வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 21 - 04 - 2007



நேற்றும் இன்றும்.

செருப்பே
ஆண்டது
மெய் சிலிர்த்தான்
இராமனின்
அடியான்.

காலின் செருப்பு
தலையின்
முடியானது.

புயல் தாக்கியதா

காலும்
தலையும்
ஒன்றானதில்
கதறி
உயிர்துடித்தான்
மனுவின்
அடியான்.

புரட்சிதான்
இருப்பினும்

எங்கள்
தெருவில்
செருப்புத்
தைக்கும்
இராமன்
கேட்கிறான்.

செருப்பே
ஆண்டது.

ஆளமுடிந்ததா
செருப்புத் தைப்பவன்.
நேற்றும் இன்றும்.


- காசி ஆனந்தன் -
செம்பருத்தி ஏப்ரல் 2007




புரட்சிக் கவிஞரும்

பொதுவுடைமைச் சிந்தனைகளும்

பாதிக்குதே பசி என்றுரைத்ததால் செய்த
பாவத்தைக் காரணம் காட்டுவார் - மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
ஓதி நின்றால் படை கூட்டுவார்.

கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள் !
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளினும்
உடமை யாவும் பொதுமையாக
உலகு நன்று வாழ்ந்ததாம்
கடையர் செல்வர் என்ற தொல்லை
கடவுள் பேர் இழைத்ததே.

சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்கும் பொதுத் தொழிலாளர் சமூகம்
மெத்த இழிவென்றும் மிகுபெரும்பா லோரைஎல்லாம்
கத்திமுனை காட்டிக் காலமெலாம் ஏய்த்துவரும் பாவிகள்.

தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்
தாரணி என்ற எண்ணம்
தீமைக்கெல்லாம் துணையாகும் இயற்கை
செல்வத்தையும் அழிக்கும்.

உன்வீடு உனது பக்கத்து வீட்டின்
இடையில் உள்ள சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறுவிடாமல் எறு மேன்மேல்
ஏறிநின்று பாரடா எங்கும்
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்.
........
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய்.
புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது
புவியை நடத்துப் பொதுவில் நடத்து.

மண்மீதில் உழைப்போ ரெல்லாம்
வறியராம் உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம் இதைத்தான்
கண்மீதில் பகலிலெல்லாம்
கண்டுகண் டந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராம் தம்பி.

வியர்வையும் அயர்வுமாய்ப் பண்யை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனர்
அய்யகோ நெஞ்சமே இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்
களைபோக்க சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்.
இவ்வுலகு உழைப்பவர்க்கு உரியது என்பதையே.

செப்புதல் கேட்பீர் இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்
சுப்பல்களாக இனித்
தொழம்பர்களாக மதித்திட வேண்டுாம்
இப்பொழுதே நிழ் - பொது
இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்னே !:

புரட்சிசெய் புரட்சிசெய் தம்பி
புதிய நல்வினை நம்பி
புரட்சியினா லன்றி நாடு
பொதுமை கொள்ளாதுயர் பீடு.

ஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ.

இவர்கள் யாரென எனக்குத் தெரியும்
புரட்சியின் பேரால் புரட்டு செய்பவர்கள்
தொழிற் சங்கத்தால் தோழர்கள் உழைப்பை
வழிப்பறி செய்யும் வலஇட சாரிகள்
தாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும்
தாய்நாட்டுப் பற்றும் சற்றும் இலாதவர்
முடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில்
அடித்தொழு திருக்கும் அடிமைகள் மார்க்சு இலெனின்
நூல்களை யெல்லாம் நுனிப்புல் மேய்ந்து
கால்படித் தமிழால் மேற்படியாரின்
விளக்கெண்ணெய் மொழியால் விளக்கவும் செய்பவர்.

நன்றி : சிந்தனையாளன் - ஏப்ரல் 2007




புதுமுகம்

ஒரு சாய்ந்த மாலை...

அந்த உழவன்
தன் முகத்தைக் காய்ந்து கிடந்த
நதியின் நடுவே நின்றபடி
சிதைத்துக் கொண்டிருந்தான்.

