வேறுபாட்டை நாமுணர்வோம்
பாவலர் கருமலைத் தமிழாழன்
எழுத்தின் மாற்றம் பொருளை மாற்றும்
எழுதும் சொல்லின் பொருளு ணராமல்
எழுத்தை மாற்றி எழுதி விட்டால்
எண்ணிய கருத்தோ தலைகீ ழாகும் !
எழுத்தாம் லகரம் இருக்கு மிடத்தில்
எழுத்தை மாற்றி ளகரம் எழுதின்
விழுமிய பொருளோ முரணாய் மாறி
விளையும் செயலும் பகையாய் முடியும் !
தலையெனும் சொற்குத் தளையென எழுதின்
தலையெனும் உறுப்பு கட்டென மாறும்
விலையெனப் பகர விளையெனப் பகர்ந்தால்
விற்பனை மாறி விளைச்சலைக் குறிக்கும் !
கப்பலின் பெயரோ கலம் அதுமாறி
களம்என் றானால் இடமதை உணர்த்தும்
முற்பகல் காலை காளை யென்றால்
முட்டும் கொம்புடை எருதினைக் குறிக்கும் !
நீர்நிலைக் குளத்தைக் குலமெனச் சொன்னால்
நிலைத்த குடியெனும் இனத்தை உணர்த்தும்
பார்கடல் பாற்கடலானால் கடலைப்
பார்க்கும் வினையோ பெயரைக் குறிக்கும் !
வாழையை வாங்கென மனைவி சொல்ல
வாளையாய்க் கணவன் புரிந்து கொள்ள
வாழைப் பழமோ வாளை மீனாய்
வடிவம் மாறி வீடு வந்தது !
ஒலிக்கும் குரலே ஒளிக்கும் என்றால்
ஓசையோ வெளிச்சமாய்க் காதில் நுழையும்
வலிக்கும் நோயை வளிக்கும் என்றால்
வாட்டும் நோயோ காற்றாய் மாறும் !
அரமெனும் கருவி மரத்தை அறுக்கும்
அறமெனும் நீதி உலகத்தைக் காக்கும்
உரலோ நெல்லைக் குத்த உதவும்
உறலோ சரியாய்ப் பொருந்துதல் உணர்த்தும் !
இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல்
இறத்தல் என்றால் உயிரைத் துறத்தல்
அரையெனில் இருக்கும் ஒன்றில் பாதி
அறையெனில் வீட்டில் உள்ள பகுதி.
கரையை அடைக்க மண்ணைச் சுமந்தார்
கடவுள் என்றே எழுதச் சொன்னால்
கறையை அடைக்க வந்தா ரென்றால்
களங்க மாகும் ஆற்றங் கரையும் !
நாயின் வால்தனை வாள்எனச் சொன்னால்
நாயின் வாலோ நறுக்கும் வாளாம்
தாயின் மொழியாம் தமிழின் எழுத்தைத்
தகுந்த இடத்தில் எழுதப் பழகுவோம் !
தமிழில் உள்ள லளரற எழுத்துகள்
தனித்தனிப் பொருளைத் தந்திடும் எழுத்துகள்
அமிழ்தாய் அதனை அறிந்தே எழுதிடின்
அரும்பொருள் மாறும் அவலம் இல்லை
நன்றி : தமிழர் முழக்கம் இதழ் எண் 56.
|
கணினி எழுதும் கவிதை
-சோலை இசைக்குயில்-
ஆசிரியர் திட்டினார்
"மாடு மேய்கத்தான் இலாயக்கு"
படித்து முடித்தபின்
பெற்றோர் திட்டினார்
"மாடு மேய்க்கக் கூட
இலாயக்கில்லை"
பார்த்துக் கொண்டிருந்த மாடு
நிம்மதி பெருமூச்சு விட்டது.
என் கடவுளும் என்னைப் போல கறுப்பு
- கோசின்ரா -
இரட்டையர்
சற்று உற்றுப் பார்த்தேன்
நிதானமாய்..
சாத்தானின் முதுகுப் பக்கம்
கடவுளின் முகம்
கடவுளின் முதுகுப் பக்கம்
சாத்தானின் முகம்.
இவர்களை
தனித்தனியே பிரித்து
சாத்தானைக்
கொன்றுவிட வேண்டும்.
அதுதான் பூமிக்கு நல்லது.
ஒருவேளை
அறுவைச் சிகிச்சை
தோல்வியடைந்தால்..?
கடவுள் இறந்து
சாத்தான் பிழைத்து விட்டால்..
நன்றி : அணி இதழ் நூல் விமர்சனம்
|
பாவலர் பரிசுத் திட்டம்
தெளிதமிழ் இதழின்
உரூபா 500 பரிசு பெற்ற பாடல்கள்
(குறள் வெண்பா - முதலடி இடைமடக்கு)
பல்கலைப் பட்டங்கள் பட்டங்க ளாவதால்
இல்லையே கல்விக் கழகு
(த.இரத்தினவேல் - புராணசிங்குபாளையம்)
தமிழை அறிவர் அறிவர் அறியார்
அமிழ்வர் அலையா யலைந்து.
(ச.ச.இளங்குமரன் - நாகலாபுரம்)
தமிழைச் சுவைத்தேன் சுவைத்தேன் குடித்தேன்
அமிழ்தத் தமிழை அருந்து.
(புலவர் வி.திருவேங்கடம் - திருக்கழுக்குன்றம்)
தமிழின் இசையும் இசையும் நெடுவான்
அமிழ்தமே என்பார் உணர்.
(புலவர் துரை.கருணாகரன்)
தமிழா மணியு மணியு மகமே
அமிழ்தம் சுரக்கின்ற ஆறு.
