வி.பொ. பழனிவேலனார்.
பிறப்பு : திருத்துறைப்பூண்டி வட்டம், விழல்குடி என்னும் சிற்றூர்.
வளர்ப்பு : மன்னார்குடி வட்டம், அரங்கநாதபுரம் எக்கல்.
பிறந்த ஆண்டு : 30-10-1909 , திருவள்ளுவராண்டு துலைத்திங்கள் 14 ஆம் நாள்
தொடக்கக்கல்வி : விழல்குடி, அரங்கநாதபுரம்
உயர்கல்வி : அரசர்மடம், ஒறுத்தவன்நாடு
மேற்கல்வித்தகுதி : புலவர் பட்டம், சென்னைப்பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சி,
பணிவிபரம் : தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950 முதல்
அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி 1968 இல் ஓய்வு பெற்றவர்.
தமிழ்ப்பணிகள் : தனித்தமிழ் இதழ் வெளியிட்டமை, தனித்தமிழின் சிறப்புகளைத் தமிழர்கள் உணரும் வகையில்
மாணாக்கன் என்ற தனித் தமிழ் மாதிகையை 1968 செப்படம்பர் முதல் 1975 வரை தொடர்ந்து நடத்தினார்.
தமிழ்க்கல்லூரி : 1972 இல் மறைமலையடிகளார் மகளிர் தமிழ்ப் பயிற்றுக் கல்லூரி தொடங்கி 1975 வரை
நடத்தினார்.(மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்தது)
இயக்கங்களுடனான தொடர்பு : உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், தமிழின் விடுதலைக் கழகம், தமிழக
நல்வாழ்வு மாமன்ற அமைப்பாளர்,
பெற்ற பட்டங்கள் : இவரது தமிழுணர்வினைப் பாராட்டி, தனித்தமிழ் அரிமா தமிழிைச் செம்மல், செந்தமிழ்க்
காவலர் ஆகிய பட்டங்கள் பெற்றவர்.
எழுதிய நூல்கள் அச்சேறியவை : வேலன் சிந்தனைப் பூங்கொத்து, தமிழ் மற்றும் பகுத்தறிவு தொடர்பான
கட்டுரைத் தொகுப்பு, மொழித் தூய்மை தேவையா, வேலா பிறமொழி- தமிழ் அகரமுதலி, திருத்துறைக்குறள்,
பண்டைத் தமிழர் வாழ்வியல், Thamizh - A Universal Language.
அச்சேறாதவை : 25 க்கும் மேற்பட்ட நூல்கள் இவற்றுள் மொழி தொடர்பானவை.
1. பண்டைத் தமிழ் நூல்களின் அழிவும் ஆக்கமும்
2. கட்டுரைக் கோவை.
3. பாவரங்குகளில் பாடிய பாத் தொகுப்பு
4. தமிழ் வளர்ச்சிக் கட்டுரைகள்
5. சங்கத் தமிழ் அகர முதலி போன்றவை.
இறப்பு : சிலைத் திங்கள் 5 ஆம் நாள் திபி,2036 - (20-12-05)
நன்றி : தேமதுரத் தமிழோசை - சுறவம் 2037
|
நிலத்தின் வகைகள் - சி.பூ.மணி.
1. ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம்
2. அருக்கக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம்
3. படுகை - ஆற்றோரத்து நிலம்.
4. கரைவழி - ஆற்றோரமான நிலம்.
5. காற்புரவு - ஆற்றுப் பாய்ச்சல் நிலம்.
6. வெளிவாய்ப் படுகை - ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம்.
7. இறைப்புப் பட்டரை - கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்.
8. ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம்.
9. தூர்வை - கிணற்றைச் சேர்ந்த நிலம்.
10. ஆயக்கட்டு - ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம்.
11. நன்செய்நிலம் - நீர்வளம் நிறைந்துள்ள நிலம்.
12. புன்செய் நிலம் - வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம்.
13. அளக்கர் திணை - கடலாற் சூழப்பட்ட நிலம்.
14. வானம் பார்த்த நிலம் - மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம்
15. எரங்காடு - பருத்தி விளையும் புன்செய் நிலம்.
16. நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம்.
17. சாட்டி - அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம்.
18. குளக்கீர் - குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல்
19. நகரி - அரசுக்குரிய புறம்போக்கு.