அவன்
முன்னோர்களுக்கு
பற்பல நூற்றாண்டுகளாய்
பாலூட்டி வந்த ஆறு
களவாடப்பட்டிருந்த துயரம்
அவனக்குள் இருந்தது....

திடீரென
இரண்டு தேவதைகள்
தோன்றி
அவனுக்குப் புதுமுகம் அருளின.

கோட் சூட் அணிவித்தன,

ஆங்கிலம் அவசரமாய்
அவனுக்குள் ஒளிர்ந்தது.

கணிப்பொறியைக்
கைகளில் திணித்து மறைந்தன.

தரிசு வயலின்
ஒரத்தில் இருந்த வேப்பமர நிழலில்
அவன் கணிப்பெறி
ஓடிக் கொண்டிருந்தது....

இணையதளத்தில்
அந்த தேவதைகளின்
அம்மணப்படத்தைப் பார்த்தபடி அவன்.

நன்றி : சுந்தர சுகன் இதழ் எண் 239.




அபாய மணி

புத்தக மூட்டை
முதுகில் கனக்க...
நத்தைக் கூடாய்
நகர்பவனே... நில்.

உனது பயணம்
எங்கே ?
விண்வெளிக்கா ?
பிறகேன்
உன் முதுகில்
இத்தனை பெரிய மூட்டை.

ஒரு வேளை ...நீ
ஒலிம்பிக் போயிருந்தால்
பளுதூக்கும் போட்டியில்
பதக்கம் பெற்றிருப்பாய்.

பாவிகளே
இந்தப் பூக்களின்
தலையில்
பொதியேற்றிய புத்திசாலிகளே.

பாருங்கள் - நம்
வருங்காலத் தூண்கள்
வளைந்து நடப்பதை.

நளைய மன்னர்கள்
நசிந்து கிடப்பதை.

குழந்தையாய் உள்ளே சென்றவன்
குழப்பங்களாய்த் தானே
திரும்புகின்றான்.

கனவுகளைக் கொன்றுவிட்டு
கோனாருக்குள்
குடியேறச் சொல்லும்
அப்பாக்கள்.

உருபோடச் சொல்லும்
உபாத்தியாயர்கள்.

பள்ளிக்கூட மணி
அழைப்பு மணியாக
இருக்க வேண்டும்
அபாய மணியாக அல்ல.

வதம்பை சந்திரசேகரன்
நன்றி : பூக்களின் அகராதி தொகுப்பு




முட்சுவை

கரும்பின் சுவையறிவோம், கனியின் சுவையறிவோம், கள்ளின் சுவையறிவோம்,
சொல்லின் சுவையறிவோம், முள்ளின் சுவையறிவோமா? இதோ -
வள்ளுவப் பெரியார் வழங்குகிறார் முட்சுவையை.
தாவர உறுப்புகளில் முள்ளும் ஒன்று.
அந்த முள்ளின்தான் எத்தனை வகைகள்.
கருவை முள் , காரை முள் ,
வேலி முள் , வேலா முள் ,
சுள்ளி முள் , சீத்தை முள் ,
இலந்தை முள், கிளுவை முள் ,
சப்பாத்தி முள் , ரோசா முள் -

இப்படி எத்தனையோ முள் வகைகள் இருக்கும் போது அய்யன் திருவள்ளுவப் பெரியாரின் அறிவார்ந்த பார்வையில் பட்டதென்னவோ நெருஞ்சி முள்தான். நெருஞ்சி முள்ளின் தோற்றத்தை ஒரு முறை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். எப்படி இருக்கிறது? வரலாற்றுத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் பல்வேறு படைக்கலங்களைப் பயன்படுத்திச் சண்டையிடுவார்கள். அப்படைக் கலங்களில் ஒரு வகை கதை நீண்ட கைப்பிடியின் ஒரு பக்கம் உருண்டையான அமைப்புடன் கூடியது அதன் மற்றொரு வகை முட்சுதை.

இக்கதையின் உருண்டையான தலைப் பகுதியில் ஊசி ஊசியாக நீட்டிக் கொண்டிருக்கும் உலோக முட்களை எண்ணிப்பாருங்கள். அதன் தாக்குதல் தரும் துன்பம் எத்தனை கொடியது. ஒருவேளை இந்த நெருஞ்சியை முன் மாதிரியாகக் கொண்டுதான அம் முட்கதையையும் வடிவமைத்தார்களோ. என்னவோ?