(த.இராமலிங்கம் - சின்னமணல்மேடு)
மூத்த மொழியு மொழியுமதில் மற்றச்சொல்
சேர்த்தெழுதின் என்றே தெளி.
(புலவர். வீ.வில்வநாதன் - க.மு.வெங்காலூர் 16)
நன்றி : தெளிதமிழ் இதழ் - துலை திபி 2037
|
2005 தேர்தல் நடந்த நாடும் - தேர்தல் நாளும்
ஆப்கானிஸ்தான் - 18-9-2005
அல்பேனியா - 3-9-2005
அன்டோரா - 24-4-2005
அர்ஜென்டினா - 23-10-2005
அசர்பெய்ஜான் - 6-11-2005
பொலிவியா - 18-12-2005
பல்கேரியா - 25-6-2005
புருண்டி - 4-7-2005
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு - 13-3-2005
சிலி - 11-12-2005
டென்மார்க் - 8-2-2005
டொமினிகா - 5-5-2005
எகிப்த்து - 9, 20-11-2005 மற்றும் 1-12-2005
எத்தியோப்பியா - 15-5-2005 மற்றும் 21-8-2005
ஜெர்மனி - 18-9-2005
ஹோண்டுராஸ் - 27-11-2005
இராக் - 30-1-2005 மற்றும் 15-12-2005
ஜப்பான் - 11-9-2005
கிர்கிஸ்தான் - 27-2-2005
லெபனான் - 29-5-2005 மற்றும் 5,12,19-6-2005
லைபீரியா - 11-10-2005
லிச்டென்ஸ்டெயின் - 11, 13-3-2005
மாலத்தீவுகள் - 22-1-2005
மொரீஷியஸ் - 3-7-2005
மைக்ரோனேஷியா - 8-3-2005
நியூசிலாந்து - 17-9-2005
நார்வே - 12-9-2005
போலந்து - 25-9-2005
போர்ச்சுக்கல் -20-2-2005
மால்டோவா - 6-3-2005
செயின்ட் வின்சென்ட் - 7-12-2005
சுரினாம் - 25-5-2005
தாஜிகிஸ்தான் - 27-5-2005
தாய்லாந்து - 6-2-2005
டோங்கா - 17-3-2005
தான்சானியா - 14-12-2005
பிரிட்டன் - 5-5-2005
வெனிசுலா - 4-12-2005
ஜிம்பாப்வே - 26-11-2005
நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் - நவம்பர் 2006
|
மண்வாசனையுடன் ஒரு தொலைக்காட்சி
நல்ல தமிழில் ஒரு நாளேடு
தமிழ்ச் சமுதாயத்துக்கு மருத்துவர் இராமதாசின் மாபெரும் கொடை.
மக்களைச் சென்றடைவதில் வலிமையானவை அச்சு ஊடகமும், காட்சி ஊடகமும் ஆகும். அச்சு ஊடகத்துக்குத் தமிழ் ஓசை நாளேடும், காட்சி ஊடகத்துக்கு மக்கள் தொலைக்காட்சியும் தமிழ்ச் சமுதாயத்துக்கு மருத்துவர் ச.இராமதாசு அளித்துள்ள மாபெரும் கொடையாகும்.
மறைந்து போன தமிழரின் அடையாளங்களை மீட்டுத் தரும் பணியில் இந்த இரண்டு ஊடகங்களையும் சரியாகப் பயன்படுத்தி இருப்பது வரலாற்றில் மருத்துவர் ச.இராமதாசு பதித்திருக்கும் புதிய முத்திரை ஆகும்.
தீபாவளி நாளில் புராணப் பொழுது போக்கு மூடத்தன நிகழ்ச்சிகளையே அச்சிலும் காட்சியிலும் பார்த்துக் கொண்டிருந்த தமிழகம் இவ்வாண்டு புதிய காட்சியை மக்கள் தொலைக்காட்சியிலும் தமிழ் ஓசை நாளேட்டிலும் கண்டு பூரித்தது.
புகழ். பொருள், ஆரவார அரசியல், விளம்பரப் பகட்டு ஆகியவற்றிலிருந்து விலகி நின்று தொண்டாற்றும் பொது வாழ்வு முன்னோடிகளையும், சான்றோர்களையும் முன்னிலைப் படுத்துவதிலும் மக்கள் தொலைக்காட்சி முன்னிலை வகிக்கிறது.
உழைக்கும் மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு முதன்மை தருவது தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை.
தீபாவளி நாளில் அருளுரைகளையே கேட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு மக்கள் தொலைக்காட்சி வெளியிட்ட பழ.நெடுமாறனின் நேர்காணல் மக்கள் தொலைக்காட்சியின் இன உணர்வுப் போக்கை ஒரு சோற்றுப் பதமாக உணர்த்தும்.
நன்றி : மக்கள் நெஞ்சம் இதழ் 28-10-2006
|
மலாய் மொழியில் ஆங்கிலம் கலந்தால் தண்டனை..
மலேசிய நாட்டில் தனியார் விளம்பரங்கள், சுவரொட்டிகளில் தேசிய மொழியான மலாய் மொழியில் ஆங்கிலம் கலப்பவர்களையும் அரசு விழாக்களில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுபவர்களையும் கண்காணிக்கவும், தண்டனைத் தொகை விதிக்கவும், மலேசிய கலாச்சார, கலை மற்றும் தொல் பெருமை அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி மலாய் மொழியைச் சிதைத்து வெளியிடும் விளம்பரத் தட்டிகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு 10,000 ரிக்கிட் (மலேசிய நாணயம் இந்திய மதிப்பிற்கு ரூ 12,200) வரை தண்டனைத் தொகை விதிக்கப்படும்.
