வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 09 - 2005

பாவலர் பரிசுத்திட்டம் 9

எண்சீர் மண்டிலம் - 2

பாட்டொடு தொகைநூல்கள் இயற்றமிழை விரிக்கும்

பண்சுமந்த திருமுறைகள் இசைத்தமிழைத் தெரிக்கும்

நாட்டுபுகழ்க் குறவஞ்சி நாடகத்தைக் காட்டும்

நல்லதமிழ் மரபினைத்தொல் காப்பியமே நாட்டும்

காட்டரிய முத்தமிழ்சீர் சிலம்பொன்றே சொல்லும்

கருதரிய அறமனைத்தும் வள்ளுவமே விள்ளும்

ஈட்டுமிவை பழந்தமிழன் பலநாளாய்ப் படைத்தான்

இன்றுள்ள தடித்தமிழன் ஒருநாளில் உடைத்தான்.


- இரா. திருமுருகனார் -
நன்றி : தெளிதமிழ் - 17 - 8 -2005



நால்வர் கவிதைகள்

(நால்வர் மு.சேது, கே.முகம்மது யூசுப், தைதீ.அசன் கனி, கரு.திருவரசு)

கால்காசும் மிச்சமில்லை காலமெல்லாம் பாடுபட்டுத்
தோல்போர்த்த கூடானான் தோழர்காள்! - வேல்விழியால்
வேசிகள் வீசுவலை வீழ்ந்தழிந்தான்; சில்லறைக்
காசுக் குதவாச்செய் கை !

காலரைஎன்று கணக்காய்ப் பணம் சேர்த்து
நாளும்அதை வணங்கி நல்லபடி - வாழுகின்ற
கஞ்சனின் கையொரு கையல்ல! ஈந்துவக்கும்
நெஞ்சனின் கைதான்நற் கை !

கால்வயிற்றுக் கஞ்சிக்கே காலமெல்லாம் பாடுபட்டேன்
வால்பிடிக்கும் பண்பிருந்தால் வாழ்ந்திருப்பேன் - நூல்போல்
இளைத்தென்ன ஏற்றம் எனக்கில்லை! போச்சே
தழைத்த சிறுநம்பிக் கை !

கால்பிடித்து நித்தம் கடன்செய்தேன் : காதலரின்
கால்கள் வழிநடக்கக் கண்பார்க்கும்! - காலுக்கே
உன்னிப் பணிசெய்தும் எண்ணாத தேனோ? அக்
கண்ணுக்கென் செய்ததிந்தக் கை !

- இவை நான்கும் கால் எனத்தொடங்கி கை என முடியும் நேரிசை வெண்பாக்கள். -
நன்றி : நால்வர் கவிதைகள் - பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா



நேபாளி கவிதை

தனக்குத் தானே வெளிப்படுத்தல்

அன்பே, இதோ என் கரம்
உனக்குக் குலுக்க வேண்டுமென்று
ஆசை தோன்றினால்

அந்த மரக்கிளைளை ஒரு முறை தொட்டுப்பார்
ஆசீர்வதிக்க உனக்கு என் கை உணர்வாக இருக்கும்

உன் நீண்ட கார்கூந்தலில்
என் கரம் காண்பிக்கும் குறும்புகளைக்
காண வேண்டுமானால்
அன்பே, சிறிது நேரம் குளிர்காற்று வீசும் திசையில்
சென்று அமர்ந்து பார் நீ

அந்த நேரம் கேட்கலாம்
காற்றின் அசைவில் என்
இதய துடிப்பின் தாளத்தை

என் முகத்தைக் காண் ஆலலோ உனக்கு ?
வெகுதூர அடிவானத்தில்
ஒருமுறை உற்றுப்பார் அன்பே
என் குரலைக் கேட்பதற்கு ஆவலோ உனக்கு,
என்றால் தனிமையில் அமர்ந்து
ஹாம்லட்டின் வரலாற்றை சுவைத்துப்படி.

தமிழாக்கம் - எஸ். உஷா
நன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் செப் 2005


ஏக்கம்

இரண்டாம் முறையாய்
குழம்பு ஊற்றச் சொல்லி
ருசி பார்த்தாயிற்று !

உறிஞ்சிக் குடித்தே
ரசம் முழுவதும்
காலியாகிப் போனது !

பொரியல் தீர்ந்ததால்
ஊருகாயோடு...
மோர்ச்சாதமும் முடிந்தது !

