சாகித்ய அகாடமி விருதைப் புறக்கணித்த அருந்ததிராய்
இந்தியவில் இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் சாகித்ய
அகாடமி விருதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களைத் தேர்ந்தெடுத்து
இவ்விருது வழங்கப்படுகிறது. இதனைச் சாகித்ய அகாடமி என்ற தன்னாட்சி பெற்ற நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்குப் பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததிராய் தேர்வு
செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன்
இதழில் அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள் "தி அல்ஜிப்ரா ஆப் இன்பினிட் ஜஸ்டிஸ்" என்ற பெயரில்
புத்தகமாக வெளிவந்தது.
அரசியல் விமர்சனக் கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு உலக
மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் எல்லையற்ற நீதி என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு
வெளிவந்தது.
விருது விழாஅடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இதனை வாங்க அருந்ததிராய் மறுத்துவிட்டார். இது
தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "சாகித்ய அகாடமி தேர்வுக்குழுவினர் மீது நான் மிகுந்த
மதிப்பு வைத்திருக்கிறேன். எழுத்துலகில் சாதனை படைத்த ஏராளமானவர்களுக்குக் கடந்த ஆண்டுகளில்
இவ்விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம்முறை நான் இவ்விருதைப் பெறப் போவதில்லை. அரசுக்கு
எதிரான என்னுடைய போராட்டத்தைப் பதிவு செய்ய இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்" என்றார்.
மேலும் இது தொடர்பாக சாகித்ய அகாடமிக்கு தனது நிலையை விளக்கி பேக்ஸ் ஒன்றும் அனுப்பியுள்ளார். "தி காட்
ஆப் சுமால் திங்க்ஸ்" என்ற தனது முதல் நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு உலகப் பிரசித்தி பெற்ற புக்கர் பரிசு
பெற்ற அருந்ததிராய். மத்திய அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தவர். 1998 ஆம் ஆண்டு
பொக்ரானில் நடந்த அணு சோதனையையும், பெரிய அணைகள் கட்டுவதையும் எதிர்த்து அப்போது ஆட்சியில்
இருந்த பா.ஜ.க. கூட்டணி அரசை வெளிப்படையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : மனித உரிமைக் கங்காணி இதழ் -பிப்ரவரி 2006
|
த்வைதம் - சி. மணி
இன்றைக்குப் பொங்கல்
இதையெடு முதலிலே சனியன்
வாசலிலே நாற்றம் குமட்டுது
என்று ரீனா கத்த
பன்றி விட்டை பொறுக்கிய
ஒற்றை நாடிக் கிழவி
போகிற போக்கில்
வெளியில் நாறுது, வீட்டுக்குள்ளே
சேர்த்து வைத்தது மட்டும்
மணக்குது என்று முணுமுணுக்க
பொங்கலும் அன்றுமாய்
ஒரே வாசனைமயம்தான்
இன்றைக்கு.
நன்றி : கணையாழி இதழ் - பிப்ரவரி 2006 .
|
செந்தமிழ் நாடு - தமிழேந்தி
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - துன்பத்
தீவெள்ளம் பாயுது காதினிலே - எங்கள்
சொந்த உரிமைகள் போகையிலே - வெப்பச்
சூடு பறக்குது மூச்சினிலே!
காவிரி தென்பெண்ணை பாலாறு - தனில்
கண்டவன் செய்கிறான் கோளாறு - எங்கள்
மேவிய செல்வங்கள் போயினவே - பிறர்
மேய்ச்சலுக்காய் அவை ஆயினவே !
வள்ளுவனைக் கோணி மூட்டையிலே - கட்டி
வைத்ததும் எழாத தமிழ்நாடு - நெஞ்சில்
அள்ளும் நெருப்பைக் கன்னடத்தான் - வைத்தும்
அசைவே இல்லாத தமிழ்நாடு !
கல்விக் கொள்ளையில் தமிழ்நாடு - பணம்
கறப்பது எங்குமே வெளிப்பாடு - இந்தப்
பல்வித மான கொள்ளையிலே - அரசு
பங்கு கேட்கிற தமிழ்நாடு !
நீலத் திரைப்படப் போதையிலே - பெண்கள்
நித்தம் சின்னத் திரைப்படப் பாதையிலும் - இங்கு
நாளும் கிடந்திடும் தமிழ்நாடு - கேட்க
நாதி யற்றதோர் தமிழ்நாடு !