மலாய் மக்களின் தேசிய மொழி எந்த வகையிலும் ஒதுக்கப்படாமல் காப்பதற்கே இந்த நடவடிக்கை என்றும் முதலில் எச்சரிக்கை செய்த பின்பே தண்டத் தொகை விதிக்கப்படும் எனவும் கூறினார்.
முந்தைய பிரித்தானிய காலனியான மலேசியாவில் தமிங்கிலம் போல ஆங்கிலமும் மலாயும் கலந்து "மாங்கலீசு" பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான மலாய்ச் சொற்களையே பயன்படுத்தவும், ஆங்கிலக் கலப்பைத் தடுக்கவுமே அரசு விரும்புகிறது. அதற்கென ஒரு தேசிய மொழிக் குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதைப் பார்த்தாவது நம் தமிழர்களுக்கு உணர்ச்சி வரட்டும்.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2006
|
உலக ஊர்ப் பெயர்கள் யாவும் தமிழே !
- சாத்தூர் சேகரன் -
.....தமிழை விட்டு வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு காலத்தில் பிரிந்துள்ளன. இவ்வாறே தாய்த் தமிழகத்தை விட்டு - தமிழ் மாநிலமாக அண்மைக் காலம் வரை விளங்கிய இந்தியாவை விட்டு - பிரிந்து வெவ்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். இதனால் அம்மக்களின் மொழிகள், காலமாறுதலுக்கும் தொலை தூரத்திற்கும் ஏற்ப, திரிதல், சிதைதல், கெடுதல், முற்றிலும் மாறல் போன்ற மாற்றங்களை எய்துகின்றன.
எடுத்துக்காட்டு :
முற்காலத்தில் மரக்கப்பல்களே பெரிதும் இருந்தன. தமிழர் கப்பல்கள் ஓடாத கடலுமில்லை. பார்க்காத துறைமுகங்களும் இல்லை. இதனால் கப்பல் என்ற சொல் உலகெங்கும் பரவியது. காலத்திற்கும் தூரத்திற்கும் ஏற்ப அவற்றின் மாற்றங்களும் அதே விகிதத்தில் மாறியுள்ளன.
(மரக்) கப்பல் -
கெப்பல் : மலேசிய, இந்தோனேசிய மொழிகள்.
மரக்கெப் : இராக்கி மொழி
மரக்கப் : அரபிமொழி
's' முன்னொட்டுப் பெற்ற ஐரோப்பிய மொழிகள் பற்பல
கப்பல் - கப் - கிப் - சிப்
s+hip = ship : ஆங்கிலம்
s+caph = scaph : இலத்தீன்
s+kaphe = skaphe : கிரேக்கம்
s+kiff = skiff : பழைய ஆங்கிலம்
s+cif = scif : பழைய செர்மன்
s+chiff = schiff : புது செர்மன்
s+cip = scip : ஆங்கிலோ சாக்சன்
s+chipp = schipp : கீழ் செர்மென்
s+kich = skich : டேனிசு
s+kip = skip : ஐசுலாந்து மொழி , கெல்த்திக்கு
s+chip = skip : டச்சு
யூரல் அல்டாய்க் மொழிகள் ஒட்டுப் பெறுவதில்லை
கப்பல் - கப் - கவ் - கக் - கச் - hajo (உச்சரிப்பு ஹயோ)
சுலாவிக்கு மொழிகள் வேறு வகையில் மாறுகின்றன.
நாவாய் என்ற மற்றொரு சொல், வட இந்தியத் தமிழ் மொழிகளில் (இந்தி, உருது, சிந்தி, பஞ்சாபி, வங்காளி, ஒரியா, அசாமி போன்றவைகளில்) உள்ளது. மேற்கு ஐரோப்பிய மொழிகளில் நாவாயின் திரிபே உள்ளது. சுபெயின் மொழியில் நாவே ((nave) உள்ளது. தற்கால ஆங்கிலத்தில் அண்டைத் திருவிட மொழியான கன்னடத்தில், தோணி, படகு (ஹடகு) உள்ளது. பஞ்ச திருவிட மொழிகளில் ஒன்றான குசராத்தியில், வகான் காணப்படுகிறது. வண்டி என்பதின் திரிபே இது. வண்டி - வாண் எனக் குறுகி பிறகு வான், வேன் (wan/ van) என ஐரோப்பிய மொழிகளில் புகுந்துள்ளது. வானில் உள்ள துணையெழுத்து "க"கரமாகப் படிக்கப்பட்டு, வகன், வாகன் (வாகனம்) என்ற பல திரிபுகளுக்கு வழிகோலப்பட்டு விட்டது.
இவ்வாறு காலமும் தூரமும் தமிழ் மொழிச் சொற்களைப் பலமாற்றத்திற்கு உட்படுத்தியிருந்தது என்றால், தவறாக எழுத்துகளைப் படித்தமையும் தமிழ்ச் சிதைவிற்குக் காரணம் ஆயிற்று. இதனை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம், ஒன்று - தமிழ் எழுத்தின்மை. மற்றொன்று - எழுத்தைத் தவறாக புரிந்து படித்தல்.....
நன்றி : தேமதுரத் தமிழோசை இதழ் - துலை 2037
|
...கோட்சே முதல் தனஞ்செய் சாட்டர்ஜி வரை...