எல்லாம் ருசிபார்த்து
ஏப்பமிட்ட நீ
எப்போதும் போல
"சாதம் குழைவு,
குழம்பில் உப்பில்லை
கறி போதாது"
குற்றப்பத்திரிகை
வாசித்து விட்டு
குப்புறப் படுத்துக் கொண்டாய்.

இப்படி தினந்தோறும்
சமையலில் நீ ...
குறைகாண்பதற்காக,
ஒருபோதும் நான்
கலங்கியதே இல்லை !

மனைவியென்ற முறையில்
உன்னிடம் நான்
எதிர்பார்ப்பதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான் !
ஒப்புக்காக ஒருமுறையாவது
கேட்கமாட்டாயா..!
நீ சாப்பிட்டாயா என்று !

நன்றி :- க.திரு -
பயணம் இதழ்- டெடிடடிரஸ்ட் வெளியிடு



போட்காஸ்டிங் ஓர் அறிமுகம்

போட்காஸ்டிங் என்பது இணையதளத்தில் உள்ள நிகழ்ச்சிகளை உங்களது ஐ.பாடில்(iPod) பதிவு இறக்கம் செய்து கொண்டு நீங்கள் விரும்பும் நேரத்தில் கேட்டுக்கொள்ளலாம். உதாரணமாக இலங்கை வானொலியில் உங்களுக்குப் பிடித்தமான ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் கேட்கத் தவறிவிட்டுவிடுகிறீர்கள். அப்படியான சூழ்நிலையில் இந்த போட்காஸ்டிங் முறையானது உங்களுக்கு உதவுகிறது. அதற்கு முன் இதன் பயன்பாடுகள் இன்னும் சற்று விரிவாகக் காணலாம்.

இது நாள் வரையிலும் இணையதளத்தில் உள்ள படங்களையும் எழுத்துகளையும் கோப்புகளையும் மட்டுமே பதிவிறக்கம் செய்த நம்மால் ஒலியை பதிவு இறக்கம் செய்ய முடியவில்லை. அப்படியே செய்தாலும் அதனை அவ்வளவு தெறிவாகக் கேட்க இயலவில்லை. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறது இந்த போட்காஸ்டிங். இதற்காக இன்று பல்வேறு மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக இணையத்திலேயே இலவசமாகக் கிடைக்கின்றன.

வெளிநாட்டு வானொலிகள் பலவும் தனது நிகழ்ச்சிகளை இணையத்திலும் கேட்பதற்கு வசதி செய்துள்ளது. ஆனாலும் நமக்கு நேரம் வேண்டுமே. அது மட்டுமல்லாமல் இன்று வானொலி கேட்கின்ற அனைவரும் இணைய தளத்தில் வானொலி கேட்கும் அளவிற்கு வசதியைப் பெற்றிருக்கவில்லை. உதாரணமாக பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாகும் - பாட்டொன்று கேட்டேன் - நிகழ்ச்சியை இணையதள்த்தில் கேட்க குறைந்தது பத்து நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். பத்து நிமிடம் என்பது எந்த வித தடையும் இல்லாமல் கேட்கும் பட்சத்தில்தான். ஒரு சில சமயங்களில் இடையிடையே தடைகள் ஏற்பட்டு நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கேட்கமுடியாமல் போவதும் உண்டு.

இது போன்ற சூழ்நிலையில் இந்த போட்காஸ்டிங் ஒரு வரப்பிரசாதம். எப்படி? போட்காஸ்டிங் அமைப்பில் உறுப்பினர் ஆகிவிட்டாலே போதும். உங்கள் விருப்ப நிகழ்ச்சிகள் எம்.பி.3 வடிவில் உங்கள் இணையபக்கத்தில் மின் அஞ்சலில் பதிவிறங்கிவிடும். உதாரணமாக சீன வானொலியின் ஒவ்வொருநாள் நிகழ்ச்சிகளையும் நீங்கள் ஒவ்வொரு முறை சென்று பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. தானகவே அது தங்கள் முகவரியில் பதிவிறக்கம் ஆகிவிடும். ஆனால் போட்காஸ்டிங் வடிவில் சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கினால் ஒழிய நாம் இதனைப் பயன்படுத்தவியலாது.