20. பெரும்பேறு - அரசுக்குரிமையான நிலம்.
21. சூன் - புறம்போக்கு நிலம்.
22. குடிவார நிலம் - குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம்.
23. பள்ளத்தாக்கு - இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம்.
24. பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், தாழ்ந்த நிலம்.
25. தில்லியம் - புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம்.
26. உறாவரை - பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம்.
27. எடார் - வெளிநிலம்.
28. செய்யுள் - விளைநிலம்
29. தொய்யில், செறிப்பு - உழுநிலம்.
30. பண்ணை - வயல்
31. செந்திரம் - செய்தல் நிலம்.
32. பாசல் - பசிய விளைநிலம்
33. நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம்.
34. படப்பு - கொல்லை.
35. துடவை - உழவுக் கொல்லை.
36. விதைப்புனம் - புதுக்கொல்லை.
37. முதை - பழங்கொல்லை.
38. பின்ை - வீட்டுக் கொல்லை
39. திருத்து - நன்செய் நிலம்.
40. தாக்கு - நெல் வயல்.
41. வற்புலம் - மேட்டு நிலம்.
42. தகர், தராய் - மேட்டு நிலம்.
43. கருஞ்செய் - நன்செய் நிலம்.
44. காங்கவீனம் - தினைவிளையும் நிலம்.
45. தினைப்புனம் - தினைவிளையும் நிலம்.
46. மலைப்புனம் - தினைவிளையும் நிலம்.
47. சேற்றுப்புழி - உழப்பட்ட நிலம்.
48. விரைகால் - விதைக்குரிய நிலம்.
49. தடி - சிறு வயல்.
50. காணியாட்சி - உரிமை நிலம்.
51. காடாரம்பம் - நீர்ப்பாசனமில்லாத நிலம்.
52. வட்டகை - அடைப்பு நிலம்.
53. எகபலி - ஒருபோக நிலம்.
54. ஓராண் காணி - ஒருவனுக்கே உரிய நிலம்.
55. காணி நிலம் - நூறு குழி அளவுள்ள நிலம்.
56. கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம்.
57. முழுமனை - 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள நிலம்.
58. அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.
கிழமைக் கோள்கள் - ச.வளர்மதி.
ஞாயிறு (SUN) நாம் வாழும் மண்ணுலகத்திற்கும், கதிரவனுக்கும் இடையில் உள்ள தொலைவு149 மில்லியன்
கி.மீ. கதிரவன் ஒரு சிறிய விண்மீன், அதைச் சுற்றி ஒன்பது கோள்கள் உள்ளன.
திங்கள் (MOON) கதிரவன் ஒளியைப் பெற்றுதான் நிலவு ஒளிர்கிறது. மண்ணுலகில் நில அதிர்ச்சி ஏற்படுவது
போலவே நிலவிலும் ஏற்படுகிறது. நிலவில் புவியீர்ப்புத்திறன் மிகவும் குறைவு. நிலவின் பரப்பில் 59 விழுக்காடு
மண்ணிலிருந்து பார்க்கமுடியும்.
செவ்வாய் (MARS) செவ்வாய் என்பது செம்மையைக் குறிக்கும். செவ்வாய் கோளும் சிவப்புதான். கதிரவன்
குடும்பத்தில் நிலவுக்கு அடுத்தபடியாக இருக்கும் கோள் செவ்வாய்.
அறிவன்(புதன்)(MERCURY) கோள்களில் மிகச் சிறியது அறிவன். அது கதிரவனுக்கு மிக அண்மையில்
உள்ளது. கதிரவன் மண்டலத்திலுள்ள கோள்களில் மிகவும் விரைவாக சுற்றிவரும் கோள் இதுதான்.
வியாழன் (JUPITER) கோள்களில் மிகப்பெரியது வியாழன். வியாழன் என்பதற்கு பெரியது என்னும் பொருள்
தமிழில் உண்டு. ஒரு வியாழவட்டம் என்பது 12 ஆண்டுகள் ஆகும்.
வெள்ளி (VENUS) ஒளிமிக்க கோள் வெள்ளிக்கு மாலை விண்மீன் என்று பெயர் உண்டு. அது கதிரவன் மறைந்து
ஒன்னரை மணி நேரத்துக்குப் பிறகே மறைகிறது. விடிவெள்ளி பின்னிரவில் தோன்றும்.