கனடாவில் 1975 ஆம் ஆண்டுவரை மரண தண்டனை முறை இருந்தது. ஆனால் 1,00,000 பேர்களுக்கு 3,09 நபர்கள் வீதம் கொலை மரணங்கள் இருந்தன. அதற்கு அடுத்த வருடம் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பில் கொலை மரணங்கள் 1.73 ஆகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஹ் நடத்திய கணிப்பின்படி மரணதண்டனை ஒழிக்கப்பட்ட பிராந்தியங்களைவிட மரணதண்டனை அமுலிலிருக்கும் பகுதிகளில் 48 முதல் 101 விழுக்காடு வரை கொலை மரணங்கள் அதிகமாய் உள்ளன. அமெரிக்காவில் நடக்கும் கொலை மரணங்களின் எண்ணிக்கை மரண தண்டனை ஒழிக்கப்பட்ட ஐரோப்பாவைவிட நான்கு மடங்கு அதிகம்.
தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதால் குற்றங்கள் குறையவில்லை என்பது ஐரோப்பிய நாடுகளின் கவலை.
1988 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஐ.நா.சபையால் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பூடான், நேபாளம் உள்ளிட்ட 120 நாடுகளில் மரணதண்டனையை ரத்து செய்துவிட்டன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 85 நாடுகளில் மரணதண்டனை முறை உள்ளது.
இந்தியாவில் இதுவரை....
சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்பட்டவர்கள் 55 பேர்.
முதன் முதலில் தூக்கிலிடப்பட்டவர் நாதுராம் கோட்சே
கடைசியாகத் தூக்கிலிடப்பட்டவர் தனஞ்ஜய் சட்டர்ஜி
குடியரசுத் தலைவரின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் 21 பேர்கள்.
2003 ஆம் வருட சிறைப்புள்ளி விபரங்களின்படி 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
கடந்த ஒன்பது மாதங்களில் 32 வழக்குகளில் மரணதண்டனை பெற்றவர்கள் 56 பேர்.
நன்றி : மனித உரிமைக் கங்காணி இதழ் - நவம்பர் 2006
|
சதாம் உசேனை விடுதலை செய்க
ஈராக் குடியரசுத் தலைவர் சதாம் உசேன் அவர்களுக்கு அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஒருநாட்டின் மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் சதாம் உசேன் அவர்களைப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஈராக் மக்களுக்கே உரியது. அவர் தவறு செய்தவராக இருந்தால் அந்த நாட்டுச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றங்கள்தான் அவருக்குத் தண்டனை விதிக்க முடியும்.
ஆனால் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகப் பொய்யான குற்றச் சாட்டினை ஈராக் அரசு மீது சுமத்தி அமெரிக்க பிரிட்டனின் துணையுடன் அந்நாட்டின் மீது அடாவடியான போர் தொடுத்து பல்லாயிரக் கணக்கான ஈராக் மக்களைக் கொன்று குவித்தது. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் தலைவரான சதாம் உசேன் உட்பட பலரைக் கைது செய்து சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியது.
ஈராக் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் உலகை ஏமாற்றுவதற்காக நீதி விசாரணை என்ற பெயரில் ஒரு போலி நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது. அமெரிக்க இராணுவத்தால் நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் முதலாவது தலைமை நீதிபதி தன்மீது அரசியல் ரீதியாக நிர்பந்தம் ஏவப்பட்டதாகக் கூறி தனது பதவியில் இருந்து விலகினார். அவரை அடுத்து நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதி தன் பதவியை ஏற்கவே முன்வரவில்லை. மூன்றாவதாக சதாம் உசேனின் அரசியல் எதிரியான ஒருவரை நீதியபதியாக நியமித்து சட்ட நெறிகளையும், நீதி நெறிகளையும் பின்பற்றாமல் விசாரணை நடத்தப்பட்டது. திறமையான வழக்கறிஞர்களை அமர்த்திக் கொள்ள சதாமுக்கு உரிமை வழங்கப்படவில்லை. அவருக்காக வாதாட முன்வந்த 3 வழக்கறிஞர்களை படுகொலை செய்யப்பட்டார்கள். சதாமுக்காக நீதிமன்றத்தில் வாதாட முன்வந்த அமெரிக்காவின் முன்னால் அட்வகேட் ஜெனரல் ராம்சே கிளாக் என்பவரை நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு, இறுதியாக சதாமுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீதி எவ்வாறு கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.
குற்றவாளியே நீதிபதி நாற்காலியில் அமர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு சதாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சரியான முன் உதாரணம ஆகும்.
நன்றி : தென் ஆசியச் செய்தி இதழ் - 16-20 நவம்பர் 2006
|
சளி - (cold)
சளி என்பது நமது சுவாச மண்டலத்தில் வைரஸ் கிருமிகளால் பரவும் ஒரு நோயாகும். இதன் தாக்கம் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் இருக்கும். பொதுவாக 10 நாள்களுக்கு மேல் இருப்பின் கவனமாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரணங்கள் :
1. தூய்மையற்ற நீரைக் குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்துதல்.
2. உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகமாக உண்ணுதல்.
3. தூசிகள் நிறைந்த இடங்களில் இருந்தல்.
4. புகை கலந்த காற்றைச் சுவாசித்தல் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
வெளிப்படும் சளியின் அளவு :
24 மணி நேரத்தில் ஒரு அவுன்ஸ் (30 மிலி) வெளிப்பட்டால் தவறில்லை. இதைவிடச் சற்று அதிகப்படின் நுரையீரல் தாபிதமாக இருக்கலாம். மிக அதிகமாக இருப்பின் டி.பி. என்னும் இளைப்பு நோயாக இருக்கலாம். 10 அவுன்ஸ் அளவிற்கு வெளிப்பட்டால் நுரையீரலில் கட்டிகள் இருக்கலாம்.
நிறம் மற்றும் தன்மை :
1. கெட்டியான வெண்மை நிறமாயின் நுரையீரல் தாபிதம் கலந்து இருப்பது. நுரைகள் நிறைந்து இரத்தம் கலந்து இருப்பது, சீழ் கலந்து சற்று நாற்றமாக இருப்பது ஆகியவை நுரையீரல் வீக்கத்தின் அறிகுறிகளாகும்.
