வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 27 - 08 - 2005

மாற்றங்கள்

பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை.
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்.
பிரசாதமாகி விடுகிறது
திருநீரும், பொட்டும்.
எந்த மாற்றமும் இன்றி
வெளியேறுகிறான் பக்தன்.

புன்னகை சேது.
நன்றி : கருக்கல் இதழ் எண் 4



என்மனார் புலவர்

புலிகள் ஆட்டை வேட்டை யாடினால்
அரசியல் தந்திரம் என்றே அறிக,
ஆடுகள் புலியை எதிர்த்து நின்றால்
சட்ட மீறுதல் ஆகும் : புரிக.

உழைப்பவர் உரிமையை ஆள்வோர் பறித்தால்
அரசின் சாதனை என்று முழங்குக.
பறித்ததைக் கொஞ்சம் திருப்பிக் கொடுத்தால்
சலுகை பரிவெனத் தப்பட்டை முழக்குக.

பாமரன் ஊர்ப்புறம் குடிசை கட்டினால்
ஆக்கிர மிப்பென அறிவித் திடுக
வல்லரசு நாடு எளியரைத் தாக்கினால்
அமைதி பேணல் என அரும்பொருள் கொள்க.

மசூதியை இடிப்பது இராமர் சேவை
சாதிகள் பேணுதல் இந்துமதக் காப்பு
காந்தியைச் சுட்டவன் விடுதலை வீரன்.
"HAPPY PONGAL" செம்மொழி வளர்ச்சி.

பொதுத்துறை விற்பனை பொருளியல் திருத்தம்
தனியார் கொள்ளை தாராள மயம்தான்.
வாரிசு பாத்தியம் இயக்க வளர்ச்சி
அடித்து வதைத்தல் விசாரணை யுக்தி.

காவலில் இறப்புகள் கடமையின் உச்சம்
என்மனார் இந்நாள் பொய்யில் புலவர்.
நச்சினார்க் கினியராய் அரசு எந்திரம்
நடப்பதை சரிசெய புரிந்தெதிர் எழுக.

பழனி. சோ. முத்துமாணிக்கம்.
நன்றி: கல்ஓசை - செப் 2005



உண்டோ தமிழ்ப்பற்று உமக்கு ?

தண்டமிழால் வாழும் தமிழா சிரியர்களே !
உண்டு தமிழ்ப்பற் றுமக்கென்றால் - அண்டிப்
படித்திடுநும் மாணாக்கா பட் ஓ.கே சோ என்
றெடுத்திடுவா ரோஉயிரை இன்று ?

பீடார் தமிழால் பிழைக்கும்பே ராசிரியீர் !
ஓடுதமிழ்ச் செந்நீர் உமதென்றால் - நாடிஉம்பால்
கல்வி பயின்றிடுவோர் காலேசு, சூப்பர் என்று
சொல்லிமகிழ் வாரோ துணிந்து ?


வண்டமிழைக் கற்று வயிறு வளர்ப்போரே !
உண்டுதமிழ் மானம் உமக்கென்றால் - கண்டு
பழகிடுநும் மாணவர் குட் பை, தேங்க்யூ என்று
மொழிகுவரோ வாயால் முனைந்து ?

இரா. திருமுருகனார்
நன்றி : தெளிதமிழ் - கன்னி இதழ்



நெல்காய்ச்சி மரம்

பட்டணத்துப் படிப்ப
படிச்சுப்புட்டு வந்திருக்கா
பாக்கணும் வயலன்னு
பாடாப் படுத்திப்புட்டா

பனைஓலைத் தடுக்க
பாதிபின்னி வுட்டுப்புட்டு
பவுனுகுட்டி வாடின்னு
பாட்டன் எழுந்திருச்சார்.

என்னத்தடிப் பாக்கப்போற
எதுக்குடி ளொள்ளுங்க
எனக்கதக் காட்டாட்டி
எகிறிடும் உன்பல்லெல்லாம்.

