வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 1 - 6 - 2006



நேரிசை வெண்பா ( உவமையணி )
தித்திக்கும் தெள்ளமிழ்தே தேன்கடலே தெய்வதமே
எத்திக்கும் சீர்மல்கும் இன்றமிழே - இத்தரையில்
ஆன்ற துறையெல்லாம் ஆளும் கணினியைப்போல்
சான்ற துனதாட்சி தான்

- ஆ. இராமலிங்கம், வேளாங்கண்னி

தொட்ட இடஞ்சார்ந்து தோலின் நிறமாற்றி
ஒட்டுறவு கொள்ளும்பச் சோந்திகோல் - கட்டறுந்து
பட்டம் பதவிக்காய்ப் பல்லிளித்துக் கொள்கைதனை
விட்டலையும் கீழ்கள், விரட்டு.

- கோவி, கலியபெருமாள், அரியாங்குப்பம்

கடமணம் நாடும் கயவன் இணையின்
மடியில் படுத்தே மகிழவான் - முடிந்தபின்
வெற்றிபெற நத்திவந்த வேட்பாளன் போலவே
ஒட்டில்லை என்பான் ஒழிந்து

- ப.நீலா, புதுவை 13

நன்றி : தெளிதமிழ் - விடை தி.ஆ.2037




சவப்பெட்டி
விடாது
புகைப்பவனுக்கு
சிகரெட் பெட்டி

பேராசைப் பெண்டிருக்கு
தங்கம் வெள்ளி
நகைப்பெட்டி

ஏழைகளை
சுரண்டிக் கொழுக்கும்
செல்வந்தர்களுக்கு
பணப்பெட்டி.

கலப்படம் செய்யும்
கொள்ளை வியாபாரிகளுக்கு
கல்லாப்பெட்டி.

மக்கள் விரோத
லஞ்ச ஊழல்
அரசியல்வாதிகளுக்கு
வாக்குப்பெட்டி.

சீரியல் அடிமைகளுக்கு
சின்னத்திரைப் பெட்டி.

வீ. சகாயராசா
நன்றி : புதிய ஆசிரியன் - மே 2006




என்ன பெயர் வைத்தாய்?
என்ன பெயர் வைத்தாய் ? - பெற்ற
இனிய மழலையர்க்கு.
கன்னல் தரும் சாற்றில் - வளரும்
அன்னைத் தமிழிருக்க
பின்னை யொருமொழியோ? - அந்தப்
பொருளும் அறிகுவையோ?
உன்னைத் தமிழனென - என்றும்
உரைத்திட நான் ஒப்பேன்.

குயிலும் தன் துணையை - மாற்றிக்
கூவி யழைப்ப துண்டோ?
வெயிலில் ஆடமயில் - தோகை
விரிப்பதைப் பார்த்த துண்டோ?
பயிலுங்கிளி மொழியை - மாற்றிப்
பாடி மகிழ்வ துண்டோ?
துயிலும் எந் தமிழா! - உன்தாய்
சொன்ன மொழி எங்கே?

பறவை யினங்கூடி - அங்கே
பாடும் இசை கேட்பாய்.
உறவால் இகழ்ந்திடுமோ?
அரிமா முழக்கமதை - கூனும்
அணிலும் கொடுத்திடுமோ?
நரியின் ஊளையிட்டுத் - தெருவில்
நாயும் பிழைப்ப துண்டோ?

ஏட்டில் எழுதுவதால் - தமிழ்தான்
ஏற்றம் அடைந் திடுமோ?
வீட்டில் மலர்ந்திடச் செய் ! - காட்டும்
விழியில் மணந்திடச் செய்.
ஊட்டி வளர்த்த தமிழ் - உயிரை
உடலைக் குறித்திடச் செய்.
நாட்டின் இனமானம் - மொழியை
நாட்டவே றாருழைப் பார்.

- திருவை அரசு
நன்றி : தேமதுரத் தமிழோசை - விடை தி.ஆ. 2037




குறுங்காடு
நடிப்புலக ஆட்சியிலே நடிக ரெல்லாம்
நடமாடும் தெய்வங்க ளாக்கப் பட்டார்.
குடி, களவை, கொலை, சூதை, கற்ப ழிப்பை
குடியமர்த்தி விட்டார்கள், தமிழ்பண் பாட்டில்
கடிவாள மில்லாத குதிரை கள்போல்
கட்டுப்பா டற்றுவிட்ட இளைஞ ரெல்லாம்
அடிமைகளாய் நடிகரது பின்னா லோடும்
அவலமிதை என்னவென்று சொல்வ திங்கே ?

வருங்கால இளைஞரினைக் குறுங்கா டாக
வளர்த்துவரும் திரைத்துறையால் வந்த கேடு
கரைகோல முடியாத காட்டா றாகக்
கயிரறுந்து போய்விட்ட பட்ட மாக,
தரங்கெட்ட திரைப்படங்கள் வாயி லாகத்
தரிசாக மாற்றுகின்றார் தமிழ்நி லத்தை
எரிகின்ற மரக்கலமாம் திரைத்து றைக்கு
எவருதவி செய்துகரை ஏற்று வாரோ!

ஆடையுடன் ஆடுவதை அசிங்க மென்று
அவிழ்த்தனைத்தும் போட்டுவிட்டே யாடு கின்றார்
பாடையிலே போம்வரையில் திருந்தா தின்று
படத்துறையி லிருக்கின்ற கிறுக்கர் கூட்டம்!
கேடுபயக் கின்றதிரைப் படங்கள் பார்த்துக்
கெட்டொழிந்து போனவர்கள் கணக்கே திங்கே
பேடியின்கை வாள்போன்று கலைப்பண் பாடு
பெருமையினை இழந்துவெறும் இரும்பா யிற்றே!

