வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 06 - 2006



புலம் பெயர்ந்த துயரம்
இருப்பவனுக்கோ வந்துவிடவும் வந்தவனுக்கோ சென்று விடவும்
அயல்தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும் சென்ட்டில் வேண்டுமானால்
வாசனைகள் இருக்கலாம் ! வாழ்க்கையில் ?

தூக்கம் விற்ற காசில்தான் - துக்கம் அழிக்கின்றோம்
ஏக்க நிலையிலேயே - இளமை கழிக்கின்றோம்.

எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்
விமானப் பயணத்தினூடே விட்டு விட்டு

கனவுகள் புதைத்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்.
மரஉச்சியில் நின்று.. தேன் கூட்டை கலைப்பவன் போல

வார விடுமுறையில்தான் பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை.

அம்மாவின் ஸ்பரிகசம் தொட்டு எழுந்த நாள்கள் கடந்து விட்டன
அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாள்கள் கசந்து விட்டன.

பழகிய வீதிகள், நண்பர்கள், கல்லூரி நாட்கள்
காணாமல் போய்விடுகிறது. கனவுக்குள் வந்து

நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம் நோன்பு நேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுகள்
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையாய் எதிர்பார்த்து
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்க் கோப்பை கிரிக்கெட்.

நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்..

கண்டிப்பாய் வரவேண்டும் சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு தொலைபேசி வாழ்த்தூனூடே
தொலைந்துவிடுகிறது எங்களின் நீ..ண்ட நட்பு.

எவ்வளவு சம்பாதித்தும்
அயல்தேசத்து ஏழைகள்தான்.

காற்றிலும் கடிதத்திலும் வருகின்ற
மரணச் செய்திக்கெல்லாம் ஆறுதல் தருவது
அரபிக்கடல் மட்டும்தான்..

இருப்பையும் இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்..

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்.. பேச்சு.. முதல் பார்வை.. முதல் கழிவு..
இவற்றின் பாக்கியத்தை தந்துவிடுமா.
தினாறும் - திர்ஹமும்.

கிள்ளச் சொல்லி குழந்தை அழும் சப்தத்தை
தொலைபேசியில் கேட்கிறோம்.

கிள்ளாமலேயே நாங்கள் அழும் சப்தம்
யாருக்கும் கேட்குமோ ?

புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்..
பழைய முகங்களின் மறைதலையும் கண்டு..
மீண்டும்
அயல்தேசம் செல்ல மறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்..

தங்கையின் திருமணமும்.. தந்தையின் கடனும்
பொருளாதாரம் வந்து.. சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது மீண்டும் அயல்தேசத்திற்கு.

ரசிகவ் ஞரினியார் துபாய்
gnaniyarrasikow@gmail.com

நன்றி : அணி மும்பய்




இதுதான் குடியரசு நாடு
தோழர்களே !
இந்த அநியாயத்தை
எங்காவது
கேட்டதுண்டா ?
நீ யாரிடமும்
வாங்காத கடனுக்கு
அடிமைப்பட்டிருக்கிறாய் !
ஏன் நானுந்தான்.

உண்ணாமல்
தின்னாமல்
பட்ட கடன் இது.
இந்திய மக்கள்
நூறு கோடிப் பேரும்
பட்ட கடன் இது.

உன் தலை மட்டுமல்ல
உன் வாரிசுகள் தலையும்
அடமானம்
வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கடன்களை
யார் வாங்கினார்கள் ?
நம்மை
ஆளுகின்ற ஆட்சியாளர்கள்.

எப்போதும்
வெளிநாடு பயணம் !
சொகுசு வாழ்க்கை வாழ
பேரம் பேசி
உடன்படிக்கை செய்கிறார்கள்.

மறுநாள்
உலக வங்கியில்
இந்தியா இந்தத் திட்த்திற்கு
இத்தனை கோடிக் கடன்
பத்திரிகையில்
பெரிய விளம்பரம்.

இப்படி எங்கள் மீது
கடன் வாங்க
இந்த
ஆட்சியாளர்களுக்கு
இந்த அதிகாரத்தை
யார் கொடுத்தார்கள் ?

