நாகத்தைப் பழக்குதல்
உங்கள் செல்லப்பிராணியை
கை கொள்வதினும்
மிகச் சுலபமானது
ஒரு நாகத்தைப் பழக்குவது
தொடக்கத்தில் அதற்கு
அருந்தப் பால் கொடுக்கலாம்.
ரொம்பவும் பிகு செய்தால்
ஒரே ஒரு கோப்பை
மது கொடுத்து உதவலாம்
பின் மெல்ல பேச்சுக் கொடுத்துப் பாருங்கள்
அது இயல்பிலிருந்து
மாற தொடங்கியிருக்கும்
விருப்பமிருந்தால்
அதிகாலை
நடைப்பயிற்சிக்கு
உங்களோடு அழைத்துச் செல்லலாம்
வீட்டில் அழுது கொண்டிருக்கும்
உங்கள் குழந்தைக்கு
விளையாட்டுக் காட்ட உத்தரவிடலாம்.
அதுவுமில்லை எனில்
கைப்பேசியைக் கொண்டு
உங்கள் ரகசிய சினேகிதிக்கு
குறுஞ்செய்தி அனுப்பப்
பயிற்சி அளிக்கலாம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்
மெல்ல
நாக உருக்கொள்ளும் உங்களுக்கு
எந்தக் குற்ற உணர்வும் எழக்கூடாது
நாகம் நாகமாக இல்லாதது பற்றி.
காலபைரவன் கவிதைகள்
நன்றி : தூறல் இலக்கிய இதழ் சன-மார் 2007
|
கொம்புகள்
திடீரென்று ஒரு நாள்
முளைத்தன கொம்புகளிரண்டு
உச்சந்தலையைப் பிளந்து கொண்டு
கொம்புகள் முளைத்த இடம்
குறுகுறுக்க
குத்திக் கிழிப்பதில்
குதூகலம் உண்டாயிற்று
கொம்புகளின் பாரத்தில்
தலை கனக்க
கீழே பார்ப்பதே இயலாமல் போனது.
இயல்பாயிருத்தலே
இல்லாமல் போயிற்று.
மேலும் மேலும்
வளர்ந்த கொம்புகள்
முட்டிய வேகத்தில்
முறிந்து போயின
தாக்குதல்களால்
தலையும் தட்டையாகிப் போனது.
எல்லாம் முடிந்து
இப்போது
மீண்டும் முன்போலவே
மிரள விழித்தபடி....
வடுவூர். சிவ.முரளி.
நன்றி : புன்னகை கவிதை இதழ் எண் 50
|
விலைக்கு வந்த கற்பு
துணி மூடிய கூடையில் நிறைய கற்பு
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
ஆண் பெண் எவரும் வாங்கி அணிந்து கொள்ளலாம்.
மலிவான விலையில் முக்கோணவடிவில் கவர்ச்சியாக இருந்தது.
ஆண்கள் எவரும் வாங்க முன்வரவில்லை
பெண்கள் யோசித்து யோசித்து சிவந்து போனார்கள்
இது மணமானவர்களுக்கா ! ஆகாதவர்களுக்கா ? ஒரு சந்தேகம்
திரை அழகிகளுக்கு ரொம்பவும் அவசியம் நடிப்பதற்கு.
திரையை விலக்கி
ஊமையைக் காணச் செய்தார்கள்
மீதியுற்ற கற்பும் கடவுளும்
கருவரையில் இருப்பதாகக் கேள்வி.
இதுதானே இன்றைய நாட்டின் நிலை.
ஒண்டிப்புதூர் க.தேவமணி
நன்றி : சமுதாய மறுமலர்ச்சி இதழ் சன 2007
|
சேர்த்து வைக்க ஓர் தலைமை ?
எல்லோர்க்கும் ஓர் இறைவன் அல்லா - முசுலீம்
எங்கிருந்த போதும் ஒரே குல்லா.
சொல்லெடுத்துப் போப்பு ஒன்றைக் கூற - உடன்
அல்லல் பட்டதே உலகம் அதிர.
கிருத்துவரைக் கிள்ளிக் கொஞ்சம் பாரேன் ? பு(ஷ்)சு
கிழித்தெறிய படையனுப்பு வாரே !
பொருத்தி வைத்த மின்னிணைப்புப் போல - களம்
புறப்படுவார் மதம் உயிர்க்கும் மேலே.