விழிக்காதீர் திரைப்படத்தின் முகத்தில், யாரும்
விருந்தென்று நஞ்சுண்ணல்! விரும்பிச் சென்றே
செழித்தோங்கி வளர்ந்துவரும் தீமைக் கெல்லாம்
தீனிபோட்டு வளர்ப்பதெல்லாம் திரைப்ப டந்தான்!
கழிக்காதீர் திரையரங்கில் பொழுதைச் சற்றும்
கசடராக மாற்றிவிடும் நம்மை முற்றும்.
மொழியறிவே இல்லாத மூட ரெல்லாம்
முன்னணியி லிருந்துபடம் எடுக்கின் றாரே!

- இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக்குழுமம்
நன்றி : எழுகதிர் - மே 2006




வெள்ளைக்காரன் போகவில்லை
வெள்ளைக்காரன் போகவில்லை, இன்னும் வாழ்கிறான்.
விடுதலைக்குள் இருந்து நமை அடிமை கொள்கிறான்.
தள்ளவொணா ஆங்கிலமாம் இரும்பு விலங்கால்
தளைப்படுத்தி இளைஞர் வாழ்வைச் சீர்குலைக்கிறான்.

கல்லூரி வாசலில் அவன்தான் நிற்கிறான்.
கடைப் பெயரில், துறைப்பெயரில் அவன் சிரிக்கிறான்
உள்ளூரின் ஆட்சிதமிழ்! அதைத் தவிர்க்கிறான்
ஊடுருவல் காரர்கட்கு வழி திறக்கிறான்.

விழக் கூட்ட மேடைகளில் பேச்சாய் நிற்கிறான்
விளக்கங் கூறும் அறிக்கை அவன்தான் படிக்கிறான்
அழாக் குறையாய்த தமிழ்க்கிரந்தான் பாரதிதாசன்
அவன் பெயரைக் கெடுக்கிறானே ஆங்கிலக்காரன்.

கல்லூரி முதல்வர்களின் மூளை நஞ்சிலே
கலைக் கழகத் துணைவேந்தர் ஈளை நெஞ்சிலே
புல்லாட்சிச் செயலாளர் தோல் தடிப்பிலே
புகுந்ததுவோ வெள்ளைக் காரன் ஆவி தானடா?

செருப்பணிதல் வேண்டும்தான் கால்களில் அன்றோ?
சிறப்பென்றே அதைத் தலைமேல் சுமப்பதும் நன்றோ?
வெறுப்பில்லை, துணைமொழியாய்க் கொளத்தடை உண்டோ.
வீட்டுமொழி இடத்தை அது பறிப்பதும் நன்றோ?

- ம.இலெ. தங்கப்பா.
நன்றி : நற்றமிழ் - விடை தி.ஆ. 2037




உலகத்தமிழர் பண்
இணைந்தோம் ! உலகத் தமிழராய்
நாங்கள் இணைந்தோம் !
நினைந்தோம் ! எங்கள் தமிழ் உயிர்
உயிரென நினைந்தோம். (இணைந்தோம்)

தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்
தாங்கினோம் இன்பம் தாங்கினோம் !
அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்
அன்பினால் உலகை வாங்கினோம் (இணைந்தோம்)

சிரிந்த தமிழ்முகம் நிலைத்த வையகம்
செய்வோம் என ஆணை ஏந்தினோம்
விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்
விடுதலை வானில் நீந்தினோம் (இணைந்தோம்)

மானமே வாழ்வாய் நின்றோம் !
மலைகளை மோதி வென்றோம் !

- உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் -
(உலகத் தமிழர்கள், மொழி,. கலை, பண்பாட்டு விழாக்களுக்குக் கூடும் பொழுது அனைவரும் இணைந்து பாடத்தக்க வாழ்த்துப் பாடல் இது)

-----------

தமிழின் சிறப்பே ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள்தாம். தமிழ் மொழியின் வளமைக்குச் சான்று பகர்கின்றன. அவை, அந்த வகையில் யானைக்குத் தமிழில் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? 44 பெயர்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோமா?

அத்தி, ஆம்பல், இபம், உவா, உம்பல், எறும்பி, கரணி, கறையடி, களிறு, களடம், கடிவை, கயம், கரி, குஞ்சரம், கும்பி, கைம்மா, சுண்டாலி, சிந்துரம், தந்தி, தந்தாவளம், தும்பி, தூங்கல், தோல், நாகம், நால்வாய், நிருமதம், பதடு, புகர்முகம், பூட்கை, புழைக்கை, பெருமா, பொங்கடி, போதகம், மதமா, மதகயம், மருண்மா, மந்தமா, மதாவனம், மாதங்கம், வழுவை, வல்விலங்கு, வயமா, வாரணம், மொய்.

நன்றி : இலண்டன் சுடரொளி - சித்திரை 2006.




அடக்கி ஆள்பவன் வழிமுறை
அவர்களின் ஊருக்கு முதலில்
ஒரு பேயை அனுப்பினார்கள்.

அந்தப் பேய்
ஒரு மனிதனின் மூளையை விழுங்கியது.

அந்த மனிதனின் பயத்தின் நிழல்
ஊரெங்கும் பரவத் தொடங்கியது.

பின்பு அவன் கண்களைத்
தன் கண்களில் பொருத்தியது.

பழைய ரசனைகளையும்
பழைய காட்சிகளையும்
பழைய வரலாற்றையும்
திருடத் தொடங்கியது.

பேய் தனது நீண்ட கையினால்
ஒரு இதயத்தைப் பிடுங்கியது.

அதை அவன் காதலென்று
பிதற்றத் தொடங்கியதை ரசித்தது.

அவன் உறவுகள்
நேசங்கள்
நிறம் மாறத் தொடங்கின.

உதடுகளில்
நாக்கினில்
பேய் மந்திரங்களை ஒட்டியது.

