தமிழண்ணலின் மடல்
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,
தமிழாசிரியன் தமிழண்ணல் எழுதிக்கொள்வன.
பணிவார்ந்த வணக்கம்.
தாங்கள் 83 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் இந் நன்நாளில், எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தாங்கள் தங்கள் வாழ்வின் உச்சத்தைத் தொடும் காலம் இது. தங்கள் பெயரும் புகழும் தமிழ் உள்ள அளவும் தமிழினம் உள்ள அளவும் வரலாற்றில் இடம் பெற, இது நல்ல சமயம்.
தங்களின் பிறந்த நாளன்று இந்த ஆணை பிறப்பிக்கப்படின், உலகத் தமிழினமே மகிழ்ச்சியடையும், தங்களை உச்சிமேல் வைத்துக் கொண்டாடும்.
ஆறு விதிகள் அடங்கிய ஆணை அல்லம் சட்டம் (Orinance) பிறப்பிக்கப்பட வேண்டும்.
1. முன் மழலையர் கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு முடிய தமிழே பயிற்று மொழியாகும். இது தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகத் தொடரும் (கடந்த ஆட்சியில் முதல் வகுப்பு முதல் என மாற்றியது இரத்துச் செய்யப்படுகிறது)
3. சிறுபான்மையோர் தேவைப்படும் அளவு எண்ணிக்கை இருந்தால் அவர்கள் தங்கள் மொழிவழிப் பயிலலாம். ஆனால் தமிழை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும். சிறுபான்மையர் எனக் கூறிக்கொண்டு, ஆங்கில வழி படிக்க அனுமதி இல்வை. அவர்கள் தங்கள் தாய்மொழிவழிக் கற்பிக்கவே அனுமதி உணடு.
4. ஆறாம் வகுப்பு முதல் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும், தமிழிலும் மெட்ரிக் பள்ளிகள் நடத்தலாம். படிக்கலாம். வினாத்தாள் இருமொழியிலும் அமையும்.
5. மழலையர் முதல் பட்டப்படிப்பு முடிய தமழ் கட்டாயப்பாடம் ஆகும். தமிழைத் தவிர்த்துப் பிறமொழியும் பயிலலாம் என்ற விதி இரத்தாகிறது.
6. பட்டப்படிப்பு முதல், பல்கலைக்கழக இறுதி ஆய்வுப் படிப்பு - மருத்துவம், பொறியியல் படிப்பு எல்லாவற்றிலும் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும். இது ஆங்கிலவழி உயர்கல்வி கற்க விரும்புவோரைத் தடுக்காது. அதே சமயம் தமிழ்வழி கல்லூரி தொடங்கவோ, கற்கவோ விரும்புவோர்க்கு முழு உரிமை தரும்.
இவை ஏனைய மாநிலங்களில் நடைமுறையிலுள்ளவை. உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற்றவை. யாரும் எதிர்த்து வழக்காடி வெல்ல முடியாது. இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை, உடனே திரும்பப் பெற்றுக் கொண்டு, இந்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். இதற்கு இடம் உண்டு என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வழி அறிந்தே இதனை எழுதியுள்ளேன்.
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு, தங்கள் புகழ் நிலைக்கவே இதனை எழுதியுள்ளேன். 2006 சூன் மூன்றாம் நாள் உலகமே வியக்குமாறு இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுமென்று நம்புகிறேன். நன்றியடைவேன்.
நன்றி : தமிழ்ப் பாவை - சூலை 2006
|
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
கடந்த 40 ஆண்டுகளில் (திராவிட இயக்கங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்ததற்குப் பின்பு) - தமிழகக் கல்வியில் பெரியதொரு மாற்றம் நிகழ்ந்து விட்டது. அந்த மாற்றம் சொந்தத்தாய் தமிழ் மொழியைப் புழக்கடைப் பக்கம் தள்ளி ஓரங்கட்டச் செய்ததுதான்.
தமிழ் இருந்த இடத்தில் அந்நிய மொழியான ஆங்கிலம் அமர்ந்து விட்டது. விளைவு ...
- மெட்ரிக் பள்ளிகள் 4000 க்கும் மேல்
- மழலையர் தொடக்கப் பள்ளிகள் 20,000 க்கும் மேல்
- இவை அங்கீகாரம் பெற்றும் பெறாமலும் ஆட்சியினர் அரவணைப்போடு வளர்ந்து பெருகியவை.
- இந்நிலை ஏன்?
