வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 08 - 10 - 2006



செவ்வியல் தமிழ் உயராய்வு மையம்

(தமிழக அரசிடம் அளிக்கப்படும் சில கருத்துரைகள்)

அறிக்கை தருபவர்கள் :-

ப.மோகன் பாராளுமன்ற உறுப்பினர், முனைவர் தமிழண்ணல்.


பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தமது நிதிநிலை அறிக்கையில் செவ்வியல் மொழித்திட்டம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்டும் என்றும் அதற்கான நிதி ஆதாரம், மத்திய அரசிடம் கேட்டுப் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை மறு ஆய்வு செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும். தமிழ் தோன்றிய காலந்தொட்டே செவ்வியல் மொழி என்றாலும், அதனை மத்திய அரசே அறிவிக்கச் செய்த பெருமை, தாங்கள் நினைப்பதைவிடக் கூடுதலான பெருமைக்குரியது என நாங்கள் கருதுகின்றோம். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் இராசராசன், பணி போல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் நினைக்கப்பட வேண்டிய ஒன்று என்பது எங்கள் கருத்து.

இது கூட்டணி ஆட்சியின் வெற்றி. மாண்புமிகு கலைஞர் அவர்களின் இடைவிடா முயற்சியின் விளைவு. தமிழுக்கு இடைக்காலச் சோழப் பேரரசு ஆட்சியில் ஏற்பட்டது போன்ற மறுமலர்ச்சிக்கு வித்து இது. உலகளவில் பெருமைக்கும் ஓர் பெரிய திருப்பத்திற்கும் ஏற்பட்ட நிகழ்வாக இதை நாங்கள் மதிக்கின்றோம்.

இதனைத் தன்னாட்சியுடையதாக ஆக்க வேண்டும். நடுவணரசின் சாகித்தய அகாதமி போல, எத்தனை அரசுகள் மாறினாலும் அசைக்க முடியாத நிறுவனமாக ஆக்க வேண்டும். அன்றைய தலைமையமைச்சர் ஜவகர்லால் நேரு சாகித்திய அகாதமியை நிறுவிய அதே முறையில் மாண்புமிகு கலைஞர் இச் செவ்வியல் மையத்தை உருவாக்க வேண்டும்.

இதனை ஏற்கெனவே உள்ள நிறுவனத்துடன் ஒப்படைப்பது போதாது. அது தமிழுக்கும், செவ்வியல் மொழி என அறிவிக்கச் செய்ததற்கும் பொருந்திய பயனைத் தராது. எனவே நாங்கள் தரும் கீழ்க்கண்ட பத்து ஆலோசனைகளை அவ்வாறே ஏற்று, அதனைச் சட்டமன்றத்தில் அறிவித்து, அடுத்த மாதமே தொடங்கி ஓராண்டில் நிறைவேற்ற வேண்டும். காலம் மாறும் முன், நிலை பெறச் செய்து முடிக்க வேண்டும்.

கருத்துரைகள்

1. செவ்வியல் தமிழ் உயராய்வு மையம் ( Centre of Excellence for classical Thamizh) என்று இது ஒரு தனி நிறுவனமாக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் பிற நிறுவனங்களுடன் சேர்ந்து, திட்டங்களை நிறைவேற்றலாம்.

2. செவ்வியல் தமிழ் எனப்படும் தொல்காப்பியம், சங்க இலக்கியம் யாவும் தோன்றிய இடம் தென்பகுதியே- மதுரையே ஆகும்.

3. இதனை எவ்வளவு காலம் ஆனாலும், எந்த அரசு வந்தாலும் கலைக்க முடியாத நிலைத்த தன்னாட்சி நிறுவனமாக்க வேண்டும். இதற்கு நடுவணரசின் சாகித்திய அகாதமி விதிகளை, ஜவகர்லால்நேரு, காலத்தில் வகுத்தது போல கலைஞர் காலத்தில் வகுக்க வேண்டும்.

4. இனி இதைச் செவ்வியல் மொழி என்றே அழைக்க வேண்டும். பரிதிமாற்கலைஞர் உயர்தனிச் செம்மொழி என்றார். உயர்மொழி, தனிமொழி, செம்மொழி என விளக்கினார். மூன்றும் சேர்ந்தால் செவ்வியல் மொழி என்றே ஆகும். ெச்வியல் இசை, செவ்வியல் நடனம், என்பன போன்றே செவ்வியல் மொழி என்பதுமாகும். அனைத்து அகாராதிகளும் ஒப்பும் பெயர் இது.

5. இனித் தமிழ் என்பதை ஆங்கிலத்தில் Tamil என எழுதுவதை சட்டப்படி அரசாணை மூலம் நீக்க வேண்டும். அது இனி Thamizh எனத் தமிழ் ஒலிப்புப் படியே பயன்படுத்தப்பட வேண்டும். மாநில அரசு, மத்திய அரசு, பல்கலைக்கழகங்கள் இப்பெயர் ஒலிப்பு - எழுத்து மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அறிஞர் அண்ணா மதராஸ் மாகாணத்தைத் தமிழ்நாடு என மாற்றினார். கலைஞர் மதராசைச் சென்னை என மாற்றினார். இனித் தமிழ் Tamil ஆங்கிலத்தில் Thamizh என்றே எதிலும் எங்கும் மாற்றப்பட வேண்டும்.

6. மதுரையில் பாவாணர் கோட்டம் உருவாகியுள்ளது. இந்நிறுவனம் அங்கு ஓர் அலுவலகமாகத் தொடங்கப்பட்டு ஓராண்டில் மதுரையைச் சுற்றியுள்ள ஓரிடத்தில் இந்நிறுவனம் சில ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட முன் ஆயத்தம் செய்ய வேண்டும்.

7. அமெரிக்காவில் ஒவ்வோர் ஊரிலும், நகரத்திலும் நூலகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் நூலகம் இருக்கிறது. சிகாகோவில் மட்டும் தலைமை நூலகம் உட்பட, ஒரே நகரத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் உள. தமிழ் மொழிக்கு ஒப்பற்ற, மிகப் பெரிய நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

8. தமிழ் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஒரு வழித் தொகுக்கப்பட வேண்டும். அனைத்தும் ஒளிப்படங்களாக, குறுந்திரைப்படங்களாக காட்சிப்படுத்தப்படவேண்டும். இது ஒரு மிகப் பெரிய பணி.