கெக்கேன்னு சிரிச்சுட்டு
கண்சிமிட்டிக் காட்டிட்டுக்
கோல்பிடித்து முன்போக
கைபிடித்து பின்வந்தாள்

வயலே இதாண்டி
வந்துட்ட பாத்துக்கடி
வாராத தண்ணீரால்
வாழம வாழுறோண்டி.

கழனியில மண்டிட்டக்
காட்டுக் கருவையினை
நெல்காய்ச்சி மரமென்றாள்
நின்றார் நெடுமரமாய்.

புலவர். அ. பக்கிரிசாமி.
நன்றி : அறிவே துணை செப் 2005



ஊற்றில் இடம் பெற.

தமிழாய் தவறுகளின்றி இருக்க வேண்டும்.
தமிழின் வளத்திற்கு வலிவூட்டுவதாய் இருக்க வேண்டும்.
தமிழின் உயர்வுக்கு உகந்ததாய் இருக்க வேண்டும்.
தனித்துவம் உடையதாய் - தரமானதாய் இருக்க வேண்டும்.
தரணியின் மேம்பாட்டிற்குத் தக்கதாய் இருக்க வேண்டும்.
ஊற்றில் உங்கள் படைப்புகள் இடம்பெற உரிய தகுதிகள்
இவை மட்டுமே.
நன்றி : ஊற்று இதழ் செப் 2005.

பெங்களூர்த்தமிழ்ச் சங்க ஏடாகத் திங்களொருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் ஊற்று இதழ் தமிழிய உணர்வோடு வருவதும், வரலாறு காட்டுவதும் சிறப்பாக உள்ளது. இந்த இதழில் படைப்பாளர்களுக்குரிய இலக்கணம் காட்டியது உயர்தரத்தது.



ஒழிக்கப்பட வேண்டுமானால்.

1) மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2) நீதி, நேர்மை, ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

3) நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால் பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.

4) வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5) அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

தந்தை பெரியார் குடியரசு இதழில்...
நன்றி: தேமதுரத் தமிழோசை இதழ் - செப் 2005



உலகத்தமிழர் பேரமைப்பு

6.தெற்கு மதகுத்தெரு, கோட்டூர்புரம், சென்னை - 600 085
தமிழ் அமைப்புகளுக்கு வேண்டுகோள்

அன்புடையீர்,
வணக்கம். உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட உலகத்தமிழர் பேரமைப்பு - கடந்த 3 ஆண்டுக் காலத்தில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் உலகத்தமிழர் பேரமைப்பில் இணைந்து வருகின்றன.

இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை இணைப்பதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூர்த் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் புலவர். கு.சுப்பிரமணியம், புலவர் அறிவுடைநம்பி, இலங்கைநாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பெறுப்பேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள தமிழர் அமைப்புகளை உலகத் தமிழ் அமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்.

விவரம் அறிய விரும்புவோர் அஞ்சலட்டையில் தங்கள் அமைப்பின் முகவரியை எழுதிஅனுப்பினால் அவர்களுக்கு இணைப்புப் படிவமும், உலகத்தமிழர் பேரமைப்புக் கொள்கைப் பட்டயமும் அனுப்பி வைக்கப்படும்.

பழ. நெடுமாறன்.(தலைவர்)
- நன்றி : தென்செய்தி - 16-30 செப்டம்பர் 2005 -



தங்கர்பச்சான் பிரச்சனை - 1 -

கட்டப்பஞ்சாயத்து செய்கிறதா நடிகர் சங்கம் ?

திரைப்படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நடிகராக உயர்ந்துவிட்ட தங்கர் பச்சான் - காசுக்காக மட்டுமே நடிப்பவர்கள் விபச்சாரிகள் போன்றவர்கள் என்று சொல்லிவிட்டர் என்று எகிறிக் குதித்திருக்கிறது நடிகர் சங்கம்.