தமிழ்வழிக் கல்வி கேவலமானது. பயனற்றது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டதால் இந்தியத் துணைக் கண்டத்திலேயே மாநில மொழிவழிக் கல்வி அளிக்கும் பள்ளிகளுக்கு மானியம் மறுக்கப்படுவதும் தமிழக ஆட்சியில் மட்டுமே.
தமிழ் செம்மொழியானதில் எங்களுக்கே அனைத்துப் புகழும் - உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்ற பீத்தலும் டமாரமும் வெறும் கூத்தா?
- தமிழ்வழிக் கல்வி கட்டணம் இல்லாக் கல்வியாக்கலாம்.
- தமிழ்வழிப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்கலாம்.
- தமிழ் படித்த கல்வியாளர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்கலாம்.
- நிர்வாக - கல்வி நீதித்துறை மொழியாகத் தமிழை அரசணையில் ஏற்றலாம்.
இதன் மூலம் தமிழுக்குச் சேவை செய்யலாம்.இல்லையெனில் மெல்லத் தமிழினிச் சாகும்.
நன்றி : போக்குவரத்துத் தொழிலாளி - சூலை 2006 .
|
இளங்குமரனார் பக்கம்
தமிழ்நாடு அரசும்
தமிழ்நாட்டு அரசும்
தமிழ்நாடு (தமிழை விரும்புகின்ற) அரசு
தமிழ் நாட்டு (தமிழை நிலைநாட்டு) அரசு
என்பதற்கு ஓர் எளிய, ஆனால் ஓர் அரிய வழி செய்யலாம்.
போலித்தனமும், பொய்மை நோக்கும், கணியர் அச்சமும் காரணமாகத் தாய்த் தமிழ்ப் பெயர்களைத் தமிழ்ப் பிறவியர் இழந்து வருகின்றனர். நல்ல தமிழ்ப் பெயர் தாங்கிய பெற்றோரும் தம் மக்களுக்குத் தமிழ் அழிப்பும், ஒழிப்புமாம் பெயரைச் சூட்டிப் பரப்புகின்றனர். இக்கேட்டைத் தவிர்க்க ஓரளவால் ஒரு சலுகையை அறிவித்தல் வேண்டும் அரசு.
தம் பெயரைத் தமிழாக மாற்றிக் கொள்ள விரும்புபவர்க்குப் பெயர் மாற்றச் சான்றுக் கட்டணம், அடையாளத் தொகையாக உரூபா பத்து மட்டும் செலுத்தினால் போதும் - என அரசு ஒரு சலுகை அறிவித்தால் பல்லாயிரவர் பல்லாயிரவர் முகவரிகள் எளிதில் தமிழாக மாறுதல் உறுதி. தமிழைக் கெடுக்கும் பெயர்கள் திங்களுக்கு 2500 ஏற்பட்டுவரும் கொடுமையை, ஓரளவேனும் தடுக்க உதவும்.
நன்றி: முகம் சூலை 2006
|
தமிழ்க் கோயில்களில் இனியாவது தமிழ் மந்திரம் ஒலிக்குமா?
மனது + திறம் = மந்திரம்
தன்து + திறம் = தந்திரம்
இது எப்படி வடமொழியாகும்? என்று சிலர் கேட்பார்கள். இசுலாத்திற்கும், கிறித்துவத்திற்கும் காலத்தை வரையறுக்கும் வரலாறு உண்டு. தமிழ்ச் சமயங்களின் மூலமான சிவனியத்திற்கு காலத்தை வரையறுக்கும் வரலாறு இல்லை. ஏனெனில், தமிழுக்குக் காலத்தை வரையறுக்கும் வரலாறு இல்லை.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த மொழியான தமிழோடு சிவனியமும் தோன்றுகிறது. சிவந்தவன் என்ற பொருள்படத் தோன்றிய சிவனியத்திற்கு அரண் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அரண் என்றாலும், சிவந்தவன் எனறே பொருள்படும், அரண் என்பதும், அரக்கு என்பதும் சிவப்பு வடிவானதே.
தமிழ் மொழி - அகரம் உகரம் மகரம் - என்று உருக்கொள்கிறது. அகரம் எண்ணில் 8 ஆகிறது. இது இறை கோட்பாட்டில் அரண் என்கிற ஆண்பால் ஆகிறது. உகரம் எண்ணில் 2 ஆகிறது. இது உமை என்கிற பெண்பால் ஆகிறது. ஃ என்கிற மகரம் முருகன் என்கிற உயிர் ஆகிறது. இப்படித்தான் மொழியோடு கூடிய தமிழ்ச் சமயம் தமிழ் மண்ணில் உருவெடுத்தது - என்று மொழி சமய ஆய்வாளரும், பொறியாளருமான பூவரசு அவர்கள் சான்றுகளுடன் சொல்கிறார்.