என்ன ஆனோம்
என யாருக்கும் தெரியாது.
இதுதான் குடியரசு நாடு.

தோ. எழில் நிலவன் - களமருதூர்.

நன்றி : சிந்தனையாளன் சூன் 2006




அவன் ஒரு அகதி
அவர்கள் அவனது வாய்க்குப் பூட்டு போட்டார்கள்
கைகளை மரணப் பாறையில் பிணைத்துக் காட்டினார்கள்
பின்னர் கூறினார்கள்.
நீ ஒரு கொலைகாரன் என்று.

அவனது உணவையும் உடைகளையும் கொடியையும்
பறித்தார்கள்.
அவனை மரணச் சிறையில் வீசியெறிந்தார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஒரு திருடன் என்று.

எல்லா முகாம்களிலிருந்தும் அவனைத் துரத்தினார்கள்
அவனுடைய இளம் காதலியையும் பிடித்துக் கொண்டார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஒர் அகதி என்று,

இரத்தம் வடிக்கும்
கண்களும் கைகளும் உடையவனே !
நிச்சயம் இரவு விடியும்
சிறைச்சாலைகள் மிச்சமிரா
கைவிலங்குகளும் எஞ்சியிரா.

நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை.
அவள் தனது கண்களால் போரிடுகிறாள்.

இறக்கும் கதிரின் விதைகள்
விரைவில் பள்ளத்தாக்கைக்
கதிர்களால் நிரம்பும்.

பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ்

நன்றி : புதிய காற்று சூன் 2006.




சகுனம் சரியில்லை
ஊரை ஒட்டினாற்போல
ஆறு ஒன்று ஒடினாலும்
அதிகாலை நேரத்தில்
அம்மா
அதில் குளிக்கப் போவதில்லை.

கூப்படு தூரத்தில்
கோயில்கள் இருந்தாலும்
அதிகாலை பூஜைக்கு
அம்மா
தரிசிக்கப் போவதில்லை

கைம்பெண்ணைக் கண்டு போனேன்..
தரித்திரத்தைப் பார்த்துச் சென்றேன்..
கைகூடவில்லை காரியம் என்று
கண்டவர்கள் தூற்றுவார்களாம்...!

ஒருக்களித்த கதவருகில்
ஒரு நாழிகை காத்திருந்து
நிறைகுடங்களை கண்டபின்தான்
என்றைக்கும் போல
இன்றைக்கும் என்னை
அம்மா
வேலை தேட அனுப்பி வைத்தாள்
அறுபதாவது முறையாக.

நாவல் குமாரகேசன்

நன்றி : கணையாழி சூன் 2006




உரைவீச்சுகள்
குழந்தையும் தெய்வமும்
ஒன்று...
பொய் சொல்லாதீர்கள்
குழந்தை
பலி கேட்காது.


பள்ளிக்கு விடுமுறை
மகிழ்ச்சி ஆரம்பம்
மகிழ்சிக்கு விடுமுறை
பள்ளி ஆரம்பம்.


பக்கத்து வீட்டுப்
பையன்
புத்தகம்
கொடுத்தான்
என்ன
இருக்குமோ..!

நன்றி: விகடகவி சூன் 2006




உலகத்தமிழர் பண்
இணைந்தோம் ! உலகத் தமிழராய்
நாங்கள் இணைந்தோம் !
நினைந்தோம் ! எங்கள் தமிழ் உயிர்
உயிரென நினைந்தோம். (இணைந்தோம்)

தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்
தாங்கினோம் இன்பம் தாங்கினோம் !
அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்
அன்பினால் உலகை வாங்கினோம் (இணைந்தோம்)

சிரிந்த தமிழ்முகம் நிலைத்த வையகம்
செய்வோம் என ஆணை ஏந்தினோம்
விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்
விடுதலை வானில் நீந்தினோம் (இணைந்தோம்)

மானமே வாழ்வாய் நின்றோம் !
மலைகளை மோதி வென்றோம் !

- உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் -
(உலகத் தமிழர்கள், மொழி,. கலை, பண்பாட்டு விழாக்களுக்குக் கூடும் பொழுது அனைவரும் இணைந்து பாடத்தக்க வாழ்த்துப் பாடல் இது)

நன்றி : இலண்டன் சுடரொளி - சித்திரை 2006.




நர்சரிப் பள்ளிச் சேர்க்கைக்கு நேர்காணல் தேவையா

பொதுவாகப் பள்ளிகளில், குறிப்பாக ஆங்கிலவழிப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கையின் பொழுது நேர்காணல் நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் பெற்றோர்கள் குறைந்த பட்சம் ஒரு பட்டமாவது பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் இப்பள்ளிகளில் உண்டு. இத்தகைய முறைகளால் பெரும் பிரச்சனை ஏற்படுவதாக டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் பெதுநலன் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி விஜயேந்தர் ஜெயின் மற்றும் நீதிபதி அகர்வால் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர்.

விசாரணை முடிவில் தனியார் பள்ளிகளில் நர்சரிப்பள்ளி சேர்க்கைக்கு நேர்காணல் நடத்தக் கூடாது என்று கூறியது நீதிமன்றம். 9-12-2005 இல் நீதிமன்றம் சேர்க்கை குறித்து வழிகாட்டல் அளித்திருந்தது. இதற்குரிய பதிலினை பள்ளி நிர்வாகங்கள் அளிக்கவில்லை. இப்போக்கிற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குழந்தைகளிடம் நேர்காணல் என்ற பெயரில் கொடுமை நடப்பதால் குழந்தைகள் மனதளவில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அக்குழந்தைகளின் பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என பொதுநலன் வழக்குத் தொடுத்த தொண்டு நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது.

இதில் உண்மை இருப்பதை உணர்ந்த நீதிமன்றம், குழந்தைகள் சேர்ப்பின் போது, நேர்காணல் கூடாது எனத் திட்ட வட்டமாக உத்தரவிட்டுள்ளது.

நன்றி : மனித உரிமைக் கங்காணி - சூன் 2006




பெட்ரோலிய மாற்றுப் பொருள் உற்பத்தியில் கரையானின் பங்கு.
(சிறுகதை)

சி.பாலகிருஷ்ணன்.

புதை படிவ எரிபொருள்களின் ஆதாரங்கள் மக்கட் தொகை பெருக்கத்தாலும், அதிக அளவிலான பயன்பாட்டாலும் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தங்கம் விலை உயர்ந்து வருவது போலவே, உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து, மற்ற பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. எனவே, எரிபொருளைக் குறைந்த விலையில் பெறுவதற்கான மாற்று வழிமுறைகளைக் கண்டறிவதில் அறிவியல் உலகம் ஈடுபட்டு வருகிறது.

அழுகுகின்ற பொருள்களிலிருந்து நுண்ணுயிரிகள் மூலம் எத்தனாலைப் பிரித்து எடுத்தால் பிரித்தெடுக்கப்பட்ட எத்தனாலைக் கொண்டு, பெட்ரோலியத்துக்கு மாற்றான எரிபொருளை உண்டாக்க முடியும்.

ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றிலிருந்து பெட்ரோலியத்துக்கான மாற்று எரிபொருளை உண்டாக்க முடியுமென்று கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஜாரெட் லீட்பெட்டர் என்ற விஞ்ஞானி கூறுகிறார்.காட்டாமணக்குச் செடியிலிருந்து மாற்று எரிபொருள் தயாரிப்பது இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

பெட்ரோல் 15 சதவீதமும் எத்தனால் 85 சதவீதமும் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்திக் கார்களை இயக்கும் முறை புழக்கத்துக்கு வந்து விட்டது. ஈஸ்ட் உயிரிகள் தமக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்காகச் சர்க்கரையைச் சிதைக்கின்றன. அதிலே, உப விளைபொருளாக எத்தனால் கிடைக்கிறது.

