வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 01 - 2006



...வேண்டாம் விருதுகள்...
...தமிழ் எழுத்தாளரின் தன்மானம்...

70 களின் நடுப்பகுதியில் ஈழத்தில் பேரா. கைலாசபதி, பேரா. சிவத்தம்பி போன்றோர்கள் முதன்மைப் படுத்திய, முற்போக்குத் தடங்களைப் பதிவு செய்த, அலை என்னும் இதழில் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு ஈழ இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளரும், இதழாளருமான அ. யேசுராசாவிற்கு, சிங்கள அரசு, தேசத்தின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி எனும் விருதை வழங்கி உள்ளது. அதனை ஏற்க மறுத்துள்ள பேரா. யேசுராசா, அதற்கான காரணத்தை விளக்கி அரசுக்கு ஒரு விடை மடல் எழுதியுள்ளார். அம்மடல் அவரின் தன்மானத்தையும், இனமானத்தையும் நமக்கு உணர்த்துவதோடு, எழுத்தாளர்கள் எப்படி இருக்கவேண்டும் என்னும் உண்மையையும் நமக்கு எடுத்துரைக்கிறது. தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசின் விருதை மறுத்து அவர் எழுதியுள்ள மடலின் நகல் கீழே தரப்பட்டுள்ளது.

கலை இலக்கியத் துறையில் செயற்பட்டுவருபவனாகிய எனக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் "கலா கீர்த்தி" விருது வழங்கப்பட உள்ளதைத் தெரிவிக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதற்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயினும் "இரணடாந்தரப் பிரஜை" என்ற உணர்வுடனேயே இந்நாட்டில் வாழத் தொடர்ந்து நிர்பந்திக்கப் பட்டுவரும் தமிழ் மக்களில் ஒருவன் என்ற வகையில், கசப்பான இந்த யதார்த்த நிலை மீது கவனததைக் குவியச் செய்யும் பொருட்டு, "கலா கீர்த்தி" விருதினைப் பெற்றக் கொள்வதில் எனது விருப்பமின்மையைத் தெரிவிக்கிறேன்.

இனங்களுக்கிடையில் சமத்துவ நிலைமை பல தளங்களில் இருந்து வருவதுதான். இன்று இலங்கையில் நாமெல்லோரும் எதிர் கொள்ளும் அவலமான நெருக்கடிகளின் அடிப்படை என்பது எல்லோராலும் உணரப்பட வேண்டும். அந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நேர்மையான - வெளிப்படையான செயற்பாடுகளே இக்காலக்கட்டத்தில் இன்றியமையாதனவாய் உள்ளன. இனப்பாரபட்ச நடவடிக்கைகள் - நிலைமைகள் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்க்கிறேன். எனினும், தங்களின் விருது பற்றிய அறிவிப்புக் கடிதங்கூட எனது தாய்மொழியான தமிழில் அமைந்திருக்கவில்லை என்பதைக் கவலையுடன் அறியத்தருகிறேன்.

தமது மேலான நோக்கங்களின் பொருட்டு, அரசின் உயர் விருதுகளை முன்பு ஏற்றுக் கொள்ள மறுத்த சகோதர சிங்களக் கலைஞர்களான பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம ஆகியோரின் முன்னுதாரணத்தை இவ்வேளையில் மதிப்புடன் நினைவு கருதுகிறேன்.


நன்றி : தென் ஆசியச் செய்தி - 1-15 டிசம்பர் 2006




பொங்குவதா பொங்கல்
- ஏ. தேவராஜன் - ஜாசின்

தோட்டமில்லை துறவுமில்லை பொங்கலென்ன கேடா?
துச்சமாக மிதிக்கின்றார் பொங்கலாச்சிப் போடா.
ஊட்டமென்ன நமக்கென்று பொங்குகின்றோம் சூடா
உள்ளதெல்லாம் இழந்துவிட்டோம் பொங்குதுள்ளம் பாடா !

அடையாளம் சிதைகிறதே ஆன்றோர்வ ளர்த்த
அழுதமொழி யழிகிறதே அன்னியன்ஆ திக்கப்
படையெடுப்பால் அத்தனையும் எரிகிறதே பாழாய்ப்
பானையிலே பொங்குவது பொங்கலாசொல் தோழா.!

தனித்தன்மை காக்கின்ற கடப்பாடு கொள்ளாத்
தரங்கெட்ட புல்லுருவி யால்நெஞ்சம் நாளும்
பிணிபட்டு நோகிறதே! பொங்கிடுமா பொங்கல்?
பேரினிலே பேறில்லை எதற்கையா பொங்கல்?

இனமேன்மை மொழிமானங் காக்காத பொங்கல்
இலக்கிய இலட்சியமும் இல்லாத பொங்கல்
வனப்பான பொங்கலல்ல, வரலாறு கண்டு
வையத்தில் எழுவதுதான் நான்தேடும் பொங்கல்.