அவன் இரண்டு கைகளும்
பேய்களுக்கு சேவகம் செய்யத் தொடங்கின.

அந்தக் கைகளில் உருவான
ஓவியங்களின் புதையல்கள்
கைகளில் விளைந்த சிற்பங்களைப்
பேயின் அகண்ட வாய்க்குளு தள்ளின.

எல்லாம் முடிந்த நாளில்
அந்த ஊர் முழுவதும்
பேயின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது.

பேயை அனுப்பியவன்
கடவுளோடு ஊருக்குள் புகுந்தான் ஓர்நாள்.

பிறகு அந்த ஊரையும்
ஊரிருக்கிற நாட்டையும்
ஆளத் தொடங்கினான்.

ஆளத் தொடங்கி
எத்தனையோ நூற்றாண்டுகள்
உதிர்ந்து விட்டன.

இன்னும் மீட்டெடுக்கப் படவில்லை
அந்தப் பழைய மனிதனை
அந்தப் பழைய் ஊர்களை
அந்தப் பழைய நேசத்தை.

- கோசின்ராவின் கவிதை -
நன்றி : கவிதாசரண் இதழ் - மார்- சூன் 2006




கேட்ஸ் ஒப்பந்தம்.

இந்தியக் கல்விக்கு ஆபத்து

கல்வி என்பது அறிவு பெற மட்டுமா? அதற்குள் பல பரிமாணங்கள் இருக்கின்றன. கல்வியை எந்த மொழியில் கற்பது? கல்விக் கூடங்களை யார் நிர்வகிப்பது? தரமான கல்வி என்று எதைக் கருதுகிறோம்? இதனை அரசுக் கல்வி நிறுவனங்களால் தர முடியாதா? கல்வியில் அந்நிய நிறுவனங்கள் மூக்கை நுழைக்கும் காலம் வருமா? எனப் பலபல வினாக்கள் நம்முன் நிற்கின்றன. இவற்றுக்கும் இன்னும் பல வினாக்களுக்கும் கல்வியாளர் எஸ். எஸ், இராஜகோபாலன் நேர்காணலில் பதிலளிக்கிறார்.
- நேர்காணல் மயிலை பாலு.

- இன்றைய கல்விமுறையில் ஆங்கில மோகம் ஏராளமான மக்கள்கிட்ட இருக்கு. இவர்களை மீட்க என்ன செய்யலாம்?
- ஒரே வரிச் சட்டம் போட்டு இதை மாற்ற முடியும். தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விதான் பன்னிரண்டாம் வகுப்புவரை என்று ஒரு சட்டம் போட்டால் இது நடக்கும். ஆனால் அந்த அரசியல் உறுதி இங்கே இல்லை.


- தாய்மொழியில் கல்வி கொடுக்கணும்னு தமிழ்நாட்டுலதான் போராட்டம் நடக்குது. இப்படிப்பட்ட போராட்டம் வேறெந்த மாநிலத்திலேயும் நடக்கறதா தெரியலியே.,
- குஜராத் மாநிலத்தில் எல்லாப் பாடங்களிலேயும் பி.எச்.டி.பட்டம் குஜராத் மொழியிலேயே வாங்கலாம். ராஜஸ்தான்ல ஒரு வார்த்த ஆங்கிலம் தெரியாம எம்.எஸ்.சி. பட்டம் பெறலாம். விருப்பமிருந்தா ஆங்கிலம் படிக்கலாம். இங்கேதான் ஆங்கிலம் படிக்லன்னா வீணாப் போயிடுவோம்னு நெனைக்கிறாங்க.


- ஆங்கிலக் கல்வி தேவையில்லன்னு நீங்க சொல்லறீங்களா?
- மொழியைக் கற்பது என்பது வேறு. ஆங்கிலம் படிச்சா மட்டும் அறிவு வந்துடாது. என்னோட அண்ணாரு எஸ்.எஸ்.கண்ணன் (சென்னையில் மார்க்ஸ் நூலகம் நடத்துபவர்) பிரான்சுக்குப் போனாரு. அங்கே மூணே மாசத்தில விக்டர் ஹியூகோ நாவலைப் படிக்கும் அளவுக்கு ஃபிரஞ்சு மொழிய கத்துக் குடுத்துட்டாங்க. ஆகவே எந்த மொழியையும் கொறைஞ்ச சாலத்துல கத்துக்கலாம். ஆனா தாய் மொழியில படிச்சாத்தான் எளிமையா படிக்க முடியும். மத்தவங்களுக்கும் நல்லா எடுத்துச் சொல்ல முடியும். அறிவு என்பது பொதுச் சொத்து. அதைத் தாய்மொழியில் பெற்றால்தான் எல்லோருக்கும் கொடுக்க முடியும்.


- காலனியாதிக்கத்துல ஆங்கிலம் எப்படி எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப் பட்டதோ அதே மாதிரி உலக மயத்துல இப்போது மீண்டும் ஆங்கிலத்தை அனைத்து நாடுகளின் மொழியாகக் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப மொழியாக மாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இது பற்றி உங்கள் கருத்து.
- இப்போ கேட்ஸ் ( GATS - General Agreement on Trading Services ) ன்னு ஒரு ஒப்பந்தத்துல இந்தியா கையெழுத்திடப் போவுது. அப்படி கையெழுத்திட்டா உயர் கல்வி முழுவதையும் வெளிநாட்டவர் வந்து இங்கே நடத்தலாம். அவங்க அரசாங்கத்திடமோ, பல்கலைக்கழகத்திடமோ, ஏஐசிடி யிடமோ, யூஜிசி யிடமோ அனுமதி வாங்க வேண்டாம். அவங்களே பாடத்திட்டத்தை வகுக்கலாம். பாடநூல்களைத் தயாரிக்கலாம். தேர்வு நடத்தலாம். பட்டம் கொடுக்கலாம். அதாவது இந்தியாவுக்குள்ளேயே ஒரு அயல்நாடு இருக்கும். நம்ம அரசு நிர்வாகத்திற்கு இணையா அவங்க ஒரு அரசாங்கம் நடத்துவாங்க. அமெரிக்காவுல எல்லா வர்த்தகத்திலும் பற்றாக்குறை. அவர்களுக்கு உபரியைத் தருவது கல்வி வியாபாரம் மட்டும்தான். ஆண்டுக்கு ஏழு பில்லியன் டாலர் உபரி கெடைக்குது. கேட்ஸ் வந்ததுன்னா இந்த உபரி ஏழு டிரில்லியன் டாலரா அதிகரிச்சிடும். அதுக்காகத்தான் அமெரிக்கா அழுத்தம் கொடுக்குது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாம மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்.


- இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் போட அரசுக்கு அதிகாரம் இருக்கு. மக்களில் பெரும்பாலோர்க்கு இது பற்றி விவரம் தெரியறதில்லை. இதுக்கு என்ன செய்யலாம்?
- அமெரிக்காவுல எந்த நாட்டோடும் ஒப்பந்தம் போட ஜனாதிபதிக்குக்கூட உரிமை கிடையாது. அவர் செனட் அனுமதியைப் பெற வேண்டும். ஆனா நம்ம நாட்டுல எந்த ஒப்பந்தத்திலேயும் அமைச்சர்கள் கூட கையெழுத்துப் போட்டுட்டு வந்திடறாங்க. இத மாத்தணும். அயல் நாடுகளுடன் போடுகிற ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம்.


நன்றி : மனித உரிமைக் கங்காணி - மே 2006




சிறுவர் பக்கம் - த.ரத்தினவிசயன் - தந்திரம்
(சிறுகதை)

ஒரு பூனை இருந்தது. அது எலி வேட்டையில் கெட்டிக்காரப் பூனை.
தினமும் பூனைக்கு எலிகள் கிடைத்தன. வயிறு முட்டத் தின்றது.
பாவம் எலிகள்.
சரி நம் இடத்தை மாத்தலாம் என்று முடிவு செய்தன.
வீட்டுக் கூரை விட்டங்களில் ஏறின.
அங்கே தங்கள் மாட மாளிகையைக் கட்டின. அது மட்டுமா ?
பூனை எங்கே இருக்கிறது. என்ன செய்கிறது. என்று கண் விழித்துக் காவல் காத்தன.
மியாவ் என்று சத்தம் வரும்
கண் சிமிட்டும நேரம்தான்.
எலிகள் சிட்டாகப் பறந்துவிடும்.
ஐய்யோ பாவம்.
பூனைக்கு எலிகள் கிடைக்கவில்லை.
பூனை என்ன பண்ணும்?
பூனை புல் திங்காதே.
பட்டினி கிடந்தது.
இப்படி எத்தனை நாள்கள் பட்டினி கிடப்பது?
பூனை ஒரு தந்திரம் செய்தது.
செத்தது போல் படுத்துக் கிடந்தது.
எலிகள் கூட்டத்தில் ஒரு கிழட்டு எலி.
அது நல்ல அனுபவசாலி.
அந்த கிழட்டு எலியிடம் குட்டி எலிகள் ஓடி வந்தன.
பூனை செத்துவிட்டது. இனிக் கவலையில்லை என்று மகிழ்வோடு கத்தின.
பப்பர...பப்பர..பப்பா... ஊ...ஊ...ஒய்...டும்டும்டும் என்று
பாட்டுப் பாடின. அங்கும் இங்கும் ஓடின.
செத்த பூனையைத் தொட்டுப் பார்க்கத் துடித்தன.
கிழட்டு எலி எட்டிப் பார்த்தது. பூனை மல்லாக்கக் கிடந்தது. கண்கள் மூடி சவமாகக் கிடந்தது. கிழட்டு எலிக்குச் சந்தேகம். பிள்ளைகளே இதில் ஏதோ சூது இருக்கு - என்று குட்டி எலிகளைத் தடுத்து நிறுத்தியது.
கிழட்டு எலி ஒரு அடி எடுத்து வைத்தது. பின்பு நின்றது.
அடுத்து ஒரு அடி. நின்றது. எலிகள் கூட்டம் சிரித்தது.
பெரிய தொடை நடுங்கி, பயந்தே செத்து விடும், ஏ புல்தடுக்கி பயில்வான் - என்று எலிகள் கூப்பாடு போட்டன.
பூனை மெல்ல ஒரு கண்ணைத் திறந்து பார்த்தது. பக்கத்தில் எலிகள் கூட்டம். நாவில் எச்சில் ஊறியது.
கிழட்டு எலி ஒரு தந்திர் செய்தது.
செத்த பூனையின் கண்கள் திறந்துதான் இருக்கும் - என்று
கிழட்டு எலி சத்தமாகச் சொன்னது.
இது பூனையின் காதில் விழுந்தது.
அய்யே...கண்ணை மூடுவதா? திறப்பதா? பூனை குழம்பிவிட்டது.
படக் - என்று இரண்டு கண்ணையும் திறந்தது.
அவ்வளவுதான் பூனையின் சூழ்ச்சி புரிந்து விட்டது.
எலிகள் விழித்துக் கொண்டன.
ஒரே பாய்ச்சல்தான் விட்டத்தில் இருந்தன.
கிழட்டு எலி சிரித்தது. பூனை ஏமாந்தது.
கண்ணை உருட்டி முறைத்தது.
ஏய் முட்டக் கண்ணு, உன் வாயில மண்ணு -
டுமுக்கு டப்பா....டுமுக்கு டப்பா... என்று எலிகள் தாளம் தட்டின.

நன்றி : விழிப்புணர்வு மாத இதழ் - எண் 8




சங்ககாலத் தமிழகம் கல்வியிற் சிறந்திருந்தது
2300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு.