2. வெண்மையாக, கெட்டியாக, நீலநிறமாக இருப்பின் நிமோனியா நோயாகும். கட்டியாக கருஞ்சிவப்பான நிறத்தில் வெளிப்படின் வயிற்றிலிருந்து வெளிப்படுவதாகக் கொள்ளலாம். இது அதிகமாகவும் அமிலத்தன்மை கொண்டதாகவும இருக்கும். ஆனால் நுரையீரலிலிருந்து வெளிப்படின் காரத்தன்மை குறைவான அளவிலும், நல்ல சிவப்பாகவும் இருக்கும்,
3. பச்சை நிறமுடைய சளி நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதைக் குறிக்கிறது.
மணம் :
சளிக்கு சாதாரணமாக எந்த மணமும் இருக்காது. இளைப்பு என்னும் காசநோய் இருந்தால் அதிகமான நாற்றம் இருக்கம்.
2. நுரையீரலில் தண்ணீர் இருந்தாலும் நாற்றத்துடன் சளி வெளிப்படும்.
மருத்துவம்
ஆடாதெடை இலையை இடித்துப் பிழிந்த சாறு 30 மிலி உடன் சமனளவு தேன் கலந்து இரண்டு வேளை குடித்து வரவும்... இப்படி நிறைய மருத்துவ முறை குறிப்பிட்டுள்ளது.
நன்றி : மூலிகை சஞ்சீவி - நவம்பர் 2006
|
தலைவன் வழிபாடு
டாக்டா - எம்.எஸ். உதயமூர்த்தி.
தன் முயற்சியால், தணியாத இலட்சியத்தால் ஒருவன் அரசியலிலோ, கல்வியிலோ, தொழிலிலோ - தலைவனானால் அவனைச் சுற்றி ஒரு கும்பல் உருவாகிறது. கொள்கைச் சித்தரர்களைச் சபலச் சித்தர்களாகச் செய்யும் வலிமையும் நோக்கமும் கொண்ட கும்பல் இது. மனிதனது பலவீனங்களே இக்கும்பலின் கருவி.
இக்கும்பலின் தன்மையை உணர்ந்து, இதற்கு மேல் உயர்ந்து நிற்கும் தலைவர்கள் அபூர்வம்.
நாம் நமது தலைவர்களை என்ன செய்கிறோம்? நாட்டை நடத்த நாம் தலைவனைத் தேர்ந்தெடுக்கிறோம். அப்பதவிக்கு வந்தபின்புதான், அப்பதவியின் வலிமை அவனுக்குப் புலப்படுகிறது. உடனே பதவி காரணமாக அவனைப் பெரிய மனிதனாகப் போற்றத் தொடங்கிவிடுகிறோம். அண்ணாவுக்கும் இதேதான். காமராஜருக்கும் அன்று இந்நிலைதான். நேரு, இந்திரா எல்லோரையும் நாம் இப்படித்தான் நடத்தினோம். நடத்துகிறோம். நாம் ஹீரோ ஒர்ஷிப் (Hero worship) செய்கிறோம். நாம் மனிதனை அதி உன்னதமானவனாக்கி வழிபடத் தொடங்குகிறோம்.
இவனில்லாமல் நாடு ஓடாது என்று சொல்லப் பட்ட முக்கியமானவனது எலும்பெல்லாம், மயானக் கரையில் அடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆங்கிலத்தில் ஓர் அழகான வசனம் உண்டு.
நாம் மனிதர்களையும், அவர்களது கொள்கைகளையும் திட்டங்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாதவர்கள். மனிதன் நல்லவனாக இருந்துவிட்டால் அவனது கொள்கைகளும் திட்டங்களும் சிறந்தவையாயிருக்கும் என்று எண்ணி விடுகிறோம். நாம் உணர்ச்சி வசப்பட்டவர்கள். அறிவுவசப்பட்டவர்கள் அல்லர். நாம் உணர்ச்சியைப் போற்றுகிறோம். பகுத்தறிவை அல்ல. நமது பரம்பரை அது.,
அமெரிக்காவில் கென்னடி இறந்து போனபோது அங்கே ரேடியோ டெலிவிசன் காரர்கள் அழவில்லை. அவன் தன் துக்கத்தைக் காட்டி அழுது கொண்டே அறிவிப்பு செய்திருந்தால், ஒரு நெருக்கடியான நேரத்தில் நிலைமையை சமாளிக்க இயலாதவன் என்று கருதி அவனை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். நமது ஊரிலோ எவன் கேவிக்கேவி அழுது கொண்டே குரல் கொடுக்கிறானோ அவனையே பாராட்டுகிறோம்.
உணர்ச்சி காரணமாக நாம் நம் தலைவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு புகழ்கிறோம். உணர்ச்சி காரணமாக மாற்றானைக் கண்ணை மூடிக்கொண்டு இகழ்கிறோம்.
தலைவர்களைப் போற்றும் நமது மனோ பாவதின் மறுபக்கம் பலவீனம். நம்மைப் பற்றிநாம் குறைந்த மதிப்புக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடியாது என்ற எண்ணம் நம்மில் ஊறிப் போயிருக்கிறது. தமிழ் நாட்டில் தலைவர்கள் மல்லிகைத் தேரில் ஊர்வலம் வருகிறார்கள். அவர்களுக்கு அரிவாளும், கேடயமும், செங்கோலும், கரீடமும் அளிக்கப்படுகிறது. வழிபாட்டின் உச்சக்கட்டம். நண்பர்களே இங்கு நடப்பது முடியாட்சியல்ல. குடியாட்சி, ஜனநாயகம்.