மேலே கண்ட அத்தனை முட்களிலும் இல்லாத எந்தச் சிறப்பை இந்த நெருஞ்சியிடம் கண்டார் அய்யன். சற்றே சிந்தித்தால் போதும். காரணம் கதிரவன் ஒளிபோல தெற்றென விளங்கும்.

மற்ற மற்ற முட்களெல்லாம் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில், ஒரு முறைதான் குத்தும். ஆனால் இந்த நெருஞ்சி முள்ளோ, ஒரே நேரத்தில் ஒரு முறையில் பல இடங்களில் குத்தும். திரும்பிய பக்கமெல்லாம் குத்தும். திரும்பத் திரும்பக் குத்தும்.

ஆகவேதான் மாதர் அடியின் மென்மைக்கு அனிச்ச மலரையும் அன்னத் தூவியையும் சுட்டிக் காட்டிய அய்யன். அந்த மெல்லிய அனிச்சமும் அன்னத் தூவியும் கூட அவ்வடியை எந்த அளவு வருத்தும் என்பதை உணர்த்த நெருஞ்சியைத் தொட்டுக் காட்டுகிறார்.

இதில் இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நெருஞ்சி முள்ளை முள் என்னாமல் பழம் என்கிறார். ஏன்? பாம்பு என்றதும் அதன் நஞ்சுக்கஞ்சிய படையும் நடுங்கும் அல்லவா? அதைப்போல முள் என்று குறிப்பிட்டால் கூட, அதன் கூர்மை, குத்தும் துன்பத்தை உள்ளத்தில் ஏற்படுத்தி, உணர்வில் வலிக்கச் செய்து விடுமோ என்று அய்யுற்றே நெருஞ்சி முள் என்று கூறாமல் நெருஞ்சிப்பழம் என்கிறார். நச்சரவை நன்காடு என்பதைப்போல இறப்பை அமரத்துவம் என்பதைப்போல - இதோ - அந்த இனிய குறள் -

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.


இவ்வண்ணமாக, சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த கவிச்சுவை காரணமாகவே திருக்குறள் உலக இலக்கியங்களிலெல்லாம் இமயமாக, உயர்ந்து திகழ்கிறது.

நன்றி : கண்ணியம் - ஏப்ரல் 2007




ஹிரோஷிமா - ஆகஸ்ட் 6, 1945

தமிழில்: நீலமணி

காலை 8-16 ஹிரோஷிமா நகரின் மத்தியப் பகுதிக்கு 1900 அடி உயரத்தில் பன்னிரண்டரை கிலோ டன் சக்தியுள்ள அணுவெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அந்த நகரம் முழுதும் நொடியில் பாழானது. அந்தக் கணத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் எரிந்தும், சிதறுண்டும், நசுங்கியும் இறந்தனர்.

இன்னும் பற்பல ஆயிரம் மக்கள் ஒவ்வொரு வகையிலுமாகக் காயப்பட்டோ, கதிரியக்க நோயால் சாக விதிக்கப்பட்டோ இருந்தனர். நகரின் மையப்பகுதி தரைமட்டமாயிற்று. நகரின் ஒவ்வொரு பகுதியும் சேதப்பட்டது. குண்டு விழுந்த இடத்திலிருந்து 5 மைல் தூரத்திலிருந்த மூங்கில் மரங்களின் அடித் தண்டுகள் கூடக் கருகிப் போயின. ஒன்றே முக்கால் மைல் தூரத்திற்குள் இருந்த மரங்களில் பாதி, சாய்ந்துவிட்டன. பதினேழு மைல் தொலைவிலிருந்த சன்னல்கள் உடைந்தன. வெடித்த அரைமணி நேரத்திற்குப் பிறகு, அனல் துடிப்பாலும் கட்டங்கள் இடிந்து விழுவதாலும் உருவான தீ ஒரு நெருப்புப் புயலாகத் திரண்டெழுந்து ஆறு மணி நேரம் வீசியது. குண்டால் ஏற்பட்ட ஒரு கறுப்பு மழை காலை 9 மணி முதல் மாலை வரை நகரின் மேற்குப் பகுதிகளில் விழுந்து கொண்டிருந்தது. வெடிப்பிலிருந்து கதிரியக்கத்தை இந்த மழை தரைக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. வெடிப்பினால் உண்டான வினோத வானிலையினால் ஏற்பட்ட வன்மையான சூறைக்காற்று நடுப்பகல் முதல் நான்கு மணிநேரம் நகரை மேலும் தாக்கியது. உடனடியாகச் செத்தவர்களும், காயங்களால் அடுத்த மூன்று மாதங்களில் இறந்து போனவர்களும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர். நகரிலிருந்தவற்றில் அறுபத்தெட்டு விழுக்காட்டுக் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்தோ, செப்பனிட இயலாத அளவுக்குச சேதமடைந்தோ போயின. நகரின் மையப்பகுதி கற்கள் பரவிய தட்டைப் பரப்பாகிவிட்டது. வலுவான கட்டடங்களின் இடிபாடுகள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.