காரி (சனி)(SATURN) அதற்கு ஏழு வளையங்கள் உள்ளன. அவற்றின் மொத்தச் சுற்றளவு 80,500 கி.மீ. கனம்
30 செ.மீ. காரி, அதிக வளைக் கோள்களைக் கொண்டது. மொத்தம் 17 நிலவுகள் (துணைக்கோள்கள்) உள்ளன.
அது மற்றக் கோள்களைக் காட்டிலும் மிகவும் மென்மையானது.
தமிழ் மாதப் பெயர்கள் - சி.பூ.மீ.
தை - சுறவம் - 30 நாள்கள் (சனவரி 14 முதல் பிப்ரவரி 12 வரை)
மாசி - கும்பம் - 30 நாள்கள் (பிப்பரவரி 13 முதல் மார்ச்சு 14 வரை)
பங்குனி - மீனம் - 30 நாள்கள் (மார்ச்சு 15 முதல் ஏப்ரல் 13 வரை)
சித்திரை - மேழம் - 31 நாள்கள் (ஏப்பரல் 14 முதல் மே 14 வரை)
வைகாசி - விடை - 31 நாள்கள் (மே 15 முதல் சூன் 14 வரை)
ஆனி - ஆடவை - 32 நாள்கள் (சூன் 15 முதல் சூலை 16 வரை)
ஆடி - கடகம் - 31 நாள்கள் (சூலை 17 முதல் ஆஃகச்டு 16 வரை)
ஆவணி - மடங்கல் - 31 நாள்கள் (ஆஃகச்டு 17 முதல் செப்தம்பர் 16 வரை)
புரட்டாசி - கன்னி - 31 நாள்கள் (செப்தம்பர் 17 முதல் அக்தோபர் 17 வரை)
ஐப்பசி - துலை - 30 நாள்கள் (அக்தோபர் 18 முதல் நவம்பர் 16 வரை)
கார்த்திகை - நளி - 29 நாள்கள் (நவம்பர் 17 முதல் திசம்பர் 15 வரை)
மார்கழி - சிலை - 29 நாள்கள் (திசம்பர் 16 முதல் சனவரி 13 வரை)
இன்பத் தமிழ் வானொலி : -
ஆத்திரேலியாவில் தமிழ் வானொலிக்கு, இன்பத்தமிழ் வானொலி என்று பெயர். காலையில் முதல் நிகழ்ச்சியாக,
உலகத்தமிழரை ஒன்றுபடுத்தும், உலகத்தமிழ்ப்பண் ஒலிக்கிறது. தமிழகத்தில் இந்தப்பண் எப்போது ஒலிக்கும் -
அருள்.
வழிகாட்டி : -
முதன் முதலில் தமிழிலேயே எழுதி இந்திய ஆட்சிப் பணிக்கு வந்து சிறப்புப் பெற்றவர் கவிக்குரிசில் இரா.பெருமாள்
இ.ஆ.ப. அவர்கள். தம்முடைய பட்டறிவைக் கொண்டு - IAS ஆவது எப்படி? என்னும் அருமையான வழிகாட்டி
நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது மிகவும் பயனுள்ள நூல் - கொ.சி.சேகர்.
நன்றி பூ தமிழ் மாதிகை. பெங்களூர் -
(POO, No.N10/2, 5th cross, L.N.Puram, Srirampuram post. Bangalore-21
|
உலகத் தமிழர் பண்
இயற்றியவர் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.
இணைந்தோம் உலகத்தமிழராய்
நாங்கள் இணைந்தோம்.
நினைந்தோம் எங்கள் தமிழ் உயிர்
உயிரென நினைந்தோம். ( இணைந்தோம்)
தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்
தாங்கினோம் இன்பம் தாங்கினோம்
அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்
அன்பினால் உலகை வாங்கினோம் ( இணைந்தோம்)
சிரித்த தமிழ்முகம் நிலைத்த வையகம்
செய்வோம் என ஆணை ஏந்தினோம்
விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்
விடுதலை வானில் நீந்தினோம் ( இணைந்தோம்)
மானமே வாழ்வாய் நின்றோம்
மலைகளை மோதி வென்றோம்.
