வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 1 - 09 - 2006



தோல்கள்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது ஹைகூ கதைகள் நூலில்

பாம்பு தோலைக் கழற்றி வைத்துவிட்டுப் புறப்பட்டது.
ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அது போனது.
அங்கே நின்ற தனியன் ஆட்டிடம் "அதோ பார்... பாம்பு உன்னுடையவர்கள் இருக்கும் இடத்தை நோக்கித்தான் போகிறது, நச்சுப் பாம்பு - பல் பட்டாலே போதும்..." என்று கூறியது சேவல்.
"அப்படி ஒன்றும் நடந்துவிடாது... பாம்பு தோலைக் கழற்றிப் புதிதாய்ப்
பிறந்திருக்கிறது..." என்றது தனியன் ஆடு.
சிறிது நேரத்தில் -
ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது.
ஓசை வந்த திசை நோக்கித் தனியன் ஆடும் சேவலும் ஓடின.
அங்கே -
பாவம்.. அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்குப் பலியாகிச் செத்துக் கிடந்தன.
சேவல் சொல்லியது -

" பல்லைக் கழற்றாத பாம்பு
தோலைக் கழற்றி என்ன ?
வாலைக் கழற்றி என்ன ? "

நன்றி : அருணனின் இளங்கதிர் - 15-8-2006




தமிழ் வழிக் கல்வி

கல்வியாளர் திருமிகு. எஸ்.எஸ்.இராஜகோபாலன்

கடந்த முப்பதாண்டுகளில் தமிழகத்தில் ஆங்கிலவழிப் பள்ளிகள் பட்டிதொட்டியெல்லாம் முளைத்து விட்டன.

இன்று மெட்ரிக் பள்ளிகள் 4000 க்கும் மேலேயும், மழலையர் தொடக்கப்பள்ளிகள் 20,000 க்கும் அதிகமாகவும் ஆங்கில வழிக் கல்வி அளித்து வருகின்றன. இவற்றில் அரசு அங்கீகாரமே பெறாத பள்ளிகளும் அடக்கம். தமிழ்வழிக் கல்வி கேவலமானது, பயனற்றது என்ற எண்ணத்தை இவை மக்களிடையே ஏற்படுத்தியிருப்பது தமிழகத்தின் மிகப் பெரிய சோகம்.

இந்நிலையை மாற்றியமைக்கும் முயற்சியாக, தமிழக ஆர்வலர்கள் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல் இடங்களில் தமிழ்வழிக் கல்விக்கூடங்களைத் தொடங்கியுள்ளனர். அவற்றில் பலவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்பள்ளிகளில் பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பள்ளி நடைமுறைகள் அனைத்தும் மாணவரது பன்முக வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆசிரியா -மாணவர் உறவு இங்கே மிகவும் இனிமையாக உள்ளது. இப்பள்ளிகளை அரசும் பெற்றோரும் முன்மாதிரிப் பள்ளிகளாக எடுத்துக் கொண்டால் தமிழகக் கல்வி சிறப்பானதொரு இடத்தை அடையும்.

ஆனால் இவற்றிற்கு அரசு உதவி ஏதும் கிடையாது. மாணவரிடம் குறைந்த கட்டணமே பெறப்படுகிறது. எனவே, ஆசிரியருக்கும் குறைந்து ஊதியம்தான். இந்தியாவிலேயே தாய்மொழிவழிக் கல்வி அளிக்கும் பள்ளிகளுக்கு மானியம் மறுக்கப்படுவது தமிழகத்தில் மட்டுமே எனும்போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

இப்பள்ளிகளில் படிப்பவர்கள் எளிய குடும்பத்துப் பள்ளைகள்தான். தமிழ்வழிக் கல்வியைக் கட்டணமில்லைக் கல்வியாகவும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கிடவும் தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும். முதல்வரின் பார்வைக்கு இப்பிரச்சனையைக் கொண்டு செல்லும் பொறுப்பு அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு.