வஞ்சகத்திற் கென்றே ஓர் இனத்தை - இங்கே
வளர்த்து வரும் பார்ப்பானரின் மதத்தைக்
கொஞ்சம் குறை சொன்னாலும் போதும் - மூடக்
கோடிதெய்வம் ஓடிவந்து மோதும்.
செந்தமிழர் என்றதொரு சொல்லைச் - சொல்வார்
சேர்ந்திருப்பார் யாருமிங்கே இல்லை.
பஞ்சமர்க்குத் துன்பம் ஒன்று என்றால் - அதிலும்
பள்ளர், பறை சாதி பார்த்துக் கொள்வார்.
சூத்திரர்கள் என்ற பெருங்கூட்டம் - அதிலும்
சூழ்ந்தபல சாதிகள்போ ராட்டம்.
பார்த்திருந்து மற்றவர்கள் மகிழ்வார் - அதிலும்
பஞ்சையை வெறுத்துரைத்து இகழ்வார்
வாழுகின்ற எந்தமிழர் போலே - அவர்
வைத்திருக்கும் பேதம் இன்னும் மேலே.
சூழுமிந்த உட்பகைகள் போக்கி - ஒன்றாய்ச்
சேர்த்து வைக்கும் ஓர்தலைவர் யாரோ.
பாவலர் திருவை அரசு
நன்றி : தேமதுரத் தமிழோசை இதழ் - சனவரி 2007
|
குறும்பாக்கள்
(o) எதிர்பாராமல் என்பார்கள்
திட்டமிட்டே நடக்கும்
ரவுடி கொலை.
(o) தாராளமாகக் கொள்ளை
பன்னாட்டு நிறுவனங்கள்
தாராளமயம்.
(o) அரசியல்வாதிக்கு இலாபம்
பொதுமக்களுக்கு நட்டம்
உலகமயம்.
(o) டெல்லிக்குப் பயணம்
தமிழகத் தலைவர்கள்
தண்ணீருக்காக அல்ல சிலைக்காக.
(o) இலவச டிவி கியாஸ் சரி
இலவச மணமகன்
எப்போது?
(o) வெள்ளையனே வெளியேறு அன்று
கொள்ளையனே வருக வருக இன்று
புதிய பொருளாதாரம்
இரா. இரவி - மதுரை 1
நன்றி : தேசிய வலிமை இதழ் சன 2007
|
கவிஞர்களின் மனைவிகள்
கவிதையிலிருக்கும்
அவளைக் குறித்து
குடைந்து கொண்டேயிருக்கின்றனர்
கவிஞர்களின் மனைவிகள்.
கவிதை என்கிறான் ஒருவன்,
வேறு வேலையே இல்லையா
எரிச்சல்படுகிறான் இன்னொருவன்
இனி அப்படி எழுதவில்லையென
உறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர் பலர்
நீதான் என்றான்
புத்திசாலிக் கவிஞன்.
யாழினி முனுசாமி
நன்றி: கல்வெட்டு பேசுகிறது சன 2007
|
ஒரே வானத்தின் கீழ்
தேசிய நெஞ்சாலைகளில்
தினமும் வெட்டிக் குடித்தபின்
மலைபோலக் குவிந்து கிடக்கும்
இளநீர் ஓடுகளைப் போல
குவியல் குவியலாய்க்
குழந்தைகளின் மண்டையோடுகள்.
நீதிமன்ற வாசலில்
நொய்டாக் கொலையாளிகள்
நொறுக்கப்படுகையில்
நீதி நியதிகளை மீறி
நெஞ்சம் பூரிக்கலாம் (ரகசியமாய்)
சர்வதேசச் சாலைகளில்
சதாம்களின் குரல்வளைகளை
நெறித்துக் கொல்லும் கயிறுகளை
புஷ்ஷின் கழுத்திலும் மாட்டி
பூரிப்படையும் மனங்கள்
பூமியில் கோடானு கோடி.
உள்ளூர்ச் சாலைகளிலோ
ஒவ்வொரு நாளும் ஆயிரம் கூத்து.
பசியும் வறுமையும்
பிஞ்சுகளைத் தின்று கொண்டிருக்க
பூப்புனித நீராட்டுகளைக் கூட
பூவுலகின் திருவிழாவாக்கிப்
பூமியின் சுழற்சியை நிறுத்துவதாய்ப்
பூச்சாண்டிகள்.