குண்டு வெடித்த சில நிமிடங்களில், கனத்த புழுதி மேகங்களும் புகையும் வானில் நிரம்பி, பகல் இருண்டது. முழு நகரமுமே ஒரு நொடியில் விழுந்து அதன் இடிபாடுகளுக்கு உள்ளேயும் அடியிலும் அதன் மக்கள் சிக்கிக் கொண்டனர். இன்னமும் உயிரோடிருந்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் காயம் பட்டிருந்தனர். எரிந்தோ, நசுங்கியோ, இரண்டு வகையிலுமோ, மையப் பகுதியிலிருந்து ஒன்றே முக்கால் மைல் தொலைவுக்குள் இருந்தவர்கள் தீவிர அணுக்கதிரியக்கத்திற்கு ஆளாகி யிருந்தனர். பலர் மரண அபாய அளவில் உணர்விழந்த நிலையிலிருந்து அல்லது அதிர்ச்சியிலிருந்து மீண்டு தம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று பார்க்கும் அளவிற்கு உணர்வு பெற்ற போது ஒரு அமைதியான நகரம் இருந்த இடத்தில் இப்போது இடிபாடுகளின் குவியலும், பிணங்களும், காயமடைந்த திக்பிரமையடைந்த மனிதக்கூட்டடம் இருக்கக் கண்டனர்.....

அணுகுண்டு வீச்சு அபாயத்தை, விளைவை மிக நுட்பமாகக் காட்டுகிற கட்டுரையிது. கட்டுரையை முழுமையாகப் படிக்க கவிதாசரண் இதழின் சனவரி - சூலை 2007 இதழைப் பெறவும்.

நன்றி : கவிதா சரண் - சனவரி - சூலை 2007




தரமான கல்வியைத் தரவேண்டும் பள்ளிகள்

கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலர், பொருளாதார ரீதியில் ஏழ்மையானவர்களே. சிறுவணிகம் செய்வோர், நகர்ப்புறம் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளில் ஷிப்ட் முறையில் பணிசெய்வோர் - என்கிற பல வகையினர் சமூக ரீதியில் பின் தங்கியுள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்ப மாட்டார்கள். இவர்கள் தங்களது பிள்ளைகளைத் தொடக்கப்பள்ளிக்குத் தான் அனுப்புவார்கள்.

தமிழ்நாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளில் பல பள்ளிகள் தலைமை ஆசிரியர்களே இல்லாமல் துணை ஆசிரியர்கள் பொறுப்புத் தலைமையாசிரியர்களாக இருந்து செயல்படுகின்றன.

அண்மைக்காலமாக, ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி தருவதற்காக, என்று குறைந்த பட்சம் வாரத்தின் வேலைநாட்களில் ஐந்து நாட்கள் அப்பள்ளியை மூடிவிட்டு ஆசிரியர்கள் செல்கின்றனர்.

அது மட்டுமின்றி மாதாந்திரக் கூட்டம் என்றும், புள்ளிவிவரக் கணக்கு எடுத்தல் என்றும் - ஆசிரியர்கள் பல முறை பள்ளியை விட்டு வெளியே சென்றுவிடுவதால் - பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் அற்ற நிலையை அடைந்துவிடுகிறது.