நன்றி : புதிய ஆசிரியன் - ஆகஸ்ட் 2006




குளிர் பானமா ? நச்சுப் புட்டியா ?

நாட்டின் பல்வேறு மாநிலங்களின் 25 வெவ்வேறு உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்ட கோகோ கோலா மற்றும் பெப்சியின் 11 வகைக் குளிர் பானங்களின் 57 சாம்பிள்களைக் கொண்டு வந்து சோதனை நடத்தியது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) இதில் இந்திய தர நிர்ணயம் (Nureau of Indian Standards) நிர்ணயித்திருப்பதைவிட 24 மடங்கு அதிகமாகப் பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு இருப்பதாகவும் 2003 பெப்ரவரியில் சோதனை செய்தபோது இருந்ததைவிட அதிகமாக ஒவ்வொரு குளிர்பானத்திலும் 3 முதல் 6 எண்ணிக்கையிலான பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெப்டாகுளோர் 71 மடங்கு, லின்டைன் 54 மடங்கு குளோர் பைரிபாஸ் 47 மடங்கு அதிகமாக உள்ளது. இவை கோகோ கோலாவில் 27 மடங்கு அதிகமெனில் பெப்சியில் 30 மடங்கு அதிகமாக உள்ளது.

இக்குளிர் பானங்களில் இருக்கும் இயற்கைக் கொல்லி எனப்படும் டி,டி,டீ, பூச்சிக் கொல்லியால் ஆண்மைக்குறைவு ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும். கர்பிணிகளின் கர்ப்பம் கலையக்கூடும். விண்டேன் ரத்தத்தில் கலப்பதால் கல்லீரல், சிறுநீரகம், ஆகியவற்றின் இயக்கம் பாதிக்கப்படும். இத்துடன் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. குளோர் பைரிபாஸ் எனும் பூச்சிக் கொல்லி மருந்து மனித மூளையைப் பாதித்து பக்கவாதத்தை உண்டாக்கிவிடும். ஹெப்டாகுளோர் மிகவும் ஆபத்தான ஒன்று என மத்திய அரசு அதை இந்தியாவில் தடை செய்துள்ளது. மாலத்தீயான் என்னும் மருந்தால் மரபணு நோய்கள் அதிகம் உண்டாகும்.

நன்றி : மனித உரிமைக் கங்காணி - செப்டம்பர் 2006




என்று மேலெழுவான் எம் தமிழன் ?
புகையிலை ஒரு கொடிய நஞ்சு. உலகில் ஆண்டுக்கு 50 இலட்சம் பேரை இது கொலை செய்கிறது. புகையிலையின் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் இன்று உலகிற்கே வழிகாட்டியாக விளங்குகிறது இந்தியா. மாண்புமிகு மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் தலைமையில் இந்திய நல்வாழ்வுத் துறையானது துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சிறப்புமிக்க பன்னாட்டு விருது இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளுக்கு அமெரிக்கப் புற்றுநோய்த் தடுப்பு மையம் அனைத்துலக அளவிலான லூதர் டெர்ரி விருதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கி வருகிறது. 2006 ஆம் ஆண்டிற்கான விருது மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். (நன்றி : பசுமைத்தாயகம் சுற்றச் சூழல் இதழ் - ஆகஸ்ட் 2006)