நான்கு பெண்டாட்டிக்காரரின்
ஐந்தாவது காமத்தைக்
திரும்பத் திரும்ப அரைத்துத் தள்ளும்
ஊடகங்கள்.
குரூரம் நிரம்பிய பூமியில்
கோபமில்லை மனிதரால்
நித்யானந்தம் ஏது?
பரமானந்தம் ஏது ?
சி. பன்னீர் செல்வம்
நன்றி : மனித உரிமைக் கங்காணி பிப் 2007
|
சமநீதிக் கல்வி எப்போ?
மாடி வீட்டு மைனர் வானுயர கல்வி பெற்று
வசதியோடு வாழுகின்ற நெலமைதான்
கல்லொடைச்சு மண்ணுவெட்டி வறுமையோடு மல்லுகட்டி
ஏழை வாழ்க்கை புயலிலாடும் படகுதான்
கல்வியிலே வியாபாரம் நியாயமா? - நம்ம
தேசமும் முன்னேற முடியுமா?
சட்டிபானை கழுவுறதும் வீடுவாசல் கூட்டுறதும்
பெண்களுக்கு மட்டுந்தான்னு சட்டம் சொன்னதா - கல்வி
திட்டங்கூட அடிமைத்தனத்தை போக்கச் செய்ததா
ஆணும் பெண்ணும் சமமின்னு மனங்களிலே ஏத்திவைச்சு
பாடப்புத்தகம் கண்திறந்து பாத்திடவேணும்
பெண்ணினத்தின் அச்சமெல்லாம் போக்கிட வேணும்
தொப்பிக்காரன் கல்வித் துறையில் வந்து நுழையுறான் - கல்வி
மீனைப் பிடிக்கத் தனியார் மைய வலையைப் போடுறான்
தகுதியின்னும் திறமையின்னும் பசப்பித் திரியுறான் - ஏழை
மூச்சுவிடும் இடப்பங்கீட்டில் மண்ணைப் போடுறான்
கல்வியிலே வியாபாரம் நியாயமா? - நம்ம
தேசமும் முன்னேற முடியுமா?
பேராசிரியர். க.கணேசன்
நன்றி : புதிய ஆசிரியன் இதழ் பிப் 2007
|
...........
பூர்வகுடிகளின்
பஞ்சமி நிலங்களில்
இழந்தவனின் துயரக் கண்ணீராய் வழிந்து
துரோகத்தின் சாயத்தை கரைத்திட
தன்நிறம் கொண்டு மறித்திடும் தன்பாதைகளை
நீர்க்கத்தியால் ஊடறுத்து
ஒளிபுகா வனங்களை அகழ்ந்து
ஆதிக்க வேர்களைப் புரட்டுகையில்
இலைகள் எழுப்பும் அதிரும் பறையொலியில்
தமிர்ந்த பாம்பென நெளிந்து வீதியில்
திரள்கையில்
பதைபதைத்து பாம்பாட்டிகள்
இடியாகையில்
ஆதியில் சமைந்தவளின் அடிவயிற்று அச்சமென
பள்ளக்கிடங்கில் சேர்கின்றன
நீர்ச்சொற்களாலான மழை பதுங்குபுலியாக
எனது கவிதையோ பூனையின் பாதமென.