இந்த முறை நொதித்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் செடி கொடிகளின் தண்டுகளில் செல்லுலோஸ் எனப்படும் சிக்கலான மூலக்கூறு உள்ளது. மனிதர்கள் கூட இதைச் சீரணிக்க முடியாத, கடினத்தன்மையுடையதாக இந்த மூலக்கூறு இருக்கும். எனவே செல்லுலோஸை உடைத்து சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுவதைக் கரையான்களும் மற்றும் அதுபோன்ற சில உயிரிகளும் செய்கின்றன.

கரையான்களின் குடலில் செல்லுலோஸை உடைத்துச் சிதைக்கும் என்சைம்கள் இருப்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டு பிடித்துள்ளனர். பசுவின் வயிற்றிலும் இந்த என்சைம்கள் இருக்கின்றன.

கரையான், பசு மற்றும் இதுபோன்ற உயிரிகளின் துணை கொண்டு செல்லுலோஸை உடைத்து, சர்க்கரையைச் சிதைப்பதன் மூலம் நொதித்தல் முறையில் எத்தனாலை உருவாக்க முடியுமென்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த முறை பரவலாக நடைமுறைக்கு வரும்பொழுது மாற்று எரிபொருள்கள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிடுமென்று நம்பலாம்.

நன்றி : சுற்றுச் சூழல் புதியகல்வி சூன் 2006




தமிழ்வழிக் கல்வி

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம். தமிழ் படிக்காமலேயே பட்டம் பெறும் அவமானகரமான சூழ்நிலைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது போதாது.,

தமிழகக் கல்வித்துறையில் சகல மாவட்டங்களிலும் தமிழ்ப் பயிற்சி மொழியாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

ஆங்கிலவழி மெட்ரிகுலேசன் பள்ளிகள்கூட தமிழ்வழிக் கல்வி வகுப்புகளைத் தொடங்க முன்வந்திருப்பது நல்ல மன மாற்றத்திற்கு அறிகுறியாகும். தமிழ்வழிக் கல்விக்கே இனி எதிர்காலம் உணடு என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்வழிக் கல்வியை கொண்டு வருவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்.

உயர்கல்வி மட்டத்தில் தமிழைப் பயிற்சி மொழியாக்குவதற்கு முதல்படியாகக் கலை மற்றும் அறிவியல் நூல்களை தமிழாக்க வேலைகள் முடுக்கி விடப்படவேண்டும். பொறியியல், மருத்துவம் ஆகியவற்றை தமிழில் நடத்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் முன்வந்துள்ளது. ஆனால் அரசு ஆதரவின்மையால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அது போன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.

தமிழ்நாட்டில் அறிவியல் தமிழ் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை. முனைவர் மணவை முஸ்தபா அவர்கள் தனது சொந்த முயற்சியினாலும் உழைப்பினாலும் அறிவியல் அகராதிகள் 9 உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும் பல மருத்துவர்களும், பொறியியலாளர்களும் தமது துறைகளைப் பற்றி தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள். இத்தகைய அறிஞர்களைப் பயன்படுத்தி ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றினை வகுத்து அனைத்துப் பாடங்களுக்குமான நூல்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே தமிழைக் கல்வி மொழியாக்குவதில் தமிழகம் மிகவும் பின்தங்கிவிட்டது. பிற மாநிலங்கள் நம்மைவிட முன்னேறிவிட்டன.

மீண்டும் பதவியேற்றிருக்கும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசு இப்பிரச்சினைக்கு முதன்மை கொடுத்து நிறைவேற்றித் தமிழர் உள்ளங்களைக் குளிரச் செய்யும் என்று நம்புகிறோம்.

ஆசிரியர் உரை

நன்றி : தென் ஆசியச் செய்தி சூன் 1-15, 2006




சுவிட்சர்லாந்தில் தமிழில் கல்வியாம்.


தமிழர் தமிழராகச் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழவேண்டும் என்பதற்காகத் தமிழ்ச் சமூகம் எடுத்துள்ள மாபெரும் முயற்சிகளைத் தெரிந்து கொள்வோமா?