தேர்தலைக் காணும் தமிழ்நாடு - போலித்
திராவிடத் தால்வீழ்ந்த தமிழ்நாடு - அட
யார்வந்து ஆண்டென்ன தமிழ்நாடு - தில்லி
ஆண்டைகள் அடிதொழும் தமிழ்நாடு !
தண்ணீரை விற்றிடும் தமிழ்நாடு - அரசே
சாராயம் விற்கும் தமிழ்நாடு - மக்கள்
கண்ணீரைச் சிந்தவா தமிழ்நாடு ? - வந்து
கண்டவன் சுரண்டவா தமிழ்நாடு ?
பேதம் வளர்த்திடும் தமிழ்நாடு - சாதிப்
பேய்கள் உலாவிடும் தமிழ்நாடு - நல்ல
பாதையைத் தமிழா நீதேடு - உழைப்போர்
பக்கத் துணையுடன் போராடு.
நன்றி : சிந்தனையாளன் இதழ் - பிப்ரவரி 2006
|
செந்தில் பாலா - கவிதை
கண்ட இடத்துல முளைச்சிபுடும்னு
பனஞ்சால ஓரமாவ போய்
சப்பிப்போட்ட கொட்டையையும்
பனம்பழத்தையும் பொருக்கி,
எனக்கு தட்டுல கம்மியா தூக்கிவிட்டுட்டு
கூடையில தூக்கி போகும் பாட்டி.
கெணத்து மோட்டு பார்மண்ண பரப்பி
தனித்தனிக் கொட்டையா பிச்சி அடுக்கி
மேலே மண்ண விசுருவோம்.
குருத்தோலை வுட்ட பெறகு நோண்டி
வேரையும் குருத்தோலயையும் வெட்டி
உப்புப் போட்டு வெயிச்சி துண்ணா
துண்ண முடியாம எவ்ளோண்டு கெடக்கும்.
வெயிச்ச பனங்கெழங்க அஞ்சஞ்சா
தாளுகத்தையாலகட்டி சாக்குப்பையில் போட்டு
பாட்டிகிட்ட குடுப்பேன்.
பாட்டி நடந்தே செஞ்சிக்கு போயி
பள்ளிகூடத்துக்கு முன்னாடிகீற
முட்டாய் கடகார்கிட்ட வித்துட்டு
வெங்காயம், உருளை, கருணை
பீட்ரோட்டுன்னு வாங்கி வரும்.
அப்புறம்,
தனித்தனியா வெல சொல்லி
மீதிகாச எங்கிட்ட கொடுக்கும்.
இப்படி குருவி சேர்க்கிற மாதிரி
சேர்த்ததுதான்இதெல்லாம்ன்னு
சாய்வு நாற்காலியல் படுத்தபடி
தாத்தா புலம்பினாரு.
இந்த கத நல்லால்ல
நல்ல பைட் கதயா சொல்லு தாத்தா..
நன்றி : நறுமுகை காலாண்டு இதழ் - டிசம்பர் 2005
|
தீண்டத் தகாதவர்
இராமகிருஷ்ண பரமஹம்சர் காளிகோவிலில் அர்ச்சகர் பணியை தொடாந்து செய்தார்.
இடைஇடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள சேரிகுடியிருப்புக்குச் சென்று
தூய்மைப் படுத்துவார். கோவிலில் அர்ச்சகராக இருந்து கொண்டு சேரிக்குச் செல்வது மற்ற பூசாரிகளுக்குத்
தூய்மைக்குப் பந்தம் வந்துவிட்டதாக விமர்சிப்பார்கள். தாழ்ந்த குலத்தவரோ தான் வருவது மேல்குடிமக்களுக்குத்
தெரிந்தால் தங்களைத் தண்டிப்பார்கள் என்று கூறி இராமகிருஷ்ணரைத் தடுத்தார்கள். இருவருக்கும் பாதகம்
செய்யாது விடியற்காலை 3 மணிக்கே சென்று சேரியில் தனது பணியை முடித்து வருவார்.
தான் வணங்கும் காளியுடன் இவரது பிரார்த்தனை : "ஒன்றே குலம், ஒருவனே தேவன். மக்களுக்குள் தீண்டத்
தகாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் இந்தப் பாகுபாடு ஏன் யார் இதனை வகுத்தார்கள்? இந்தப் பாரபட்சம் எதற்காக?
உயிர்கள் அனைத்தும் உனது வடிவம். உயிர்களை படைத்தது இறைவன். இறைவனிடத்தில் இத்தகைய பாகுபாடு
இருப்பது இயற்கைக்கு ஒவ்வாது. ஒரு மனிதன் பிறப்பால் உயருவது கிடையாது. தனது பண்பால் உயருகிறான்.