9. வெளிநாட்டவர் வந்து தங்க, பிற மாநிலத்தவர் வந்து ஆராய, தமிழகத்தவரும் பயன்படுத்த வந்த தங்கக் கட்டடங்கள் வேண்டும்.

10. இரண்டு மூன்று ஏக்கருக்குக் குறையாது ஒரு சுற்றுலாத் தலம் போன்று ஒரு தமிழாய்வுத் தலமாக - தமழாய்வு மையமாக, செவ்வியல் தமிழை, இக்காலத் தமிழுடன் இணைக்கும் பாலமாக இதனை நிறுவ வேண்டும்.

அப்போதுதான் செவ்வியல் தமிழ் எனப் பெறப்பட்ட அங்கீகாரமும் அதன் வளர்ச்சிகளும் காலந்தோறும் அறிப்படும் செயலாக மாறும். செய்தவர்கள் காலத்திற்கும் நினைக்கப்படுவர்.

நன்றி : தமிழ்ப்பாவை இதழ் - அக்டோ 2006




ஆங்கிலவழிக் கல்வியும் இன்றைய ஆசிரியர்களும்.

ம.இலெ.தங்கப்பா.

தமிழகத்திலும், புதுவை மாநிலத்திலும் நாம் காண்பது என்ன? மக்களின் உயிர் நிலையாகிய தாய்மொழிவழிக் கல்வி பற்றி ஆளுங்கட்சியினருக்கும் அக்கறையில்லை, எதிர்க்கட்சியினருக்கும் ஈடுபாடு இல்லை. மக்கட்குக் கல்வி வழங்கும் ஆசிரியர் பெருமக்கட்கும் அணுவளவு கூட இதைப் பற்றிய எண்ணமே இல்லை. படிப்படியாக ஒழிந்து போய்விடும் என்று நினைத்த ஆங்கிலவழிக் கல்வி புதுப் பொலிவுடன் மீண்டு வந்து இன்று தமிழகத்தையும் புதுவை மாநிலத்தையும் ஆட்டிப்படைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளரும், அரசியல்வாணரும், அறிவாளரும் மக்களும் நல்லதெனக் கருதும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மிகப் பெரிய தீமை. மக்களிடையே விரைந்து பரவிக் கொண்டு வரும் மிகக் கொடிய கொள்ளை நோய்.

ஆங்கிலவழிக் கல்விக்கு ஒரு பேரெதிர்ப்புத் தமிழகத்தின், புதுவையின் கல்வியாளர்கள் நடுவிலிருந்தாவது புறப்பட்டிருக்க வேண்டும். கல்விக்கான புதிய கொள்கைகளையும், புதிய முறைகளையும் ஆய்ந்து காணும் அறிவுத் திறம் படைத்த கல்வியாளர்களும், ஆசிரியப் பெருமக்களும் இத்துறையில் எவ்வளவு விழிப்புணர்வு உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன?

மக்கட்கான கல்வி என்று சொல்லிக் கொண்டே கல்வியாளர்கள் ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்டுதான் தங்கள் ஆய்வுகளையும், புதிய எண்ணங்களையும், வழிமுறைகளையும் வெளியிடுகின்றனர். தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமையைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இனிப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களாவது எப்படி ஆங்கிலவழிக் கல்வி தமிழ்ப் பிள்ளைகளின் மூளையை மழுங்கடித்து, எண்ணுந்திறனை இழக்கச் செய்து, குருட்டு மனப்பாடச் செய்தி இயந்திரங்களாக அவர்களை ஆக்குகின்றது என்பதை அன்றாட வகுப்பறை நடப்புகளிலிருந்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அடிமைத் தனத்தையே வளர்க்கும் ஆங்கில வழிக் கல்வியை அகற்றிவிட்டு சொந்தப் பண்பாட்டுடன் கூடிய செழுமையான வாழ்வியற் கல்வியை அவர்கட்கு வழங்க முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களும் செய்யவில்லை.

ஆசிரியர்கள் உண்மையான கல்விப்பணி ஆற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் நடுவிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்க வேண்டும். ந்னமையின் பெயரால் நடத்தப்படும் பெருந்தீமை இது என்பதைச் சுட்டிக்காட்டி அதனுடன் ஒத்துழைத்திருக்க மறுத்திருக்கவேண்டும். ஆங்கிலவழிக் கல்விக்க எதிரான ஒரு கருத்தாக்கத்தை மாணவர் நடுவிலும் பெற்றோர் நடுவிலும் உருவாக்கித் தாய் மொழிவழிக் கல்வியை ஊக்குவிப்பவர்களாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் ஏன் இதைச் செய்யவில்லை. கடனுக்கு வேலை செய்து சம்பளம் வாங்கும் இயந்திரங்களாகவே ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். கல்வியைப் பற்றிய தெளிவோ, நாட்டின் பொது மலர்ச்சியில் அக்கறையோ மக்கட்குத் தாங்கள் பொறுப்புடையவர்கள் என்ற எண்ணமோ அவர்கட்குக் கடுகளவும் இல்லை. பேயரசு செய்தால் பணந்தின்னும் சாத்திரங்கள் என்பது போல ஆசிரியர் கூட்டமும் ஆங்கிலவழிக் கல்விக்கு அடிபணிவதாக இருந்து வருகின்றது. படித்தவர்கள் என்பவர்கள் தங்கள் படிப்பை அடகுவைத்துச் சம்பளம் வாங்கிக் கொள்வதோடு தங்கள் குமுகாயக் கடமை முடிவதாக நினைத்துக் கொள்கின்றனர்.