நன்றி : தமிழ்ப்பாவை - சுறவம் 2037
|
கல்வியைத் தடுக்கும் சாதிக் கொடுமை.
கல்வி என்பது அடிப்படை உரிமை. என்னுடைய உரிமைகளை பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன். தலித்
குடும்பத்தில் பிறப்பது குற்றமல்ல. நான் என் உரிமைகளுக்காக போராடுவேன். என்று உறுதியுடன் கூறுகிறார்
15 வயதான மம்மா நாயக். ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவருக்கு அருகில் நரசிங்கப்பூர் கிராமத்தில் பெளரி
(Bauri)என்ற தலித் வகுப்பில் முதன் முதலாக பள்ளி இறுதிவரை படித்துத் தேறியவர் இவர்.
ஒரு ஆசிரியையாகி மற்ற தலித் பெண்களுக்கும் உதவி புரியவேண்டும் என்பதைச் சூளுரையாக ஏற்றிருக்கிறார்.
ஆனால், அவரது கனவுகளெல்லாம் அவரது கிராமத்தைச் சேர்ந்த உயர்சாதி வகுப்பினர் அவர் கல்லூரிக்குச்
சைக்கிளில் செல்வதைத் தடுத்த பொழுது சிதறிப்போயின. பள்ளியில் படிக்கும் பொழுது 3 கிலோ மீட்டர் நடந்தே
சென்று படித்து வந்தார் மம்தா. அவர் படிக்கும் கல்லூரி கிராமத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
நடந்து போக முடியாததால் சைக்கிளில் செல்ல வேண்டும். அதுவும் உயர்சாதி மக்கள் வசிக்கும் தெரு
வழியாகத்தான் செல்ல வேண்டும். வேறு பாதை கிடையாது. உயர்சாதி வகுப்பினர் வசிக்கும் பாதையில்
ஆண்டாண்டு காலமாகத் தலித் மக்கள் எந்த வாகனத்தையும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மம்தா கல்லூரிக்குச் சைககிளில் செல்ல முயற்சி எடுத்தபோது. மேல் சாதி மக்கள் ஒரு கிராமக் கூட்டத்தைக் கூட்டி,
மம்தாவின் தந்தையைக் கடுமையாக எச்சரித்தனர். மம்மா, புவனேசுவருக்கு வந்து ஒரு பத்திரிகையாளர்
கூட்டத்தைக் கூட்டி அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்கள் இந்தக் கிராமத்திற்குச் சென்ற பொழுது மேல்சாதி மக்கள் அவர்களையும் மிரட்டினார்கள்.
நாங்கள் புதிதாக எதையும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக இருந்த வழக்கத்தைத்தான் வற்புறுத்துகிறோம்.
என்கிறார்கள் மேல்சாதி மக்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களும் இது கிராமக் குழுவின் முடிவு என்று ஒதுங்கி
விட்டார். இந்த நிகழ்வைப் பற்றி அரசு நிர்வாகத்திற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் துறைக்கும் எந்தத் தகவலும்
கிடைக்கவில்லையாம். இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் நான் என்னுடைய உரிமைக்காகப் போராடுகிறேன்
- என்கிறார் மம்தா.
நன்றி : மனித உரிமைக் கங்காணி - சனவரி 2006
|
அன்றைக்கே நமக்குப் பொங்கல்
இரா. திருமுருகனார்
ஊரினிலே உள்ளபெயர்ப் பலகையெல்லாம்
தனித்தமிழில் ஒளிரச் செய்து,
நேரிழைநம் கண்ணகியாள் சிலைமீண்டும்
கடற்கரையில் நிற்கச் செய்து,
காரறிவால் கன்னடத்தான் பகையென்று
சாக்கினிலே கட்டி வைத்த,
பேராசான் வள்ளுவனை, தமிழர்களைச்
சிறைவீடு பெறவே செய்து,
தமிழரசில் தமிழ்காக்கும் தலைவர்களே
தனித்தலைமை தாங்கச் செய்து,
தமிழ்மண்ணில் தமிழ்வழியில் கல்விதராப்
பள்ளிகளைத் தகர்க்கச் செய்து,
தமிழ்ஒன்றே தமிழ்மண்ணின் ஆட்சிமொழி
என்றநிலை தன்னைச் செய்து,
நமதீழம் தனியாட்சி பெறச்செய்த
அன்றைக்கே நமக்குப் பொங்கல்.