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் (தமிழ்ப் பிராமி) எழுத்துப் பெறிப்புப் பெற்ற மூன்று சங்ககால நடுகற்களை முதன் முதலாகத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பை என்ற சிற்றூரில் இந்நடுகற்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்றூரான புலிமான்கோம்பை வைகை ஆற்றின் தென்கரையில் வத்தலக்குண்டிலிருந்து தெற்கே 15 கி.மீ தொலைவிலும், ஆண்டிப்பட்டியிலிருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப் பழமையானவை என்ற பெருமையை இந்நடுகற்கள் தட்டிச் செல்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சங்ககால நடுகற்களின் கல்வெட்டுப் பொறிப்பு இதுவரை தமிழகத்தில் கிடைத்த பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாகும். மூன்றடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்நடுகற்கள் நிலத்தில் ஓர் அடி ஆழத்தில் நடப்பட்டிருந்தன. இந்நடுகற்கள் சங்ககாலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளை உட்கொண்ட ஈமச் சின்னத்தின் ஒரு பகுதியாக நடப்பட்டிருந்ததால் தமிழக வரலாற்றாய்விலும் சங்ககால ஆய்விலும் சிறப்பான இடத்தை இவை பெற்றுத் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நடுகற்கள் தற்பொழுது முதன் முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கிய ஆய்விற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது. இதுகாறும் தமிழகத்தில் சமணர் உறைவிடங்களிலேயே பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வரிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழக மக்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுகிறது.

ஈமச் சின்னத்த்ன் ஒரு பகுதியாகக் காணப்பெற்ற இந்நடுகற்கள் விவசாயத்திற்காக நிலம் பண்படுத்தப் பெற்ற பொழுது அப்புறப்படுத்தப்பட்டுக் கிடந்தன. பின், கால ஓட்டத்தில் மண்ணுக்குள் புதையுண்டும் போயின. ஏராளமான முதுமக்கள் தாழிகள் புலிமான் கோம்பையிலும், பரல் உயர் பதுக்கைகள் இவ்வூரின் எதிர்ப்புறம் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பூம்பட்டியிலும் காணக்கிடைக்கின்றன. புலிமான் கோம்பைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள தெப்பத்துப்பட்டி என்ற சிற்றூரில் ஈமச்சின்னங்கள் காணப்படுவதால் சங்ககாலத்தில் இப்பகுதி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது.

கிடைக்கப் பெற்ற மூன்று நடுகற்களுள் ஒன்றில் "கல்பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோன்" என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல் எனப் பெருள் கொள்ளலாம். ஆ கோள் என்பதற்குப் பகைவரின் பசுக்களைக் கவர்தல் என்று பொருள் கொள்வதால் இது வெட்சிப் பூசலில் (போரில்) ஈடுபட்ட வீரனுக்கு எடுக்கப் பெற்றதாகும். சங்க இலக்கியமான மலைபடுகடாம். "கல்லெறிந்து எழுதிய நல்லரை மரா அத்த, கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை" என்று கூறுகிறது. " எந்தைமுன் நில்லன்மின் தெவ்வீர், பலர் என்ஐ முன்னின்று கல் நின்றவர்" என்பதும் கவனிக்கத் தக்கது. கல் என்ற சொல் நடுகல்லையே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆகோளைப் பற்றி வரும் தெளிவான முதல நடுகல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். தொல்காப்பியம் இதனை "ஊர் கொலை ஆகோன் பூசன் மாற்றே" (தொல். 20:3) என்று கூறும்.

அடுத்த நடுகல்லின் முன்பகுதி உடைந்து போய் உள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட பழந்தமிழ் (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்தில் எழுதப் பெற்ற இந்நடுகல்லில் இரு வரிகள் காணப்பெறுகின்றன. முதல் வரி "....அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் "......ன் அன் கல்" என்றும் காணப்பெறுகின்றன.

அடுத்த நடுகல்லில் "வேள் ஊர் பதவன் அவ்வன்" எனக் காணப்பெறுகிறது. இதற்கு வேள் ஊரைச் சார்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்கு எடுக்கப் பெற்ற நடுகல் எனப் பொருள் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட மூன்று நடுகற்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடுகற்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆகோளைப் பற்றிக் குறிப்பிடும் முதல் நடுகல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணக்கில் கொள்ளலாம். உயிரெழுத்துகளில் தொடங்கும் விகுதிகள் முந்தைய பெயர்ச் சொற்களுடன் இணையும் பொழுது, சேர்த்தெழுதப்படாமல் பிரித்தெழுதப்படுதல் பழமரபு. அதே மரபு இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே இக்கல்வெட்டுகள் மூன்றும் காலத்தால் முற்பட்டவை எனக் கருதலாம். தொல்லெழுத்தியல், எழுத்தமைப்பியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை.

நடுகற்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சங்ககாலப் புலவர்கள் இவற்றை வியந்து கூறியுள்ளனர். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், ஐங்குறுநூறு, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் நடுகற்களைப் பற்றியும், அவ்ற்றில் காணப்பெறும் எழுத்துகளைப் பற்றியும் சிறப்புறக் கூறுகின்றன. சீத்தலைச் சாத்தனார், "விழுத் தொடை மறவர் வில்இட விழ்ந்தோர், எழுத்துடை நடுகல்" (அகம் : 53) எனவும், ஓதலாந்தையார், விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர், எழுத்துடை நடுகல் (ஐங்குறுநூறு : 352) எனவும், மதுரை மருதன் இளநாகனார், பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத்தோன்று பெயரும் குயில் எழுத்து (அகம் : 297), மரம்கோள் உமண்மகள் பெயரும் பருதிப் புன்தலை சிதைந்த வன்தலை நடுகல், கண்ணி வாடிய மண்ணா மருங்குல், கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து (அகம் : 343) எனவும் குறிப்பிடுகின்றன. இக்குறிப்புகள் அனைத்தும் சங்ககாலத்தில் எழுப்பப் பெற்ற நடுகற்களில் எழுத்துகள் இருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன. இப்போது கிடைத்துள்ள சங்ககால நடுகற்கள் மூலம் முதன் முறையாக இவ்வுண்மை உறுதிப்படுத்தப் பெறுகிறது.