எழுகதிரைக் கண்டவுடன் குதுகளித்த பொங்கல்
எப்படித்தான் கோயிலுக்குள் புகுந்ததுவோ? இன்று
பழுதடைந்த பொங்கலில்தான் பொங்குதிங்குச் சோறு
பைந்தமிழன் மறந்தவிட்டான் பொங்குதையா வீறு!

குமுகாயத் தமிழர்கள் குன்றெனநி மிர்ந்தால்
கொத்தடிமைக் கோலத்தை விடவித்துக் கொண்டால்
நமைமாய்த்த பேதங்கள் நரகத்தில் வீழ்ந்தால்
நாளென்ன பொழுதென்ன இக்கணமே பொங்கல்

நன்றி : செம்பருத்தி திங்களிதழ் (மலேசியா)- சனவரி 2006.




கலக மழை
வீதியெங்குமா
வெட்டினாய் மரத்தை ?

கடலில் குதித்து
ஆடுவேன் என்கிறது
காற்றழுத்த மண்டலம்.

கால்வாயெங்கும்
பாலிதீன் படலம்
மழையில் மிதக்கிறது
மாநகரம்.

மனிதனென்னடா
மனிதன்?
வீடு புகுந்து
மிரட்டுகிறது வெள்ளம்.

ஆறு, ஏரிகளின்
ஆக்கிரமிப்பை
அகற்றுங்கடா
சத்தம் போடுகிறது
வீதியில் இறங்கி
நித்தம் ஒரு மழை.

நன்றி :- பூரண சந்திரன்
(தமிழர் கண்ணோட்டம் 2006 சன இதழில்)









முரண்
சுடும் வெயிலில்
வெறும் காலில்
பயணங்கள்
குளு குளு கடைக்குள்
காலணிகள்.

கார்க்கிப் பிரியன் (பயணம் சன 2006)


அன்று
கணக்கு வாத்தியாருக்கும்
கூட்டல் பெருக்கலுக்கும்
பயந்து
பள்ளிக்குச் செல்லாததால்
இன்று
அதே பள்ளிக்கு
கூட்டிப் பெருக்கச்
செல்கிறேன் துடப்பத்தோடு.

அருண் சிவகாசி (புதுகைத் தென்றல் சன 2006 இதழில்)




உயிரோடிருக்கும் வாக்குகள்.
பரிபாலனத்தின் உயரத்திலிருந்து
ஓங்கி ஒலிக்கிறது
ஆணையின் உரத்த குரல்
நிவாரணம்.. நிவாரணம்.

உயிர்களைப் பிடித்துக் கொண்டிருந்த
கைகளை விரித்து வாங்குகின்றனர்
நிவாரணங்களை மக்கள்

மிதிபட்டுச் செத்த
மக்களின் மீது சுமத்தப்படுகின்றன
குற்றச்சாட்டுகள்
பொறுமையற்றவர்கள்
பணத்திற்கு அலைபவர்கள்
வதந்திகளை நம்புகிறவர்கள்

மவுனத்தின் மூடிகளை
அணிந்து கொண்டு தலைகுனிகிறது
மக்களின் கோபம்.

வீட்டுக்குள் நுழைந்த தண்ணீரை
இறைக்கின்றன செத்தவர்களின்
நைந்த உடல்கள்.

அரசின் கைகள்
அணைத்துக் கொள்கின்றன - ஆதரவோடு
அடுத்த தேர்தலுக்காய்
உயிரோடிருக்கும் வாக்குகளை.

நன்றி : தலித் முரசு சனவரி 2006




குறும்பாக்கள்
சாமி கும்பி மனசில்லை
மலையேரும் படிகளில்
பிச்சைக்காரர்கள்.

- சஞ்சீவி மோகன்

பெரிய கிழிசலை
தைக்கும்
சிறு ஊசி

- பரிவாதினி

காது இல்லாத பாம்பு
மகுடி ஊதுகிறான் பாம்பாட்டி
ஏமாற்று வேலை.

- இரா. இரவி

கூடையோடு மீன்காரன்
ஊர் சுற்றுகின்றன
மொய்க்கும் ஈக்கள்.

- நாணற்காடன்.

கரையோர மரம்
நதியில் முகம் பார்க்கும்
சலசலக்கும் நிழலின் பேச்சு

- பாரதி வசந்தன்

சோதனைச் சாவடி
கடந்து போகும் பேருந்து
கையசைக்கும் குழந்தை

- ம.தி. சாந்தன்.

எரிந்து போனது
குடிசைகள்
அணையாமலிருந்தன சாதிகள்.

குவிந்து கிடக்கும் ஆயுதங்கள்
அருகே அமர்ந்து பேசுகிறார்
சமாதானம்.

வானம் பொய்க்கவில்லை
நாள்தோறும் அங்கிருந்து
குண்டு மழை.