12 ஆண்டுகளாகச் சுவிட்சர்லாந்து நாட்டில் இடையீடின்றி தமிழ் மொழிப் பாடத்தில் சிறுவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காகத் தமிழ்ப் பள்ளிகள் பல சுவிட்சர்லாந்து நாட்டில் உள, அப்பள்ளிகளில் தமிழ் நூலகங்களும் உள.

முதலாம் வகுப்புத் தேர்வு தொடக்கம், பத்தாம் வகுப்புத் தேர்வு வரை பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

கடந்த 6-5-2006 சனிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் 17 மண்டலங்களிலும் 37 தேர்வு மையங்களில் 3349 மாணவர் தமிழ்மொழித் தேர்வு எழுதினார்கள். 300 தமிழ் ஆசிரியர்கள் இத் தேர்வுகளை மேற்பார்வை செய்தனர்.

தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் ஆங்கிலம், பிரெஞ்சு, சப்பான், ரஷ்ய, செர்மன் மொழிகளைக் கற்பிக்க அந்தந்த நாடுகள், தூதரகங்கள் மூலம் நிதி வழங்கி தத்தம் மொழிகளைக் கற்பிக்க முனைகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் தமிழக அரசின் உதவியின்றியே தமிழ் கற்பிக்கப்படுகின்றது என்பது தமிழகத் தமிழரின் மான உணர்வை கேள்விக்குறியதாக்கி விடுகிறது அல்லவா. ?


செம்மொழிக் காவலர் மணவை முஸ்தபா

20-5-2006 அன்று தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ் மய்ய ஆட்சி மொழி - செம்மொழிக் கருத்தரங்க நிகழ்ச்சியில் அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா அவர்களுக்கு பழ.நெடுமாறன் அவர்களால் செம்மொழிக் காவலர் எனும் விருது வழங்கப்பட்டது. சமற்கிருதத்திற்கு முற்பட்ட தமிழுக்கு உரிய உயர்நிலையை மைய அரசு அளிக்க மறுத்து வருவதற்கு, தகுந்த ஆதாரங்களுடன் அவ்வப்போது அஞ்சாது கட்டுரைகள் எழுதித் தமிழ் அறிஞர்களின் நிலைப்பாட்டையும் முறைபடுத்திய பெருமை படைத்தவர் மணவை முஸ்தபா அவர்கள். அறிவியல் தமிழ் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வரும் செம்மொழிக் காவலரைப் பாராட்டி மகிழ்கிறோம்.

நன்றி : யாதும் ஊரே சூன் 2006




சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

- புலவர் வெற்றியழகன் -

செய்யுள்கள் இயற்றப்படும் காலத்துச் சூழ்நிலை வேறு. அதனை அப்பொழுதே படிப்போர் அக்காலச் சூழ்நிலைக்கேற்ற பொருள் பொதிந்திருப்பதனால் படித்துச் சுவைத்து இன்புறுவர்.

செய்யுள் இயற்றி நூற்றுக் கணக்கான ஆண்டுகள் சென்று விடுமானால் அப்போது இருக்கின்ற சூழ்நிலை வேறாக மாறி அமைந்து விடுகின்றது,

ஆலகால விடத்தையும நம்பலாம்
ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலிையும் நம்பலாம்
கால னார்விடு தூதரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

என்பது விவேகசிந்தாமணி செய்யுள். இச் செய்யுளுக்கு சேலை கட்டிய பெண்களை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிக்க வேண்டியதுதான் - என்று எல்லோரும் பொருள் கூறுகின்றனர்.

முதலடியில் ஆல என்றும் இரண்டாவது அடியில் கோல என்றும் மூன்றாவது அடியில் கால என்றும் ல - வே எதுகையாக வந்திருக்க, நான்காவது அடியில் மட்டும் லை - எதுகையாக வந்துள்ளதே என்று கொஞ்சம் சிந்தித்தோமானால் தவறு சரியாகப் புரிந்துவிடும்.