- டி.எல்.சிவக்குமார்
நன்றி: புதிய பூங்குயில் இதழ் சனவரி 2007
|
நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
நூல்களின் ஆசிரியர்கள், வழங்கப்பட்ட தொகை, வழங்கிய ஆண்டு
பாரதியார் - வழங்கப்பட்ட தொகை இல்லை - ஆண்டு தெரியவில்லை
பாரதிதாசன் - வழங்கப்பட்ட தொகை ரூ 10 இலட்சம் (ஆண்டு1990)
அண்ணா - வழங்கப்பட்ட தொகை ரூ 75 இலட்சம் (ஆண்டு1995)
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் - தொகை ரூ 10 இலட்சம் (1995)
தேவநேயப்பாவாணர் - வழங்கப்பட்ட தொகை ரூ 20 இலட்சம் (1996)
மறைமலையடிகள் - வழங்கப்பட்ட தொகை ரூ 30 இலட்சம் (ஆண்டு1997)
திரு.வி.க - வழங்கப்பட்ட தொகை ரூ 20 இலட்சம் (ஆண்டு1998)
கல்கி - வழங்கப்பட்ட தொகை ரூ 20 இலட்சம் (ஆண்டு1998)
தேசியவிநாயகம் (பிள்ளை) - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (1998)
நாமக்கல் கவிஞர் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு1998)
ப.ஜீவானந்தம் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு1998)
வ.உ.சிதம்பரனார் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு1998)
ஏ.எஸ்.கே.(அய்யங்கார்) - வழங்கப்பட்ட தொகை இல்லை (ஆண்டு1998)
வ.ரா. - வழங்கப்பட்ட தொகை இல்லை (ஆண்டு1998)(ஆண்டு1998)
நாவலர் சோமசுந்தர பாரதியார் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (1998)
கவிஞர் கா.மு.சரீப் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு1998)
பரலி. சு.நெல்லையப்பர் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (1998)
வ.வே.சு(அய்யர்) - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு1998)
காரைக்குடி சா.கணேசன் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (1998)
ச.து.சு.யோகி - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு1998)
வெ.சாமிநாத (சர்மா) - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2000)
கவிஞர் முடியரசன் - வழங்கப்பட்ட தொகை ரூ 10 இலட்சம்(ஆண்டு2000)
மயிலை சீனி வேங்கடசாமி - வழங்கப்பட்ட தொகை ரூ 10 இலட்சம் (2000)
சாமி சிதம்பரனார் - வழங்கப்பட்ட தொகை ரூ 10 இலட்சம் (ஆண்டு2000)
கா.அப்பாத்துரையார் - வழங்கப்பட்ட தொகை ரூ 10 இலட்சம் (ஆண்டு2001)
புதுமைப்பித்தன் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2002)
கு.ப.சேதுஅம்மாள் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2002)
ந.மு.வேங்கடசாமி(நாட்டார்) - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (2004)
க.நா.சுப்பிரமணியம் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2004)
ந.பிச்சமூர்த்தி - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2004)
தெ.பொ.மீனாட்சிசுந்தரம் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (2005)
த.நா.குமாரசாமி - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2005)
மாயூரம் வேதநாயகம்(பிள்ளை) - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (2005)
சக்தி வை.கோவிந்தன் - வழங்கப்பட்ட தொகை ரூ 5 இலட்சம் (ஆண்டு2005)
புலவர் குழந்தை - வழங்கப்பட்ட தொகை ரூ 10 இலட்சம் (ஆண்டு2006)
ம.பொ.சிவஞானம் - வழங்கப்பட்ட தொகை ரூ 20 இலட்சம் (ஆண்டு2006)
நன்றி கரூர் மக்கள் களம் இதழ் சன 2007
|
சதாமுடன் அமெரிக்கா நடத்திய கடைசி நேரப் பேரம்.
(ரம்ஸ்பெல்ட் சதாமின் விடுதலை குறித்து - பல நிபந்தனைகளை விதித்ததார் - அவை அனைத்தும் அவரது தனித்தன்மைக்குச் சிறையிடுவது போல இருந்தது - அரிமாவாய்க் கிளர்ந்து எழுந்து சதாம் சொன்னவை)
சதாம் உசேன் - இனி என்னுடைய நிபந்தனைகளை நீங்கள கேட்க வேண்டாமா?
(o) முதலாவதாக நான் கோருவது நீங்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இராக்கிலிருந்து வாபஸாக வேண்டும் என்பதுதான். அது நீங்கள் உலகின் முன்னே ஒப்புக் கொண்டதாகும். வாபஸ் உடனே துவங்க வேண்டும்.
(o) இரண்டாவதாக சிறைகளில் வாடும் பத்தாயிரக் கணக்கான இராக்கிய அரபு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
(o) மூன்றாவதாக 1991 முதல் இதுவரை நடந்த யுத்தங்களில் உங்களின் தாக்குதல்கள் மூலம் இராக் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு இழப்பீடு அளிப்பதாக நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அதைக் கணக்கிட அரபு சர்வதேசக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
(o) நான்காவதாக இராக் கஜானாவிலிருந்து நீங்களும் உங்களது கூட்டாளிகளும் கொள்ளை அடித்த பணம் முழுவதையும் திருப்பித் தரவேண்டும். குறிப்பாக எண்ணெய்யையும் பிரம்மரும் அவனது உளவாளியான பிற்போக்குக் கும்பலும் கொள்ளை அடித்தவற்றை திருப்பித் தரவேண்டும்.