தங்கர் பச்சான் தான் அப்படிச் சொல்லவில்லை என்றும் அதனால் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் பகிரங்க மன்னிப்புக் கோருகிறேன் என்று தன்மானத்தைத் தூக்கியெறிந்து விட்டு அறிக்கை கொடுத்த பிறகும் நடிகர் சங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பிய பிறகும், நடிகர் சங்கம் குக்கலாய்க் குறைத்துள்ளது.

நம்மால் திரைப்படத் துறைக்கு சங்கடங்கள் வந்திடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் தங்கர்பச்சான் மிகையாகத் தாழ்ந்து போயிருக்கிறார். இதனால் தன்மானம் உள்ளவன் திரைப்படத் தொழிக்கே வரமாட்டான். இந்த நிலையை கைநீட்டிப் பணம் வாங்கும் நடிக நடிகையர் சங்கம் ஏற்படுத்தி விட்டது.

பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு நடிக்க வருவோர் விபச்சாரிகளுக்குச் சமம் என்று ஒரு பொன்மொழி போல் தன்மொழி தந்த தங்கர்பச்சான் அவமானப்படுத்தப் பட்டடுள்ளார்.

குற்றவாளிகள் ஒன்று சேர்ந்து ஒரு நிரபராதியைத் தண்டித்து விட்டனர். நடிக நடிகையரை அவமானக் குறைவாக இதுவரை யாருமே பேசவில்லையா ?

பகிரங்க மன்னிப்பு என்றதற்குப் பிறகும் வரலாறு காணாத வன்முறை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது நடிகர் சங்கம். கட்டப்பஞ்சாயத்து செய்து தன் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிய நடிகர் சங்கம் அறிவு சூன்யங்களின் கூடாரமாகிவிட்டது. புரியா புல்லர்களின் போக்கிடமாகிவிட்டது. மனசாட்சியைக் கொன்ற மகானுபாவர்களின் மடமாகிவிட்டது. வாழ்க விசயகாந்த், வாழ்க சரத்குமார், வாழ்க மனோரமா.

- நன்றி : வண்ணப்பூங்கா இதழ் - செப் 2005 -



தங்கர்பச்சான் பிரச்சனை- 2 -

தமிழ்மெழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றைச் சீரழித்து வருவதில் பெரும் பங்கு வகிப்பவை தமிழ்த் திரைப்படங்களே என்பதில் இருகருத்து இருக்கமுடியாது. நடிகவேள் எம்.ஆர்.இராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் மட்டுமே சமுதாயக் கண்ணோட்டக் கலைஞர்களாக விளங்கினார்கள். கலை என்பது கண்ணிற்கும் கருத்திற்கும் விருந்தளிப்பது மட்டுமல்ல. மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லும் அரிய கருவியும் ஆகும்.

ஆனால் கலை என்ற பெயரில் தமிழ்த் திரையுலகம் பரப்பிவரும் நச்சுக் கருத்துகளும், சீரழிவுக் கலாச்சாரமும் அளவிடமுடியாதவையாகும். இவற்றைப்பற்றிக் கவலைப்பட யாருமில்லை. இதனால் தமிழ்ச் சமுதாயத்தின் மதிப்பு காற்றில் பறப்பதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் பலருக்கு மொழியுணர்வோ, பண்பாட்டு உணர்வோ, ஏன் கலையுணர்வோ கிடையாது. காசுக்காகக் கலையை விற்கும் கூட்டம் பெருகிவிட்டது.
இந்த நிலையில் சிறந்த இயக்குநரும், தேர்ந்த கலைஞருமான தங்கர்பச்சான் போன்ற ஒரு சிலர் தமிழன் என்ற உணர்வோடும், கலை மக்களுக்காகவே என்ற அர்ப்பணிப்போடும் திரைப்படங்கள் தயாரித்தால் அதைத் தடுக்க வழி தேடுபவர்களின் ஆதிக்கக் கூடாரமாகத் திரையுலகம் மாறிவிட்டது.

