓய்வுக்காக இந்தியா வந்துள்ளது அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பல். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான நல்லுறவை வளர்க்கவும், இந்தியக் கடற்படையுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் வந்துள்ளதாக கப்பலின் தளபதி அறிவித்துள்ளார். அந்தக் கப்பலின் உண்மையான முகத்தை அறியாமல், அதனுடைய கொடூரத்தைப் புரியாமலோ என்னவோ அதன் வருகையை நாம் கொண்டாடி வரவேற்றுள்ளோம். நமது கடற்படை, குண்டுகள் முழங்க வரவேற்றுள்ளது.

யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் என்ற அமெரிக்காவின் போர் விமானம் தாங்கிக் கப்பலில் இரு அணுசக்தி நீர் உலைகள் இருக்கின்றன.அவை 194 மெகாவாட் சக்தியுள்ள டர்பைன்களை இயக்குகின்றன. பெரும் போரை நடுநாயகமாக நின்று நடத்தக்கூடிய வல்லமை கொண்டது இந்தக் கப்பல். அதோடு உலகின் எந்த மூலையோடும் தொடர்பு கொண்டு கடல்வழித் தாக்குதலை நடத்தக்கூடிய அதி தொழில் நுட்பமும் கொண்டது. ஈராக், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்ட அநியாயமான வீண் சண்டையில் லட்சக்கணக்கான மனித உயிர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது இக்கப்பல்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கப்பலிலிருந்து அணுக்கதிர் வீச்சு ஏற்படலாம், அப்படி ஏற்பட்டால் நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அழிவுச் சம்பவங்கள் நிகழலாம். அணுக்கதிர் வீச்சு ஏற்படாது என்று பலரும் கூறுகிறார்கள். அப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கு விஞ்ஞானிகளிடமோ அரசிடமோ பதிலில்லை. அபாயம் ஏற்படாமல் இருக்க எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. கதிர் வீச்சு அபாயம் ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் கப்பலில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். கடுமையான பருவ நிலை காரணமாக யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் போன்ற கப்பல்கள் பெரும் ஆபத்தை உண்டாக்க வல்லவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படிப் பெரும் ஆபத்தான கப்பலை இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு எப்படி அனுமதித்தது, ஏன் அனுமதித்தது.

யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் கப்பலின் பிரமாண்டத்தன்மை எதிரியை வசீகரிக்கக்கூடியது. இந்தக் கப்பல் மொத்தம் 23 மாடிகளைக் கொண்டது. 5 மாடிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பிற 18 மாடிகளும் தண்ணீருக்குள்தான் இருக்கும். 75 போர் விமானங்களைத் தாங்கி நிற்கும் கொள்ளளவு கொண்டது. 1092 அடி நீளமும், 282 அடி அகலமும் கொண்டது. அதனுடைய முகப்பு பீம் மட்டும் 134 அடிநீளஅகலம் கொண்டது. 5680 பேர் அக்கப்பலில் இருக்கின்றனர். 58 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளது. மூன்று பாதிரியார்கள் உள்ளனர். பிராத்தனைக் கூடமும், டென்னிஸ் விளையாட்டு மைதானமும் உள்ளன. A4W இரண்டு அணுசக்தி உலைகள் உள்ளன. நான்கு சாப்டுகள் கொண்டது. மேற்தள அகலம் மட்டும் 76.68 - 78.4 மீட்டர். விலை நான்கு அரை பில்லியன் யு.எஸ் டாலர்கள். இது போன்று அமெரிக்காவிடம் 11 கப்பல்கள் உள்ளன. நான்கு அரை ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கக் கூடியது. கப்பலின் பிரமாண்டம் அதனுடைய கொடூரத்தை மறைக்க உதவுமா?