சிவனியமே சைவ சமயமாகவும், வைணவ சமயமாகவும் தமிழ் மண்ணில் கிளைவிட்டு வளர்ந்தது. வைசமதத்தின் இலக்கியங்களாக 12 திருமுறைகளும், 14 சைவ சித்தாந்த சாத்திரங்களும் தெய்வத் தமிழ் மொழியில்தான் தோன்றின. வைணவ மதத்தின் இலக்கியங்களான நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தெய்வத் தமிழில் மட்டுமே இருக்கின்றது.
ஆகவேதான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - என்று சிவனியம் போற்றப் பட்டது. தமிழில் வட மொழி கலந்து, தமிழ்க் கோயில்களில் தமிழரல்லாத அர்ச்சகர்கள் நுழைந்த காரணத்தால் தமிழ்ச் சமூகம் நால்வருண பாகுபாட்டுக்கு இரையானது.
இதனால் சமணப் பள்ளிகளும், பவுத்த சமயமும் தமிழ் மண்ணில் வேரூன்றி வளர்ந்தது. இதைத் தடுப்பதற்காக சமணர்கள் கழுவில் ஏற்றப் பட்டு கொல்லப்பட்ட கொடுமையும் தமிழ் மண்ணில் நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலின் பின்புலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோர் தோன்றி தமிழ் மொழியில் இறைவனைப் பாடி தமிழ்ச் சமயத்தை ஓரளவு மீட்டனர்.
நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
என்பது தொல்காப்பியம் தமிழுக்கு மந்திர சக்தி உண்டு என்பதற்கு இதை வேறு என்ன சான்று வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அதே காலகட்டத்தில் தமிழகத்தின் தமிழ்க் கோயில்களில் தமிழைத் தவிர வேறு மொழியில் வழிபாட்டு மந்திரங்களும், பாடல்களும் ஒலிக்க்கூடாது. மொழியின் வெற்றிதான் இனத்தின் வெற்றி. தமிழ்ப் பாடல்களுக்கு கடவுள்கள் உருகிய வரலாறு உண்டு. தமிழ் வழிபாடு என்பது இறைவனுக்குத் தமிழர்கள் செய்யும் தொண்டு என்றால் மிகையல்ல.
நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் இதழ் - சூலை 2006
|
உவமைக் கவிஞர் சுரதா
நெல்லை இராமச்சந்திரன்
தரைமுளைத்த சூரியனே பெரியார் கொள்கை
தணலெடுத்த எரிமலையே துறைமு கத்தின்
கரைஒதுங்காத் தமிழ்ப்படகே உவமைப் பூக்கள்
கண்திறந்த பூங்காவே பிஞ்சு தொட்டு
நரைவிழுந்த தமிழர்க்கும் தேன்ம ழையால்
நல்விருந்து படைத்தவனே தமிழ்ப்பண் பாட்டில்
அரைகுறையாய் இருந்தோரைத் திருத்தச் செய்த
அனல்வரியே சுரதாவே! எங்கே சென்றாய் ?
பாரதியோ தேசியம் பாடிச் சென்றான்
பாவேந்தன் பகுத்தறிவில் தெப்ப மிட்டான்
கூரதிகம் உன்எழுத்தில் தன்மா னத்தில்
குளிகுளித்தாய் வரியெல்லாம் மரபுக் காட்டில்
வேரதிகம் ஊன்றியதால் விளைந்த தெல்லாம்
விசைகொண்ட பொதுவுடைமை நீயும் சொன்னாய்?
தேரோட்டம் நடப்பது போல் தமிழர் நாட்டில்
தினமோடும் உன்கவிதை சுரதா வாழ்க வாழ்க.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் - சூலை 2006
|
சுரதா நினைவில் பாவலர் க.மீனாட்சி சுந்தரம்....
உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் திருவாரூரின் ஒரு பகுதியாகிய மடப்புரத்தில் தங்கியிருந்தார். அன்று முதல் மாலை நேரங்களில் நான் தங்கியிருந்த விடுதி அறைக்கே வந்து விடுவார். அனைத்து மாணவர்களிடமும் நான் பெருமையோடு அவரை அறிமுகப்படுத்துவேன். அவரும் அவர்களோடு மகிழ்வோடு பழகுவார். பல்வேறு பொருள் பற்றி உவமை நயத்தோடு விரித்துரைப்பார். மாணவர்கள் அனைவருமே அவரோடு பழகுவதைப் பேசுவதைப் பெரும் பேறாகக் கருதினோம்.