நன்றி : தெளிதமிழ் - சுறவம் 2037
|
எந்த நாளோ ?
- முனைவர் பழனி இளங்கம்பன் -
தோன்றுநம் கட்சிகள்தாம் தமிழுக்காகத்
தோன்றியதாய்ச் சொல்வதையே கேட்போம் ஆனால்
ஊன்றுபுகழ்த் தமிழினத்தில் சிக்கல் என்றால்
ஒன்றுபட்டுப் போராட வருவ தில்லை.
சாதிகளைப் போலிங்கே தழைத் ததோடு
சமராடிச் சண்டையினால் தெருவோர் நாண
மோதி மகிழ் தமிழ்நாட்டுக் கட்சிகட்குள்
முழுமைநிறை தமிழ் இணைப்பே இருப்பதில்லை.
தன்தலைமை நலங்காக்க வேண்டும் என்றும்
தன்கட்சி தலைமைகொள வேண்டும் என்றும்
தன்னலத்தால் இவை இயங்கு மட்டும் இங்கே
தமிழினந்தான் எவ்வாறு தலைமை கொள்ளும்?
தமிழகத்தின் கட்சிகளில் இருப்போர் எல்லாம்
தமிழர்கள் என்றாலும் முரண்பா டுற்றே
தமிழினத்தின் பெருநலத்தை விழையா வண்ணம்
தம்போக்கில் தனித்தனியாய் இருக்கக் கண்டோம்.
கட்சிகளாம் இவை சொந்த நலத்தைப் போக்கிக்
காணரிய தமிழினத்தின் நலத்தை நாடி
ஒட்டுறவில் இணைந்தோங்கிப் பணிகள் ஆற்றும்
ஒப்பற்ற நாள் எந்த நாளோ? நாளோ?
நன்றி : தமிழர் முழக்கம் - பெங்களூர் சுறவம் 2037
|
எங்கள் தமிழினமே என்று கிளர்வாய் ?
ம.இலெ. தங்கப்பா
வீடே எரிந்து விழுகையிலும் தம் வயிற்றுப்
பாடு தணியப் பசித்தீயால் ஓடிப்போய்
அந்த நெருப்பை அவிக்கவந்த தண்ணீரில்
கொஞ்சத்தை அள்ளிக் குடிப்பதுபோல் இன்றுநமைச்
சூழ்ந்து பகைத்தீயும், சூழ்ச்சியும், செந்தமிழ்தான்
வீழக் கயவர் வெடிவைப்பும் - போழ்கையிலும்
அந்த நெருப்பை அவிக்கவே, கங்குல்பகல்
என்று பாராமல் இடையற்று உழைத்துவரும்
நந்தம் இனத்தலைவர் நம்பிக்கைச் சொற்புனலை
அள்ளிக் குடித்தே அயர்வுசற்று நீக்கிடுவோம்.
பொங்கல் திருநாளின் புன்மகிழ்ச்சி இங்கிதுவாம்
எங்கள் தமிழினமே, என்றைக்கோ நீ உணர்ச்சி
முற்றும் கிளர்வாய்? முழு உணவாய் உன்உரிமை
பெற்றுப் பசிதீர்வாய் ? பேசு.
நன்றி : தென் ஆசியச் செய்தி - 16-31 சனவரி 2006
|
பாலாறு காவிரியாகுமா ?
குடகுமலை தமிழரின் மலை. அங்கு தோன்றும் காவிரி ஆறு தமிழரின் ஆறு. ஆனால் 1956 இல் இந்திய தேசிய
மாயையில் சிக்குண்ட தமிழர்கள் அநியாயமாக வளமான காட்டுப் பகுதிகளையும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும்
அண்டை மாநிலங்களில் இழந்ததன் விளைவாக இன்று தமிழகம் எண்ணிலா இடையூறுகளை அடைந்து
வருகிறது.
காவிரியின் குறுக்கே சட்டத்திற்கு புறம்பாக 14 அணைகளைக் கட்டிக் கொண்டு தமிழகம் நோக்கி ஓடிவரும்
தண்ணீரைத் தடுத்தாண்டு வருகிறது. தமிழகத்தின் வயல்வெளிகள் காய்ந்து கருகும் போது கர்நாடகத்தின்
அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும் அதை கர்நாடக அரசு திறந்து விடுவது கிடையாது. ஆனால் வெள்ளப்
பெருக்கெடுத்தால் முதல் வேலையாக அணைகளைத் திறந்து விட்டுத் தமிழகத்தை ஒரு நிரந்தர வடிகாலாக
மட்டுமே ஆக்கிவிட்டது கர்நாடகா.