பாகுபாடு இல்லை
எல்லா மத ஆலயங்களிலும்
விமானத் தாக்குதல்.

அணையப்போகும் விளக்கு
யார் கொடுப்பார் ?
ஒரு குப்பி மண்ணெண்ணெய்.

புதைகுழி என்றேன்
திருத்திச் சொன்னார்
விதை குழி.

- ந. பச்சைபாலன்




ஊருக்கு உழைப்பவர்கள்

தேர்தல் காலத்தில் ஆங்காங்கே வைக்கப்படும் ஒரு வேண்டுகோள். " உங்களுக்கு உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்" இவ்வாறு கூறி நமது வாக்குகளைப் பெற்று வென்றவர்களில் சிலர் நமக்காக எப்படியெல்லாம் உழைக்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் சேவை செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? சேவை என்றவுடன் நம்மில் சிலர் இலவசமாக உழைக்கிறார்கள் என்று நினைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்காக இதோ சில உண்மைகள் :-

மாதச் சம்பளம் ரூ 12,000
அலுவலகச் செலவு மாதத்திற்கு ரூ 14,000
தொகுதி படி மாதத்திற்கு ரூ 10,000
சபைகூடும் சமயத்தில் தினப்படி ரூ 500
தினமும் பயணப்படி கி.மீட்டருக்கு ரூ 8
இலவச முதல் வகுப்பு ரயில் பயணம் கூட ஒருவரையும் அழைத்துச் செல்லலாம்.
அரசு சொகுசு பங்களா மாதம் வாடகை ரூ 2000
ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம்.
இலவசக் குடிநீர்
ஏ.சி., டி.வி - என அனைத்து வசதிகள்
3 தொலைபேசிகள்
ஆண்டுக்கு 1,70,000 உள்ளூர் அழைப்புகள் இலவசம்.
அரசு சார்பாக பயணமாக இருந்தால் இலவச விமான டிக்கட், மற்றும் தினப்படி
அரசு சுகாதார சேவைத் திட்டத்தின் மூலம் முதல்தரமான மருத்துவம் இலவசமாக.
வருடத்திற்கு ஒருமுறை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ2 கோடி.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ 3,000

இதெல்லாம் என்ன? யாருக்கு? என்று கேள்வி எழுகிறதா? பெரும்பாலான வர்க்கத்தில் பெரும்பாலோர்க்குத் தெரியாது என்பது உண்மைதான். இந்த சம்பளம் சலுகையெல்லாம் நம் இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான். இப்பொழுது மாதா மாதம் இவர்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை யூகிக்க முடிகிறதா? இந்தப் பணமெல்லாம் யாருடையது? மக்கள் பணம், வரிப்பணம், நம் பணம்.

இதெல்லாம் போதாது என்றுதான் கேவலம் பாராளுமன்றக் கூட்டத்தில் கேள்வி கேட்க 11 எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியுள்ளனர். ஆனால் இவர்களைத் தண்டிக்க குற்றவியல் சட்டத்தில் இடமில்லை. அதெப்படி? அப்படித்தான். சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வெறும் பேச்சுத்தானோ !

- கனிவை ரெங்கன் -

நன்றி : கல் ஓசை - சனவரி 2006





எம்.பி - க்கள் கையூட்டு

கடந்த டிசம்பர் 12 ஆம் நாளன்று காலை ஆஜ்தக் என்ற தொலைக்காட்சியில், "கோப்ரா போஸ்ட் டாட் காம்" என்ற அமைப்பு "எம்.பி க்கள் கையூட்டு வாங்கியதை ஒளிப்படத்தில் கமுக்கமாகப் பதிவு செய்து ஒளிபரப்பினர். அனிருத்தா பெகல், சுகாசினி ராஜி ஆகிய இரண்டு இதழியலாளர்கள், தாங்கள் நடத்தி வரும் "நிஸ்மா" என்ற (கற்பனைத்) தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப வேண்டுமென்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப கையூட்டுத் தொகை வழங்கப்படும் என்றும், அதுவும் முன்பணமாகவும், கேள்வி கேட்ட பிறகு, மீதமுள்ள தொகை கொடுப்பது என்றும் உடன்பாடு பேசி, அத்தனையையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கருவிகள் மூலம் ஒலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். துரியோதன நடவடிக்கை என அழைக்கப்படும் ரூ 15,000 முதல் ரூ1,10,000 வரை கையூட்டுப் பெற்றதைக் காட்டும் இந்நடவடிக்கையில் பா.ஜ.காவைச் சேர்ந்த 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 பேர், காங்கிரசைச் சேர்ந்த ஒருவர், ராச்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒருவர் எனக் கட்சி பாகுபாடின்றிச் சிக்கியுள்ளனர். தென்னகக் கட்சிகளுக்கு இந்த வாய்ப்புக் கிட்டவில்லையோ என்னவோ?