எனினும், அவருக்கு என்னிடம் தனித்த பற்றே ஏற்பட்டது. இரவு வெகுநேரம் வரை அருகிலிருந்த மதகு ஒன்றில் உட்கார்ந்து பேசுவோம்.
ஒருநாள் பெளர்ணமியன்று குளிர்நிலவு சுகத்தை அனுபவித்தவாறே அம்மதகில் அமாந்து பேசிக் கொண்டிருந்தபோது, நான் - அய்யா நான் கவிதை எழுத விரும்புகிறேன், எனக்கு உரிய வழிகாட்டுங்கள் - என்றேன்.
அவர் - சரி எந்தப் பொருளையும் ஒரு அடை மொழியோடு கூறினால், அது கவிதையாகும். அதோ அந்த சந்திரனைப் பார்த்து ஒரு அடைமொழி தந்து அழை பார்க்கலாம் - என்றார்.
நான் உடனே சந்திரனைப் பார்த்து விட்டெறிந்த பந்தைப் போல் - என்றேன்.
அது பாவேந்தர் பாவடிகளில் வரும் சொற்கள். நீ நிறைய கவிதைகள் படிக்கிறாய் எனத் தெரிகிறது. பாராட்டுகிறேன். ஆனால் சொந்தக் கற்பனையில் அந்த நிலவை அடைமொழியோடு அழைத்திடு - என்றார்.
நான் சற்றே சிந்தித்து மேலே பார்த்து வானில் தொங்குகின்ற சந்திரனே என்றேன்.
அற்புதம், சரி, இனி நீ கவிதை எழுதத் தொடங்கு. எழுதியதை என்னிடம் காட்டு. நான் திருத்தித் தருகிறேன். முதலில் பிற பாடல்களைப் படித்து, அதன் ஓசை நயத்தை வைத்து எழுது. பின்னர் முறையாக யாப்பிலக்கணத்தைக் கற்று மரபுக் கவிதையை நீயே எழுதலாம் என்றார்.
யாப்பிலக்கணத்தை நீயே கற்றுக் கொள்ளலாம். இராவண காவியம் எழுதிய புரட்சிப் பாவலர் புலவர் குழந்தை அவர்களின் யாப்பதிகாரம் என்ற நூலைப் படித்தால் - எனவும் கூறினார்.
நானும் அந்நூலை வாங்கிப் படிக்க, எழுத ஆரம்பித்தேன்.
நன்றி : ஆசிரியர் துணைவன் - ஆடவை இதழ்
|
இ.சாகுல் அமீது எழுதியுள்ள
கவிதைத் துறைமுகம் சுரதா நூல்.
எழுதுவது எல்லாமே கவிதை என்று
எழுதுபவன் எண்ணுவது தவறு மூக்கில்
நுழைகின்ற காறறேதான் மூச்சு முதுகை
தடவுகின்ற காற்றெல்லாம் மூச்சு அல்ல
பழசெல்லாம் படித்துப்பார், அதையும் தாண்டி
புதிதாக யோசித்து எழுதிப் பாரு
அழகான பாட்டென்றால் காலம் மீறி
படிப்பவனைத் தன்பக்கம் இழுக்க வேண்டும்.
பிறவியிலேயே நோயுள்ள மனிதர் உண்டு
பிறவியிலே எவனுமிங்கு கவிஞன் இல்லை
இறந்தவனை எழுப்பியவன் உண்டு என்றால்
எழுப்பியவன் ஏன் இறந்து போனான்? நாளை
இறப்பதுதான் மெய்என்று எண்ணிக் கொள்வோர்
இவ்வுலகில் ஏனின்னும் இருக்க வேண்டும்?
சிறந்தவனாய் இருப்பதற்குத் திறமை வேண்டும்
நல்லவனாய் இருப்பதற்கு பண்பே போதும்.
முட்டாளாய் இருப்பதிலே கிடைக்கும் இன்பம்
அறிஞனாக இருப்பதிலே கிடைப்ப தில்லை
முட்டாளாய் நானிருக்க முயன்றேன் ஆனால்
அத்தகுதி எனக்கென்றும் இருந்த தில்லை
எட்டாத உயரத்தை எட்டிப் பார்க்கும்
தனித்திறமை எனக்குண்டு பலருக் கிங்கே
கிட்டாத செல்வாக்கு கிடைத்த போதும்
ஆடாத தன்னடக்கம் உண்டெ னக்கே
என்னைப்போல் பாட்டெழுத இருக்கின் றேன்நான்
அவனைப்போல் பாட்டெழுத அவனும் உண்டு
உன்னைப்போல் நீயெழுத முயற்சி செய்து
தோற்றாலும் அதிலுனக்குப் பெருமை உண்டு
முன்பிருந்த புலவரைநான் முந்திச் சென்றேன்
முறையாக சிந்தித்தேன் இதைச் சாதித்தேன்
இன்றிருக்கும் இளைஞர்எனைத் தோற்க டிக்க
வரவேண்டும் எனைமுந்த முயல வேண்டும்.