யாருக்கும் அடிமையாகாது. யாரையும் அடிமைப்படுத்தாது சுதந்திரம் நிறைந்த பரமார்திக பெருவாழ்வு
வாழ வேண்டும்."
நன்றி : மூலிகை சஞ்சீவி இதழ் - பிப்ரவரி 2006
|
ஆய்வுத் தமிழ் இதழ் 1 - ஆசிரியர் உரையில்
...மிக விரைவாகப் பல துறைகளிலும் பல திக்குகளிலும் பல வகைகளிலும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்ற
தமிழை - தமிழியலின் ஆழ அகல உயர்வு நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான ஆசிரியரின்
ஆய்வாளரின் கடமை. இதற்கு உதவுவதற்காகவே இவ்விதழ் தொடங்கப் பெறுகின்றது.
ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கும் போது சந்திக்கின்ற முதல் சிக்கல் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே.
ஆய்வுக்களத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது, இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.
அனைத்துப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தனிப்பட்ட ஆய்வாளர்களிடமிருந்தும் தலைப்புகளைத் தொகுத்து
முனைவர் தமிழண்ணல் ஓர் நூல் வெளியிட்டுப் பல ஆண்டுகளாயிற்று. அடுத்து நிகழ்ந்த ஆய்வுகளின்
தலைப்புகளையும் இன்று வரை தொகுத்தும் நிறைவடையவில்லை. ஆய்வில் என்றும் நிறைவில்லை என்பது
உண்மை.
எனினும் முடிந்தவரை - மிக அதிகமான உழைப்பின் இறுதி எல்லையில் இயன்ற அளவிலான அதிகப்படியான
நிறைவை அடைந்துதான் தீரவேண்டும். அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அனைத்துப் பல்கலைக் கழகங்களின்
துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் உள்ள தமிழ்த் துறைத் தலைவர்கள் தாங்களாகவே மனமுவந்து இப்பணியில்
தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம். தாங்கள் பல பணிகளுக்கிடையே இதனையும் ஆய்வுக்
கடமையாகவும், தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டாகவும் கருதி ஈடுபட அழைக்கிறோம்.
கல்லூரிகளில் உள்ள தமிழ்த் துறைத் தலைவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பள்ளிகளில் உள்ள
தமிழாசிரியர்களும், தமிழன்பர்களும் தனிப்பட்ட ஆய்வாளர்களும் இதழியல் துறையிலிருந்தும் பதிப்புத்
துறையிலிருந்தும் கணிப்பொறித் துறையிலிருந்தும் பிற துறைகளிலிருந்தும் தமிழ்ப்பணி செய்வோரும் இணைந்து
பணியாற்ற அழைக்கின்றோம்.
உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உடனடியான உங்கள் பங்கேற்பு
மடலைததான் - பா.இறையரசன்
|
...குழந்தை...
உன் குழந்தைகள் உன்னுடையவை அல்ல
அவர்கள் அவாவுற்ற வாழ்வதன் மகவுகளே.
உன் மூலம் வந்தவர்களேயன்றி உன்னுடையவர்கள் அல்ல.
உன்னோடு இருந்த போதிலும் உனக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
நீ உனது அன்பைத தரலாம் ஆனால் உன் எண்ணங்களையல்ல.
ஏனெனில் அவர்கள் தங்களது சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
நீ அவர்களது உடல்களைத் தாங்கி இருக்கலாம். ஆன்மாவை அல்ல.
ஏனெனில் நாளை என்ற வீட்டில் அவர்களது ஆன்மா வசிக்கிறது
நீ கனவிலும் கூட அங்கே செல்ல முடியாது
நீ அவர்களைப் போல ஆக முயலலாம். ஆனால் உன்னைப் போல அவர்களை ஆக்க விரும்பாதே. ஏனெனில் வாழ்வு பின்னோக்கிச் செல்வதில்லை.
நேற்றுடன் தங்கி இருப்பதமில்லை
உன்னுடைய வில்லிலிருந்து ஏவப்பட்ட உயிர்த்துடிப்புடைய நாண்களே உனது குழந்தைகள்
- கலில் கிப்ரான் -
நன்றி : சிவானந்த யோகம் - டிசம்பர் 2005
|
தமிழ் அழியும் - பாடமொழி ஆக்காவிட்டால் !
ஒரு இனத்தை, கூட்டத்தை சுட்டிக் காட்ட மொழிகள் பயன்படுகின்றன.