இந்தச் சீரழிந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதற்காக மக்களவைத் தலைவர் வேதனையடைந்து "பன்சால் குழு" அமைத்துப் பரிந்துரைகளை அளிக்கப் பணித்தார். அதனிடையே விண்மீன் செய்திகள் தொலைக்காட்சி 7 பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவிடுவதற்காக கையூட்டுப் பெற்றுக் கொண்ட அவலத்தை சக்கர வியூக நடவடிக்கை மூலம் படம் போட்டுக் காட்டியது. இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் 16 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு எம்.பி.க்கள் இரண்டிலும் பங்கேற்றுச் சாதனை படைத்து உள்ளனர்.

மக்கள் பகராளிகள் என உயர்வாகவும் பாராளுமன்றம் தூய்மையானதாகவும் பேசப்படும் இந்திய ஆட்சியமைப்பு எப்படிப் புரையோடிக் கிடக்கிறது என்ற செய்தியை, இந்தக் காட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.....

- கென்னடி - நன்றி : இலட்சியப் போராளி இதழ் சனவரி 2006.




சும்மா நச் ன்னு இருக்கு தமிழ் முரசு...

எற்கனவே 7 ஆண்டுகளாக வெளிவந்த இந்நாளிதழை சன் தொலைக்காட்சிக் குழுமம் விலைக்கு வாங்கி இருக்கிறது.

15 ரூபாய் பெறுமானம் உள்ள மத்தாப்புப் பெட்டி, 2 ரூபாய் விலையுள்ள தமிழ் முரசு நாளிதழுக்கு இலவசமாகத் தருகிறார்கள்.

தினந்தோறும் டீத்தூள், காப்பித்தூள், சாம்பு, முகஅழகுக் களிம்பு - என ரூ5 பெறுமான பொருள் இலவசம்.

தமிழ்நாட்டில் வேறெந்த பத்திரிகைக்கும் இப்படி இலவசம் கொடுத்தால் 4 லட்சம் என்ன 40 லட்சம் விற்பனையாகுமே.

ஏரியா, ரிப்பீட்டு, சின்னத்திரை சினிமா, சீன்மா, ஷாட், டேக், சீக்ரெட் சீனு, போன்ற ஆங்கிலப் பக்கத் தலைப்புகள். கோர்ட் தீர்ப்பு, டாக்டரிடம் செக் மோசடி, வக்கீல் கைது, நைட் வாட்ச்மேன், டாஸ்மாக்கில் குய்யோ முறையோ, ரெட்லைட், போன்ற செய்தித் தலைப்புகள் தமிழ்ப் பகை முரசு என்பதை நிரூபிக்கின்றன.

நடிகைகளின் மார்பு, தொப்புள், இடை, தொடை, கன்னம், கண்கள் என மிக அருகே எடுத்த வண்ணப் புகைப் படங்கள் சும்மா நச் சுன்னு தான் இருக்கு.

கோடிக்கணக்கான பண முதலீட்டில் பல பத்திரிகைகளை வாங்கிப் போட்டிருக்கும் சன் குழுமம், தமிழ் நாட்டு வாசகர்களை இன்னும் என்ன செய்யப் போகிறதோ !

நன்றி : ஏழைதாசன் இதழ் - சனவரி 2006




தமிழ் நாளிதழ் தொடக்கம் விளக்கங்கள்

இனிய தமிழ் உறவினர்களே, வணக்கம்

புதுவை, தமிழ்நாட்டு அரசுகள் தமிழ்வழிக் கல்வியை ஒதுக்கி ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து வருகின்றன.

ஏடுகள் தமிழ் மொழியைக் கலவை மொழியாகப் பண்ணுவதிலே தமிழ்ப் பகைவர்கள் குறியாக உள்ளனர்.

மொழியையும் பண்பாட்டையும் பற்றி அக்கறை கொண்டு இயங்க ஒரு தொலைக்காட்சி நிறுவனம்கூட இல்லை. எல்லா ஊடகங்களிலும் விரைவாகத் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அழிப்பு வேலைகளைச் செம்மையாகச் செய்து வருகின்றன.

இவற்றுக்கு மாற்றாக நாங்கள் தொடங்கியுள்ள முயற்சியே தமிழ் நாளிதழ் 13-2-2005 தெளிதமிழில் பேரா.ம.இலெ.தங்கப்பா விதைத்த கருத்து 14-3-2005 தெளி தமிழில் முளைத்துச் செடியாகிச் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் புதுவையில் இரண்டும் திருச்சியில் ஒன்றுமாக நடந்துள்ளது. மற்ற ஊர்களிலும் இவ்வாறு கலந்துரையாடல்கள் நடத்தி உங்கள் கருத்துகளைத் திரட்ட உள்ளோம். இதற்காக முனைவர் இரா.திருமுருகன், முனைவர் தமிழப்பன், தி.ப.சாந்தசீலன், முவ.பரணன், இரா.செம்பியன் ஆகிய ஐவர் கொண்ட அறக்கட்டளை அமைத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அளிக்கப்படுகின்ற தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறவும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