காசுக்காகக் கலையை விற்பது குறித்துத் தங்கர்பச்சான் கண்டித்ததற்காகக் கொதித்துக் கிளம்பி அவரை மன்னிப்புக் கேட்கவைத்து அவமானப்படுத்தியவர்கள்தான் உண்மையில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தங்கர்பச்சான் தாமாகவே முன்வந்து தான் அப்படிப் பேசவில்லை என்றும், எனினும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய பின்பும் அதை மனிதத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாமல் மமதையுடன் மன்னிப்புக் கேட்க வைத்துக் கொக்கரித்தவர்கள் தங்கள் மனச்சான்றுகளைத் தொட்டுப்பார்க்கட்டும்.

பிறரை மன்னிப்புக் கேட்க வைக்கும் தகுதி இவர்களில் என்தனை பேருக்கு உண்டு?

சோரம் போனதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்மீது கல்லெறிந்து கொல்ல ஊரார் முடிவு செய்தார்கள். அப்போது அங்கு வந்த இயேசுபிரான் பின்வருமாறு கூறினார்.

"உங்களில் ஒழுக்க சிலர்கள் யாரோ அவர்கள் மட்டும் இவள் மீது கல்லெறியட்டும்" என்றார்.

மறுநிமிடம் அங்கு யாருமில்லை கூடியிருந்து கொக்கரித்தவர்கள் காணாமல் போனார்கள்.

தலைசிறந்த கலைஞரான தங்கர்பச்சானை அவமானப்படுத்தியவர்களை நோக்கி இயேசுபிரான் கேள்வி நீட்டப்பட்டால் என்ன பதில் கூறுவார்கள்.?

- நன்றி : தென்செய்தி - தலையங்கம் - 16-30 செப் 2005 -



வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

அமெரிக்கா அதன் வரலாற்றில் கண்டிராத பேரிழப்பைச் சந்தித்துள்ளது. அந்நாட்டின் கடலோர மாநிலங்களை ஆகஸ்ட் 29 ஆன்று தாக்கிய "க்தரீனா" எனும் அரிக்கேன் சூறாவளி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றது. லட்சக்கணக்கானோரை அகதிகளாக்கியுள்ளது. செப் 25 அன்றும் இயற்கைச் சீற்றத்தால் நீர்மட்டம் உயர்ந்து நகரே தண்ணீருள் இருப்பதைக் காண்கிறோம். இது இன்னும் தொடருமா ? இது ஏன் ? இது மாறாதா ?

சிறப்புக் குறிப்புகள்

புவியின் வெப்பம் அதிகரிக்கக் காரணமான அமெரிக்கா இப்போது புவி வெப்பநிலை உயர்வின் விளைவுகளுக்கே பலியாகிறது.

மனிதர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற புதுப்பிக்க இயலாத புதை படிவ எரிபொருள்களால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கரிமிலவாயு அடர்த்தி அதிகமாதலின் விளைவால் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கிறது.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதால் காலநிலைகளில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியுள்ளது. கடும் புயல், பெருவெள்ளம், வறட்சி, குளிர் போன்ற விளைவுகள் வழக்கத்தைவிடக் கடுமையாகியுள்ளன. இவ்வாறெல்லாம் நடக்கும் என்பதை உலக விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரித்து வந்துள்ளனர்.

"பசுமை இல்ல விளைவு" (Green Hous effect)என அழைக்கப்படும் மனிதச் செயல்களால் புவியின் வெப்பம் அதிகரிப்பது குறித்த எச்சரிக்கையும் அதனால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் குறித்தும் உலக வானிலை ஆய்வியல் கழகம்(World Meteorooogical Organisation) 1979 ஆம் ஆண்டிலேயே உலக நாடுகளை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை (Inter governmental Panel on Climate Changes - IPCC) ஐ.பி.சி.சி. என்னும் பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுவை அமைத்து, சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளைக் கொண்ட இக்குழு 1990 ஆம் ஆண்டில் பசுமை இல்ல விளைவும் அதனால் புவியின் வெப்பநிலை உயர்வும் உண்மைதான் என நிரூபித்தது. உலகம் வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய பேராபத்துகளைத் தடுக்க வேண்டுமானால், உடனடியாக வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் குறைத்தாக வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்தனர். அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதுவும் 1990 ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமில வாயு கலந்ததோ, அதற்கும் கீழாக 5.2 விழுக்காடு குறையும் அளவிற்கு எரிபொருள் பயன்படுத்துவதைக் குறைத்தால்தான் உலகைக் காக்கமுடியும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்வை முன்வைத்தது. இந்த நோக்கில் "க்யோட்டோ" உடன்படிக்கை 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நன்றி : பசுதைத்தாயகம் சுற்றுச்சூழல் - செப் 2005.