புராட்காஸ்டிங் மற்றும் ஐ-பாட் ஆகியவற்றின் சுருக்கமே போட்காஸ்டிங். போட்காஸ்டிங் ஒலிபரப்பைக் கேட்க நமக்குத் தேவையானது ஐ-பாட் என்னும் கையடக்கக் கருவி. இது சாதாரண வாக்மேன் போன்றதே. இந்த போட்காஸ்டிங் ஒலிபரப்பிற்கு எந்தத் தடையும் கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் தனியாக வானொலி நிலையத்தை இதில் நடத்தலாம். இணையம் வழியாக இயங்கும் இந்த வடிவத்திற்கு ஐ-பாடர் (iPodder) மற்றும் ஆப்பிள் ஐ டியூன்ஸ் (iTunes) ஆகிய மென்பொருள்கள் தேவை. இது இணையத்திலேயே இலவசமாகக் கிடைக்கிறது. போட்காஸ்டிங்கில் பயன்படுத்தும் ஒலி வடிவம் எம்.பி.3 வகையிலானதே. ஆனால் எம்.பி.3 குறுந்தகடைவிட அதிகமான செய்திகளை இதில் பதிவு செய்யலாம். போட்காஸ்டிங்கில் உள்ள ஒலி வடிவங்களை நீங்கள் உங்கள் கணினியில் கேட்கலாம். எம்.பி.3 இயக்கியில் கேட்கலாம்.

இன்று சர்வதேச வானொலிகள் பலவும் இணையத்திலும் தனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இவ்வாறான நிலையங்கள் போட்காஸ்டிங் செய்கின்றனவா என்று எப்படி அறிவது ? விடை : இதோ. அந்த இணையதளத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஆர்.எஸ்.எஸ் (R.S.S) என்ற எழுத்துகள் மின்னுகின்றனவா என்று பாருங்கள். அப்படியிருந்தால் அது போட்காஸ்டிங் செய்கிறது அதனை அழுத்தினாலே போதும். அதில் அனைத்து விபரங்களும் அதில் கிடைக்கும்

போட்காஸ்ட் அலே(Podcast Alley) எனும் இணையதளம் உலகில் உள்ள அனைத்து போட்காஸ்டிங் தளங்களையும் பட்டியலிடுகிறது. தரமான போட்காஸ்ட் தளங்களை கோட்காஸ்ட் பங்கர் (Podcast Bunker) தளமும், தொழில் நுட்பத் தகவல்களை டெக் கோட்காஸ்ட் (TechPodcast) தளமும் வழங்குகின்றன. இது பற்றிய தகவல்களுக்கு (www.podacast411.com.f12_2.html) பார்க்கவும்.

- - தங்க. ஜெய்சக்திவேல் -
சர்வதேச வானொலி இதழ் - சென்னை 41. அலைபேசி : 98413 66086



ஜீவாவிடம் ஒன்றிப்போன இரண்டு முதல்வர்கள்

காமராஜ் முதல்வராக இருந்த நேரமது. தாம்பரம் பகுதியில் ஜீவாவால், அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னாளில் அப்பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைக்கப்போகும் வழியில் காமராஜர் ஜீவாவைக் காணச் சென்றார். ஓர் ஓலைக் குடிசையின் முன்னே ஒரு குழயடியில் துவைத்துக் குளித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. அவரைப் பார்த்துக் கண் கலங்குகிறார் முதல்வர் காமராஜர்.

"என்ன ஜீவா.. உங்க பகுதியிலே பள்ளிக்கூடம் திறக்கப் போகிறேன் நீங்களும் வாருங்கள்" என்கிறார் காமராஜர். அவரை வரவேற்ற ஜீவா, இதே வந்து விடுகிறேன் நீங்கள் முன்னால் போங்கள் நான் பிறகு வருகிறேன் என்கிறார் ஜீவா. கூடவே வரும்படி பிடிவாதம் பிடித்ததால் காமராஜரிடம் " அதோ வேட்டியைத் துவைத்துக் காயப் போட்டிருக்கிறேன். அந்த வேட்டி காய்ந்ததும் கட்டிக்கொண்டு வந்து விடுகிறேன். கொஞ்ச நேரமாகும். அதனால் நீங்கள் முன்னே போங்கள்" என்றார்.

தாம் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியைத் தவிர மாற்று வேட்டி கூட இல்லாமல் தன் கஷ்டத்தை வறுமையைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் மக்களுக்காக உழைத்தவர் ஜீவா.