(o) ஐந்தாவதாக நீங்கள் திருடிய புராதனப் பொருள் - கொள்ளைக் கும்பலிடம் விற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதனச் சின்னங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவை விலைமதிப்பற்ற செல்வங்கள் மட்டுமல்ல. இராக் வரலாற்றின் கலாச்சாரத்தின் பதிவுகளாகும். உங்களுக்கு ஒரு வரலாறோ, கலாச்சாரமோ இல்லையென்பதும், உங்களது நாட்டிற்குச் சில நூற்றாண்டுகளின் வரலாறு மட்டுமே உள்ளது என்பதும் ஒரு உண்மை என்றாலும் ஈராக்கின் சொத்துகளைக் கொள்ளையடித்ததற்கு ஈராக் கலாச்சாரத்தின் மீதான வெறுப்புக்கும் அது ஒரு நியாயமாகாது.
(o) ஆறாவதாக, படுகொலைக்கு (சதாம் ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படுபவை) பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் எதையாவது உங்களால் கண்டுபிடிக்க முடிந்திருந்தால் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அது போல யுத்தத்தில் பலியான அனைவரின் உயிரையும் திருப்பித் தரவேண்டும். நீங்கள் மானபங்கப் படுத்திய கண்ணியமிக்க பெண்களின் புனிதத்தையும் திருப்பித் தரவேண்டும்
நன்றி : அறிவுக்கொடி இதழ் - சன 2007
|
கருணையின் நூலிழை
ஒரு நாள் புத்தர் ஓய்வாக ஒரு கிணற்றடியில் அமர்ந்திருந்தார்.
கிணற்றுக்குள்ளிருந்து கலவரமான குரல்கள் கேட்டன.
புத்தர் உள்ளே எட்டிப் பார்த்தார்.
அது கிணறல்ல நரகப் படுகுழி.
உள்ளே நரகத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஏராளமான பேர் அதில் சிக்கித் தவித்தபடி அலறிக் கொண்டிருந்தார்கள்.
ஐயோ - ஐயோ
தாங்க முடியவில்லையே
என்னைக் காப்பாற்றுங்கள்
கடவுளே - கடவுளே
என்று பலவித மான அலறல்கள் கீழிருந்து வந்து கொண்டிருந்தன.
சாக்கிய முனி கூர்ந்து உள்ளே பார்த்த போது ஒரு ஆள் பயங்கரமாக அலறுவது தெரிந்தது. மகா முரட்டு ஆள் அவன்.
மேலே ஒரு தலை உள்ளே எட்டிப் பார்ப்பதைக் கண்டவுடன் அவன் பரிதாபமாக உரக்க அலறினான்.
சாமி என்னைக் காப்பாத்துங்க - புத்தர் மேலும் கூர்ந்து பார்த்தார்.
அவன் யாரென்று அவரது மனக்கண்ணில் தோன்றியது.
ஈவிரக்கமில்லாமல் மக்களைக் கொள்ளையடித்தும் கொன்றும் வாழ்ந்தவன் அவன்.
அவன் இருக்க வேண்டிய இடம் அதுதான். அவன் அனுபவிப்பதும் சரிதான்.
இருந்தாலும் அவன் தன் வாழ்நாளில் ஏதாவது நல்லது செய்திருக்கிறானா என்று தம் மனக்கண்ணில் பார்த்தார். ஒரு காட்சி அவரது தீர்க்க தரிசனத்தில் தோன்றியது.
ஒரு சமயம் அவன் நடந்து செல்லும் போது அவன் முன்னே தரையில் ஒரு சிலந்தி தென்பட்டது. அதை மிதித்து விடாமலிருக்க அவன் அதைத் தாண்டிச் சென்றான்.
அந்த ஒரு சிறு செயல், கொஞ்சம் கருணைதான் அவன் வாழ்வில் காணப்பட்ட ஒரே நல்ல அம்சம் என புத்தர் நினைத்தார்.
நினைத்த மாத்திரத்தில் அவர் கையில் ஒரு சிலந்தி தோன்றியது. அது ஒரு நூலிழையை வெளியிட்டது. அது கிணற்றுக்குள் அடியாழம் வரை நீண்டு சென்றது.
அதைப் பிடித்துக் கொண்டு மேலே வா என்றார் - சாக்கிய முனி.
