வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 05 - 2006



பெளத்த தம்ம சக்கரத்திலுள்ள 24 ஆரங்களின் பொருள்கள்

1. அன்புடைமை
2. அருளுடைமை
3. அறமுடைமை.
4. ஆசையில்லாமை
5. அறிவுடைமை.
6. அழுக்காறின்மை.
7. இனிமையுடைமை.
8. இன்னா செய்யாமை.
9. கள்ளாமை.
10. ஈதல்.
11. காமம் கொள்ளாமை.
12. ஊரோடு ஒழுகல்.
13. ஒழுக்கம் உடைமை
14. மது உண்ணாமை
15. சூது, கொல்லாமை
16. பண்புடைமை
17. ஊக்கமுடைமை
18. பொதுவுடைமை
19. பொருளுடைமை.
20. பிறனில் விழையாமை.
21. போர் இல்லாமை.
22. பொய் சொல்லாமை.
23. கல்வியுடைமை.
24. ஒற்றுமை.


(புத்த மதம் பேணுபவர்களுக்கு இந்தத் தகுதி இருக்க வேண்டும்)


மரணப் படுக்கையில் ...
மரணப் படுக்கையில் இருந்த புத்தர், ஆனந்தரை விளித்து.. ததாகதரின் அருளுரைகள் மட்டுமே இன்று உள்ளன. அவர் இன்று நம்மோடு இல்லை என்கிற எண்ணம் இனி உங்களில் சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால், ஆனந்தா அப்படி யாரும் நினைக்கக்கூடாது. தம்மம் என்றும் வினையம் என்றும் நான் உங்களுக்குச் சொன்னவை என்றும் உங்களை வழி நடத்தும். நான் மறைந்த பின் சங்கம் விரும்பினால் அவற்றில் சாதாரமானவற்றையும் சிறியவைகளையும் விட்டு விடலாம். என்றார்.

பின்பு பிக்குகளை அழைத்து ஏதேனும் அய்யங்கள் உள்ளனவா என மும்முறை வினவினார். அனைவரும் அமைதியாய் இருந்தனர். ஏதும் அய்யமில்லை என உறுதிப்படுத்திக் கொண்ட புத்த பகவான் "எனவே பிக்குகளே நான் உங்களுக்குச் சொல்கிறேன் எதுவும் நிரந்தரமன்று, எல்லாம் அழியக்கூடியவையே. கவனமாய்ச் செயற்பட்டு இலக்கை எட்டுங்கள்" - என்றுரைத்தார்.

இதுவே அவரின் இறுதிச் சொற்கள். அந்த வைகாசி பவுர்ணமிப் பின்னிரவில் கி.பி.486 அவர் உயிர் பிரிந்தது. எண்பதாண்டுக் கால உலக வாழ்க்கை, சுமார் அய்ம்பதாண்டுக் காலம் அலைந்து திரிந்த அருளுரைப் பணி முடிவுக்கு வந்தது. பெரும் மறைவு நிகழ்ந்தது.

நன்றி : யாதும் ஊரே - சித்திரை 2037




சினிமாக் கதையல்ல ...உண்மை.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக ஒரு பெரிய உண்ணாவிரதப் போராட்டம் விருதுநகரில் நடைபெற்றது. தொழிற்சங்கத் தலைவர் செயலர் என ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

மாலை ஐந்து மணி உண்ணாவிரதப் போராட்டம் முடியப்போகும் ஐந்து நிமிடங்களுக்கு முன் அதன் தலைவர் முக்கிய இரண்டு தோழர்களை அழைத்து மெல்லமாய் கூறுகிறார். "என் தந்தை அதிகாலை நான்கு மணிக்கு இறந்துவிட்டார். உங்களுக்குத் தெரிந்தால் உண்ணாவிரதப் போராட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடக்காமல் பாதிக்கப்படும் என்பதால் உங்களிடம் சொல்லவில்லை. நான் கிளம்புகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவிட்டுச் சென்றவர் தலைவர் ஜீ.வி எனச் செல்லமாக அழைக்கப்படும் தோழர் ஜீ.வேலுச்சாமி. தொழிலாளர்கள் அனைவரும் அவரது இயக்க உணர்வை நினைத்து வாயடைத்துப் பெருமித்துப் போய் நின்றார்கள்.

தோழர் ஜீ.வி.மிகவும் எளிமையானவர். தொழிலாளர்களின் கண்ணின் இமையாய் திகழ்பவர். அனைவரிடமும் அன்பாய் பழகக்கூடியவர். நாளுக்கு நான் பெருகிவரும் ஆடம்பர உலகில், ஓர் அரசு ஊழியர், தன் வீட்டில் ஆடம்பரப் பொருள்கள் இன்றி எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

நன்றி : பயணம் இதழ் - மே 2006





தாய்மொழிப் பற்று மிக்க தலைவர்

தாய்மொழியான பிரஞ்சு மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவருக்கு பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தார்.

நம்பமுடியாத இந்த நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றுள்ளது.

பிராசல்சு நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டம் நடைபெற்ற போது ஐரேர்ப்பிய ஊழியர் கூட்டமைப்பின் தலைவரான எர்னல்டு அந்தோனி செய்லியர் என்பவர் பேசும் ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கினார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பிரதமர்களும் பங்கேற்ற அக்கூட்டத்தில் இருந்த பிரான்சு குடியரசுத் தலைவர் சிராக் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

பிரெஞ்சுக்காரராக இருந்தும் நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் எனக் கேட்டார்.

ஆங்கிலம் வணிக மொழி எனவே பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசுவதால் தவறு இல்லை என அவர் பதிலளித்தார்.