கரியமில வாயுவின் உயர்வு

வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 1800 ஆம் ஆண்டுவாக்கில் 281 பி.பி.எம் என்ற அளவாக இருந்தது. (பி.பி.எம். என்பது பத்து லட்சத்தில் ஒரு பங்கைக் குறிக்கும்) இது 1972 ஆம் ஆண்டில் 327 பி.பி.எம் ஆக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து முறையே 1982 இல் 356 பி.பி.எம் ஆகவும், 2003 ஆம் ஆண்டில் 376 பி.பி.எம் ஆகவும் அதிகரித்தது. தற்பொழுது 2004 மார்ச்சு மாதத்தில் 379 பி.பி.எம் ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறாக கரியமில வாயுவின் அதிகரிப்பு மேலும் மேலும் உயர்ந்து செல்வது தொடர்கதையாகக்கூடும். ஏனெனில் இந்தச் சீரழிவுப் போக்கினைத் தடுப்பதற்கான உருப்படியான முயற்சிகள் எதுவும் இன்றுவரை வெற்றி பெறவே இல்லை.

- நன்றி : பசுதைத்தாயகம் சுற்றுச்சூழல் - செப் 2005. -



சி.பா. ஆதித்தனார் அவர்களின் நூற்றாண்டு விழா (27-9-2005)

சி.பா. ஆதித்தனார் எல்லாவற்றையுமே தாய்த் தமிழகத்தோடு இணைத்தே சிந்தித்தார். அதனால்தான் அவர் தோற்றுவித்த இயக்கத்திற்கு நாம் தமிழர் இயக்கம் என்று பெயர் வைத்தார். அதன் தலைமையகத்திற்குத் தமிழன் இல்லம் என்று பெயர் வைத்தார். அவ்வியக்க ஏட்டிற்கு தமிழ்க்கொடி என்று பெயர் வைத்தார். அதன் குறிக்கோளைப் புலப்படுத்திய நூலுக்கு தமிழ்ப் பேரரசு என்று பெயரிட்டார். இயக்க வெளியீட்டுப் பிரிவிற்கு முத்தமிழ்ப் பதிப்பகம் என்று பெயரிட்டார். இளைஞர் பிரிவுக்கு இளந்தமிழர் மன்றம் என்று பெயர் வைத்தார். தமிழ்ப் பேரரசுக்கு அடுத்த முத்தமிழ்ப் பதிப்பக வெளியீடு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சில பாடல்களின் தொகுப்பாகும். அதற்குத் தாயின் மேல் ஆணை என்று தலைப்பிட்டார். தமிழ்க் கட்வுள் முருகனின் கொடியாகிய சேவலைத் தேர்தல் சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்.

தமிழர்களின் வீரவிளையாட்டாகிய சடுகுடு ஒலிம்பிக்கில் இடம் பெற வேண்டும் என்று பாடுபட்டார். அதற்காகத தமிழ்நாடு முழுவதும் தன் சொந்தச் செலவில் சடுகுடு போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதும் நல்ல விளம்பரமும் கொடுத்தார். அதைவைத்து நம் தமிழர் இயக்கத்தையே சடுகுடு கட்சி என்று கொச்சைப் படுத்திய போதும் அதுபற்றி அவர் கவலைப்படவில்லை. மாறாக சடுகுடு விளையாட்டின் விதிகளைத் தானே நல்ல தமிழில் ஆக்கியளித்தார். ஆனால், இன்று அது கபடி என்று தமிழர்களாலேயே வழங்கப்படுகிறது என்றால் நாம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறோம்.