அற்பமென நான் எதையும் நினைப்ப தில்லை
அதிசயமாய் நான் எதையும் வியப்ப தில்லை
விற்பனையே நோக்கமென தமிழர் மண்ணில்
வீணான கவிதைகளை விதைக்க வில்லை
தற்பொழுது நான் எதையும் எழுத வில்லை
பிறர்எழுதத் தூண்டுவதை நிறுத்த வில்லை
தற்செயலாய் கர்பத்தை தள்ளி வைத்தால்
பிள்ளையிலா மலடியென அர்தத மில்லை.
நன்றி : சுந்தர சுகன் - சூலை 2006
|
திருந்துவாயா ?
முனைவர் கடவூர் மணிமாறன்
சிரிக்கின்றாய் அழுகின்றாய் சிந்திக் கின்றாய்
சிதைக்கின்றாய் மறுக்கின்றாய் உறவை நட்பை
வெறுக்கின்றாய் நல்லோரை இகழு கின்றாய்
வெற்றோல நாடகத்தை நடத்து கின்றாய்
விரிக்கின்றாய் பொய்,புரட்டை! பகைமை நோயை
விதைக்கின்றாய் பண்பாட்டைப் புதைக்க லானாய்
பேதைமைத்தீ மூட்டுகிறாய் பழிகள் ஏற்பாய்!
ஒழுக்கமுடன் புறக்காளினம் வாழும் என்பார்
ஒருபெட்டை வேறொன்றுக் குடன்ப டாதாம்!
கழுகுகளின் தாக்குதலை எதிர்த்துக் கோழி
காப்பாற்றும் குஞ்சுகளை கரையும காகம்
பழுதின்றித் தம்மினத்தை அழைத்தே நாளும்
பசியாறும் பகிர்ந்துண்ணும் மாந்தன் நீயோ
கழுத்தறுப்பாய் இனத்தவரின் காலை வாரிக்
கவிழ்த்திடுவாய் கடுகளவும் வருத்தம் கொள்ளாய்!
பால்கொடுக்கும் பசுக்கூட்டம் மரங்கள் கூடப்
பழங்கள்தரும் பயிர்வகைகள் விளைச்சல் நல்கும்
வால்ஆட்டும் நாய்களெலாம் நன்றி காட்டும்
வான்மழையும் உலகுக்கே வளத்தைச் சேர்க்கும்
தோல்மயக்கம் கொண்டுள்ள மாந்தன் நியோ
தோல்விகளால் துவண்டிடுவாய் துன்பம் சேர்ப்பாய்
மேல்கீர்என் றுரைத்திடுவாய் நிலைத்து நிற்கும்
மேன்மையினை ஒதுக்கிடுவாய் நன்றோ சொல்வாய்
இடர்செய்ய முந்திடுவாய் துடிப்பாய் நெஞ்சில்
ஈவிரக்கம் இல்லாமல் நடந்து கொள்வாய்
கடமைகளை உதறிடுவோம நல்லோர் தூற்றும்
கயமைகளில் புரண்டெழுவாய் அறிவுக் கொவ்வா
மடமைகளில் ஊறிடுவாய் மாந்த நேயம்
மனச்சான்றைத் தொலைத்திடுவாய் கொள்கையின்றிக்
கடனுக்கு வாழ்ந்திடுவாய் பயனே இன்றிக்
காலத்தைக் கழித்திடுவாய் திருந்து வாயா?
நன்றி : கவிதை உறவு - 34 ஆவது ஆண்டு மலர் - சூலை 2006
|
இருப்பும் இயலாமையும்
பெரணமல்லுார் சேகரன்
எனக்கும் வீட்டுக்கும்
ஆன வயது ஐம்பது
அப்பா ஈட்டி வைத்த
அருஞ் சொத்து அது
ஓட்டு வீடாயினும்
அங்குலம் அங்குலமாக
நாட்டமுடன் புழங்கியவன் நான்.
எனக்கு ஐந்து வயதிலேயே
பிய்ந்து போன தேகமாய்
இறுதிப் பயணத்திற்கு
இந்த வீட்டிலிருந்துதான்
புறப்பட்டார் அப்பா.