ஒவ்வொரு இனத்தாரும் கூட்டத்தாரும் ஒரு மொழி பேசுகிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க 30 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன. அதில் 15 ஆயிரம்
மொழிகள் அழிந்து போக, 20 ஆம் நூற்றாண்டில் 15 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன. இப்போது 6,809 மொழிகளே
பேசப்படுகின்றன.
மொழிகள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு வருகின்றன. பேசுவோர் இல்லாததே இதற்குக் காரணம். ஆயிரம்
பேருக்கும் குறைவாகப் பேசக்கூடிய மொழிகள் ஒரு நூற்றாண்டில் அழிந்து விடுகின்றன.
இப்போதுள்ள 6,800 மொழிகளில் ஆயிரம் பேருக்கும் குறைவாகப் பேசும் மொழிகள் 3,000. இந்த மொழிகள்
இந்த நூற்றாண்டுக்குள் அழிந்து போகும்.
அதிக மக்கள் பேசும் 20 மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் 18 ஆவது இடத்தில் வகிக்கின்றது
முதலிடம், மாண்டரின் என்ற சீன மொழி. இம்மொழியை 88 கோடிப்பேர் பேசுகிறார்கள்.
ஆங்கிலம் பேசுவோர் 32 கோடிப் பேர். இந்தி, வங்காளி மொழிகளைத் தலா 18 கோடி மக்கள் பேசுகிறார்கள்
ஒரு மொழி தானே அழியும் போது அதைத் தற்கொலை என்று சொல்லுகிறார்கள்
நாலு ஆண்டுக்கு முன் (2001இல்) அழியும் நிலையுள்ள மொழிகள் பற்றி உலக நாடுகள் சபை ஒரு அறிக்கை
வெளியிட்டது. அந்தப் பட்டியலில் தமிழும் இருக்கிறது. என்று அப்போது புரளி கிளப்பப் பட்டது. ஆனால் அந்தப்
பட்டியலில் தமிழ் மொழி இல்லவே இல்லை.
கணினி மொழியாகத் தமிழ் ஆன பின்பு தமிழ் வளரும் மொழியாகிவிட்டது.
சில மொழிகளை மாற்ற மொழிக்காரர்கள் திட்டமிட்டு அழிக்கிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இந்த
அழிப்பு வேலை நடைபெறும். இந்த வேலையை மூன்று பகுதியாகப் பிரித்துச் செய்கிறார்கள் என்று உலக நாடுகள்
சபையின் மொழி கற்பித்தல் என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1) பள்ளிக்கூடங்களில் அந்நிய மொழியில் பாடம் கற்பித்தல்
2) பத்திரிகை, திரைப்படம், தொலைக்காட்சிகளில் அந்நிய மொழியைத் திணித்தல்
3) அந்நிய மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டுதல்.
அந்த மூன்று வேலையும் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் தமிழில்
பாடம் சொல்லித் தருவது இல்லை. பல பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாடமே கிடையாது. ஆங்கிலத்தில் பாடங்கள்
நடத்தப் படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்பட உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம்,
பத்திரிகைகளில் இந்திச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? வயிற்று சோற்றுக்குத் தமிழ் வழி செய்யுமா? என்று திட்டமிட்டுப் பிரச்சாரம்
செய்யப்படுகிறது. இந்தி படித்தால் இந்தியா முழுக்க வேலை கிடைக்கும் என்கிறாாகள். வயிற்றுப் பாட்டுக்கு
ஆங்கிலம் படிக்க ேவ்ணடும் என்கிறார்கள்.
இந்த மூன்றுமே தமிழை அழிக்கும், கொலை செய்யும் முயற்சி ஆகும் தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
தமிழில் பாடம் நடத்த வற்புறுத்த வேண்டும். பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் பிறமொழிச்
சொற்கள் திணிக்கப்படுவதை எதிர்க்கவேண்டும். தமிழனுக்குத் தமிழ் தெரியவேண்டும் என்பதை உறுதிப்படுத்த
வேண்டும். இந்தி படித்தால் வேைல் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அப்படியென்றால் வடிநாட்டில்
எல்லோருக்கும் வேலை கிடைத்திருக்கவேண்டுமே என்று திருப்பிக் கேட்க வேண்டும். தமிழர்கள் விழிப்புடன்
இருந்தால் மட்டுமே தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.
நன்றி : ராணி - வாரஇதழ், பொன்மலர் பெங்களூர் இதழ் - சன 2006
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|