பாடத்திட்டத்தின்படி வகுப்பறைக்குள் பாடம் நடத்துவது மட்டுமே ஆசிரியர் கடமையாகாது. அதுவே கல்வியும் ஆகாது. மாந்தனை மாந்தனாக்குவதே கல்வி என்பதைக் கூறாதவர்கள் யாருமில்லை. அப்படியிருக்க அத்தகைய கல்வி ஏன் நம் கல்வி நிலையங்களில் நடப்பதில்லை. மாணவர்கட்கு விழிப்புணர்வூட்டி அவர்கட்குச் செழுமை மிக்க கல்வி வழங்க வேண்டிய ஆசிரியர்களே அதைச் செய்யவில்லை என்றால் என்ன காரணம் ?

ஆசிரியர்கள் கற்றுவந்த கல்வியிலேயே ஏதோ ஓர் ஓட்டை எஙகேயே இருந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம் காட்ட முடியும் ?

அடிமையுணர்வை வளர்க்கும் வகையால், அடிமைக் காலத்தில் வெள்ளைக் காரனால் உருவாக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி விடுதலையற்ற கல்வி, விடுதலைக்குப் பிறகும் அதை மேற்கொண்டதைப் போன்ற மடத்தனத்திலும் மடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

நன்றி : தெளிதமிழ் - ஆசிரியர் உரை




உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள்

க.ப. அறவாணன்

தமிழர், பிற இன மக்களிடம் அடிமைப்பட்டுத் தாழ்ந்து கிடந்ததை 1948 க்கு முற்பட்ட இந்திய இலங்கை ஆகிய தாய்ப் பூமிகளும், மலேசியா தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் முதலான குடியேற்ற நாடுகளும் மெய்ப்பிக்கின்றன.

உலக வரலாற்றில் அன்று தொட்டு இன்று வரை, தம் பழம் பெருமையை இழக்காமல் என்றும் வைத்திருக்கும் இனமாகக் கிரேக்க உரோமானிய இனத்தையும், அவ்வினத்தின்வழி வந்த ஐரோப்பிய இனத்தையும், இடையீடுபட்டாலும், தன் தலைமை அடையாளத்தை இழக்காத சீன இனத்தையும் இடையூறுகள் இருந்தாலும் ஃபீனிக்ஸ் பறவை போல எரிதழலில் எரிக்கப்பட்டும் எரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் யூத இனத்தையும் நாம் சுட்டிக் காட்ட முடியும்.

இது போலத் தமிழினத்தைச் சுட்டிக் காட்ட முடியாது. அடிமை நிலை கூலி நிலை அகதி நிலை என்ற மூன்று நிலையிலிருந்தும் உலகத் தமிழர்கள் முற்றுமாக மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. உலகத் தமிழர் 1947-48 க்குப் பிறகு அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போலத் தோன்றினும், அது முழுமையான விடுதலை அன்று என்பதையே இலங்கை உள்ளிட்ட பகுதிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும் அதிகார அடிமைத் தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னம் முழுமையாக விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில் கூலி என்ற பெயர் மாறி - குடிமக்கள்- என்ற நிலையைத் தமிழர் அடைந்து விட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர்.

தமிழர்களுடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு, தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணம் தமிழரே. தொலைநோக்கு இன்மையும், தமிழ் எனும் மொழியை மையப்படுத்தி சமூகக் கட்டொருமைப்பாட்டை வளர்க்காததும் தம் சமூகத்தைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடும் மதங்களையும், சாதிகளையும், கட்சிப் பிளவுகளையும் அனுமதித்து வளர்த்தெடுத்தும், உட்பகையும், பொருளாதார நோக்கில் போதிய அளவு சிந்திக்காததும், பின்நாளில் வரும் அரசியல் ஆதிக்கங்களை ஊகித்துத் தற்காத்துக் கொள்ளாததும் குறிக்கத் தக்கனவாகும்.

வேதனைகள் வந்த போதும், வரும்போதும், வெற்றி பெற்ற இனமக்கள் எவ்வாறு அவற்றை எதிர் கொண்டார்கள், வீழ்ந்தாலும் நிரந்தரமாக வீழாமல் எவ்வாறு நிமிர்ந்து நின்றார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சில பாடங்கள் பின்வருமாறு.

1) ஆதிக்கம் செய்ய உள்ளே நுழைந்தவர்களை முற்றாக உள்ளே நுழையவிடாமல் தடுத்துக் கொண்டது. ஜப்பானும், தாய்லாந்தும் முற்றுமாக ஐரோப்பிய ஆதிக்கம் உள்ளே நுழையவிடாமல் கடைசிவரை தடுத்துக் கொண்டன. பெரும்பகுதி சீனர்களும் அதில் வெற்றி பெற்றனர்.

2) சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவர்தம் தலைமை உயர்வு. உலக இன மக்களிலேயே சீன இனம் தான் உயர்ந்தது என்று ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கற்பிக்கப்படுகிறது. சீனர்களில் ஏழைகள் இருப்பதில்லை. அவர்கள் பல நாடுகளுக்குக் குடியேறியபோதும் எந்த இடத்திலும் அவர்கள் பிச்சைக் காரர்களாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வாணிகத்திலும், செல்வம் சேர்ப்பதிலும் மிகக் குறியாக இருப்பார்கள், இருக்கும் இடத்தில் மட்டுமல்லாமல் குடியேறிய நாடுகளில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை முதலானவற்றில் பிடிவாதமாக இருப்பார்கள்.

3) உலக ஆதிக் குடிமக்களாக யூதர்கள் தம்மைக் கருதுகின்றனர். இவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் கல்வி கற்பது, தம் யூத இன மக்களில் ஒருவர் சிறிய ஒன்றைச் சாதித்தாலும் அவரை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்பது. பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறியாக இருப்பது - என்ற மூன்று கொள்கைகளை மூச்செனக் கருதுவது.

நன்றி : இலண்டன் சுடரொளி இதழ்

ஆக இன்றைய சூழலில் நம் தமிழர்கள் எங்கு இருந்தாலும் - இனப்பெருமையைக் காப்பதும், தமிழ்க் கல்வி கற்று நுட்பத்தை வளர்த்தெடுப்பதும், பொருளாதார வளர்ச்சியில் முனைப்போடு செயற்படுவதும் - இலக்காகக் கொண்டு செயற்பட முயலவேண்டும். இது நம்மை வளர்த்தும்.