ரஷ்யாவிலிருந்து ஐ.என்.எஸ் என்ற அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்த போது செய்யப்பட்ட முன்னேற்பாடுகளில் ஒன்றைக்கூட அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் கப்பலுக்கு செய்யப்படவில்லையே ஏன் ? பாபா அணு ஆராய்ச்சி நிலையமும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனமும் கப்பலைக் கண்காணிக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லையே ஏன். இந்தக் கப்பலின் வருகையால் இந்திய அரசியல் அறிவியல் பாதுகாப்பு விசயங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இந்தக் கப்பலின் வருகையை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா. அந்தக் கப்பலின் அணுசக்தி ஆயுதங்கள் எதுவும் இருக்காது என்று நம்புவதும், அக்கப்பலுக்குள் சென்று சோதனையிட யாரும் அனுமதிக்காததும் நம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

இந்தக் கப்பலின் அணு ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியாது - என்று யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் கப்பலின் தளபதி மைக்கேல் மனாசீர் மற்றும் அட்மிரல் டெரிக்விளாக் இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர். ஆனால் நமது பிரதமர் இந்தக் கப்பலில் எந்த அணு ஆயுதமும் இல்லை என்று அறிவித்துள்ளதோடு அக்கப்பலையும், இராணுவ வீரர்களையும் சோதனையிடத் தடையும், கடவுச்சீட்டு எதுவும் அவரிடம் கேட்கவும் கூடாது என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். இது எத்தகைய செயல்பாடு.

ஜார்ஜ் பெர்னாட்டஸ் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஒரு முறை அவர் அமெரிக்காவிற்குச் சென்ற போது அவருடைய உள்ளாடைகள் வரை ஸ்கேன் செய்து சோதனையிட்டு அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் இந்தியாவை அவமதித்தனர். என்பதை இந்தப் பிரதமர் மறந்துவிட்டாரா. ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரையே ஆயிரம் சோதனைகள் செய்கிற போது அமெரிக்காவின் சாதாரண ராணுவ வீரரை எந்தச் சோதனையும் இல்லாமல் கடவுச் சீட்டுக் கூடக் கேட்காமல் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று எதன் அடிப்படையில் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வழக்கமான சோதனைகள்கூட இல்லாமல் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லவும் தங்கவும் ஆட்டம் பாட்டம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் எதற்காக அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அமெரிக்கர்களை குஷிப்படுத்த உள்ளூர் மாடல் அழகிகள் துணை நடிகைகள் மட்டுமல்ல, சீனா, சப்பான் போன்ற நாடுகளிலிருந்தும் கலாச்சார விழா என்ற பேரில் - பெண்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து நட்சத்திர விடுதிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்று செய்திகள் கூறுகின்றன. அமெரிக்காவின் சாதாரண சிப்பந்தியைக்கூட எல்லா வகையிலும் மகிழ்ச்சி படுத்தினால்தான் இந்தியா - அமெரிக்காவுடன் நட்புறவாக இருக்க முடியுமா. யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று பல நாடுகள் பகிரங்கமாக எதிர்த்துள்ளன. அந்த நெஞ்சுரம் இந்தியாவிற்கு ஏன் இல்லை. பெண்களைக் காட்டி சேவை செய்து தான் நட்புறவை வளர்க்க வேண்டுமா. இன்னும் எத்தனை நூற்றாண்டுக்கு அடிமையாக இருப்பதையே பெருமையாக நாம் கருதப் போகிறோம்.

நன்றி அம்ருதா இதழ் - ஆகத்து 2007




கல்வி

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் காலம் இது. கல்வியாளர்கள் கல்வி ஆர்வலர்களின் பல்வேறு யோசனைகளுக்கு மத்தியில் பல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களும் பல்வேறு யோசனைகளை வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள யோசனைகள் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சில பள்ளிக்கூடங்கள் தேர்வு சாதனை படைத்துவிட்டதாக சொல்கின்றனர். அந்தப் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் யார்

ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு அங்கு இடம் அளிக்கப்படுகிறதா.

தொடக்கக் கல்வியை அனைவருக்கும் ஒரே சீராக வழங்க வேண்டியது அரசின் கடமை. இந்தக் கடமையிலிருந்து அரசு தவறக்கூடாது.

தொடக்கக் கல்வியிலிருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை ஒழுக்க நெறிகள் நன்னெறிகள் ஆளுமைப் பண்புகள் இவைகள் போதிக்கப் படவேண்டும்.

ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதால் பள்ளிகள் மற்றும் அனைத்துக் கல்லூரிகளும் மே சூன் 2 மாதங்களும் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த நாட்களை சரிசெய்வதற்கு சனிக் கிழமைகளில் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். தொடக்கக் கல்விக்கு ஒரு தனி அமைச்சர் நியமிக்கப் படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பத்தாம் வகுப்பு வரை எந்த மாணவனையும், வடிகட்டும் முறை இருக்கக்கூடாது. முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் அனைவரையும் தேர்ச்சிபெற வைக்க வேண்டும். என்று அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

சில தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பி விடுவதாகச் செய்தி வெளியாகிறது. அப்படிப்பட்ட பள்ளிகள் மீது கல்வித் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் பிளஸ் டூ வரை இருந்தால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குத் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பதற்கான அரசாணைணை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி கல்விச் செய்தி சூன் 2007



கொழும்பிலிருந்து தமிழர் வெளியேற்றம் !

தமிழ் நாட்டிலிருந்து தமிழ் வெளியேற்றமா?

முத்து செல்வன்

சென்னை உயர்நீதி மன்றம் 30-5-2007 அன்று குடமுழுக்கு, வேள்வி, இல்லச் சடங்குகள் உள்ளிட்டவற்றைத் தேவாரம், திருவாசகம் பாடியோ தமிழ் மந்திரங்களைச் சொல்லியோ நடத்தக் கூடாது. என்று இடைக்காலத் தடையாணை பிறப்பித்துள்ளது. தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பு அளித்துள்ளதாகக் கருதப்படும் திருப்பனந்தாள் மடத்தலைவரைச் சேர்ந்தவர்கள் தமிழ் மண்ணில் தமிழுக்குத் தடையாணை பெற்றுள்ளனர்.

திருவாசகத்திற்க உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் - எனச் சிறப்பிக்கப்படும் திருவாசகம் திருப்பனந்தாள் மடத்தலைவரை உருக்கவில்லை - என்பது வியப்பே.

தமிழர் இல்லச் சடங்குகளில் நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் இடமில்லையா? அதனையும் நீதிமன்றம் தடுப்பது ஏன்? இது வான்புகழ் வள்ளுவருக்கும் பொருந்தும் தானே.

கோயிற் கரணங்களிலும் (சடங்கு) தமிழுக்கு இடமில்லை. இல்லக் கரணங்களுக்கும் தமிழுக்கு இடமில்லை. பல்லாண்டுகளாகத் தமிழகத்தில் மறைமலை அடிகள் சோமசுந்தர பாரதியார். பெரியார், திரு.வி.க, அண்ணா, இராசமாணிக்கனார், கி.ஆ.பெ போன்ற தமிழினத் தலைவர்கள் நம் இல்ல நிகழ்ச்சிகளைச் சமயஞ்சார்ந்தும் பகுத்தறிவு சார்ந்தும் திருக்குறள் சார்ந்தும் தமிழில் நிகழ்த்திட வழிமுறை வகுத்தளித்து நடைமுறையில் பலராலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவே.

நீதிமன்றத் தடையாணை, தமிழர் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழைத் தடுத்திடுமா? பூசை வேளை, கரண வேளை, வேள்வி நேரம், புனிதமானவை என்பதால் அவ்வேளையில் தமிழ்க்குரல் ஒலிக்கப்பட்டால் சமற்கிருத மந்திரங்கள் தம் ஆற்றலை இழந்துவிடக் கூடும் என்றும் அந்த நேரத்தில் தமிழில் உரையாடுவதையும் வழக்குத் தொடுத்துத் தடுத்தாலும் வியப்பில்லை. வடலூர் வள்ளலார் திருவிடத்திற்கும் நீதிமன்றத் தடையாணை பொருந்துமா? தப்பித் தவறி இவ்விடங்களில் இவ்வேளைகளில் தமிழ் ஒலிக்கப்பட்டுவிட்டால், வேத சாத்திர முறைப்படி தீட்டுக் கழிக்கத் திருப்பனந்தாள் மடம் ஆட்களை அனுப்புமா?