புகையிலையால் கேடு விளையும் என்பதை உணர்ந்தும், இன்றைய தமிழர்கள் புகையிலைப் பொருள்களான, சிகிரெட், பீடி, சுருட்டு, மூக்குப்பொடி, புகையிலை, வாயில் போட்டு சுவைக்கும் புகையிலைப் பொருள்கள் என பல்வேறு வகையான பொருள்களை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். புகைக்கும் பொழுது புகைப்பவரைவிட புகைக்காமல் அவரோடு இருப்பவரும் அந்தத் தாக்குதலுக்கு ஆளாகிறார். இவையணைத்தும் தெரிந்தும், பெட்டிக் கடைகளிலும், நடைபாதைகளிலும் - கட்டுக்கட்டாக விற்கனை ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதன் பழக்கத்திற்கு அடிமை. அவனுக்கு ஒரு பழக்கத்தை எப்படியாவது ஏற்படுத்திவிட்டால், அதிலிருந்து மீளமாட்டான. அதனுள்ளேயே அமிழ்ந்து சாவான். தீதும் நன்றும் பிறர் தர வாரா - இவனே ஏற்படுத்திக் கொள்வதுதான். புகையிலைப் பொருள்கள், மது வகைகள், என நேரடியான கொல்லிகளை மட்டுமல்ல, கோகோ கோலா, பெப்சி என குளிர்பானங்களின் வழியாகவும், பான்பராக், குட்கா என வாயடக்கிப் பொருள்களின் வழியாகவும் தமிழனின் மூளை மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.

என்று மேலெழுவான் எம் தமிழன் ?





பண்பாடு - சில கூறுகள்

(தமிழர்களுக்குக் கல்வி பரவியிருக்கிறது. பண்பாடு பரவவில்லை. பள்ளிகளில் நீதி வகுப்பு இப்போது நடப்பதில்லை. ஒவ்வொரு இதழிலும் சில பண்பாட்டுச் செய்திகளைச் சொல்லலாம் என்று)

(o) 1. வீட்டுக்கு வந்தவர் தானாகப் போகும்வரை அனுமதியுங்கள். கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி செய்ய வேண்டாம். அவசர வேலை இருந்தால் "மன்னிக்கனும் - அவசரமா வெளியில போகிறேன்" என்று சொல்லுங்கள்.

(o) 2. யார் வீட்டிலும் முன் தெரிவிப்பு செய்யாமல் நுழைந்து பரப்பிக் கொண்டு உட்காராதீர்கள்.

(o) 3. போனில் - பேச்சைத் தொடங்கியவர்தான் பேச்சை முடிக்க வேண்டும். வெச்சிடட்டுமா - என்று நீங்கள் கேட்காதீர்கள். பூத்தில் காசுபோட்டுப் பேசுகிறவனை வெச்சிடட்டுமான்னு அவமானப்படுத்தக் கூடாது.

(o) 4. சாலைகளில் சின்ன வாகனத்துக்குத்தான் முன்னுரிமை. நடையாளருக்குத்தான் வாகனத்தைவிட முன்னுரிமை. முன்னுரிமைப்படி நடத்துங்கள்.

(o) 5. பெண்கள் - குழந்தைகள் - ஊணமுற்றவருக்கு - வரிசையில் முன்னுரிமையும், நடத்துவதில் அன்பும் பரிவும் காட்டுங்கள்.

(o) 6. மொழி கோளாறுக்கும் - புரிதல் கோளாறுக்கும் மனிதர்களைத் தண்டிக்காதீர்கள்.

(o) 7. பேருந்தில் - மகளிர் நிற்கும் போது மகளிர் இருக்கையில் உட்கார்ந்து வருகிறவன் - அறிவும் மானமும் கெட்டவன். அவர்கள் இடம் கேட்டு சண்டை போட முடியாது என்று தானே இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்? இத் தவறை பெரும்பாலும் இளைஞர்களே செய்கிறார்கள்.

(o) 8. வீட்டுக்கு வருகிறவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது - நல்ல பழக்கம், என்றாலும் இப்போது அது சரியில்லை. அவர் கேட்டால் - மினரல் வாட்டர் அல்லது கொதித்து ஆறிய நீர் இருந்தால் கொடுங்கள். வடநாட்டில் பல இடங்களில் - அன்புடன் தரும் அசுத்த நீரை - கொடுத்தவர் மனம் கோணாமல் இருக்க - மீண்டும் மீண்டும் குடித்து எனக்குத் தொண்டை புண்ணானது.