ஆதித்தனார் தினத்தந்தி இதழ் தொடங்கிய பிறகுதான் அண்ணாவும், ம.பொ.சியும் தமிழக மேடைப்பேச்சின் கதாநாயகர்கள் ஆக்கப்பட்டார்கள். நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், கருணாநிதி, வீரமணி, சத்தியவாணிமுத்து, எனத் திராவிட இயக்கத்திலும், அனந்தநாயகி, சின்ன அண்ணாமலை, குமரி அனந்தன் எனக் காங்கிரஸ் இயக்கத்திலும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் பேச்சாளர்கள் தோன்றவும், அவர்கள் தலைவர்களாய் உயரவும் விளம்பர வீதியமைத்துக் கொடுத்தவர் ஆதித்தனார் என்றால் மிகையாகாது. அவர் நாளிதழ் தொடங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதே தமிழ் மக்களை நாலும் தெரிந்தவர்களாகச் செய்யவேண்டும் என்பதற்குத்தான். இந்த ஆசை லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்களும், ஏனைய ஐரோப்பியர்களும் உள்ளூர்ச் செய்திகளையும், உலகச் செய்திகளையும் அங்கு வெளியாகும் நாளேடுகளின்வழித் தெரிந்துகொண்டு, தங்கள் திறமைகளை நிலைமைக்கேற்ப வளர்த்துக் கொண்டு உலகையே கட்டி மேய்ப்பவர்களாக இருப்பதைக் கண்டு, தமிழ் மக்களையும் அப்படி உருவாக்க வேண்டும் என்று முடிவுசெய்து, அதற்காகவே தினத்தந்தி இதழ் தொடங்கினார்.

- நன்றி : எழுகதிர் - செப் 2005 -



சொல்கிறார்கள்

() இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை ஏற்காவிட்டால் நீதி மன்றத்தை மூடிவிடுங்கள் - நடுவன் அரசின் போக்குக்கு உச்சி நீதிமன்றம் கண்டனம் (தினமணி 24-8-05)

() நீதிமன்றங்களை மூடவேண்டும் என்று சொன்னது வரம்பு மீறியதாகும் - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் (தினகரன் 25-8-05)

() நினைத்தவுடன் மூடிவிட நீதிமன்றம் என்ன கடையா ? வீரமணி வினா. (தினகரன் 25-8-05)

() இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து, பல்கலை - கல்லூரி மாணவர்கள் மறியல். (தினகரன் 25-8-05)

() இந்தத் தீர்ப்பில் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்காலம் பற்றிய ஒரு தெளிவான தொலை நோக்குப் பார்வையோடு நம்மால் தீர்வுகாணமுடியவில்லையானால் சமூகநீதி உறுதியாக நிலைநாட்டப் படுகிற வகையில் உயர் தொழில் கல்வி மற்றும் அவை தொடர்பான அவசியமான சொத்துகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த நிருவாகத்தையும் தாமே எடுத்துக் கொள்வதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழி இல்லாமல் போய்விடும். இத்தகைய அவசியம் ஏற்படின், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கவும் அரசு தயங்காது - தமிழக முதல்வர் (தினகரன் 17-8-05)

() அது சரி மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

"முதலில் அதைச் செய்யுங்கள் முதல்வர் அவர்களே, அடுத்து, நீதி மன்றங்களை மூடினாலும் தப்பில்லைதான். இது தான் நல்ல வாய்ப்பான நேரம். எதுவும் மக்களுக்குப் பயனில்லை என்றால் எதற்கு? "

- நன்றி: தேமதுரத் தமிழோசை இதழ் - செப் 2005 -



நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

வாஷிங்டனில் அண்மையில் நடந்த பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் முறை மூலம் திலலியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து உரையாற்றினார்.