காமராஜருக்கு ஒர் எண்ணம் உருவாயிற்று. ஜீவாவிற்குச் சொந்த வீட்டுமனை வழங்கவேண்டும் என்பதே அது. தன்னுடன் வந்த மாவட்ட ஆட்சியர் கா.திரவியத்தோடு கலந்துரையாடினார். ஜீவா அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த அந்த குடிசைப் பகுதி அரசு புறம்போக்கு நிலம். ஜீவாவிற்கு மட்டும் பட்டாமனை வழங்கினால், அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பலநூறு குடிசைப்பகுதி மக்களுக்குப் பட்டாமனை வழங்காமல், தான் மட்டும் குடியிருக்கும் பட்டாமனையை வாங்கிக் கொள்ளமாட்டர் என்பதை நன்கு உணர்ந்த காமராஜர் அந்த தாம்பரம் குடிசைப் பகுதியில் வாழ்ந்த அனைவருக்குமே சொந்த வீட்டுமனைப் பட்டா வழங்கினார். அந்தப் பகுதிதான் இப்பொழுது ஜீவா நகர் என்று அழைக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஜீவாவைக் காண தாம்பரத்தில் அவர் குடியிருந்த ஓலைக்குடிசையை நோக்கிக் காரில் வருகிறார். சேறும் சகதியும் கலந்த தெருவில் நடந்து வருகிறார். ஜீவா வாசலுக்கு வந்து வரவேற்கிறார்.

வாங்க வாங்க என்ன எம்.ஜி.ஆர் ? இந்த மழையில் இவ்வளவு தூரம்? என்று வினவிய ஜீவாவையும் மழையில் ஒழுகிக் கொண்டிருந்த ஓலைக்குடிசையையும் நோட்ம் விட்டார் எம்.ஜி.ஆர். அந்தக் காட்சி பாட்டாளி வர்க்கத் தலைவர் ஜீவாவிற்கு வீடு தரவேண்டும் என்ற எண்ணத்தை முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஏற்படுத்தியது. ஜீவாவிடம் தன் எண்ணத்தை வெளியிட்டார். அதற்கு ஏழைகளின் தோழன் ஜீவா சொன்ன பதில்

" இங்கே இருக்கிற ஏழைகளின் நிலைமை எப்போது மாறுகிறதோ... நம்மால் மாற்றப்படுகிறதோ.. அப்போது நானும் வேறு வீட்டிற்கு மாறிக் கொள்கிறேன். அந்த ஏழைகள் இருக்கும் வரை ஏழைகளோடு ஏழையாக நானும் இருந்து விடுகிறேன்"- என்றார்.

- - பெரணமல்லூர் சேகரன் -
நன்றி : புதிய ஆசிரியன் இதழ் ஆகஸ்ட் 05



எழுகதிர் வெளியிட்டுள்ள இம்மாதச் சிறப்பு மடல்

சூரியத் தொலைக்காட்சியால் சிங்கப்பூரிலும் தமிழ் சீரழியும் அபாயம்.

அன்பிற்குரிய ஐயா அருகோ,

........ சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் வாரத்தில் கலந்துகொள்ள இந்தக் கழுதைக் காந்தனையும், பத்தினித் தெய்வம் சிவசங்கரி என்பவரையும் அழைத்ததாகவும், இதை அறிந்த மானமுள்ள சிங்கப்பூர்த் தமிழர்கள் சிலர் கழுதைத் காந்தனை அச்சுறுத்த "ஏய் கழுதைக் காந்தா, நீ சிங்கப்பூர் வந்தால், செருப்படி வாங்காமல் போகமாட்டாய்" என மிரட்டல்கள் விடுத்ததாகவும், அதனால் அவர் வரப் பயந்து வரவில்லை என்றும் செய்திகள் அறிந்தேன் !

உலகத் தமிழர்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வும் இன் உணர்வும் தமிழ்த் தாய்நாட்டில் உண்டாகாமல் திராவிட இயக்கங்கள் மழுங்கச் செய்து வருவதை, தமிழ்நலம் நாடும் அரசியல் தலைவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

அங்குள்ள சூரியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, இங்குள்ளவர்களும் தமிழைச் சாகடிக்கத் தொடங்கிவிட்டனர். எங்கு போய் முடியுமோ ? என்றறியாமல் என்போன்றோர் நாளும் வேகிறோம்! விம்முகிறோம்!