கி.பி. 2035 இல் தமிழன் பெயர் எப்படி இருக்கும்.

தமிழில் பெயரிடுவோம்


நாரண திருவிடச் செல்வன், கூலிம், கெடா, மலேசியா.

தமிழ்ப்பற்று மிக்கவர் செல்லமுத்து. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதிலே என்று பாடினாரே பாரதியார் அதுபோல இன்பத்தேன் போன்ற இனிய பெயர்களான - தேன்மலர், முல்லை, பாலை, இனியள், அமுதன், கனியமுது இப்படித் தான் பெற்ற செல்வங்களுக்கு தூய தமிழில் பெயர் வைத்து மகிழ்ந்தார் செல்லமுத்து.

தூய தமிழ்ப் பெயர்களைத் தாங்கி வளர்ந்த பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அர்த்தினி, வினிஸ்தர், நிவாஷனி, நீதீஸ், கிஷன் என்றெல்லாம் பெயர் வைத்தனர். தந்தையிடம் இருந்த மொழிப்பற்று பிள்ளைகளிடம் இல்லை.

ஒருவர் யார் என அடையாளங்காட்டுவது அவர் பெயரே. லிம்கிட் சியாங் என்றால் அவர் ஒரு சீனர். பூத்தே பின் அப்துல்லா என்றால் அவர் ஒரு மலாய்காரர். பீட்டர் ஜோன்சன் என்றால் அவர் ஆங்கிலேயர் - மாணிக்கம் என்றால் அவர் தமிழர்.

இப்படி ஒருவர் தாங்கியுள்ள பெயரானது அவர் யார் எம்மொழிக்குரியவர் என்பதை அடையாளங்காட்டும்., ஒருவர் பெயர் வினிஸ்டன் என்றிருக்கிறது. இவர் யார்? யாருக்குமே தெரியாது. ஆனால் உண்மையில் அவர் ஒரு பச்சைத் தமிழர். அருந்தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்.

அவர் பெற்றோர் புதுமை இனிமை என்று எண்ணி அவர்களாகவே சொந்தமாக உருவாக்கிய வினிஸ்டன் என்ற ஒரு பெயரைத் தனது அருமை செல்வத்திற்கு சூட்டப்போய் அவர்கள் மகன் தமிழன் என்னும் அடையாளத்தை இழந்து நிற்கிறார்.

தமிழை வளர்க்க வேண்டிய தமிழை உயிரென மதிக்கவேண்டிய, தமிழ்மொழியைக் கண்கள் எனப் பாதுகாக்க வேண்டிய தமிழர்கள் பொருள் புரியாத புதுப் புது பெயர்களை உருவாக்கிப் பிள்ளைகளுக்கு வைத்து வருவது தமிழ் மொழியை சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

குழந்தை பிறந்ததும் சோதிடரைத் தேடிப் போவது நடைமுறையில் உள்ளது. சோதிடர் பிறந்த நேரத்தை வைத்துப் பிள்ளைகளுக்குப் பெயர் ர - வில் தொடங்க வேண்டும், டி - யில் தொடங்க வேண்டும் என்பார் எனவே தெய்வானை, தேவிகா, தேவன், என்று பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தனர்.

ஆனால் இன்றைய பெற்றோரின் சிந்தனையில் ஒருமாற்றம் டி - யில் தானே பெயர் தொடங்க வேண்டும். வைத்துவிட்டால் போச்சு - என்று தெவினிஸ், தெனிவிகா, தேவின் என்றெலலாம் ஏற்கெனவே வழங்கிய பெயர்களைப் புதுப்பித்துள்ளனர்.

இன்றைய தமிழ்ப் பெற்றோர் அகராதியில் இல்லாத உலகில் வழங்கும் 2000க்கும் மேற்பட்ட மொழிகளில் உருபெருக்கியைக் கொண்டு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பொருளற்ற பெயர்களைத் தமிழ்க் குழந்தைகளுக்கு வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களின் பெயர்கள் பிறப்பாவணத்தில் இப்படிப் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

அகஷதா த,பெ லிங்கம்
யுதிஸ்வர் த.பெ சுப்பிரமணியம்
கமலசலன் த.பெ. சுந்தரம்
சமிஸ்மா த.பெ.ராமசாமி
சுவானிஷி த.பெ. கிருஷ்ணா
நெகிலா த.பெ. கணேசன்


இது 2006 ஆம் ஆண்டில் உள்ள நிலை. பிள்ளைின் பெயர் தமிழாக இல்லாவிட்டாலும் தந்தையின் பெயர் லிங்கம் என்று இருப்பதால தமிழ்ப்பிள்ளைதான் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அகஸ்தா த.பெ. அதர்ஷ்
சுவானிஷா த.பெ. யுவன்ரட்சன்
பிரிதோஷ் த.பெ. சுஜாத்தான்
கமலசலன் தபெ. சுரதகீர்ததி
லெவிஸ் த.பெ. வத்தி
சுவஸ்மா த.பெ. தேபதிஸ்பன்
கிவிஸ்தா த.பெ. அதிர்ஸ்டன்


என் குழந்தை அதற்கு எப்படிப்பட்ட பெயர் வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நண்பர்.

நான் என்ன சொல்ல ?

மொழிப்பற்று இல்லாத ஓர் இனம் தமிழினம். சீனர்களைப் பார்க்கிறேன். அவர்கள் தங்கள் தாய்மொழியாம் சீன மொழி மீது கொண்டுள்ள அளவிலாப் பற்றினைக் கண்டு வியந்து போகிறேன்.