(o) 9. ரயிலில் - பேருந்தில் பத்திரிகை, புத்தகம் இரவல் கேட்காதீர்கள். அப்படிக் கேட்க நேர்ந்தால் - பணிவோடு, வெட்க உணர்வோடு கேளுங்கள். படித்து முடிந்த உங்கள் பத்திரிகையை "பாக்கிறீங்களா" என்று நீங்களாக மற்றவருக்குக் கொடுங்கள்.

(o) 10. குண்டு உடம்புக்கு வெட்கப்பட்டு, பேருந்தில், ரயிலில் - இரட்டை இருக்கையில் ஒரு பாதிக்கு மேல் - மூவிருக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் ஆக்கிரமிக்காமல் இருங்கள். நீங்கள் தின்று கொழுத்து கிடப்பதற்கு மற்றவன் துன்பம், தண்டம் அனுபவிக்கக்கூடாது.

(o) 11. பொது இடங்களில் சள சள வென்று தெரிந்தவருடன் பேசி மூன்றாம் மனிதருக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். காற்று தண்ணீர் போல பொது அமைதியையும் மாசு படுத்தக் கூடாது என்பதை உணருங்கள்.

(o) 12. தயவு செய்து, பொருத்தருள்க, மன்னிக்கனும், என்ற சொற்களை உதவி கேட்கும்போது, உதவி மறுக்கும் போது கட்டாயம் பயன்படுத்துங்கள். பிறர் கால் கை - உடம்பில் இடிக்கும்போது தவறாமல் மன்னிப்புக் கேளுங்கள்.

(புண்பட்டுப் புண்பட்டு பெற்ற அனுபவத்தில் புண்படுத்தாமல் வாழ இன்னும் சொல்வேன் - சங்கமித்ரா )

நன்றி : ஒடுக்கப்பட்டோர் குரல் - ஆகஸ்ட் 2006.




தாய்மொழி,,,,
- - தமிழ்ப்பித்தன் - தாராபுரம் -

தாய்மொழியில் கற்பதுபோல் தவமும் இல்லை
தாய்நாட்டில் வாழ்வதுபோல் சொர்க்கம் இல்லை
வாய்ப்பந்தல் போடுவோர்க்கு வாழ்க்கை இல்லை
வம்புக்கும் ஆசைக்கும் சிறப்பு இல்லை
நோய்களிலே கவலைபோல வேறு இல்லை
நிம்மதிபோல் வேறுசெல்வம் உலகில் இல்லை
ஆய்ந்தறிந்த அறிவைவிடத் தெய்வம் இல்லை
அறிந்தவர்க்குத் துன்பமென்றும் இல்லை, இல்லை

நன்றி : எழுகதிர் - ஆகஸ்ட் 2006




ஊசிமுனை ஓட்டைச் சட்டம்
- பாத்தென்றல் முருகனடியான் - சிங்கப்பூர் -

கட்டாயம் தமிழைக் கற்கும்
கட்டளைக்கு வணங்கு கின்றோம்.
சுட்டாலும் சொரணை இல்லாச்
சோம்பேறித் தமிழன் கோவில்
தொட்டேறிப் பூசை செய்யுந்
துணைஆணை வாழ்த்து கின்றோம்.
பட்டாவால் மண்ணின் மக்கள்
பயனேந்தச் செய்தீர், வாழ்க.

ஒன்றுமுதல் ஐந்தாண் டுக்கும்
ஒண்டமிழ்கட் டாய மாக்கி
கண்டுதமிழ் அடிக்கல் லிட்டுக்
காத்தபின் ஆங்கி லத்தைக்
கொண்டுவரல் சிறந்த தன்றோ?
குலத்தமிழைப் புறக் கணிக்கும்
நண்டுகளின் கொடுக்கு டைக்கும்
நற்செயலாய் அமையு மன்றோ?