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே ஆரியம் நன்று தமிழ்தீது - எனக் கூறிய குயக்கொண்டானை அங்கதம் பாடிச் சாவித்த (சாபம் இட்ட) நக்கீரர் போன்றோர் தமிழகத்தில் வீறு கொண்டெழுந்து தமிழுக்கு ஏற்பட்டுவரும் களங்கத்தைத் துடைத்துக் கழுவாய் தேட வேண்டும். அன்று குயக் கொண்டானுக்கு ஒரு நக்கீரர் - தமிழ் ஆட்சியில் உள்ள இந்நாளில் திருப்பனந்தாளுக்கு எத்தணை நக்கீரர்கள் கொதித் தெழுந்திருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழுக்கும் இடமில்லை. தமிழருக்கும் வாழவில் வளமில்லை. அது குறித்த உணர்வுமில்லை. எனும் நிலை இருக்கலாமா? தமிழக அரசு உடனே இதில் தலையிட்டுத் தமிழைத் தமிழ்ப் பகைவர்களிடமிருந்து மீட்டுத் தமிழுக்கு ஏற்றம் அளித்திட வேண்டுகிறோம்.

நன்றி ஊற்று - சூலை இதழ்.




கல்விக் கொள்ளை

தனியார் பொறியியற் கல்லூரிகளிலும். மருத்துவக் கல்லூரிகளிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பபடுவதாக அதிரடி சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதிகக் கட்டணம் வசூலிப்பது என்பது புதிய செய்தி அல்ல. தொடக்கப் பள்ளிகளிலேயே தொடங்கி விடுகின்ற வசூல் வேட்டையின் விரிவாக்கம்தான் தனியார் கல்லூரிகள்.

தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் அளவுக்கு மீறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புகுமுக மழலையர் வகுப்புகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கே ஆயிரக் கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. வருமானத்தில் பாதிக்குமேல் பள்ளிகளில் கொட்டிவிட்டு வறுமைக்கு வாழ்க்கைப் படுகின்றனர் பெற்றோர்.

கல்வி வணிகமயமாக்கப் படுவதைக் கண்டித்து எழுதியும், பேசியும் போராட்டங்கள் நடத்தி அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்தும், அதனைக் கண்டு கொள்ளாமல் கல்விக் கொள்கைக்கு வாய்க்கால் வரப்புகள் அமைத்துக் கொடுத்து விட்டு இப்போது அதிரடி சோதனை செய்வதில் ஏதோ உளநோக்கம் இருப்பதாகவே பொதுமக்களால் பேசப்படுகிறது.

உண்மையிலேயே கல்வி வணிகத்தைக் கட்டறுக்க வேண்டுமெனில் தனியாரின் மழலையர் பள்ளிகள் முதல் மருத்துவக் கல்லூரி வரை கட்டண வசூலிப்பை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.

எனினும் தற்போதைய நடவடிக்கை நலம் பயக்கும் என நம்பலாம்.

முகம் இதழின் தலையங்கத்தில் சிறப்பாசிரியர்





விளம்பரதாரர் நிகழ்ச்சி

இதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும் இடம் பெறும் விளம்பரங்கள் தன்னை விளம்பரம் என்றே அறிவித்துக் கொண்டு வரும். விளம்பரம் நல்லதோ மோசமானதோ - மக்கள் அதை விளம்பரம் என்று உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால் தன் சார்ந்த எதுவும் விளம்பரமேயில்லை என்பதான ஒரு விளம்பரத்தை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் விழா பாளையங்கோட்டையில் கடந்த 17-6-07 அன்று நடைபெற்றது. விளம்பரத்திற்கு அலைபவன் அல்ல நான் - என்கிற ஓர் அரிய அறிவிப்பைத் தலைவர் செய்திருக்கிறார்.

மாணவர்களுக்கு வழங்கும் இலவச பேருந்துப் பயணச்சீட்டில், கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கும் பையில், வழங்கும் நிதியுதவி காசோலைகளில் - படம். பேருந்தில் உதடு ஒட்டும், ஒட்டாத பொன்மொழிகள்.

இதுவெல்லாம் விளம்பரம் என்று யாராவது நினைத்தால் தவறு. பேருந்து இலவசப் பயணச் சீட்டில் அதில் பயணம் செய்பவரை விடவும் அச்சலுகையை வழங்கியவர் யார் என்பதே- அவர் படத்தைப் போடுவதே முக்கியம். புரிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாய் நம்புங்கள். இதுவெல்லாம் விளம்பரத்திற்காக அல்லவே அல்ல. இந்தப் படம் இல்லாவிட்டால் பேருந்து மக்கார் செய்து விடும். காசோலை செல்லாமல் ஆகிவிடும். இலவசஅரிசி உலையில் கொதிக்காது. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

நன்றி - மண்மொழி சூன் - சூலை இதழ்


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061