- முருகடியான் - சிங்கப்பூர் -
நன்றி : எழுகதிர் - ஆகத்து 2005



திரைப்படம் வேறு நடைமுறை வாழ்க்கை வேறு

கடந்த வாரம் காரைக்குடியில் இளைஞர்கள் இருவருக்கும் இடையே மோதல். மோதலில் ஒருவர் கொலையுண்டார். மற்றவருக்குக் கொலைக்காகக் கடும் தண்டனை கிடைக்கலாம்.

இந்த இளைஞர்கள் எந்த இலக்குக்காக மோதிக் கொண்டனர்? சொல்லவே வெட்கமாகவும் இழுக்காகவும் உள்ளது. "ஒரு நடிகனின் திரைப்படத்திற்க யார் முதலில் வெட்டுரு வைப்பது?" என்பதே அவர்களின் மோதலுக்கான உயரிய காரணம்.

காவல் துறையினரின் தடியடியால் அரத்த வெள்ளத்தில் மூழ்கியும் தனது கடைசிச் சொட்டு அரத்தம் உள்ளவரை தேசியக் கொடியைக் கீழே விடாமல் உயர்த்திப் பிடித்த கொள்கை மறவன் திருப்பூர் குமரன் பிறந்த மண் இந்தத் தமிழ் மண் !

தனது வளமான வாழ்வைத் துறந்து, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டிச் சிறை சென்று, செக்கு இழுத்து, ஈகத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த வ.உசிதம்பரனார் பிறந்த மண் இந்தத் தமிழ் மண்.

இந்த மண்ணிலா இந்த வெட்கக்கேடு? இந்த இழுக்கு? திரைப்படத்தைப் பற்றியும், திரைப்படக் கதை நாயகர்கள் பற்றியும், இளைஞர்களுக்குத் தெளிவான கண்ணோட்டம் உருவாக வேண்டும். அவர்கள் பணத்திற்காக நடிக்கிறார்கள். பணம் கொடுததால் பன்னாட்டு நிறுவனங்களின் எந்த விளம்பரத்திலும் அவர்கள் நடிப்பார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.

தனி மனித வாழ்க்கையில் அவர்களிடமிருந்து பின்பற்றக்கூடிய பண்புகள் என்பது அரிதுதான்.

திரைப்படத்தில் கடமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாக விளங்கும் இவர்கள், தங்கள் உண்மையான வருமானத்தைக் காட்டி அதற்கு முறையாக வரி செலுத்துகிறார்களா என்பது ஆய்வுக்கு உரியது.

இவர்களிடமிருந்து ஒன்றை மட்டும் நாம் கற்றுக் கொள்ளலாம். இவர்கள் தங்கள் வெற்றியை, வருவாயைத் தொழிலைத் தக்கவைத்துக் கொள்ள எப்படிப் புதுப்புது அணுகுமுறைகளுடன் கடுமையாய்ப் போராடுகிறார்களோ அதுபோல நம் வாழ்வில் நம் தொழிலில் நம் முழுக் கவனத்தையும் செலுத்தலாம். அதில் வரும் சிக்கல்களை முழு ஆற்றலுடன் எதிர் கொள்ளலாம்.

திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு. கடுமையான உழைப்புக்குப் பின் உடல் களைப்பைப் போக்க, மனக்களைப்பைப் போக்கப் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கே நம் முமுநேர வாழ்க்கை ஆகிவிடாது. அண்மையில் நண்பர் ஒருவர் ஆய்வுப் பணிக்காகச் செருமன் நாட்டுக்குச் சென்று வந்தார். செருமனியின் வளர்ச்சி எப்போதும் நமக்கு வியப்பைத் தருகிறது. இரண்டு உலகப் போரிலும் ஈடுபட்டு, அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது செருமனி. ஆனால் இன்று மீண்டும் செருமனி ஒரு வல்லரசு நிலைக்கு உயர்ந்து நிற்பது எப்படி?

பணி நேரத்தில் செருமானியர்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டடன் கூடிய கடுமையான உழைப்பே அதற்குக் காரணம் - என்றார் நண்பர்.

கடுமையான உழைப்பு மட்டுமே வாழ்க்கை என்றால் வாழ்வு பொறியியல் மயமாகிவிடாதா ? என்றேன் நான்.