அறக்கட்டளையின் பொறுப்பை ஏற்றுள்ள எங்களிடம் நம்பிக்கையிருந்தால் எங்களுக்குக் கை கொடுங்கள். அடுத்து உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். பொருள் திரட்டும் முன்பு ஊர் ஊராகச் சென்று அன்பர்களின் கருத்துகளைத் திரட்ட எண்ணியுள்ளோம். உங்கள் ஊரில், நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பிலோ, உங்கள் சார்பிலோ அன்பு கூர்ந்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் வர அணியமாயுள்ளோம்.

நன்றி : யாதும் ஊரே - சனவரி 2006

ஒரு நாளிதழ் தொடங்க தமிழ் உணர்வாளர்கள் இத்தனை பாடு படுகிறார்கள். வணிகர்கள் தமிழ் நாளிதழ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். நம் தமிழர்களுக்கு வேறுபாடு என்று தெரியும் ? ! ? !.....நசன்...




தமிழ் நாளிதழ் - நோக்கும் போக்கும்

நோக்கு :

தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைச் சிதைப்பார்தம் செயலைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்கவும், தேசிய இனக் கருத்தாக்கத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லவும், எமது மொழி தமிழ், நாங்கள் தமிழர்கள் (தமிழினம்), எமது நாடு தமிழ்நாடு, எங்கள் நாட்டு வளங்களையும், நிலப்பரப்பையும் காப்பதும் மேலும் செழுமையடையச் செய்வதும் எங்கள் கடமை என்ற உண்மையான குடியரசு மனப்பாங்கை மக்களுக்குப் புகட்டி உலகச் சமன்மைக்குப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் நாளிதழ் ஒன்றைத் தொடங்கி நடத்துவதென்ற முடிவின்படி, குல, மத, கட்சி, இயக்கம், அமைப்பு, குழு, தனிமாந்தச் சார்பு ஆகியவற்றைக் கடந்து மிகக் கட்டுக்கோப்பான நாளிதழாக இது நடையிடும்.

போக்கு :

இயற்கையோடியைந்த, உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய நம் தமிழைச் செந்தமிழாய் மீண்டும் மக்களிடையே புழங்கச் செய்ய, தமிங்கில நடையையும் வடமொழி வடுக்களையும், பிறமொழிப் பொடுகுகளையும் அறவே நீக்கி, வழுவும, கொச்சையும் தவிர்த்துப் பொதுமக்களின் இனிய எளிய வாய்மொழி வகையையே நாளிதழ் தாங்கி வரும்.

செய்தியும், கட்டுரையும் கதையும் பிறவும் கருக்காகவும், நறுக்காகவும் அமைந்திருக்கும், தமிழர்களுக்கான இயற்கை சார்ந்து வாழ்வியலையும், கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் மக்களுக்குப் புகட்டும்.

தமிழ், தமிழர்களுக்கெதிரான அழிம்புகளைச் சுட்டிக் காட்டி, அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கூறும்.

உலக மயமாக்கல் என்ற மிகக் கேடான பொருளியல் கொள்கைகளால் நசுக்கப்படும் நம் நாட்டுத் தொழில் முயற்சி, சுரண்டப்படும் உழைப்பு, சிதைக்கப்படும் பண்பாடு - இவற்றை வெளிப்படுத்தி மக்களுக்குத் தமிழ்த் தேசியத் தற்சார்புள்ள பொருளியலைப் புரியவைக்கும்.

மூட நம்பிக்கைகளை முற்றாக விரட்டி, மக்களைப் பகுத்தறிவாளர்களாகவும், பொதுமையுணர்வு உடையவர்களாகவும மாற்றத் தக்க அறிவார்ந்த கருத்துக்களையும், செயன் முறைகளையும் விளக்கிக் கட்டுரைகளை வெளியிடும்.

ஊட்டிய உணர்வுகள் சிதைந்து விடாவகையில், கொள்கைகள் என்றும் நெஞ்சில் நிற்குமாறு மக்கட் பண்பு மென்மேலும் உயர்ந்தோங்கும் வண்ணம் அறிவியன் முறைப்படியும், உளவியல் சார்ந்தும், ஏரண முறையில் கருத்துகளைத் தொடர்ந்து தெளிக்கும்.

குடும்பத்திலுள்ள முதியோர் தலைவன், தலைவி, இளையர், பிஞ்சுகள் என அனைவரின் மனத்திற் பதியுமாறும், அவரவர் அறிவைத் தூண்டுமாறும், உலகத்திற்கு உதவுமாறும் கருத்துகளும் காட்சிகளும் அமையும்.