தமிழர்களையும் சீனர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து நொந்து போகிறேன். தமிழர்களிடம் தமிழ்ப்பற்றை, தமிழுணர்வை ஊட்டிட கடந்த பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீர் போலாயின.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் டத்தோ பண்டிதன் தொடங்கியுள்ள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், மலேசிய திராவிடர் கழகம், தமிழ் இளைஞர் மன்றம், தமிழை முன்வைத்து இயங்கும் ஏனைய அமைப்புகளும் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தமிழில் பேசுவோம் என்று ஓர் இயக்கம் தொடங்கியது போல தமிழில் பெயரிடுவோம் என்னும் பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்க வேண்டும். அதன் வழி தமிழர்கள் மனம் மாறி தங்கள் அருமைச் செல்வங்களுக்கு நல்ல தமிழில் பெயர் வைக்கும் நிலை உருவாகவும், தமிழன் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடாமல் பாதுகாக்கவும் முடியும் என எண்ணுகிறேன்.

நன்றி : மலேசிய நண்பன் நாளிதழ் (17-7-06)




சீனம் செழிக்கிறது - மாவேவை மறக்காத மக்கள்.
சா. சந்திரசேகரன்

சீனத்துப் பழமொழி மரம் நடுதல், நூல் எழுதுதல், வாரிசை உருவாக்குதல். இவற்றில் மரம் நடுதல் எங்கும் நீக்கமற காணமுடிகிறது. 10 அடிக்கு ஒரு மரம் சாலை ஓரங்களில் தவறாது நடப்பட்டுள்ளது. புதிதாகப் போடப்பட்டுவரும் சாலைகளில் 6,7 அடி உயரமுள்ள மரக் கன்றுகள் நடப்பட்டு அதற்கு கொம்புகளால் முட்டுக் கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கும் காட்சியினைப் பார்க்கும் பொழுது அவர்களின் பழமொழிப்படி மரம் நடுதலை அரசு மிக முகாமையான கடமையாகக் கொண்டு செயல்படுவது தெரியும்.

எவ்வளவு தொலைநோக்கான அறிவியலான வளர்ச்சித் திட்டம். ஏனெனில் மழையின் கருவே இந்தத் தருக்கள் தான். விவசாயிகளுக்கு பண்ணைகள் அமைத்துக் கொடுத்து அதன் அருகே ஒரே மாதிரியான வடிவம் கொண்ட பல ஆயிரக்கணக்கான வீடுகளை அவர்களுக்குக் கட்டிக் கொடுத்துள்ளார்கள். மிகப் பெரிய அளவில் வேர்க்கடலை பயிரிடப்படுகிறது. சீனமக்கள் வேர்க்கடலையை அவர்களின் உணவு வகைகளில் விரும்பி உண்கிறார்கள்.

சீன தே

சத்தின் இத்தனை வளர்ச்சிக்கும் மக்களின் மகிழ்ச்சிக்கும் வறுமைச் சுவடுகளே காணப்படாத ஏற்றத் தாழவற்ற சமத்துவ நிலைக்குமான காரணம் மாவோவின் புரட்சிக் கருத்துகளும் செயற்பாடுகளும் மக்களைப் பண்படுத்திய விதமேயாகும். மாவோவின் சிந்தனை மார்க்சியச் சிந்தனையைச் சார்ந்ததே. இலெனினுடைய தத்துவமும் அஃதே. ஆனால் மாவே அவர்கள் கிராமத்திலிருந்து தன்னுடைய புரட்சிக் கருத்தினைத் தொடங்கி விதைத்து விவசாயிகளை ஒருங்கிணைத்து நகரத்தைக் கைப்பற்றி ஆம்சியாங்கே சேக்கின் கொடிய பூர்ஷ்வா சர்வாதிகாரத்தை ஒழித்துக் கட்டி ஆட்சியமைத்தார். மாவோ இன்றும் நிற்கிறார்.

மற்றைய நாடுகளில் மனிதரிடையே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளும், எத்துகளும் ஏமாற்றுகளும் சாதி மத மோதல்களும் அதன் விளைவான கலவரங்களும் பெருத்துள்ளன. உலகமயம், தாராளமயம், தனியார் மயம் போன்ற சூலாயுதங்களால் வலுத்தவர்கள் வாய்ப்புகள் பெறுவதும் வலுவற்றவர்கள் விதியே என்று வாழ்ந்து மறைவதுமே இன்றைய நிலை. அதுமட்டுமன்றி அரசு அதிகாரங்களை ஏதோ ஒரு வழியில் பெற்றுக் கொண்ட அரசியலாளர்கள் பணம் பதவி தன் குடும்பநலம் என்ற லட்சியங்களையே கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலததையே பார்க்க முடிகிறது. ஆனால் சீன தேசத்திலோ இப்படிப்பட்ட அவலங்களைக் காணவும் அறியவும் முடியவில்லை.

நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்தியா சென் அவர்களின் கருத்துப்படி வெறும் தனிநபர் உற்பத்தித் திறனையும் உழைப்புத் திறனையும் தனிநபர் நுகர்வையும் மட்டுமே வளமைக்கான அளவு கோலாகக் கொள்ளாமல் பரந்த நோக்கொடு தனிநபர் கல்வியறிவு, வாழ்நாள் அதிகரிப்பு, ஊட்ட உணவு, உறைவிடம், சுயமரியாதை வாழ்வு, சுகாதாரம் தேவைக்கேற்ப வருமானம் போன்றவற்றையே வளமையின் அளவுகோலாகக் கருதப்படவேண்டும் என்று கூறுவார். இந்த இத்தனையும் சீனதேசத்து மக்களின் வாழ்க்கையில் , வாழும் முறைகளில் அவர்களின் அணுகுமுறைகளில் காணமுடிகிறது.

அங்கே கடவுள்கள இல்லை, மதங்கள் இல்லை, சாதிகள் இல்லை சடங்குகள் இல்லை.. எனவே மோதல்கள் இல்லை. மகிழ்ச்சியையும் வளர்ச்சியையுமே எங்கணும் காணமுடிகிறது. சீன தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அந்நாட்டு மக்களின் தாய்மொழிப் பற்றுணர்ச்சியும், தேசிய இனப்பெருமித உணர்ச்சியும், எழுச்சியும், ஈகம் செய்த மாவோ போன்ற தலைவர்களின்பால் நன்றியுணர்ச்சியும் கொண்டிருப்பதே காரணம் ஆகும்.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் - அக்டோ 2006




மனித சக்தி
அமெரிக்காவின் சாப்ட்பேர் பள்ளத்தாக்கில் நிறைந்திருக்கிறார்கள் நம் தமிழர்கள். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம. போன்ற உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறான் தமிழன். கந்தகத்தை மூலதனமாக்கி முளைக்கிறான் சிவகாசித் தமிழன். மனித சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது திருப்பூர். தமிழர்கள் திறமை மிக்கவர்கள் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது உலகம்.