இந்நடுகல்லின் ஒளிப்படத்தைப் பார்வையுற்ற மூத்த கல்வெட்டறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் பின்வருமாறு கருத்துரைத்தார். "எழுத்தமைதியின் அடிப்படையில் இந்நடுகற்கள் மாங்குளம் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளை ஒத்திருப்பதால் இவற்றின் காலத்தை கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்லலாம். இந்தியாவில் கிடைத்த நடுகற்களில் காலத்தால் முந்தைய நடுகற்கள் என்ற பெருமையை இந்நடுகற்கள் பெறுகின்றன.

தமிழகத்தில் கிடைத்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் பிராகிருதச் சொற்களின் கலப்பின்றித் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதப் பெற்றுள்ளன. சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் கல்வி அறிவைப் பெற்றுத் திகழ்ந்திருந்ததை இக்கண்டுபிடிப்பு உணர்த்துகின்றன.

இந்நடுகற்களைப் படித்துணர்வதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் உறுப்பினருமான பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் பெரிதும் துணைபுரிந்தார். முன்னாள் கல்வெட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் செ.இராசு அவர்கள் மத்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சார்ந்த முனைவர் சு.இராசவேலு, டாக்டர் இராசமாணிக்கனார், வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இரா.கலைக்கோவன், அரியலூர் அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் இல.தியாகராசன் மற்றும் மு.நளினி போன்றோர் கல்வெட்டுகளைக் கண்ணுற்று இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆய்வுக் குழுவைப் பாராட்டினர்.

இந்நடுகற்கள், தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர் கா.ராசன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள் வி.பி.யதிசுக்குமார் மற்றும் திரு சி.செல்வகுமார் ஆகியோர் கள ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆய்வாளர் முனைவர் மா.பவானி மற்றும் திரு.ச. வெங்கடாசலம் ஆகியோர் நடுகற்கள் கிடைத்த இடத்திற்கு வந்து கல்வெட்டுகளைப் படிக்க உதவி புரிந்தனர்.

நன்றி : தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி வெளியிடு.
நன்றி : மள்ளர் மலர் - மே 2006






செம்மொழித் தமிழுக்கு ஏன் இந்த நிலை ?

- மணவை முஸ்தபா -

நடுவணரசு சட்ட பூர்வமாகத் தமிழை செம்மொழியாக ஏற்கும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமை உருவாக்கிய குறைந்த அளவு தேசிய செயல் திட்டத்தில் செம்மொழித் தமிழும் சேர்க்கப்பட்டபோது தமிழர்கள் பெருமகிழ்வடைந்தார்கள். தேசிய செயல் திட்டத்தில் இறுதியாக இணைக்கப் பட்டாலும், விரைவிலேயே செயலாக்கம் பெறும் வகையில் நடுவணரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்த போது தமிழுலகமே பூரித்துப் போனது. அம்மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

காரணம் ?

செம்மொழித் தமிழ் ஆயிரம் ஆண்டுத் தொன்மையுடைய மொழி என்று அறிவிக்கப்பட்டது தான்.

செம்மொழிக்குரிய அடிப்படைத் தகுதிகளில் முதன்மையானதாக உலக மொழியியல் வல்லுநர்களும் யுனெஸ்கோ போன்ற மொழி சார்ந்த உலகப் பேரமைப்புகளும் பெரிதும் கருதுவது மொழித் தொன்மை (Antiquity) ஆகும். எந்த மொழிக்கு மிக நீண்ட பழமை உள்ளதோ அந்த மொழி பெருமைக்குரிய தொன்மைமிகு செம்மொழியாகப் போற்றப்படும் சிறப்பைப் பெறுகிறது.

இவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் உட்பட்ட மொழிகளில் தமிழ் உட்பட லத்தீன், கிரீக் முதலாக ஆறு மொழிகளைத் தொன்மைமிகு செம்மொழிகளாக யுனெஸ்கோ உலகப் பேரமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.அவற்றுள் மற்ற செம்மொழிகளுக்கு இல்லாத சிறப்புத் தன்மை, செம்மொழித் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் ... மொழிக்கு முதுகெலும்பு போன்றது வரிவடிவ எழுத்து முறை. மற்ற செம்மொழிகளின் வரிவடிவ எழுத்துமுறை உருவான கால கட்டத்தை ஓரளவு அனுமானிக்க அக-புறச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் வரி வடிவ எழுத்து முறை எந்தக் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான கால எல்லையை இதுவரை வரையறுக்க இயலாநிலை.