நமது வழிபாட்டு மனோபாவத்திற்குத் தமிழ் புலவர்கள் அன்றிருந்தவர்களும் சரி, இன்றிருப்பவர்களும் சரி செய்திருக்கும் தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. முற்காலத்தில் அரசர்களையும், இக்காலத்தில் மடாதிபதிகளையும், அரசியல்வாதிகளையும் நமது தமிழறிஞர்கள் தேவைக்கு மேல் புகழத் தவறுவதில்லை.
தமிழறிஞர்களின் வறுமையைக் குறை கூறுவதா? பதவி ஆசையைக் கூறுவதா? புகழை மறைமுகமாக, காசும் பதவியும் கொடுத்து வாங்கி வளர்க்கும் தலைவர்களைக் குறைகூறுவதா?
என்று மனிதனை மனிதனாகக் கருதுவோம்.
என்று அறிவை முன்வைத்து உணர்ச்சியைப் பின் வைத்து அரசியலை நோக்குவோம்? வாழ்வாங்கு வாழ முயலுவோம்?
நன்றி : நம்பு தம்பி நம்மால் முடியும் இதழ் - நவம் 2006
|
எப்படி உருப்படுவர் தமிழ் மக்கள் ?
நாஞ்சில்
1991 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சரான செல்வி செயலலிதா தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உருவாக்கப் போவதாக அறிவித்தார். 1991-96, 2001-06 எனப் பத்து ஆண்டுகள் இவரது ஆட்சி நடந்தது.
1996 - 2001 ஆகிய அய்ந்து ஆண்டுகள் தி.மு.க ஆட்சி நடந்தது. தற்போதும் 2006 முதல் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடக்கிறது.
இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் அரசிடம் சலுகை விலையில் நிலம் பெற்றுப் பல கணிணி நிறுவனங்கள் சென்னையில் பணிமனைகளை நிறுவியுள்ளன. தற்பொழுது மென்பொருள் தொழில் நுட்பம் மற்றும் மிண்ணணுத் தொழில் சார்ந்த பன்னாட்டுக் குழுமங்கள் சில தொழிற்சாலைகளை நிறுவிட முன்வந்துள்ளன. இவற்றில் சில ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். அவர்கள் ரூ10,000 முதல் ரூ 50,000 வரை மாதச் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் வெகுமக்களின் வாழ்நிலை என்ன என்பது பற்றி யாரும் கவலை கொள்ளுவதேயில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள் - அதாவது நாளொன்றுக்கு ரூ 50 க்கும் குறைவாகச் சம்பளம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளதாக அரசு தரும் அறிக்கைகள் மூலமாகத் தெரியவருகின்றன.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோருக்கு இலவச சேலை, வேட்டி வழங்கும் திட்டம் 1991 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
1991 - 92 ஆம் ஆண்டில் இலவச சேலை பெற்றோர் 60 இலக்கம். இலவச வேட்டி பெற்றோர் 60 இலக்கம். 1992 - 93 ஆம் ஆண்டில் இலவச சேலை பெற்றோர் 72 இலக்கம், இலவச வேட்டி பெற்றோர் 68 இலக்கம், 2001 - 02 ஆம் ஆண்டில் இலவச சேலை பெற்றோர் 81 இலக்கம், இலவச வேட்டி பெற்றோர் 74 இலக்கம், 2005 - 06 இல் இலவச சேலை பெற்றோர் 164 இலக்கம், இலவச வேட்டி பெற்றோர் 164 இலக்கம். அதாவது இலவச சேலை வேட்டி பெற்றோரின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் 173 விழுக்காடு அதிகரித்துள்ளது (தி இந்து 25-8-2006)
1991 இல் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 5 கோடி. இவர்களில் ஒரு கோடியே 20 இலக்கம் பேர் ஏழ்மையில் வாழ்ந்தனர். 2001 மக்கள் தொகையில் 6 கோடிப்பேர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அப்படியானால் இந்த ஆட்சியாளர்களின் சாதனைதான் என்ன?
இன்னொரு புள்ளி விபரம் தமிழக மக்கள் உழைத்துச் சம்பாதிப்பதில் பெருந்தொகையை அரசே பிடுங்கிக் கொள்வதைத் தெரிவிக்கிறது. எப்படி?
தற்போது தமிழ்நாட்டில் மது விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்) 6500 க்கும் அதிகமாக உள்ளன. இது 1991 இல் சுமார் 3000 என இருந்தது. பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகளின் உற்பத்தி வரிமூலம், சில்லறை விற்பனையில் ஈட்டிய இலாபம் மூலமும் அரசுக்குக் கிடைத்த வருவாய் 1996-2001 இல் ரூ 12, 716 கோடி, அதாவது ஆண்டுக்கு ரூ 2,500 கோடி. 2001 - 2006 இல் ரூ 21,945 கோடி ஆண்டுக்கு ரூ 4,300 கோடி (தினமணி 1-8-2006)
இதுவே நடப்பு ஆண்டில் ரூ 6,500 கோடியாகக் கிடைக்கும் எனத் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
உடலுக்குக் கேட்டையும், குடும்பத்துக்குப் பண இழப்பையும் உண்டாக்கும் மதுவை விற்று மக்களை ஏழைகளாக்கி விட்டு அவர்களுக்கு இலவசமாகச் சேலை, வேட்டி, இலவச டி.வி, மலிவு விலையில் அரிசி என்றும் கொடுப்பது ஏற்புடையதா?
ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் நடிகர் - நடிகைகளுக்கு வீண் செலவில் விழாக்கள் எடுப்பது என மக்கள் ஒரு பக்கம் மயங்கிக் கிடக்க, தெருவெங்கும் மது விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து அவர்களது பொருளாதாரத்தைச் சீரழிப்பது மறுபக்கம் நடக்கிறது.