ஆனால் இன்னொரு முகமோ நடுங்க வைக்கிறது. நூறு ரூபாய் இலவச வேட்டி சேலைக்கு உயிரைப் பணயம் வைக்கிறார்கள். வெள்ள நிவாரணம் என இரண்டாயிரம் ரூபாய்க்கு மதிபட்டுச் சாகிறார்கள். இலவசங்களுக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள்.

நெற்களஞ்சியம் என்று யானை கட்டிப் போர் அடித்த வரலாறு சொல்லும் தஞ்சை விவசாயிகள் நத்தைகளைப் படித்து உண்ண வேண்டிய அவலம் ஏன் வந்தது. ஊருக்குச் சோறு போட்ட மண்ணில் பட்டினிச் சாவுகளும், வறுமைக்குப் பயந்து தற்கொலைகளும் நிகழ்வது ஏன் ? தகுதியான இளைஞர்களுக்குப் பற்றாக்குறை அதிகமாவது ஏன்? புதிய தொழில் முனைப்புத் திட்டங்கள் அதிக அளவில் தமிழகத்தில் இல்லாமல் போனது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை - தொலைநோக்குப் பார்வை இல்லாமையும், வெகுசிலரின் சுயநலங்களுமே.

மனித சக்தியைப் பயன்படுத்துவதில் சீரான வேகம், சீரான வளர்ச்சி பற்றி ஆள்பவர்களும் ஆளப்படுவோரும் சிந்திப்பதே இல்லை. படிப்படியான நிரந்தரத் தீர்வை சிந்திக்காமல் எப்படியாவது இன்றைய பிரச்சனையைச் சமாளித்தால் போதும் என்கிற மனோபாவமே ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்க ஏற்ற உணவை உற்பத்தியைப் பெருக்க இயந்திரங்களையும், செயற்கை இரசாயனங்களையும் பயன்படுத்தியதன் விளைவு இன்று விதைகளைக் கூட வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளானோம். கிணற்றுப் பாசனத்தை ஊக்கப்படுத்தியது அரசு, தொலைநோக்கு இல்லாத அந்த வளர்ச்சி இன்று நிலத்தடி நீர் தீர்ந்ததும் நொண்டியடிக்கிறது.

உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்கிற பிரிவினையை ஏற்படுத்தி உடல் உழைப்பைக் கேவலப்படுத்திவிட்டோம்.

கிராமங்களை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு நகரங்களை சீராட்டி வளர்த்தது வரலாற்றுப்பிழை. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி வந்ததால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் அடையாளம் இல்லாமல் அழிந்து போயின. மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி அக்கறை இல்லாமல் பன்னாட்டு மூலதனங்களை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் அப்படியே அனுமதிப்பது சமகாலத்தில் நிகழ்கிற சர்வநாசம்.

கண்ணுக்கு முன்னால் வேலையையும், வேலை பார்க்கும் சமூகச் சூழலும் மாறிக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் அளவுக்கு அதிகமான ஊதியம், வேலை வாய்ப்பை பெருக்குவது என்பது ஆயிரக் கணக்கானோர் பணிபுரியும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சில நூறு பேர் வேலை பார்க்கும் பி.பி.ஓ வைத் திறப்பது நியாயம் இல்லை

வெளிநாடுகளிலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்து நாம் அவர்களின் பொருள்களைப் பயன்படுத்துகிற நுகர்வோர்களாக மட்டுமே இருக்கக்கூடாது. மனித சக்தியைப் பயன்படுத்தித் தொழில் நுட்பம் மற்றும் சிறு தொழில்களைப் பெருக்க வேண்டியது அவசர அவசியம்.






ஆதித்தனாரும் அருந்தமிழ்த் தொண்டும்.
முனைவர் பா.வளன் அரசு,

தமிழன் வார இதழ் வாயிலாகத் தமிழ் முழக்கம்.

23-8-1942 அன்று வெளியிடப்பெற்ற தமிழன் முதல் இதழில் தம் நோக்கத்தை எடுத்தியம்பியுள்ளார். தமிழன் இதழ் தமிழரால் தமிழருக்காக நடத்தப்படுகிறது. தமிழனை நடத்தும் பணியை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் - உடல் மண்ணுக்கு உயர் தமிழுக்கு - என்ற நோக்கத்துடன் செயல்படுவார்கள். தமிழ் பெரிது. தமிழ் இனம் பெரிது. தமிழ்நாடு பெரிது - என்பது நமது கொள்கை. தமிழ் இசையை வளர்க்க வேண்டும் என்பது நமது குறிக்கோள். தமிழர்கள் ஒன்றுகூடி ஏற்படுத்தும் அரசை வளர்த்துவது. பிறநாட்டாரும் மதிக்கும் வல்லரசாக உருவாக்க வேண்டும். என்பது நமது நோக்கம். பாவேந்தர் கூறியது போன்று

மனிதரில் நீயுமோர் மனிதன் - மண்ணன்று
இமைதிற, எழுந்து நன்றாய் எண்ணுவாய்
தோளை உயர்த்து, சுடர்முகம் தூக்கு
மீசையை முறுக்கி மேலே ஏற்று
விழித்த விழியில் மேதினிக்கு ஒளிசெய்.
நகைப்பை முழக்கு. நடத்துக உலகத்தை.

என்று தமிழர் அனைவரையும் எழுச்சியுணர்வு கொள்ளத் தூண்டினார்.

தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு - என்று பல்லாற்றானும் பைந்தமிழ்த் தொண்டில் ஈடுபடலானார். நாம் தமிழர் இயக்கம் தொடங்கியபோது தமிழ்க் கொடி என்னும் வார இதழையும் தொடங்கி, உயிர்த்துடிப்பும் கொள்கைப் பிடிப்பும் மிக்கவராக அனைவரையும் உருவாக்கினார். நாம் தமிழர் இயக்க அரசியல் மாநாட்டில் தமிழ் இலக்கிய அறிஞரை அழைத்துப் பேசவைத்துச் சிறப்புச் செய்தார். 1967 ஆம் ஆண்டு இலக்கியத்தில் நாம் என்ற தலைப்பில் என்னையும் பேணிப் போற்றிச் சிறப்புரையாற்றச் செய்தார். தமிழ்க் கொடி - இதழில் முழுமையான பொழிவை அச்சிட்டுப் பாராட்டினார்.

நன்றி : எழுகதிர் -செப்தம்பர் 2006




திருச்சிற்றம்பலத்தில் தேவாரத் தமிழுக்குத் தடை
சிதம்பரம் என்றாலே நினைவுக்கு வருவது நடராசனை வணங்கச் சென்ற நந்தனாரை ஆரியக் கும்பல் உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூரச் செயல்தான். அது போலத் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடப் போராடிவரும் பெரியவர் ஆறுமுகசாமியையும் கொலை மிரட்டல் விடுத்துத் தடுத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர் ஆரியர்கள். 1997 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்திரவு போட்ட பிறகும், அரசு ஊழியரை வேலைசெய்ய விடாமல் தடுத்தும், வருமானத்திற்கு முறையான கணக்குக் காட்டாமலும், உண்டியல் வைப்பதை மறுத்தும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது ஆரியக்கும்பல். தமிழில் பாட அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டித் தடை விதிக்கிறது காவல் துறை. ஆனால் பால்யவிவாகத் தடைச்சட்டம் அமுல் இருந்தும் தமக்கு மட்டும் விதிவிலக்கு என்று கூறிக்கொண்டு சிறுவயது குழந்தைகளைச் சீரழிக்கும் தீட்சதர்களை வேடிக்கை பார்க்கின்றனர். நீச பாசை தமிழில் பாடினால் நடராசனுக்குத் தீட்டுப்பட்டுவிடும் என்று தமிழை இழிவுபடுத்தி, சாதித் தீண்டாமையை நிலைநாட்டுகின்றனர்.

அனைத்தது சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் கொண்டுவந்து தந்தை பெரியாரின் நெஞ்சிலிருந்த முள்ளை அகற்றுவதாகக் கூறும் தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட திைல்லை நடராசன் கோவிலில் தமிழர் ஒருவர் தேவாரத்தைத் தமிழில்பாட தடைக்கல்லாக இருக்கும் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை முறியடிப்பாரா?

நன்றி : வானவில் - செப் 2006, சிந்தனையாளன் - அக்டோபர் 2006.




சினிமா பற்றிய ஒரு வினாவுக்கு அளித்த விடை.

சங்கமித்ரா விடையளிக்கிறார் இதழில் சங்கமித்ரா

தாங்கள் சினிமா பார்ப்பதில்லை, சினிமாவைச் சாடுகிறீர்கள், ஆனால் சினிமா பற்றியகேள்விகளுக்குப் பட் பட் என்று பதில் எப்படி - வினாத் தொடுத்தவர் நா.மாசிலாமணி, செயங்கொண்டம்.

சினிமா தமிழ் மக்களை நாசம் செய்த ஊடகம். தமிழகத்தின் 5 முதல்வர்கள் சினிமா உலகிலிருந்து வந்திருக்கிறார்கள். தமிழ்க் குழந்தை சினிமாச் சேற்றில் விழுந்து கிடக்கிறது. நாம் கரையில் நின்று கத்தினால் போதுமா? நாமும் சேற்றில் விழ வேண்டியதுதான். சினிமா நிறைய பார்ப்பதில்லை. நேரம் இல்லை. பேசப்படுகிற விருது வாங்குகிற படங்களைப் பார்த்து விடுவது. பெங்களூர், கோவை, திருச்சி போன்ற ஊர்களில் சினிமாவில் மூழ்கிக் கிடக்கும் நண்பர்கள் 1000 சிடி போல வைத்திருக்கிறார்கள். வெளியூர் போனால் ஒரே இரவில் 3, 4 படம் பார்த்து விடுவது. கன்னட - மளையாள - சந்திரமுகி பிளாக் எல்லாம் இப்படித்தான் பார்த்தேன். தமிழக மக்கள் முதுகில் மிளகாய் அரக்க அலையும் சினிமா உலக மேதைகளைத் துவட்டி எடுப்பது என் கடமை. அந்த வேலையை ஒழுங்காகச் செய்யத் தயாரிப்போடு இருக்கணுமில்லையா? மூன்றாம் வகுப்புத் தேறாத மேதைகள் தினமலர் வழி அறிவுரை வழங்கும் இழிவை எப்படித் துடைப்பது. இப்படித்தான்.

நன்றி : சங்கமித்ரா விடையளிக்கிறார் இதழ் - செப் 2006




காட்டிக் கொடுத்த சக்கரம்


திருச்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் தமிழ்ப் பேராசிரியர் வகுப்பு என்றால் எனக்கு மிகவும் ஆர்வம். ஒரு நாள் வகுப்புக்கு வர நகரப் பேருந்து கிடைக்கவில்லை. அன்று முதல் வகுப்பு தமிழ்ப் பேராசிரியருடையது. என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எங்கள் கல்லூரி மாணவர்கள் மூவர் காரில் வந்து கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் நிறுத்திக் காரில் ஏற்றிக் கொண்டனர். குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடலாம் என நினைத்தபோது, அவர்கள் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு தாமதமாகக் கல்லூரிக்குக் காரை ஓட்டி வந்தனர். வகுப்பு தொடங்கி பதினைந்து நிமிடம் ஆகிவிட்டது.

காரில் வரும்போதே, பேராசிரியர் தாமதத்திற்குக் காரணம் கேட்டால் கார் சக்கரம் பஞ்சர் என்று சொல்லவேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டோம்.