அறிவியலைக் கணிதம் சட்டம்
அகிலவர லாறும் மேவும்
பொறியியலை நிலநூல் பாடம் போதித்தல் தமிழில் என்றே
விரிவிலை ஏன். கட்டா யத்தால்
வெள்ளையரின் மொழியைக் கற்கும்
அறிவிலிகள் பெருகிப் போனால்
ஆணைஅதைத் தடுக்க லாமே?

ஊசிமுனை ஓட்டைச் சட்டம்
உருவான கல்விச் சட்டம்
மாசுமறு வற்ற தென்று
மார்தட்டிக் கொள்ள வேண்டாம்
பாசமொழி தமிழும் அந்தப்
பாங்கிமொழி இரண்டும் ஒன்றா?
காசுபணக் காரர் கற்பார்
கட்டாயம் ஆங்கி லந்தான்.

தமிழைக்கட் டாய மென்ற
தமிழாணை தகுந்த ஒன்றே
தமிழ்தானே என்பார் ஒட்டுத்
தமிங்கிலம் படிக்க நேரும்
தமிழோடும் ஆங்கி லத்தின்
தகைமையும் சமமென் றானால்
தமிழம்மா கரந்த பாலின்
தனித்தன்மை நீர்த்துப் போகும்.

நன்றி : எழுகதிர் ஆகஸட் 2006




மேலாடை
உவைக் கவிஞர் சுரதா

விண்ணுக்கு மேலாடை வெயில்விழுங்கும் மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
மண்ணுக்கு மேலாடை மயில்நீல இருட்டு
மனத்திற்கு மேலாடை வளர்கின்ற நினைவு
கண்ணுக்கு மேலாடை தேங்குகின்ற தூக்கம்
எண்ணுக்கு மேலாடை எதுவென்றால் எழுத்தாம்
எழுத்துக்கு மேலாடை எண்ணங்கள் ஒன்றே.

நிலவுக்கு மேலாடை நகராத மலைகள்
நீருக்கு மேலாடை படர்கின்ற பாசி
மலருக்கு மேலாடை கிளிப்பச்சை இலை
மனைவிக்கு மேலாடை அவள்கணவன் ஆவான்
பலருக்கு மேலாடை கொதிக்கின்ற கோபம்
பத்துக்கு மேலாடை பதினொன்றே யாகும்
சிலருக்கு மேலாடை வற்றாத வீரம்
திறமைக்கு மேலாடை சிறந்த புகழ் ஒன்றே.

நன்றி : அணி - சூலை ஆகஸ்ட் 2006




மனுதர்மம்

இறைச்சி

யாகத்தில் படைத்தவற்றைப் பார்ப்பனர் உண்பது தெய்வீகச் செயல். பசிக்காக வேட்டையாடி விலங்கைப் பிடித்து அதன் இறைச்சியைத் திண்பதோ சூத்திர ராட்சசர் செயல்- என்கிறார் மநு.

பசு, எருமை, ஆடு ஆகியவைகள் ஆண் கன்றோ - குட்டியோ போட்டு அவை இறந்துவிட்டால் தீட்டு. பத்துநாள் ஆகும் வரை அந்தப் பசு, எருமை, ஆடு ஆகியவற்றின் பாலை - பார்ப்பனர் குடிக்கக்கூடாது எனக் கூறும் மநு....

பெண் கன்றுக் குட்டி போட்டு அதைப் பறிகொடுத்த பசு, சினை பிடித்த பசு, செம்மறியாடு, காட்டெறுமை இவற்றின் பாலைக் குடிக்கலாம். எனவும் சொல்கிறார்.

மாமிசம் பற்றிக் கூறுமிடத்து, "கொல்லவும், உண்ணவும், மனிதரல்லாதவற்றைப் பிரம்மா படைத்தார். நியதிப்படி அன்றாடம் அவைகளைக் கொன்று தின்றாலும் பாவம் இல்லை. என்றும் சொல்கிறார்.

வேள்விகளுக்காவும், திவசங்களுக்காகவும் உண்ணத்தகும் பறவை, விலங்குகளைக் கொல்லலாம் - என்ற அகத்தியர் - அவ்வாறே செய்தார் என்றும் சொல்கிறார் மநு.