இந்த அற்ப சிலந்தி வலை இழையைப் பிடித்துக் கொண்டா - என்று ஆத்திரத்துடன் கத்தினான் அவன்,
ஆமாம் - என்று அமைதியாகச் சொன்னார் கெளதமர். அவன் அதைப் பிடித்தான். உறுதியாகத்தான் இருந்தது அது. அற்பக் கருணையின் நூலிழை அது. அவன் அதைப் பலமாகப் பிடித்துக் கொண்டு மேலே ஏற முயன்றான்.
உடனே அவனைச் சுற்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தவர்கள் அவனது காலடியில் தொங்கிக் கொண்டிருந்த அந்த நூலிழையில் தொங்கிக் கொண்டு மேலே வர முயன்றார்கள். அவன் சற்று மேலே வந்து கீழே பார்த்தான்.
பலபேர் அந்த நூலிழையைப் பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.
அவன் சட்டென்று தன் இடையிலிருந்த கத்தியை எடுத்தான். தனக்குக் கீழே ஒரு வெட்டு வெட்டிக் கொண்டான். நூலிழை அறுந்து அவன் காலடிக்குக் கீழ் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பாதாளத்தில் விழுந்து அலறினார்கள்.
இழை இனி தன் கனத்தைத் தாங்கும் என்று அவன் மேலே நகர்ந்தான். ஆனால் அவனது கருணையற்ற செயலால் அந்த இழை அறுந்தது.
அவன் செய்திருந்த அற்பப் புண்ணியமும் இப்போது அவன் செய்த கொடுமையால் அழந்தது. அவன் மீண்டும் நரகப் படுகுழியில் வீழ்ந்தான்.
நன்றி : மீண்டும் ஜென் கதைகள்
நன்றி : பயணம் - சனவரி 2007
|
பகைமை பாராட்டாத மேதைகள்
வின்ஸ்டன் சர்ச்சிலும், ஜார்ஜ் பெர்னாட்சாவும் அரசியலில் ஒருவருக்கொருவர் மாறுபட்டக் கருத்துக்கள் கொண்டவர்கள்.
அதே சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் வெகுவாக மதிப்பவர்கள்.
ஒரு முறை பெர்னாட்சாவின் புதிய நாடகம் ஒன்று இலண்டனில் அரஙகேறியபோது, அதைப் பார்க்க வரும்படி அழைப்பு விடுத்துச் சர்ச்சிலுக்கு இரண்டு இலவச நுழைவுச் சீட்டுகளை அனுப்பி வைத்தார் பெர்னாட்சா.
அதோடு அவருக்கு ஒரு கடிதமும் எழுதினார். என்னுடைய நாடகத்துக்கு நீங்கள் வரவேண்டும் என்பதற்காக இரண்டு அனுமதிச் சீட்டுகளை அனுப்பி உள்ளேன். ஒரு சீட்டு உங்களுக்காக. மற்றொன்று உங்கள் நண்பர் ஒருவர் வந்தால் அவருக்காக. அப்படி யாராவது இருந்தால்....
சர்ச்சில் உடனே அந்த இரண்டு சீட்டுகளை பெர்னாட்சாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்தார் ஒரு கடிதத்துடன். அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதல்நாள் நாடகத்திற்கு வர முடியாமையால் இரண்டு நுழைவுச் சீட்டுகளையும் திருப்பி அனுப்பியுள்ளேன். இரண்டாவது நாள் கட்டாயம் வருகிறேன். இரண்டாவது நாளும் உங்கள் நாடகம் கட்டாயம் நடக்குமானால்..
இரு மேதைகளுக்கிடையே நடந்த கெட்டிக்காரத் தனமான சிறிய போராட்டம். ஒருவரையொருவர் தாக்கும் போது கூட கண்ணியம் குறையாமலும் சுவையான முறையிலும் அதைச் செய்வது முதிர்ச்சி அடைந்தவர்களின் வழக்கம்.
சாதாரண மனிதர்கள் கூட தங்கள் நிலையில் இது போன்ற பரிமாற்றங்களைச் செய்து கொண்டால் பகைஉணர்ச்சி தோன்றுவதற்கு வழியே இருக்காது.