ஒழுங்கான எதுகையென்றால் - ல - வே வந்திருத்தல் வேண்டும். லை - வரக்கூடாது என்பதில்லை - லையும் வரலாம். அதுவும் இடையில் வந்தால் குறிலே. ஆனாலும் ல - வே சிறப்பு. அவ்வாறு அதனையும் ல - வாக்கினால் சேல கட்டிய - என்று ஆகும். சேல் அகட்டிய என்பதுவே சேலகட்டிய என்று ஆகும். சேல் என்றால் , கெண்டை என்று பொருள். கெண்டை கண்ணுக்கு உவமை. அதனால் உவமையாகுபெயராய்ப் பெண்ணின் கண்ணைக் குறிக்கும்.

அகட்டிய என்றால் உருட்டிய - உருட்டுகின்ற என்று பொருள். சேல கட்டிய - என்பதற்குக் கண்களை உருட்டுகின்ற பெண்களை நம்பாதே என்று பொருளாகும். கண்களை உருட்டுபவர் தாசியர். தாசியரை நம்பினால் நீ நடுத்தெருவில் நின்று தியங்கித் தவிக்க வேண்டியதுதான் என்று பொருள் படும். இந்தப் பொருளே சரியானதாக இருக்கும். பொருத்தமானதாகவும் இருக்கும்.

நன்றி : கண்ணியம் - சூன் 2006




பரப்புரை கலாச்சாரத்தை நிறுத்துங்கள்

பரப்புரை (campaingn) கலாச்சாரம் நமது நாட்டில் தவிர்க்கவியலாத ஒன்றாக மாறிவிட்டது. புகை பிடிப்போருக்கு எதிராகப் பரப்புரை, சிந்தித்துச் செலவு செய்யுங்கள் என்பதற்கு ஒரு பரப்புரை, பணவீக்கத்திற்கு எதிராகப் பரப்புரை, வாசிப்பதற்கு ஒரு பரப்புரை, தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஒரு பரப்புரை என நாடு முழுவதும் பரப்புரைப் பணிகள் பல்கிப் பெருகி வருகின்றன.

பரப்புரைப் பணிகள் செய்வது எளிமையான ஒன்றல்ல. திட்டமிடல்கள் தொடங்கி அதற்காக மிக அதிகமான பணம் செலவிடப்படுகிறது. மக்களின் உழைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தப் பரப்புரைப் பணிகள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அளிக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே ! பல பரப்புரைப் பணிகள் தொடங்கிய நோக்கத்தைச் சென்றடையாமல் பாதியிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் பண விரயத்தையும், நேர விரையத்தையும் சந்திக்க வேண்டி வருகிறது.

அண்மையில் அரசாங்கம் பள்ளி மாணவர்களின் கட்டொழுங்கு சிக்கல்களுக்குத் தீர்வு காண ரிம 1.6 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடானது பள்ளிகளின் ஒழுங்கீனச் செயல்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். மாணவர்களுக்குக் கலந்துரையாடல்கள் நடத்துதல், பள்ளிக்கு மட்டம் போடுவதற்கு எதிராகத் திட்டங்கள் செயல்படுத்துதல், பட்டணம் மற்றும் கிராமப்புற மாணவர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தவற்கு நிதி உதவி அளித்தல். மாணவர் சமுதாயச் சிக்கல்கள் தொடர்பான கண்காட்சி, மின்னியல் தொடர்வு சாதனங்களின் மூலம் பரப்புரை என இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு வகையான கையேடுகளும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்குதான் நாம் ஒன்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதுவரை செயல்படுத்தப்பட்ட எத்தனை பரப்புரைப் பணிகள் வெற்றி பெற்றுள்ளன? இளையோர் புகை பிடிப்பதற்கெதிரான தாக் நாக் பரப்புரைத் திட்டம் இன்று எந்த நிலையில் உள்ளது ? இளம் வயதினர் புகைபிடிப்பது நின்று விட்டதா? அல்லது கடைக்காரர்கள்தான் அவர்களுக்கு வெண்சுருட்டுகள் விற்பதை நிறுத்தி விட்டனரா?