ரிசிகளின் பழைய யாகங்களில் பறவை, விலங்குகள் வேள்விப் பலியாக இருந்து வந்திருக்கின்றன - என்றார்.

ருக் வேதத்தில் பசுவின் கன்றுக் குட்டிக் கறி மிருதுவாக இருக்குமென்று வசிட்டர் ரசித்துச் சாப்பிட்டதாகவும் பாடல் ஒன்று இருக்கிறது. வேள்வியில் படைத்துச் சாப்பிட்டு, சோமபானக் கள்ளுடன் - மிஞ்சிப் போன புலால் உணவையும், எண்ணைப் பலகாரங்களையும், ஓரிரவு கழித்த பிறகும் உண்ணலாம் என்றார் மநு.

அக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டி இல்லை. ஆகையால் அந்தப் புலால் சளித்து நாற்றமெடுத்திருக்கும். ஆக, அதை எப்படிப் பக்குவப்படுத்தித் தின்றார்களோ தெரியவில்லை.

மீன் உணவு கொள்ளக்கூடாது என்ற மநு - அதற்கடுத்த வரியில் சிரார்த்தத்திற்கும், வேள்விக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் பற்களை உடைய பாடிச மீனும் (திமிங்கிலம்) செம்மீனும், முள் மீனும் - எக்காலத்தும் உண்ணுவது தவறாகாது - என்று கூறுகிறார்.

நன்றி : இசைத்தமிழ் ஆகஸ்ட் 2006 இல் புரட்சிதாசன்.




சிதம்பரத்தில் திருவாசகம் பாட.....

தமிழை இழிவு படுத்தவேண்டாம் என்பது இந்துக்களை பிளவு படுத்துவதா?

சிதம்பரம் சிற்றம்பலத்தில் திருவாசகம் பாடிய 73 அகவையுள்ள ஓதுவார் ஆறுமுகசாமியைத் தீட்சதர்கள் தாக்கினார்கள். நீதிமன்றம் சென்றார்கள். நடுவர் தமிழில் பாடத் தடைவிதித்தார். ஓதுவார் சாலை நடுவில் நின்று திருவாசகம் பாடினார். (தினத்தந்தி - 17-7-06)

சிதம்பரம் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யச் சட்டம் இயற்றுவது இந்துக்களைப் பிளவுபடுத்தும் செயல். பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிதம்பரம் நடராசர் கோயில் ஒரு குறிப்பிட்ட மரபைக் கடைப்பிடித்து வருகிறது. அதை மீறும் வகையில் குன்றக்குடி அடிகளார் பேசி இந்துக்களைப் பிளவு படுத்துகிறார் என்று விசுவ இந்து பரிசத்தின் துணைத்தலைவர் வேதாந்தம் அறிக்கை விட்டிருக்கிறார் (தினத்தந்தி 12-8-06)


இவை எல்லாம் உலகில் வேறு எந்த இடங்களிலும் நடக்கமுடியாத செயல்கள். தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கக்கூடியவை.

ஐயா விசுவஇந்துப் பரிசத்தாரே, சைவம் இருக்கிறது, வைணவம் இருக்கிறது. இவற்றோடு ஆறு மதங்களாகக் கூறப்படும் சாக்தம், செளரம், கவுமாரம், காணபத்தியம் என்ற நான்கையும் கூடச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் எங்கே இருக்கிறது இந்து மதம்.

சிதம்பரம் கோயிலில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடித்துவரும் மரபு என்கிறீர்களே, எத்தனை ஆயிரம் ஆண்டுகளாகச் சிற்றம்பலத்தில் தமிழில் பாடாத மரபைக் கடைப்பிடிக்கிறீர்கள்?