தமிழ்மொழி முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் உருவான எழுத்துமுறை. அங்குதான் மூன்று தமிழ்ச் சங்கங்களுள் முதல் தமிழ்ச் சங்கமும் இடைச் சங்கமாகிய இரண்டாம் தமிழ்ச் சங்கமும் அமைந்து, தமிழ் வளர்ந்தன என்பது வரலாறு. பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட பின்னர் எஞ்சிய தமிழ்ப்பகுதிகளில் இன்றைய மதுரையில் கடைச்சங்கமாகிய மூன்றாம் தமிழ்ச் சங்கம் உருவாகி, தமிழை வளர்க்க முற்பட்டது என்பது தமிழின் தொன்மை குறித்த வரலாறாகும். எனவே, தமிழின் எழுத்து வடிவம் எப்போது உருவாக்கப்பட்டது என்பதற்கான தடயமே இன்றுவரை கிட்டாத காரணத்தால், உலகத்து மொழிகளிலேயே காலம் கணிக்க முடியாத மிக நீண்ட தொன்மையுடைய மொழியாக, மொழியியல் வல்லுநர்கள் தமிழைக் கருதுகிறார்கள். இதனை மொழிநூல் வல்லார் கால்டுவெல்லும் மொழியியல் தந்தை டாக்டர் எமினோவும் மொழி ஞாயிறு பாவாணரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு மொழி செம்மொழித் தகுதியுடையதாக ஏற்கப்பட வகுக்கப்பட்டுள்ள பதினொரு தகுதிப்பாடுகளில் முதன்மைத் தகுதிப் பாடாகத் தொன்மை கூறப்பட்டுள்ளது.

ஆனால் நடுவணரசு தன் செம்மொழி அறிவிப்பில் ஆயிரம் ஆண்டுத் தொன்மை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு ஏற்கிறது என மத்திய அரசு அறிவித்ததன் மூலம், காலம் கணிக்கவியலா தமிழின் தொன்மைச் சிறப்பு வெகுவாக கொச்சைப்படுத்தப்பட்டது. அதிலும் தமிழின் பெருமையைப் பேசியே வளர்ந்தவர்கள், தமிழுக்காகவே வாழ்வதாகப் பறைசாற்றிக் கொள்பவர்கள், அரசின் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்று மாய்ந்து மாய்ந்து நன்றி கூறி வாழ்த்தி மகிழ்ந்தார்கள். நகரம் முதல் பட்டி தொட்டி வரை வெற்றி விழாக்களைக் கொண்டாடவும் தவறவில்லை. காரணம், தமிழ் நயத்தைவிட தங்கள் நயத்தை, தங்கள் கட்சி நலத்தைப் பெருக்கிக் கொள்வதே அவர்தம் நோக்கும் போக்குமாம்.

செம்மொழி அறிவிப்பின் மூலம் தமிழின் தொன்மைச் சிறப்பு வெகுவாக இழிவு படுத்தப்பட்டுள்ளதைச் ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டியபோது செம்மொழி அறிவிப்பின் மூலம் தமிழுக்கு மகுடம் சூட்டிவிட்டதாக விளம்பரப்படுத்தி தமிழ் செம்மொழி ஆகிய பெருமையை கட்சிப் பெருமையாக்கி, எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் திட்டம் பாதிக்கப்படுகிறதே என எண்ணி என்மீது வருத்தப்பட முடிந்ததே தவிர உலகத்து மொழிகளிலேயே தமிழுக்கென்று இருந்த தலையாக பெருமை இந்த அறிவிப்பின் மூலம் தவிடுபொடியாகிறதே என்ற உறுத்தல் அவர்களுக்கு ஏற்பட்டதாகவே தெரியவில்லை. மாறாக அத்தொன்மைச் சிறப்பை நியாயப்படுத்தி வாதிடவும் தவறவில்லை.

நம் தமிழ்மொழி செம்மொழியாக மத்திய அரசால் ஏற்கப்பட வேண்டுமென நாமெல்லாம் ஆசைப்படுவது போல் கன்னடக்காரர்களும், தெலுங்கர்களும் தங்கள் மாநில மொழியான கன்னடமும், தெலுங்கும் செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அம்மொழி பேசும் மக்கள் கோருவதில் என்ன தவறு இருக்கமுடியும்? செம்மொழித் தகுதிக்கு ஆயிரம் ஆண்டுத் தொன்மை என்று இருந்ததால் தானே அம்மொழிகளும் செம்மொழியாக முடியும். அம்மொழிகள் செம்மொழி ஆவதை தமிழின் நீண்ட நெடிய தொன்மையைக் காட்டி நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்ற வினா எழுப்பிய போது அதற்கு மறுமொழியாக "ஐ.ஏ.எஸ்" என்று அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணிக்கு அடிப்படைத் தகுதி ஏதேனுமொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் பள்ளியிருதிவரை படித்திருக்கிறார். அவர் ஆட்சிப் பணியில் சேர வசதியாக அப்பணித் தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதியாக பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்பு என்பதை அடிப்படைத் தகுதியாக ஆக்கச் சொன்னால் எப்படியோ அப்படியிருக்கிறது உங்கள் வாதம் என்றபோது வாயடைத்துப் போன நிலை ஏற்பட்டது.

கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாவதை யாரும் எதிர்க்கவில்லை. வரவேற்போம். ஆனால் அம்மொழிகள் ஆயிரம் ஆண்டுத் தொன்மை மட்டுேம் உடையவை. எப்படியாவது அவற்றைச் செம்மொழி அங்கீகாரம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழின் தொன்மையைக் குறைத்து ராஜராஜசோழன் காலத்துக்குப் பிந்திய காலம் முதலே இருந்து வருவது தமிழ் என்பதைவிடத் தமிழுக்கு வேறு இழுக்கு இருக்க முடியுமா? என வெகுண்டு கூறியபிறகே தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் டாக்டர் கலைஞர் மீண்டும் பெரும் முயற்சி மேற்கொண்டு செம்மொழிக்கான தொன்மைத் தகுதியை இரண்டாயிரம் ஆண்டுகள் என மாற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். பலன் ஆயிரம் - ஆயிரத்து ஐநூறு என ஆகியது. இரண்டாயிரம் ஆண்டுகள் என ஆக்க முடியவில்லை. இது முக்கால் கிணறு தாண்டிய நிலை.