எப்படி உருப்படுவர் தமிழ் மக்கள் ?
நன்றி : சிந்தனையாளன் நவம்பர் 2006
|
சீன நாட்டுப்புறக் கதை
இயற்கையான எதிரிகள்
ஷூன் மாகாணக்கதை
தமிழாக்கம் : ஜென்னி
பல நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின் பல ஆயிரம் மைல்களுக்குத் தெற்கே ஒரு வயது முதிர்ந்த கிழவன் தனியாக வசித்து வந்தான். அக்கிராமத்தில் அவனது இருப்பிடம் மிக உயரமான சுவர்களால் மறைக்கப்பட்டிருந்தாலும் யாராலும் அவனைக் காண இயலவில்லை. அவனோ தனியாகவும், தனக்கு என்று துணையாக ஒரு பூனையும் நாயும் மட்டுமே கொண்டு வாழ்ந்து வந்தான். அந்த நாட்களில் நாயும் பூனையும் ஒற்றுமையாக வசித்தன.
அவன் வேலை எதற்கும் சென்றது இல்லை. உணவுப் பொருள் வாங்கவும் வெளியே வருவது இல்லை. அவனைக் காண யாரும் வருவது இல்லை. எனவே ஊரில் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள், எப்படி உயிர் வாழ்கிறான்? உணவுக்கு என்ன செய்கிறான்? அதிலும் ஒரு திருடன் ரொம்பவே ஆர்வம் கொண்டான்.
ஒரு நாள் இரவில் அந்த மிகப் பெரிய மதில் சுவரை யாருக்கும் தெரியாமல் அந்தத் திருடன் தாவி உள்ளே குதித்தான். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஒரு பெரிய தோட்டத்தைக் கண்டான். தோட்டத்தின் நடுவில் அரண்மனை போன்றதொரு அற்புதமான வீடு இருந்தது. ஆர்வம் மேலிட, தனக்கு ஒரு யோகம் அடிக்கப்போவதாக உணர்ந்தபடி திருடன் மெல்ல ஊர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைந்து என்ன நடக்கின்றதெனக் காண விரும்பினான்.
உள்ளே போனால் அங்கே அவன் கண்ட காட்சி அவனை சிலிர்க்க வைத்தது. இது மாதிரி அவன் பார்த்ததே இல்லை. பிரமாண்டமான அறைகள், சுவர்களில் எல்லாம் பழங்காலச் சீன ஓவியங்கள் நிஜம் போல காட்சியளித்தன. மிகவும் அபூர்வமான மரத்தாலான தூண்களின் முனைகளில் தங்கத்தாலான விளிம்புகள் முழுதும் பளபளத்தன. எங்கு நோக்கினும் பளீரென்று பலவித ரத்தினங்கள் பிரகாசித்து இரவையும் பகலாக்கின.
அறைகளில் ஒன்றில் பேச்சு சப்தம் கேட்கவே திருடன் அங்கே சென்று கதவோரமாக மறைந்து நின்று கேட்டான். கிழவன் முதலில் நாயோடு பேசினான்.
'இன்று இரவு உணவுக்கு உனக்கு என்ன வேண்டும்?'
ஏதும் சொல்லாது நாய் குரைத்தது. தரையைப் பிராண்டியது.
'எப்போதும் இதுதானா' என்று கூறிய கிழவன் சட்டைக்குள்ளிருந்து யானைத் தந்தத்தால் ஆன ஒரு பாத்திரத்தை எடுத்துத் தடவியபடி...
"நான் நினைத்தேன், அதை நீயும் நினைத்தாய்...கரடிக்கறி" எனக் கூவினான்.
உடனே நாய்க்கு முன் ஒரு தட்டு நிறைய கரடிக்கறி வந்தது. இது அதைச் சாப்பிடத் தொடங்கியது.
அடுத்து கிழவன் பூனையைப் பார்த்து இன்று இரவு உணவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான். பூனை பதிலேதும் சொல்லாது... தரையில் முகத்தை வைத்துத் தாடையைத் தேய்த்தது.
'தெரியும் எப்போதும் நீ அதையேதான் கேட்பாய்'
கிழவன் நாய்க்குக் கேட்டது போலவே தந்தத்தாலான பாத்திரத்தைக் கையில் எடுத்து "நானும் நினைத்தேன், அதையே நீயும் நினைத்தாய். மீன் வறுவல் தா" என்றான்.
இப்படியாக கிழவன், நாய், பூனை ஆக மூவரும் தாங்கள் விரும்பியதை அதிசய மந்திரப் பாத்திரத்திடமிருந்து பெற்று உண்டு பக்கத்து அறையிலுள்ள பட்டு மெத்தையில் உறங்கிடப் புறப்பட்டனர். நாய் என்னதான் வேகமாக ஓடினாலும் பூனை தாவிக் குதிப்பதில் மிகவும் திறமை பெற்றிருந்ததால் தலைமாட்டில் குதித்து படுத்தது. நாய்க்குக் கால்மாடு தான் கிடைத்தது. 'ஏய் எனக்கு இடம் விடு' எனக் கத்தியபடி கிழவன் நடுவில் படுத்தான்.
யாரும் நன்றாக உறங்கிய பிறகு திருடன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அந்த மந்திரப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தான்.
பொழுது விடிந்தபோது தனது அதிர்ஷ்ட மந்திரப் பாத்திரம் திருடு போய்விட்டதை உணர்ந்த கிழவன் வெறுத்துப் போனான். அய்யோ நான் சோடை போய்விட்டேனே. எல்லாம் போய் விட்டதே. என ஓவெனக் கதறி அழ ஆரம்பித்தான். நாயும் பூனையும் அவனைத் துயரத்தோடு பார்த்துக் கொண்டு நின்றன.