கிழமைக்கு ஐந்து நாள்கள்தான் உழைப்பு. இரண்டு நாள்கள் அனைத்தையும் மறந்த ஓய்வு. காரி,. ஞாயிறு என்றால் அவர்கள் மகிழ்ச்சியாய் இளைப்பாறுவார்கள். கேளிக்கை விடுதிகளுக்கும் செல்வார்கள். என்றார் நண்பர்.

அய்ரோப்பியர்களின் கடுமையான உழைப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கிழமையின் இறுதியில் அவர்கள் மேற்கொள்ளும் கேளிக்கை நடனங்களை மட்டும் அய்ரோப்பியப் பண்பாடு என நம் இளைஞர்கள் தவறாகக் கருதுகிறார்கள். என்றார் நண்பர்.

செருமனியர்களின் உயர்வுக்கு இரண்டாவது காரணம் அவர்கள் சட்டத்தை மதிப்பது. வரி அங்கு அதிகம் என்றாலும் எல்லோரும் அங்கு ஒழுங்காக வரி செலுத்தி விடுகிறார்கள். மக்கள் ஒழுங்காக வரி செலுத்தி விடுவதால் அவர்களுக்குத் தேவையான கல்வி, குடியிருப்பு, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்து ஏந்துகளையும் அரசு செய்து தருகிறது. எனவே சொத்துச் சேர்க்க வேண்டிய தேவை அங்கு இல்லை. போக்கு வரவே இல்லாத நள்ளிரவிலும், எதிரில் எந்த வண்டியும் வரவில்லை என்றாலும் சிவப்பு விளக்கு என்றால் வண்டியை நிறுத்திப் பின்பு பச்சை விளக்கு எரியும்போதுதான் சாலையைக் கடந்து செல்வார்கள். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொரு செருமனியருக்கும் உள்ளது - என நண்பர் கூறினார்.

திரைப்படம் வேறு. நடைமுறை வாழ்க்கை வேறு. இதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். குமுக அக்கறை கொண்டோர், குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் இதை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும்.

- நா. இளங்கோ -
நன்றி : தமிழியக்கம் திங்களிதழ் 2005



கணியான் கூத்து காணாமல் போகிறது

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளிலும் கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து என்னும் கிராமியக்கலை கோயில் விழாக்களில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருவதாகும். சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில்களான ஊசிக்காட்டான்,. இசக்கியம்மன், மாடசாமி, பேச்சியம்மன், சாஸ்தா, முப்புடாதி - கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்போது இந்தக் கணியான் கூத்து நிகழ்ச்சி நடைபெறும்.

அப்போது கதையை பாடலாக இசையோடு இருவர் பாடுவார்கள். இவர்களை அண்ணாவி என்பார்கள். பாட்டுடன் விளக்கவுரையும் இடையிடையே கலந்து வரும். தப்பட்டை அடியும், தாளமேளங்களும் கேட்போரை பரவசமடையச் செய்யும். இவ்விதமாக அந்தப் பாட்டுக்கு ஏற்றார்போல இருவர் தப்பட்டைத் தாளம் அடிக்க - பெண் வேடமிட்ட இருவர் அவைகளுக்கிசைந்தாற்போல் அழகாக வளைந்து, நெளிந்து, குழைந்து, குதித்து, சுழன்று ஆடி ஓடி அமர்க்களப் படுத்துவார்கள்.

பாட்டும் ஆட்டமும் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுது கோவிலில் பூஜை நடக்கும். அவ்வேளையில் சுவாமியானவர் பக்தர் ஒருவர்மேல் இறங்குவார். அதனால் அவர் அருள் வந்து ஆவேசமுடன் ஆடுவார். அவ்வேளையில் வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்துப் பின் விலகிவிடுவார். சிறிது நேரத்தில் கதையும் முடிவுறும். இதுதான் கணியான் கூத்து.

கடைச் சங்க நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, போன்ற ஆற்றுப்படை நூல்களில் வேலனாட்டம், குரவைக்கூத்து வருவது போன்று இந்தக் கணியனாட்டமும், வில்லுப் பாட்டும் தொன்று தொட்டே தமிழ் மக்களிடம் இருந்து வந்ததாகும். இந்தக் கூத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் இப்போது நெல்லை, குமரி மாவட்டங்களில் இரண்டு மூன்று ஊர்களிலேயே உள்ளனர். அதுவும் விரல் விட்டு எண்ணும் அளவில் முப்பது நாற்பது கலைஞர்களே உள்ளனர். இக்கலைஞர்களின் வாழ்வுக்கு பின்னர் இனிவரும் காலங்களில் இக்கலையானது இருக்குமா என்பது சந்தேகமே.