நன்றி : தமிழ்ப் பாவை இதழ் பிப்ரவரி 2007
|
ஹஜ்ரத் அவுலியா சொன்ன கதை
ஒருநாள் சபையில் அமர்ந்து கவ்வாலி கேட்டுக் கொண்டிருந்தார் அவுலியா. ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன் கைக்குட்டையை வீசியபடி - அந்த வண்ணாத்தியின் மகனுக்குக்கூட நாம் ஈடாக வில்லையே என்று நான் மெத்த வருந்துகிறேன் - என்றார். அவர் குரலில் அடர்ந்த சோகம் தோய்ந்திருந்தது. அருகில் சென்று என்னவென்று அவரைக் கேட்க அப்போது யாருக்கும் தைரியம் இல்லை. சிலநாட்கள் கழித்து அவருடைய பிரதம சீடர் அமீர் குஸ்ரோ அது குறித்துக் கேட்டார்.
அவுலியா அதற்கு விளக்கம் அளித்தார். - அரண்மனையில் வேலை பார்த்த ஒரு வண்ணானின் மகன், அந்த நாட்டின் இளவரசியைக் கண்ணால் பார்க்காமலேயே அவள் மீது காதல் கொண்டான். அவளுடைய உடைகளை அதீதமான அக்கறை எடுத்து வெளுத்துக் கொடுத்தான். சில நேரங்களில் அந்த உடைகளில் ஏதேனும் சிறு பழுதிருந்தாலும் அவற்றைச் சீராக்கி வெளுத்துக் கொடுத்து வந்தான். அவள் நினைவில் மெத்த வாடினாான். அவளுடைய அழகையே எப்போதும் நினைவில் வைத்து, சிரித்தும் அழுதும் முனகியும் காலத்தைக் கழித்தான். அவனுடைய பெற்றோர்கள் கலக்கம் அடைந்தனர். கவலையுற்றனர். இதைப்பற்றி யாரிடமும் பேச முடியாது. பேசாமல் இருந்தாலும் பிரச்சனை. நாம் துணி வெளுப்பவர்கள், அவள் பட்டத்து இளவரசி. மண்ணில மிதிபடும் சேறு ஆகாயத்துடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள முடியுமா. என்ன காரியம் செய்கிறான் இவன் என்று நடுங்கினர்.
என்ன செய்தாவது அவனுடைய மனதை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ஒருநாள் அவன் தாயார் துயரம் படிந்த முகத்துடன் மகனிடம் வந்தாள். மகன் என்ன விஷயம் என்று கேட்டதற்கு - இன்று அந்த இளவரசி இறந்த மூன்றாவது நாள் - என்றாள் . அதற்கு வண்ணானின் மகன் என்ன அவள் இறந்து விட்டாளா. என்று திரும்பத் திரும்பக் கேட்டான். உடனே பெருத்த ஓலம் எழுப்பித் தன் உயிரை விட்டான்.
நான்காம் நாள் இளவரசியின் துணிகளை அரண்மனைக்கு எடுத்து வந்தாள் வண்ணாத்தி. இளவரசி அவளிடம் கேட்டாள். வழக்கமாக இருக்கும் வெண்மையும், தூய்மையும் இந்தத் துணிகளில் இல்லையே- இன்று யார் துவைத்தது? அவற்றில் எப்போதும் அன்பு தோய்ந்த ஒரு தூய்மை வழக்கமாகக் காணக் கிடைக்கும். ஆனால் இன்று அப்படி இல்லையே என்ன காரணம்? என்று கேட்டாள். இதைக் கேட்டதும் வண்ணாத்தியின் முகம் வாடியது. துயரம் தாளாமல் வெடித்து அழத்துவங்கினாள்.
இளவரசி அவள் அழுகைக்காண காரணத்தை அழுத்திக் கேட்ட போது தாங்க முடியாது எல்லாவற்றையும் வண்ணாத்தி சொன்னாள். இளவரசி, அந்த வண்ணாத்தியின் மகனுடைய சமாதிக்குச் சென்றாள். அவள் அந்த சமாதிக்கு அருகில் சென்ற போது அந்தச் சமாதி பல் இடங்களிலும் விரிசல் விட்டது. ஓ. அமைதியில்லாத ஒரு இதயம் இங்கே புதைபட்டுக் கிடக்கிறதே - என்று கதறியபடி அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டாள்.
அந்த வண்ணாத்தியின மகனுடைய காதலின் முன்னே நாம் இறைவனிடம் வைத்துள்ள காதல் தூசுக்குப் பெறுமா. என்று கேட்டார் அவுலியா.
நன்றி : வடக்கு வாசல் இதழ் சன 2007
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|