"அர்சனைத் தமிழ்ப் பாட்டேயாகும், அதனால் என்னைத் தமிழில் பாடுக" என்று சிவபிரானே சுந்தரரிடம் கேட்டார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

"மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற் கலந்திருந்து அவரைப் பாடுவித்து அருமைத் திருக்கையால் எழுதினார் " என்கிறார் பேராசிரியர்.

அப்படி எழுதிய திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் மாணிக்கவாசகர் சொற்படி "அம்பலவாணர் கையெழுத்து" என்று எழுதி ஒப்பமிட்டு வாயிற்படியில் வைத்தார் (அபிதான சிந்தாமணி பக் 853)

அத்தகைய திருவாசகத்தை அந்தச் சிவபிரான்முன் அம்பலத்தில் பாடுவது குற்றமா? அது பிளவு படுத்துவதா? அந்த ஓதுவார் உங்கள் பிழைப்பிலா குறுக்கிடுகிறார்? திருக்கோயிலில் இசைத்தமிழில் பாடுவதை மரபாகச் செய்துவரும் ஓதுவார் பெருமக்களைத் தாக்குகிறீர்களே, அது சைவர்களையும், தமிழையும் இழிவுபடுத்துவது ஆகாதா? இந்துக்களை பிளவுபடுத்துவதாகுமா? - இரா.தி-

நன்றி : தெளி தமிழ் - மடங்கல் இதழ்





தெய்வ தரிசனம்

சிறுகதை

என் பையன் நல்லா படிக்க மாட்டெங்கிறானே - என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கவலைப்படுவார்கள், ஆனால் கருப்புசாமியோ?

என் பையன் நல்லா படிக்கிறானே, பள்ளிக்கூடத்திலேயே மொத மார்க் எடுத்துட்டானே - என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

மாட்டுக் கொட்டிலில் சாணி அள்ளும் தொழிலாளி அவர். அவர் அள்ளும் சாணி, அதைப் போடும் மாடுகள், அதன் சொந்தக் காரரான அவனது முதலாளி - இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது அவருக்கு.

அவர் மகன் ஆனந்தனை, சின்ன வயதிலேயே அவனுடன் வேலைக்குப் பழக்கிவிட்டால் பின்னால் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என நினைத்தார் அவர். அவரது மனைவியும், மகனும் பாடாய்ப் படுத்தியதால் பள்ளிக்குச் சேர்த்துவிட்டார் - மகனை.

"டே.. கருப்பு.. என்னடா பையனை படிக்கவாவைக்கிற? படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்னு ஆக்கப் போறே... படிச்சிட்டு வேலை இல்லாம லோ லோன்னு அலையப் போறான். இப்பவே விட்டா ஒழுங்கா சாணி அள்ளுவான். கொஞ்சம் படிச்சுட்டா வெள்ளைச் சட்டை போட்டுட்டு சாணி அள்ளறதான்னு தோணும் பாத்துக்க..." என்று அவனது முதலாளி சொன்னது அவனுக்கு வேத வாக்காகப் பட்டது அப்போது. இருப்பினும் படிக்க வைத்தான்.

அப்பா எங்க பள்ளிக்கூடத்திலேயே மேல்நிலைப் பரீட்சையில நான்தாம்பா முதல் மார்க்க. மகிழ்ச்சியோடு வந்த பையனை நினைத்துத்தான் வருந்தினார் கருப்புசாமி.

அடுத்து என்ன செய்ய? பெரிய வினாக்குறி அவர் முன் நின்றதுதான் அவரது வருத்தத்திற்குக் காரணம்.

என்னப்பா கருப்புசாமி... ஒன் பையன் பாஸ்பன்னிட்டானா? என்று கேட்டபடி அங்கு வந்தார் அல்லா பிச்சை ராவுத்தர்.

"சீக்கிரம் எடத்தைக் காலி பண்ணுங்க பாய், ஒங்களோடல்லாம் பேச்சு வார்த்தை வைச்சிக்கக் கூடாதுன்னு எங்க முதலாளி சொல்லியிருக்காரு. என் வயித்தில மண்ணெ அள்ளிப் போட்டுடாதீங்க - கெஞ்சினான் கருப்புசாமி.