நொடிக்கு நொடி முன்னேறிவரும் அறிவியல், தொழில் நுணுக்க, மருத்துவக் கண்டுபிடிப்புகளும், ஆய்வு முடிவுகளும், மக்களையும், மாணவர்களையும் உடனுக்குடன் சென்றடையுமாறு பல்துறையறிஞர்கள் எழுதும் விளக்கக் கட்டுரைகளைத் தாங்கி வரும்.

மொத்தத்தில் உலகந் தழீஇய ஒட்பமாகவும், உணர்வினர் போற்றும் நுட்பமாகவும் இதழ் இலங்கும். மேற்குறித்த சிறப்புகளைக் கொண்ட நாளிதழ் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் வெளியிடப்படும்.

தமிழிய உறவோரே! பெருந்தொகை வேண்டுமிவ் வருஞ்செயலுக்கு ஒல்லும் வகையான் உதவுங்கள், எண்ணியெண்ணி இயங்கவுள்ள இந்நற் செயலுக்கு எண்ணிய தேயத்துச் சென்ற இருளறுக்கும் பொய்யா விளக்கமாகிய பொருளை, எண்ணாது வாரி வழங்குங்கள்! இவ்வேண்டுகோளைக் கண்ணுறும் தமிழ் ஆர்வலர்களும் அமைப்பினரும் வேண்டிய அளவு படியெடுத்துத் தத்தம் இதழ்களில் வெளியிட்டுதவுமாறு வேண்டுகிறோம்.

அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரிவிலக்குக் கிடைக்கும். நன்கொடையாளர் பட்டியல் தொடாந்து தெளிதமிழில் வெளியிடப்படும்.

நன்கொடை வழங்கும் நல்ல உள்ளங்கள் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, காசோலையாகவோ, பின்வரும் முகவரிக்கு அனுப்புக.

திரு தி.ப.சாந்தசீலன், பொருளர்,
தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை,
22 உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி - 605 009


நன்கொடையும் நற்கருத்தும் நல்குவதால் நாளிதழ்தான்
வன்பகையை யோட்டுமே வந்து.

இவண், தமிழ் வளர்ச்சி அறக்கட்டளைக்காக, பாவலர்.மு.வ.பரணன்,

தொடர்புக்கு: பாவலர்.மு.வ.பரணன், தமிழருவி, பி23.அதியமான் நகர், திருச்சி - 620 013.

நன்றி : தேமதுரத் தமிழோசை - 2005திசம்பர் இதழ்




ஐரோப்பாவில் தமிழர்கள்

- மறவன்புலவு க.சச்சிதானந்தன் -

ஐரோப்பியக் கண்டத்தில் 47 நாடுகள் உள. 70 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு 1000 ஐரோப்பியருள்ளும் ஒருவர் தமிழர். 47 நாடுகளிலும் தோராயமாக ஏழு லட்சம் தமிழர் வாழ்கின்றனர். தெற்காசியாவின் வேறு எந்த மொழி வழி இனமும் இத்தகைய மக்கள் தொகை அடர்த்தி விகிதாச்சாரத்தில் ஐரோப்பாவில் வாழ்வதில்லை என்பதில் உளந்திருந்துக.

ஜெர்மனியில் 300 தமிழ்ப் பள்ளிகள், பிரான்சில் 130 தமிழ்ப் பள்ளிகள், பிரித்தானியாவில் 70 தமிழ்ப் பள்ளிகள், சுவிட்சர்லாந்தில் 50 தமிழ்ப் பள்ளிகள் யாவும் அந்த அந்த அரசுகள் அல்லது உள்ளூராட்சி அவையின் மானியத் தொகை பெற்று முறைப்படி நடைபெறுகின்றன.

சைவக் கோயில்கள் 100 க்குமேல் ஐரோப்பா வெங்கும் உள. கிறித்துவத் தமிழ் தேவாலயங்களும் 50 க்கு மேல் உள. தமிழ்ச் சங்கங்களும், தமிழர் கலாச்சார அமைப்புகளும் பெரும் நகரங்கள் பலவற்றுள் உள.

பாரிசிலிருந்து தமிழ் வார இதழ்கள் நான்கும், இலண்டனில் இருந்து இலவயத் தமிழ் வார இதழ்கள் ஆறும் வெளிவருகின்றன. மின் இதழ்கள் பலவற்றையும், மின் உரையாடு தளங்கள் பலவற்றையும் தமிழ் ஆர்வலர்கள் நடத்தி வருவதுடன், மின்னம்பலத் தமிழைப் பாரிய முறையில் வளர்த்தும் வருகிறார்கள். மின் புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தோர் ஐரோப்பியத் தமிழரே.