நாயை அவன் அழைத்தான். என் கால்களாக நீ இருப்பாயா.. என்னால் இனி ஓடிட முடியாது.. திருடனைக் கண்டு பிடித்து நமது பாத்திரத்தை மீட்டுவா - என்றான். பூனையை அருகில் அழைத்தான். - என் மூளையாக நீ இருப்பாயா.. என்னால் இனி முடியாது, திருடனைப் பிடித்து பாத்திரத்தை மீட்டுவா- இனி நீயும் நாயயோடு புறப்படு - என்றான்.
நாயும் பூனையும் ஒற்றுமையாகப் புறப்பட்டன. பட்டிதொட்டிகள், பட்டிணங்கள் என அவை எங்கும் சென்று தேடலாயின.. நாய் நன்றாக ஓடவும், ஆபத்திற்குக் குரைத்திடவும் சண்டையிடவும் கற்றது. பூனை இடம் விட்டு இடம் தாவவும் வீடுகளுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து சமையல் அறையிலிருந்து உணவு எடுத்து வரவும் பழகிவிட்டது. இரண்டும் வடக்கேயும், தெற்கேயும் இன்னும் ஷூன் மாகாணம் முடியும்வரை மேற்கேயும் துழாவியும் அநேக வருடங்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத திருடன் ஒரு நாள் பிடிபட்டான்.
ஊரின் பெரிய செல்வந்தன் யாரிடமும் பேசாமல்.. எந்த உறவும் இல்லாமல் வாழவதாக அநேகம்பேர் ஏராளமானவர்களிடம் சொல்லியதைக் கேட்டு அவனது இருப்பிடத்திற்கு நாயும் பூனையும் சென்றன. பூனை வெளியே நாயை நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே ஊர்ந்து, வீட்டுக்குள் காவலாளிகளை ஏமாற்றி விட்டு நுழைந்தது. இரவு சாப்பிட்டுவிட்டுத் தனது சட்டைக்குள மாறியதில் அதிசய மந்திரப்பாத்திரத்தை திருடன் மறைப்பதைப் பார்த்தது பூனை. நிலைமையை புரிந்து கொண்டு வெளியே வந்தது.
தனியாக ஏதும் செய்ய முடியாது. நாம் இருவரும் இணைந்தால் முயலலாம் - என்று பூனை கூறக் கேட்ட நாய் அதனோடு உள்ளே நுழைந்து திருடன் மீது பாய்ந்தது. திருடன் நாயைக் கொல் பூனையைக் கொல் - எனக் காவலாளிகளிடம் கத்தினான். நாய் திருடன் மீதே இருந்ததால் அவர்களால் அதை அடிக்க முடியவில்லை.
நாயின் வாலைப்பிடித்து அவர்கள் இழுத்தபோது நாய் தன் வாலை மடக்கி வளைத்துக் கொண்டது. அது முதல் உலகில் நாய்களின் வால் வளைந்தே காணப்படுகிறது.
நாய்க்குப்பின் பூனை திருடன் மீது பாய்ந்து பிராண்டி நெஞ்சிலிருந்த பாத்திரத்தை தட்டியது. திருடன் வலிபொறுக்காமல் அதை எடுக்க.. அவன் கையை கடித்து பாத்திரத்தை பிடுங்கிய பூனை... கிழவனைப் போலவே 'எனக்குத் தோன்றியதே உனக்கும் தோன்றியது.. இந்தப் பாத்திரத்தோடு நான் வீட்டிற்குப் போகவேண்டும்" என்றது. உடனே பாத்திரத்தோடு பூனை மறைய ஆரம்பித்தது.
காவலர்களிடம் உதை வாங்கிக் கொண்டிருந்த நாய் 'இரு நானும் வருகிறேன்' என்று எவ்வளவோ சொல்லியும் பூனை கண்டுகொள்ள வில்லை. தட்டுத் தடுமாறியபடி பாதி செத்துக் கொண்டிருந்த கிழவனுக்கு பூனைையும் பாத்திரத்தையும் பார்த்ததும் தலைகால் புரியவில்லை. பழையபடி அரண்மனையை மாற்றிவிட்டு "எங்கே உன் நண்பன் நாய்?" என்று கேட்டான்.
பூனை எந்த பதிலும் சொல்லவில்லை. அவனோ.."நீ இவ்வளவு கஷ்டப்பட்ட போது அந்த நாய் பாதியில் உன்னை விட்டு .ஓடிவிட்டதா?" என்று கோபப்பட்டான். அதுதான் உண்மை என்றும் நினைத்தான்.
பல நாட்கள், பல வருடங்கள் கழித்து அதே நண்பனின் குரைக்கிற சப்தம் வாசலில் கேட்டது. காது கிழிந்து உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோடு அங்கே நாய் நண்பன் நின்று கொண்டிருந்தது.
'என்ன.. கடைசியில் இப்போதுதான் வழி தெரிந்ததா.. பாதியில் ஓடும்போது புத்தி வரவில்லையா' என மிரட்டினான் கிழவன்.
"உண்மையைச் சொல்லிவிடு" என பூனையைப் பார்த்து நாய் எவ்வளவோ குரைத்தும்.. கொழுத்து நிம்மதியாக இருந்த பூனை வாயே திறக்கவில்லை.
ஆத்திரத்தோடு கிழவன் கதவை மடாரெனச் சாத்தினான். அதிலிருந்து நாய்கள் பூனை செய்த துரோகத்தை மறக்கவே இல்லை. இன்று வரை அவை இயற்கையிலேயே எதிரிகளாக மாறி உள்ளன.
நன்றி : திசை எட்டும் மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ் எண் 13.
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|