இங்குப் பரப்புரைக் கலாச்சாரம் பல வேளைகளில் பயனளிப்பதில்லை என்ற கருத்தை நாம் உணர வேண்டும். பரப்புரைக் கலாச்சாரத்தைச் சிறந்ததொரு தீர்வாகக் கருதாமல் பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பல சமயம் பரப்புரை கலாச்சாரம் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே கருதப்படுகிறது. சிலருக்கு இந்தப் பரப்புரைப் பணிகள் வருமானத்தைத் தேடித்தரும் ஒரு தொழிலாகவும் இன்று கருதப்படுகின்றன.

பரப்புரைப் பணிகளுக்கான விளம்பரங்களைச் செய்தல், கையேடுகள், பதாகைகள் தயாரித்தல் - எனப் பலர் இதனால் மிகப் பெரும் இலாபத்தை அடைகின்றனர். ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ளும் நாம் முழுமையான நன்மையை அடைகிறோமா? எனவே பரப்புரைப் பணிகள் தொடங்கப்பட்ட நோக்கத்தை அடைந்து, வெற்றி பெற முறையான திட்டமிடல்கள் தேவை. இல்லையேல் வெற்றியளிக்காத பரப்புரைப் பணிகள் மட்டுமே செயல்பட்டு வரும் என்பது திண்ணம்.

நன்றி : செம்பருத்தி ஜூன் 2006




எது உலக மொழி ?

கூடுதலான காலனிகளைப் பெற்றிருந்த இங்கிலாந்தும், அதையடுத்து பிரான்சு, போர்த்துக்கல், ஆலந்து நாடுகளும் - ஆப்பிரிக்க கிழக்காசிய நாடுகளும், ஸ்பானியர்கள் தென் அமெரிக்க நாடுகளிலும் பெற்றிருந்த ஆட்சியதிகாரத்தைக் கொண்டு உள்நாட்டு மொழிகளை மெல்ல மெல்ல அகற்றி தங்கள் மொழி, உடை, பண்பாட்டினைப் புகுத்தினர்.

அவ்வகையில்தான் ஆங்கிலம் இந்தியத் துணைக்கண்டம் உட்பட்ட ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கோலோச்சத் தொடங்கியது. தங்கள் மொழி, பண்பாடே உயர்ந்ததென்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க ஆதிக்க சாதியைச் சார்ந்த அரசுப் பணியிலிருந்தோரைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆயினும் பல நாடுகளில் ஆதிக்கம் பெற்றிருந்த ஸ்யானியர்களைவிடவும் ஆங்கிலேயரே தங்கள் மொழித் திணிப்பைக் கல்வி முறையிலும் கூடுதலாகப் புகுத்தினர். அதனாலேயே ஆங்கிலம் உலக மொழி என்றும் உயரிய மொழி என்றும் இந்தியாவிலிருந்த ஆதிக்கச் சாதியினரை பரப்புரை செய்தனர்,

இன்று உலகப் பந்து முழுவதும் பெருமளவு பரவியுள்ள தமிழினத்தார் பல நாடுகளில் செல்வாக்குடன் வாழ்கின்றனர். தமிழ் மொழி அலுவல் மொழியாகச் சில நாடுகளில் உள்ளன.

மறுபுறம் தாய்மொழிக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்தும் செல்வாக்குப் பகுதியினர் கூறிவரும் ஆங்கிலம் உலக மொழி என்ற தோற்றம் சிதைந்து வருகிறது.

சீனரும் தனது பன்முக உற்பத்தி ஆற்றல், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றால் பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. சீன நாட்டின் சந்தை ஆற்றலும் பரிமாணமும் சீன மொழியினை ஒரு உலக மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக்கி வருகிறது என்பதைக் கீழ்க்காணும் தகவல் வழி அறியலாம்.

சீனரல்லாத சீன மொழி படிப்போர் உலகு முழுவதும் 3 கோடி (2005)
சீனரல்லாத சீன மொழி படிப்போர் - திட்டமிடப்பட்டுள்ளது 10 கோடி (2007)
சீன மொழி கற்பிக்கும் பல்கலைக் கழகங்கள் 100 நாடுகளில் 2300
சீனாவிலேயே வந்து படிக்கும் மாணவர்கள் 8600
800 அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் சீனமொழி வகுப்பு நடத்தப்படுகின்றது.
சீனமொழி கற்றுத் தரும் கன்பூசியஸ் பயிற்சி நிலையம் சியோல், அமெரிக்கா, கென்யா, உஸ்பெக்கிஸ்தான் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் தொலைக்காட்சி வழியே சீனம் (மாண்டரின்) கற்பிக்கப்படுகிறது.