எனக்கும் அம்மாவுக்கும்
இன்னமும் அவர் வாழ்வதாய்
இந்த வீடுதான் சொல்கிறது.
ஊனையும் உயிரையும்
அப்பா இழைத்துக் கட்டிய
இந்து வீடுதான்
எங்கள் ஊரிலேயே பழைய வீடு
அதிலும் எனக்குப் பெருமிதம்.
மழைக்கால இரவுகளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பாத்திரம் சேகரிக்கும் மழைநீர்
பத்திரமாய் நனையாமல்
புகைப்படத்தில் சிரிப்பார் அப்பா.
விதவிதமான பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும்
பறந்து வந்து விளையாட்டாகும்
பிள்ளைகளுக்கு.
ஓரிரு தவளைகள் கூட
வாசலில் வந்து தாளமிடும்
எப்படி விரட்டினாலும்
மீண்டும் மீண்டும் வந்து
ஆதாரமாய் ஒட்டிக் கொள்ளும்
தேரைகள்.
வளர்ந்த பையனும் இப்போது
அம்மாவுடன் சேர்ந்தே கேட்கிறான்
இென்ன வீடா - காடா ?
பாதுகாப்பில்லாத வீடு
எத்தனை நாளைக்குத்தானோ
திருட்டுச் செய்தி கேட்கும் போதெல்லாம்
உருட்டி விடுவாள் உடையவள்.
அத்தனைக்கும் மெளனம் காப்பது
அம்மாவும் நானும் மட்டுமே.
எங்களுக்குத்தானே தெரியும்
இது வீடு மட்டுமல்ல
அப்பா இன்னமும் வாழும் கூடென்று.
இடிப்பதும் புதுசாய்க் கட்டுவதும்
இப்பவும் இயலாமையிலும் கூடாவென்று.
நன்றி : புதிய ஆசிரியன் இதழ் - சூலை 2006
|
மாணவர் பக்கம்
மாணாக்கர் பரிசுத்திட்டம் - 111 க்கான விடைகள்
1. கத்தி + பிடி ( கத்தியைப் பிடி) = கத்தி பிடி
கத்தி + பிடி ( கத்தியினது பிடி) = கத்திப்பிடி
2. நீர் + குடி ( நீரைக் குடி ) = நீர் குடி
நீழ் + குடம் ( நீரை உடைய குடம் ) = நீர்க் குடம்
3. கால் + தூக்கு ( காலைத் தூக்கு ) = காறூக்கு
கால் + தூக்கு (ஒரு தூக்கில கால் பகுதி ) = காற்றூக்கு
4. ஆடு + கால் ( ஆட்டினது கால் ) = ஆட்டுக்கால்
ஆடு + கால் ( ஆடுகின்ற கால் ) = ஆடு கால்
5. நாள் + காட்டி ( நாளைக் காட்டுவது ) = நாள்காட்டி
நாள் + குறிப்பு ( நாளினது குறிப்பு ) = நாட்குறிப்பு
6. பணம் + கொடை ( பணம் தரும் கொடை ) = பணக்கொடை
பணம் + கொடு ( பணத்தைக் கொடு ) = பணங்கொடு
7. கனி + சுவை ( கனியினது சுவை ) = கனிச் சுவை
கனி + சுவை ( கனியைச் சுவை ) = கனி சுவை
8. தலை + கால் ( தலையும் காலும் ) = தலை கால்
தலை + காட்டு (தலையைக் காட்டு ) = தலை காட்டு
9. செம்பு + கம்பி ( செம்பால் ஆகிய கம்பி ) = செப்புக் கம்பி
செம்பு + கலந்தான் (செம்பைக் கலந்தான்) = செம்பு கலந்தான்.
10. மணல் + பரப்பு (மணலைப் பரப்பு ) = மணல் பரப்பு
மணல் + பரப்பு ( மணல் நிறைந்த நிலப்பகுதி ) = மணற்பரப்பு
நன்றி : தெளிதமிழ் இதழ்
|
இதுதான் வாழ்க்கை
ஒரு ஆசிரியர் தன் மாணவருடன் காட்டின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அந்த ஆசிரியர் அப்போதுதான் முளைத்துத் துளிர்விடத் தொடங்கியிருந்து ஒரு சிறிய செடியைத் தன் மாணவனுக்குக் காண்பித்து அதைப் பிடுங்கி எறியும்படி கூறினார்.
அந்த மாணவன் தன் வலது கையின் இரண்டு விரல்களை மட்டும் உபயோகித்து முளைக்கத் தொடங்கிய அந்தச் செடியை மிகச் சுலபமாகப் பிடுங்கி எறிந்தான்.