தேர்தல் நேரங்களுக்காக பல்வேறு புள்ளிவிவரங்கள் பட்டியல்கள் தயாரிக்க வெளியே செல்வது...

ஒரு கல்வியாண்டின் தொடக்கம் சூன் முதல் ஏப்ரல் வரை என 220 வேலை நாள்கள் வேண்டும் - இந்த நாள்களில் ஈராசிரியர் பள்ளிகளாக இருந்தால் ஒருவர் மாற்றி ஒருவர் வெளியே செல்வதால் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன.

தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் சுத்தமாக வடிகட்டி நன்கு படிக்கும் மாணவர்களாகவே சேர்த்துக் கொள்வதால் - பல மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகிறது.

பள்ளியில் சேரும் மாணவர்கள் நடுநிலைப்பள்ளி அளவிலேயே பல மாணவர்கள் இடையில் நின்று விடுகிறார்கள்.

ஆசிரியர் மாணவர் உறவு தரமாக இருந்தால் தான் இந்த இடைவெளி நிரப்பப்படும். இல்லையென்றால் இடையில் நுழையும் வணிகர்களால் மக்கள் சுண்டியிழுக்கப்பட்டு கல்வி வணிகமான நிலை தொடர்ந்து - ஏழை மக்களுக்குக் கல்வி யென்பது கிட்டாக் கனியாகிவிடும்.

சுற்றுச் சூழல் புதிய கல்வி - ஏப்ரல் 2007




மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய மொழிகளின் துறையில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறார். கல்லூரிகளில் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு படிப்பது தகுதிக் குறைவானது என்று கருதும் இந்நாளில் - நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் - என்று இறுமாப்போடு கூறுகிறார் இவர். சங்க இலக்கியத்தில் புலமைமிக்க இவர் தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்.

1965 இல் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய க்லாசப் என்பவரிடம் தமிழ்ப் படித்தேன். தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் என்னும் நூலை நான் இரசிய மொழியில் எழுதிய பிறகுதான் தமிழ்மொழி பற்றி இரசியர்களுக்குத் தெரிந்தது.

எனக்குப்பிறகு மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆள் இல்லை. என்காலம் முடிந்த பிறகு தமிழ் மொழி மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தன் மூச்சை நிறுத்தி விடுமோ என்று பயப்படுகிறேன். நான் எத்தனையோ மாணவர்களை உருவாக்கி இருந்தாலும் அவர்கள் தமிழப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு முன் வரவில்லை.

என் வாழ்நாள் முடிவதற்குள் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடங்க வேண்டும் என்பதே என் இலக்கு. எங்கள் அரசாங்கம் பணம் இல்லை என்கிறது. தமிழக அரசு மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடங்க உதவ வேண்டும்.

நன்றி : ஏழைதாசன் - ஏப்ரல் 2007




ஓடிவிளையாடு

சிறுகதை

என்னங்க ஓய்வாகத்தானே இருக்கீங்க. இந்த பரணைக் கொஞ்சம் சுத்தம் செய்தா என்ன?

பல முறை மனைவி செல்லியிருப்பினும், ஏதேதோ காரணம் சொல்லி வந்த கணேசன், இன்றும் மறுத்துப் பேசினால் சரியாக இருக்காது என்று எண்ணி மறு பேச்சுப் பேசாமல் செயலில் ஆயத்தமானான். கணேசனின் வரவைக் கண்டு பரனில் வசித்த எலிகள் பயத்தில் நாலாபக்கமும் பயந்தோடின. செய்தித்தாள்கள், இதழ்கள் என எடைக்குப் போடும் சமாச்சாரங்களை எல்லாம் கட்டாய் கட்டி கீழே போட்டவன் - மகனை அழைத்தான்.

டேய் தினேஷ்

என்னப்பா

இந்த பேப்பர் புக்கெல்லாம் எடுத்து அப்பிடி ஓரமா வையி.

போப்பா நான் விளையாடணும் - எனக்கூறி ஓடிவிட்டான். எட்டு வயது நிரம்பிய அவன் ஒரு வேலை கூட செய்ய மாட்டேங்கிறானே என மனதுக்குள் புலம்பியவனின் பார்வையில் பட்டது அந்த மரப்பெட்டி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேசனையும் உலகத்தையும் விட்டுப் பிரிந்த அவன் தாயின் பெட்டிதான் அது.