ஏன் ?

முன்பு ஒருநாளில்....

"ஒங்களெ ஏன் இப்படித் தாழ்வா வைச்சிருக்காங்கன்னு யோசிச்சயா? எங்க மதத்தில அதுவும் மசூதிக்குள்ள அரசன் முதல் ஆண்டிவரைக்கும் ஒண்ணுதாம்பா" என்றும்....

"எங்க மதத்துக்க வந்தவங்க எல்லாம் நல்லா இருக்காங்க" - என்றும் எப்போதோ எங்கையோ அவர் இவரிடத்தில் பேசியதை அரைகுறையாக யாரே கேட்டு, கருப்புசாமியின் முதலாளியிடம் வத்தி வைத்துவிட்டனர் மறுநாள்.

ஏன்டா கருப்புசாமி... மதம் மாறப் போறயாமே.? தொலைச்சிருவேன் தொலைச்சி.. என்று மிரட்டப் பட்டபின் அல்லா பிச்சை ராவுத்தரைக் கண்டாலே ஓடி ஒளிந்தார் கருப்புசாமி.

என்னப்பா கருப்புசாமி .. நான் எதுக்கு வந்திருக்கேன்னு கேட்காமலேயே வெரட்டுறதிலே இருக்கே? என்றார் அல்லா பிச்சை சிரித்துக் கொண்டே.

வேணாங்க எங்க ஆளுங்க போய் ஏடாகூடமா எங்க முதலாளிகிட்ட வத்தி வச்சிடுவாங்க - பயத்துடன் கூறினார் கருப்புசாமி.

சரி ஒன் பையன் போட்டோ ஒண்ணும் சர்டிபிகேட் நகலும் கொடு. என் பையன் பத்திரிகை நிருபர் தெரியுமில்லே. பத்திரிகைக்கு எழுதி அனுப்ப - என்றார் அல்லா பிச்சை. வேண்டா வெறுப்புடன் அவர் கேட்டதைக் கொடுத்தனுப்பினார் கருப்புசாமி.

இரண்டு நாள் கழித்து வந்த செய்தித்தாளில் கருப்புசாமியின் மகன் பற்றிய செய்தி படத்தோடு வந்திருந்தது.

ஒருவாரம் கழித்து கருப்புசாமியின் வீட்டிற்கு மீண்டும் வந்தார் அல்லா பிச்சை ராவுத்தர்.

ஏன்பா கருப்புசாமி ... ஒனக்கு பேங்குல கணக்கு இருக்கா - என்றார்.

என்ன பாய் கிண்டல் பண்றீங்களா? பொழப்பை பார்க்கறதே பெருசா இருக்கு. இதில பேங்க் கணக்கா?

அதுக்கில்லப்பா. ஒன் பையனைப் பத்தி பத்திரிகையில போட்டோமா? அதைப் பார்த்து யாரோ ஒரு புண்ணியவான் ஐயாயிரம் ரூபா பத்திரிகை ஆபீசுக்கு செக் அனுப்பிட்டாரு. பத்திரிகை ஆசிரியர் ஒன் பையன் பேரில அதை டிராப்படா மாத்தி என் பையனுக்கு அனுப்பியிருக்காரு. இதோ.. இருக்கே... இதுதான் அந்த டிராப்ட்.

பேங்கில கணக்கில போட்டுத்தான் எடுக்க முடியும். கணக்கு இல்லாட்டி இந்தா இருநூறு ரூபா.. சடார்ன்னு ஒம் பையனை கூட்டிப் போய் கணக்கை ஆரம்பிச்சி, இதை அந்தக் கணக்கிலே போடு... என்று அவர் பேசப் பேச, கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அல்லா பிச்சை ராவுத்தரை வணங்கியபடி அப்படியே நின்றுவிட்டார் கருப்புசாமி.

நன்றி : தன்மானக் குரல் - ஆகஸ்ட் 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061