இரண்டுமாத காலம் வளர்ந்து இன்னொரு செடியை ஆசிரியர் தன் மாணவனுக்குச் சுட்டிக் காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி அவனிடம் கூறினார்.
அவன் தன் இரண்டு கைகளையும் பயன்படுத்தித் தன் பலம் முழுவதையும் உபயோகித்து மிகவும் சிரமப்பட்டு அந்தச் செடியைப் பிடுங்கி எறிந்தான்.
அந்த ஆசிரியர் ஒரு பெரிய மரத்தைச் சுட்டிக் காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி அவனிடம் கூறினார். அந்த மரத்தை அந்த மாணவனால் அசைக்கக்கூட முடியவில்லை. உடனே ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்து பிரச்சினைகளுக்கும் நீ இப்போது செய்ததற்கும் சம்பந்தம் இருக்கிறது. புதிதாக முளைக்கத் தொடங்கிய செடியை நீ மிகவும் சுலபமாகப் பிடுங்கி எறிந்து விட்டாய். அதேபோன்று பிரச்சினை முளைக்கத் தொடங்கும் போது அதைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கொண்டால், அந்தப் பிரச்சினையை மிகச் சுலபமாய்த் தீர்த்து வைக்க முடியும். பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளாவிட்டால் சிறிய செடி அசைக்க முடியாத மரமாக வளர்ந்து விடுவதைப் போன்று பிரச்சினையும் தீர்க்க முடியாதபடி பூதாகரமாக வளர்ந்து விடுகிறது என்று கூறினார். சரியான அணுகுமுறை இருந்தால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை.
நன்றி : இல.செ.க.வின் தன்னம்பிக்கை - சூலை 2006
|
ஆபிரகாம் லிங்கனுக்குத் தாடி வைத்த சிறுமி
இ.ரெ.சண்முகவடிவேலு
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நேரம் அவருடைய தோற்றம் அவருக்கு வாய்ப்பாக அமையவில்லை. மெலிந்த உடல், அழகில்லாத முகம், பலர் அவருடைய தோற்றத்தைக் கேலி பேசினர். அந்த நேரத்தில் ஒரு கடிதம் வந்தது. வெஸ்ட் பீல்ட் என்ற ஊரிலிருந்து கிரேசிபெடல் என்ற பதினோரு வயதுச் சிறுமி எழுதியிருந்தாள். அவள் எழுதியிருந்தது என்ன தெரியுமா?
மதிப்பிற்குரிய ஐயா, தங்களிடம் ஒரு விடயத்தை பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தாடி வளர்த்துக் கொண்டால் உங்கள் முகம் பொலிவாக விளங்கும். பெண்கள் எல்லோரும் உங்களுக்கே வாக்களிப்பார்கள். தங்கள் கணவன்மார்களையும் தங்களுக்கே வாய்ப்பளிக்கும்படியும் செய்வார்கள். நீங்கள் சுலபமாக வெற்றி பெற்று நாடடின் தலைவராக ஆவீர்கள்,
ஒரு குழந்தை தன்மீது வைத்துள்ள அன்பை எண்ணி வியந்தார். உடனே அப்பெண்ணுக்குப் பதிலும் எழுதினார். அந்தச் சிறுமியின் ஆலோசனைப்படி தாடி வளர்த்துக் கொண்டார். சிறுமி கூறியது போன்ற தாடி வளர்த்துக் கொண்ட புதிய தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. தேர்தலில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற லிங்கன் பதவியேற்க வாஷிங்டன் நகர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார். போகிற வழியில் அந்தச் சிறுமியின் ஊரான வெஸட் பீல்ட் வந்தார். ஜனாதிபதியைக் காண ஏராளமானோர் திரண்டுவிட்டனர். அனைவருக்கும் நன்றி சொன்னார். சொல்லி முடித்ததும் கிரேசி பெடல் வந்திருக்கிறாரா? என்று கேட்டார்.
இதோ வந்திருக்கிறேன் ஐயா என்று ஓடி வந்தாள் சிறுமி. கூடவே தாய் தந்தையர் சகோதரர் வந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் முன் அச்சிறுமியை வாரியணைத்து முத்தம் கொடுத்துப் பாராட்டினார்.
தான் புதிய தோற்றம் பெற்றதற்கு அந்தச் சிறுமியே காரணம் என்று சொல்லிக் கடிதம் எழுதிய விவரத்தையும் சொன்னார். அனைவரின் கண்களும் கிரேசி பெடலைப் பெருமிதத்தோடு பார்த்து மகிழ்ந்தன.