பெட்டியைத் திறந்தான். அடைசலாய் ஏதேதோ பொருட்கள் நிரம்பியிருக்க அதைக் கிளறினான். அதிலே, அவன் விளையாடிய கோலி, பம்பரம், அதனோடே இணைந்த சாட்டை, பலரின் தேகத்தைப் பதம் பார்த்து, குருதியையும் வம்பையும் கொணர்ந்த கில்லி - என எல்லாம் இருந்தன, நினைவுகள் பின்நோக்கி நகர்ந்தன.

ஒருமுறை அம்மாவிடம் கேட்டது அவன் நினைவில் எட்டிப் பார்த்தது.

பெத்தவங்களுக்கு பிள்ளைங்களையும் பிடிக்கும். அதைவிட அவங்களோட சின்ன வயசு செய்கைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னடா சின்ன வயசுல, வெளயாடிட்டு தூக்கிப் போட்டதை, கிறுக்கச்சியாட்டம் பத்திரப் படுத்தராறேன்னு நெனக்காத, இதெல்லாம் உணர்வு பூர்வமான விசயம். உனக்குச் சொன்னா புரியாது. எல்லாம் இங்கேயே கிடக்கட்டும். நாளைக்கு உனக்கொரு பையன் பொறந்தா செலவாவது மிஞ்சும்.

கிராமத்தில் இருந்தபோது அவன் தாய் பேசியவை மீண்டும் ஒருமுறை அவன் காதுகளை நிரப்பிப் போனது, தூக்கி வீசிட மனமின்றி, அப்பொருள்களை எல்லாம் கையில் வைத்துக் கொண்டு பரனில் இருந்தபடியே, நேரெதிரே இருந்த அறைக்குள் பார்வையைச் செலுத்தினான்.

உள்ளே..... உயிரில்லா பொம்மைகளை கொன்று குவித்துக் கொண்டிருந்தான் தினேஷ் - வீடியோ கேமில்.

நன்றி : புதிய செம்பருத்தி - சனவரி - மார்ச் 2007




மரமும் மனிதனும்

சீன நாடோடிக் கதை

இலையுதிர் காலம் அது. அங்கே ஒரு மரம் நின்று கொண்டிருந்தது.

கிழவன் ஒருவன் மரத்தின் அருகே சென்றான். என் வீட்டின் எதிரிலேயே இந்த மரம் நிற்கிறபோது நான் ஏன் விறகுக்காக அலைய வேண்டும்? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மரத்தின் சில கிளைகளை வெட்டி எடுத்தான்.

மரங்கள் யாவும் செழித்து பழங்கள் பழுத்திருந்த வேளை. கிழவன் வீட்டு மரத்திலும் இலைகள் தெரியா வண்ணம் நிறைய பழங்கள் இருந்தன. மகிழ்ச்சியோடு பழங்களைப் பறித்தான் கிழவன். இனிமேல் இந்த மரத்தின் கிளைகளை வெட்டமாட்டேன் - என்று பேசிக்கொண்டே பழங்களைப் பறித்தான்.

மீண்டும் இலையுதிர் காலம் வந்தது. இப்போது அதே மரத்தில் தன் தேவைக்காகக் கிளைகளை வெட்டினான் கிழவன்.

மறுபடியும் மரங்கள் நிறைய பழங்கள் பழுத்தன. பழத்தைப் பார்த்ததும் இனிமேல் இந்த மரத்தின் கிளைகளை வெட்டக் கூடாது - என்று நினைத்துக் கொண்டான்.

இலையுதிர் காலம் தொடங்கியது. எல்லாவற்றையும் மறந்துவிட்ட கிழவன் மீண்டும் கிளைகளை வெட்டினான்.

வசந்தம் வந்தபோது கிழவன் ஏக்கத்தோடு மரத்தை நிமர்ந்து பார்த்தான். மரம் நின்று கொண்டிருந்தது மொட்டையாக.