பிரான்சிலும், பிரித்தானியாவிலுமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆறும், தமிழ் வானொலிகள் 20 க்கு அதிகமானதாகவும், 24 மணி நேர சேவையாக நடைபெற்று வருகின்றன. பாரிசில் முழுமையான தமிழ்ப் புத்தகக் கடைகள் இரண்டும், இலண்டனில் பகுதிநேரப் புத்தகக் கடைகள் நான்கும், சுவிட்சர்லாந்திலும் செருமனியிலும் ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் தமிழர் நடத்தும் தமிழிய மளிகைக் கடைகள் பலவற்றில் தமிழ்ப் புத்தகத் தட்டுகளும் இயங்குகின்றன.

நன்றி : தென் ஆசியச் செய்தி - 1-15 சனவரி 2006




சுப்பு விட்ட கண்ணீர்

கொத்தமங்கலம் சுப்பு தில்லானா மோகனாம்பாள் நாவல் எழுதிய ஆசிரியர். மகாத்மா காந்தியின் கதையை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக நடத்துவார். நாதூராம் கோட்சேயினால் சுடப்பட்டு காந்தி கீழே விழும் கட்டம் வரும்போது அழுதுவிடுவார். ஒவ்வொரு ஊரிலும் இது நடக்கும். இந்தக் கட்டம் வரும்போது அழுதுடுறீங்களே, உங்களுக்கு காந்தி மேல அவ்வளவு பக்தியா- ன்னு ஒருவர் கேட்டார்.

அதற்கு காந்திஜிமேல எனக்கு பக்திதான். அதனாலதான் ஊர் ஊராப்போயி அவர் கதையைச் சொல்றேன். ஆனா நான் அழறதுக்கு காரணம் வேற. காந்தி மகான் கதை- ன்னு புத்தகம் போட்டேன். அதிலே பாதிக்கு மேலே விக்காம தங்கிப்போச்சு. காந்தியைச் சுடற கட்டம் வந்ததும் வீட்டில கெடக்கற அந்தப் புத்தகங்களை நெனச்சுக்குவேன். கண்ணிலே தண்ணீர் கொட்டும் - என்றார் சுப்பு.

இன்று பதிப்பாளர்கள் நிலை இப்படி இல்லை.

நன்றி : புதிய ஆசிரியன் - சன 2006




தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள்.

ரொறன்ரோவில் வெளியாகும் தங்கத்தீபம் செய்தித்தாளின் கலை விழாவிற்கு தமிழ்த் தேசியத்தின் பகைவர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி.சேகர் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பகையாளியான நடிகர் எஸ்.வி.சேகர் அழைக்கப்படுவதை தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கனடாவிலுள்ள தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.

நடிகர் எஸ்.வி.சேகர் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியத்துக்க எதிரான கருத்துகளைக் கக்கி வந்திருக்கிறார். தமிழில் பெயர்ப்பலகை, தமிழ் மொழியில் திருக்கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு நடிகர் சேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் செயலலிதா. செயலலிதாவின் நடவடிக்கைகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்தான் நடிகர் சேகர். இவர்களை நாமே பெருந்தொகை பணம் கொடுத்து இங்கு அழைப்பத எமக்காகச் சிறை சென்றவர்களை அவமதிப்பது போன்றதாகும்.

நடிகர் சேகர் வருவதையிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோடு பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வர நண்பர்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. எனவே தமிழினப் பகைவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நடிகர் கலந்து கொள்ளும் விழாவை முற்றாகப் புறக்கணிக்குமாறு கனடா வாழ் தமிழ்மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விழாவில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று கலைஞர்களையும் நடன ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம். விழா பற்றிய விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என சகல இனமான ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே விழா விளம்பரங்களை முழக்கம், உலகத்தமிழர் போன்ற கிழமை ஏடுகள் பிரசுரிக்க மறுத்துள்ளதற்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாதம் இணையதளத்திலிருந்து எடுத்து அனுப்பியவர் - சரவணவேல்

நன்றி : நாளைவிடியும் இதழ் - நவ,டிச 2005 , www. tamilnatham.com






எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம். (ஆசிரியர் உரை)

வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜியின் நடிப்பாற்றலுக்கு மட்டுமல்ல, தமிழில் வந்த அருமையான படங்களில் ஒன்று என்பதை - மக்கள் ரசித்துப் பார்த்து மிகச் சிறந்த வெற்றிப்படமாக்கி அங்கீகாரம் தந்திருக்கிறார்கள் என்பதிலிருந்து உணரமுடியும். அது மட்டுமல்ல அது வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பரிசுப் பெற்றது என்பதும் ஞாபகத்தில் கொள்ளத்தக்கதுதான்..

"அது சரி.. எப்போதோ வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி. திடீர் என்று என்ன நினைப்பு" என்று நீங்கள் நினைப்பதும், உங்கள் புருவங்களில் ஆச்சரியங்கள் உற்பத்தி ஆவதன் விளைவையும் உணர முடிகிறது.