லிங்கன் கடைசிநாள் வரை தாடி வைத்து வாழ்ந்தார்.
ஸ்பிரிங் பீல்டில் உள்ள ஆபிரகாம் லிங்கன் நினைவகத்தில் இன்றும் அக்கடிதம் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி : விகடகவி இதழ் - சூலை 2006
|
அகராதிகள்
Antonyms - என்பவை எதிர்ச் சொற்கள். நாற்பதாண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ எட்டாயிரம் சொற்களுக்கு எதிர்ச் சொற்கள் கண்டுபிடித்து எதிர்ப்பத அகராதி - என்று வெளியிட்டேன். அதற்குப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையவர்களும் அணிந்துரையும் வாழ்த்துரையும் நல்கியுள்ளார்.
Synonyms - என்பவை ஒரு பொருட் பன்மொழியகராதி. நான் தொகுத்துள்ள நூறு அகராதிகளில் பெரும்பாலானவை ஒரு பொருட் பன்மொழி அகராதிகளே. தமிழ் நிகண்டுகளில் பன்னிரண்டு தொகுதிகளுள் பதினொரு தொகுதிகள் ஒருபொருட் பன்மொழியகராதிகளே. தமிழ் நிகண்டுகளில் எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரையுள்ள சொற்களுக்கே ஒருபொருட் பன்மொழிகள் உள்ளன. நான் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சொற்களுக்கு ஒரு பொருட் பன்மொழிகளைத் தொகுத்துள்ளேன். ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்த தமிழைவிட இன்றைய தமிழ் சிறப்புற வளர்ந்தோங்கியுள்ளது. அன்று நிகண்டாசிரியர்களுக்குக் கிடைத்த தமிழ் நூல்கள் குறைவே. இன்று தமிழில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன.
நிகண்டுகளில் விநாயகரைக் குறிக்கச் சுமார் இருபது சொற்களே உள்ளன. நான் ஆயிரம் நூல்களைப் படித்து ஐயாயிரம் பெயர்களைத் தொகுத்தேன். திருமகளைக் குறிக்க இரண்டாயிரம் சொற்களும் தொடர்களும் உள்ளன. கலைமகளைக் குறிக்க எண்ணூறு சொற்கள் உள்ளன.
மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளைக் குறிக்கும் சொற்களோடு கலந்து வரும் பத்தாயிரம் தொடர்களையும், மரபுத் தொடர்களையும் ஐம்பொறி அகராதி என்ற பெயரில் மணிவாசகர் நூலகம் வெளியிட்டது. மனம் என்ற ஒரு சொல்லோடு சேர்ந்து வரும் பதினையாயிரம் தொடர்களும், மரபுத் தொடர்களும் தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வளவு சொற்செல்வம் உலகில் வேறு எந்த மொழியிலாவது உண்டா என்று யாராவது தெரிவித்தால் நன்றி கூறுவேன். எனக்குத் தெரிந்தவரை வேறு மொழிகளில் இல்லை.
சிவபெருமானுக்குரிய முப்பதாயிரம் பெயர்களைத் தொகுத்துள்ளேன். வடமொழியில்கூட இவ்வளவு சொல வளமில்லை. உலகிலேயே அதிகமான பெயர்களைக் கொண்டவர் சிவபெருமானே. திருமாலுக்கு இருபதாயிரம் பெயர்கள் உள்ளன. உமாதேவிக்கு ஆறாயிரம் பெயர்கள் உள்ளன. இதுவரை வெளிவராத பேச்சுத் தமிழ் அகராதியும், வட்டார வழக்கு அகராதியும், யாழ்ப்பாணத் தமிழ் அகராதியும் தொகுக்கப் பெற்றுள்ளன.இன்னும் மோனை அகராதி, எதுகை அகராதி, முற்றெதுகை அகராதி, பல்பொருள் ஒரு சொல் அகராதி, வேர்ச் சொல் அகராதி, பிறமொழிச் சொல்லகராதி, வடசொல் - தமிழ்ச் சொல்லகராதி, இலக்கியப் பழமொழி அகராதி, அடைமொழி அகராதி, மேற்கோள் அகராதி முதலிய பல அகராதிகள் இன்னும் வெளிவராதவை. இவை வெளியிடப் பெற்றால் உலக அறிஞர்களின் பார்வை நம் செம்மொழித் தமிழின் பக்கம் திரும்பும் என்பதில் ஐயமில்லை.
கதிர்த் தொலைக்காட்சியின் நேர்காணலில் மு.ச.சிவம் அளித்த பதிலுரை
நன்றி : வளரும் தமிழ் உலகம் - 15 சூன் 2006
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|