ஏனெனில் பெரியத்திரை, சின்னத்திரைகளின் ஆக்கிரமிப்பால் படிப்படியாகப் பல கிராமியக் கலைகள் நம்மைவிட்டு மறைந்து விட்டன. தெருக்கூத்து, நாடகம், பொய்க்கால் குதிரைஆட்டம, இசைக் கதைச் சொற்பொழிவு, தோற்பாவை நிழற்கூத்து, ஆலியாட்டம், போன்றவை இன்று நம்மிடையே இல்லை யென்றுதான் சொல்லவேண்டும். அவைகளைப் போல கணியான் ஆட்டமும் காணாமல் போய்விடுமோ என அஞ்சவேண்டியுள்ளது.

- நன்றி : நாடார்குல தீபம் - ஆகஸ்ட் 2005 -


தெரிந்தாலும் சொல்லவேண்டியிருக்கிறது சிந்திக்கச் சொல்லவேண்டியிருக்கிறது

முதலாளித்துவம்

சோசலிசம்
1. மூலதனம் (பணம்) மனிதர்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் மூலதனத்தைப் (பணத்தைப்) பயன்படுத்துவார்கள்
2. பெரும் பெரும் நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் என்னுடையது உன்னுடையது என்று தனியார் பெயரில் இருக்கும். பெரும் பெரும் நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் என்னுடையது உன்னுடையது என்று அல்ல நம்முடையது என்றும், அரசு பெயரிலும் இருக்கும்
3. மனிதன் அடுத்தவன் வீட்டில் வேலை செய்வது போல முதலாளியின் தொழிற்சாலையில் வேலை பார்ப்பான். மனிதன் தன் சொந்த வீட்டில் வேலை செய்வதைப்போல அரசுத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பான்.
4. பொருள்கள் ஒருபுறமும், பொருள்களை வாங்க வக்கற்ற மனிதர்கள் மறுபுறமும் குவிந்திருப்பார்கள். பொருள்கள் ஒருபுறமும், பொருள்களை வாங்கும் மனிதர்கள் மறுபுறமும் நிறைந்து இருப்பார்கள்.
5. எந்த ஒரு விசயத்திலும் லாபமே பிரதான நோக்கமாக இருக்கும். எந்த ஒரு விசயத்திலும் மனித நலனே பிரதான நோக்கமாக இருக்கும்
6. எந்த ஒரு பொருளும் (தண்ணீர்கூட) விற்பனை செய்யப்படும். எந்த ஒரு பொருளும் அரசு விலையில் விநியோகம் செய்யப்படும்.
7. வேலை தேடி மனிதர்கள் வீதிகளில் அலைவார்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை அடிப்படை உரிமையாக்கப்படும்.
8. உடல் உழைப்பைத் துறந்த ஒரு கூட்டம் பண்பாட்டுக் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்ச உடலுழைப்பு சமூகக் கடமையாக்கப்படும்
9. மூலதனம் தன்னை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள நாடுவிட்டு நாடு அலையும் மூலதனம் சோசலிச உலகத்தை உருவாக்க நாடுவிட்டு நாடு சேவை செய்யும்.
10. போலீஸ் மக்களின் நண்பன் என்று விளம்பரம் செய்யப்படும். மக்கள் போலீஸின் நண்பர்களாக இருப்பார்கள்.
11. மனிதனை மனிதன் போட்டியாளனாக சொல்லப்போனால் எதிரியாக உருவாக்கும். மனிதனை மனிதன் சகோதரனாக, இயற்கையோடு போராடுவதற்கான தோழனாக உருவாக்கும்.
12. முதலாளித்துவமே மனிதகுலத்தின் இறுதியான சமூக அமைப்பு என்று பேசும் சோசலிசத்திலிருந்து கம்யூனிச அமைப்புக்கு வளரவேண்டியது எனப் பேசும்.
13. சோசலிசத்தில் தனிமனிதச் சுதந்திரம் பறிக்கப்படுவதாகச் சொல்லும் மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளியச் சுதந்திரமும், சோசலிசத்தைச் சீர்குலைக்கும் சுதந்திரமும் மட்டுமே பறிக்கப்படும் என்பதை நிரூபிக்கும்.
நன்றி : பயணம் - திங்களிதழ் ஆகஸ்ட் 2005


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061