1991 இல் நடந்த காவிரிக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழரின் வாழ்வையும், பலநூறு கோடிக்கணக்கான
தமிழரின் சொத்துகளும் அழிவுற்றன. ஆசியாவின் நெற்களஞ்சியத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தேறின.
மக்கள் எலியையும் நத்தைகளையும் படித்துத் தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
எதிர்காலத்தைப் பற்றிய எண்ணமும் கூர்மையும் இல்லாத அரசியல்வாதிகளின் அசட்டைத் தனத்தால் ஒட்டு
மொத்த இனமும் மக்களும் இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதே மாதிரியான ஒரு சூழலை ஆந்திராவில் உள்ள காங்கிரசு அரசு இப்போது நிகழ்த்தத் துணிந்துள்ளது. நாம்
இழந்த தமிழ்ப்பகுதியில் தோன்றும் பாலாறு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது அங்கிருந்தும் காங்கிரசு அரசு அவ்வாற்றின் குறுக்கே அணை கட்ட முண்டியடித்துக் கொண்டு
முயல்கிறது. தமிழகமும் ஏற்கனவே கர்நாடகத்தின் வடிகாலாகி விட்ட நிலையில் இப்போது ஆந்திராவும்
தமிழ்நாட்டை வடிகாலாக்க நினைக்கிறது.
ஆட்சியாளர்கள், கட்சிகள், கூட்டணி தர்மத்திலும், வாக்கு பேரக் கணக்கிலும், மக்களைக் கோட்டை விட்டு
விடுவார்கள். மக்கள் தான் விழிப்பாக இருந்து காக்கவேண்டும். ஆந்திராவை ஆளும் காங்கிரசு அரசுக்குத்
தமிழ்நாட்டு காங்கிரசு நெருக்கடி கொடுக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என்ற மக்கள் முடிவு செய்ய
வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.க்களின் தயவில் தான் மத்திய அரசு சுழல்கிறது. இவர்கள் அழுத்தம்
கொடுத்துத் தமிழக நலனைக் காப்பார்களா அல்லது காவு கொடுப்பார்களா ? என்று கண்விழித்துக் காண
வேண்டும் - அரிமாவளவன்.
நன்றி : தேவர் முரசு - சனவரி 2006 ஆசிரியர் உரை.
|
படியுங்கள்
அறிவு வளரணுமா ?
ஆற்றல் பெருகணுமா ?
உண்மை வெல்லணுமா ?
ஊர் செழிக்கணுமா ?
பெரியார் தமிழ்ப்பேரவையின்
மக்கள் மேம்பாட்டு
இதழ்களைப்
படியுங்கள், படியுங்கள்....
குழியில் விழணுமா?
குட்டிச் சுவர் ஆகணுமா ?
குமுதம், ஆனந்த விகடன்,
கல்கி, கலைமகள்,
மங்கையர் மலர், அவள் விகடன்
குமுதம் பக்தி - இன்னும்
இன்னும் நிறைய குப்பை
நல்ல விஷம்
படியுங்கள், ஒழியுங்கள்
உங்கள் விருப்பம்.
நன்றி : தன்முன்னேற்றம் - சனவரி 2006
|
செத்தொழிவீரே
ச.ந. இளங்குமரன்
திரைப்படங்கள் தமிழ்ப்பெயரைத் தாங்கி வந்தால்
சம்மதியோம் நாங்களென்று சாற்று கின்ற
தெருப்பொருக்கி நாய்களே நீர்உண்டு றங்கித்
திரிவதற்கும் உவப்புடனே வாழ்வ தற்கும்
நரிக்குணத்தை மூடிவைத்து நல்ல வர்போல்
நறுந்தமிழை நாமணக்கப் பேசு கின்றீர்
சிறுநலமும் செந்தமிழ்க்குச் செய்தீ ரில்லை.