"சதாம் உேச்" வழக்கைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மனின் காட்சிகளும், வசனங்களும் மிகச் சரியாக ஞாபகத்திற்கு வருகின்றன. ஆதிக்கத் திமிர் கொண்டு அலைகிறவர்கள் எப்போதும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதில்லை. மிகச் சரியாகத்தான் இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது.

"நான் இந்த நாட்டின் அதிபர், என்னை விசாரிக்கும் நீங்கள் யார்?" சதாமின் இந்த ஆவேசமான குரல், அப்படியே கட்டபொம்மன் பட இறுதியில் வரும் கட்டபொம்மனை விசாரிக்கும் காட்சியோடு ஒத்துப்போகிறது. கட்டபொம்மனை ஒரு கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக வரலாற்றின் பக்கங்களில் உருவாக்கியது வெள்ளைத் தந்திரங்கள். சதாமின் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது வல்லரசுகளின் நீதி என்றும் மாறுவதில்லை என்றாகிறது. கட்டபொம்மனை வீழ்த்த அன்றைய வெள்ளைய அரசு பயன்படுத்திய உத்தி - கட்டபொம்மனின் பங்காளிகளை, உறவினர்களை விலைக்கு வாங்கி அவனுக்கு எதிராகத் திருப்பி அவனை வீழ்த்தியது. அதேதான் சதாம் விவகாரத்திலும் நடக்கிறது. சதாமின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் விலைபேசப்படுகிறார்கள். அவருக்கு எதிராக அவர்கள் திருப்பி விடப்படுகிறார்கள். சதாம் கோட் சூட் அணிந்து, அலைபாயும் விழிகளோடு, தலையில் கைவைத்தபடி கவனிக்கிறார், பலநேரங்களில் எழுந்து கத்துகிறார். இன்றைக்கு ஐ.நா.சபை இருக்கிறது. மனிதநேயம், மனித உரிமைகள் என்பது பற்றியெல்லாம் எவ்வளவோ பேசுகிறோம். அறிவியல் வளர்ந்து உயர்ந்து நிற்கிறது. ஆயினும் தந்திரங்கள் அப்படியே இருக்கின்றன. தனது அதிகாரத்திற்கு அடிப்பணியாதவர்கள் மீது பேரரசு ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றத் துணிகிறது. பிணங்களிலும், அவலங்களிலும் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட சூழலிலும், கடுமையான நெருக்குதலிலும் ஆதிக்க சக்தி தனது நீதிமன்றத்தை அமைக்கிறது. "நாங்கள் ஒரு நாயைக் சுடுவதாக இருந்தாலும், அதை விசாரித்துச் சட்டப்படிதான் சுடுவோம்" என்று தங்களின் அயோக்கியத்தனத்திற்குத் தானே சத்திய போர்வை போற்றிக் கொண்டு நீதி சொல்கிறது.

"விசாரணை என்கிற பெயரில் ஊருக்காக உன் நாடகத்தை நடத்து" என்று கட்டபொம்மன் சொல்வதுபோல.. சதாமிடமும் உலகத்திற்காக நடத்தப்படுகிறது. புளியமரத்தில் கட்டபொம்மன் தொங்கியது போல..சதாமின் நிலையும் ஆகலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரூரத்தைச் சகிக்க முடியவில்லை. கட்டபொம்மன் காலத்தில் உலகம் இவ்வளவு வளர்ந்திருக்க வில்லை. வளர்ந்துவிட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தக் கணிப்பொறி காலத்தில் உலக நாடுகள் இதை எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்கின்றன என்று புரியவில்லை. தங்கள் நாடுகளுக்கும் இதுபோன்ற அதிகார ஆணவங்கள் வரலாம் என்பதை உணர்ந்தும் அமைதியாக இருக்கின்றன.

எந்த நூற்றாண்டிலும் ஆதிக்க மனோபாவத்தின் அடிப்படை மாறவே இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சதாம் தன் நாட்டு மக்களுக்குக் குற்றம் இழைத்திருந்தால் அதை தண்டிக்க உரிமையுடையவர்கள் அந்த நாட்டு மக்கள்தான். அன்னியர்களுக்கு அந்த உரிமைகள் இல்லை. நீதி என்கிற பெயரில் நடத்தப்படுகிற இத்தகைய நாடகங்கள் குரூரமான வல்லரசு தந்திரங்களாய்த்தான் வெளிப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் எச்சரிக்கயைாக இருக்கவேண்டும். இலலை என்றால் நம் நாட்டிலும் பிண மேடைகளை அமைத்து அதன் மீது நீதிமன்றங்களைக் கட்டி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருப்பார்கள்... அவர்கள் வசதிக்காக, சுகத்திற்காக வகுத்து வைத்திருக்கும் சட்டங்களின் வழிகாட்டுதலோடு.

நன்றி : ஆசிரியர் உரை சுகன் இதழ் சனவரி 2006 - இதழ் எண் 224


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061