நன்றி : இந்து நாளிதழ் 6-5-2006
நன்றி : தமிழர் கண்ணோட்டம் சூன் 2006





செர்மன் சிவ்வாயாவுடனான நேர்காணலில்

எங்கள் செர்மனியில் பிறமொழி வழியில் படிக்கத் தடையே இருக்கிறது. ஒரு கருத்தை, எங்கள் நாடு, எங்கள் பழக்கவழக்கங்கள், எங்கள் மண்ணுக்கு ஏற்ற தொழில் நுட்பம், எங்கள் வாழ்க்கைமுறை இவற்றை எல்லாம் சரியான பொருளுடன் விளங்கிக் கொள்ளவும், அதை எங்கள் நாட்டின் வளத்திற்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தாய்மொழி வழிக் கல்விதான் முறையானது. அப்போதுதான் அது புரியும். சரியாக மக்களிடம் சென்று சேரும். இதனால்தான் எங்கள் தாய்மொழியான செர்மன் மொழியில் நாங்கள் படிக்கிறோம்.

ஒரு மொழியில் பிற மொழிகளின் கலப்பு என்பது அந்த மொழியின் அசலை அழித்துவிடும். தமிழ்க் கற்றுவரும் எங்களுக்கு இங்கிருக்கும் விளம்பரப் பலகைகள் படிக்க மிகச் சிரமமாய் இருக்கிறது. தமிழில் இருக்கிறதே ஒழிய அது ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாக இருக்கிறது. இதனால் பொருள் விளங்கவில்லை. இது மிக அசிங்கமாக இருக்கிறது. நலலதல்ல,

புதிய சொற்கள் வரும்போதே அதற்கான முறையான தமிழ்ச் சொற்களைக் கண்டு அந்தச் சொற்களில் அவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் வேண்டாம். கணிப்பொறி வேண்டும். இப்படித் தமிழாக மாற்றி பயன்படுத்த வேண்டும்.

வெளிநாட்டிற்கு, வேலை வாய்ப்பிற்காக போகிறவர்கள் எத்தனைபேர்? நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காடு இருப்பார்களா? அந்து ஒரு விழுக்காட்டினருக்காக வேற்று மொழியில் அனைவரும் படிக்க வேண்டும் என்பது சரியாகுமா ? இது நல்லதல்ல, எந்த மொழியையும் 3 திங்களில் இருந்து 6 திங்களுக்குள் படித்து விடலாம். வெளிநாடு போகிறவர்கள் அந்தந்த நாட்டு மொழியை இப்படி விரைவாகக் கற்றுக் கொள்ளலாம். அதைவிட்டு மொழியினைச் சிதைப்பதும், புறந்தள்ளுவதும், வேற்று மொழியில் பயில்வதும் தவறானது. அவரவர் தாய்மொழியில் படிப்பதே முறையானது.

நன்றி : செளந்தர சுகன் சூன் 2006




ஒரே கல்வி முறை ஒரே கல்வி முறை ( ஒழிய வேண்டும் மெட்ரிக் கல்வி முறை ) என்ற கட்டுரை திருமிகு ம.முருகேசன் (வழக்குறைஞர், 64. சிவவாக்கியர் குடில், மருதாபுரம், கோவை - 641 046 ) அவர்களால் மள்ளர் மலர் சூன் 2006 இதழில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகக் கல்வி நிலையைச் சிறப்பாக விளக்குகிறது. பாடத்திட்டங்களைத் தமிழ்ப் படுத்தாமலிருப்பதன் கொடுமையை சுட்டுகிறது. இயல்பாக இருக்க வேண்டிய கல்வி - அழுத்துகிற, நெருக்குகிற, உள்ளார்ந்த ஆற்றலை அழிக்கிற தன்மையைக் கட்டுரையில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061