நாங்கள் வகுப்பு வாசலில் வந்து நின்றோம். பேராசிரியர் வழக்கம்போல் ஏன் தாமதம் என்றார். நாங்கள் காரில் வந்தோம். வரும் வழியில் டயர் பஞ்சர் என்றோம்.

உடனே பேராசிரியர் நான்கு பேப்பர் துண்டுகளை எடுத்து, ஒவ்வொன்றிலும் ஒரு கார் படம் வரைந்தார். அடுத்து என்னைக் கூப்பிட்டு காரின் எந்தச் சக்கரம் பஞ்சர் என்பதைக் குறியிட்டுக் காட்டச் சொன்னார். நான் காட்டிய பிறகு ஒவ்வொருவராக வரச்சொல்லி, படத்தைக் கொடுத்து அவர்களிடமும் காட்டச் சொன்னார்.

கடைசியில் நான்கு படத்தையும் வகுப்பில் காட்டினார். நான்கு பேரும் நான்கு சக்கரத்தைத் தனித் தனியாகக் குறியிட்டுக் காட்டியிருந்தோம். வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது. நால்வரும் வெட்கித் தலைகுனிந்தோம். அன்றிலிருந்து பொய் சொல்வதால் ஏற்படும் தீமை பற்றி நன்றாக உணர்ந்து கொண்டோம்.

நன்றி : விகடகவி - அக்டோபர் 06 பல்சுவை இதழ்.




நம்பிக்கைத் துரோகம்



மாந்தனைப் பேசும் விலங்கு என்பார் அறிவியலாளர். ஆனால் எல்லா விலங்குகளுமே தத்தம் குழுவிற்குள் சில வேறுபாடான ஒலிகளை எழுப்பிப் பேசிக் கொள்கின்றன என இப்பொழுது கண்டுபிடித்திருக்கிறார்கள். மாந்தன் சிந்திக்கத் தெரிந்தவன் என்பார்கள். ஏன், விலங்குகளும் தான் சிந்திக்கின்றன. அவை தம் குட்டிகளை - உறவுகளை கண்டு கொள்கின்றன. தம் பாலுறவுத் தோழனை அடையாளங்கண்டு இணைவழைச்சில் ஈடுபட்டுக் குடும்பம் நடத்துகின்றன. தம் குஞ்சுகளைக் காக்கப் பருந்துக்கு இணையாகப் பறப்பதில்லையா கோழி?

இப்படிப் பறவை- விலங்குளிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறான் மாந்தன். தன்னால் இயலாமல் போகும்போது நாயின் மோப்பத் திறனைக் கொண்டு, புவனங்களை அறிந்து கொள்கிறான் மாந்தன். இன்றைக்கும் கூட, ஆயினும் இவ் எல்லாவற்றிலுமிருந்தும் வேறுபட்டு நிற்பதால் சில சிறப்பியல்புகள் மாந்தனுக்கு மட்டுமே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. என்னதான் சிறப்பியல்புகள் மீயுயர்ந்து நின்றாலும் தன் வயிற்றுப் பசிக்கும் உடற்பசிக்கும் அலைகின்ற அலைவிருக்கிறதே அது எல்லை கடந்த ஒன்றாயிருக்கக் காண்கிறோம்.

இவ்விரு பசிகளையும் அடித்தளமாகக் கொண்டே, அனைத்துயிர்களும் இயங்குகின்றன வென்றாலும் மாந்தனின் இயக்கம் மாப்பெரிது. அது நாடுபிடிக்கவும் பொருள் குவிக்கவும் எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்குவதில்லை. என்னதான் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு எனப் பாசாங்கு செய்தாலும், பிறரை - ஏன் தன் இனத்தையே கூட ஏமாற்றவும் பகைத்துக் கொள்ளவும் மாற்றாரிடம் காட்டிக் கொடுக்கவும் முன்னோடி நிற்பதை வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாந்தனின் நிலையுணர்ந்து தமிழன் மேலெழச் சிந்திக்க வேண்டும்.

நன்றி : தேமதுரத் தமிழோசை - செப் 2006.





தடைபோடத் தடையுண்டோ ?



மது விற்பனையின் மூலம் ஆண்டுக்கு 10,000 கோடி வருவாய் கிடைப்பதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. நிதிச்சுமையைக் காரணம் காட்டி ஒவ்வொரு அரசும் மது விற்பனையை அதிகரிக்க அக்கறைப்படுகிறதே யொழிய, அதைத் தடை செய்வதைப் பற்றி சிறிதேனும் சிந்திப்பதில்லை.

முன்பெல்லாம் ஊருக்கு ஒரு கள்ளுக்கடையோ, ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு சாராயக் கடையோ இருந்த காலம் மலையேறிவிட்டது. தற்பொழுது ஒயின்ஷாப் என்கிற நாமகரணத்தோடு தெருவிற்கு ஒன்றாய் அணிவகுத்து நிற்கும் மதுக்கடைகளைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. பையனுக்கு பீர் குடிக்கக் காசுகொடுக்கும் அம்மா, தனக்கு கம்பெனி குடுப்பதற்காக மனைவியையே மது குடிக்க பழக்கப்படுத்தும் கணவன், விருந்து வைபவம், கல்யாணம் கச்சேரி என எந்த நிகழ்ச்சியானாலும் அங்கு தவறாமல் மது பரிமாறப்படுவதும், டிஸ்கொதே போன்ற இரவு கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆண், பெண் பேதமில்லாமல் மதுக் கோப்பைகளோடு தள்ளாடுவதும் இன்றைய சமுதாயத்தின் இயல்பாகி வருகிறது.

மது குடிப்பவர்களைக் கீழானவர்களாக பாவித்த மனோபாவத்தில் இப்போது சீழ்பிடித்துவிட்டது. யார்தான் குடிக்கல என்கிற சமாதான வார்த்தை பேசி இளைய சமுதாயத்தை இருட்டுக்குள் அழைத்துச் செல்லும் தவறான வழிகாட்டிகளாகப் பலர் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றனர்

நன்றி : பயணம் இதழின் தலையங்கம்


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061