தமிழின் தொன்மைக்கு இதுவும் பெரும் இழுக்காகவே அமைகிறது. தொல்காப்பியர் 2600 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர் எனத் தொல்காப்பியக் காலத்தை வகையளவு செய்துள்ளனர். மறைமலையடிகள் முதலானோர் இதையே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தன் தொல்காப்பியப் பூங்காவில் பதிவு செய்துள்ளார். எள்ளிலிருந்து எண்ணெய் என்பது போல் இலக்கியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதே இலக்கணநூல். அவ்வகையில் தொல்காப்பியருக்கும் முன்னதாக பல நூறு ஆண்டுகள் இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தையதாகிறது தமிழ் இலக்கியக் காலம். ஆனால் தமிழின் தொன்மை 1,500 என இந்நூல் கால வரையறை செய்வதன் மூலம் தமிழ் மொழி பக்தி இலக்கிய காலத்திற்குப் பின்னர் உருவாகி நிலைபெற்ற மொழி என்றாகிறது. அப்படியானால், தமிழ்க் காப்பிய காலம், திருவள்ளுவர் காலம், சங்ககாலம், அதற்கு முந்தைய தொல்காப்பியர் காலம், அதற்கும் முந்தையதான பழந்தமிழ் இலக்கிய காலம் இதெல்லாம் இல்லாமலே போக நேர்கிறது. இதைவிட பேரிழுக்கு நம் முன்னோர்களுக்கு, அவர்கள் உருவாக்கிய புகழ்மிகு காலகட்டங்கட்கு வேறு யாரும் ஏற்படுத்த முடியாது. இது தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் வரலாற்றுக் களங்கம் ஆகும். வரலாறும் இதை மன்னிக்காது. எனவே, தமிழின் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனச் சட்டபூர்வமாக உறுதி செய்வதே நம் முன்னோர்கட்கும் வரலாற்றுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன்.

அடுத்து, செம்மொழித் தமிழுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர், கல்வித் துறையில் இடம் பெற வேண்டிய செம்மொழித் தமிழை நிதி வசதியோ துறை விரிவோ ஏதுமற்ற பண்பாட்டுத் துறையில் கொண்டுபோய் வைத்து தனிமைப் படுத்தப் பட்டிருப்பதாகும்.

மொழி என்ற அளவில் கல்வியோடு தொடர்புடையது தமிழ்மொழி. மரபு முறையில் ஏற்கப்பட்டுள்ள சமஸ்கிருதம் முதலான செம்மொழிகள் கல்வித்துறையில் இடம் பெற்று அனைத்து நலன்களையும் பெற்று வரும்போது, தமிழ் மட்டும் ஏன் பண்பாட்டுத் துறையில் என நான் வினா எழுப்பியவுடன் - தமிழ்தான் முறைப்படி மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள முதல் செம்மொழி. இனிமேல்தான் சமஸ்கிருதம் முதலான மரபு முறையில் ஏற்கப்பட்டுள்ள செம்மொழிகள் சட்ட அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது அவை தமிழ் செம்மொழிப் பட்டியலில், தமிழை அடுத்து இடம் பெறும். அப்பட்டியல் முழுமையடைந்த பின்னர் கல்வித்துறையால் ஏற்கப்படும் - என என் கேள்விக்கு நாளிதழ்களில் பதிலளித்தார் மத்திய அமைச்சர் இராசா அவர்கள்.

சரி, சென்ற சில மாதங்களுக்கு முன்பு சமஸ்கிருதம் சட்ட பூர்வமாக செம்மொழியாக நடுவணரசால் ஏற்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டது. தமிழ் செம்மொழிப் பட்டியலில் தமிழுக்கு அடுத்ததாக இடம் பெற்றதா. இல்லையே ! இன்று வரை கல்வித் துறையில்தானே இருந்து வருகிறது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா ?

அது மட்டுமா? ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழி வல்லுநர்கட்குச் சிறப்புச் செய்யும் நாள். தமிழ் செம்மொழியாக அரசு ஏற்று ஓராண்டாகிய நிலையில் நடைபெற்ற விழாவில் தமிழ் என்ற சொல்கூட அவ்விழாவில் உச்சரிக்கப்பட விலலையே ஏன் ? இதன் பொருள் என்ன? செம்மொழித் தமிழைக் கல்வித் துறை ஏற்பதற்கு மாறாக, அவர்கள் வேண்ட, அவர் கல்வித் துறையிலிருந்து 352 கோடி நிதி ஒதுக்கி, தமிழ் வாரியம் அமைத்தார். பண்பாட்டுத் துறையில் இருக்கும் செம்மொழித் தமிழுக்குக் கல்வித்துறை வழங்கும் நிதி உதவி. இது பக்கத்து வீட்டுக்காரர் விருந்து போடுவதைப் போன்றது. விருந்தும் மருந்தும் மூன்று நாள்கள் என்பது பழமொழி. இந்நிதியுதவி எவ்வளவு காலத்துக்கு என்பது கல்வியமைச்சருக்கே வெளிச்சம்.

செம்மொழி சமஸ்கிருதம் பல நூறு கோடிகளை நிதியுதவியாகப் பெறுமபோது தமிழுக்கு ஒருசில துளிகளை மட்டுமே வழங்குவது என்ன நியாயம்?

மொத்தத்தில் தமிழ் செம்மொழி என்ற பெயரில் வெறும் கண்துடைப்புக் காட்சிகளே இதுவரை அரங்கேற்றப் பட்டுள்ளன. உண்மையான அக்கறையோடு முறைப்படியான மாற்ற திருத்தங்கள் செய்யப்பட்டு, செம்மொழித் தமிழ் இரண்டாமாண்டுத் தொன்மைச் சிறப்புடன் கல்வித்துறையில் முழுமையாக இணைவதன் மூலமே தமிழ் பெறக்கூடிய பயன்கள் அனைத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்பதை இனியாவது உணர்ந்து தெளிந்து செயல்படுவார்களாக.

நன்றி : வடக்கு வாசல் இதழ் - ஏப்ரல் 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061