இதைக் கண்டு கொதித் தெழுந்த சிராக் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்தார். அவருடன் நிதியமைச்சர் தியரியிரிடன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப்பி பிளாசி ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர்.

ஐரோப்பிய ஒன்றியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தங்களின் தாய் மொழியிலேயே பேசுவது வழக்கம். பிரஞ்சு மொழியில் அவை உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படும். ஆனால் 2004 ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் இணைந்த பிறகு ஆங்கிலம் சிறிது சிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 நாடுகள் மட்டுமே இருந்தன. அவைகளில் 3 நாடுகள் பிரஞ்சு மொழி பேசும் நாடுகளாக இருந்தன. தற்போது உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. எனவே ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவதை பிரான்சு எதிர்த்து வருகிறது.

பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவரே தாய்மொழி உணர்வில் தமது மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் பல தலைவர்கள் ஆங்கில மோகம் தலைக்கேறத் தள்ளாடுகிறார்கள். தமிழ்நாட்டின் தமிழர்கள் நடுவே பேசும் போதும் கூட ஆங்கிலத்தில் உரையாற்றுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.

தாய்மொழியான தமிழைப் புறக்கணித்து அன்னிய மொழியான ஆங்கிலத்தைத் தலைமேல் தூக்கிக் கொண்டு இந்தத் தலைவர்கள் கொண்டாடுவதைப் பார்த்த பாமரத் தமிழர்களும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.

பிரான்சு நாட்டின் தலைவருக்கு இருக்கும் தாய்மொழிப் பற்று தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு வரும் நாளே தமிழருக்கு விடிவு வரும் நாள்.

நன்றி : தென் ஆசியச் செய்தி - மே 1-15




குறும்பாக்கள்.

சிறைக் கைதிகள்
கொண்டாடுகிறார்கள்
விடுதலை நாள்.

மூட நம்பிக்கையை
ஒழிக்க வேண்டும் என்றவன்
கட்டி இருந்தான் தாயத்து.

கிணற்றில்
தடுக்கி விழுந்தது
நீச்சல் தெரியாத நிலா.

கு.அ.தமிழ்மொழி - புதுவை.
நன்றி : குழலோசை - ஏப் 2006


களைத்துக் கிடந்தான்
நிழலூட்டியது மரம்
அதால் முடிந்தது அவ்வளவுதான்.

வலிக்கும்போதுதான்
உறைக்கிறது
சுள்ளான்களின் கொடுமை.

பெண் என்றால்
பெரும் பாக்கியம்
பசுக்கள்.

சிவ பூசை
கோயில் மேளம்
மாட்டுத் தோல்.

கண்டுகொள்ளப் படாவிட்டாலும்
பூக்காமலில்லை
காட்டுப் பூக்கள்.

உதிரும் போதும்
நிழல் தருகின்றன
இலைகள்.

வேலிகள்
தின்கின்றன
ஆடுகள்.

கார்முகில் நறுக்குகள்
நன்றி : மண் மொழி இதழ் 4.





மறு
திருமாவளவன்

முதலில் நாவைப் பிடுங்கி எறி
பின்
கொம்பர்களை ஒவ்வொன்றாய் நறுக்கு
அடியைக் கோடரி கொண்டு தறி.

வேரிலிருந்தும் முளைவிடக்கூடும்
தோண்டு
அகப்பட்டதை எல்லாம் அப்புறப்படுத்து

எங்காவது ஆழப் புதைந்திருக்கும்
மீதி
உள்ளே விறகினைப் போட்டுத் தீமூட்டு

ஊரிலெனில் எல்லாம் எளிது
ஒரு கைக்குண்டு
அல்லது
ஒரு சிறு துவக்கு
போட்டுத் தள்ளியிருக்கலாம்.

வன்மம்
ஒரு கைதேர் பாடகனின் அலாபனைபோல
மிக மிக அழகாய்
மிக மிக இயல்பாய்
நிகழ்கிறது
மனிதனைப் பிறிதொரு மனிதன்
வீழ்த்தும் கலை
இது
போரின் பின்
விளைவு
விடு
தலையின்
மறு
முகம்.

நன்றி : கணையாழி - மே 2006





அன்பாதவன் கவிதைகள்

நம்பிக்கையோடு
உரையாடுகிறது மிருகம்
கண்களில் கனவுகள் மின்ன

தனித்திருந்தவன் உடலைப்
பிணைத்திருக்கிறது நாகமொன்று

தீண்டத் தீண்டப் பரவுகிறது
இன்ப விஷம்.

ஒவ்வொருக் கொத்தலும் வெவ்வேறு
வகையாக
குருதி வெளியேற்றி
குடியேறியது ஆலகாலம்.

அயர்ச்சியாய் இருக்கிறது மீண்டுத்
திரும்புதல்
என சலித்த நாகத்தை
அணியாய் தரித்தேன் சிவனாய்.

ஞாபகங்கொள்ளவியலா மாநகரின்
சராசரிகளுக்குள்
வித்தியாசமானதாய் அழைத்ததொரு
கருத்த மிருகம்.

அகண்ட மார்பும் வலிய புஜங்களும்
மிருக பலம் சொல்பவை
கண்களுக்குள் கனவுகளை அடைகாத்ததின்
உரையாடல்களில் ததும்பும் நகைச்சுவை.

இயல்பே இதுதானோ?
எனக்குமுண்டு எனக்கேயெனக்கான
தனிச் சோகங்கள்
கம்மிய குரலில் மெல்லியப் புன்னகை மிளிர.

காலாற நடக்க விரும்பிய
வலிய மிருகம் கட்டப்பட்டிருந்தது
பல்வேறு முளையடித்த கயிறுகளில்
நகரவுமியலாமல்.

நன்றி : புதிய பார்வை ஏப் 1-15


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061