அவர் பேச்சு விபரம் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது திருக்குறள். ஆனால் இன்றும் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவருக்கும் போற்றி ஒழுகத்தக்க உயர்ந்த கருத்துகளுக்கு உறைவிடமாக இருக்கிறது.

என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர், சதீஷ்தவான் 1970 களில்.. இஸ்ரோ தலைவராகப் பணியாற்றி வந்தார். அப்போது இஸ்ரோவுக்கான ஒரு முக்கியமான திட்ட இலக்கை ஏற்படுத்தி அத்திட்டத்தை என்னிடம் ஒப்படைத்தார். அத்திட்டம் இந்தியாவின் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் இராக்கெட்டை சொந்தமாக இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டுமானம் செய்யும் பெரும் பொறுப்பாகும். அப்பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது அவர் சொன்னார். கலாம், நாம் எந்தப் பணியையுமே செய்யாமல் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு குறிக்கோளை முனைப்பாகக் கையில் எடுத்துக் கொண்டு,, அதை நிறைவேற்ற முற்பட்டால் அக்குறிக்கோளை அடைவதற்குள் பல இடையூறுகளும் பிரச்சனைகளும் நம்மை ஆக்கிரமித்து நம்மை வழிநடத்திச் செல்ல நாம் அனுமதிக்கக்கூடாது. மாறாக, அந்தப் பிரச்சனைகளைச் சமாளித்து, அதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பிய குறிக்கோளை இலக்கை அடைதல் வேண்டும் என்றார்.

என் ஆழமான அறிவுரை. எனக்கு ஒரு வாழ்க்கைக் கல்வியாக என்னை நானே உணர்ந்து உய்விக்க வந்த அறிவுரை. உடனே எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது. இந்த அற்புதமான இலட்சியக் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எவ்வளவு அழகாக இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் தெரியுமா?

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படா தவர் ( எண் : 623)

அதாவது : ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் ஆங்காங்கே பிரச்சனைகள் எதிர்படும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள், பிரச்சனைகள் தமக்கு தலைமைத் தாங்கி வழிநடத்த விடாமல், அந்தத் துன்பங்களுக்குத துன்பம் கொடுத்து வாழ்வில் வெற்றியடைவர்.

இந்த அறிவுரை, அந்தத் திட்டத்தில் நான் கடுமையாக உழைத்த ஏறக்குறைய ஏழாண்டுகாலம் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு ஓர் உறுதுணையாக அமைந்தது.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். திருக்குறள் இந்தியாவின் நல்வழி நூல். அதற்குப் பல உரைகள் உண்டு. பல மொழிபெயர்ப்புகளும் உண்டு. ஆனால் இன்று உலகில் சாக்ரடீஸ், கன்பூசியஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களின் கருத்துகள் மேற்கோள் காட்டிப் பேசப்படுவதுபோல திருக்குறள் பேசப்படுகிறதா? என்பது சிந்தனைக்குரியது.

திருக்குறளை நாம் போற்றுகின்றோம். உலக அறிஞர்களின் வரிசையில் திருவள்ளுவரும், கம்பரும், இளங்கோவடிகளும், புறநானூற்றுக் கவிஞர்களும், ஒளவையாரும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கத் தகுதி பெற்ற போதும் இவர்களை யாரும் அவ்வளவாக மேற்கோள்காட்டுவதாக எனக்குத் தோன்றவில்லை.

நல்வழி கொடுத்த இந்த சான்றோர்களைப் பற்றி நல்ல ஆசிரியர்களின் படைப்புகள் வரவேண்டும். அதில் திருவள்ளுவர் பற்றிய உண்மை விபரங்களை தரமாகத் தரவேண்டும். அதைப் பல்கலைக் கழகங்கள் மூலம் இளம் உள்ளங்களில் விதைக்க வேண்டும் - என்பது என் எண்ணம்.

- நன்றி : குறள்மணம் இதழ் - செப் 21005 -


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061