நன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் - அக்- டிச 2006





நம்மாழ்வார் உரை

சாயங்காலம் கைபிடிச்சி - சாமத்திலே கருத்தரிச்சி - விடியும்போது தாயையும் - பிள்ளையையும் பிரித்தார்கள் என்ற விடுகதை மூலம், பால் தயிராகி, காலையில் வெண்ணெய் எடுக்கப்படுவதையும் அவற்றுக்கான காரணம் நுண்ணுயிரிகள் என்பதையும் அறிய முடிகிறது.

பழமானபின் காயாவது ( ஊறுகாய் ) - காயானபின் பூவாவது (தேங்காய்ப்பூ) என்ற விடுகதைகள் நமக்கு உணர்த்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊறுகாய். மீன் கெடாமல் வைக்க, தோல் கெடாமல் காய்க்க, உப்புக்கண்டம் (இறைச்சி) ஆகியவற்றில் நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுத்தப்படும் உப்பு போல, பலவகையான உப்புகளை நிலத்தில் கொட்டி நிலத்தை மலடியாக்கிவிட்டோம்.

காடு அழிந்தது. தேயிலை வளர்ந்தது. மண் அரித்தது. குட்டை தூர்ந்தது. மாட்டுக்கும் நீரில்லை. மனிதன் குடிபெயர்ந்தான்.

அடி காட்டுல (வேர்) - நடு மாட்டுல (வைக்கோல்) - நுனி வீட்டுல (நெல்) என்கிற நிலை மாறி வைக்கோலை எரிக்கிறோம்.. உயரம் குறைக்கிறோம். மாட்டுக்கான உணவை மறுக்கிறோம்.

பசு கன்று போடும், ஆடு குட்டி போடும், டிராக்கடர் குட்டி போடுமா? பல்லாயிரம் ஆண்டுகள் பாழ்படாத நிலத்தை 50 ஆண்டுகளில் எம்.எஸ்.சுவாமிநாதன் சூழ்ச்சியால் மலடாக்கிப் பாழ்படுத்தி விட்டோம். மனிதன் கால்படாத காடுகளில் மட்டுமே இயற்கை இன்றும் வாழ்கிறது. வாழு வாழ விடு - எனும் தத்துவம் அங்கேதான் செயல்படுகிறது.

பூச்சிகளைக் கொல்லக் கூடாது. விரட்ட வேண்டும. வயல் வரப்புகளில் மரங்களும், வயல்களில் திருஷ்டி பொம்மைகளும், பரண்கள், கயிற்றுக் கொடிகள் கட்டிவைத்தாலே பறவைகள் வந்தமர்ந்து கண்ணில் படும் பூச்சிகளைத் தின்று அழித்துவிடும். மேலும் பூச்சிகளின் வாழ்க்கை 1 வாரமே. பூச்சி மருந்து அடிக்காமல் விட்டாலும் தாமாக இறந்து விடும்.

அரிசியை மட்டும் சாப்பிடும் கலாச்சாரத்தை உருவாக்கிப் பல சிறுதானியங்கள் பயிரிடுவதை குறைத்துக் கொண்டோம். உரம், பூச்சிமருந்து விற்பனைக்காக முதலாளிகள் செய்த சூழ்ச்சி அது. 24 வகை புஞ்சைத் தானியங்கள், 42 வகை பயறு வகைகளை நாம் இழந்து விட்டோம். அவற்றை மீட்க வேண்டும்.

விவசாயிகள் தம் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்கப் பழக வேண்டும். நெல்லை விற்று விட்டு அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும. முழுத் தேங்காயை விற்பதைவிட நார் உரித்து விற்றபது இலாபம். கொப்பறைகள் ஆக்கி விற்பது அதைவிட இலாபம. எண்ணையாக்கி விற்பது கூடுதல் இலாபம். நார், கொட்டாங்கச்சி, பிண்ணாக்கு, நம்மிடமே தங்குகிறது.

நெல்லை அரியாக்கி விற்கலாம். மாவாக்கி விற்கலாம், முறுக்கு போன்ற பண்டங்களாக்கி விற்கலாம். மதிப்பைக் கூட்டக் கூட்ட விலை கூடும்.

நன்றி : மக்கள் நெஞ்சம் - ஏப்ரல் 14 - 2007


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061