செய்வாரைத் தடுப்பீரேல் ஒழிவீர் செத்து
திட்டமிட்டுக் கெடுக்கின்றார் தமிழை முற்றும்
தீர்த்துவிட எண்ணுகிறார் வடவர் நாளும்
வட்டமிடும் வல்லூறாய் வந்து வந்து
வடமொழியை இந்தியிணைத் துணையாய்க் கொண்டு
கொட்டமடித் தார்க்கின்றார் முடிய வில்லை
என்பதனால் நெட்டை மொழி ஆங்கிலத்தை
நீட்டிப் பிடிக்கின்றாார் அன்னோ ரெல்லாம்
வெட்டுண்டு சாவார் காண்மிக விரைந்தே
வந்தேறிக் கும்பலொன்று தமிழர் நாட்டை
தந்திரமாய் ஆள்கிறது தமிழா நீயும்
மந்தமதி கொண்டதனால் வந்த கேடு
மடையரெல்லாம் மந்திரியாய் ஆனார் பாடு
செந்தமிழில் பெயர்வைத்தால் வெட்கக் கேடு
என்பவரைச் செருப்பாலே அடித்துப் போடு
நந்தமிழைக் காப்பதற்கே விரைந்து ஓடு
இல்லையென்றால் இக்கணமே தூக்குப் போடு.
நன்றி : தேமதுரத் தமிழோசை - சுறவம் 2037
|
இளைஞர்களே வாரீர்
குமார சுப்பிரமணியம்.
ஆங்கிலத்தால் தமிழ்மொழிதான் வளர்ச்சி குன்றி
அழிகின்ற நிலைவந்து சேரும் என்று
பாங்குடனே தமிழ்ச் சான்றோர் பகர்ந்திட் டார்கள்
பழம்பெருமை தெரியாத இளைஞர் கூட்டம்
வீங்கிநிற்கும் ஒதியமரம் வீட்டைக் காக்கும்
விட்டத்திற் குதவுமென நம்பு கின்றார்
தூங்குகின்ற தமிழ்மகனும் விழிக்கா விட்டால்
தப்பாது மறைந்துவிடும் தமிழர் வாழ்வே.
தெருத்தோறும் முளைக்கின்ற பள்ளி தன்னில்
தமிழ்வழியே பாடங்கள் படிக்கச் செல்லும்
திருவுடைய மாணவர்கள் இல்லை, மாற்றார்
தருகின்ற ஆங்கிலத்தில் படித்து விட்டே
இருக்கின்ற பெற்றோரை மம்மி டாடி
எனஅழைத்துக் களிக்கின்ற காட்சி கண்டோம்
பெரிதுவக்கும் தமிழ்மொழியைக் காக்க நீயும்
போராடி வெற்றிபெற வேண்டும் இன்றே.
என்தமிழைப் பிறமொழிகள் இங்கு வந்தே
இல்லாமல் அழித்துவிட முனைந்த போது
பின்விளைவு கருதாமல் ஒன்றாய்ச் சேர்ந்து
போராடிச் சிறைசென்று வெற்றி கண்டார்.
இன்றென்ன பார்க்கின்றோம் இளைஞர் கூட்டம்
எதுஎதற்கோ போராடச் சென்று விட்டார்
குன்றாத தமிழ்மொழிக்கே உழைக்கக் கொள்கை
கரும்பனைய இளைஞர்களே சேர்ந்து வாரீர்.
நன்றி : மீண்டும் கவிக்கொண்டல் இதழ் - சனவரி 2006
|
வீற்றிருப்பு
சகாரா
காடை முட்டையிட்ட
கையகல இடம்
முயல் குடியிருந்து போன
பதுங்கு குழிகள்.
நண்டு பறித்த
சேற்று வளை.
எலி திட்டமிட்டிருக்கும்
மாற்று வழிகள்
மண்குளவி தோண்டிய
சிக்கனச் செந்துளை.
தேனீக்கள் தங்கியிருந்த
கிளைராட்டு.
குருவி பின்னிய
அந்தரக் கூடு.
எறும்பு வடிவமைத்த
தானியக் களஞ்சியம்
இவற்றைவிட
எந்த வகையில் ஒசத்தி
வவ்வால் வீச்சமடிக்கும்
வசந்த மண்டபங்களும்
அபலைகளைச் சூறையாடிய
அரண்மனை அந்தப்புரங்களும்
நன்றி : தமிழ்க் காவிரி சன-பிப் 2006.
|
www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061
|
|
|